புத்திசாலிகள் ஏன் முட்டாள்களாக இருக்கிறார்கள்

author
0 minutes, 13 seconds Read
This entry is part 41 of 43 in the series 17 ஜூன் 2012

ஜோனா லெஹ்ரர்

 

ஒரு சின்ன கணக்கு.. ஒரு கிரிக்கெட் மட்டையும் பந்தும் ஒரு ரூபாய், பத்து பைசாக்கள் என்று வைத்துகொள்வோம். கிரிக்கெட் மட்டை பந்தை விட ஒரு ரூபாய் விலை அதிகம் என்றால், பந்தின் விலை என்ன?

 

பெரும்பாலான மக்கள் உடனே மிக தைரியமாக பந்தின் விலை 10 பைசாக்கள் என்று சொல்வார்கள். பதில் தவறு. (சரியான பதில் பந்தின் விலை 5 பைசா. மட்டையின் விலை ஒருரூபாய் ஐந்து பைசா)

 

கடந்த ஐம்பது வருடங்களாக , பிரின்ஸடனில் மனவியல் துறை பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான டேனியல் கன்மேன் Daniel Kahneman இந்த மாதிரியான கேள்விகளை கேட்டு பதில்களை ஆராய்ச்சி செய்துகொண்டு வருகிறார். அவரது எளிமையான பரிசோதனைகள் நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதை பற்றிய சிந்தனையை மிகவும் ஆழமாக மாற்றியிருக்கின்றன. மனிதர்கள் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தத்துவவியலாளர்களும், பொருளாதார நிபுணர்களும், சமூகவியல் ஆய்வாளர்களும் பல நூற்றாண்டுகளாக கருதி வந்திருப்பதை கான்மேன், மறைந்த அமோஸ் ட்வெர்ஸ்கி Amos Tversky, ஷேன் ஃப்ரடெரிக் (மட்டை பந்து கேள்வியை வடிவமைத்தவர்) ஆகியோர் கேள்விக்குறியதாக ஆக்கியிருக்கிறார்கள். நாம் நினைப்பது போல நாம் அவ்வளவு பகுத்தறிவு உள்ளவர்கள் அல்ல என்று காட்டியிருக்கிறார்கள்.

 

சந்தேகத்துக்குரிய ஒரு சூழ்நிலையை சந்திக்க நேரும்போது, நாம் அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்டு, ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களையும் தெரிந்துகொண்டு நாம் முடிவெடுப்பதில்லை. மாறாக, மனத்தில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் ஏராளமான குறுக்கு வழிகளை நம்புகிறோம். இந்த குறுக்குவழிகள் பெரும்பாலும் முட்டாள்த்தனமான முடிவுகளுக்கே இட்டுச்செல்கின்றன. இந்த குருக்குவழிகள் கணக்கு போடுவதை விட வேகமானவை அல்ல. இவை கணக்கு போடுவதையே தவிர்க்க உதவும் வழிகள். மட்டை, பந்து கேள்வியை கேட்கும்போது, நமது கணக்கையே மறந்துவிட்டு, மிகவும் மூளைக்கு கஷ்டமில்லாத எளிய பதிலுக்கு போய்விடுகிறோம்.

 

இருபதாம் நூற்றாண்டின் மிகவும் முக்கியமான மனதத்துவவியலாளராக கான்மென் இப்போது அறியப்பட்டாலும், அவரது உழைப்பும் வேலையும் பல வருடங்களாக உதாசீனம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அவரது ஆராய்ச்சியை பற்றி கேள்விப்பட்ட ஒரு அமெரிக்க தத்துவவியலாளர், “முட்டாள்த்தனத்தை பற்றிய மனத்தத்துவவியலில் எனக்கு நாட்டமில்லை” என்று திருப்பியடித்தார் என்று கான்மேன் கூறுகிறார்.

 

அந்த தத்துவியலாளர் பதிலை தலைகீழாக பெற்றுகொண்டிருக்கிறார். பல நேரங்களில் புத்திசாலிகள் இப்படிப்பட்ட சிந்தனை தவறுகளை செய்கிறார்கள் என்று ஜேம்ஸ் மாடிசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரிச்சர்ட் வெஸ்ட் அவர்களும், டோரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த கீத் ஸ்டானோவிச் அவர்களும் சேர்ந்து செய்த  Journal of Personality and Social Psychology  வெளியாகியுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.  புத்திசாலித்தனம் முட்டாள்த்தனத்துக்கான மாற்று என்று நாம் கருதுவதால், S.A.T. அதிகம் பெற்றவர்கள் இப்படிப்பட்ட தவறுகளை செய்யமாட்டார்கள் என்று நாம் கருதுவது தவறு என்கிறார்கள். (S.A.T.  என்பது அமெரிக்க பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கு பெறும் கணித, ஆங்கில பொது தேர்வு)

கல்லூரியில் படிக்கும் 482 மாணவர்களிடம் இப்படிப்பட்ட மனச்சார்பு உருவாக்கும் கேள்விகளை கேட்டார்கள். உதாரணமாக,

 

ஒரு குளத்தில் அல்லி இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் அந்த அல்லி இலைகள் அளவில் இரு மடங்காக ஆகுகின்றன. அந்த முழு குளத்தையும் அல்லி இலைகள் ஆக்கிரமிக்க 48 நாட்கள் ஆகின்றன என்றால், அந்த குளம் பாதி நிரம்ப எத்தனை நாட்களாகும்?

 

உங்களது உடனடி பதில் குறுக்குவழியை எடுத்திருக்கும். இறுதி விடையை இரண்டால் வகுத்து 24 என்று சொல்லுவீர்கள். அது தவறு. சரியான பதில் 47 நாட்கள்.

கான்மேன், ட்வெர்ஸ்கி ஆகியோர்  1970களிலேயே மனிதர்கள் கொண்டிருக்கும் ”நங்கூர மனச்சார்பு”“anchoring bias,” என்பதை  விளக்கியிருக்கிறார்கள். உலகத்தில் உயரமான மரத்தின் உயரம் 85 அடியை விட அதிகம் என்றால், அந்த மரத்தின் உயரம் எவ்வளவாக இருக்கும்? அல்லது உலகத்தில் உயரமான மரத்தின் உயரம் 1000 அடியை விட அதிகம் என்றால், அந்த மரத்தின் உயரம் எவ்வளவாக இருக்கும்?  என்று இரண்டு கேள்விகள். 85 அடியை விட அதிகமாக இருக்கும் என்று கேட்கப்பட்ட மாணவர்கள் அந்த மரத்தின் உயரத்தை  118 அடி என்று சராசரியாக மதிப்பிட்டார்கள். ஆனால், ஆயிரம் அடியைவிட அதிகம் என்று கேட்ட மாணவர்கள் 1000க்கும் மேற்பட்ட உயரமாக மதிப்பிட்டார்கள். (ஆக கேட்கும் கேள்வியில் உள்ள எண்ணோடு தொடர்பு கொண்டதாக பதில் மாறிவிடுகிறது)

மனித புத்திசாலித்தனத்தோடு இந்த மனச்சார்புகள் எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கின்றன என்று இவர்கள் ஆராய விரும்பினார்கள். ஆகவே மாணவர்கள் பல்வேறு புத்திசாலித்தனத்தை மதிப்பிடும் தேர்வு மதிப்பெண்களோடு தொடர்பு படுத்தி இவற்றை ஆராய்ந்தார்கள்.

ஆராய்ச்சி முடிவுகள் சங்கடமானவையாகத்தான் இருந்தன. முதலாவது என்னவென்றால், நமக்கு மனச்சார்பு இருக்கிறது என்று அறிந்துகொள்வது உபயோகமானதல்ல என்பது. தங்களது மனச்சார்புகளை அறிந்துகொண்டவர்களுக்கு, அவற்றை தாண்டுவது எளியதாக இருக்கும் என்று அறிவியலறிஞர்கள் கூறுவார்கள். இந்த முடிவு கான்மேனை ஆச்சரியப்படுத்தவில்லை. இவ்வாறு ஆராய்ச்சி செய்துவந்தாலும் கான்மேனின் மூளையின் வேகமோ நுணுக்கமோ மாறுபடவில்லை என்று கான்மேன் கூறுகிறார். “என்னுடைய சிந்தனை, அதே போல முந்திகொண்டு பதில் கூறுவது, மோசமான தீர்ப்பு, தவறான திட்டமிடல் அனைத்தையும் கொண்டிருக்கிறது” என்று கூறுகிறார். நான் இந்த பிரச்னைகளை ஆராயும்முன் எப்படி இருந்தேனோ அதே போலத்தான் இருக்கிறேன் என்கிறார்.

 

நமது மனச்சார்பிலேயே மிகவும் ஆபத்தானது, நம்மைப் போலவே எல்லோரும் இதே போன்று சிந்திக்கும் தவறுகளை செய்கிறார்கள் என்று கருதுவதுதான். இதனை ”மனச்சார்பின் இருட்டு மூலை” “bias blind spot.” என்று அழைக்கலாம். இந்த மனச்சார்பை பற்றிய மனச்சார்பு (மெடா-மனச்சார்பு) நாம் மற்றவர்கள் செய்யும் முடிவுகளில் உள்ள தவறுகளை உடனே அறிய வைக்கிறது. அதே தவறுகள் நம்மிடம் இருந்தால் அவற்றை நாம் கவனிக்காமல் செய்கிறது. இந்த மனசார்பை பற்றிய மனசார்பு புதிய கருத்து இல்லையென்றாலும், இது நாம் கொண்டிருக்கும் அனைத்து மனச்சார்புகளிலும் உள்ளது என்பதை வெஸ்ட் அவர்களின் ஆய்வுக்கட்டுரை தெளிவு படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் நாம் நமது மனம் செய்யும் தவறுகளை மன்னிக்கிறோம். மற்றவர்களது மனது செய்யும் தவறுகளை கடுமையாக பார்க்கிறோம்.

 

இதில் இன்னொரு பஞ்ச் இருக்கிறது. அதாவது புத்திசாலித்தனம் பிரச்னையை இன்னும் மோசமாக்குகிறது என்பதுதான் அது. புத்திசாலி மாணவர்களுக்கு இந்த மனச்சார்பு குருட்டுமூலை இன்னும் அதிகமாக இருக்கிறது என்பதுதான் அது.  ஆழகாக சிந்திக்கக்கூடிய புத்திசாலி மாணவர்கள் இப்படிப்பட்ட மனச்சார்புகளுக்கு இன்னும் மிக அதிகமாகவே பலியாகிறார்கள். படிப்பறிவும் காப்பாற்றவில்லை. ஹார்வர்ட், பிரின்ஸ்டன், எம்.ஐடி போன்ற தலைசிறந்த அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் ஐம்பது சதவீதத்தினருக்கு மேற்பட்டு சாதாரண மட்டை-பந்து கேள்விக்கு தவறான பதிலை அளித்திருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சிமுடிவுகளை எப்படி விளக்குவது? நாம் மற்றவர்களை எப்படி எடை போடுகிறோமோ அதற்கும் நாம் நம்மை எப்படி எடைபோடுகிறோம் என்பதற்கும் உள்ள பொருத்தமின்மையே இந்த மனச்சார்பு குருட்டு மூலைக்கு காரணம் என்று ஒரு தேற்றம் இருக்கிறது.  உதாரணமாக, ஒரு புதிய நபரை பற்றி எடை போட நாம் அவர்களது நடத்தையையே எடை போடவேண்டிய சூழ்நிலைக்கு வருகிறோம். நாம் அவர்களது மனச்சார்புகளை வெளியிலிருந்து பார்க்கிறோம். இதனால் அவர்களது சிந்தனை தவறுகளை எளிதில் பார்க்கமுடிகிறது. இருந்தாலும், நமது தவறான தேர்வுகளை எடைபோடும்போது, நாம் உள்ளார்ந்த சிந்தனையில் ஈடுபடுகிறோம். நமது நோக்கத்தையும், ஏன் தவறாக சொன்னோம் என்பதற்கும் காரணத்தை தேடுகிறோம்.

 

இப்படி சுய சிந்தனை செய்வதில் உள்ள பிரச்னை என்னவென்றால், நமது பகுத்தறிவற்ற பதில்களுக்கு மூல காரணங்கள் நமது ஆழ்மனத்தில் உள்ளன. அதாவது அவை நமது சுய ஆராய்ச்சிக்கோ, அல்லது புத்திசாலித்தனத்துக்கோ காணப்பட முடியாதவை. சொல்லப்போனால், இவ்வாறு சுய ஆராய்ச்சி செய்வது பிரச்னையை இன்னும் அதிகரிக்கும். நமது தினசரி தவறுகளுக்கெல்லாம் காரணமாக இருக்கும் மிகவும் ஆதாரமான ஆழமன முடிவுகளை நாம் காணாமல் செய்யும். ஏன் தவறு செய்தோம் என்று  நாம் மிகவும் அழகாக கதை விடுவோம். அந்த கதைகள் எல்லாம் புள்ளி தவறியே விழும். நாம் நம்மை அறிய எவ்வளவு அதிகமாக முயல்கிறோமோ அந்த அளவுக்கு நாம் நம்மை பற்றி குறைவாகவே அறிவோம்.

 

Read more http://www.newyorker.com/online/blogs/frontal-cortex/2012/06/daniel-kahneman-bias-studies.html

Series Navigationஅந்தரங்கம் புனிதமானதுஎஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *