ஒரு காலத்தில் ஒரு மரத்தில் நானே இருந்துவந்தேன். அதே மரத்தடியில் இன்னொரு பறவை, ஒரு தித்திரிப்பறவை, இருந்து வந்தது. அண்டை வீட்டுக்காரர்களாக இருந்ததால் எங்களிடையே பிரிக்க முடியாத அன்பு ஏற்பட்டது. சாப்பாடும், விளையாட்டும் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் இருவரும் ஒன்று கூடுவோம். பிற்பகல் வேளையில் பல நீதி வாக்கியங்களைச் சொல்லிக் கொள்வோம். புராணம் முதலிய கதைகளைச் சொல்வோம். விடுகதை புதிர் போட்டுக் கொள்வோம். ஒருவர்க்கொருவர் பரிசு கொடுத்துக் கொண்டு விநோதமாகக் காலம் கழித்து வந்தோம்.
ஒருநாள் தித்திரிப் பறவை மற்றப் பறவைகளோடு இரைதேடப் பறந்து போயிற்று. முதிர்ந்த நெல் நிறைய இருக்கும் ஒரு இடத்தை அடைந்தது. பிறகு குறித்த வேளையில் திரும்பி வரவில்லை. அது வராமற்போனதால் எனக்குத் துக்கம் உண்டாயிற்று. இன்றிரவு என் நண்பனாகிய தித்திரிப் பறவை ஏன் திரும்பி வரவில்லை? யாராவது வலையில் பிடித்துவிட்டு அதைக் கொன்றிருப்பார்களா?’’ என்று ஆலோசித்தேன். இப்படிக் கவலையுடன் பல நாட்கள் சென்றன.
ஒருநாள் சாயங்காலம் இருக்கும். தித்திரிப்பறவையின் பழைய பொந்தில் ஒரு முயல் வந்து நுழைந்தது. தித்திரி வரும் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டபடியால் நான் முயலைத் தடுக்கவில்லை.
பிறகு, ஒருநாள் தித்திரிப்பறவை, அரிசி நிறையச் சாப்பிட்டு உடல் பருத்துப்போய், தன் பழைய வீட்டின் ஞாபகம் வரவே திரும்பி வந்து சேர்ந்தது. இதில் ஆச்சரியமொன்றும் இல்லை.
ஒருவன் தரித்திரனாயிருந்தாலும் தன் நாட்டில், தன் ஊரில், தன் வீட்டில் பெறுகிற இன்பத்தைப்போல் சுவர்க்கத்தைச் சுற்றிவந்தாலும் பெறுவது கிடையாது.
பொந்தில் முயல் இருப்பதைத் தித்திரி கண்டுவிட்டது. நிந்தனை செய்யும் குரலில், ‘’ஏ முயலே, நீ செய்தது அழகல்ல. என்ன, என் வீட்டில் நுழைந்திருக்கிறாயே! சீக்கிரமாக வெளியே போய்விடு!’’ என்றது.
‘’மூடனே, நீ இருக்கிறவரைதான் எதுவும் உன் வீடாகும் என்பது உனக்குத் தெரியாதா?’’ என்றது முயல்.
‘’அப்படியா? அண்டை வீட்டுக்காரர்களைக் கேட்போம் வா, தர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி,
தொட்டி, கிணறு, குளம், வீடு, தோட்டம் — இவை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னையை அண்டை வீட்டுக்காரர்களின் சாட்சியே நிர்ணயிக்கப் போதுமானது, என்று மனு சொல்லியிருக்கிறார்.
வீடோ, வயலோ, கிணறோ, தோட்டமோ, நிலமோ சர்ச்சையிலிருக்கும்போது அண்டை வீட்டுக்காரர்களின் சாட்சியமே வழக்கை நிர்ணயிக்கும்.
என்றது தித்திரி.
‘’மூடனே, நீதி வாக்கியத்தைக் கேட்டதில்லையா?
அண்டை வீட்டுக்காரனின் கண்ணெதிரே யார் வயல் முதலியவற்றைப் பத்து வருஷங்களுக்கு அனுபவித்து வருகிறானோ அவன் விவகாரத்தில் சாட்சியங்கள் செல்லாது. அவன் விஷயத்தில், கண்கூடாகக் கண்டதே சாட்சி.
என்பது உனக்குத் தெரியாதா? அதேபோல், நீ நாரதருடைய வாக்கைக் கேள்விப்பட்டதில்லையா?
பத்து வருஷ அனுபோகமே ஒரு மனிதனுக்கு பாத்தியதை அளித்துவிடுகிறது. பறவைகள், மிருகங்கள் பொறுத்தவரை அவை அங்கே வசித்தாலே போதும், அந்தந்த இடம் அவற்றிற்குச் சொந்தமாகும்.
ஆகவே இது உன் வீடாகவே இருந்தபோதிலும் நான் நுழைந்தபோது இது காலியாக இருந்தது. ஆகவே இது இப்போது எனக்குத்தான் சொந்தம்’’ என்றது முயல்.
‘’சரி, சரி, நீ நீதி வாக்கியத்தைச் சாட்சியாகக் குறிப்பிடுவதால் என்னோடு வா நிபுணர்களைப் பார்த்துக் கேட்போம். அவர்களின் தீர்ப்புப்படி அது உன்னுடையதாகவோ என்னுடையதாகவோ ஆகட்டும்’’ என்றது தித்திரி. ‘’சரி’’ என்றது முயல். வழக்கைத் தீர்த்துக்கொள்ள, இரண்டும் புறப்பட்டுப் போயின. நானும் அவர்களின் பின்னே போனேன். எனக்கும் ஒரு ஆவல் பிறந்துவிட்டது. ‘’என்ன நடக்கிறது என்று பார்ப்போமே’’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
சிறிது தூரம் போயிருப்பார்கள். அதற்குள் முயல் தித்திரியைப் பார்த்து, ‘’நண்பனே, நம் விவகாரத்தை யார் தீர்த்து வைக்கப் போகிறார்கள்?’’ என்று கேட்டது. ‘’மெல்லிய காற்று வீசி எழும்பும் அலைகளாலும், அவை ஒன்றோடொன்று மோதிக்கொள்வதாலும் எழுகிற கலகலவென்ற ஓசையோடு கூடிய புனிதமான கங்கையாற்றின் பக்கத்தில் ஒரு மணல் திட்டு இருக்கிறது. அங்கே தீர்க்க கர்ணன் என்றொரு பூனை இருக்கிறது. அது தவத்திலும், நியமத்திலும், விரதங்களிலும், யோகங்களிலும் சிறந்து, கருணையுள்ளம் பெற்றிருப்பது’’ என்றது தித்திரி.
ஆனால் அந்தப் பூனையை நேரில் பார்த்தபோது முயல் பயந்து நடுங்கிவிட்டது. ‘’வேண்டாம், வேண்டாம். இந்தப் போக்கிரியிடம் போக வேண்டாம்.
தவக்கோலத்திலிருந்தாலும் நீசர்களை நம்பக்கூடாது. அநேக புண்ணிய ஸ்தலங்களில் கபட சந்நியாசிகள் காணப்படுவதுண்டு.
என்று சொல்கிறார்கள்’’ என்றது முயல்.
இந்தச் சொற்களைத் தீர்க்க கர்ணன் (பூனை) கேட்டது, சுக வாழ்க்கை நடத்துவதற்காகத்தான் அந்தப் பூனை தவக்கோலத்தை ஏற்று வந்தது. முயலையும், தித்திரியையும் நம்பவைப்பதற்கு விரும்பியது. எனவே அது சூரியனை நேராகப் பார்த்தபடி பார்வையைச் செலுத்தி, முன்னங்கால்களை உயரத் தூக்கி, பின்னங்கால்களின் மேல் உட்கார்ந்து கொண்டது. கண்களை மூடிமூடித் திறந்தது. நல்ல சொற்களால் அவர்களை வஞ்சிக்க வேண்டி தர்மோபதேசம் செய்யத் தொடங்கியது. ‘’ஐயோ, இந்த சம்சாரமே சாரமில்லாதது. இந்த உயிர் ஒரே வினாடியில் போய்விடக் கூடியதல்லவா? காதல் வாழ்க்கை கனவுக்குச் சமானமே. குடும்பப்பற்று இந்திர ஜாலம் போல் ஒரு மாயவித்தை. ஆகவே அறவழியைவிட்டால். வேறு கதி இல்லை.
அறவழி பற்றி நிற்காதவனுக்கு நாட்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. கருமானின் துருத்திபோல் மூச்சு வாங்கிவிட்டுக் கொண்டிருக்கிறானே யொழிய, அவன் உண்மையில் வாழவில்லை.
மானத்தையும் மறைக்காமல், ஈயையும் கொசுவையும் ஓட்டாமல் இருக்கிற நாய்வால் மாதிரி, அறவழியில் நிற்காத கல்வியும் வீணே.
தானியங்களில் பதர், பறவைகளில் வௌவால், பூச்சிகளில் கொசு; இவற்றிற்குத் தர்மம் என்பது துளிகூடக் கிடையாது.
மரத்தைவிட பூவும் பழமும் சிறந்தவை. தயிரைவிட நெய் சிறந்தது. பிண்ணாக்கைவிட எண்ணெய் சிறந்தது. மனிதனைவிட தர்மமே சிறந்தது.
திடச்சித்தமே எல்லாக் காரியங்களுக்கும் சிறந்தது என்று அறிவாளிகள் புகழ்கின்றனர். ஆனால், எவ்வளவோ கட்டுத்தளைகள் தடுத்தபோதிலும், தர்ம சிந்தனையே துரிதமாக வேலையை முடிக்கிறது.
அதிகமாக விவரிப்பதில் லாபமென்ன? அறத்தைப் பற்றிச் சுருங்கச் சொல்வது; புண்ணியம் தேடுவதானால் பரோபகாரம் செய்! பாவம் தேடுவதானால் பிறரைத் துன்புறுத்து!
பூனையின் தர்மோபதேசத்தைக் கேட்ட முயல், ‘தித்திரிப் பறவையே, இந்த நதிக்கரையிலிருப்பவன் தபஸ்வியாகவும், தர்மவாதியாகவும் இருக்கிறான். இவனைக் கேட்போம், வா!’’ என்றது.
‘’என்ன இருந்தாலும், அவன் நம்முடைய இயற்கை விரோதி. தூரத்தில் நின்றுகொண்டே கேட்போம்’’ என்றது தித்திரி. பிறகு இரண்டும் பூனையைக் கேட்கத் தொடங்கின. ‘’ஏ! தபஸ்வியே, தர்மோபதேசம் செய்பவனே, எங்களுக்கிடையே ஒரு வழக்கு உண்டாகிவிட்டது. அதைத் தர்ம சாஸ்திரத்தின்படி தீர்த்துவை. எங்கள் இருவரில் யார் பொய் சொல்கிறானோ, அவனை நீ சாப்பிடலாம்’’ என்றன.
‘’நண்பர்களே, அப்படிச் சொல்லாதீர்கள்’’ என்றது பூனை. ‘’பலாத்காரச் செய்கை என்பது நரகத்துக்கு வழிகாட்டியாகும். அதை நான் வெறுக்கிறேன்.
அறத்தின் முதல் கோட்பாடு அஹிம்சையே. எனவே, எல்லோரிடமும் இதமாக நடந்துகொள்! கொசு, பேன், பூச்சிகளானாலும் அவற்றையும் காக்கவேண்டும்.
இம்சை செய்யும் மிருகங்களைத் தயையின்றிக் கொல்பவன்கூட கோரமான நரகத்தை அடைகிறான். என்றால்,
ஒரு பாவமுமறியாத பிராணிகளைத் துன்புறுத்துபவனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
மேலும், யாககாரியங்களுக்காகப் பசுக்களைக் கொல்கிற மூடர்கள் கூட சுருதியின் உள்ளர்த்தத்தை அறிந்தவர்கள் அல்ல. ‘’ஆடுகளைக் (அஜம்) கொண்டு யாகம் செய்ய வேண்டும்’’ என்று யாராவது சொன்னால், அந்த இடத்தில் ‘அஜம்’ என்ற சொல்லுக்கு ஏழு வருஷங்களாகப் புழக்கத்திலுள்ள தானியம் என்றுதான் அர்த்தம். அந்த அர்த்தத்தை அவர்கள் அறியவில்லை.
மரத்தை வெட்டுபவனும், பசுக்களைக் கொல்கிறவனும் போர் செய்து ரத்தக்கிளறி உண்டாக்குகிறவனும் சுவர்க்கத்திற்குப் போகிறான் என்றால், பிறகு நரகத்திற்குப் போகிறவர்கள்தான் யார்?
ஆகவே நான் யாரையும் சாப்பிடமாட்டேன். அது இருக்கட்டும். நான் கிழவன். தூரத்திலிருந்து கொண்டு உங்களுடைய பேச்சைக் கேட்க முடியவில்லை. இருவரில் ஜெயித்தவன், தோற்றவன் யார் என்று எப்படி நான் தீர்மானிப்பேன்? அருகில் வந்து விவகாரத்தைச் சொல்லுங்கள். அதைக் கேட்டுவிட்டு உங்களுடைய வழக்கின் நியாயத்தை அறிந்து தீர்ப்பளிக்கிறேன். நான் மறுஉலகு அடைவதற்குத் தடையாக இல்லாதவாறு அந்தத் தீர்ப்பு இருக்கட்டும்.
கர்வத்தாலோ, பேராசையாலோ, கோபத்தாலோ, பயத்தாலோ, நியாயத்துக்கு மாறாக நடப்பவன் நரகத்தை அடைகிறான்.
என்றொரு பழமொழி உண்டு. மேலும்,
ஒரு ஆட்டுக்குத் தீங்கு செய்வது ஐந்து உறவினர்களைக் கொன்ற பாவத்துக்குச் சமம். ஒரு மாட்டுக்குத் தீங்கு செய்வது பத்து பேர்களைக் கொன்ற பாவத்துக்குச் சமம். ஒரு பெண்ணுக்குத் தீங்கு செய்வது நூறு பேர்களைக் கொன்ற பாவத்துக்குச் சமம். ஒரு மனிதனுக்குத் தீங்கு செய்வது ஆயிரம் பேர்களைக் கொன்ற பாவத்துக்குச் சமம்.
ஆகவே, நீங்கள் பயப்படாமல் என் காது அருகில் வந்து தெளிவாகச் சொல்லுங்கள்’’ என்றது பூனை.
விஷயத்தை வளர்ப்பானேன்? இப்படிப் பேசி நீசப்பூனை அவர்களை நம்பவைத்தது. அவை இரண்டும் அதன் அருகில் சென்றதும், அந்த வினாடியே அவர்களில் ஒருவனைக் கால்களால் பிடித்துக்கொண்டது. மற்றொருவனை ரம்பம்போன்ற தன் பற்களால் கௌவிப் பிடித்துக்கொண்டது. அவர்கள் இருவரும் செத்துவிட்டதும், பூனை அவைகளைத் தின்றது.
அதனால்தான் ‘நீசன் நீதிபதியாக அமர்ந்தால் வாதி பிரதிவாதிகளுக்கு என்ன சுகம்?…’ என்றெல்லாம் சொல்லலானேன்’’ என்றது காக்கை. மேலும் தொடர்ந்து பேசுகையில் ‘’ஆகவே, நீங்களும் இந்தப் பகல் குருடனாகிய ஆந்தையை அரசனாக்கினால் இரவில் கண் தெரியாதவர்களாகிய உங்களுக்கும் தித்திரிப்பறவையின் கதிதான் ஏற்படும். நன்றாக யோசித்துக் தக்கபடி செய்யுங்கள்’’ என்றது காக்கை.
காக்ககையின் வார்த்தைகளைக் கேட்டதும்,
‘’அவன் சொல்வதும் நியாயம்தான்’’ என்று பறவைகள் பேசிக் கொண்டன. ‘’அரசனைத் தேர்ந்தெடுக்க மறுபடியும் ஒன்றுகூடி யோசிப்போம்’’ என்று கூறிவிட்டு எல்லாப் பறவைகளும் திரும்பிப் போய்விட்டன. பகல் குருடாகிய ஆந்தை மட்டும் தன் மனைவியோடு சிம்மாதனத்தில் உட்கார்ந்திருந்தது. மகுடாபிஷேகம் நடக்கும் என்று வீணாக எண்ணிக் கொண்டிருந்தது. ‘’ஏய், யார் அங்கே? அபிஷேகம் செய்வது தாமதப் படுவானேன்?’’ என்று கூவியது. அதற்கு ஆந்தையின் மனைவி, ‘’அன்பரே, உங்களுடைய அபிஷேகத்திற்குக் காக்கை தடங்கல் ஏற்படுத்திவிட்டது. பறவைகள் எல்லாம் எல்லாத் திக்குகளிலும் பறந்து போய்விட்டன. அந்தக் காக்கை மட்டும் இங்கே தனியே உட்கார்ந்து கொண்டிருக்கிறது. என்ன காரணமோ தெரியவில்லை. ஆகவே சீக்கிரம் எழுந்திருங்கள், உங்களை வீட்டுக்கு அழைத்துப்போகிறேன்’’ என்று சொல்லிற்று.
அதைக்கேட்டு துக்கமடைந்தது ஆந்தை. அது காக்கையைப் பார்த்து, ‘’ஏ துஷ்டனே, ஏன் நீ எனக்குப் பாதகம் செய்தாய்? ராஜ்யாபிஷேகத்துக்கு ஏன் தடங்கல் ஏற்படுதினாய்? இனிமேல் நாமிருவரும் பகைவர்களே.
அம்பால் அடிபட்டாலும், மழுவினால் வெட்டுப்பட்டாலும், காட்டுமரம் வளரத்தான் செய்கிறது. ஆனால் வெறுக்கத்தக்க கெட்ட சொல்லால் உண்டாகிற புண் ஆறுவதேயில்லை.
என்றொரு பழமொழி உண்டு’’ என்றது ஆந்தை. பிறகு அது தன் மனைவியுடன் தன் இடத்திற்குப் போய்விட்டது. காக்கை யோசிக்கத் தொடங்கியது. ‘’ஐயோ, இப்படிப் பேசி வீணாகப் பகை சம்பாதித்துக் கொண்டேனே!
சமய சந்தர்ப்பமறியாத பேச்சு, தகுதியற்ற பேச்சு, கொடூரமான வெறுப்பான பேச்சு, காரணமற்ற பேச்சு, தனக்கும் நன்மையளிக்காத பேச்சு — இப்படிப்பட்ட பேச்சுக்கள் விஷமாகவே முடிகின்றன.
ஒருவன் பலசாலியாகவும், புத்திசாலியாகவும் இருந்தபோதிலும் தானாகப் பகைமையை உண்டாக்கிக் கொள்ளக்கூடாது. ஊரில் வைத்தியன் இருக்கிறான் என்பதற்காகக் காரணமின்றி யாராவது விஷத்தைக் குடிப்பார்களா?
சபை நடுவில் அறிவாளி ஒரு பொழுதும் பிறரை நிந்திக்கவே கூடாது. நீ பேசுவது உண்மையான பேச்சாக இருக்கலாம். என்றாலும் அது வருத்தமளிக்கிறதாக இருந்தால் அதைப்பேசாதே!
ஆப்த நண்பர்களுடன் அடிக்கடி கலந்தாலோசித்து, சுயபுத்தியையும் செலுத்தி ஆராய்ந்து பார்த்துக் காரியத்தில் ஈடுபடுகிற புத்திசாலியிடம்தான் செல்வமும் கீர்த்தியும் சேருகிறது.
என்று காக்கை சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் பறந்து சென்றது. இப்படித்தான், குழந்தாய், நமக்கும் ஆந்தைகளுக்கும் பரம்பரையாகப் பகை உண்டாயிற்றே’’ என்றது ஸ்திரஜீவி.
‘’இந்நிலையில் நாம் என்ன செய்வது?’’ என்று மேகவர்ணன் கேட்டது. ‘’அதற்கு ஒரு சரியான மார்க்கம் இருக்கிறது. அந்த ஆறு உபாயங்களைக் காட்டிலும் மேலான வழி அது. அதை நான் பின்பற்றப் போகிறேன். நானே நேரில் தலைமை வகித்துச் சென்று எதிரியை ஜெயிக்கிறேன். அவர்களை வஞ்சித்து, கொல்லத்தக்க நிலைக்குக் கொண்டு வருகிறேன்.
அதிக அறிவும், ஞானமும், பலமும் ஒருவனுக்கு இருந்தாலும் அவனைத்திறமையுள்ள போக்கிரிகள் வஞ்சிக்க முடியும், ஆட்டைச் சுமந்து சென்ற பிராம்மணன் வஞ்சிக்கப் பட்டதுபோல!
என்றது ஸ்திரஜீவி. ‘’அது எப்படி?’’ என்று மேகவர்ணன் கேட்க, அது சொல்லத் தொடங்கியது:
- குந்தி
- தொலைந்துபோன கோடை
- கைலி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12
- பாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9
- சௌந்தரசுகன் 300 / 25
- எஞ்சினியரும் சித்தனும்
- துருக்கி பயணம்-1
- முள்வெளி அத்தியாயம் -8
- 6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.
- 1.பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-1)
- பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு
- அசோக மித்ரனும் – என்டிஆர் இலக்கிய விருதும்.
- குகைமனிதனும் கோடிரூபாயும் நூல்
- வஞ்சிக்கப்பட்ட வழக்கு வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை – பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’
- வைதீஸ்வரன் வலைப்பூ
- வசந்தமே வருக!
- நியாப் படுத்தாத தண்டனைகள் ….2..
- யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோளத்தில் நீர் வெள்ளம் நிரப்பச் செய்த நிபுளா விண்வெளி மூலச் சுரப்பி.
- An evening with P.A.Krishnan
- இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்
- சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -1 பாகம் – 1
- வளர்ச்சி…
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 19) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- படிமை திரைப்பட பயிற்சி இயக்கம்
- நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளி
- தாகூரின் கீதப் பாமாலை – 13 ஆணவம் நொறுங்கும் போது !
- தோல்வியில் முறியும் மனங்கள்..!
- நன்றி நவிலல்
- முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?
- நேர்காணல் இதழ் ஐந்து :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழா
- வேழ விரிபூ!
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது
- ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25
- வலைத் தளத்தில்
- ”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது
- இந்நிமிடம் ..
- வெயில் விளையாடும் களம்