தெலுங்கில் :G.S. லக்ஷ்மி
தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
நேரம் – இரவு பத்துமணி. இடம் – பிரைவேட் நர்சிங் ஹோமில் ஒரு ஸ்பெஷல் ரூம்.
அவன் :
மருந்து மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த அவளைப் பார்க்கும் போது அவன் மனம் எங்கேயோ சஞ்சரிக்கத் தொடங்கியது.
ஏதேதோ நினைவுகள், அனுபவங்கள். முப்பது வருட தாம்பத்திய வாழ்க்கை அவன் கண் முன்னால் நிழலாடியது.
முப்பது வருடங்களுக்கு முன்னால் வாழ் நாள் முழுவதும் பத்திரமாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன் தன்னுடைய சுண்டு விரலைப் பிடித்துக் கொண்டு கூடவே வந்தாள்.. தான் அவளை அப்படிப் பார்த்துக் கொண்டானா என்று கேட்டால் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். குடும்பம், சம்பிரதாயம் எல்லாம் பார்த்து தன் தந்தை இந்த திருமணத்தை நிச்சயம் செய்தார். எல்லோரும் கல்யாணம் பண்ணிக் கொள்வதைப் போலவே தானும் பண்ணிக் கொண்டான். சின்ன வயது முதல் தான் பார்த்த பெண்கள் தாய் மற்றும் அக்காக்கள். வீட்டில் எந்த விஷயமாக இருந்தாலும் அப்பா முடிவு செய்வதும், மற்றவர்கள் அதை பின்பற்றுவதும் நடந்து வந்தது. தாயாகட்டும், அக்காக்கள் ஆகட்டும் வீட்டில் பெண்டுகள் செய்யும் வேலைகளைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் சமையல், பூஜைகள், நோம்பு மற்றும் விரதங்கள், திருமணங்கள், விழாக்கள் எல்லாம் கூட அப்பா சொன்னது போல் செய்தவதை தவிர அவர்களுக்கு என்று சொந்த அபிபிராயம் இருந்தது இல்லை.
அக்காக்களுக்கு கல்யாணம் ஆன பிறகு அத்தான்கள் அவர்களை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போதுதான் அவர்கள் வருவது, எந்த விஷயத்திலேயும் கணவனை நினைத்து பயந்து கொண்டே இருப்பது, இதை எல்லாம் பார்த்துப் பார்த்து எல்லா பெண்களும் அப்படித்தான் இருப்பார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டான்.
முப்பதது வருடங்களுக்கு முந்தைய மனநிலை தன்னுடடைய தாயுடையது. மருமகள் வந்த பிறகு மகன் தன்னிடமிருந்து விலகிப் போய் விடுவானோ என்ற பயத்தில் மருமகள் மீது குறை சொல்ல எப்போதும் தயார் நிலையில் இருந்து வந்தாள். மருமகள் செய்யும் எந்த சின்ன காரியத்திலேயும் குறையைக் கண்டுபிடித்தாள். எது பேசினாலும் வேண்டாத அர்த்தம் இருப்பதாக குத்திக் காட்டினாள். இந்த விஷயத்தில் அவனுடைய அக்காக்கள் இருவரும் அம்மாவுக்கு துணையாய் இருந்தார்கள். தம்பி. மனைவியின் பக்கம் சாய்ந்துவிட்டால் பிறந்த வீட்டுடன் தங்களுடைய உறவு அறுந்து விடுமோ என்று பயந்து எல்லாவற்றுக்கும் தாய்க்கு பக்கபலமாய் இருந்தார்கள்.
இன்னும் சொல்லப் போனால் கல்யாணத்திற்கு முன்பே அவர்கள் எல்லோரும் சேர்ந்து தன் மனதில் ஒரு முத்திரையைப் பதித்து விட்டார்கள். மனைவி இன்னொரு வீட்டிலிருந்து வந்தவள் என்றும், தாயை, கூடப் பிறந்தவர்களை வேண்டாமென்று ஒதுக்கி தனிக்குடித்தனம் வைக்கச் சொல்லுவாள் என்றும், அப்படி தனிக்குடித்தனம் போன பிறகு அவனுடைய சம்பளத்தை எல்லாம் கொள்ளையடித்து பிறந்தவீட்டாருக்குக் கொடுத்து விடுவாள் என்றும், அதனால் தொடக்கத்திலிருந்தே மனைவியை அடக்கி வைத்திருக்க வேண்டும் என்று செடி நடுவதற்கு முன் உரம் போடுவது போல் தன்னுடைய மூளையை சலவை செய்து விட்டார்கள்.
சற்று வட்டாரத்தில் பெண்டாட்டியின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு தனிக்குடித்தனம் போனவர்களின் வரலாறுகள் வேண்டாமென்று நினைத்தாலும் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தன. அதன் விளைவாக மனைவி என்பவள் தான் சொன்னபடி கேட்டுக்கொண்டு, சமைக்கச் சொன்னதை சமைத்து, தான் வாங்கி தந்ததை உடுத்திக் கொண்டு, தான் எங்கே அழைத்துப் போனால் அங்கே வந்து, வேண்டாம் என்று சொன்ன இடங்களுக்குப் போகாமல், தன்னுடைய வீட்டாரை மதித்து கொண்டு இருக்க வேண்டும் என்ற திடமான அபிப்ராயத்துடன் கல்யாணம் செய்து கொண்டான்.
ஆனால் நடந்தது என்ன?
கல்யாணம் ஆகும் போதே ஓரளவு படித்திருந்த அவளுக்கு ஏற்கனவே சில சொந்த கருத்துக்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் உருவாகி இருந்தன. மனைவியாக வந்தவள் சுவாதீனமாய் இது எனக்கு வேண்டும் என்று சொல்வது எவ்வளவு பெரிய தவறு?” ஒருமுறை நடந்தது அவனுக்கு நினைவிற்கு வந்தது.
அன்று மகள் பிறந்து பதினோராவது நாள். பரம்பரையாக தங்கள் வீட்டில் தொடர்ந்து வரும் சம்பிரதாயத்தின்படி தன்னுடைய தாயின் பெயரைச் சூட்டப் போன போது எவ்வளவு ரகளை செய்துவிட்டாள்? புத்தகங்களின் இருக்கும் கண்ட கண்ட பெயர்கள் பிடித்திருந்ததே தவிர தன்னுடைய தாயின் பெயர் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஏனாம்? அது என்ன சாதாரண பெயரா? அபீதகுஜாம்பாள்! சாட்சாத் அம்பாளின் பெயர் இல்லையா.
தனிமையில் இருக்கும் போது அவள் கேட்டதற்கு தான் சம்மதிக்கவில்லை என்று தன் வீட்டாருக்கு நடுவில் வேண்டாத ரகளை செய்தாள்.,அவர்களும் அவளுடன் சேர்ந்து கொண்டார்கள். “இந்த காலத்தில் அந்தப் பெயரை யாராவது வைப்பார்களா? பெரியவள் ஆன பிறகு உங்க மகளே உங்களைக் கேள்வி கேட்பாள்’ என்று.
தனக்குக் கோபம் தலைக்கேறி விட்டது. உறவினர் முன்னிலையில் மனைவி சொன்னதைக் கேட்டால் இனி கணவன் என்ற வாரத்தைக்கு மதிப்பு என்ன இருக்கும்? மனைவி கீ கொடுத்தால் ஆடும் போம்மையாகி விட்டான் என்று தன் வீட்டார் தன்னை கேலி செய்ய மாட்டார்களா?
அவ்வளவுதான். ஒரே வார்த்தையில் தன் முடிவைச் சொல்லிவிட்டான் அன்று.
“நீ எங்க அம்மாவின் பெயரைச் சூட்டுவதற்கு ஒப்புக் கொண்டால்தான் மணையில் உட்கார்ந்துகொள்வேன். இல்லாவிட்டால் என் மகளை எடுத்துக் கொண்டு இப்போதே கிளம்பி விடுவேன்.”
மகளை தாரைவார்த்துக் கொடுத்த மாமனார் காலில் விழாதகுறையாய் கெஞ்சினார். அந்த விதமாக அன்று எல்லோர் முன்னிலையிலும் “ஆண் மகன்” என்று பெயரை நிலைநாட்டி விட்டதற்கு பெருமைப் பட்டுக்கொண்டான். ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு அவள் மனதில் தன்னுடைய நிலை எந்த அளவுக்கு தாழ்ந்து விட்டதோ உணர்ந்து கொள்ளாமல் போய் விட்டான்.
இப்படி ஒன்றா இரண்டா.. எத்தனையோ விஷயங்களின் வாதம் புரிந்தாள். அழுதாள். சண்டை போட்டாள். வீட்டை விட்டு போய் விடுவேன் என்று மிரட்டினாள். தானாக கொண்டு கல்லு போல் தாங்கிக் கொண்டு நிலைத்து நின்றான். வேறு ஒருத்தனாக இருந்தால்…….
ஒருமுறை தலையை சிலுப்பிக் கொண்டான்.
மாமியார் வீட்டில் கோபக்கார மாப்பிள்ளை என்று பெயர் வாங்கினான். சுற்று வட்டாரத்தில் சிடுமூஞ்சி என்று பட்டப்பெயர் கிடைத்துவிட்டது. தன் வீட்டாரிடம் “ஆண்மகன்” என்று பெயர் வாங்கினான். ஆனால் தன் மனைவியின் பார்வையில்?
ஒருமுறை தலையைத் திருப்பி கட்டில் மீது மயக்கமாக கிடந்த அவளைப் பார்த்தான். அவள் மனதில் என்ன யோசனைகளை சுழன்றுக் கொண்டு இருந்தனவோ தெரியாது. நெற்றியில் புருவங்கள் அடிக்கடி முடிச்சேறிக் கொண்டிருந்தன.
தாமிருவரும் இதுபோல் எதிர்மறையான எண்ணங்களுடன் பதினைந்து வருடங்கள் திருமண வாழ்க்கையைக் கழித்த பிறகு தாய் போய்ச் சேர்ந்தாள். அதற்குப் பிறகு தந்தையும். குடும்ப பொறுப்புகள் கூடி விட்டதால் அக்காக்களின் வருகை குறைந்து விட்டது.
அந்த சமயத்தில் தன்னுடைய குழந்தைகள் பெரிய படிப்புக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளின் படிப்பு, திருமணம், வேலையில் சேருவது என்று மேலும் பதினைந்து வருடங்கள் போனதே தெரியவில்லை.
கடந்த காலத்தில் குழந்தைகளின் பார்வையில் தான் கொடுங்கோலனாக தென்பட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் வளர்ந்து வரும் பருவத்தில் தான் அவர்களுடைய தாயை வாய்க்கு வந்த படி ஏசுவதும், சமையலறையில் யார் கண்ணிலும் படாமல் அவள் புடைவைத் தலைப்பால் கண்ணீரை ஒற்றிக் கொள்வதும் அவர்கள் கண்ணில் படும். அம்மாவை வாயே திறக்க விடாமல் ஒரு அடிமையைப் போல் நடத்தினான் என்ற அபிப்பிராயம் குழந்தைகள் இருவர் மனதிலும் படிந்து விட்டது. மகள் அபிதா அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி தேற்றினாள். மகன் ஆறுதல் மொழிகள் சொல்லவில்லை என்றாலும் நல்ல வேலையில் சேர்ந்து அம்மாவுக்கு கற்பக விருக்ஷமாகி விட்டான்.
இப்போது அவளுக்கு எல்லா விதமாகவும் முன்னுக்கு வந்து விட்ட மகன்தான் எல்லாமே. எது வேண்டும் என்றாலும் மகனிடம் கேட்பாள். அடுத்த நொடியே மகன் அதைத் தீர்த்து வைப்பான். “என் மகன் எனக்கு வாங்கிக் கொடுத்தான்” என்று எல்லோருக்கும் நடுவில் பறைச்சாற்றுவாள்.. அப்படிச் சொல்லும் போது அவன் பக்கம் பார்க்கும் அவள் பார்வை அவனை பாதாளத்திற்கு தள்ளிவிடும். உன்னுடன் எனக்கு என்ன வேலை என்பது போல் அலட்சியமாக நடந்து கொள்வாள்.
மனைவியின் மனதில் இடம் பிடிக்க முடியாத தன்னுடைய இயலாமைக்கு இப்போது வருந்தி என்ன பயன்? அப்படியும் முயற்சி செய்தான். அப்போது இருந்த நிலைமையை எடுத்துச் சொன்னான். இப்போது அது போன்ற வற்புறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், மனைவியை விட தனக்கு வேறு யாரும் உசத்தி இல்லை என்றும், எந்த ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் தான் கவனித்துக் கொள்வதாய் திரும்பத் திரும்ப சொன்னான்.
ஏற்கனவே அவளிடம் ஒரு விதமான பற்றற்றத் தன்மை படிந்து விட்டிருந்தது. அவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும் மகனை தலையின் தூக்கி வைத்துக் கொண்டு தன்னை எடுத்தெறிந்து பேசும் நிலைக்கு வந்து விட்டிருந்தாள். இனி அந்த பிரம்மாவே வந்தால் கூட அவளை திருத்த முடியாது என்ற அபிப்ராயதிற்கு வந்து விட்டான்.
இன்று திருமணமாகி முப்பது வருடங்கள் கழித்து வீட்டில் தாமிருவர் மட்டும்தான். ஆனால் இருவருக்கும் இடையே ஆயிரம் மைல் இடைவெளி இருப்பது போன்ற உணர்வு. காலச் சக்கிரம் ஒருமுறை பின்னால் சுழன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அப்படி மட்டும் நடந்தால் இது போன்ற தவறுகளை ஒருநாளும் அவன் செய்ய மாட்டான். மனதளவில் மனைவியுடன் நெருக்கம் இருப்பது ஆணுக்கு எவ்வளவு முக்கியம் என்று புரியும் போது காலம் கடந்து விட்டது.
குறைந்த பட்சம் இதே ரீதியில் நாட்கள் கழியாமல் பத்து நாட்களுக்கு முன்னால் அவளுக்கு திடீரென்று ஸ்ட்ரோக் வந்தது. உடனுக்குடன் மருத்துவச் சிகிச்சை கிடைத்து விட்டதால் இந்த அளவுக்காவது தனக்கு துணை இருக்கும்படி கடவுள் தன்னை அனுக்கிரகம் செய்தார். அதற்காக கடவுளுக்கு நன்றி சொன்னான்..
முழுவதுமாக குணமாகிவிட்டது. நாளைக்கு வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
யோசனையில் ஆழ்ந்து மறந்தே போய் விட்டான். நேரத்தைப் பார்த்துக் கொண்டான். மணி பன்னிரண்டு. அவளுக்கு ஊசி போட வேண்டும். எழுந்து நர்ஸ் இருக்கும் காரிடாரை நோக்கிச் சென்றான். நர்ஸ் வந்து தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு ஊசி மருந்து செலுத்தினாள். எவ்வளவு கவனமாக போட்டாலும் விழிப்பு வந்து விட்டது அவளுக்கு. மன்னிப்பு கேட்டுக் கொண்டு குட்நைட் என்று சொல்லிவிட்டு நர்ஸ் சென்றுவிட்டாள்.
அவள் அவனைப் பார்த்தாள். அவன் அருகில் வந்து மெதுவாக போர்வையைப் போர்த்திவிட்டு பக்கத்திலேயே இருந்த படுக்கையில் படுத்துக் கொண்டான். அதுவரையில் வலுக்கட்டாயமாக அடக்கி வைத்திருந்த தூக்கம் அவனைத் தழுவிக்கொண்டது.
அவள்
பாதி தூக்கத்தில் விழிப்பு வந்து விட்ட அவளுக்கு திரும்பவும் எவ்வளவு முயற்சி செய்தாலும் தூக்கம் வரவில்லை. உறங்கிக் கொண்டிருந்த அவன் பக்கம் பார்த்தாள். எந்த விதமான கலவரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த முகம். இப்போது இப்படி இருக்கிறானே ஒழிய முப்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தான்? மனைவி என்று ஒருத்தி இருப்பது நினைவுக்கு இருந்தால் தானே? ஏதாவது சொல்லப் போனால் சண்டை மாடு போல் முட்ட வருவான்.
திருமணம் ஆன புதிதில் “கல்யாணம் எல்லோரும் செய்து கொள்கிறார்கள். நானும் பண்ணிக் கொண்டேன்” என்று சொன்னதைக் கேட்டு அவள் வியந்து போனாள். அவனுக்கு என்று விருப்பு வெறுப்புகள் இல்லையா என்று.
புரண்டு படுத்தபடி அவனைப் பார்க்கும் போது முப்பது வருடங்கள் அவனுடன் கழித்த வாழ்க்கை கண் முன்னால் காட்சியாய் விரிந்தது.
முப்பது வருடங்களுக்கு முன்னால் வாழ்நாள் முழுவதும் துணையாய் இருப்பேன் என்று அவன் சொன்ன வார்த்தையை முழுவதுமாக நம்பி அவனுடைய சுண்டு விரலைப் பிடித்துக் கொண்டு பின்னாலேயே நடந்து வந்தாள்.
கோத்திரம், ஜாதகம், படிப்பு, வேலை, குடும்பம், சம்பிரதாயம் எல்லாம் பார்த்து தந்தை அவளை அவன் கையில் ஒப்படைத்தார். எல்லா பெண்களைப் போலவே கணவன் தன்னை அபூர்வமாக பார்த்துக் கொள்வான் என்று கனவு கண்டாள். எவ்வளவு தூரம் பார்த்துக் கொண்டான் என்றால், அவனுடைய வார்த்தையை இம்மி பிசகாமல் அப்படியே கேட்டுக் கொள்ளும் வரையில் நன்றாகவே பார்த்துக் கொண்டான்.
அது வேண்டாம் இது வேண்டும் என்று வாயைத் திறந்து சொல்லுவதே அந்த வீட்டில் மாபெரும் குற்றம். கணவன் போட்டதை சாப்பிட வேண்டும். வாங்கி வந்ததை உடுத்த வேண்டும். அவ்வளவுதான். கணவனாகப் பட்டவன் மனைவிக்கு ஏதாவது வாங்கி வருவதே பெரிய சமாச்சாரம். இனி பெண்ணாகப் பிறந்தவளுக்கு வேறு எதுவுமே தேவைப் படாது என்று அந்த வீட்டில் எல்லோருடைய ஒருமித்த கருத்து. இன்னும் சொல்லப் போனால் மாமியார் வீட்டுக்கு வந்த பிறகு விருப்பு வெறுப்புகள் இருப்பதையே மறந்து விட்டிருந்தாள். எத்தனை பேருக்கு நடுவில் இருந்தாலும் சரி வாய்க்கு வந்தபடி ஏசுவான். சில சமயம் தன்னையொற்றவர்கள் கணவனிடம் தன்னுடைய நிலையைப் பார்த்து எள்ளி நகையாடும்போது செத்துப் போய்விட்டால் நன்றாக இருக்கும் என்றுகூடத் தோன்றும்.
அந்த நேரத்தில்தான் தான் தாயாகப் போகும் செய்தி தெரிந்தது. ஒன்பது மாதம் சுமந்து பெற்றெடுத்த கைக்குழந்தையைப் பார்த்ததுமே தனக்கு மிகவும் பிடித்த ஜோதிர்மயி என்று பெயர் சூட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
அவ்வளவுதான்! தான் ஏதோ மாபெரும் தவறு செய்து விட்டது போலவும், மாமியாரை அவமானப் படுத்தி விட்டதாகவும் மாமியார், மாமனார், நாத்தனார்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக படையெடுத்து தாக்கினார்கள். போகட்டும், கணவனாவது தன்னைப் புரிந்து கொள்வான் என்று எதிர்பார்த்து, அண்ணன் தம்பிகளுக்கு முன்னால் தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டாள். எரிமலைக் குழம்பாய் கொதிதெழுந்தவன், தன்னுடைய தாயை விட தனக்கு யாரும் உசத்தி இல்லை என்றும், அறையில் இருந்த குழதையை எடுத்துக் கொண்டு தாயுடன் அந்த நிமிடமே புறப்படத் தயாராகி விட்டான்.
தன் தந்தை மிரண்டு போய் விட்டார். மாப்பிள்ளையைக் கெஞ்சி சமாதானப் படுத்தி, மகளுக்கு புத்திமதிகளைப் புகட்டிவிட்டார். அன்று முதல் தன் மனம் எந்த உணர்வுகளுக்கு இடம் இல்லாதபடி ஜடம் ஆகிவிட்டது.
காலம் எதற்காகவும் நிற்கப் போவதில்லை. மாமியார் மாமனார் போய்ச் சேர்ந்தார்கள். நாத்தனார்களின் போக்கு வரத்துகள் குறைந்து விட்டன. குழந்தைகள் பெரிய படிப்புக்கு வந்து விட்டார்கள். மகளுடைய திருமணம், மகனின் படிப்பு, வேலை போன்ற போறுப்புகளுக்கு நடுவில் தன்னைப் பற்றியே மறந்து விட்டிருந்தாள்.
ஆனால் குழந்தைகள் மறக்கவில்லை. தந்தையின் வாய் துடுக்குத் தனத்தால் தாய் பட்ட அவஸ்தைகளை கண்ணார கண்ட அவர்கள் இருவரும் அவளுடைய ஆசைகளை, விருப்பங்களை திரும்பவும் துளிர்க்கச் செய்தார்கள். அவள் கேட்டதை எல்லாம் அடுத்த நிமிடமே கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
தந்தை செய்யாத காரியத்தை தாம் செய்து தாயை சந்தோஷமாக வைத்துக் கொண்டதில் அவர்கள் இருவரும் பூரித்துப் போனார்கள். கணவன் தீர்த்து வைக்காத விருப்பங்களை குழந்தைகள் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார்கள். இதை விட தனக்கு என்ன வேண்டும். மனமானது பெருமையால் பொங்கி பூரித்து விட்டது. உறக்கத்தில் இருந்த கணவனின் பக்கம் யதேச்சையாக பார்த்தாள்.
அவ்வளவுதான். திடீரென்று யதார்த்த உலகிற்கு வந்தாள். இந்த பத்து நாட்களும் அவன் பட்ட மனவேதனை அவன் முகத்தில் தெளிவாக தென்பட்டுக் கொண்டிருந்தது. ஸ்ட்ரோக் வந்த தன்னை பார்த்ததும் அவன் முகத்தில் தென்பட்ட பதற்றம் கண்முன்னே தெரிந்தது. டாக்டரைத் தேடி ஓடியது, அவர்கள் சொன்ன மருந்து மாத்திரை வாங்குவதற்காக இந்த வயதான காலத்தில் ஓட்டமேடுத்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே இதெல்லாம் தன் மீது அன்பு இருப்பதால்தானா? கன்னத்தில் யாரோ பளாரென்று அறைந்தாற்போல் இருந்தது அவளுக்கு. அம்மா மற்றும் கூட பிறந்தவர்களின் பேச்சைக் கேட்டு தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினாளே? அவள் மட்டும் செய்தது என்ன? மனம் அவள் செய்த குற்றத்தை குத்திக் காட்டியது.
ஒரு மாதம் முன்பு நடந்த நிகழ்ச்சி திடீரென்று நினைவுக்கு வந்தது.
நல்ல வேலையில் இருந்த மகனுக்கு நல்ல வரன்கள் வந்து கொண்டிருந்தன. அன்று கல்யாண விஷயமாகப் பேசுவதற்காக நான்கு பெரிய மனிதர்கள் வந்திருந்தார்கள். அவன் அவர்களுடன் மரியாதையாகப் பேசிக் கொண்டிருந்த போது இடையில் புகுந்த தான் என்ன சொன்னாள்?
“நீங்க சும்மா இருங்கள். நான் சொல்லிக் கொள்கிறேன். உங்க வீட்டுப் பெண்ணை என் மகன் பண்ணிக் கொள்ள மாட்டான். மேற்கொண்டு பேசுவானேன்? போய் வாருங்கள்.” என்று அவர்களை அனுப்பிவிட்டாள்.
அந்த நிமிடம் அவர் கண்களில் தென்பட்ட வேதனை இப்போது அவளை வருத்திக் கொண்டிருந்தது. பெரிய மனிதர்களின் முன்னிலையில் இல்லத் தலைவன் என்ற ஸ்தானத்திற்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டிய தான் அவனை எள்ளி நகையாடுவது போல் நடந்து கொண்டாள். நாலுபேருக்கு முன்னால் தன்னை ஏசி தன்னுடைய மனதை நோகடித்துவிட்டான் என்று அவனை மனதில் திட்டிக் கொண்டாளே. அவள் மட்டும் செய்தது என்ன?
திருமணம் முடிந்து பதினைது வருடங்கள் வரையில் அம்மா, அக்காக்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவன் தன்னைத் துன்புறுத்தி வந்தால், அதற்குப் பிறகு வந்த பதினைந்து வருடங்களும் குழந்தைகளின் ஆதரவு கொடுத்த துணிச்சலில் அவனை துன்புறுத்தி வந்திருக்கிறாள். தன்னை அவன் புரிந்து கொள்ள வில்லை என்று நினைத்தாளே? தான் அவனைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்தாளா?
ஒருமுறை கண்களை மூடிக் கொண்டாள். திருமணம் நடந்த சமயத்தில் அம்மாவழி பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது.
புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தவளிடம் பாட்டி சொன்னாள்.
:”இந்தாடி பெண்ணே! நீங்கள் இருவரும் ஒட்டு சேர்த்த செடிகளை போல் ஒன்றாகி விட்டீர்கள். எதிர்காலத்தில் இந்த தாய் செடியிடமிருந்து ஒட்டு மரத்தை துண்டித்து விட்டு பெரியவர்கள் போய்ச் சேர்ந்து விடுவார்கள். மரமாய் வளர்ந்த நீங்கள் பல கிளைகளுடன் பூவும் பழமுமாக செழித்து வாழ்வீங்க. உங்களுடைய கிளையே வேறு ஒரு மரத்திற்கு ஒட்டு மரமாய் போய் சேரும். வேர்களைத் துண்டித்துக் கொண்டு அவர்கள் தனி மரமாய் வளர்ந்து வருவார்கள். முன்னோர்கள் போய்ச் சேர்ந்தாலும், பின்னால் வருபவர்கள் பிரிந்து போனாலும் உங்களுடைய பந்தம் மட்டும் அப்படியே இருக்கும். கஷ்டமோ, சுகமோ, நல்லதோ கேட்டதோ நீங்க இருவரும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும். அதுதான் திருமண பந்தம்.”
உண்மைதான். இந்த விஷயத்தை தான் எப்படி மறந்து போனாள்?. திருமணம் நடந்த போது அவனை அவனுடைய பலவீனங்களுடன் அப்படியே தன்னால் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
கடந்த பதினைந்து வருடங்களாக தான் எது சொன்னாலும் அப்படியே செய்து வருகிறானே. அதை ஏன் உணராமல் போய் விட்டாள்? எல்லாவற்றையும் விட இந்த பத்து நாட்களாய் தன்னை அவன்தானே கண்ணின் இமைப்போல பார்த்துக் கொண்டு வருகிறான்? மகளுக்கு மாமியார் வீட்டு கடமைகள், மகனுக்கு வேலை பொறுப்புகள். அவரவர் வேலை அவரவர்களுக்கு. தாமிருவர் மட்டும்தான் ஒருவருக்கொருவர். திடீரென்று அவளுக்கு எல்லாமே அவன்தான் என்று தோன்றியது.
பாட்டி சொன்னது எவ்வளவு உண்மை? குழந்தைகளுக்கு அவரவர்களின் வீடும், குடித்தனமும் முக்கியம். தாமிருவர் மட்டும் கடைசி வரையில் ஒருவருக்கொருவர். திரும்பவும் இந்த வாழ்க்கை ஒரு முறை பின்னால் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அப்படி மட்டும் நடந்தால் இனி அது போன்ற தவறை செய்யவே மாட்டாள். ஆவேசம் அடங்கி நிதானமாக யோசிக்கக் கூடிய பக்குவம் வந்தது.
மறுநாள் காலை பத்துமணி. இடம் – அதே ஸ்பெஷல் ரூம்.
ஆஸ்பத்திரியில் பில்லை கட்டிவிட்டு வந்தவன் ஸ்டூல் மீது இருக்கும் மருந்துகளை பேக்கில் வைத்துவிட்டு அவள் அருகில் வந்து கையை நீட்டினான். எறும்பு போல் அவன் சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் ஒட்டு மொத்தமாக ஆஸ்பத்திரிக்கு கட்டிய போதும் அவன் முகத்தில் அமைதி கலையவில்லை.
“பில்லு எவ்வளவு ஆச்சுங்க?” மெதுவாக கேட்டாள் அவள்.
அவன் சிரித்தான். “நீ திரும்பவும் என்னுடன் வருகிறாய். அதற்கு எவ்வளவு கொடுத்தாலும் குறைவுதான்.” என்றான்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு அவள் அவனுடைய சுண்டு விரலைப் பற்றிக்கொள்ளாமல் மெதுவாக எழுந்து நின்று அவன் பக்கத்தில் வந்து நின்றாள். அதைப் பார்த்து அவன் அவளுடைய தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு நடத்தி அழைத்துச் சென்றான். பாதுகாப்பு தருவது போல் இருந்த அந்த அணைப்பில் கட்டுண்டவளாய் எந்த கவலையும் இல்லாமல் அவனுடன் சேர்ந்து நடந்தாள் அவள்.
- நிலைத்தகவல்
- அவன் – அவள் – காலம்
- சீறுவோர்ச் சீறு
- அரிமா விருதுகள் 2012
- ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..
- உருக்கொண்டவை..
- சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி
- பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்
- மகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “
- ஊமைக் காயங்கள்…..!
- தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்
- நினைவுகளின் சுவட்டில் – 88
- திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை
- இதுவேறு நந்தன் கதா..
- பாரதி
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- ருத்ராவின் குறும்பாக்கள்
- ருத்ராவின் குறும்பாக்கள்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29
- துருக்கி பயணம்-5
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 16
- 2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்
- ஜுமானா ஜுனைட் கவிதைகள்
- அன்பின் தீக்கொடி
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)
- முள்வெளி அத்தியாயம் -12
- தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்
- திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்
- ஒரு விவாகரத்து இப்படியாக…!
- வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்
- கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்
- பிரேதம்
- பஞ்சதந்திரம் தொடர் 47
- புதிய கட்டளைகளின் பட்டியல்..
- தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்
- வருகை
- காசி யாத்திரை
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று
- கணையாழியின் கதை