அஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்

This entry is part 23 of 32 in the series 1 ஜூலை 2012

 


தமிழகத்தின் தொன்மையான வரலாற்றில் அரேபிய வணிகர்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.  தமிழகத்தில் முத்தும் பவளமும், பொன்னும், மணியும், அகிலும் சந்தனமும் ஏற்றுமதி செய்யப்பட்டன.  தமிழக அரேபியத் தொடர்பை “நீரின் வந்த நிமிர்ப்பரிப் புரவி’ என்ற பட்டினப்பாலைப் பாடல் சுட்டிக்காட்டுகிறது தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சோழ நாட்டின் ஆட்சிஎல்லைக்கு உட்பட்டிருந்தது. அரேபியர் சோழமண்டலக் கரையை மாபார் என்று குறிப்பிடுகின்றனர்.  கடலூர், பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், கோவளம், காயல்பட்டினம், பாண்டிச்சேரி, கீழக்கரை, தூத்துக்குடி என இதன் துறைமுகப்பகுதிகள் விரிவடைந்து செல்கிறது.  கன்னியாகுமரி தென்எல்லையாகவும், பழவேற்காடு வடஎல்லையாகவும் அமைந்திருந்தாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

தமிழகத்தின் மேற்குகடற்கரை என்பது சேர நாட்டின் பகுதியாகவும் கேரளம் சார்ந்த துறைமுகப்பட்டினங்களைக் கொண்டுள்ளதாகவும் அமையப்பெறறுள்ளது.  குளச்சல், தேங்காய்பட்டினம், விழிஞம், பூவார், கொல்லம் என இதன் பகுதிகள் அடையாளப்படுத்தப்படுவதையும் காணலாம். பாரசீக வளைகுடாவிலிருந்து வரும் வணிகக் கப்பல்களில் வெள்ளி, செம்பு, குதிரைகள் இறக்குமதி செய்யப்படுவதே பழைய வழக்கமுறையாகும். இந்தியாவின் கடற்கரைப் பட்டினங்களிலிருந்து கைத்தறி துணி மிளகு, நறுமணப்பொருட்கள், தந்தம் ரத்தினக்கற்கள், முத்து சங்குவகைகள் ஏற்றுமதி செய்யப்படுவதும், இதனை அரபு வணிகர்கள் இங்குதங்கி கொள்முதல் செய்வதும் நிகழ்ந்தது. இவ்வாறு வாணிபரீதியான தொடர்புகள் கி.பி. 1498 முடிய தமிழக  முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்ததை கவனிக்கலாம்.  போர்ச்சுக்கீசியர்களின் வருகையைத் தொடர்ந்து கடல்வழி வாணிப உரிமை முஸ்லிம் களிடமிருந்து பறிபோன சம்பவம் நடைபெற்றது.

அரபுநாட்டு வணிகர்களின் வாணிபதொடர்பின் காரணமாக மேற்கு கடற்கரைப்பகுதிகளில் வந்து தங்கியவர்கள் காலப்போக்கில் இப்பகுதி பெண்களை மணந்து கொண்டதும் புதிய குடும்பங்கள், குடியிருப்புகள் உருவானதும் உண்டு.  குறிப்பாக மாப்பிள்ளைகள் எனப்படும் கேரளமுஸ்லிம்கள் வம்சம் அரபு கேரள கலாச்சார இணைப்பின் அடையாள சந்ததிகளாக உள்ளனர்.  வெள்ளை நிறம்கொண்ட அராபியர்கள் நிறம்மங்கிய இந்திய சேரநாட்டுப் பெண்களை மணந்து, பிறந்த பிள்ளைகள் “கலாசி’ (கறுப்பும் வெள்ளையும் கலந்தது) என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.            தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இவ்வாறு அராபிய வணிகர்களாக வந்தவர்கள்  அப்பகுதி தமிழ்பெண்களை மணந்து புதிய கலாச்சார வாரிசுகளை உருவாக்கினர்.  கடல்வாணிபம் மற்றும் கடல்சார்ந்த தொழில்களோடு தொடர்புடைய இம்மக்கள் மரைக்காயர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

சோனகர்,, யவனர், துலுக்கர், மரைக்காயர்,ராவுத்தர், லெப்பை என்ற வகையிலும் தமிழ் முஸ்லிம்களின் அடையாளங்கள் தொழில் சார்ந்ததும் வெளிப்பட்டன.மிகாப் என்ற அரபுச் சொல்-ன் தமிழ்அர்த்தம் படகு என்பதாகும்.  படகில் இந்தியாவிற்கு வந்த இவர்கள் தங்களை மரகாப் என்று அழைத்தாகவும் இதுவே பின் மரக்காயர் ஆனது என்பதும் வரலாற்று குறிப்பு. கடல் வாணிபத்தில் ஏற்றம்பெற்று விளங்கியதால் மரக்கலராயர் எனப்பட்டனர் என்றும் மரக்கலம் படகைக் குறித்தும், ராயர் மன்னன் என்பதாகவும் இச் சொல்லுக்கான விளக்கம் கூறப்படுகிறது.  இதுவே மரக்காயர் என மருவி வந்ததாகவும் குறிப்பிடுவதுண்டு.

 

ராவுத்தர்கள் என்ற பெயரிலும் சிலவகை குறிப்பிட்ட முஸ்லிம்கள் அழைக்கப்பட்டார்கள்.  இந்த மரபு இன்னும் வழக்கில் உள்ளது.  இராவுத்தன் என்ற சொல்லுக்கு குதிரைவீரன் என்ற அர்த்தமும்,  அரசனுக்கு செய்தி கொண்டுசெல்லும் தூதனாக இருந்ததால் குதிரைவீரன் குதிரைப்படைகளின் தளபதிகள் கூட இப்பெயராலும் அழைக்கப்பட்டனர்.  கூடவே பாரசீக அராபிய நாடுகளிலிருந்து கப்பல்களில் குதிரைகளை விற்க கொண்டுவந்த முஸ்லிம்கள் ராவுத்தர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்ட வரலாற்றுகுறிப்பையும் காணலாம்.  தமிழகத்தின் பிரதானமான நான்குவகை படைப்பிரிவுகளில் குதிரைப்படை மிகமுக்கியமான பங்களிப்பை பெற்றிருந்தது.  பல்லவர் காலத்திலும், சோழப்பேரரசு உருவான காலத்திலும் பாண்டியப் பேரரசின் காலத்திலும் பல்லாயிரம் குதிரைகள் இறக்குமதி செய்யப்படுவதும் நிகழ்ந்துள்ளது.  இதுபோன்றுதான் வடஇந்தியாவில் சுல்தான்களின் ஆட்சியில் டில்லிஅரசின் சேனை குதிரைப்படைகளை அதிகஅளவில் கொண்டிருந்தது மேய்ச்சல் தரைகள் இன்மையால் இங்கு குதிரைகள் முதலில் வளர்க்கப்படவில்லை எனவே இன்றும் கூட இத்தகைய தொன்மைப் பண்பின் விரிவாக்கமாக சில இஸ்லாமிய ராவுத்தர் குடுப்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணமகனை அலங்கரித்து குதிரைமீது அமர்த்தி மணமகள் வீட்டிற்கு அழைத்துவரும் பழக்கம் நிலவுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இறக்குமதி செய்யபட்ட குதிரைகளை வளர்க்கவும், பழக்கவும், பயிற்சியளித்தும், உரியமுறையில் பராமரிக்கவும், சூழலுக்கு ஏற்றாற்போல் உணவுப் பழக்கத்தை பின்பற்றி குதிரைகளை பாதுகாக்கவும் தமிழ் மண்ணுக்கு வந்த அராபியர்கள் இங்குள்ள தமிழ் கலாச்சாரத்தோடு உறவுபூண்டதன் விளைவாக இந்த சந்ததிகள் ராவுத்தர்கள் என அடையாளப்படுத்தப்பட்டதான குறிப்பையும் நாம் கவனிக்க வேண்டும்.

தமிழக இஸ்லாமியர்களில் முக்கிய பகுதியாக கருதப்படுபவர்களில் லெப்பைகளும் உண்டு.  அரபு தாயகத்தின் பின்வழித்தோன்றல்களாக, அரபுமொழியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், திருக்குர்ஆனை அழகியமுறையில் ஒதத் தெரிந்தவர்களாகவும், சாதாரணமக்களுக்கு ஒதச் சொல்லிக் கொடுக்கும் உஸ்தாதுகளாகவும், பள்ளிவாசல்களில் இறைப்பணியான தொழுகையை முறைப்படுத்தி நடத்துபவர்களாகவும் இவர்களின் வாழ்க்கை முறை அமைந்திருந்தது மேலும் நெசவுத் தொழிலோடும், கைவினைத் தொழில்களோடும், விவசாயத்தோடும் நேரடியாக தொடர்பு கொண்டவர்களாகவும் லெப்பைகள் கருதப்பட்டனர்.

இவ்வாறு இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து வாழ்ந்த குடியிருப்புகள், அமைவிடங்கள் அஞ்சுவண்ணம்’ என்றும், இம்மக்கள் அஞ்சுவண்ணத்தினர் என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.  “அஞ்சுமன்’ என்ற பார்சி சொல்லுக்கு மன்றம் / குழு என்ற அர்த்தமும் உண்டு.  அஞ்சு நேரத்தொழுகையை செய்பவர்கள் என்பதால் அஞ்சுவன்னத்தினர் என்றும் அழைக்கப்படுவதான வரலாற்றுக்குறிப்பும் உண்டு. நெசவுக்கான தொழிலில் பயன்படுத்தப்படும் அஞ்சுவண்ணங்களோடு (நிறம்)இணைத்து இப்பெயர் வந்ததாகவும் ஒரு கருத்து உண்டு..மேலும் இந்து சாதீய அமைப்பின் பிராமணர்,சத்திரியர்,வைசியர்,சூத்திரர் என்பதான நான்குவர்ணங்களுக்கு உட்படாத ஐந்தாவதுவர்ணத்தாரே அஞ்சுவன்னத்தார் என்கிறபதிவும் உண்டு.

தமிழகப் பிறசமயப் பண்பாட்டில் வாழ்ந்த மக்களை இஸ்லாத்தின்பால் சமயரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் ஒன்றிணைத்தபண்பு தமிழ்பண்பாட்டு அடையாளங்களோடு இஸ்லாம் வளர வழிசமைத்தது.

Series Navigationபத்தாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழாசின்னஞ்சிறு கிளியே…!
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

2 Comments

 1. Avatar
  அ-அர்வி says:

  இப்படித்தான் மெதுவாக ஈழத்தில் ஆரம்பித்தார்கள். அது இப்போது முஸ்லீம்கள் தமிழர்களே கிடையாது, அவர்களது மொழி தனிமொழி (அர்வி) என்று வந்து நிற்கிறது.

  இப்படிப்பட்ட கற்பனையில் திளைத்த முஸ்லீம்கள் ஒருகாலத்தில் தமது தாயாதி உறவினர்களாக இருந்த தமிழர்களை சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டு செய்த கொடுமைகளுக்கும் அளவில்லாமல் போனது.

  கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களே தேவலாம் என்ற அளவிற்கு கொடுமைகளை செய்யும் அளவிற்கு முஸ்லீம்களை கொண்டு சென்றது இந்த பொய்யான அரபி மூலக்கதை.

  வந்து வாணிபம் செய்த அரபியர் மிகச்சிலரே. கடல் வாணிபம் தொன்று தொட்டு தமிழர்களிடமே இருந்தது. தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வணிகக்குழுமங்களின் புகழும், அவர்கள் சார்ந்த சரித்திரக் குறிப்புகளும் தெற்காசியா முழுவதும் கிடைக்கின்றன.

  மதம் மாறியவுடன் மொழியையும் மாற்றிக்கொள்வது இன்றும் இஸ்லாமியர்களிடையே நாம் காணும் வழக்கம். பெயர், உடை, உணவு, பேசும் விதம் (slang) என்று எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு முனுசாமி, அப்துல்லாவாகிறார். அப்துல்லாவின் அடுத்த தலைமுறை வாரிசுகள் அரபி மூலக் கற்பனையில் முழுகி தாம் அர்வி பேசுகின்ற கலாசி வழி வந்தவர்கள் என்று பித்துப்பிடித்து அலைகின்றனர்.

  இலங்கையில் தங்களது நிறத்தை காண்பித்து தமிழரல்ல என்று சொல்கின்ற ‘அர்வி’க்களிடம் நான் கற்பு என்ற கருத்தியல் இல்லாது போயிருந்தால் ஏனைய தமிழர்களின் கலரும் மாறியிருக்கும் என்று சொல்வதுண்டு. அதை சொல்வதில் வருத்தமிருந்தாலும், உண்மையை சொல்லி உலுக்கும்போது பித்தம் தெளிந்தால் நல்லதுதானே?

 2. Avatar
  தோழர் சாத்தான் says:

  மிகவும் நன்றாக விளக்கியுள்ளார்கள்.

  == அஹமதியர்கள் ==

  காதியானி என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள், அஹமதியர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். இசுலாத்தில் உள்ள பல கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் இவர்கள். முகமது நபிக்கு பிறகு மற்றொரு இறைதூதர் தோன்றுவார், அவர் இந்தியாவில் மிர்ஸா குலாம் அஹ்மத் எனும் பெயரில் தோன்றியதாக நம்புபவர்கள். இவர்களை பிற முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் பல்வேறு இடங்களில் இவர்கள் மீது தாக்குதல்களும் நடைபெருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *