வேழ விரிபூ!

0 minutes, 0 seconds Read
This entry is part 34 of 41 in the series 13 மே 2012

வள்ளி படர்த்திய வெள்வீக்கிழங்கின்
மண்குழி உழற்றும் கொடும்பல் கேழல்
எல்வளை நீள அளைஇ ஒளிக்கும்
எலிகள் தின்ற காய்நெல் பழனம்
பாசடை பைம்புனல் குண்டுநீர் ஆம்பல்
குவித்தன்ன காட்டி விரிகிளர் ஊட்டும்
நீள்விழிக்காடு தீப்பெய்த நீழல்
நடுக்குறூஉம் காட்சி நலன் அழி செய்ய‌
மாவதிர ஓட்டிய மணித்தேர் வெற்ப‌ன்
கடிவிசை வலிப்ப கதழ்பரி மள்ளல்
துள்ளல் கூட்டி ஆறுவடுப்படுத்தி
அலரி ஆட்டிய அந்துணர் உள்ளி
நுண்சிறை வண்டினம் நுவல் இமிழ்தந்து
நுண்சொல் உரைப்ப நுழைபு மெய் விதிர்த்தான்.
வேழ விரிபூ விரியுரை இஃதே.
கடல்நுரைபோல் யான் அலைபடுகின்றேன்.
கண்விழி இருந்தும் க‌ல்ல‌ன் ஆகி
விரைவு ஆற்றாய் அலைவுறும் நெஞ்சு
அறிகில்லையாகி. ஊஊர்பு உருள் தேர் உருட்டி
நோதல் செய்தாய்!பொறிக்கல் நாட!
விரைதி விரைதி வேய்புரைத் தோள!
பாலாவி அன்ன பாம்புரி போர்த்து
பசலை பாய மாயும் மென் றடந்தோள்.

===================================================ருத்ரா

பொழிப்புரை
===========
வ‌ள்ளிக்கொடி ப‌ட‌ர்ந்த‌ நில‌த்தில் வெண்மையான‌ சிறுபூக்க‌ளுட‌ன் கிட‌க்கும்
கிழ‌ங்குக‌ளை ம‌ண்குழி ப‌றித்து வ‌ளைந்த‌ ப‌ற்க‌ளையுடைய‌ காட்டுப்ப‌ன்றி
தின்ப‌த‌னால் ஏற்ப‌ட்ட‌ வ‌ளைகளில் முற்றிய‌ நெல் விளைந்த‌ வ‌ய‌ல்களின்
எலிக‌ள் மேய்ந்து ஒளிக்கும்.ப‌ச்சைஇலைக‌ள் ப‌ட‌ர்ந்த‌ ஆழ்ந்த‌
நீர்த்த‌டாக‌ ஆம்ப‌ல் பூக்க‌ள் குவிவ‌து போல் காட்டி விரிந்து
கிள‌ர்ச்சியை ஊட்டும்.அவை ஆம்ப‌ல்க‌ள் அல்ல‌.அவ‌ள‌து நீள் விழிகளவை!
காத‌ல் நெருப்பின் சுட‌ர்போல் காட்டி அந்த‌ தீக்குள்ளும் ஒரு த‌ண்ணிழ‌ல்
புதைத்து த‌லைவ‌னை மிக‌ப்பாடாய் ப‌டுத்தி ந‌டுங்க‌ச்செய்து
விடும்.ம‌ணித்தேர் ஒலிக்க‌ குதிரையை பூமி அதிரும் வ‌ண்ண‌ம் ஓட்டி வ‌ரும்
அவ‌ன் க‌டும் விரைவில் வ‌ரும் குதிரையின் குள‌ம்புக‌ளால் வலிமையும்
துள்ளும்பாய்ச்சல்களும் வ‌ழித்த‌ட‌த்தை புண்ணாக்கும்.அப்போது
அக்குதிரையின் த‌லையில் சூட்டிய‌ வெள்ளைப்பூ ஆட்டி ஆட்டி(வேழ‌ம் என்ற
க‌ரும்பின் வெண்பூ)வ‌ருவ‌தில் உதிரும் பூந்தாதுகள் இருப்பதாக (எண்ணி)உண்ண
வரும் சிறு சிறு வ‌ண்டுக‌ள் அதிர்வொலி காட்டும்.அதில் த‌லைவி கூறும்
நுட்ப‌க்குறிப்பு ஏதோ ஒன்று இருப்ப‌தாக‌ த‌லைவ‌ன்
மெய்விதிர்த்துப்போனான்.அந்த‌ “வேழ‌ விரிபூ” விரித்துச்சொல்வ‌து
இதுவே…என் உள்ள‌ம் அந்த‌ வெள்ளையான‌ க‌ட‌ல்நுரைபோல் (வேழ‌ விரி பூ
போல்)பிரிவாற்றாமையால் அலைப‌டுகிற‌து.அதை அறிந்து கொள்ளாத‌வ‌னாக கண்டும்
காணாத கல் நெஞ்சனாக தேரை மெதுவாக‌ ஊரும் வ‌ண்ண‌ம் உருட்டிவ‌ந்து என்னை
வ‌தைக்கிறாயே!ப‌ச்சை ம‌ர‌க்கூட்ட‌ங்க‌ள் புள்ளிக‌ள் போல்
போர்த்திருக்கும் ம‌லை நாட‌!மூங்கில் போல‌ வ‌லிய‌ தோள்க‌ளை
உடைய‌வ‌னே!விரைந்து விரைந்து வா! பாலின் ஆவி போல் ப‌ச‌லை நோய்
(பிரிவுத்துன்ப‌ம்)என்மீது பாம்புச்ச‌ட்டையாய்
போர்த்திக்கொண்டிருக்கிற‌து.அத‌னால் என் அக‌ன்ற‌ இள‌ந்தோள்க‌ளும்
மெலிந்து வாடுமே.(யான் என் செய்வேன்?)

====================================================ருத்ரா

Series Navigationநேர்காணல் இதழ் ஐந்து :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழாவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *