பொன் தந்த பாம்பு
ஒரு ஊரில் ஒரு பிராம்மணன் இருந்தான். உழுவதே அவன் தொழில். அதில் ஆதாயம் ஒன்றும் அவனுக்குக் கிடைக்காமல் இருந்து வந்தது. ஒருநாள், கோடைக்கால முடிவில், வெய்யில் தாங்க முடியாமல் அவன் தன் வயல் மத்தியிலே ஒரு மரத்தின் நிழலில் சிறிது கண்ணயர்ந்தான். அப்போது கொஞ்சதூரம் தள்ளி இருந்த ஒரு எறும்புப் புற்றின் மேல் பயங்கரமான ஒரு பெரிய பாம்பு படமெடுத்து ஆடுவதைக் கண்டுவிட்டான். உடனே அவன், ‘’இது கட்டாயம் இந்த வயலைக் காக்கும் தேவதையாகத்தான் இருக்க வேண்டும். இதை நான் வணங்கியதே இல்லை. அதனால்தான் எனக்கு உழவுத் தொழில் பலனளிக்கவில்லை. ஆகவே இப்போது அதை வணங்குகிறேன்’’ என்று யோசித்தான்.
அப்படியே தீர்மானித்து யாரிடமிருந்தோ பிச்சையாகப் பாலைப் பெற்றுக்கொண்டுவந்து, பாத்திரத்தில் வார்த்து எடுத்துக் கொண்டு எறும்புப் புற்றின் அருகே போனான். ‘’வயலைக் காக்கும் தேவதையையே, நீ இங்கு வசிக்கிறாய் என்று இதுவரை நான் அறியவில்லை. அதனால் வணங்காமல் இருந்தேன். இப்போது என்னை மன்னித்துவிடு’’ என்று சொல்லி வணங்கி அங்கேயே பாலை வைத்துவிட்டு வீட்டுக்குப் போனான்.
மறுநாள் காலையில் திரும்பிவந்து பார்த்தபோது, பாத்திரத்தில் ஒரு தங்க நாணயம் இருக்கக் கண்டான். எனவே, அவன் தினந்தோறும் அங்கே தனியே வந்து பால் வைத்துவிட்டுத் தங்க நாணயத்தை எடுத்துச் சென்றபடி இருந்தான். ஒருநாள் புற்றுக்குப் பால் கொண்டுபோய் வைக்குமாறு தன் மகனிடம் சொல்லிவிட்டு அந்தப் பிராம்மணன் நகரத்துக்குச் சென்றான். அந்தப் பையனும் பாலை அங்கே வைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.
மறுநாள் அந்தப் பிள்ளை அங்கு போனபோது ஒரு தங்க நாணயம் இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘’இந்தப் புற்று நிறைய தங்க நாணயங்கள் நிச்சயம் இருக்கும். எனவே இந்தப் பாம்பைக் கொன்று அவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ளலாமே!’’ என்று யோசித்தான். அம்மாதிரியே முடிவு செய்து, மறுநாள் பால்வைக்க வந்த அந்தப் பையன் பாம்பைத் தடியால் தலையில் அடித்தான். விதிவசத்தால் அது எப்படியோ சாகாமல் தப்பித்தது. தன் கூரிய பற்களால் கடிக்கவே, அவன் உடனே இறந்து போனான். உறவினர்கள் வந்து அவனது உடலை எடுத்து வயலுக்குப் பக்கத்திலேயே விறகுக் குவியலின்மீது கிடத்தி ஈமச்சடங்கை முடித்தார்கள்.
இரண்டாம் நாளில் பையனுடைய தந்தை திரும்பி வந்தான். பையன் இறந்த காரணத்தை உறவினர்கள் சொல்லக் கேட்டான். அது உண்மை என்பதையும் கண்டுகொண்டபிறகு,
உயிரினங்களிடம் தயைகாட்டு; அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பாற்று! அப்படிச் செய்யாவிட்டால், பத்மவனத்தில் அன்னப்பறவைகள் நாசமானதைப்போல் நீ நாசமடைவாய்.
என்று பிராம்மணன் சொன்னான். ‘’அது எப்படி?’’ என்று உறவினர்கள் கேட்கவே, பிராம்மணன் கூறத் தொடங்கினான்:
அடைக்கலம் அளிக்காத அன்னங்கள்
ஒரு ஊரில் சித்ரரதன் என்றொரு அரசன் இருந்தான். அவனுக்குச் சொந்தமான பத்மஸரஸ் என்றொரு ஏரி இருந்தது. அதை அவனுடைய போர் வீரர்கள் பத்திரமாகக் காத்துவந்தார்கள். ஏனென்றால், அதில் பல பொன்மயமான அன்னப்பறவைகள் வசித்து வந்தன. ஆறு மாதங்களுக்கு ஒருதடவை அவை ஒவ்வொன்றும் ஒரு தங்க இறகை அரசனுக்குக் கொடுத்து வந்தன.
ஒருநாள் அந்த ஏரிக்கு தங்கமயமான ஒரு பெரிய பறவை வந்தது. அதைப் பார்த்த அன்னங்கள், ‘’எங்களோடு நீ வசிக்கக்கூடாது. காரணம் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு தங்க இறகு கொடுத்து இந்த ஏரியை நாங்கள் வாடகைக்கு எடுத்திருக்கிறோம்’’ என்று சொல்லின. விஷயத்தை வளர்த்துவானேன்? இரு தரப்பினருக்குமிடையே சச்சரவு ஏற்பட்டது.
அந்தப் பறவை அரசனிடம் சென்று அடைக்கலம் புகுந்தது. ‘’அரசே, அந்த அன்னப்பறவைகள் என்னிடம் ‘யாருக்கும் தங்க இடங் கொடுக்க முடியாது. அரசானல் என்ன செய்ய முடியும்?’ என்று சொல்லின. அதற்கு நான் அவர்களிடம் ‘அப்படிச் சொல்வது அழகல்ல. நான் போய் இதை அரசரிடம் தெரிவிக்கிறேன்’ என்று சொன்னேன். இதுதான் நிலைமை. இனி உங்கள் சித்தம்.’’ என்று சொல்லிற்று.
உடனே அரசன் வேலையாட்களைப் பார்த்து ‘’நீங்கள் போய் எல்லாப் பறவைகளையும் கொன்று உடனே இங்கு எடுத்து வாருங்கள்’’ என்று சொன்னான். அரசனின் கட்டளைப்படி வேலையாட்கள் உடனே புறப்பட்டுச் சென்றனர்.
கம்பும் கையுமாக ராஜசேவர்கள் வருவதை ஒரு கிழப்பறவை பார்த்துவிட்டது. ‘’உறவினர்களே, அவர்கள் வருவதிலே நமக்கு நன்மை கிடையாது. எல்லோரும் ஒன்று சேர்ந்து பறந்து போய்விட வேண்டியதுதான்’’ என்று சொல்லிற்று, உடனே எல்லா அன்னங்களும் பறந்து போய்விட்டன. அதனால்தான் உயிரினங்களிடம் தயை காட்டு என்றெல்லாம் சொன்னேன் என்றான் பிராம்மணன்.
மறுநாள் பிராம்மணன் மறுபடியும் புற்றுக்குப் பால் கொண்டு போனான். அந்தப் பாம்பின் நம்பிக்கையைப் பெற நினைத்து, ‘’தன் புத்தியாலேயே என் மகன் மாண்டான்’’ என்று சொன்னான். அதற்குப் பாம்பு.
தீமூட்டிய ஈமச்சிதையை வேண்டுமானால் சிதைத்து எறிந்துவிடலாம். சிதைந்த பிறகு மீண்டும் சேர்ந்த அன்பு மேலும் வளர்வது கிடையாது.
என்று சொல்லிற்று. ஆகவே அவன் (ஸ்திரஜீவி) இறந்தால் நீங்கள் தொந்தரவுகள் இல்லாத ராஜ்யத்தைக் கஷ்டம் எதுவும் படாமல் அனுபவித்து வருவீர்கள்’’ என்றது ரக்தாட்சன்.
இதைக்கேட்ட ஆந்தையரசன் குரூராட்சனைப் பார்த்து, ‘’நண்பனே, நீ என்ன நினைக்கிறாய்?’’ என்று கேட்டது. அதற்கு அந்த தஞ்சம் புகுந்தவனைக் கொல்லக்கூடாது. இந்தப் பழங்கதையை நீங்கள் கேட்டிருப்பீர்களே!
எதிரி சரணடைந்தபோது அவனை நியாயப்படி கௌரவித்துத் தனி மாம்சத்தைக் கொடுத்து அவன் பசியைத் தணித்தது என்று புறாக்களைப்பற்றிய கதையைக் கேட்டதில்லையா
என்று சொல்லிற்று. ‘’அது எப்படி?’’ என்று அரிமர்த்தனன் கேட்க, மந்திரி சொல்லத் தொடங்கியது:
புறாவின் உயிர்தியாகம்
ஒரு பெரிய காட்டில் பயங்கரமான வேடன் ஒருவன் தன்னுடைய கோரத் தொழிலைச் செய்து வந்தான். பிராணிகளுக்கெல்லாம் அவன் யமனாக இருந்தான். அவனுக்கு நண்பனோ, தோழனோ, உறவினனோ யாருமில்லை. அவனுடைய கோரத்தொழிலை வெறுத்து அவர்கள் அனைவரும் அவனைவிட்டுப் போயினர். பாம்பு கடிப்பதற்கு முன்பே வெறுப்பூட்டுகிறது அல்லவா? அதைப்போல் அந்த வேடனும் உயிரினங்களின் வெறுப்பைப் பெற்றிருந்தான். கையில் வலை, கூண்டு, தடி எடுத்துக்கொண்டு தினந்தோறும் அவன் காட்டில் திரிந்தான்.
ஒருநாள் காட்டில் அவன் சுற்றித்திரிகையில், திக்குகளெல்லாம் கறுத்து, பிரளயகாலம் வந்ததுபோல் காற்றும் மழையும் பலமாக அடித்தது. உடல் வெடவெடக்க, உள்ளம் நடுநடுங்க, அவன் தங்குவதற்கு இடம் தேடியோடி ஒரு மரத்தை அடைந்தான். அங்கு நின்று கொண்டிருக்கும்போது வானம் தெளிந்து நட்சத்திரங்கள் தெரிந்தன. அவனுக்கு ஏதோ ஒரு புத்தி தோன்றியது. ‘ஆண்டவனே, நீரே எனக்கு அடைக்கலம்’ என்று சொன்னான்.
அந்த மரத்தின் ஒரு பொந்தில் ஆண்புறா ஒன்று இருந்தது. மனைவியை வெகுநேரமாகக் காணாததால், அது துக்கத்தோடு அழுதுகொண்டிருந்தது. ‘’காற்றும் மழையும் பலமாயிருக்கிறது. என் மனைவி இன்னும் வீடு திரும்பவில்லையே! அவள் இல்லாமல் வீடே சூனியமாக இருக்கிறது. மனைவியில்லாத வீடு வீடல்ல, அது காடுதான் என்று எனக்குப் படுகிறது. கற்புள்ளவளாய் புருஷனே உயிர் என்று புருஷனுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணம் செய்யும் மனைவியைப் பெற்றவனே உலகில் பாக்கியசாலி!’’ என்று பாடிப் புலம்பிக் கொண்டிருந்தது.
அப்போது வேடனுடைய கூண்டிலிருந்த பெண்புறா இந்தப் புலம்பலைக் கேட்டுச் சந்தோஷமடைந்தது. புருஷனைப் பார்த்து, ‘’புருஷனைத் திருப்தி செய்யாதவளைப் பெண் என்று கருதக்கூடாது. புருஷன் திருப்தியடைந்தால், தெய்வங்களும் திருப்தியடைகின்றன. பூங்கொத்துகள் தொங்குகிற கொடி காட்டுத் தீயால் பொசுங்கி விடுவதுபோல், புருஷனைத் திருப்திப்படுத்தாத மனைவியை நெருப்பிலிட்டுப் பொசுக்க வேண்டும். அன்பனே! நான் சொல்லும் வார்த்தை உன்னுடைய உயிருக்கு ஆபத்துண்டாக்குவதாயிருந்தாலும் அது நல்ல வார்த்தைதான். ஆகவே அதைக் கேள். சரணாகதியடைந்தவனைத் தன் உயிரைக் கொடுத்தாவது ஒருவன் காப்பாற்ற வேண்டும். குளிராலும் பசியாலும் வாடிப்போய் இந்த வேடன் உன் வீட்டுக்கு வந்து படுத்திருக்கிறான். அவனை உபசரி. ‘அந்தி வேளையில் வந்த விருந்தாளியை உபசரிக்காவிட்டால், விருந்தாளியின் பாவம் உபசரிக்காதவனுக்கும், உபசரிக்காதவனுடைய புண்ணியம் விருந்தாளிக்கும், போய்ச் சேர்ந்துவிடுகின்றன’ என்றொரு வேதவாக்கு இருக்கிறது. உன் மனைவியை இவன் சிறைப்படுத்தி விட்டானே என்று இவனை நீ வெறுக்காதே. என் முற்பிறப்பின் வினைப்பயனாகவே நான் பிடிபட்டுள்ளேன். வறுமை, நோய், துயரம், சிறை என்பவையெல்லாம் முற்பிறப்பில் ஜீவராசிகள் செய்யும் தீவினைகளின் பலன்களே, ஆகவே வேடன் என்னைக் கூண்டில் அடைத்துள்ளதால் உனக்கு ஏற்பட்டிருக்கும் பகைமையை விட்டுவிடு. அறவழியில் மனதைச் செலுத்தி இவனை உபசரிப்பாயாக!’’ என்று சொல்லிற்று.
அறம் ஒழுகும் இந்தச் சொற்களைக் கேட்டதும் ஆண்புறாவுக்கு எங்கிருந்தோ ஒரு தைரியம் பிறந்தது. அது வேடனைப் பார்த்து, ‘’நண்பனே, உன் வரவு நல்வரவாகட்டும்! உனக்கு என்ன வேண்டும் சொல்! சிறிதும் கவலைப்படாதே! இதை உன் வீடுபோல் எண்ணிக்கொள்!’’ என்று சொல்லிற்று. பறவையைக் கொல்லும் வேடன் அதற்குப் பதிலளிக்கையில், ‘’புறாவே, எனக்கு ஒரே குளிராயிருக்கிறது. அதைப்போக்க வழி பார்’’ என்று சொன்னான். புறா போய் ஒரு கங்கு கொண்டு வந்து காய்ந்த இலைகளின் மேல் போட்டு சீக்கிரத்திலே கணப்பு உண்டாக்கித் தந்தது. ‘’இதிலே நீ குளிர் காய்ந்துகொள். ஐயோ, பாவம்! உன் பசியைப் போக்குவதற்கு என்னிடம் ஒன்றும் இல்லையே? சிலர் ஆயிரம்பேர்களுக்கு அன்னமளிக்கிறார்கள். சிலர் நூறுபேருக்கும், இன்னும் மற்றவர்கள் பத்துப்பேருக்கும் சோறு போடுகிறார்கள். நான் புண்ணியம் செய்யாதவன், உன் பசியைத் தணிக்க முடியாதவனாயிருக்கிறேன். ஒரு விருந்தாளிக்குக்கூட அன்னமளிக்க முடியாதவனுடைய துயர் நிறைந்த வீட்டில் வசித்துப் பயனென்ன? துயரம் நிறைந்த என் வாழ்க்கையை நான் மாய்த்துக்கொள்கிறேன். அதனால் வேறு யாராவது விருந்தாளி வந்தால் ‘இல்லை’ என்று சொல்லும் நிலைமை ஏற்படாதல்லவா?’’ என்று சொல்லிற்று. ஆண்புறா வேடனைப் பற்றி ஒன்றும் கூறவில்லை; தன்னையே நிந்தித்துக் கொண்டது. ‘கொஞ்ச நேரம் பொறு. உனக்கு உணவு தருகிறேன்’ என்றது.
இவ்வாறு சொல்லிவிட்டு, அறவழியில் நின்று ஒழுகிய அந்தப் புறா, நெருப்பை வலம் வந்து, தன் வீட்டுக்குள் நுழைவது போல் மிகுந்த மனக்களிப்புடன் நெருப்பில் விழுந்தது.
அதைக் கண்டதும் வேடனுக்கும் அளவற்ற இரக்கம் பிறந்தது. நெருப்பில் விழுந்த புறாவைப் பார்த்து, ‘’பாவம் செய்கிற மனிதன் தன் ஆன்மாவை நேசிப்பதில்லை. தான் செய்த பாவத்தைத் தானே அனுபவிக்க வேண்டும். என் புத்தி பாவம் நிறைந்த புத்தி; பாவம் நிறைந்த செய்கைகளைச் செய்தே நான் திருப்தியடைந்து வந்திருக்கிறேன். எனக்கு நரகம் நிச்சயம். இந்தப் புறா ஒரு மகாத்மா. தன் மாம்சத்தைக் கொடுத்து, கொடிய மனம் படைத்த எனக்கு அறிவு புகட்டியிருக்கிறது. இன்றுமுதல் என் உடம்புக்குச் சுகமளித்துப் பேணாமல் கோடைக்காலத்தில் ஜலம் வற்றிவிடுவதுபோல் உடலை வாட்டப் போகிறேன். குளிர், காற்று, வெய்யிலைச் சகித்துக்கொண்டு, உடலை இளைக்கச் செய்து, பலவிதமான உபவாசங்களால் அறவழிப்பட நிற்பேன்’’ என்று சொன்னான். உடனே முளை, கம்பு, வலை, கூண்டு எல்லா வற்றையும் வேடன் முறித்தெறிந்தான். பரிதாபமான அந்தப் பெண்புறாவைக் கூண்டிலிருந்து விடுதலை செய்துவிட்டான். அந்தப் பெண்புறா நெருப்பில் விழுந்த தன் கணவனைக் கண்டதும் சோகத்தால் அதன் நெஞ்சு நடுங்கியது. பரிதாபமாகப் புலம்பத் தொடங்கியது. ‘’பிராணநாதா, நீ இன்றி நான் வாழ்ந்தென்ன பிரயோஜனம்? புருஷனில்லாத பெண்கள் உயிர் வாழ்ந்து என்ன பயன்? மானம், தன்மதிப்பு, பெருமை, குடும்பத்தில் உறவினர்கள் காட்டும் மரியாதை, வேலையாட்களிடம் செலுத்தும் அதிகாரம் எல்லாம் பெண் விதவையானவுடன் மறைந்தொழிகின்றன’ என்று பெண்புறா பலவிதமாக புலம்பிற்று. கற்பில் சிறந்த அந்தப் புறா தானும் தீயில் புகுந்தது.
உடனே, அங்கே ஆண்புறா தெய்வவிமானத்தில் ஏறி வந்து காட்சியளித்தது. பெண்புறாவும் தெய்வீக உடையும் ஆபரணங்களும் அணிந்து அங்கு தோன்றி தன் புருஷனைப் பார்த்தது. அதைப் பார்த்த ஆண்புறா, ‘’அன்பே, நீ என்னை மரணத்திலும் பின் தொடர்ந்தாய், சிறப்பான செய்கை செய்தாய்? மனித உடம்பில் வளரும் ரோமம் மூன்றரை கோடி எண்ணிக்கைக் கொண்டது. கடைசிவரை கணவனைப் பின்பற்றிவரும் மனைவியரும் சுவர்க்கத்தில் மூன்றரை கோடி வருஷங்களுக்கு வாழ்ந்து வருவார்கள்’’ என்றது. மகிழ்ச்சியுடன் பெண் புறாவைத் தெய்வ விமானத்தில் ஏற்றுவித்து அணைத்துக் கொண்டது. பிறகு அவ்விரண்டு புறாக்களும் இன்பமாக வாழ்ந்தன. வேடனோ மனோவேதனை மிகுந்தவனாகி, மரணத்தைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டே, காட்டில் நுழைந்தான். அவனுடைய ஆசைகள் எல்லாம் அகன்று விட்டன. காட்டில் காட்டுத்தீ பற்றியிருப்பதைப் பார்த்து, அந்தத் தீயில் அவன் புகுந்தான். பாவங்கள் எல்லாம் பஸ்மமாயின. அவன் சுவர்க்கத்துக்குச் சென்று சுகமாக வாழ்ந்தான்.
அதனால்தான் ‘எதிரி சரணமடைந்தபோது அவனைக் கௌரவித்து….’ என்ற செய்யுளைச் சொன்னேன்’’ என்று முடித்தது ரக்தாட்சன்.
அதைக் கேட்டபிறகு, ஆந்தையரசன் தீப்தாப்சனைப் பார்த்து, ‘’நீ என்ன நினைக்கிறாய்?’’ என்று கேட்டது. அதற்குத் தீப்தாட்சன் பதிலளிக்கையில்,
‘’என்னைக் கண்டதும் தினந்தோறும் ஒதுங்கிச் சென்றவள் இன்றைக்கு என்னை வந்து அணைத்துக்கொள்கிறாள்? பரோபகாரியே, உனக்கு என் நன்றி. உனக்கு இஷ்டமானதை இங்கிருந்து எடுத்துச் செல்!’’
என்ற கூற்றுக்கு ஒரு திருடன் மறுமொழியாக,
‘’திருடுவதற்கு ஏதாவது இங்கிருந்தாலும் அவை எனக்குத் திருடத் தக்கவையாக இல்லை. இப்படி அவள் உன்னை அணைத்துக் கொள்ளாமலிருந்தால் நான் திரும்பவும் இங்கு வந்திருப்பேன்
என்று சொன்னான்” என்று சொல்லிற்று.
அதைக் கேட்ட ஆந்தையரசன், ‘’ஒன்றும் புரிவில்லையே! யார் அணைத்துக்கொள்வதில்லை? யார் அந்தத் திருடன்? விவரமாகச் சொல். அதைக் கேட்க விரும்புகிறேன்’’ என்றது. தீப்தாட்சன் சொல்லத் தொடங்கியது:
- தங்கம் 8 – சீனாவில் தங்க நிலவரம்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 14
- தொல்கலைகளை மீட்டெடுக்க
- பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’
- மொலோனி மிக்ஸர்: சென்னைவாசிகளின் விசித்திர குடிநீர்!
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-3)
- முள்வெளி அத்தியாயம் -10
- கயஸ்கானின் காரண காரிய சரித்திரம்
- என்னுடைய திருக்குறள் புத்தகத்தைப்பற்றிக் கட்டுரை வடிவில் விளம்பரம்
- திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
- மே 17 விடுதலை வேட்கை தீ
- உட்சுவரின் மௌன நிழல்…
- என் மணல் குவியல்…
- மறுபடியும்
- ஞான ஒளி (கலீல் கிப்ரான்)
- மகளிர் விழா அழைப்பிதழ்
- இரு கவிதைகள்
- யாதுமாகி …
- தாகூரின் கீதப் பாமாலை – 15 ஆத்மாவோடு விளையாட்டு !
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 21)
- பஞ்சதந்திரம் தொடர் 45
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்று
- ஆவணப்படம்: முதுமையில் தனிமை
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 27
- கொல்கத்தா தமிழ் மன்றத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்கு
- பிரேன் நிசாரின் “ இஷ்டம் “
- இரண்டு குறும்படங்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.
- ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ – துபாய் ‘அமீரகத் தமிழ் மன்றத்தின்’ பெண்கள் விழா
- துருக்கி பயணம்-3
- அறிவிப்பு: எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு
- கனவு இலக்கிய வட்டம் கல்விக்கூட்டமைப்பு நூல்கள் வெளியீட்டு விழா/ அறிமுக விழா