தங்கம் – 7 சீனாவின் மைடாஸ்

This entry is part 21 of 29 in the series 20 மே 2012



நாம் பொருட்களின் மதிப்பை உயர்த்திக் காட்ட, தங்க முலாம் பூசிய பொருட்களை வாங்குவோம். பயன்படுத்துவோம். அவற்றை வீட்டில் பல பகுதிகளிலும் அலங்காரப் பொருட்களாக வைத்திருப்போம். ஆனால் 2001 முதல் ஹாங்காங்கின் தங்கக் கழிப்பறை வசித்திரங்களில் ஒரு விசித்திரம். 380 இலட்சம் ஹாங்காங் டாலர்கள் செலவில் இதை அமைத்தவர் லம் சாய் விங் என்பவர். இரு அறைகள் முழுவதுமே 380 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு, கழிப்பிடமும் தங்கத்தால் உருவாக்கப்பட்டது. கைக்கழுவும் இடமும், கழிப்பறை பிரஷ்களும், காகிதத் தாங்கும் கொக்கிகளும், கண்ணாடி பிரேமுகளும், விளக்குகளும், சுவர்களும், கதவுகளும், குழாய்களும் தங்கத்தால் ஆனவை. அறைகளின் மேல் கூறை அலங்காரத்திற்கு 6200 விலையுயர்ந்த வைரக் கற்களும் முத்துக்களும் பயன்படுத்தப்பட்டது. இது உலகின் மிகவும் விலையுயர்ந்த கழிப்பறை மற்றும் மிகவும் ஆடம்பரமான கழிப்பறைக்காக கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக பதியப்பட்டது.

3டி தங்கக் கடைக்காரரும் ஹாங் புங் கோல்ட் செக்னாலஜியின் தலைவருமான லம் சாய் விங், இந்த கழிப்பறையை அமைத்து ஹாங்காங்கில் சுற்றுலா பயணிகள் அனைவரும் தவறாமல் வந்து செல்லும் இடமாகவே அமைத்திருந்தார். தினம் 100 சுற்றுலா குழுக்கள் வரை வந்து சென்றனர். இந்தக் கழிப்பறையைக் காண வருவோருக்கு காலுறை கொடுத்து எதையும் தொடக்கூடாது என்ற எச்சரிக்கையும் செய்யப்பட்டு, பயணிகளின் கண்களை பளிச்சிடவும் திறந்த வாய் மூடாது பார்க்கவும் வைத்த இடம் இது என்றால் மிகையாகாது. அதற்கு பக்கத்திலேயே அமைக்கப்பட்ட கடை, மிகவும் சிறந்த தங்க அணிகலன்களையும் நினைவுப் பொருட்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டதால், ஆபரணங்களின் வியாபாரமும் பன்மடங்கு கூடியது. இதைப் பல ஆண்டுகள் வைத்திருந்தது விசித்திரமே. அதன் மூலம் நல்ல விளம்பரமும் நல்ல வருமானமும் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.

சில ஆண்டுகளில் அவருக்கு வேறொரு ஆசை தோன்றியது. தங்கத்தில் விலை ஏற்றம் எக்கத்தப்பாக ஆன நேரத்தில், அதை மேலும் வைத்திருப்பது உசிதமல்ல என்று அதை அகற்றியும் விட்டார். ஆனால் அதற்கு ஈடு செய்யும் வகையில், அதை விடவும் பல மடங்கு சிறந்த மற்றொன்றை நிர்மாணம் செய்தார்.

நாம் குழந்தைகளாக இருக்கும் போது தொட்டதெல்லாம் தங்கமாக வேண்டும் என்று வரம் பெற்ற மைடாஸ் கதையைப் படித்திருக்கிறோம். அதை நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும், இந்த நவீன யுகத்தின் மைடாஸ் ஒருவர் ஹாங்காங்கில் இருந்தார். ஆம்.. அவர் தங்க வியாபாரத்தில் பலே கில்லாடி. கிடைத்த வருமானத்தில் 6 டன் தங்கத்தைப் பயன்படுத்தி ஒரு தங்க விடுதியையே கட்டினார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால்.. அது உண்மை. 650 சதுர மீட்டர் நிலப்பரப்பில், 7000 சதுர அடிப் பரப்பில், சுவிஸ்ஹார்ன் பேலஸ் என்று பெயரிட்டு, விடுதி ஒன்றை ஆரம்பித்தார். நுழைவாயில் முதற்கொண்டு, உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தும், படுக்கை, மேஜை, நாற்காலி, உண்ணப் பயன்படுத்தும் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், கழிப்பறை, குளியலறை, கை கழுவும் தொட்டி என்று எது எடுத்தாலும் தங்கமே.
சுற்றிப் பார்க்க 3 அமெரிக்க டாலர்களும், ஒரு நாள் தங்கும் வாடகை 25000 அமெரிக்க டாலர்களும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருத்து அடிக்கக் கூடிய விடுதியை 5 கோடி டாலர்கள் மூலதனத்தில் 300 தொழிலாளர்களைப் பயன்படுத்தி, 5 ஆண்டுகளில் கட்டி முடித்தார் லம் சாய். இதை கட்டும் யோசனை எப்படி வந்தது என்று கேட்ட போது, ஹன் நாட்டு மன்னன் தன் மனைவிக்காக் கட்டிய விலை மதிப்பற்ற மாளிகையே தூண்டுகோலாக அமைந்தது என்றாராம். சீன நாட்டைச் சேர்ந்ததால், அவர் ஷாஜஹான் பற்றி அறியவில்லை போலும். அழகிய தங்க மாளிகையைக் கட்டிய காரணத்தால் அவரை நாம் நவீன ஷாஜஹான் என்று கூடச் சொல்லலாம்.

2011இல் பொருட்கள் அனைத்தும் உருக்கப்பட்டு, அதை விற்க சீனா, ஹாங்காங் மற்றும் மகாவ் நாடுகளில் 260 கடைகள் அமைக்கப்பட்டு, இன்று இந்நிறுவனம் கிளை விரித்து நிற்கிறது.

இவ்வளவும் செய்த லம் சாய் விங் பரம்பரைப் பணக்காரரா.. என்றால் அது தான் இல்லை.

தனது 7ஆம் வயதில், தந்தையை இழந்து, தன் தாயையும் உடன் பிறந்த 6 பேரையும் காக்க வாழைப்பழமும் வேர்கடலையும் விற்றவர் தான். பிறகு 22 வயதில், தன் கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சௌஜௌவ் நகரிலிருந்து ஒரு மாத நடைப்பயணமும், கடலை நீச்சல் அடித்துக் கடந்து ஹாங்காங் நகரை வந்தடைந்தார். தன்னுடைய சொந்தங்களைத் தேடி அலைந்து, அவர்களது உதவியுடன் இறுதியில் பொற்கொல்லராக ஓர் இடத்தில் சேர்ந்தார்.

சில வருடங்களில் ஒரு சிறிய நகைக் கடையைத் தொடங்கினார். அதற்குப் பிறகு அவரது வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கவும் நேரமில்லாமல், தங்க வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தார் என்றே சொல்ல வேண்டும். 1979இல் சீனா வியாபாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்த நேரத்தில், டொங்வான் நகரில் 100 தொழிலாளர்களுடன் ஒரு தொழிற்சாலையை அமைத்தார். 1998இல் பேர் பெற்ற தங்க நிறுவனமாக அதை உருவாக்கியிருந்தார். அவுன்ஸ் 200 அமெரிக்க டாலர்களாக இருந்த போது தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற அவரது எண்ணம் சரியாக வேலை செய்தது. ஐந்து வருடங்களுக்குள்ளாகவே விலை 1000 டாலர்கள் வரை சென்றதில், அவருக்கு சொல்ல முடியாத அளவு லாபத்தை ஈட்டித் தந்தது. அதைக் கொண்டு தன்னுடைய 16 வயதிலிருந்தே கண்டு கொண்டிருந்த கனவை நிறைவேற்ற எண்ணினார்.

லெனின் விளாடிமீர் ஒரு முறை, “நாம் நாடு உலக அளவில் வெற்றி கொண்ட நாடாகும் போது, உலகின் மிகப் பெரிய நகரங்களின் தெருக்களில் பொதுக் கழிப்பறையை கட்ட தங்கத்தை உபயோகப்படுத்தலாம் என்று எண்ணுகிறேன்” என்று சொன்னாராம். சீனாவில் பிறந்த லம் சாய்யிற்கு அந்தக் கூற்று சட்டென்று மனதில் பதிந்துவிட்டது. அதை மனதிற்கொண்டே வியாபாரத்தில் சாதனைகள் செய்த பின் வணிக நகரான ஹாங்காங்கில் தங்கக் கழிப்பறையைக் கட்ட முடிவு செய்தார். அதைச் செய்தும் காட்டினார்.

இவ்வளவும் செய்தவர் இப்போது எப்படி இருக்கிறார் என்ற கேள்வியும் எழுமல்லவா? தன்னுடைய 53ஆம் வயதில் 2008இல் திடீரென்று வயற்று வலி ஏற்பட்டு இறந்து போனார். ஆனால் அவர் தன் கனவை நனவாக்கினார் என்பது மிகவும் பாராட்டத்தக்கது. அவரது தங்க சாம்ராஜ்யத்தை தற்போது அவரது மனைவி நடத்தி வருகிறார்.

தங்க விடுதியைக் காண ஆவலாக இருக்கிறதா?

Series Navigationஎன் முகம் தேடி….சின்னமகளிடம் கிங் ஃபிஷர் பற்றி ஒரு உரையாடல்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *