தெலுங்கில் :பி.சத்யவதி
தமிழாக்கம் :கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
வீட்டு வேலைகள் எல்லாம் எப்போதும்போல் இயந்திரகதியில், நேரத்திற்கு ஏற்ப, கணினியில் புரோக்ராம் செய்து வைத்தது போல் நடந்தேறிக் கொண்டிருந்தன ரொம்ப நாளாகவே. அதனால் யோசிப்பதற்கோ, புதிதாக எதையாவது செய்வதற்கோ சாரதாவுக்கு எதுவும் எஞ்சி இருக்காது. காலை எழுந்தது முதல் ஹார்மோனியம் வாசிப்பது போல் வரிசையாய் அந்தந்த கட்டையை அழுத்திக் கொண்டு போக வேண்டியதுதான்.
இன்று காலை அழுத்த வேண்டிய கடைசி கட்டை கணவனை, மகளை அவரவர்களின் பணிகளுக்கு அனுப்பி வைத்து கதவைத் தாழிட்டுக் கொள்வது. திரும்பவும் கணவன் சாப்பிடுவதற்கு வருவது மதியம் இரண்டுமணிக்கு. அதுவரையில் வேலை எதுவும் இருக்காது. ஜன்னலுக்குப் பக்கத்தில் ஆடும் நாற்காலிதான் சரணம்.
எப்போதும்போல் ஆடும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஜன்னல் வழியாய் வெளியே பார்த்த சாரதாவை வியப்பில் ஆழ்த்தும் விதமாக கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்துகொண்டிருந்தான் அண்ணன். சாரதா கண்ணாடியை எடுத்துத் துடைத்துவிட்டு திரும்பவும் போட்டுப் பார்த்தாள். சந்தேகமே இல்லை. அண்ணாவேதான். அன்று அப்படி நடந்து முடிந்த பிறகு அண்ணா வருகை தந்தது ஆச்சரியம்தான். ஆனால் சந்தோஷமும் நிறைந்த விஷயம் இல்லையா. ஈரமான விழிகளைப் புடவைத் தலைப்பால் ஒற்றிக்கொண்டு கதவைத் திறந்து எதிர்கொண்டு அழைத்தவள் அண்ணன் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டாள். குடிக்க தண்ணீர் கொடுத்து குசலம் விசாரித்தாள்.
புதிதாக டிகாஷன் போட்டு பாலை காய்ச்சி, அந்த சூட்டிலேயே காபி கலந்து எடுத்து வந்தாள். முன்னதாகவே காய்ச்சிய பாலில் காபியை கலந்து சுட வைக்காமல், பால் காய்ச்சிய சூட்டுடன், புதிதாக இறக்கிய டிகாஷனில் காபி கலந்து அப்படியே குடிப்பது அவளுடைய அப்பாவின் வழக்கம். அவளுடைய அண்ணாவுக்கும் அதே பழக்கம். அவளுக்கும் அதே பழக்கம் வந்துவிட்டது. பக்கத்து வீட்டு வேலைக்காரியைக் கெஞ்சி கேட்டுக்கொண்டு இரண்டு தெரு தள்ளி இருந்த ஸ்டார் ஹோட்டலிலிருந்து இடியாப்பம் குருமா வரவழைத்தாள். இன்ஸ்டண்ட் குலாப்ஜாமூன் தயாரித்தாள். விவரங்களைக் கேட்டுக் கொண்டாள். அண்ணாவும் அதேபோல் கேட்டுக் கொண்டான்.
ஆனால் ‘நீ வந்த காரியம் என்ன அண்ணா? உண்மையிலேயே நீ என்னைப் பார்க்கத்தான் வந்தாயா?’ என்று எவ்வளவு முயற்சி செய்தாலும் அவளால் கேட்க முடியவில்லை.
“நீ ரொம்ப இளைத்து விட்டாயம்மா” என்றான் அண்ணா. வெள்ளை எள்ளு நிறைய போட்டு அண்ணி தன் கைப்பட தயாரித்த நெய் அதிரசத்தை எடுத்துக் கொடுத்தான். பையிலிருந்து எடுக்கும் போதே அதன் மணம் கும்மென்று வீசியது. அதிரசம் செய்வது அண்ணிக்கு கை வந்த கலை.
மதியம் இரண்டு மணிக்கு சாரதாவின் கணவர் கோபாலன் வந்தார். அவர்கள் இருவரும் பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடி சாப்பிட்டு முடித்தார்கள். பிறகு வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டார்கள். அண்ணாவின் கையில் ரசிக்லால் பாக்கு கொடுத்துவிட்டு சாரதாவும் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு திரும்பவும் அலுவலகம் செல்வதற்கு புறபட்டுக் கொண்டிருந்தார் கோபாலன். அப்போது அண்ணன் சொன்னான். “இந்த ஊரில் உங்களுக்கு இவ்வளவு பெரிய வீடு இருக்கிறது. நாளையோ அதற்குப் பிறகோ உங்க சின்ன மகள்கூட திருமணம் முடிந்து போய் விட்டால், எப்போ யாரிடம் வேண்டுமோ அவர்களிடம் போய்விட்டு வருவீங்க. இந்த பாக்கியத்திற்கு உங்களுக்கு நம் ஊரில் வீடு எதற்கு அத்தான்? அந்த பகுதியை எனக்குக் கொடுங்கள். விலை போட்டு தந்து விடுகிறேன். ஒரு லட்சம் என்றாலும் பரவாயில்லை.”
கோபாலன் வியப்படைந்தவராய் “உங்க ஊரு கூட இப்போ நன்றாக டெவலப் ஆகிவிட்டது இல்லையா? ஒரு லட்சம்தானா? இன்னும் அதிகம் இருக்குமோ என்னவோ?” என்றார்.
“நீங்களும் நானும் முடிவு செய்வானேன்? அங்கே இருக்கும் விலையைப் பற்றி நீங்களே விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு சொன்னாலும் சரி! அந்தப் பணத்தை சாரதாவின் பெயரில் பிக்ஸ்ட் டிபாசிட் செய்துவிட்டால் அப்பா அவளுக்கு என்று ஒரு வருமானத்தை ஏற்படுத்தி கொடுத்தாற்போல் ஆகிவிடும் இல்லையா? மேலும் அந்த இரண்டு அறைகள் மீது கிடைக்கும் வாடகையை விட வங்கி வட்டி அதிகம் வரும்.”
“ஆகட்டும். அவசரப்படுவானேன்? நீங்க கொஞ்ச நேரம் ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஆபீஸ் போய் வருகிறேன். வந்த பிறகு பேசிக் கொள்ளலாம்” என்று அவசரமாக கிளம்பி விட்டார்.
சாரதாவுக்குத் தெரியும். கோபாலன் காரியவாதி. எதற்கும் அவசரப்படமாட்டார். யோசித்துக் கொள்வதற்கு எவ்வளவு சமயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நன்றாகத் தெரியும். அவர்கள் இருவரும் பேசிக் கொள்வார்கள், தந்தை தனக்குக் கொடுத்திருக்கும் இரண்டு அறைகள் கொண்ட போர்ஷனைப் பற்றி. தான் அங்கேயே உட்கார்ந்திருந்தாலும். தனக்கு சம்பந்தமே இல்லை என்பது போல் அவர்களே பேசிக்கொள்வார்கள். அவர்களே முடிவும் செய்துகொள்வார்கள் கோபாலன் கிளம்பி போன பிறகு அண்ணா தன்னிடம் ஏதாவது சொல்லுவான் என்று நினைத்தாள் சாரதா. ஆனால் அண்ணன் சோபாவில் படுத்துக்கொண்டு அப்படியே உறங்கிவிட்டான்.
சாரதா இருப்பது பட்டணத்தில். அவள் பிறந்து வளர்ந்தது டவுன் போல் தோற்றமளிக்கும் பெரிய ஊர். அப்பா அங்கேதான் வேலை பார்த்து வந்தார். வேலையை விட்டுவிட்டு வியாபாரத்தைத் தொடங்கினார். அதிர்ஷ்டம் சேர்ந்து வந்ததில் வீடு கட்டினார். கட்டும்போதே இரண்டு பாகங்களாக கட்டினார். அப்பாவின் வியாபாரத்தில் அண்ணா ஒத்தாசையாக இருந்தான்.
தம்பி நன்றாகப் படித்து வேலை கிடைத்ததும் தன்னுடைய பங்கு வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டு போய்விட்டான். சாரதா வசிக்கும் நகரத்திற்கும், அண்ணா இருக்கும் டவுனுக்கும் பஸ்ஸில் சென்றால் மூன்று மணி நேரப் பயணம். பஸ் வசதி எப்போதும் இருக்கும்.
சாரதா திரும்பவும் ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
*** *** ***
“நேற்று வரையில் நன்றாகத்தான் இருந்தார். காலையிலிருந்து திடீரென்று குறட்டை சத்தம் வரத் தொடங்கியது. வாய் வார்த்தை இல்லை. எல்லாம் ஜாடை தான் உடனே கிளம்பி வா.”
கடந்த இரண்டு மாதங்களாக எப்போது போன் மணி ஒலித்தாலும் இது போன்ற வார்த்தைகளை கேட்டுக்கொள்வதற்கு சாரதா மனதளவில் தயாராகவே இருந்தாள்.
அப்பாவுக்கு காலம் முடியும் வயதுதான். இன்னும் சொல்லப்போனால் அந்த வயது கூட தாண்டிவிட்டது. இரண்டு மாதங்களாக எழுந்து நடமாடவில்லை. வாரத்திற்கு ஒருமுறை போய் பார்த்துவிட்டு வந்துகொண்டுதான் இருந்தாள். நன்றாக பழுத்துவிட்ட பழம், அழுகிப் போகாமல் உதிர்ந்து போவது அவருக்கும், மற்ற எல்லோருக்கும் விமுக்திதான் என்று பக்குவமாக யோசிக்கக் கூடிய வயது சாராதாவுக்கு வந்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டன.
அதனால்தான் தடுமாறாமல் போனை வைத்துவிட்டு, அடுப்பில் பாதி முடிந்திருந்த சமையலை பதற்றப்படாமல் முடித்துவிட்டு, தன்னுடைய உடைகளை, மருந்துகளை மறக்காமல் ஒரு பையில் எடுத்து வைத்துக்கொண்டாள். கணவருக்கும், மகளுக்கும் போனில் தகவல் சொன்னாள். பக்கத்து வீட்டு மாமியிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்துக் கொண்டே “அப்பாவுக்கு ரொம்ப முடியாமல் இருக்கிறதாம். என்ன நடக்குமோ என்னவோ. நான் கிளம்பிப் போகிறேன். எங்க வீட்டார் வந்தால் சாவியைக் கொடுங்கள்” என்றாள்.
அந்தம்மாள் சாவிக்கொத்தை வாங்கிக் கொண்டே “அப்படியா! பாவம் ஏதோ அவர் இருக்கும் வரையில் வாராவாரம் போய் வந்து கொண்டு இருந்தீங்க. அவர் போய்விட்டார் என்றால் இனி உங்களுக்கு அந்த ஊருடன் தொடர்பு முடிந்து விட்டார் போல்தான் தான்” என்றாள்.
அந்த வார்த்தைகள் இதயத்தில் முள் தைப்பது போல் இருந்தன சாராதாவுக்கு. அப்பா போய்விட்டால் இனி அந்த ஊருக்குத் தான் போகவே மாட்டாளா? வா என்று அண்ணன் கூப்பிட மாட்டானா? என்றாவது போனால் சந்தோஷப்பட மாட்டானா? அப்பா இறந்து போகும் முன்பே துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. அவர் போய் விடுவார் என்றால் வராத துக்கம் அந்த ஊருடன் தொடர்பு முடிந்து விடும் என்றால் வருவானேன்?
சாரதா போய்ச் சேரும் வரையில் அவர் போகவில்லை. சாரதாவைக் கண்ணாரக் கண்டார். அருகில் சென்ற போது கையைப் பற்றிக்கொண்டார். ஏதோ ஜாடை செய்தார். கண்களில் நீர் நிறைந்தது அவருக்கு. புடவைத் தலைப்பால் கண்ணீரை ஒற்றிவிட்டாள்.
மாலையில் எல்லாம் முடிந்து விட்டது. அது திடீரென்று ஏற்பட்ட மரணமோ, சின்ன வயதோ இல்லை என்பதால் எல்லோரும் அவரவர்களின் கடமைகளில், வேலையில் ஈடுப்பட்டார்கள். தகன காரியம் முடியும் வரையில் கம்பீரமாக இருந்த சூழ்நிலை அதற்குப் பிறகு கொஞ்சம் லேசாக மாறியது. கலகலவென்று பேச்சுகள் தொடங்கிவிட்டன.
அம்மா இறந்து போய் இருபது வருடங்கள் ஆகிவிட்டன. அவள் திடீரென்று இறந்துவிட்டாள். அந்த சமயத்தில் மரணத்தை இந்த அளவுக்கு தைரியமாக சாரதாவால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. எதிர்பாராத அந்த சம்பவம் சாரதாவை ரொம்பவும் கலங்கடித்துவிட்டது. துக்கம் வெள்ளமாய் பெருகியது. அது மட்டுமே இல்லை. அம்மாவின் கையால் தான் எத்தனையோ செய்ய வைத்துக் கொண்டாளே தவிர அவளுக்குத் தான் எதுவும் செய்யவே இல்லை என்ற குற்ற உணர்ச்சி இதயத்தில் ஆழமாய் பதிந்துவிட்டது. இன்றும் அந்த வலி இருந்துகொண்டுதான் இருக்கிறது. தன்னுடைய வேதனையை, அனுபவங்களை எல்லாம் அம்மாவுடன் பகிர்ந்துகொள்வாள் சாரதா. அம்மா எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்டுக்கொண்டு “எல்லாம் காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும் சாரதா. எதையும் போருட்படுத்தாதே. உன் வேலையை நீ பார்த்துக் கொண்டுபோ” என்று சொல்லுவாள். அந்த வார்த்தைகள் ரொம்பவும் ஆறுதலாய் இருக்கும் அவளுக்கு.
அம்மா போன பிறகு சாரதா ஏறக்குறைய ஊமையாகவே ஆகிவிட்டாள். தப்பித்தவறி மனதில் ஏதாவது உணர்வுகள் தோன்றினாலும் உடனுக்குடன் அப்படியே ஆவியாகிவிடும். தன்னைத் தானே ஒரு இயந்திரமாக மாற்றிக்கொண்டாள். அப்பாவுடன் நெருக்கமோ, உரிமையோ இருந்தது இல்லை. ஆனால் சமீபத்தில் பத்தாண்டு காலமாக அவர் அவளுக்கு நெருங்கியவராகி விட்டார். படுக்கையில் விழுந்த பிறகு, ஒரு வாரம் தான் போகவில்லை என்றால் உடனுக்குடன் தொலைபேசி மூலமாக அழைக்கச் செய்தார்.
தன்னுடைய கட்டில் மீதே உட்காரச் சொல்லுவார். அவர்தான் அதிகம் பேசி வந்தார். சின்ன வயதில் சாரதா அதிகமாக பேசுவது வழக்கம். போகப் போக பேச்சு குறைத்து விட்டது. மௌனம்தான் அவளுடைய மொழியாகி விட்டது. தேவை இருந்தால் தவிர வாயைத் திறக்காமல் இருந்தாள். அப்பா பேசும்போது கேட்பது அவளுக்குப் பிடித்தமான விஷயமாக இருந்து வந்தது. தன்னுடைய மகள்கள் பேசினாலும் கேட்பது அவளுக்குப் பிடித்தமாக இருந்தது. ஆனால் இப்போது தன்னிடம் பேசுவதற்கு அவர்களுக்கு சப்ஜெக்ட் கிடைப்பதில்லை என்று சொல்லி வருகிறார்கள். கோபாலன் எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஆசாமி. எப்போதாவது பேசுவார். கேட்பது நன்றாக பழகிவிட்டது.
அம்மா இருக்கும் வரையில் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். பிறகு அவரவர்கள் பங்கு பிரித்துக் கொண்டு விட்டார்கள். தம்பி தன்னுடைய போர்ஷனை வாடகைக்குக் கொடுத்துவிட்டு போய்விட்டான். திடீரென்று அப்பா வடக்குப் பக்கம் காலியாக இருந்த இடத்தில் இரண்டு அறைகளை கட்டிக் கொண்டார். “அங்கே எதற்கு அப்பா?” என்று அண்ணா எவ்வளவு சொன்னாலும் காதில் வாங்கவில்லை. அண்ணாவின் போர்ஷனுக்குப் பக்கத்தில் இருந்த காலி இடத்தில் ஒரு போர்ஷனாக கட்டினார். ஒரு அறைக்கு அட்டாச்ட் பாத்ரூமும் கட்டினார். அந்த இரண்டு அறைகளைச் சுற்றிலும் வேலி போடச் செய்து உள்ளே செடிகளை நடச் செய்தார். அது ஒரு தனி போர்ஷனாக மாறிவிட்டது. தன்னுடைய இருப்பை அந்த இடத்திற்கு மாற்றிக்கொண்டார். தன்னுடைய பீரோ, கட்டில், தன்னுடைய சாமான்களை எல்லாம் அந்த போர்ஷனுக்கு மாற்றினார்.
“உங்களை நாங்க சரியாக கவனிக்கவில்லை என்று இப்படி செய்கிறீங்களா?” என்று அண்ணன் நொந்துக் கொண்டான்.
“நீங்க என்னை கவனிப்பதாவது? நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இன்னும் நம்முடைய கடைக்கு வந்துக் கொண்டுதான் இருக்கிறேன். கொஞ்சமோ நஞ்சமோ சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏனோ எனக்கு இப்படி தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. உங்க அம்மா இல்லாமல் அங்கே இருக்க முடியவில்லை” என்றார். காபி, டிபன் சாப்பாடு எல்லாம் அந்த போர்ஷனுக்கு அனுப்பி வைத்தாள் அண்ணி. பேரன், பேத்தி தாத்தாவின் போர்ஷனிலேயே படுத்துக் கொண்டார்கள்.
இதோ! மூன்று மாதங்களுக்கு முன்புதான் அண்ணா அப்பாவைத் தன் போர்ஷனுக்கு இடம் மாற்றினான். அந்தப் பகுதிக்கு பூட்டுப் போட்டார்கள்.
அந்த சிறிய வீடு என்றால் சாரதாவுக்கு ரொம்ப பிரியமாக இருந்தது. அங்கே போன போதெல்லாம் பெருக்கி, சுத்தம் செய்து ஒழுங்குப் படுத்திவிட்டு வருவாள். வேலிக்குப் பக்கத்தில் மல்லிகை, செம்பருத்திச் செடிகளை நட்டாள்.
பத்து நாள் காரியங்களுக்கு மகன்கள் பட்ஜெட் போட்டார்கள். ஆளுக்கு சரிபாதி என்றார்கள். எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஊர் முழுவதும் சாப்பாடு போட்டார்கள். அன்று சாப்பாட்டில் அப்பாவுக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று வெள்ளை எள்ளு அதிகமாக போட்டு நெய் அதிரசங்களைப் பண்ணுவதற்கு ஏற்பாடு செய்தாள் அண்ணி. தனக்கும், தம்பிக்கும் கொடுக்க வேண்டும் என்று கொஞ்சம் அதிகமாகவே மாவு போடச் சொன்னாள். ஒரு ஸ்டீல் டப்பாவில் தனியாக எடுத்து வைத்து “சாரதா! இது உனக்கு. அப்புறம் மிச்சம் இருக்குமோ இருக்காதோ என்று முன்னாடியே உனக்காக எடுத்து வைத்து விட்டேன்“ என்று சொன்னாள்.
சுபசுவீகாரம் கூட முடிந்து விட்டது. அப்பாவின் போட்டோவை லாமிநேட் செய்யவைத்து சந்தனமாலை வாங்கிப் போட்டான் அண்ணா. போட்டோவை முன் அறையில் மாட்டினார்கள். உறவுக்காரர்கள் எல்லோரும் போய் விட்டார்கள். அண்ணியின் பெற்றோரும், தம்பியின் மாமனார், மாமியார் மட்டும் எஞ்சியிருந்தார்கள்.
மாலை நான்கு மணி ஆகும் போது கொல்லையில் காயப்போட்ட டவலை மறக்காமல் கொண்டு வந்து மடித்து பையில் வைத்துக் கொண்டே “இனி நான் கிளம்புகிறேன் அண்ணி” என்றாள் சாரதா.
“நீ நாளைக்கு போய்க் கொள்ளலாம். இன்று தங்கிவிடு. நம் மாமாவையும், ராமதுரையையும் வரச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் முன்னிலையில் அப்பாவின் பீரோவைத் திறப்போம்” என்றான் அண்ணா.
“பீரோவுடன் எனக்கு என்ன ஜோலி அண்ணா?” என்றாள் சாரதா.
“இல்லை சாரதா. நீ இருந்துவிட்டுதான் போயேன். நானும்தான் சொல்கிறேன்” என்றாள் அண்ணி.
ராமதுரை அப்பாவிடம் எப்போது வந்து பேசிக்கொண்டு இருப்பார். அப்பா சொன்ன வேலைகளை செய்து முடிப்பார். சாரதாவுக்கு அடிக்கடி போன் செய்து பேசுவார்.
“கிழவர் ஏற்கனவே கொடுக்க வேண்டியதை அவரவர்களுக்குக் கொடுத்துவிட்டார். இனியும் கொடுப்பதற்கு அதில் என்ன இருக்கப் போகிறது?” என்று சொன்னாள் அண்ணியின் தாய்.
“யாருக்குத் தெரியும் என்ன இருக்கிறது என்று? திறந்துப் பார்த்தால் தெரிந்து விடப் போகிறது“ என்றார் தம்பியின் மாமனார்.
ராமதுரை வந்தார். ராமதுரையின் கையில் ஏதோ பேப்பர்கள் இருந்தன. அவர் மட்டுமே வரவில்லை. கூடவே வக்கீலையும் அழைத்து வந்தார். அந்த வக்கீல் மாமாவும் எல்லோருக்கும் தெரிந்தவர்தான். இப்போது எதற்காக வந்திருக்கிறார் என்று மட்டும் தெரியவில்லை. பீரோவில் அப்பாவின் துணிமணிகள் இருந்தன. அம்மாவின் இரண்டு புடவைகள் இருந்தன, இருபது வருடங்களாக அவர் பொக்கிஷமாக போற்றி வந்தவை. அத்துடன் ஒரு சிறிய பையும் இருந்தது.
அந்தப் பையில்தான் அசல் விஷயம் இருந்தது.
“இது என்ன பை?” என்றான் அண்ணா.
“ஆமாம். அதன் சம்பந்தப்பட்ட ஒரிஜினல் தஸ்தாவேஜுகள் இதோ. உங்க அப்பா இரண்டு அறைகள் கொண்ட அந்த போர்ஷனை சாரதாவின் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு போன வருடமே ரிஜிஸ்டர் செய்துவிட்டார். தான் இறந்த பிறகு இந்த பேப்பர்களை சாரதாவிடம் தரச் சொல்லி என்னிடம் சொன்னார். அதற்கு சாட்சியம் இந்த வக்கீல்தான்” என்றார் ராமதுரை.
அண்ணா அந்த காகிதங்களை திரும்பத் திரும்ப படித்தான். தம்பியும் படித்தான். வக்கீல் எல்லோருக்கும் கேட்கும் விதமாக வாய்விட்டு படித்தார்.
“அந்தக் காலத்திலேயே கல்யாணத்தின் போது ஐம்பதாயிரம் வரதட்சணை கொடுத்தார். முப்பது பவுன் போட்டார். திரும்பவும் தாயின் நகைகளிலும் பங்கு கொடுத்தார். இப்போது வீட்டில் போர்ஷனை எழுதிக் கொடுத்திருக்கிறார். அதிர்ஷ்டம்தான்” என்றாள் அண்ணியின் தாய். தந்தை தனக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்று தன்னை விட அந்தம்மாளுக்கு நன்றாக நினைவு இருந்தது சாரதாவுக்கு வேடிக்கையாக இருந்தது.
அண்ணி, தம்பி, தம்பியின் மனைவி எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டார்கள். சூழ்நிலை திரும்பவும் கம்பீரமாக மாறிவிட்டது. அம்மாவின் புடவைகள் இரண்டையும் கொண்டு வந்து ”வேண்டுமென்றால் இவற்றை எடுத்துக் கொண்டு போ” என்று மடியில் போட்டான் அண்ணா. அண்ணாவின் குரல் சற்று முன்னால் இருந்தது போல் இல்லை.
பீரோவைத் திறக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் சாரதாவைப் பொருட்படுத்தாமல் அவரவர்கள் இரண்டு இரண்டு பேராகப் பிரிந்து வியாக்கியானம் செய்தபடி குசுகுசு வென்று பேசத் தொடங்கினார்கள் ஏற்கனவே இருட்டிவிட்டது. ராமதுரை தன்னிடம் தஸ்தாவேஜுகளை ஒப்படைத்துவிட்டு போய்விட்டார்.
அந்த தஸ்தாவேஜுகள் சாரதாவுக்கு சந்தோஷதையோ, பிரமிப்பையோ ஏற்படுத்தவில்லை. மேலும் பக்கத்துவீட்டு மாமி சொன்ன வார்த்தைகள் அடிக்கடி நினைவுக்கு வந்தன. “இனி உனக்கு அந்த ஊருடன் தொடர்பு துண்டித்து விட்டாற்போல் போல்தான்.” அப்பா ஏன் இப்படிச் செய்தார்?
சில நாட்களாகவே அப்பா வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறார் என்று சாரதாவுக்குத் தெரியும். மேற்கொண்டு தான் படிக்கப் போவதாகச் சொன்ன போது படிக்க வைக்காமல் கோபாலனுக்குக் கொடுத்து மணம் முடித்து வைத்ததற்காகவோ, கோபாலனின் தாய் ஆரம்ப நாட்களில் தன்னை படுத்தி வைத்ததற்காகவோ, அவற்றுக்கெல்லாம் காரணம் தான்தான் என்றோ? என்ன காரணமோ தெரியவில்லை. எதையோ சரி செய்யவேண்டும் என்று நினைப்பது புரிந்தது. ஆனால் அந்த சரி செய்தல் யாருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்காததோடு, தன் வீட்டாரை தன்னிடமிருந்து மேலும் விலக்கி வைத்துவிட்டது.
நேற்று வரையிலும் கலகலவென்று பேச்சும் சிரிப்புமாய் கல்யாணவீடு போல் இருந்த அந்த வீடு அன்று இரவு உண்மையிலேயே ஒரு நபர் இறந்துவிட்ட வேதனையை தழுவிக்கொண்டது. அதுவரையில் பத்து பேருக்கு நடுவில் இருந்த சாரதா, அன்று இரவு திரும்பவும் தன்னுடைய தனிமையை புரிந்து கொண்டாள். அந்த வீட்டில் தன்னுடைய பிள்ளைப் பருவம், இளமை மலர்ந்த நாட்கள். தன்னுடைய படிப்பும், ஓட்டமும் நடையும்.
நாளுக்கொரு மேனியாய் வளர்ந்து கிளைகள் படர்ந்து, மொட்டுக்கள் வைத்து பூக்களாய் மலரும் தருவாயில் இருந்த செடியை வேர்களுடன் பெயர்த்து வேறு ஒரு வீட்டில் நட்டு, திரும்பவும் அதன் வேர்கள் நிலத்தில் பதிந்து, அந்த நிலத்தின் சாரத்தை கிரகித்துக் கொண்டு அந்த வெயிலுக்கும், நிழலுக்கும் பழக்கப்பட்டு, ஒருவாறு தேறிகொண்டு வாழ்வதற்கு எவ்வளவு காலம் பிடித்தது? ஆனால் இன்று இந்த வீடு என்னுடையது இல்லை. இங்கே எனக்கு யாருமே இல்லை.
‘உனக்கு மூளை இருக்கிறதா சாரதா? உனக்கு இப்போ வயது ஐம்பது. உனக்கு ஒரு பேத்திகூட பிறந்துவிட்டாள். இன்னும் பிறந்த வீடு, பிள்ளைப் பருவம் என்கிறாயே?’
ஐம்பது வயது என்றால் மட்டும் பிறந்த வீடு என்னுடையது இல்லாமல் போய் விடுமா? ஊர் எனக்கு சொந்தமில்லாமல் போய் விடுமா? இந்த மண் எனக்கு சொந்தம் இல்லாமல் போய் விடுமா?
அப்பா போன பிறகு இப்போது சாரதாவுக்கு துக்கம் பொங்கி வந்தது.
தான் கொண்டு வந்த ஐம்பதாயிரம் வரதட்சணை பணத்தில் நாத்தனாரின் கல்யாணத்தை முடித்து விட்டு “நீ என்ன கொண்டு வந்தாய்? உங்க அப்பா என்ன கொடுத்தார்?” என்று அடிக்கடி சொல்லிக் காட்டும் மாமியார் நினைவுக்கு வந்தாள். சாய்ந்துகொள்வதற்கு ஒரு தோளுக்காக தான் பட்ட தவிப்பு நினைவுக்கு வந்தது. அம்மா நினைவுக்கு வந்தாள். இறந்து போன அப்பாவின் கண்களில் துளிர்த்த கண்ணீர் நினைவுக்கு வந்தது. ஆறிவிட்ட காயத்தைக் களிம்பு தடவி திரும்பவும் காயத்தைக் கிளறிவிட்டாற்போல் இருந்தது அப்பா செய்த காரியம்.
‘எனக்கு வேண்டாம் அண்ணா. இந்த காகிதங்களை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். கிழித்துப் போட்டு விடுங்கள். என்னுடன் பேசுங்கள். நான் இந்த வீட்டுக்கு வருவதற்கு அனுமதி கொடுங்கள். இந்த வீட்டுடன் என் உறவை துண்டித்து விடாதீங்க’ என்று சொல்ல வேண்டும்போல் இருந்தது.
நீளமான அந்த இரவு விடிந்தது. அண்ணி கொடுத்த காபியைக் குடித்து விட்டு “இனி நான் கிளம்புகிறேன் அண்ணி” என்றாள் சாரதா.
அண்ணி மௌனமாக தலையை அசைத்தாள். அண்ணா மகனை அழைத்து “அத்தையை பஸ்ஸில் ஏற்றிவிட்டு வா” என்றான் சுருக்கமாக.
தனக்காக தனியாக எடுத்து வைத்த அதிரசம் வைத்த ஸ்டீல் டப்பாவை கொடுப்பதற்கு அண்ணி மறந்துவிட்டாள். ‘தானும் கேட்க மறந்து விட்டால் எப்படி?’ என்று நினைத்தாள்.
மூன்று மாதங்கள் மௌனத்திற்குப் பிறகு அண்ணாவின் வருகை இந்த விதமாக. சியாமளா ஆபீசிலிருந்து வந்து விட்டாள் போலும். சமையலறையில் காபி கலக்கும் நறுமணம் வீசியது. காபி தம்பிளருடன் வந்து தாயின் கையில் கொடுத்த சியாமளா ”மாமா வந்திருக்கிறார் போல் இருக்கே?” என்றாள்
“ஊம்.”
“ஏன் எப்படியோ இருக்கிறாய்? மாமா சரியாக பேசவில்லையா?”
சாரதா எழுந்து கொண்டு அதிரசம் இருந்த பாக்கெட்டை காண்பித்தாள். கோபாலன் வந்துவிட்டார். சாரதா திரும்பவும் எல்லோருக்கும் காபி கலந்து கொடுத்தாள். மேற்கில் வானம் சிவந்தது. சாரதாவின் முகத்தில் கவலை மேகம் கவிழ்ந்திருந்தது
ஒருமுறை கோபாலனின் அம்மாவுக்கும், சாரதாவுக்கும் நடுவில் ஏதோ சண்டை வந்தது, ரொம்ப அல்பமான விஷயத்தில். கோபாலன் எப்போதும் தாயின் பக்கம்தான். குறைந்த பட்சம் “என்ன விஷயம்? காரணம் என்ன?’ என்றுகூட தெரிந்து கொள்ளாமல் தாயின் பக்கம் பேசினார். சாரதாவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. வசந்தாவை, சியாமளாவை அழைத்துக் கொண்டு பஸ் ஏறி பிறந்த வீட்டுக்குப் போனாள். தான் எப்போது வந்தாலும் “என்னம்மா? நன்றாக இருக்கிறாயா?” என்று குசலம் விசாரிப்பாரே தவிர அப்பா வேறு எதையும் கேட்கமாட்டார். கேட்கவில்லை என்றாலும் அம்மாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வது சாரதாவின் பழக்கம். அம்மா எப்போதும் போலவே “எல்லாம் தானே சரியாகி விடும். தலையைக் குனிந்து கொண்டு நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்றாள்.
தான் வந்த அன்று இரவே கோபாலன் மாமனாருக்குப் போன் செய்து சாராதாவை அர்ஜென்டாய் அனுப்பிவைக்கும் படியும், இப்போது அனுப்பி வைக்கவில்லை என்றால் இனி எப்போதும் அனுப்பி வைக்கத் தேவை இல்லை என்றும் சொன்னார்.
‘மாப்பிள்ளை ஏன் இப்படி சொல்கிறார்?” என்று தன்னிடம் கூட கேட்காமல் உடனுக்குடன் ஒரு டாக்ஸியை வரவழைத்து, தம்பியை துணைக்கு அனுப்பி, அண்ணியைக் கொண்டு தன்னுடைய சூட்கேசை பேக் செய்ய வைத்து அனுப்பிவிட்டார். அப்பாமீது கோபம் கொண்டு ஒரு வருடம் வரையில் தான் மறுபடியும் அங்கே போகவே இல்லை.
அம்மா சொன்னது போல் எல்லாம் தானே சரியாகிவிட்டது. மாமியாருக்கு மகன் தன் பக்கம்தான் என்று நம்பிக்கை வந்ததுடன், சாரதா ஆபத்தானவள் இல்லை என்றும், அவள் பெற்றோர்கள் ஒவ்வொரு விஷயத்திலேயும் மூக்கை நுழைக்கும் நபர்கள் இல்லை என்றும் புரிந்தது. அதோடு அந்தம்மாளுக்கும் வயது ஆகி விட்டதால் சாரதாவுடன் நல்லவிதமாக இருந்தாக வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டாள். இதெல்லாம் நடந்து முடியும் தருணத்தில் சாரதா ரோஷம், சுய அபிமானம் போன்ற வார்த்தைகளை மறந்து விட்டிருந்தாள். அம்மா சொன்னது போலவே தலை குனிந்துகொண்டு தன்னுடைய வேலையை செய்வதைக் கற்றுக் கொண்டாள்.
அன்று, அந்தநாள் அப்பா டாக்ஸியை வரவழைத்து போகச் சொன்ன போது தனக்கு இந்த பூமியில் ஒரு சான் இடம் கூட இல்லை என்றும், தனக்குத் தானாக இரண்டு நாட்கள் எங்கேயும் இருக்க முடியாது என்பதும் புரிந்து விட்டது.
எத்தனையோ முறை, எத்தனையோ அவமானங்களை சகித்துக்கொண்டு, எங்கேயும் போய் நிம்மதியாக மூச்சுகூட எடுத்துக் கொள்ளாமல் கோபாலன் எப்போதும் சொல்லிக் காட்டும் “என் வீடு” க்குள்ளேயே இருந்துவிட்டாள். இப்போது தந்தை தனக்கு, தன் பெயர் மீது எல்லா உரிமைகளும் கொண்ட ஒரு வீடு கொடுத்திருக்கிறார், என்றாவது போய் இரண்டு நாட்கள் நிம்மதியாக காற்றை சுவாசிப்பதற்கு. அன்று ஆவேசத்தில் காகிதங்களை திருப்பிக் கொடுத்து விடுவோம், அண்ணா, அண்ணி முகம் கொடுத்து பேசினால் போதும் என்று தோன்றியது. ஆனால் இப்போது அப்படி நினைக்கத் தோன்றவில்லை.
ஒரு லட்சம் கொடுத்து அண்ணா அந்த ஊருடன், அந்த வீட்டுடன் தனக்கு பந்தம் இல்லாமல் செய்து விடுவதாய் சொல்கிறான். இத்தனை நாட்களும் தான் தந்தையின் வீட்டுக்குப் போனாள். அப்பாவுக்காகப் போனாள். அப்பா இருந்த வீடு தனக்குப் பிறந்த வீடு. ஆனால் அண்ணாவின் வீடு வேறு.
அண்ணா முகம் அலம்பி கொண்டு வந்தான்.
“அப்போ நான் கிளம்பட்டுமா அத்தான். சீக்கிரமாய் சாரதாவையும், சியாமளாவையும் அழைத்துக் கொண்டு ஒரு தடவை வாங்க. எல்லா விஷயங்களையும் விசாரித்து ரிஜிஸ்ட்ரேஷனை வைத்துக் கொள்வோம்’ என்றான்.
தாம் மூன்று பேரும் சேர்ந்து வளர்ந்த அந்த வீட்டில், தங்களுடன் உடன் பிறந்தவளும் இருப்பதில் சந்தோஷம் இல்லையா அந்த அண்ணா தம்பிக்கு? தங்களுடைய சுக துக்கங்களில் சகோதரியும் பங்கு பெறுவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லையா?
தான் வளர்ந்த வீட்டின் முன்னால் கிளிகள் வந்து உட்காரும் கொய்யா மரம், அப்பாவின் வீட்டில் தான் நட்டு வைத்த மல்லிகைக் கோடியில் இலை தெரியாமல் பூத்த மலர்கள், பிள்ளைப் பிராயத்தில் வேப்ப மரத்தில் கட்டி ஆடிய ஊஞ்சல், கொல்லையில் மருதாணி அரைக்க உபயோகித்த கல்லுரல், மொட்டை மாடியில் கோடையில் அம்மா கையால் பரிமாறிய நிலாச் சோறு எல்லாம் வரிசையாய் காட்சிகளாய் தென்பட்டுக் கொண்டிருந்தன சாரதாவின் கண்களுக்கு முன்னால்.
அந்த கண்களில் ஒரு முடிவு!
- ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “
- சயந்தனின் ‘ஆறாவடு’
- ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “
- குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
- தங்கம் 5- விநோதங்கள்
- பில்லா 2 இசை விமர்சனம்
- மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
- தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
- முள்வெளி – அத்தியாயம் -7
- “பெண் ” ஒரு மாதிரி……………!
- அகஸ்டோவின் “ அச்சு அசல் “
- பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22
- ’சாலையோரத்து மரம்’
- புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
- சித்திரைத் தேரோட்டம்…!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- கொத்துக்கொத்தாய்….
- பங்கு
- ஈரக் கனாக்கள்
- பாரதிதாசனின் குடும்பவிளக்கு
- விதை நெல்
- கால இயந்திரம்
- மகன்
- புத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்
- இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது
- சாயப்பட்டறை
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24
- ரௌத்திரம் பழகு!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை
- ‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’
- “என்ன சொல்லி என்ன செய்ய…!”
- இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்!
- “பேசாதவன்”
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”
- மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்