வருகை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 38 of 41 in the series 10 ஜூன் 2012

குருசு.சாக்ரடீஸ்
பேருந்தில் நெருக்கியடிக்கும் கூட்டமிருந்தது. யாவோவை தவிர அனைவரும் போப் இரண்டாம் ஜாண்பாலை காணவந்த புனித யாத்ரீகர்கள். விமான நிலையத்தின் சில அடி தூரங்களில் பேருந்து நிறுத்தபட்டது. அதற்கு மேல் பேருந்தை நகர்த்த ரோட்டை அடைத்துகொண்ட திருவிழா தனம் சம்மதிக்கவில்லை.

யாவோவின் உடமைகளையும் பேருந்திலிருந்து இறங்கிய யாத்ரீகர்கள் கால்களால் உதைத்து தள்ளினார்கள். ஒரு தகர டிரங்கு பெட்டியும் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்த இரண்டு அட்டைபெட்டிகளும் ரோட்டில் உருண்டன. ரோட்டு ஓரமாக அவைகளை எடுத்து வைக்க கூட அவகாசம் தராத கூட்டமான மக்கள் வெளிச்சம் மங்கி விழத்துவங்கிய மழைசாரலுக்கு சிதறி ஓடியது.

போப் இரண்டாம் ஜாண்பாலை வரவேற்க புதிதாக வந்தவர்கள் மழைதுளிகளை கொண்டுவந்திருக்க வேண்டும். சிலர் மழையோடு போப்பாண்டவர்க்கு தொடர்பு இருப்பதுபோல நம்மவைத்துகொண்டிருந்தார்கள். திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்கள் அம்மழையை எதிர்பார்த்திருக்கவில்லை. போப்பாண்டவரின் வருகைக்கான மழைபோல மக்கள் அதை வரவேற்றிருக்கவில்லை. கலைந்து ஓடிய பதற்றத்தால் மழையை மிரள   வைத்தார்கள்.

யாவோவிற்கு மழை துளிகள் புதிய சந்தோஷத்தை தந்தன. தூத்துக்குடியில் எட்டுவருடங்களாக மழை பெய்திருக்கவில்லை. யாவோவின் நிலமும் பாளம்பாளமாய் வெடித்துபோயிருந்தது. அப்பிரதேசங்களில் எருக்குகூட முளைத்திருக்கவில்லை.

உடமைகளை சேகரிக்க யாவோ ஓடியது ஒரு குழப்பமான சூழலை ஏற்பெடுத்துமென அஞ்சினான். உடமைகளின் மேல் ஏறிஓட யாரும் முயலாதது அவனது அற்ப சந்தோஷத்தை அதிகமாக்கியது.

விமான நிலையத்தின் பின்புறமாக போப் இரண்டாம் ஜாண்பால் மக்களுக்கு தரிசனம் தர பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. பிரம்புகளால் பாரம்பரிய அடையாளங்களுடன் மேடையிருந்தது. போப்பாண்டவர் மக்களுக்கு ஆசிவழங்க குண்டுதுளைக்காத கண்ணாடியால் செய்யப்பட்டிருந்த கூண்டு ஒன்று மேடையின் முன்புறமாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

கடற்கரை முழுவதையும் நிறைத்திருந்த மக்கள் விமான நிலைய ரோட்டையும் நிறைக்க முயற்சித்தார்கள். மக்கள் வெள்ளம் போல எங்கும் பரவிகொண்டிருந்தார்கள்.

மழைதூறலுக்கு சிதறி ஓடிய மக்களை நனையாமல் பாதுகாக்க இடமில்லாதிருந்தது.

யாவோவின் தோளில் தொங்கிகொண்டிருந்த ரெக்சின் பை மழையில் நனைய துவங்கியது. சவுதி அரேபிய பயணத்திற்காக அதை புதிதாக வாங்கியிருந்தான். விமான பயணத்திற்கு ஏற்ற பையென்று அதை விற்பனை செய்த கடைக்காரன் சத்தியம் செய்திருந்தான். பையிலிருந்த பொருட்களின் கனம் தாங்காமல் ரெக்சினில் ஏறியிருந்த தையல் பிரிந்து இளிக்க துவங்கியது. மிக சொற்ப விலைக்கு கடைக்காரனோடு மல்லுக்கட்டி வாங்கியிருந்தான்.

டிரங்கு பெட்டியை அம்மா தன் ஞாபகமாய் விட்டுபோயிருந்தாள். திருச்செந்தூர் திருவிழா கடையில் அவள் அதை வாங்கியிருக்கவேண்டும். தன் உடைகளை திணிக்கும் போது அதனுள்ளிருந்து அம்மா வெளியேறி போவதை யாவோ கவனித்திருந்தான்.

தூத்துகுடியிலிருந்து திருவனந்தபுரத்தை அடைய யாவோவிற்கு பதினெட்டு மணிநேரமாகியிருந்தது. எல்லா பேருந்துகளும் வழக்கமற்ற பிடிவாதங்களுடன் ஆட்களை நிறைத்து போயின. திருநெல்வேலியிலும் நாகர்கோயிலிலேயும் பேருந்து நிலையங்களில் வழக்கத்து மாறான கூட்டத்தை கண்டு யாவோ கொஞ்சம் மிரண்டுபோயிருந்தான். நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டிருந்தன. பேருந்துகளின் நடத்துனர்கள் யாவோவை சல்லிதனமான காரியங்களை சொல்லி பேருந்தில் ஏறவிடாமல் செய்தார்கள். கூட்டம் குறைந்திருக்கவில்லை. யாவோ தன்னிடம் திருவிழாதனம் இல்லாததை கண்டுகொண்ட தருணமது.

நீண்ட பிரயாணத்தின் களைப்பு அவன் முகத்தில் காளானைபோல முளைத்திருந்தது. யாவோவின் உடைகள் பிரயாணத்தின் கசங்கலை கொண்டிருந்தன. தூத்துகுடியில் வழியனுப்ப எந்த சொந்தங்களும் வந்திருக்கவில்லை. வழியனுப்பாத பயணத்தைபற்றி அவன் சிந்தித்ததுமில்லை. சுமைகூடிய தன் உடமைகளை நினைத்து பயமிருந்தாலும் அதை தாங்கிகொள்ள எந்த நண்பர்களையும் அவன் அழைத்திருக்கவில்லை.

சொந்தங்களில் பலரும் யாவோவை எச்சரித்திருந்தார்கள். நண்பர்கள் ஏதேனும் குளறுபடி செய்து பிரயாணத்தை தடுத்துவிடுவார்களென்ற பயமுறுத்தலும் அவனை எட்டியிருந்தது. தன் ஒரு கண் போனாலும் பரவாயில்லை அடுத்தவனின் இரண்டு கண்களும் போய்விடவேண்டுமென்கிற கிராம மனபாவத்தை அறிந்தேயிருந்தான். பல பயணதடைகள் அவனது நண்பர்களுக்கு ஏற்பட்டதை கண்டிருக்கிறான். ஊரிலுள்ளவர்கள் வேலைதேடி பெருவாரியாக இடம்பெயர்ந்திருந்தார்கள்.

பயிரேற்ற முடியாத வயற்காட்டையே ஏஜென்றுக்கு பணம் கொடுக்க அவனது தந்தை சொற்பவிலைக்கு விற்றிருந்தார். வாங்குவதற்கு யாரும் இல்லாதிருந்தார்கள். விற்பனை செய்ய பலரது கையையும் காலையும் பிடிக்கவேண்டியிருந்தது.

சென்னையைவிட திருவனந்தபுரம் விமான நிலையமே அவனுக்கு பொருத்தமாயிருக்குமென ஏஜென்று தீர்மானித்திருக்கவேண்டும். ஏஜென்றுகளுக்கு அபத்தம் ஏற்படுவது சகஜம்தான்.

சவுதி அரேபியாவிற்கான பயணத்தை தூத்துகுடியில் துவங்கியபோது எந்த நண்பனும் வந்து எட்டிபார்த்திருக்கவில்லை. அது என்னவிதமான மனோபாவமென அவனுக்கு ஒரு பிடியும் இல்லை.

விமான நிலைய முன்புற கேட் சில அடி தூரத்தில் யாவோவை எதிர்பார்த்தபடி இருந்தது. உணரமுடியாத ஆவேசத்தில் தன் உடமைகளை  தூக்கிகொண்டு சுமட்டுகாரனைபோல நடந்தான்.

மழைதூறல் விழுந்திருக்காவிட்டால் அங்கேயுள்ள சுமட்டு தொழிலாளர்கள் அவனது குடலை உருவியிருப்பார்கள். உடமைகளை தூக்கிகொண்டுபோக அங்கே பல நியமங்கள் நிலுவையிலிருந்தன. அதற்கு கிட்டதட்ட சவுதிக்கான விமான கட்டணத்தை கொடுக்கவேண்டியிருந்திருக்கும். யாவோவிற்கு குருட்டு அதிர்ஷ்டமிருந்தது. மழையையோ போப் இரண்டாம் ஜாண்பாலையோ வரவேற்க சுமட்டு தொழிலாளர்கள் கூட்டத்தில் கரைந்துவிட்டிருந்தார்கள்.

சுமட்டு கூலிகள் சவாலான விஷயமாக மாறிவிட்டிருந்தன. கொண்டுவரும் பொருள் துரும்பா சுமடாவென்பதை தீர்மானிக்க துண்டுசீட்டில் எழுதி குலுக்கும் வழக்கமிருந்தது. அங்கேயிருந்த சுமட்டுதொழிலாளர் சங்கங்கள் பொருள் கொண்டுவரும் ஆட்களை எடைபோட விஷேச கருவிகளை பயன்படுத்தின.

தலைசுமட்டுடன் நடந்துகொண்டிருந்த அவனை மழைதுளிகளும் போப்பாண்டவரை வரவேற்க வந்தவர்களும் தேசாந்திரியைபோல உருமாற்றியிருந்தார்கள். மழைக்கு சிதறி ஓடிய மக்கள் எழுப்பிய கூச்சல் மழையின் இரைச்சலை அமுக்கியிருந்தது. அவர்கள் கூச்சலிட வந்திருக்கவில்லை என்றாலும் மழை கூச்சலிட வைத்தது. மழை வலுத்திருக்கவில்லை.

போப்ஆண்டவரை காண இவ்வளவு கூட்டம் வருமென்று யாரும் எதிற்பார்த்திருக்கவில்லை. திரண்டிருந்த கூட்டம் அண்ணாதுரையின் மரணத்திற்கு வந்த கூட்டத்தைவிட அதிகமென்று பலரும் சொல்லிகொண்டிருந்தார்கள்.

கத்தோலிக்க திருசபை வழக்கத்தைவிட அதிகமாக களமிறங்கி மக்களை திரட்டியிருந்தது. ரோமில் போய் போப்பாண்டவரை தரிசிக்கும் பாக்கியத்தை திருவனந்தபுரத்து வருகை எளிதாக்கிவிட்டிருந்தது. புனித தரிசனத்திற்காக மக்களை பல ஞாயிற்றுகிழமை திருப்பலிகளில் தயார்படுத்தியிருந்தார்கள். திரும்ப திரும்ப புகுத்தபட்ட வார்த்தைகளின் வசீகரம் மக்களை இழுத்துவந்திருந்தது. கேரளாவிலிருந்தும் தமழ்நாட்டிலிருந்தும் திருச்சபை செலவில் லாரிகள் விடப்பட்டிருந்தன.

நாகர்கோவிலிலிருந்து விஷேச ரயில் ஒன்றும் கிளம்பி வந்திருந்தது. தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து வந்தபோதே ரயிலுக்கான கனவுகள் எழும்பிவிட்டிருந்தன. போப் இரண்டாம் ஜாண்பாலின் வருகை  ரயில்பாதைகளின் பணியை விரைவுபடுத்தியிருக்கவேண்டுமென மக்கள் நம்பினார்கள். முதல் ரயிலில் ஏற முண்டியடித்த மக்கள் தள்ளுமுள்ளுவிலும் இறங்கியிருந்தார்கள். திணிக்கப்பட்டிருந்த மக்களை புதிய குகை தாண்டி ரயில் இழுத்து வந்திருந்தது. பலரும் அன்றுதான் ரயிலை பார்க்கவும் பயணிக்கவும் செய்திருந்தார்கள். திருவிழாதனத்தை பேருந்துகளும் ரயிலும் கொண்டுவந்து நிறைத்திருந்தது. நூற்றாண்டின் புதிய ரயிலாக அது அறிவிக்கப்பட்டிருந்தது.

ஞாயிறு திருப்பலிகளில் ரயில் பாடலாக மாறியிருந்தது. போப் இரண்டாம் ஜாண்பாலை வாழ்த்தும் அட்டைகளின் பின்புறம் ரயிலைபற்றிய புதிய செய்திகளும் இருந்தன.

விமானநிலையத்தை சுற்றிலும் பரப்பட்டிருந்த திருவிழா கடைகள் மழையில் நனைய துவங்கின. அணிந்திருந்த புத்தாடைகளின் புதுகருக்கை மழை மெல்ல உறிஞ்ச துவங்கியது. பழந்துணிகளை போல மக்கள் உருகுலைந்து கொண்டிருந்தார்கள். விமான நிலையத்தை சுற்றிலுமிருந்த திருவிழாதனம் மழையில் கரை துவங்கியதை யாராலும் சகிக்க இயலவில்லை.

கடற்கரையில் நனையாமல் தடுக்க போதிய ஏற்பாடுகள் இல்லாதிருந்தது. யானைபாகன்கள் யானையின் அடிவயிற்றில் மறைய முயற்சித்தார்கள். மேடையில் பாடப்பட்டு கொண்டிருந்த வாழ்த்து பாடல்களும் பிரார்த்தனைகளும் மக்களின் இடைவிடா கூச்சலில் அமுங்கிபோயிருந்தன.

போப் இரண்டாம் ஜாண்பாலின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளிலிருந்து மழைக்கு பயந்த சில பறவைகள் காணாமல் போயிருந்தன. அத்தப்பூ கோலங்கள் மிதிபட்டு சேறாகி கொண்டிருந்தன. தென்னை மர குருத்தோலை அலங்காரங்கள் சாலை நெடுகிலுமிருந்தன. உலத்தியும் சள ஓலையும் கொண்ட அலங்காரங்களில் யாவோ சற்று மனதை பறிகொடுத்திருந்தான். செவ்வாழை குலைகளிலிருந்த மினுமினுப்பு அவனை அச்சமூட்டியது. எத்தனை வாழைமர தோப்புகளை அழித்திருப்பார்களென்ற கணக்கை யாவோவால் கணிக்க இயலவில்லை.

யாவோவின் கசங்கிய உடையும் தலைசுமட்டு சாமான்களும் விமானநிலைய வாசலில் நின்ற ஜவான்களை கலவரபடுத்தியது. அவனது முகத்து புன்னகையை ஜவான்கள் தங்கள் வாழ்நாளில் கண்டதேயில்லை. யாவோவை மழைக்கு ஒதுங்கும் புனித யாத்திரிகன் என்றே ஜவான்கள் கணித்திருக்க வேண்டும். அதனால் தான் போக அனுமதித்தார்கள்.

மழை வலுக்க துவங்கியது. பெருங்கூட்டம் கட்டுபாடற்று விமானநிலையத்தின் பரந்துவிரிந்திருந்த முன்கூரைஅடியில் தஞ்சமடைய துவங்கியது.

மறுபடியும் யாவோ பெருங்கூட்டத்தில் சிக்கிகொண்டிருந்தான். தன் உடமைகளை இறக்கிவைக்க டிராலியை கண்டடைவது பெரும்பாடாயிருந்தது. போடப்பட்டிருந்த இருக்கைகளில் மக்கள் ஏறி நின்றுகொண்டிருந்தார்கள்.

கார் பார்க்கிங் இடத்தில் கிடந்த டிராலியில் தன் உடமைகளை இறக்கி வைத்தான். முழுக்க நனைந்திருந்தான். போப் இரண்டாம் ஜாண்பால் அனுப்பியிருந்த மழையில் நனைவது யாவோவிற்கு பிடித்திருந்தது.

பாஸ்போர்ட்டும் விமான டிக்கெட்டும் ரெக்ஸின் பையினுள் பாதுகாப்பாய் இருந்திருக்கவேண்டும். பாஸ்போர்டின் உணர்வு பதைபதைப்பை அவனுக்குள் கொண்டுவந்திருந்தது. நனைந்து கொண்டிருக்கும் விருப்பம் முற்றாக போயிருந்தது.

அகன்ற முன்கூரையில் ஒண்டிகொள்ள டிராலியை தள்ளிகொண்டு ஓடினான். மக்கள் நெரிசல் அவனை மழைக்குள் மீண்டும் மீண்டும் தள்ளிவிட்டது. நனைந்து கொண்டிருப்பதை தவிர அவனுக்கு செய்ய ஒன்றுமில்லை.

பெருமழையாக மாறிகொண்டிருந்ததில் நனைந்துகொண்டிருப்பது பெரு ஆசீர்வாதமென பலரும் சொல்லிகொண்டிருந்தார்கள். அப்படியான மனப்பதிவுகள் அவனுக்கு எட்டியிருக்கவில்லை. யாவோவின் அலையுற்ற எண்ணங்களை போல மழைதுளிகளும் அலையுற துவங்கின.

மழைகச்சம் விமானநிலைய கூரையின் கீழ் ஒண்டிகொண்டிருந்தவர்களையும் நனைத்தது.

விமானபயணத்திற்கான டிரங்குபெட்டியைபோல தோற்றம் தந்திராத அது மழையில் எச்சேதத்தையும் அடைந்திருக்கவில்லை. அட்டைபெட்டிகள் ஈரத்தில் ஊறிபோயிருந்தன. உடமைகளின் பொருத்தமின்மையை மழைகச்சத்தில் நனைந்துகொண்டிருந்த புனிதயாத்ரீகர்களின் கூட்டம் கலைத்துவிட்டிருந்தது.

திருவிழா கடைகளிலிருந்து மிதந்துவந்த பொட்டிய பலூன்கள் அவன் காலடியை கடந்துபோய்கொண்டிருந்தன. நெருக்கி தள்ளும் பெருங்கூட்டத்தில் தன்னைதானே அடையாளம் கண்டுகொள்ள யாவோ சிரமபட்டான்.

யாவோ பயணம் செய்யவேண்டிய விமானம் சவுதியிலிருந்து இன்னும் வந்திருக்கவில்லை. சவுதிவிமானம் புறப்படுவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே அவன் விமான நிலையத்தை வந்தடைந்திருந்தான். அது சரியான நேரமும்கூட.

பரபரத்து ஓடும் மக்களை மழைதுளிகள் கோரகாட்சியிலிருந்து விடுவித்துகொண்டிருந்தது.

குச்சிஜஸ் விற்றுகொண்டிருந்தவர்கள் போப் இரண்டாம் ஜாண்பாலை திட்டியபடியே குச்சிஜஸ்களை மழையில் வாரி எறிந்தார்கள்.

அவனது வயற்காட்டில் அம்மழை பெய்திருக்குமெனில் சவுதி அரேபியாவிற்கு போக வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.

புனித யாத்திரிகர்களை வாழ்த்த பெய்த மழை தன்னையும் வாழ்த்துவதாக தன் கற்பனைகளை விரிவாக்கிகொண்டிருந்தான். கிட்டதட்ட எட்டுவருடங்களாக யாவோ மழையை பார்த்திருக்கவில்லை. மழை அவனை ஆசுவாசபடுத்திகொண்டிருந்ததை அவன் உணர்ந்திருக்கவில்லை. திருவனந்தபுரத்தில் பேருந்து ஏறும்போது இருந்த வெக்கையை மழை களைந்து விட்டிருந்தது.

என்றுமில்லா சந்தோஷத்துடன் குழந்தைகள் இரண்டாம் ஜாண்பாலை வரவேற்க பெய்த மழையில் விளையாட துவங்கியிருந்தன. மழைகாலமில்லை அது. எதிர்பாரா மழைவெள்ளத்தில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

மழை காலமில்லாததால் யாரும் குடைகளை கொண்டுவந்திருக்கவில்லை. சில கிழவிகளும் பொருத்தமற்று உடையணிந்திருந்த கன்னியாஸ்திரிகளும் குடைகளை விரித்து பிடித்திருந்தார்கள். குடைகளை வாழ்வு துணைபோல கொண்டு நடப்பவர்களாயிருக்கலாம்.

மழைக்காலமற்ற பொழுதில் பெய்த மழையை திருவிழா கடை விரித்திருந்தவர்கள் விரும்பியிருக்கவில்லை. மழையில் இங்கேயும் அங்கேயும் ஓடிகொண்டிருந்தவர்கள் புதிய நாடக பயிற்சியிலிருப்பதாக யாவோ எண்ணியிருந்தான்.

போப் இரண்டாம் ஜாண்பாலை குறித்து அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் ஓடிதிரிந்தபோது தான் போப்பாண்டவரின் புகைப்பட சுவரொட்டிகளை அவன் கண்டது. தன் ஏஜென்டின் முகமும் போப் இரண்டாம் ஜாண்பாலின் முகமும் ஒத்திருப்பதை தற்செயலாக கவனித்தான்.

விமான நிலைய சுவையுடனிருந்த காபியின் விலையை கண்டு யாவோ திகைத்து போயிருந்தாலும் மழை தன் சுவையை உள்ளே நுழைத்திருந்ததை கண்டு ஆசுவாசங்கொள்ள துவங்கினான்.

கடற்கரையில் முழுக்க நனைந்த கூட்டம் விமானநிலையத்தை நோக்கி வர துவங்கியது. விமானநிலையத்தின் கண்ணாடி கதவுகளையும் உடைத்துகொண்டு மக்கள் உள்ளே நுழைந்துவிடும் சாத்தியமிருந்தது.

போப் இரண்டாம் ஜான்பால் தரிசனம் தர அமைக்கப்பட்டிருந்த மேடை முண்டியடித்து ஏறிய கூட்டத்தின் பாரம் தாங்காமல் சரிந்து விழுந்து சில மரணங்களையும் ஏற்படுத்தியிருந்தது. உணர்வற்ற மழை வெட்கம்கெட்டு பெய்துகொண்டிருந்தது. அவ்விடம் கலவரத்தின் கடைசி ஓலங்களை எழுப்பிகொண்டிருந்தது. அழுகுரல்கள் மழையில் கரைய மறுத்தன.

பயணகளைப்பை போக்க யாவோ தன் முகத்தையும் உடம்பையும் கழுவிகொள்ள துவங்கினான். அதற்கான அவசியமில்லாததிருந்தது. நனைந்த உடை காய்வதற்கான அவகாசத்தை அப்பெருங்கூட்டத்தில் சாத்தியமில்லாததை அவன் உணர்ந்திருந்தான். உடம்பு குளிர்ந்து சிலிர்த்தது. வயற்காடு மழைவெள்ளத்தில் சிலிர்ப்பதை காணவிரும்பினான். அது அவனுக்கு ஒரு போதும் வாய்க்கபோவதில்லை. நிலம் கைவிட்டுபோயிருந்தது. யாரும் வழியனுப்ப வந்திருக்காத அவனை மானசீகமாய் மழை வழியனுப்பியது.

விமானம் ஏற வந்துகொண்டிருந்தவர்களின் வாகனங்கள் சலசலப்பை ஏற்படுத்தின. மேடை அருகே நுழைந்துகொண்டிருந்த ஆம்புலன்ஸ்களுக்கு ஏற்பட்ட கதியே அவ்வாகனங்களுக்கும் ஏற்பட்டது.

செக்யூரிட்டிகளால் வாகனங்களை ஒழுங்கமைக்க முடியவில்லை. பிடிவாதமான கூட்டம் மழையில் நனைந்துகொண்டிருந்தது. காலங்காலமாய் கூடவே கொண்டு நடந்த பிடிவாதமாய் இருக்கவேண்டும். பெருங்கூட்டத்தின் கூச்சலின் முன் செக்யூரிட்டிகளின் எச்சரிக்கை சப்தங்கள் அமுங்கி கொண்டிருந்தன.

போதுமான அவகாசத்தை டிராலியில் சுமந்தபடி ஏர்போர்டின் கண்ணாடி கதவருகே வந்து நின்றான். கூட்டத்திலிருந்து சில வசவுகளை டிராலி அவனுக்கு பெற்றுதந்திருந்தது. வசவுகள் புனித சாபங்களை போல தோன்றின.

விமானமும் போப் இரண்டாம் ஜாண்பாலும் மிகச்சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்களென கூட்டத்தில் யாரோ உரக்க சொல்லியது அவனுக்கும் கேட்டது. போப்பாண்டவர் ஏற்கெனவே திருவனந்தபுரத்து பிஷப் மாளிகையில் வந்து இறங்கியிருக்க வேண்டும். போப்பாண்டவருக்கென புதிய ஓய்வறை புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

முழுக்க நனைந்திருந்த கன்னியாஸ்திரி ஒருத்தி இன்று ஆத்மாக்களின் திருநாள் என்பதை கிழவிகளுக்கு மறுபடியும் மறுபடியும் அழுத்தமான குரலில் சொல்லிகொண்டிருந்தாள். மழை இரைச்சலில் அவளது குரல் யாருக்கும் கேட்டிருக்கவில்லை.

கொந்தளிக்க துவங்கிய கடலைவிட மழை இரைச்சலே அதிகமாக கேட்டது.

பிளாட்பார திருவிழா கடையில் வாங்கிய ஜெபமாலையை உருட்டியபடி பாம்படங்களை ஆட்டிகொண்டிருந்த கிழவி மழையை நிறுத்த பெருமுயற்சி செய்து கொண்டிருந்தாள்.

கண்ணாடி கதவருகே இருந்த ஜவான்கள் கூட்டம் உள்ளே நுழைந்துவிடாமல் தடுக்க மிகுந்த கவனமெடுத்தார்கள். யாவோவின் பாஸ்போர்ட்டை ஜவான்களில் ஒருவன் பரிசோதிக்க துவங்கினான். பாஸ்போர்டில் இருந்த முகமும் நிகழ்முகமும் ஒத்துபோயிருக்கவில்லை. நெடுங்காலத்திற்கு முன்னுள்ள புகைப்படம். பாஸ்போர்ட் எடுத்த பின் ஆறுவருடங்கள் வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்தது ஜவான்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

அசுவாரஸ்யமான காட்சியிலிருந்து ஜவான்கள் அவனை மீட்டெடுத்து உள்ளே அனுப்பினார்கள்.

விமான நிலையத்தின் உள்கூட்டின் காட்சியில் திகைத்த டிராலி நகர மறுத்தது. பிடிவாதத்துடனிருந்த டிரங்குபெட்டியை அச்சத்துடன் பார்த்துகொண்டிருந்தான். ஸ்கேனிங்கில் யாவோ தன் உடமைகளை தள்ளியபோது ஏற்பட்ட அதிர்வு ஏர்போர்ட்டை ஒருகணம் சிலிர்க்க வைத்தது. தன் பொருத்தமின்மை உடைந்து சிதறுவதை அவன் கண்கூடாக கண்டான். தன் நிலத்திலிருந்து கசிந்து கொண்டிருந்த ஏக்கம் உடம்பிலிருந்து வெளியேறிகொண்டிருந்தது.

போர்டிங் பாஸ் கொடுத்து கொண்டிருந்த பெண்ணின் வரவேற்பு வார்த்தைகள் யாவோவை திணற செய்தன. அவள் போதுமான அழகாய் இருந்தாள். அவளை தேர்ந்தெடுத்த முகமறியா ஆளின் ரசனையை யாவோ யோசிக்க நேரமில்லாததிருந்தது. அவள் சில மனப்பாடமான வரவேற்பு வார்த்தைகளை உதிர்த்ததை தவிர வேறுவொன்றும் செய்திருக்கவில்லை.

யாதாரு பந்தமுமற்ற ஒருவனின் நிலையை அவன் அடைந்திருந்தான். மரமண்டைபோல நிற்பதைதான் அவளது உலகமும் விரும்பியது. அவனது உடமைகளை எடைபோட்டு கன்வேயர் பெல்ட்டில் அவள் அனுப்புவதற்குள் டிரங்குபெட்டி சந்தைகூடத்தின் சப்தத்தை அங்கு உண்டுசெய்தது.

வேடிக்கை பார்க்க ஒன்றுமில்லையென்றாலும் அனேகரின் கண்களும் அவன் மேல் இருந்தன.

தன் தோள்பையுடன் கையில் திணிக்கப்பட்ட போர்டிங் பாஸையும் குடியேற்ற பாரத்தையும் கொண்டு நடந்தான். அவனது உடம்பின் மேல் மழைதுளிகள் மிச்சமிருந்தன. அவைகளும் ரகசியமாக ஏர்போர்டின் உட்புறத்தை பார்க்க விரும்பியிருக்கவேண்டும். மழையை திருடி வந்தது போல அவன் நடக்குமிடமெங்கும் ஈரம் ஒழுகிகொண்டிருந்தது. உடைகள் தானே உலருமென தன்னை சமாதானபடுத்தி கொண்டான்.

குடியேற்ற பாரத்தை பூர்த்தி செய்ய பலரையும் அணுகவேண்டியிருந்தது. போப் இரண்டாம் ஜாண்பாலை ஒத்திருந்த வயதானவன் இரக்கத்தை பாரத்தில் பூர்த்தி செய்ய துவங்கினான். அவர்கள் சைகைகளிலேயே பேசிகொண்டார்கள். சைகை மொழியே போதுமானதாகியிருந்தது. பாரத்தை பூர்த்தி செய்ய யாதொரு இன்னலும் ஏற்பட்டிருக்கவில்லை. பாஸ்போர்டில் இருந்த விவரங்களே பாரத்தை பூர்த்தி செய்ய போதுமானதாயிருந்தது.

மழையின் சப்தம் கூட அங்கே எட்டிபார்த்திருக்கவில்லை. மழை வேறு உலகத்தில் பெய்து கொண்டிருப்பதாகவே அவர்கள் நம்பிகொண்டிருந்தார்கள். எல்லோரும் போப் இரண்டாம் ஜாண்பாலின் வருகையை  பேசிகொண்டிருந்தார்கள். பாஷைகள் புரியவில்லையென்றாலும் அவதானிக்க கற்றுகொண்டிருந்தான்.

யாவோவின் உலகத்தில் அன்பை பரிமாறி போக யாரும் வந்திருக்கவில்லை. ஏர்போர்ட்டினுள் அவனுக்கு தனி உலகமிருந்தது. குடியேற்று பாரத்தின் வார்த்தைகள் தன்னை புதுப்பித்து கொண்டிருந்ததை யாவோ உணரலாமலில்லை. பாரத்தின் வார்த்தைகளில் சிக்குண்டிருந்த கருணை வெளியேற துடித்து கொண்டிருந்தது.

குடியேற்று அதிகாரிகள் யாவோவை அங்குலம் அங்குலமாய் அளவெடுத்தார்கள். அதற்கான தேவையில்லையென்றாலும் அவர்களிடமிருந்த இளகாரத்தின் முகம் எட்டிபார்த்தது. கட்டணபாக்கிக்காக மின்சாரத்தை துண்டிக்க வந்த அலுவலர்களை போலவே கருதிகொள்ள பழகியிருந்தான்.

சுங்க பரிசோதனையில் சில பெண்களே நின்றிருந்தார்கள். புதிதாக சேர்ந்தவர்களாய் இருக்கவேண்டும். அதிகார மிடுக்கு இன்னும் வந்திருக்கவில்லை. யாவோவை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தோள்பையுடன் படிக்கட்டு வழி மேற்புறம் போனான்.

புது உலகத்தின் கதவுகள் திறந்தன. வயற்காட்டிலிருந்து அவனது தந்தை வானத்தையே பார்த்துகொண்டிருந்தார். எட்டுவருடங்களாக அதையே தான் செய்துகொண்டிருக்கிறார். புது உலகத்தின் டியூட்டி ப்ரீ சாராய கடைகள் யாவோயை கொஞ்சின. அங்கேயிருந்த சேரில் ஆசுவாசபடுத்துமளவு வசீகரித்தன.

செக்யூரிட்டு செக்கிங்கில் யாவோவின் பையை தலைகீழாக புரட்டி தேடினார்கள். அவர்கள் எதிர்பார்த்த எப்பொருளும் அதனுள் கிடைக்கவில்லை. ஏமாற்றத்தை அவர்கள் பகிர துவங்கியது நளினமாயிருந்தது.

கண்ணாடியில் தெரிந்த மழைக்காட்சி யாவோவை ஈர்க்க துவங்கியது. குழந்தை தனத்தை அவன் மீட்டெடுக்க துவங்கியிருக்க வேண்டும். ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.

அங்கே எந்த விமானமும் இருக்கவில்லை. விமானத்தை மிக அருகே பார்க்க வேண்டுமென்கிற ஆசையை அவன் அவிழ்க்கவேயில்லை. மழையின் ஆனந்த தாண்டவம் ஓடுபாதைகளை சிதைத்திருக்க வேண்டும்.

மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல் போப் இரண்டாம் ஜாண்பால் சரியான நேரத்திற்கு வந்துவிடுவாரென மக்கள் நம்பி கொண்டிருந்தார்கள்.

மழையின் துளி ஈரம் கூட உட்புறத்தை தொடமுடியாமல் தடுத்துகொண்டிருந்த கண்ணாடி சுவரை அவன் ஆச்சரியத்துடன் கவனித்துகொண்டிருந்தான்.

கிராமங்கள் வரை புகழ்பெற்றிருந்த அண்ணாதுரை அளவிற்கோ இளைஞர்களின் மாரடோனா அளவிற்கோ போப்பாண்டவர் புகழ்பெற்றிருக்கவில்லையென்றாலும் மக்கள் கலைந்துபோய்விடாமல் மழையில் காத்திருக்க விரும்பினார்கள்.

மழை தன் சுபாவத்தை ராட்சஸனின் பலத்திற்கு மாற்றியிருந்தது.

ஓடுபாதை கண்ணுக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரு ஏரியின் மேற்பரப்பை போல விமானதளம் மாறி கொண்டிருந்தது. விமானதளத்தின் கடைசி காட்சிகளை மௌன சாட்சிகளை போல எல்லோரும் பார்த்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கான சவுதி விமானம் இன்னும் வந்திருக்கவில்லை. இறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்து கொண்டிருப்பதாக அரசல்புரசலாக தகவல்கள் சுழன்றன. விமானம் அருகிலுள்ள நகரத்து விமானநிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டதாக கசிந்த தகவல்கள் அவனுக்கு எட்டியிருக்கவில்லை.

யாவோ மழையையும் அங்கேயிருந்தவர்களின் முகங்களையும் மாறி மாறி கவனித்தபடியிருந்தான். நெடுநேர காத்திருப்பின் கடைசியில் பயணத்தில் தொலைத்த தன் சுபாவங்களை மழையிடமிருந்து திரும்ப மீட்டிருந்தான். தன் வயற்காட்டையும் மீட்டுவிடலாமென்ற நம்பிக்கை சம்மந்தமில்லாமல் துளிர்விட்டது.

விமானத்தில் வருபவர்களை வரவேற்க வந்தவர்களும் போப் இரண்டாம் ஜாண்பாலை காண வந்த புனித யாத்ரீகர்களும் தள்ளுமுள்ளுவில் இறங்கியிருந்தார்கள்.

விமானம் வராது என்பதை அறிவிக்காமலே சில இனிப்பான வார்த்தைகளுடன் போர்டிங் பாஸை விமான அதிகாரிகள் பிடுங்க துவங்கினார்கள். அதற்கென சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். எவ்வளவு திட்டினாலும் முகச்சிரிப்பை துளிகூட மாற்றாதவர்கள்.

அவனது கையிலிருந்த போர்டிங் கார்டை பிடுங்குவதற்கு யாதொரு வார்த்தைகளும் விமான அதிகாரிக்கு தேவைப்பட்டிருக்கவில்லை. யாவோ அவரை மறித்தபடி நின்று சற்று முன் கற்றிருந்த மலையாளத்தில்

“போப் ஆண்டவர் வந்துவிட்டாரா?” என்று கேட்டான்.

அதிகாரி உறைந்து போய் நின்றிருந்தார்.

Series Navigationதலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்காசி யாத்திரை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *