பாரதியின் பகவத் கீதையும் விநாயகர் நான்மணி மாலையும்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 35 of 43 in the series 17 ஜூன் 2012

முனைவர் நா.இளங்கோ

இணைப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

பட்ட மேற்படிப்பு மையம்,

புதுச்சேரி.

மனிதகுல வரலாற்றைச் சிந்தனைகளின் வரலாறு என்றும் சிந்தனையாளர்களின் வரலாறு என்றும் வருணிக்கலாம். ஏனெனில் மனிதகுல முன்னேற்றம் காலந்தோறும் பல்வகைப்பட்ட சிந்தனையாளர்களின் தத்துவச் சிந்தனைகளின் ஊடாகவே கோர்க்கப்படுகின்றது. இதில் பொருள்முதல் வாதத்தின் முற்போக்கான பங்களிப்பு அரசியல் அரங்கிலும் பொருளியல் அரங்கிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதகுல வரலாற்றில், உலகின் பெரும்பான்மை மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் கருத்துமுதல் வாதம் சார்ந்த ஆன்மீகத்தின் பங்களிப்பு என்ன? சமூக மாற்றத்திற்கும் சமத்துவத்திற்கும் ஆன்மீகத்தில் இடம் உண்டா? மனிதகுல முன்னேற்றத்திற்கு ஆன்மீகம் தந்துள்ள முற்போக்குச் சிந்தனைகளின் பாத்திரம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பாரதியியத்தின் வழி விடைகாண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

பாரதி ஆய்வு வரலாறு புதிரான பல பக்கங்களைக் கொண்டது. பாரதி வாழ்ந்த காலத்தில் அவரின் முழுப் பரிமாணத்தையும் அறிந்தவர்கள் அநேகமாக இல்லை என்றே கூறலாம். பாரதி மறைவுக்குப் பின்னரும் பாரதி ஆய்வுகள் ஒரு சமமற்ற போக்கிலேயே நிகழ்த்தப்பட்டன. பாரதியின் அரசியல் பற்றிய ஆய்வுகளும் பாரதியின் ஆன்மீகம் குறித்த ஆய்வுகளும் வேறு வேறு முனைகளிலிருந்து தொடங்கித் தனித்தனிப் பாதைகளில் பயணப்பட்டன. இதுவே பாரதி ஆய்வுகளின் அடிப்படை பலவீனம்.

பாரதி சிந்தனையில் பெரும்பங்கு வகித்த ஆன்மீகம் பற்றியும், பாரதியின் ஆன்மீகத் தேடலின் நோக்கம் பற்றியும், எதை இலக்காகக் கொண்டு பாரதி தன் ஆன்மீகத் தத்துவத்தைக் கட்டமைத்தான் என்பது குறித்தும் நாம் தெளிவுபெறுதல் அவசியம். இத்தகு நோக்கிலான பாரதி ஆய்வுக்கு உரிய களமாக அமையும் பாரதியின் படைப்புகள் இரண்டு. அவை, 1. பாரதியின் பகவத் கீதை முன்னுரையும் பகவத் கீதை உரையும், 2. பாரதியின் விநாயகர் நான்மணி மாலை. பாரதியின் புதுவை வாழ்க்கையில் அவர் படைத்த உயர்ந்த இலக்கியங்கள் என்று போற்றப்படும் கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற மூன்று இலக்கியங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் பாரதி படைத்த மிகச்சிறந்த இலக்கிய, தத்துவப் படைப்புகள்தாம் மேற்குறிப்பிட்ட இரண்டு படைப்புகளும். என்ன காரணத்தாலோ கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற மூன்று இலக்கியங்களும் பெற்ற விளம்பரத்தை பாரதியின் பகவத் கீதை உரையும், விநாயகர் நான்மணி மாலையும் பெறவில்லை.

பாரதியின் பகவத் கீதைஉரை:

பாரதி 1912 ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்தார் என்று அறிகிறோம். 1924 -25 ஆகிய இக்காலப் பகுதியில் பகவத் கீதை முன்னுரை, பகவத்கீதை மூலமும் உரையும் ஆகிய நூல்களைப் பாரதி பிரசுராலயத்தார் முதன் முதலில் பதிப்பித்தனர். பாரதி, கீதை உரை நூலுக்கு எழுதிய முன்னுரையை அதன் சிறப்பு நோக்கித் தனி நூலாகப் பாரதி பிரசுராலயத்தார் பகவத் கீதை முன்னுரை என்ற பெயரில் பதிப்பித்தார்கள்.

பாரதி தாம் எந்தக் கோணத்திலிருந்து கீதையை ஆராய்கிறார் என்பதைப் பகவத் கீதை முன்னுரை புலப்படுத்துகின்றது. பகவத் கீதைக்கு பாரதி அணிவித்த முத்தாரமே இம்முன்னுரை நூலாகும். (பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு, சீனி. விசுவநாதன், ப.270)

என்று பதிப்புரையில் பிரசுராலயத்தார் குறிப்பிடுவது இங்கு மனங்கொள்ளத் தக்கது. பின்னர் வேறு சிலரும் இம்முன்னுரையைத் தனி நூலாகப் பதிப்பித்துள்ளார்கள். தொல்காப்பியர் நூலகம் பதிப்பகத்தார் பகவத் கீதையின் உட்பொருள் என்ற பெயரில் இம்முன்னுரையை வெளியிட்டுள்ளார்கள்.பகவத் கீதை உரையை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது பாரதி அந்நூலுக்கு எழுதிய முன்னுரையே.

பாரதியின் தத்துவத் தேடல்களே அவரின் படைப்புகள். ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்காக, மொழியினருக்காக, நாட்டினர்க்காக அல்ல அவரின் தேடல்கள், அந்தத் தேடல் மனிதகுலம் முழுமைக்குமான தேடல். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே நாளும் சிந்தித்த பாரதி அனைத்து உயிர்க் குலத்திற்குமான சமத்துவத்தைக் கீதையில் கண்டார். பாரதியின் தேடல் முழுமைபெற்ற இடம் அது.

எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரினும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான், ஸர்வமிதம் ப்ரஹம்! பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தால் அஞ்ஞானத்திற்கு லட்சணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைப்புகள் உடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு, எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.(பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.11)

எவ்வுயிரிடத்தும் எம்மனிதரிடத்தும் எவ்வித வேற்றுமையும் பாராதிருப்பதே, அதாவது சமத்துவமே விடுதலைக்குரிய வழி, அதுவே ஞானம் என்கிறார் பாரதி.

பாரதி காலத்தில் அரசியல் அரங்கிலும் ஆன்மீக அரங்கிலும் நவீன இந்தியாவிற்கான எழுச்சியை பகவத் கீதையிலிருந்தே பலரும் பெற்றார்கள். குறிப்பாக, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, அரவிந்த கோஷ், ஜவஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர் போன்ற பலருக்கும் கீதையே ஆற்றல் மிக்க வழிகாட்டியாக இருந்தது. பாரதி இவர்கள் அனைவரின் பார்வையிலிருந்தும் முற்றிலும் வேறான நோக்கில் கீதையை தரிசித்தார். கீதை உரைக்கு அவர் எழுதிய நீண்ட முன்னுரை பகவத் கீதையின் உட்பொருள் என்ற பெயரிலேயே தனிநூலாகப் பதிப்பிக்கும் பெருமை பெற்றது. பாரதி கீதையில் தரிசித்த ஆன்மீகத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்து உருவாக்கிய இலக்கியமே விநாயகர் நான்மணிமாலை.

பாரதியின் விநாயகர் நான்மணி மாலை:

பாரதி தம் தம்பி விசுவநாத ஐயருக்கு 3-8-1918 இல் எழுதிய கடிதத்தில் விநாயகர் ஸ்தோத்திரம் என்ற தம் நூலைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். இந்த விநாயகர் ஸ்தோத்திரம் தான், விநாயகர் நான்மணி மாலை. 1918 க்கு முன் பாரதி புதுவையில் வாழ்ந்த காலத்தில் புதுவை மணக்குள விநாயகரை முன்னிறுத்திப் பாடிய இந்த நூல் அச்சில் வெளிவந்தது பாரதி மறைவுக்குப் பின் 1929 இல்தான்.

பாரதி பிரசுராலயத்தார் 1929 இல் இந்நூலைப் பதிப்பிக்கும் போது பின்வருமாறு தம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்,

இந்நூல் பாரதியாரின் கையெழுத்துப் பிரதி அப+ர்ணமாயிருந்த இடங்களில் ஸ்ரீதேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ஸ்ரீசுத்தாநந்த பாரதியார் அவர்கள் முதலியவர் களைக் கொண்டு பூர்த்தி செய்யப்பட்டது. கையெழுத்துப் பிரதியில் காணாதன நகவளைவு (பிராக்கெட்) களுக்குள் தரப்பட்டுள்ளன. (பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு, சீனி. விசுவநாதன், ப.284)

பாரதி வழக்கமான பக்தி இலக்கியமாக இந்நூலைப் படைக்கவில்ல. மாறாக, தம் தத்துவத் தேடலின் பிரதியாகத்தான் படைத்துள்ளார். இவ்வுலகில் கலியைக் கொன்று கிருதயுகத்தினைக் கொணர்ந்து எல்லோரும் இம் மண்ணிலேயே அமரத்தன்மை எய்தும் வகையைச் சாத்தியமாக்கும் பிரகடணமாகவே இந்நூலைச் சமைத்துள்ளார்.

கீதையும் நான்மணி மாலையும்:

பாரதியின் கீதை முன்னுரையையும் விநாயகர் நான்மணி மாலை நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் இரண்டில் முன்னது இலக்கணம் போலவும் பின்னது இலக்கியம் போலவும் படைக்கப்பட்டுள்ள திறன் வியப்புக்குரியதாயுள்ளது. பாரதி பகவத்கீதை முன்னுரையில் குறிப்பிடும் கீதையின் உட்பொருள்கள் சிலவும் அதே உட்பொருளை விளக்கும் வகையில் பாரதி பாடிய விநாயகர் நான்மணி மாலைப் பாடல் பகுதிகளும் வருமாறு,

உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று, மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம். கவிதைகளெல்லாம் நாடகங்களெல்லாம் சட்டங்களெல்லாம் கதை-களெல்லாம் காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா? (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.11)

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்

இமைப்பொழுதும் சோராதிருத்தல்

சிந்தையே இம்மூன்றும் செய் (வி.நா.மா., பா.25)

2. எல்லாத் துயரங்களும், எல்லா அச்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.7)

மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே

கவலைப் படுதலே கருநரகம்மா

கவலையற்றி ருத்தலே முக்தி (வி.நா.மா., பா.36

3. சாகாதிருத்தல், மண்மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை, இஃதே வேத ரகஸ்யம். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.18)

துயரிலாது இங்கு

நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்

அமரத் தன்மை எய்தவும்

இங்கு நாம் பெறலாம், இஃது உணர்வீரே! (வி.நா.மா., பா.4)

4. மோ~த்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு அவனுடைய சொந்த மனமேயாம். உள்ளப்பகையைக் களைந்துவிட்டால் புறப்பகை தானே நழுவிப்போய்விடும். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.23,24)

மனமே! எனைநீ வாழ்வித்திடுவாய்!

வீணே உழலுதல் வேண்டா! (வி.நா.மா., பா.12)

மேவி மேவித் துயரில் வீழ்வாய்

எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்

பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை

இன்புறச் செய்வேன் எதற்குமினி அஞ்சேல். (வி.நா.மா., பா.36)

5. ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் – அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பைத் தொப்பென்று கீழே போட்டுவிட்டுச் சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்துகொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகைப் படைத்தாய்? நீயா இதை நடத்துகின்றாய்? உன்னைக் கேட்டா ந~த்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்?

எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில் எவனும் கவலைப்படுதலும் துயர்ப்படுதலும் அறியாமையன்றோ? (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.8,9)

அச்ச மில்லை அமுங்குத லில்லை

நடுங்குதலில்லை நாணுதலில்லை

பாவமில்லை பதுங்குத லில்லை

ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்

அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்

கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம் (வி.நா.மா., பா.24)

மூட நெஞ்சே! முப்பது கோடி

முறையுனக் குரைத்தேன், இன்னும் உரைப்பேன்

தலையில் இடிவிழுந்தால் சஞ்சலப்படாதே

ஏது நிகழினும் நமக்கேன்? என்றிரு,

பாராசக்தி உளத்தின் படியுலகம் நிகழும்

நமக்கேன் பொறுப்பு? (வி.நா.மா., பா.36)

6. கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் புசித்துக்கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களின்றும் விடுபட்டு ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழி…..(பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.32,33)

துறந்தார் திறமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்குக்

குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து குலமகளும்

அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்

சிறந்தாலும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயுந்தவமே. (வி.நா.மா., பா.10)

7. எல்லாம் கடவுள் மயம் எல்லாத் தோற்றங்களும் எல்லா வடிவங்களும் எல்லா உருவங்களும் எல்லாக் காட்சிகளும் எல்லாக் கோலங்களும் எல்லா நிலைமைகளும் எல்லா உயிர்களும் எல்லாப் பொருள்களும் எல்லாச் சக்திகளும் எல்லா நிகழ்ச்சிகளும் எல்லாச் செயல்களும் எல்லாம் ஈசன் மயம். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.8)

யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே (வி.நா.மா., பா.20)

பல்லுருவாகிப் படர்ந்த வான்பொருளை (வி.நா.மா., பா.12)

8. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேணவேண்டும். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.16)

மண்மீதுள்ள மக்கள் பறவைகள்

விலங்குகள் பூச்சிகள் புற்ப+ண்டு மரங்கள்

யாவும்என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும் தேவ தேவா! (வி.நா.மா., பா.32

9. இடைக்காலத்தில் மாயை பொய் என்றதொரு வாதம் உண்டாயிற்று. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுள் திருமேனி. (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.46)

வான முண்டு மாரி யுண்டு

ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்

தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்

உடலும் அறிவும் உயிரும் உளவே

தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்

கேட்கப் பாட்டும் காணநல் லுலகமும்

என்றும் இங்குளவாம்……. (வி.நா.மா., பா.32)

மேலே காட்டப்பட்ட ஒப்புமைப் பகுதிகள் சிலவே. பாரதி தாம் விவரித்த பகவத் கீதை உட்பொருளை விளக்கிக் காட்டும் இலக்கியமாகத்தான் விநாயகர் நான்மணி மாலை படைத்தார் என்பது மேலே உள்ள இருநூல்களின் மேற்கோள்களாலும் இனிதே விளங்கும். ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விரிக்கின் பெருகும் என்பதால் சான்றாதாரங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டன.

பாரதி கட்டமைக்கும் ஆன்மீகத்தின் முற்போக்குப் பாத்திரம்:

பாரதி பேசும் ஆன்மீகத்தின் தனித்தன்மையை உணர பாரதி கால அரசியல் பின்னணியைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். 1908 ஏப்ரல் 30 அன்று முஜாப்ப+ரில் நிகழ்ந்த இந்தியாவின் முதல் வெடிகுண்டு வீச்சைத் தொடர்ந்து, ஆங்கில அரசாங்கம் மிருகத்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இந்நிகழ்ச்சியின் உடன்விளைவாகத் தீவிர தேசிய இயக்கத்தினர் பலரும் கைது செய்யப்பட்டார்கள். பாரதி புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தான்.

1905 ஆம் ஆண்டின் வங்கப் பிரிவினையோடு பிறந்த சுதேசிய இயக்கம், 1908 ஆம் ஆண்டின் முதல் வெடிகுண்டு வீச்சுக்குப் பின் தேய்ந்து நலிந்து 1911 ஆம் ஆண்டின் இறுதியில்… அடுத்து என்ன? என்ற கேள்விக்குறியாக மாறிவிட்டது.(பாரதி காலமும் கருத்தும், ரகுநாதன், ப.543). 1908-1911 ஆம் ஆண்டுகளில் விடுதலை இயக்கமே சிந்திச் சிதறிச் சீர்குலைந்து போய்விட்ட நிலையில், அதில் ஈடுபட்டிருந்த தீவிர தேசியவாத இயக்கத்தையும் புரட்சிகர இயக்கத்தையும் சேர்ந்த இளைஞர்கள் பலரும், அதன்பின் வௌ;வேறு மார்க்கங்களைத் தேர்ந்தெடுத்தனர்.(மேலது, ப.544)

பலரும் வேறு வேறு மார்க்கங்களைத் தேடி ஓடிச் சிதறிப் போனாலும், புதுவையில் தஞ்சம் புகுந்த பாரதி போராட்ட உணர்வுகளிலிருந்து விலகினார் என்றோ, தனிமனித ஆன்ம ஈடேற்றம் காணும் வழியைத் தேடினான் என்றோ யாரும் சொல்லமுடியாது. புதுவைப் படைப்பான பாஞ்சாலி சபதத்தில் பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்றும் தேசிய விடுதலைப் போராட்ட எழுச்சியின் பின்னடைவையும் மீண்டும் தோன்றப்போகும் விழிப்பையும் குறிக்கும் விதத்தில் தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் என்றும் பாடி நம்பிக்கை ஊட்டுகிறான்.

ஆன்மீகத்தின் பக்கம் பார்வையைத் திருப்பினாலும் கூட பாரதியின் ஆன்மீகம் முற்போக்கு ஆன்மீகமாகவே கருக்கொண்டது.

கீதையில் பாரதி கண்ட புதிய தரிசனங்கள்:

காலம் காலமாகக் கருத்துமுதல் வாதிகளின் கரங்களில் கிடந்து வருணாசிரம தர்மம் பேசவும், எல்லாம் பொய் என்னும் வரட்டு வேதாந்தம் பேசவும், இவ்வுலக வாழ்வை வெறுத்தொதுக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த பகவத்கீதைக்கு பாரதி முற்றிலும் வேறான முற்போக்கு விளக்கங்கள் கொடுத்து புதிய தரிசனங்களை கீதையில் காண்கிறார்.

1. ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் – எல்லா மனிதரும் சமம், மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை.

2. கீதை அமிர்த சாஸ்திரம், அமரத்தன்மை இதுவே வேத ரகஸ்யம்.

3. மனிதனுடைய ஒரே சத்ரு அவனுடைய சொந்த மனமேயாகும். எனவே அச்சப்படாதே, கவலைப்படாதே,

4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய், அன்பே சிறந்த தவம்.

5. துறவைவிட இல்லறமே மேலானது. இல்லறமே சுவர்க்கம்.

6. மாயை பொய்யென்னும் போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத்கீதை எழுதப்பட்டது. மாயை பொய்யில்லை, அது கடவுளின் திருமேனி.

7. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். சமத்துவமே விடுதலைக்கு வழி.

பாரதியின் இந்தப் புதிய தரிசனங்களோடு படைக்கப்பட்டிருப்பதுதான் விநாயகர் நான்மணி மாலையின் தனிச்சிறப்பு.

முடிவுரை:

பாரதியின் கடைசிப் படைப்பு என்று கருதப்படும் பின்வரும் பாடலில்,

முப்பது கோடி ஜனங்களின் சங்க

முழுமைக்கும் பொதுவுடைமை

ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை. (பாரத சமுதாயம், பாரதி)

என்று சொன்ன பாரதி, அதே பாடலில் ஒரு புதுமை செய்கிறான்,

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்

என்றுரைத்தான் கண்ண பெருமான்

எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகுக்கு அளிக்கும் (பாரத சமுதாயம், பாரதி)

பாரதி இந்தப் பாடலில் சமத்துவத்தையும் பகவத் கீதையையும் இணைத்திருக்கின்றார். எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்ற கீதை வாசகம் இங்கே நினைவ+ட்டப்பட்டிருக்கிறது. எல்லாம் கடவுள் மயம் என்பதிலிருந்துதான் பாரதி அன்பை, விடுதலையை, சமத்துவத்துவத்தைக் கட்டமைக்கிறார். பாரதி கூறும் அமரநிலை என்பது சமத்துவ சமூகமே. அதுவே கிருத யுகம். பாரதி ஆன்மீகத்தின் தனித்தன்மையும் இதுவே.

ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

1. சி.சுப்பிரமணிய பாரதி, பாரதியார் கவிதைகள்.

2. சுப்பிரமணிய பாரதியார், பகவத்கீதையின் உட்பொருள்.

3. சி.ரகுநாதன், பாரதி காலமும் கருத்தும்.

4. சீனி. விசுவநாதன், பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு.

Series Navigationகல்விக் கனவுகள் – பணம் மட்டுந்தானா வில்லன்?மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 30
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *