பஞ்சதந்திரம் தொடர் 49

This entry is part 33 of 43 in the series 24 ஜூன் 2012

பாம்பின்மேல் சவாரி செய்த தவளைகள்

ஒரு இடத்தில் மந்தவிஷன் என்றொரு கருநாகம் இருந்தது. அது வயதான பாம்பு. ‘’நான் சுகமாக வாழ்வதற்கு வழியென்ன?’’ என்று அது எண்ணிப்பார்த்தது. பிறகு, தவளைகள் நிறைய வசித்த ஒரு குளத்துக்கு அது போயிற்று. வாழ்க்கையில் வெறுப்படைந்தது போல் அது பாசாங்கு செய்தது.

அம்மாதிரி காத்து நிற்கையில், நீர் ஓரத்துக்கு வந்த ஒரு தவளை அதைப் பார்த்து, “மாமா, முன்போல் நீங்கள் ஏன் இரைதேடித் திரியவில்லை?’’ என்று கேட்டது. அதற்குப் பாம்பு, ‘’நண்பனே, நான் துரதிர்ஷ்டம் பிடித்தவன். இரையில் எனக்கு விருப்பம் ஏன் உண்டாகும்? காரணத்தைக் கேள். இன்று சாயந்திரம் நான் இரை தேடித்திரியும் போது ஒரு தவளையைக் கண்டேன். அதைப் பிடிக்கத் தாயாரானேன். அது என்னைப் பார்த்துவிட்டு மரண பயமடைந்து, ஜபங்கள் செய்து கொண்டிருந்த சில பிராம்மணர்களின் மத்தியிலே போய் நுழைந்துகொண்டது. அது எந்தத் திசையில் போயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. குளக்கரையோரத்தில் ஒரு பிராம்மணப் பையனின் கால்கள் நீரில் சிறிது மூழ்கியிருந்தன. அவனுடைய கட்டைவிரலைத் தவளை என்று நினைத்துக்கொண்டு நான் கடித்து விட்டேன். உடனே அந்தப் பையன் இறந்துபோய்விடான். அவனுடைய தகப்பனார் துக்கமடைந்து, ‘நீசனே, நிரபராதியான என் மகனை நீ கடித்த தோஷத்திற்காக நீ தவளைக்கு வாகனமாக ஆகி அவை மனதுவைத்துக் கொடுக்கிறதைத் தின்று நீ ஜீவிப்பாயாக!’ என்று என்னைச் சபித்துவிட்டார். ஆகவே, உங்களுக்கு வாகனமாக நான் இங்கு வந்திருக்கிறேன்’’ என்றது.

இந்த விஷயத்தை அந்தத் தவளை கேட்டுவிட்டு மற்ற தவளைகளிடம் போய்ச் சொல்லிற்று. அவையெல்லாம் சந்தோஷமடைந்து ஜலபாதன் என்ற தவளையரசனிடம் போய் இச்செய்தியைத் தெரிவித்தன. ‘அதிசயமாயிருக்கிறதே இது!’ என்று எண்ணியபடியே, ஜலபாதன் தன் மந்திரிகளோடு நீரிலிருந்து பரபரப்போடு வெளிவந்து கருநாகத்தின் படத்தின் மேல் ஏறிக்கொண்டது. மற்ற தவளைகளும், வயது வரிசைப்படி பாம்பின்மேல் ஏறிக்கொண்டன. கதையை வளர்ப்பானேன்? பாம்பின்மேல் இடங்கிடைக்காத மற்ற தவளைகள் அதைப் பின்தொடர்ந்து தத்திச் சென்றன. பிழைக்க வழி தேடிக்கொண்டிருந்த அந்தக் கருநாகம் பலவிதமாக நடை நடந்து காட்டியது. பாம்பின் உடலைத் தொட்டதிலே ஏற்பட்ட ஆனந்தத்தோடு தவளையரசன் சொல்லிற்று:

மந்தவிஷன்மேல் சவாரி செய்யும் நான் யானைமீதோ, குதிரைமீதோ, ரதத்தின்மீதோ, மனிதன் தூக்கும் பல்லக்கின் மீதோ செல்ல விரும்பவில்லை.

என்று, மறுநாள் கபடநெஞ்சுள்ள கருநாகம் மெல்ல மெல்லச் சென்றது. அதைக்கண்ட தவளையரசன், ‘’நண்பனே, முன்போல் எங்களை ஏன் சொகுசாகத் தூக்கிச் செல்லவில்லை?’’ என்று பாம்பைக் கேட்டது. ‘’இன்று எனக்குத் தீனி இல்லை. அதனால் உடம்பில் பலமில்லை’’ என்றது பாம்பு. ‘’நண்பா, அப்படியா? சரி, இந்தக் கீழ் ஜாதித் தவளைகளைச் சாப்பிடு’’ என்றது தவளையரசன்.

அதைக்கேட்டதும் கருநாகத்துக்கு உடலெல்லாம் புல்லரித்தது. மிகுந்த பரபரப்புடன் ‘’பிராம்மணனின் சாபமும் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. எனவே தங்களுடைய கட்டளையிலே எனக்குப் பரமதிருப்தி’’ என்றது. தங்குதடையின்றி கருநாகம் தவளைகளைச் சாப்பிட்டது. சில நாட்களிலேயே பலவானாக ஆயிற்று. மகிழ்ச்சியோடு தனக்குள் சிரித்துக்கொண்டு,

இந்த நல்ல தந்திரத்தினால் தவளைகள் எல்லாம் என்வசமாகிவிட்டன. இவை எல்லாம் எனக்கு எத்தனை நாளைக்குக் காணும் என்பது ஒன்றுதான் கேள்வி.

என்று சொல்லிக்கொண்டது. கருநாகத்தின் வஞ்சகப் பேச்சிலே ஏமாந்த தவளையரசன் எதையும் தெரிந்துகொள்ளவில்லை.
அந்தச் சமயத்தில் அங்கு மற்றொரு பெரிய கருநாகம் வந்து சேர்ந்தது. தவளைகளை ஏற்றிச்செல்லும் நாகத்தைப் பார்த்து அது ஆச்சரியமடைந்தது. ‘’நண்பனே, தவளைகள் நமக்கு இயற்கை உணவு ஆயிற்றே! அவற்றைப்போய் நீ சுமக்கிறாயே? அது நன்றாயில்லை’ என்று சொல்லிற்று. அதற்கு அந்தப் பாம்பு சொல்லிற்று:

தவளைகளைத் தூக்கிச் செல்லக்கூடாது என்பது எனக்குத் தெரிந்ததுதான். நெய்யால் குருடான பிராம்மணனைப்போல் நான் நல்ல தருணம் எதிர்பார்த்து நிற்கிறேன்.

என்று சொல்லிற்று. ‘’அது எப்படி?’’ என்று பெரிய பாம்பு கேட்க, மந்தவிஷன் சொல்லிற்று:

நெய்யால் குருடான வேதியன்

ஒரு ஊரில் யக்ஞதத்தன் என்றொரு பிராம்மணன் இருந்தான். அவன் மனைவி ஒரு வேசி. பரபுருஷனை நாடிச் செல்பவன், தன் கள்ளப்புருஷனுக்காக எப்பொழுது பார்த்தாலும் சர்க்கரையும் நெய்யும் கலந்து பணியாரம் செய்து வைத்துக் கணவனை ஏமாற்றி வந்தாள்.

ஒருநாள் கணவன் அதைப் பார்த்துவிட்டான். ‘அன்பே, நீ சமைக்கிறது என்ன? ஒவ்வொருநாளும் பணியாரத்தை எங்கே கொண்டு போகிறாய்? உண்மையைச் சொல்!’’ என்று மனைவியைக் கேட்டான். சமயோசித புத்தியுடையவள் அல்லவா அவள்? ஆகவே, பொய் சொல்லத் தொடங்கினாள். ‘’பக்கத்திலேயே அம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. அம்மனை வேண்டிப் பட்டினி விரதம் இருந்து வருகிறேன்.  பலவித பட்சணங்களை அங்கு கொண்டுபோய் நைவேத்தியம் செய்து அம்மனைச் சேவிக்கிறேன்’’ என்றாள் அவள். சொன்னபடியே, அவன் கண்ணெதிரிலேயே அவற்றை எடுத்துக் கொண்டு அம்மன் கோயிலுக்குப் புறப்பட்டுப் போனாள்.

கோயிலைடையந்த பிறகு, நதியிறங்கிக் குளித்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையே அவளுடைய கணவன் வேறு வழியாகக் கோயிலுக்கு வந்து அம்மனுக்குப்பிபின் ஒளிந்து நின்றான். குளித்துவிட்டு வந்த அந்தப் பெண் அபிஷேகம், அலங்காரம், தூபதீப நைவேத்தியங்கள் எல்லாம் செய்து அம்மனை வணங்கினாள். ‘’ஹே பகவதி! என் கணவன் குருடனாவதற்கு என்ன வழி?’’ என்று கேட்டாள். அதைக்கேட்டதும், அவள் புருஷன் தன் குரலை மாற்றிக் கொண்டு, ‘’நீ அவனுக்கு நெய்யும், நெய்யில் செய்த பட்சணங்களும் கொடுத்தால் அவன் சீக்கிரத்தில் குருடனாகிவிடுவான்’’ என்று சொன்னான். இந்த ஏமாற்றுப் பேச்சைக் கேட்ட அந்த வேசி மனைவி, தினந்தோறும் நெய்ப்பட்சணங்களைக் கணவனுக்குக் கொடுத்துவந்தாள்.

ஒருநாள் பிராம்மணன் அவளைப் பார்த்து, ‘’அன்பே, என்னால் நன்றாகப் பார்க்கமுடியவில்லையே’’ என்று சொன்னான். அதைக்கேட்ட அவள் ‘இது அம்மனின் அருள்’ என்று எண்ணிக் கொண்டாள். அதைக் கேள்வியுள்ள கள்ளப்புருஷன் இவன்தான் குருடனாகி விட்டானே. இனி என்னை அவன் என்ன செய்ய முடியும்?’ என்று எண்ணிவிட்டான்.பயமில்லாமல் ஒவ்வொரு நாளும் வரத்தொடங்கினான். ஒருநாள் ஆர்வத்தோடு அவன் வீட்டில் நுழைவதைக் கணவன் பார்த்துவிட்டான். அவனுடைய தலைமயிரைப் பிடித்து இழுத்து, அவனைத் தடியால் அடித்தான். காலால் நன்றாக உதைத்தான். பட்ட அடியிலே அந்தக் கள்ளபுருஷன் செத்துப் போனான். கணவன் தன் கெட்ட மனைவியின் மூக்கை அறுத்துவிட்டு வீட்டைவிட்டுத் துரத்திவிட்டான்.

அதனால்தான், தவளைகளைத் தூக்கிச் செல்லக்கூடாது என்பது எனக்குத் தெரிந்ததுதான்…’ என்றபடி சொன்னேன் என்றது கருநாகம். மறுபடியும் தனக்குள் சிரித்துக்கொண்டே, ‘இந்தத நல்ல தந்திரத்தால் தவளைகள் எல்லாம் என் வசமாகிவிட்டன…’ என்ற செய்யுளைத் திரும்பச் சொல்லிற்று. இதைக் கேட்விட்ட தவளையரசன் மனம் வருந்தி, ‘இதன் அர்த்தம் என்ன?’ என்று வியந்தபடியே, ‘’நண்பனே, அந்தக் கெட்ட வார்த்தைகளை ஏன் சொல்லுகிறாய்?’’ என்று கேட்டது. உடனே கருநாகம் தன் கெட்ட நோக்கத்தை மறைப்பதற்காக ‘ஒன்றுமில்லையே’ என்று பதில் சொல்லிற்று. அதன் கபடப்பேச்சை நம்பி, புத்திகெட்டுப்போன தவளையரசன், அதன் துரோக சிந்தனையை உணரவில்லை. அதிகம் சொல்வானேன்? ஒரு குஞ்சுகூட விட்டுவைக்காதபடி எல்லா தவளைகளையும் கருநாகம் தின்றுவிட்டது.

அதனால்தான் ‘காலத்துக்குத் தக்கபடி அறிவாளி நடந்துகொள்வான்…’ என்றெல்லாம் சொன்னேன்’’ என்றது ஸ்திரஜீவி மேலும் அது பேசுகையில், ‘’மந்தவிஷன் தவளைகளைத் தன் அறிவுபலத்தாலி கொன்றமாதிரியே நானும் எல்லா எதிரிகளையும் கொன்றேன்.

காட்டில் பற்றியெரியும் நீ மரத்தைச்சுட்டுப் பொசுக்கினாலும் வேரையாவது காக்கிறது. ஆற்றுவெள்ளம் குளுகுளு வென்றிருந்தாலும் மரத்தை வேரோடு பெயர்த்தெறிகிறது.

என்று சொல்லி வைத்திருப்பது சரியே’’ என்றது ஸ்திரிஜீவி. அதற்கு மேகவர்ணன், ‘’அது உண்மையே. மேலும்,

அறிவு என்ற ஆபரணம் அணிந்த பெரியோர்களிடம் இருக்கும் உயர்ந்த குணம் இதுதான் — எந்தக் காரியத்தை ஆரம்பிக்கிறார்களோ அதைக் கஷ்டத்தையும் துயரத்தையும் கண்டு கைவிடுவதில்லை.

என்று சொல்லிற்று, ஸ்திரஜீவி. ‘’அதுவும் உண்மைதான். இன்னொன்று சொல்கிறேன்.

கடன், நெருப்பு, எதிரி, நோய் & இவற்றைப பூர்ணமாக அழிக்கும்வரை அறிவாளி சும்மாயிருப்பதில்லை.

அரசே, நீர் பாக்கியசாலி. ஏனெனில், ஆரம்பித்த காரியங்களிலெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஒரு காரியத்தை வீரததைக் கொண்டு மட்டும் சாதித்துவிட முடியாது. அறிவோடு செய்கிற காரியம்தான் வெற்றியில் முடியும்.

கத்தியால் கொல்லப்பட்ட எதிரி உண்மையிலே கொல்லப்பட்டவனல்ல. புத்தியால் கொல்லப்பட்டவனே உண்மையில் கொல்லப்பட்டவன். கத்தி மனிதனின் உடலைத்தான் கொல்லும்; புத்தியோ குலத்தையும், செல்வத்தையும் புகழையும் எல்லாவற்றையும் கொல்லும்.

எனவே அறிவும் வீரமும் உள்ளவனுக்கு முயற்சில்லாமலே காரியங்கள் பலிக்கும். எப்படி என்றால்,

காரியத்தின் ஆரம்பத்தில் அறிவு விரிகிறது; எண்ணம் திடப்படுகிறது; செல்வம் தானே வந்து சேருகிறது; யோசனைகள் கிடைக்கின்றன; பலனுள்ள தர்க்கவாதம் பிரகாசிக்கிறது; மனம் உயர்ந்த நிலையை எட்டிப்பிடிக்கிறது; காரியத்தில் வெற்றி ஏற்பட்டால் மகிழ்ச்சி உண்டாகிறது.

அதைப்போலவே, நயமும் தியாக உணர்ச்சியும் வீரமும் உள்ளவனுக்கே ராஜ்யம் கிடைக்கும்.

அரசபதவியில்  ருசியுள்ளவன் தியாகமும் வீரமும் கல்வியும் நிறைந்திருப்பவனோடு சேர்ந்தால், அவன் நன்மையடைவான். அவனுக்கு நல்ல குணம் ஏற்படும். குணத்தால் தனமும், தனத்தால் புகழும், புகழால் அதிகாரமும், பிறகு ராஜ்யமும் கிடைக்கும்.

என்றொரு வாக்கு உண்டு’’ எனறது ஸ்திரஜீவி.

‘’ராஜநீதி ஒன்றே உடனே பலனளிக்கக்கூடியது. அதனால்தான் நீங்கள் சுலபகமாக நுழைந்து ஆந்தையரசனைப் பரிவாரங்களோடு அழித்துவிட்டீர்கள்’’ என்றது காக்கையரசன். ஸ்திரஜீவி சொல்லிற்று:

கொடிய நடவடிக்கையால் அடையக்கூடியதாயிருந்தாலும் முதலில் சாந்தமான வழிமுறைகளைப் பின்பற்றுவதே சரியாகும். பூஜை செய்வதற்கு முன்னால் உயரமான தடித்த மரங்களை வெட்டுவதில்லை.

முயற்சியில்லாமலே பெயலாம். சுலபத்தில் கிடைக்காது, என்றெல்லாம் எதிர்கால விஷயங்களைப் பற்றி பேசி என்ன பிரயோஜனம்?

பேச்சுக்கேற்ற செய்கை செய்யாதவனும், காரியத்தில்  துணவும், தீரமும் காட்டாதவனும், ஒவ்வொரு படியிலும் நூறு தோஷங்களைப் பார்க்கிறவனும், உலகத்தின் பரிகாசத்துக்கு ஆளாவார்கள்.

என்ற பேச்சில் விவேகம் இருக்கிறது. சிறு விஷயங்களில் கூட விவேகிகள் கவனமின்றி இருக்க மாட்டார்கள்.

‘இது அற்பமான வேலை; இதற்கு முயற்சியோ யோசனையோ வேண்டியதில்லை’ என்று அலட்சியம் செய்து  கவனமற்றிருப்பவன் பரிதபிக்கத்தக்க துயரமடைவான்.

அதுபோகட்டும். எதிரிகளை ஜெயித்துவிட்டால் என் அரசர் முன்போல் சுகமாகத் தூங்கலாம்.

பாம்பு இல்லாத வீடாயிருந்தாலும், பாம்பைக் கட்டிப் போட்ட வீடாயிருந்தாலும், அதில் ஒருவன் சுகமாகத் தூங்கலாம். ஆனால் பார்த்தபின்பு தப்பித்துச் சென்ற பாம்புள்ள வீட்டில் நித்திரை சிரமத்தோடுதான் வரும்.   பெரிய காரியத்தைச் சாதிப்பதற்கு விரிந்த முயற்சி தேவை. நயமும், சாகஸமும், காரியப்பற்றும், கவனமும் தேவை. நண்பர்களின் ஆசியும் தேவை. மானமும் ரோஷமும், முயற்சியும், பலமும் உள்ளவன் காரியத்தின் முடிவைக் காணாவிட்டால்  மனம் வருத்தமடைகிறது. அவனுக்கு நிம்மதி எது?

தொடுத்த காரியத்தை முடித்ததால் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. ஆகவே, இப்போது இந்த ராஜயத்தில் எவ்விதச் சங்கடங்களும் கிடையாது. பிரஜைகளைக் காப்பாற்றி வருவதில் தாங்கள் ஈடுபட்டுப் பிள்ளையும் பேரனும் பெற்றெடுத்துப் பரம்பரை பரம்பரையாக வெண்குடையும் சிம்மாதனமும் செல்வமும் சாயாமல் வெகுகாலம் அரசு செலுத்தி அனுபவித்து வாருங்கள்.

பரிபாலிக்கும் குணங்களோடு அரசன் மக்களைத் திருப்திப் படுத்தவில்லையானால், பெண் ஆட்டுக்குத் தாடி இருப்பது எப்படியோ அப்படியே அரசனுக்கு ராஜ்யம் இருப்பதும் அர்த்தமாயிற்று.

அறத்தில்  விருப்பமும், மறத்தில் வெறுப்பும், நீதியில் பற்றும் உள்ள அரசன், வெண்கவிகையும் சிவிகையும் கொடியும் விளங்க, வெகுகாலம் — ராஜ்யலட்சுமியை அனுபவிக்கிறான்.

என்பதை ஞாபகத்தில்  வைத்துக்கொள். மேலும், ‘இனி இந்த ராஜ்யம் நம் கையில்தான்’ என்ற நினைப்பில் கர்வமடைந்து உன்னை நாசமாக்கிக்கொள்ளக் கூடாது. காரணம், அரசமகிமை நிலையில்லாதது. மூங்கில் கழியின்மேல் ஏறுவது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் ராஜ்யலட்சுமியை அடைவது. ஒரு கணப்பொழுதில் நழுவிவிடும். அதை நிலைநிறுத்த நூறுவிதமாக முயற்சித்தாலும் நிற்காது. எவ்வளவுதான் சாந்தி செய்தாலும் நழுவிச் சென்று விடும். குரங்கைப்போல் பல புத்திகள் உடையது; அது தாமரை இலைத் தண்ணீர்போல் நிலையில்லாது உருளும்; காற்றின் அசைவைப் போல் அது சபலமுள்ளது. போக்கிரியின் சகவாசம்போல் நிலையற்றது; பாம்பைப்போல் பழகுவதற்குக் கஷ்டமானது:மாலை நேர வானத்தைப் போல  வினாடிக்கு ஒரு நிறம் கொள்வது; நீர்க்குமிழி போல் உடையக்கூடியது; மனித உடம்பைப்போல் நன்றியில்லாதது; கனவில் கண்டெடுத்த புதையல்போல் கணப்பொழுதில் கைக்கு வந்து போவது.

அரசனுக்கு ராஜ்யாபிஷேகம் நடக்கும்போதே துக்கங்களை எதிர்பார்ப்பதில் அறிவு ஈடுபட வேண்டும். அரசனுக்கு அபிஷேகம் செய்கையில் அபிஷேக நீருடன் ஆபத்துக்களும் வந்து விழுகின்றன.

ஆபத்தின் கையில் சிக்காதவன் உலகில் யாருமில்லை.

ராமன் காட்டில் அலைந்தான்; பலி பாதாளத்தில் அழுந்தினான். பஞ்சபாண்டவர்கள் காட்டிற்குச் சென்றனர்; விருஷ்ணி நாசமடைந்தான்; நளன் ராஜ்யத்தை இழந்தான்; அர்ஜுனன் நாட்டியக்காரி ஆனான்; ராவணன் வீழ்ச்சி யடைந்தான்; இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் எல்லோரும் காலவசத்தால் கஷ்டப்படுகிறார்கள். இங்கே யார் யாரைக் காப்பாற்ற முடியும்?

சுவர்க்கத்திற்குப் போய் இந்திரனின் நண்பனாக இருந்த தசரதன் எங்கே? சமுத்திரத்துக்குக் கரை கட்டிய சகரமன்னன் எங்கே? கையிலிருந்து பிறந்த பிருது எங்கே? சூரிய குமாரனான மனு எங்கே? சர்வவல்லமை படைத்த காலம் அவர்களைச் சிருஷ்டித்தது, முடித்தது.

மூவுலகையும் வென்ற மாந்தாத்ரு எங்கே? சத்யவிரதன் என்ற அரசன் எங்கே? தேவர்களின் அரசனான நகுஷன் எங்கே? சாஸ்திரங்களில் தேர்ச்சிமிகுந்த கேசவன் எங்கே? அவர்களுடைய ரதங்களும், சிறந்த யானைகளும், இந்திரனுடையது போன்ற சிம்மாதனங்களும் காலன் என்ற மகாத்மாவால் சிருஷ்டிக்கப்பட்டுக் காலத்தாலேயே அழிக்கப்பட்டன என்று நினைக்கிறேன்.

அந்த அரசன்! அந்த மந்திரிகள்! அந்தப் பெண்கள்! அந்தக் காடுகள்! அந்த நந்தவனங்கள்! அவர்களைக் காலன் கடித்தான், எல்லாம் நாசமாகிவிட்டன.

மதயானைகளின் காதுகள் அசைந்துகொண்டே யிருப்பதுபோல் சஞ்சலபுத்தியுடைய ராஜ்யலட்சுமியை அடைந்து, அறிவு ஒன்றில் மட்டும் நம்பிக்கை வைத்து, அனுபவித்து வருவாயாக!’’ என்று முடித்தது ஸ்திரஜீவி.

இத்துடன் காக்கைகளும் ஆந்தைகளும் என்ற மூன்றாவது தந்திரம் முடிவடைகிறது. இது சமாதானம் போர் முதலான ஆறு உபாயங்களைப் பற்றியது. இதன் முதற்செய்யுள் பின்வருமாறு:

ஏற்கனவே பகைவர்களாயிருந்து பின்னால் நேசம் பாராட்டுகிறவர்களை நம்பவேண்டாம்! ஆந்தைகள் கூடி வாழ்ந்த குகைக்குக் காக்கைகள் நெருப்பு வைத்து எரித்துவிட்டன.

Series Navigation“செய்வினை, செயப்பாட்டு வினை“நான் ‘அந்த நான்’ இல்லை
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *