பொ.மனோ
கோபி இணையத்தில் தான் படித்துக்கொண்டிருந்த கட்டுரை ஒன்றை என்னிடம் கணனித் திரையில் காண்பித்தான். அதில்,
“நாம் ‘நிதர்சனம்’ எனக்கருதுவது எமது பிரக்ஞை வியாபித்துள்ள பரிமாணம் சார்பானது. ஒவ்வொரு பரிமாணத்திலும் அது வெவ்வேறு தளங்களை எடுக்கின்றது. எமது முப்பரிமாணத்திற்குட்பட்ட பிரக்ஞையூடாக நாம் கருதும் ‘நிதர்சனம்’ வேற்றுப் பரிமாணங்களில் தன் பிரக்ஞையை வியாபித்திருக்கும் ஒரு மனிதனுக்கு போலியானதாவே தோற்றம்பெறும். அம்மனிதன் கருதும் நிசர்சனம் அவனது பிரக்ஞை வியாபித்திருக்கும் பரிமாணத்துடன் மாறுபடக்கூடியது. எனவே பிரக்ஞை வியாபித்திருக்கும் பரிமாணப்படிநிலைகள் மாறும்போது தோற்றம்பெறும் ‘நிதர்சனங்களும்’ மாற்றம் பெறுகின்றது.”
“நாம் வாழும் பரிமாண எல்லைகளுக்கு அப்பால் தமது இருப்பை நிறுவியவர்களால் அல்லது எமது பிரக்ஞை வியாபித்துள்ள பரிமாணங்களை கட்டுப்படுத்தக்கூடியவர்களால் எமது நிதர்சனம் திரிபுபடுத்தப்படக்கூடிய வாய்ப்புண்டு. அந்தவகையில் அவர்களால் ஏற்படுத்தப்படும் மாய உலகை நாம் நிதர்சனமாக கருதும் வாய்ப்புமுள்ளது. எனவே இவ்வாறான அபத்தங்களை தவிர்த்துக்கொள்வதற்கு நாம் பல பரிமாணங்களில் வியாபிக்கக்கூடிய பிரக்ஞையை (multi-dimensional consciousness) கொண்டிருக்க வேண்டும். அதன்போது ஒவ்வொரு பரிமாணநிலைகளிலும் நாம் எவற்றை நிதர்சனமாக கருதுகின்றோம் என்பது பற்றி ஒரு தெளிவிருக்கும்.” என்று பல ஆயவாளர்கள் தெருவித்த கருத்தாக அந்த செய்தி தொடர்ந்து சென்றது.
பொதுவாக கோபி தான் அறிந்துகொண்ட புது விடயங்களை என்னிடமே முதலில் பகிர்ந்து கொள்வான். அது தொடர்பாக நாங்கள் பல மணிநேரங்கள் விவாதிப்பதுமுண்டு. ஆனால் இன்று அவன் காட்டிய செய்தி எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை.
கோபியை சற்றுக் குழப்பத்துடன் பார்த்து “எனக்கு இச்செய்தி சரியாக விளங்கவில்லை” என்றேன்.
“எனக்கும் முதலில் சரியாக விளங்கவில்லைதான். இரண்டு தரம் திருப்பத்திருப்ப பார்த்த பின்னர்தான் நானும் புரிந்துகொண்டேன்” என்றான் கோபி.
மேலும் தொடர்ந்த அவன் “அதில் கூறப்பட்டுள்ள விடயத்தை சுருக்கமாகச் சொன்னால், உண்மை எது என்பதை உணரக்கூடிய எமது அறிவு நாம் வாழும் பரிமாணம் சார்பானது. அதாவது நாம் முப்பரிமாண எல்லைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றோம். நமக்கு தோற்றமளிக்கும் நமது இவ்வுலகும் வாழ்க்கையும் நான்காவது, ஐந்தாவது அல்லது அதற்கு மேற்பட்ட பல பரிமாணங்களில் வாழ்பவர்களுக்கு ஒரு போலியான விடயமாகவே தோற்றம் பெறும். அதேநேரம் அவர்கள் வாழும் உலகம் அவர்களுக்கு உண்மையானதாக தோற்றமளிக்கும். அத்தோடு எம்மைவிட மேலான பரிமாணங்களில் வாழ்பவர்கள் எமது பரிமாணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றவர்களாக இருப்பார்களானால், அவர்களால் நாம் உண்மையென்று கருதும் இவ்வுலகில் நமக்கே தெரியாமல் பல மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புமுள்ளதாகவே அந்த செய்தி குறிப்பிடுகின்றது.” என்று கோபி அதற்கு சிறு விளக்கம் கொடுத்தான்.
“எமது நிதர்சனத்தை வேறு பரிமாணத்தில் வாழ்பவர்கள் கட்டுப்படுத்துவது இருக்கட்டும், அதற்கு முதல் நிசர்சனம் என்றால் என்ன என்று நீ கருதுகிறாய்?” என்று நான் கேட்டேன்.
“இது ஒரு நல்ல கேள்வி, ஆனால் இதற்கான பதில் கொஞ்சம் சிக்கலானது.” கோபி சற்று யோசித்தவாறு பதிலளித்தான்.
“என்ன சிக்கல்” நான் ஆவல் மேலிட்டவனாகக் கேட்டேன்.
“அதை சற்று எளிமையாக கூறுவது என்றால்; உண்மையில் முழுமையான நிதர்சனம் (Absolute reality) என்பது என்றுமே மாற்றமடையாத ஒரு விடயம். அது ஒரு மாறிலி. அது எல்லாவற்றும் அப்பாற்பட்டது. ஆனால் நாம் கருதும், நமக்கு தோற்றமளிக்கும் நிதர்சனம் என்பது எமது ஐம்புலன்களினால் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எமது மூளை எமக்கு தெரிவிக்கும் விடயம். அது எமது மூளை அல்லது எமது அறிவுசார்ந்த நிதர்சனம் (Relative reality). இவை இரண்டுக்குமிடையே பாரிய வேறுபாடு உள்ளது.”
“என்ன வேறுபாடு” நான் குறுக்கிட்டேன்.
“நாம் எமது புலன்களினூடாக பெறப்பட்டு பின்னர் எமது மூளையால் பகுப்பாய்வு செய்யப்பட்டு உணரும் தகவல்களை அடிப்படையாக வைத்தே வாழும் சூழல் தொடர்பாகவும் அதில் எமது அனைத்து செயற்பாடுகள் தொடர்பாகவும் முடிவுகளை மேற்கொண்டு எமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றோம் இல்லையா? அப்படியிருக்கையில் எமது புலன்களினால் நாம் பெற்றுக்கொள்ளும் தகவல்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை? அல்லது மூளை அவற்றினூடாக முழுமையான நிதர்சனத்தின் எத்தனை சதவீகிதத்தை கிரகித்துக்கொள்கின்றது என்பது தொடர்பாக நாம் யோசித்துப்பார்த்ததுண்டா?” என்று கேட்ட கோபியின் பேச்சில் ஒரு வேகம் தெரிந்தது.
“அப்படியென்றால் நமது புலன்களால் நாம் பெறும் தகவல்கள் முழுமையற்றவையா?” என்றேன் நான் சற்று சந்தேகத்துடன்.
“நிச்சயமாக, நமது ஐம்புலன்கள் அனைத்தும் தமது சக்திக்குட்பட்ட தகவல்களையே சூழலில் இருந்து பெற்று மூளைக்கு அனுப்பும். அதனையே மூளை தரம்பிரித்தறிந்து உணர்ந்துகொள்கின்றது. எனவே அத்தகவல்களின் அடிப்படையில் எம்முன் விரியும் உலகையே நாம் நிதர்சனம் என்று நம்புகின்றோம். ஆனால் அது உண்மையில் நமது புலன்கள் ஊடாக நம்முன் விரியும் அறிவுசார்ந்த நிதர்சனம் மட்டுமே. எம்மால் அந்த முழுமையான நிதர்சனத்தை இப்புலன்கள் கொண்டு முற்றிலும் அறியமுடிவதில்லை.
“எப்படி உன்னால் நமது புலன்களின் ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டவை என்று கூறமுடியும்?” நான் மேலும் கோபியை தூண்டினேன்.
“இப்போது உதாரணத்திற்கு எமது செவிப்புலனை எடுத்துக் கொண்டால் அதனால் 20Hz – 20000Hz உட்பட்ட அதிர்வெண்களையுடைய ஒலிவடிங்களையே கிரகித்துகொள்ள முடியும். அந்த அதிர்வெண்களுக்கப்பால் என்ன நடந்தாலும் எம்மால் எதனையும் கேட்க முடியாது. அதேபோல் நமது பார்வைப்புலத்தினால் ஏழு நிறங்களை மாத்திரமே பிரித்தறிய முடிவதுடன் 0.1s க்குள் தோன்றி மறையும் எந்த விம்பங்களையும் விழித்திரையில் பதிக்கமுடிவதில்லை. இவ்வாறு எமது ஒவ்வொரு புலனுக்குரிய ஆற்றலும் ஏதோவொருவகையில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. அதைப் பற்றியே இன்னும் நிறைய கதைக்கலாம். ஆனால் அது இப்போது எமக்கு அவசியமில்லை. எனவே இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல்களையுடைய புலன்களினூடு தகவல்களை பெறும் எமது மூளை முழுமையான நிதர்சனத்தை ஒருபோதும் முற்றுமுழுதாக உணருவதில்லை. அத்தோடு இவ்வாறான அரைகுறை புலனறிவுகளினூடாக எமக்கு முன் விரியும் உலகம் உண்மையான உலகத்திலிருந்து முற்றிலும் திரிபடைந்ததாக அல்லது மாறுபட்டதாகக்கூட இருக்கலாம்”.
“அப்படியென்றால் எமது அறிவுசார்ந்த நிதர்சனம் என்பது ஒரு மாயையா?” நான் குழப்பத்துடன் கேட்டேன்.
“அப்படித்தான் கூறவேண்டும். ஏனென்றால் நமக்கு முன் விரியும் இந்த அறிவுசார்ந்த நிதர்சனம் முழுமையற்றது என்பதை ஒருபோதும் நாம் உணருவதில்லையே. அப்படி உணராதவரை அது உண்மையில் மாயையே!” கோபி தீர்க்கமாகப் பேசினான்.
“அப்படியென்றால் அந்த முழுமையான நிதர்சனத்தை நாம் எப்படி உணர்ந்துகொள்வது?”
“எல்லோராலும் அதனை அத்தனை இலகுவாக உணர்ந்துகொண்டுவிடமுடியாது. அதனை இலகுவாக உணரும் நிலை ஒன்று ஏற்படுவதற்கு நமக்கு மேலும் சில புதிய புலனறிவுகள் தேவைப்படலாம். அல்லது தற்போது நமக்குள்ள புலன்கள் மேம்படுத்தப்படவேண்டும். அது நமது பரிணாமவளர்ச்சியினூடாக சிலவேளை சாத்தியப்படலாம்.” கோபி மேலும் எனது ஆர்வத்தை தூண்டினான்.
“அப்படியென்றால் நமது மூளை பரிணாம வளர்ச்சியடையும்போது நாம் காணும் அறிவுசார்ந்த நிதர்சனமும் மாற்றமடையுமா?”
“ஆமாம். நிச்சயமாக மாற்றமடையும். நான் இன்று உணரும் இதே நிதர்சனத்தையே பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோற்றம் பெற்ற எமது மூதாதையர் உணர்ந்திருப்பார்கள் என்று கூறுவதிற்கில்லை. அவர்களுடைய மூளையைவிட நாம் நுண்ணறிவிலும் பருமனிலும் பாரிய வேறுபாட்டினையுடைய மேம்பட்ட மூளையை கொண்டிருக்கின்றோம். அது சம்பந்தமாக நாம் முன்னர் ஒருபோது விவாவித்தும் இருக்கின்றோம் இல்லையா?”
“ஆமாம் நினைவிருக்கின்றது.” என்றேன் நான்.
“எனவே எமது மூதாதையர் உணர்ந்த நிதர்சனம் நிச்சயமாக எம்முடைய அறிவுசார் நிதர்சனத்திலிருந்து வேறுபட்டதாகவே இருந்திருக்கும். அதுபோலவே எமது அடுத்தடுத்த தலைமுறைகள் உணர்ந்துகொள்ளும் நிதர்சனம் நாம் இன்று காணும் நிதர்சனத்திலிருந்து நிச்சயம் வேறுபட்டதாக இருக்கும் என்பதோடு அந்த முழுமையான நிதர்சனத்தை நோக்கி நகருவதாகவும் இருக்கலாம்.” என்று கோபி என் சிந்தனையோட்டத்தை மேலும் தூண்டினான்.
“அப்படியென்றால் இந்த அறிவுசார்ந்த நிதர்சனம் தனித்தனி மனிதர்களுக்கிடையிலும் வேறுபாட்டை கொண்டிருக்குமா?”
ஆமாம். ஆனால் அந்த வேற்றுமைகள் சாமான்யர்களுக்கிடையில் மிகச்சிறியதாகவும் சாமான்யர்களுக்கும் மேதைகளுக்குமிடையில் அதைவிட மிக அதிகமாகவும் சாமான்யர்களுக்கும் ஞானிகளுக்கும் இடையில் ஒப்பிடமுடியாத வேற்றுமைகளை கொண்டதாகவும் இருக்கும். அது அவரவரது நுண்ணறிவினையும் சிந்தனையோட்டத்தையும் சார்ந்ததாகவே இருக்கும்.
“எப்படி எனக்கு விளங்கவில்லை?”
“உதாரணத்திற்கு இருபதாம் நூற்றாண்டின் மேதையாகக் கொள்ளப்படும் ஐன்ஸ்ரின் உணர்ந்த அறிவுசார் நிதர்சனம் இன்னும் பலருக்கு ஒரு புரியாத புதிராகத்தானே இருக்கின்றது. இல்லையா?” என்று கேட்டான் கோபி.
“ஆமாம், இப்போது எனக்கு விளங்குகின்றது. சரி அது இருக்கட்டும். ஆனால் எமது புலனறிவை செயற்கையாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மூலம் மேம்படுத்த முடியாதா?
“முடியும். ஆனால் எமது விஞ்ஞானக் ஆராய்ச்சிகள் எமது அறிவுசார்ந்த நிதர்சனத்தை மையமாக வைத்தே தனது ஆய்வுகளை மேற்கொள்கின்றது. அதனால் அவை உருவாக்கும் கருவிகளும் எம்மை மேலும் அந்த போலியான அறிவுசார் நிதர்சனதினுள்ளேயே அமிழ்த்தும் தன்மையை கொண்டவையாக இருக்கும். உண்மை எதுவென்பதை அறிவதற்கு பெரும் முட்டுக்கட்டையாகக் இருக்கும். இதற்கு ஒரு சிறிய உதாரணமாக அண்மையில் கூகிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கூகிள் கண்ணாடிகளைக் கொள்ளலாம். இவ்வாறான மேம்பாடுகள் முழுமையான நிதர்சனத்தை நாம் அறிவதற்கு தடைகளாக இருப்பதோடு எமது உண்மையை அறிவதற்கான தேடலை திசைதிருப்பக்கூடியவை. எதற்கும் அதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.”
“அது ஒரு வித்தியாசமான பார்வை. சரி அப்படியென்றால் அந்த முழுமையான நிதர்சனத்தை உணந்தவர்கள் யாராவது இருக்கின்றார்களா?” என்று நான் கேட்டேன்.
“அவர்களைத்தான் நாம் ஞானிகள் என்று கூறுகின்றோம். அவர்களில் பலர் அதைப்பற்றி அதிகம் கதைக்க விரும்புவதில்லை. ஏனெனில் அதனை வார்த்தைகளால் சொல்லி விளக்கமுடியாது எனவும் அதை அவரவர்கள் தனித்தினியே உணர்ந்தே அறியவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.”
“அந்த ஞானிகள் உணர்ந்தது முழுமையான நிதர்சனம்தான் என்று எப்படிக் கூறமுடியும்?” என்றேன் நான்.
“அவர்கள் உணர்ந்தது முழுமையான நிதர்சனம்தானா என்று கேள்வி கேட்பதற்கு முதல் அவர்கள் உணர்ந்த அந்த ஞானத்தை நாமும் உணரவேண்டும். அல்லது உணரமுயற்சிக்க வேண்டும். அதுவரை எம்மால் அது பற்றி விமர்சிக்க முடியாது. அப்படி விமர்சிக்க முற்படுவது இந்த பிரபஞ்சத்திற்குள் இருந்துகொண்டு அதன் வடிவம், தோற்றம் தொடர்பாக ஆராயமுனையும் விஞ்ஞானிகளின் குருட்டுத்தனமான முயற்சி போன்றே அது இருக்கும். வெறும் அனுமானங்களே பதிலாக எஞ்சும் என்பதுடன் அதுதொடர்பான தத்துவார்த்த வாதங்கள் அக்கருத்தியலின் சிக்கல்த்தன்மையை மேலும் அதிகரிக்கும்.” கோபி ஞானி போன்று பதிலளித்தான்.
“அதுவும் உண்மைதான். ஆனால் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் சற்று வித்தியாசமானதாக இருக்கின்றதே. அதில் நிதர்சனங்கள் பரிமாணத்துடன் மாற்றமடைவதாக கூறப்பட்டுள்ளதே…” நான் இழுத்தேன்.
“பரிமாணம் எனக்குறிப்பிடப்படுபவை நான் வாழும் தளத்தினையும் அதன் எல்லைகளையும் அல்லது அத்தளத்திற்குரிய விதிமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. பரிமாணத்தின் கீழ்நிலைகளில் இருப்பவர்களின் புலன்களுக்கான எல்லைகள் அல்லது ஆற்றல்கள் மிகக் குறுகியதாக இருப்பதுடன் மேல்நிலைகளில் இருப்பவர்கள் தமது ஆற்றல்பெற்ற புலனறிவுகளால் முழுமையான நிதர்சனத்தை எம்மைவிட அதிகளவில் நெருங்கியிருப்பவர்கள். அவர்களது ஆற்றல்கள் சிலவேளைகளில் எமது தளத்தின் விதிமுறைகளை திரிபுடுத்தக்கூடியதாகவும் இருக்கும். அப்போது நமது அறிவுசார் நிதர்சனமும் மாற்றமடையும் அல்லது திரிபுபடும். எனவே எமது அறிவு அல்லது பிரக்ஞை இந்த பரிமாண எல்லைகளை கடந்து இருக்கும்போது அல்லது ஞானி போன்று முழுமையான நிதர்சனத்தை உணர்ந்திருக்கும்போது கீழ்நிலைகளில் நாம் நிதர்சனமாக கருதுபவை அல்லது அதில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் அனைத்தும் வெறும் மாயையாகவே தோன்றும். அவற்றால் நாம் பாதிக்கப்படபோவதில்லை. எந்த அபத்தங்களும் ஏற்படாது.” என்று கூறி கோபி லேசாக சிரித்தான்.
“உண்மைதான். இன்றைய கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக இருந்ததது. இதனால் எனது அறிவுசார் நிதர்சனமும் சற்று முழுமையடைந்திருக்கிறது போல் உணர்கின்றேன். பின்னர் சந்திப்போம் நண்பா” என்று கூறி நான் விடைபெற்றேன்.
- முள்ளாகும் உறவுகள்
- சங்கர் தயாளின் “ சகுனி “
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31
- உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்
- நினைவுகளின் சுவட்டில் – 90
- சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்
- எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)
- மனநல மருத்துவர்
- முள்வெளி அத்தியாயம் -14
- கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)
- கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)
- பழையபடி மரங்கள் பூக்கும்
- திருக்குறள் விளம்பரக்கட்டுரை
- திருடுப் போன கோடாலி
- குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்
- தப்பித்து வந்தவனின் மரணம்.
- துருக்கி பயணம்-7
- தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !
- மஞ்சள் கயிறு…….!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18
- நினைவுகள் மிதந்து வழிவதானது
- காசி
- இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
- சைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி
- குரோதம்
- நினைவு
- “காலம் தீண்டாத கவிஞன்…….கண்ணதாசன்”
- “செய்வினை, செயப்பாட்டு வினை“
- பஞ்சதந்திரம் தொடர் 49
- நான் ‘அந்த நான்’ இல்லை
- நீட்சி சிறுகதைகள் – பாரவி
- நிதர்சனம் – ஒரு மாயை?
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து
- இசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்
- அவனுடைய காதலி
- எனது வலைத்தளம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58
- கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )
- எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2