சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்

author
2
0 minutes, 5 seconds Read
This entry is part 6 of 43 in the series 24 ஜூன் 2012

ஆதி இராஜகுமாரன், மலேசிய “நயனம்” வார இதழின் ஆசிரியர்
(“பாப்பா பாவலர்” என அறியப்படும் மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் 75 வயதை எட்டியுள்ளார். அவருடைய வாழ்வை நினைவு கூரும் கட்டுரை)

தலைமுறைகள்தோறும் தமிழே வாழ்வு என்று தனித்து நிற்கும் இலட்சியப் புதல்வர்களைப் பெற்ற தமிழன்னையின் ஆயிரமாயிரம் தமிழ்ப்புதல்வர்களில் ஒருவர் என்று, மலேசியாவில் பெருமையோடு சொல்ல வேண்டியவர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள். எளிய குடும்பத்தில் தோன்றி, எளிமையான வாழ்க்கையை வகுத்துக் கொண்டு தமிழுக்கும் தமிழர்க்கும் பகுத்தறிவுக் கொள்கை வழி நின்று தொண்டாற்றி வருகிறார் பாப்பாவின் பாவலர், கவிஞர், தமிழறிஞர் என்று நம் அனைவராலும் பாராட்டப்பெறும் முனைவர் முரசு நெடுமாறன்.  மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கேரி தீவில் இராசகிள்ளி சுப்புராயன் – முனியம்மையாரின் திருமகனாய் 1937-இல் தைத்திங்கள் முதல் நாளில் பிறந்தவர். இராகவன், பன்னீர்செல்வம் எனும் இரு தம்பிகள் உடன் பிறந்தவர்கள்.  3.7.1960-இல் திருவாட்டி சானகி என்ற மதியை மணம் புரிந்தார். முத்தெழிலன், அமுது, இளவரசு, அல்லிமலர் ஆகிய நான்கு மக்கள்.

தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்று ஐந்தாம் படிவம் முடித்து ஆசிரியர் பயிற்சி பெற்று கேரி தீவில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் பணியாற்றி 1992-இல் பணி ஓய்வு பெற்றார். தமிழ்மணிப்பட்டயம்,  இளங்கலை இலக்கியப் பட்டம், 1992-இல் முதுகலைப் பட்டம், புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் என்று உயர் கல்வித் தகுதிகளை விடாமுயற்சியால் வளர்த்துக் கொண்டார். உள்நாட்டு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகவும் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

கல்வியமைச்சின் புதிய கலைத்திட்டப் (KBSR) பாடங்களைப் புதிய உத்திகளில் (முத்தமிழ்க் கலவையாக) எழுதியுள்ளார். மலேசியக் கல்வியமைச்சு 1970-களின் இறுதியில் தமிழுக்குப் புதிய கலைத்திட்டம் (syllabus) வகுக்கத் திட்டமிட்ட பொழுது, அழைப்பை ஏற்று அதனில் இணைந்து பணியாற்றியவர். புதிய புதிய உத்திகளில் எண்ணற்ற துணைப் பொருள்கள் (Teaching aids) உருவாக்கி இத் துறையில் ஒரு முன்னோடியாய்த் திகழ்ந்தவர். பள்ளிப்பணிகள் மட்டுமன்றி தேர்வெழுதும் 3, 5, 6-ஆம் படிவ மாணவர்க்கு இலவயமாக 1980-ஆம் ஆண்டு முதல், தொண்டு மனங்கொண்ட ஆசிரியர் பலரின் துணையொடு, தமிழ்மொழி, தமிழிலக்கியப் பாடங்களுடன் பிற பாட வகுப்புகளும்  பயிலரங்குகளும் சிறப்பு வகுப்புகளும் நீண்டகாலம் தொடர்ந்து நடத்தியவர். 1978 முதல் 95 வரை (தொடர்ந்து 18 ஆண்டுகள்) கிள்ளான் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த தொடக்க, இடை, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கல்வி, கலை, இலக்கிய, பண்பாட்டு அடிப்படையில் ஒன்றிணைத்து, ‘மாணவர் பண்பாட்டு விழா’வைத் தலைமைப் பொறுப்பேற்று நடத்தினார். கல்வி ஒலிபரப்புத் துறையில் 1966 முதல் 30 ஆண்டுகள் தொடர்ந்து பகுதிநேரக் கலைஞராய்ப் பணியாற்றி, பாடல், கதை, நாடகம், மொழிப்பாடம், சிறப்பு நிகழ்ச்சிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட படைப்புகள் வழங்கியுள்ளார்.

‘சங்க இலக்கிய விருந்து’ என்ற தலைப்பில், 60 குறுந்தொகைப் பாக்களைத் தெரிவுசெய்து, அவை எளிதில் விளங்கும் வண்ணம் நாடகங்களாக எழுதிக் கலைஞர்களுடன் சேர்ந்து வானொலியில் நடித்தார். முனைவர் முரசு அவர்கள் எழுதத் தொடங்கிய ஆண்டு 1958. முதன் முதலில் எழுதியது சிறுவர் கவிதை.  மிகுதியாக எழுதியவையும் கவிதையே. அடுத்துக் கட்டுரை, நாடகம், கதை (குறைவே).  இதுவரை தோராயமாகப் படைத்தவை 2500 கவிதைகள் (பெரியவர்க்கு 1000, சிறுவர்க்கு 1500). வானொலி, வகுப்பறைகளுக்கு நன்னெறி, மொழிப்பாட விளக்கமாக 700 சிறுவர் நாடகங்கள்; எழுதி, இயக்கி, உருவாக்கி மேடையேற்றிய சிறுவர், இளைஞர், சமுதாய நாடகங்கள் 50 என இவரது படைப்புலகம் விரிவானது.

மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள்  எழுதி இயக்கி உருவாக்கிய தோடு அவற்றில் சிறப்பாக நடித்துமிருக்கிறார். ஒருமுறை கடுமையான நரம்புத் தளர்ச்சியால் தலை நிலை கொள்ளாமலும் சரியாக நடக்க முடியாமலும் துன்புற்ற ஒருவரின் உண்மைக் கதையை எழுதி (‘வாழ்க்கைப் பயணம்’), தாமே தலைமைக் கதை மாந்தராய் மிக மிக இயல்பாக நடித்துப் புகழ்பெற்றார்.

தொடர்ந்து பாரதியார் நூற்றாண்டு விழாவில் நடத்தப்பெற்ற ‘பாஞ்சாலி சபதம்’ நாடகத்தில், (கதைநடத்தும்) பாரதியாராகத் தோன்றி, பொருத்தமான தோற்றப் பொலிவொடு நடித்தும் கவிதைகளை உணர்ச்சிப் பாங்கொடு வழங்கியும் உயிர் கொடுத்து, சமுதாயத்தின் உயர்நிலைப் பெருமக்களின் பாராட்டைப் பெற்றார். மாணவர்களைக் கொண்டு வில்லுப் பாட்டு, கதைஉரை (கதாகாலட்சேபம்) போன்ற நிகழ்வுகளையும் நடத்தியுள்ளார்.

1969-இல் ‘இளந்தளிர்’ என்ற சிறுவர் கவிதை நூல் வெளியிட்டார். 25க்கும் மேற்பட்ட சிறுவர் பாட்டு, கதை, கட்டுரை நூல்கள் வெளிவந்தன.

தமது 15-ஆம் அகவை முதலே தேடித் திரட்டிப் பாதுகாத்து வந்த (40 ஆண்டுகளுக்கு மேல்) மலேசிய, சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைகளைத் தக்கார் துணையுடன் வகுத்தும் தொகுத்தும், ஆய்ந்தும், கவிதைகளின் பின்புலம் எழுதியும், மலேசிய, சிங்கப்பூர்த் தமிழர் வரலாறுகளை எழுதிச் சேர்த்தும் 1080 பக்கங்களில் உருவாக்கி மிக உயரிய பதிப்பாய் வெளியிட்ட ‘மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’, இருநாடுகளின் 254 கவிஞர்களையும், அவர்தம் கவிதைகளையும் உலக அரங்கில் அறிமுகப்படுத்திய நிலையான ஆவணமாகும்.  அப் பெருந்தொண்டைப் போற்றும் வகையில் தமிழக அரசு 1998-இல் இவருக்கு உயரிய ‘பாவேந்தர் பாராதிதாசன்’ விருது வழங்கிப் பாராட்டியது. இவ் விருதைப் பெற்ற முதல் அயலகத் தமிழர் இவரே.

இவர் எழுதிய, ‘மலேசியத் தமிழரும் தமிழும்’ என்றநூல் (2007), உலக அளவில் மலேசியத் தமிழர் வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.  தம் குடும்பப் பிள்ளைகளையும் நண்பர்கள் வீட்டுப் பிள்ளைகளையும் கொண்டு உருவாக்கிய ‘பாடிப்பழகுவோம்’ 1, 2 ஆகிய குறுவட்டுகள், தமிழ்க்குழந்தை இலக்கியப் பல்லூடகப் படைப்புகளுக்கு ஒரு முன்னோடி. தமிழ் மொழி, தமிழர் நலம் பாதுகாக்க, செழிக்கத் தொண்டாற்றுவதையே தம் வாழ்வின் ஒரே இலக்காகக் கொண்டுள்ள முனைவர் முரசு அவர்கள், சமுதாயப் பணிகளிலும் பங்காற்றி இருக்கிறார். கேரி தீவில் 1953 முதல் 1979 வரை பல்வேறு நிலைகளில் சமுதாயத் தொண்டாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

தோட்டப்புறங்களில் நாடகங்கள் எழுதி, நடித்துத் தொழிலாளர்கள் எழுச்சிபெறத் தூண்டியிருக்கிறார். தமிழர் திருநாள் விழாக்கள் நடத்திக் கலை இலக்கிய, பண்பாட்டு உணர்வுகளை வளர்த்துள்ளார். தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குப் பேராதரவு தந்து, அது தொடர்பான கூட்டங்களிலும் விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார். அரசியல் கட்சியான ம.இ.கா.வில் இணைந்து 1963-ல் இருந்து 1979வரை பல சேவைகள் புரிந்துள்ளார்.  தோட்டத் தொழிலாளர் வாழ்விடச் சுற்றுச்சூழல் மேம்படவும் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நிலம்பெறவும் அவர்களுக்குக் ‘கம்போங் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம்’ எனும் சிற்றூர் அமையவும் முன்னின்று செயல்பட்டார்.

சென்னை வானொலிச் சிறுவர்சங்கப் பேரவையின் ‘பாப்பாவின் பாவலர் விருது’ (1976), மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘செந்தமிழ்செல்வர் சி.வீ.குப்புசாமி விருது’ (1986), தமிழக அரசின் உயரிய விருதான ‘பாவேந்தர் பாரதிதாசன்’ விருது (1998), சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ‘தமிழவேள் விருது’ (1998), உலகத் தமிழாசிரியர் மன்ற மலேசியச் செயலகம் வழங்கிய ‘முத்தமிழ் அரசு’ விருது (2002), கண்ணதாசன் அறவாரியத்தின் ‘கண்ணதாசன் விருது’ (2003), அறவாணர் அறக்கட்டளையின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ (2004), கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் வழங்கிய ‘பாராட்டுக் கேடயம்’ (2009), கோலகிள்ளான் திருக்குறள் மன்றம் அதன் பொன்விழா ஆண்டில் வழங்கிய ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’(2010), ‘தமிழ்ச்சீலர்’ விருது, ஈப்போ தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்ட ‘தக்கார்’ விருது போன்ற பல விருதுகளும்  கேடயங்களும் பெற்றுள்ளார். பாரிசில் நடந்த 11-ஆம் உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டில் இவருக்குக் ‘கவிதைக் களஞ்சியக் கோன்’ எனும் விருது வழங்கப்பட்டது (2011).

மாணவர்க்குத் தமிழ் இலக்கிய, யாப்பிலக்கணச்சிறப்பு வகுப்புகள் கணினிப் பின்னணியுடன், பல்லூடக முறையில் நடத்துகிறார்; வழிகாட்டிப் பயிலரங்குகளை இலவயமாக நடத்தி வருகிறார்.
மலேசிய வானொலியில் (மின்னல் எப்.எம்) சங்க ‘இலக்கிய விருந்’தென்னும் தலைப்பில் ஒலிபரப்பான 60 ‘குறுந்தொகை நாடகங்க’ளைப் பல்வண்ண அமைப்புடனும் ஆங்கில மொழி பெயர்ப்புடனும் உயரிய நூலாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார்.

எளிமையான தோற்றம், எளிமையான இயல்புகள், எளிமையான வாழ்க்கை என்று தாம் வகுத்துக் கொண்ட வாழ்க்கைப் பாதையில் உயர்ந்த இலக்குகளை வெற்றி கொண்டவராக விளங்குகிறார். சமுதாயத்தின் பல்வேறு பாராட்டுதல்களையும் விருதுகளையும் பெற்றுவரினும், தம்மை ஓர் எளிய தொண்டராகவே கருதி வாழ்ந்து வருகிறார் என்பதே இவரது தனிப்பெருமை.

இவர் வாழ்வு கல்வித் தொண்டு, இலக்கியப் படைப்பு, ஆய்வு, கலை ஈடுபாடு, இயக்க நடவடிக்கை, சமுதாயப்பணி என ஆழ்ந்து அகன்று நடைபோட்டு வருகிறது.

Series Navigationநினைவுகளின் சுவட்டில் – 90எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    It is heartening to see MALAYSIA NAYANAM editor ATHI. RAJAKUMARAN introducing MURASU NEDUMARAN to the Tamils of the World through THINNAI As seen in the above article, Murasu Nedumaran is a great literary figure in Malaysia. His contributions to Malaysian Tamil Literature,Poetry and Drama are immense. His concern on students to love Tamil and his efforts to make them excel in studies is commendable. He has been rightly honoured for his untiring literary and social achievements as seen from the number of awards he has received. It is a pleasure to see ATHI. RAJAKUMARAN, also a literary figure and Editor of popular NAYANAM Weekly to introduce MURASU NEDUMARAN in such a glorious manner!…Dr.G.Johnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *