உள்ளோசை கேட்காத பேரழுகை

This entry is part 16 of 32 in the series 1 ஜூலை 2012

(ஜாசின் ஏ.தேவராஜன்)

ஆக பின் நடந்துகொண்டிருக்கிற சம்பவம் 1

இனி அமீராவைப் பள்ளியில் பார்க்கவே முடியாது.அவள் கோலாலம்பூருக்கு மாறிப் போய்விட்டதாக உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். கோலாலம்பூரில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் தூரத்து உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கப் போயிருக்கிறாளாம். எல்லாம் அபுவின் ஏற்பாடு! அந்த ஏற்பாட்டுக்குள் இன்னும் சில ஏற்பாடுகள் அபுவுக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள் அவை!

முன் நடந்த சம்பவம் 1

அமீராவுக்கு நிதானம் தேவைப்பட்டது இப்போது. வகுப்பறையில் அவள் பழையபடி இல்லை. வோங் வழக்கம்போல் இன்றும் வக்கிர சில்மிஷங்களைப் பச்சையாகவே அபிநயம் செய்து கொண்டிருந்தான். கண்ணாடி சாளரத்தினூடே நுழைந்த காற்று திரைச்சீலையை மிதக்கவிட்டபடி தன் மூர்க்கத்தைக் காட்டிக் கொண்டிருந்தபோது அவளின் முக்காட்டை அசையவிட்டு வெண்ணிறச் சீருடையின் உள்ளே இறுக்கமாய்ப் பதுங்கிக்கிடந்த மார்புப் பகுதியைப் பிதுக்கித் திரட்சியான சதையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. வோங் அவளை நேரடியாகவே எதிர்கொண்டான். அவனுடைய நாற்காலி வகுப்பின் பின்னாலிருந்தாலும் காரணகாரியமின்றி முன்னே வரமாட்டான். வலக்கையின் நடுவிரலைக் நிமிர்த்தி நெட்டுக்குத்தலாய்க் காட்டி அசைத்ததோடு, சட்டென எழுந்து பாலுலுறவுச் செய்கையை எல்லோரும் பார்க்கச் செய்து காட்டினான். அவனுக்கு அந்த விசயமெல்லாம் அத்துப்படி. அவனது கைத்தொலைபேசியில் கருமாந்தரமெல்லாம் பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, வாரத்திற்கு இரண்டுமுறையாவது தனது முதிர் நண்பர்களுடன் படியேறியும், மதுபான விடுதிகளிலும் இளம்பெண்களைச் சுவைத்த அனுபவம் நிறையவே உண்டு. இந்த வகுப்பில், தான் எதிர்பார்க்கும் அழகும் கவர்ச்சியும் எடுப்பான உடல்வாகும் அமீராவிடம் பூரணமாய் இருந்தன. அவளை எப்படியாவது தன் வழிக்கு இழுக்க, அதற்காகவே விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்துகொண்டிருந்தான்.அமீரா பன்றி தின்கிறவனைப் பொருட்படுத்துவதாயில்லை. ‘பாபி ! சியால்’ எனப் பதிலுக்குச் சொல்லிச் சொல்லிச் சலித்துப் போய்விட்டது. என்னென்னவோ சாடை மாடையாய் அவன் குனிந்து நெளிந்து வக்கிரம் செய்ய, அதற்குள் ஆங்கிலப் பாட ஆசிரியை உள்ளே வர கப்சிப்பென்று அடங்கிப் போக வேண்டியாதாயிற்று அவனுக்கு. இல்லையென்றால், பாட இடைவெளி நேரம் வரை வோங்கின் ஆர்ப்பாட்டந்தான் தூக்கலாயிருக்கும்.

அமீரா வீட்டுப் பாடத்தை அரைகுறையாய் முடித்து வைத்திருந்தாலும், அந்த வகுப்பில் இன்னும் இரண்டொரு பேரைச் சேர்த்துத் தேவலம் என்ற கட்டுக்குள் அடக்கிவிடலாம். பெரும்பாலான ஆசிரியர்கள் அந்த வகுப்புக்கு வருகிறார்கள் என்றால் அதற்கு அமீராதான் காரணம். போதனையைச் குறிந்தபட்சமாவது கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அவளிடமுண்டு. தவிர, மற்ற மாணவர்களுக்கு எடுத்துச் சொல்கிற அளவுக்கு ஆங்கிலமும் கொஞ்சமாய் வரும். சுமாரான மாணவி என எல்லோரும் ஒருமித்துச் சொல்வர்.

இப்பொழுது பாடத்தில் கவனம் பதியவில்லை அவளுக்கு. இன்றைக்கென்று ஆசிரியை வெண்பலகையில் 5 வாக்கியங்களை எழுதிப் போட்டுவிட்டு ஏதோ வேலையாய் அமர்ந்துவிட்டார். அவற்றை எழுதி முடிக்க 3 நிமிடங்கள்கூட பிடிக்கவில்லை அவளுக்கு. மற்றவர்கள் ஆடி அசைந்து ஆதிகால மனிதர்களின் கையெழுத்தில் எழுதிக்கொண்டிருந்தனர். இரண்டாம் படிவத்தின் ஏழு வகுப்புகளில் கடைநிலை வகுப்பு என்பதால் அத்தனை அராத்துகளும் இங்குத்தான் தஞ்சம் அடைந்திருந்தன. அமீரா திரும்பிப் பார்த்துவிட்டுப் புத்தகப்பையில் கையைத் துழாவி முகப்பூச்சு டப்பாவைத் திறந்து இலேசாய்த் தனது மாம்பழக் கன்னத்தை அலங்கரித்தாள். அந்த வகுப்பில் அவளோடு சேர்த்து டியானா, நூர் அய்னி, நூருல் நாஜா, ஜூலியானா என நான்கைந்து பேர்களுக்கு இது வழக்கமான சமாச்சாரம். முகப்பூச்சு டப்பாவின் கண்ணாடியின்வழி அவளது கன்னக்கதுப்புச் சற்றே உப்பியிருப்பது போல் தென்பட்டது. மெல்ல தடவிப் பார்த்துவிட்டுக் கழிப்பறைக்குச் செல்ல ஆசிரியையிடம் அனுமதி வாங்கியபின் வெளியேறினாள்.

கழிப்பறை அவளுக்குத் தனிமை சுகத்தைத் தந்தது. அவள் தன் மர்மப் பிரதேசங்களை வருடிப் பார்த்தாள்; இனம்புரியாத் தினவுடன் இப்பொழுது மொசுமொசுவென்றிருந்தது. ஆனால், ஏதோவொன்றைத் தேடி விழைவது போல் நமநமத்திருந்தது. இதே கழிப்பறையில்தான் போன மாதம் குமுறிக் குமுறி அழுதாள். கடந்த சில நாட்களாகத் தீவிர சிந்தனைக்குப் பிறகு மனம் ஒருவாறாக ஆரவாரம் தணிந்திருந்தது. அதுவும் இக்பாலின் அறிமுகத்திற்குப் பிறகுதான். இக்பால் தன்னை உயிருக்கு உயிராய் நேசிப்பதாய்ச் சொல்லியிருந்ததுதான் காரணம். அவனும் இதே பள்ளியில் நான்காம் படிவத்தில் படிக்கின்ற தேற முடியாத மாணவன் என முத்திரை குத்தப்பட்ட பேர்வழி. சகட்டுமேனிக்குப் புகையை ஊதித் தள்ளுகின்ற ‘மாட் ரெம்பிட்’ கூட்டத்தைச் சேர்ந்தவன். நள்ளிரவுக்குப் பிறகு அவன் உறங்குவதேயில்லை. அவளை இரண்டு மூன்று முறை வெளியே தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளான். அவளுக்கு அது புது அனுபவமாய்ப் பட்டது. மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்தபடி அவனைக் கட்டியணைத்தபோது ஏற்பட்ட ஸ்பரிசம் வேறு, அவளைக் கடந்த சில நாட்களாகத் தூங்கவிடாமல் செய்திருந்தது.

முன் நடந்த சம்பவம் 2

‘சொலாட்’ தொழுகையை முடித்துவிட்டு வீட்டில் அமர்ந்திருந்த அபுவுக்குப் பறிபோன வேலை பற்றிய சிந்தனை உதித்துக்கொண்டேயிருந்தது.மர ஆலையிலிருந்து பலகைகளை ஏற்றிச் செல்வதுதான் கடந்த பதின்மூன்றாண்டு கால வேலை. நல்ல சம்பளம். தலையில் மண் விழுந்தது போல் இப்பொழுது பலகையே விழுந்துவிட்டது. மன உளைச்சல் ஒரு புறம் வறுத்தெடுக்க வீட்டில் சும்மா கிடப்பது வேறு புரட்டியெடுத்தது. வேலையற்ற பொழுதுகளை நகர்த்துவதற்கு அவ்வப்பொழுது வீட்டைச் சுற்றி இருக்கின்ற காலி நிலத்தை ரெண்டு மூனு நாட்கள் கொத்திப்பார்த்தான். ஆனால், உடனடியாகக் கிடைக்காத விளைச்சலின்மீது வெகுச் சீக்கிரத்தில் அலுப்புத் தோன்றிவிடுகிறது. விவசாய நிலம் கனத்த மழைக்குப் பிறகு எதற்கும் யாருக்கும் காத்திராமல் புல்லும் புதருமாகி அவனை அலுப்படையச் செய்திருந்தது. சமயங்களில் வெட்டவெளி வானத்தைப் புகை ஊதியபடி வெறித்தபடி பார்த்துக்கொண்டிருப்பான். வீட்டில் யாருமில்லை. இவனது வேலை பறிபோன பிறகு சல்மாவுக்கு வேறு வழி தெரியவில்லை. அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்துக் கையுறைத் தொழிற்சாலையொன்றில் அறுநூறு வெள்ளி சம்பளத்துக்கு வேலை பார்த்துக்கொண்டாள். சில காரணங்களை முன்னிட்டு அபுவைப் பெரும்பாலும் இவள் நச்சரிப்பதில்லை.வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் நேரப் பணி செய்து ஏழு பிள்ளைகளையும் ஆளாக்க வேண்டிய தர்மசங்கட நிலை உருவாகியிருந்தாலும் பிள்ளைகள் அதனதன் பாட்டுக்கு வளர்ந்துவிடுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கை வேர்விட்டிருந்தது. இன்று பிள்ளைகளும் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள்.

வெக்கை பரவியிருந்த ஒரு மாலையில் அபுவைத் தேடிக்கொண்டு வந்த கமாருடீன் தனக்குப் புதிதாகச் சிறு ரக லாரி ஓட்டுவதற்கு வேலை கிடைத்திருக்கின்ற செய்தியைச் சொல்லிவிட்டு அப்படியே கையில் ஒரு நெகிழிப் பொட்டலத்தைக் கொடுத்து அதை வைத்துக்கொண்டு பணம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றான். இந்த குறுக்கு வழியால்தான் ஏற்கெனவே பார்த்த வேலை பறிபோனது என்று சாதுர்யமாய்த் தப்பித்த கமாருடீனுக்கு நன்கு தெரியும். பொட்டலத்தை விநியோகிப்பது இந்தக் கிராமத்தில் சற்றுச் சிரமந்தான். வடக்கிலிருந்து தெற்கு வரையில் சில பட்டணப்புறங்களில் பொட்டலத்தைத் தள்ளிவிடுவது சுலபம். உபரி வருமானத்திற்குக் கிராமம் தோதான இடமல்லவென்பது அவன் அறியாததல்ல. இருந்தாலும் வாங்கி வைத்துக்கொண்டான். யார் கண்டது?

முன் நடந்த சம்பவம் 2

சல்மா வேலைக்குக் கிளம்புவதற்கு முன் மதியத்திற்கு வேண்டிய உணவுகளைத் தயார் செய்துவிட்டுத்தான் செல்வது வழக்கம்.இன்று முதல் ஒரு வாரம் அவளுக்குக் கூடுதல் வேலை செய்ய வேண்டிய வாரம் என்பதால் விடியற்காலை ஆறு ஆறரை மணியளவில்தான் வீடு வந்து சேர்வாள். மாலையில் பள்ளி முடிந்து வந்ததும் அமீராவுக்கு வீட்டில் அப்படியொன்றும் பெரிதாய் வேலையில்லை. சோர்வு என்றால் சற்றே கண்ணயர்வதும் இல்லையென்றால் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தோழிகளைச் சந்திக்கச் செல்வதும்தான் அவளது வேலை. அப்படி அவள் வெளியே செல்கின்றபோது அவள் முக்காடு போடுவதைத் தவிர்த்தே வந்தாள். இறுக்கமான காற்சட்டை அணிவதே அவளுக்குப் பிடித்தமானதாயிருந்தது. பள்ளியில்கூட உஸ்தாஸ் காலிட்டும் உஸ்தாஸா நூர்டியானாவும் இது பற்றி பலமுறை எடுத்துச் சொல்லியும் கடைசி கடைசியாக மன நல ஆசிரியரிடமும் பார்த்துப் பேசிவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டுப் பள்ளியில் மட்டும் கட்டுப்பட்டிருப்பதுபோல் பாசாங்கு செய்வாள். அமீராவோடு அவளது தோழிகளும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு அது மாதிரியான சுதந்திரம் பிடித்திருந்தது.

இரவில் பிள்ளைகள் எல்லாம் தூங்கியிருந்தனர். வேலை போனதிலிருந்து ஊர் சுற்றவும் முடியவில்லை. அபுவுக்குத் தூக்கம் வெகு தொலைவிலும் தொல்லையாகவும் இருந்தது. அவனுக்கு ஒரு விடுதலை தேவைப்பட்டது.கமாருடீன் கொடுத்த பொட்டலத்தை நுகர்ந்து எல்லாவற்றையும் மறந்திருக்கவேண்டும் போலதான நிர்ப்பந்தம் அவனுக்குள் தலைதூக்கியது. ஐந்து நாட்களின் ஒவ்வோர் இரவிலும் புதுமாதிரியான இறக்கைகள் விலா எலும்புகளினூடாகத் துளைத்து வெளியே தெரியத் தொடங்கின. அந்த இறக்கைகள் அவனை மேகத்துக்குக் கொண்டு சென்று அங்கு அவனை உட்கார்த்தி உலகைக் காட்டி மகிழ்ச்சிப்படுத்தின. மறைந்துபோயிருந்த சிரிப்பு மீண்டும் துளிர்த்தது.

முன் நடந்த சம்பவம் 3

காலையில் பள்ளியில் நடந்த சம்பவம் அமீராவின் தூக்கத்தை அபகரித்திருந்தது. அவளுக்கு மட்டுமே தெரிந்திருந்து சம்பவித்த மோசமான நிகழ்வு அது. வோங் எல்லை மீறிப் போய்விட்டான். விளையாட்டுக்குத்தான் தொட்டேன் என்று கூறுவதில் வோங்குக்கு எந்தச் சங்கடமும் இல்லை. தனது நெஞ்சுப் பகுதியே அவளுக்கு அசூசையைக் கிளப்பியது. இரவெல்லாம் அவனது தொடுதல் திரும்பத் திரும்ப வந்து கனவு போல கண்முன் தோன்றிக்கொண்டிருந்தது. அந்தக் கனவின் கட்டத்தில் அமீரா தன்னை மறந்தவளாக அவனது தொடுதலுக்குத் தடைவிதிக்காமல் இருந்தாள். ஒருவகை உவகை கலந்த கிளர்ச்சியை உண்டுபண்ணி மறுகணம் சட்டென்று விழிக்கின்ற சூழலை உருவாக்கியிருந்தது. கனவு போன்றதான மாய உலகத்திற்கு மீண்டும் செல்ல அவளுக்குத் தயக்கமாய் இருந்தது. தனது வாழ்க்கையில் நடந்தேறிவிட்ட பிடித்தும் பிடிக்காததுமான தொடுதல் அது.அதனால், அலைக்கழிக்கும் தூக்கம் வேண்டாமென முடிவு செய்திருந்தாள்.

தம்பி தங்கைகள் எல்லோரும் உறக்கத்தில் இலயித்திருந்தனர். அறைக்கதவைத் திறந்து கழிப்பறைக்குச் செல்ல கதவைத் திறந்தபோது மனம் திடுக்கென்று விக்கித்தது. சில வினாடிகள் விழிகள் அகல விரிந்து நிலைகுத்தி நின்றாள்.அபு அரை நிர்வாணக் கோலத்தில் தனை மறந்த நிலையில் மெத்திருக்கையின்கண் சரிந்தபடி தொலைக்காட்சியில் ஒன்றித்திருந்தான். தொலைக்காட்சியிலும் அந்தத் தொடுதல் காட்சியும் பச்சையாக அரங்கேறிக்கொண்டிருந்தது. சட்டென்ற மின்னல் பார்வையில் அவள் அதை மறுதலிக்காமல் பார்க்க நேரிட்டது. ஏற்கெனவே, இணைய மகிழி மையங்களில் இது போன்ற படங்களைப் பார்த்திருப்பதாக தோழிகள் சிலர் கூறியது இப்போது ஞாபகத்திற்கு வந்தது. வோங்கூட அவற்றைக் கைத்தொலைபேசியின் மூலம் காட்டியிருக்கிறான். அந்தப் புதுவித அனுபவத்தை மறுப்பதற்கு அவள் மனம் இடந்தரவில்லை. அபுவுக்குத் தெரியாதவாறு அறையிலிருந்து சப்தப்படாமல் கழிப்பறைக்குச் சென்று சமையல்கட்டு மின்விளக்கை முடுக்கினாள். அப்பொழுதுதான் அபு சட்டெனத் தன்னிலைக்கு வந்தவனாய்ப் பார்வையைத் திருப்பினான். அமீரா பார்த்திருப்பாளோ ? எப்படி வெளியே வந்தாள் ? வெளியே அறைக்கதவைத் தாழிட மறந்துவிட்டேனா? மெல்லிசான இரவு உடையினூடே ஊடுருவிய மின்விளக்கு அவளின் மேடு பள்ளமுமான தேகத்தைச் செதுக்கிவைத்தாற்போல் காட்டியது. சட்டென்று தொலைக்காட்சியையும் காணொளியையும் முடக்கினான்.

கழிப்பறையில் வோங்கும் சற்று முன்னர் கண்ட காட்சியும் ஒரு சேர அவளுக்குள் தரிசனம் தர, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தன்னையுமறியாமல் விரகத்தில் எரிந்தாள். அவளது கைகள் சுயமாய்ப் பிறாண்டிக்கொண்டன. பத்து நிமிடங்கள் கழித்துப் பெரும் மனப்போராட்டத்திற்குப் பின்புதான் வெளியே மெல்ல நடந்து வந்தாள்.

அபு அவளை உள்ளே நுழைய விடவில்லை. அவளது பாதி முகத்தை முன் வந்து விழுந்த கூந்தல் மறைக்க, அவளின் கைகளை இறுக்கமாய்ப் பற்றி மோக வெறியில் எரித்தான்.

அமீரா அழுதுகொண்டிருந்தபோது, அழுத்தந் திருத்தமாய் ஒன்றை மட்டும் செவிப்பறையில் அழுத்தமும் உறுதியுமாய்ச் சொன்னபடியிருந்தான் அவன். அது அவளுக்குச் சரியெனப் பட்டு அந்தப் பின்னிரவுக்கும் பிற பின்னிரவுகளுக்கும் சேர்த்துத் தன்னைப் பலியிட்டிருந்தாள் அவள். புற அழுகையின் சப்தங்கள் அவளுக்கு மட்டுமே கேட்கக்கூடியதாக இருந்தன.

முன் நடந்த சம்பவம் 4

அமீரா வெளியே சென்று வருவதற்குத் தடைவிதிக்கவில்லை அபு. ரெண்டொரு வார்த்தைகளிலான விசாரிப்போடு முடிந்துவிடுகிறது. தந்தையென்ற இருப்புத்தலம் முற்றாய் நீங்கி மெத்தனமாய்ப் பதிலுரைப்பது அவனைக் குற்ற உணர்வுக்குள்ளாக்கியது. அபு முன்புபோல அதிக நேரம் வீட்டிலும் இருப்பதில்லை. வேலைக்கு ஏற்பாடு செய்யும் பொருட்டுச் சிலரைச் சந்திக்கவிருப்பதாய்க் கூறுவதிலும் உண்மையுண்டு. பொழுதுபட்டுத்தான் வருகிறான். வந்ததும் உறங்கிவிடுகிறான். சில வேளைகளில் அமீரா கூந்தலைக் கோதியவாறு தான் எதற்கும் தயார் என்ற அதிகாரத்தூக்கலோடு நடந்துகொள்வதை அபுவால் கணிக்க முடிந்தது. அமீராவின் மனம் இக்பாலை அதிகமாகவே நாடியது. அவனோடு மோட்டாரில் செல்கின்றபோதெல்லாம் வெட்ப உரசல் தகிக்க வேண்டுமென்றே அவனை இறுகத் தழுவிக்கொள்கிறாள். இரவுப் பூங்காக்களில் அமைந்துள்ள கூடாரங்கள் அவர்களுக்குத் திவ்விய வெப்பத்தைத் தந்தன. அதுவும் பின்னிரவு தாண்டிய ஆள் அரவமற்ற சூழலும் இரவும் மோகத்தை உச்சிக்குக் கொண்டு சென்றிருந்தன. இக்பாலின் இரவுகள் அவளோடு நனைந்து களித்ததை நண்பர்களிடமும் சொல்லிச் சொல்லி உசுப்பேற்றியிருந்தான். அவன் நண்பர்களுக்கும் வாயில் உமிழ்நீர் கசியத் தொடங்கியபின், இக்பால் அவர்களுக்கும் இரங்க வேண்டியதாயிற்று. ஒரு முன்னிரவில் அமீராவின் தீவிரம் சார்ந்த நடவடிக்கைகள் பற்றி சல்மா அபுவிடம் வேதனையுடன் சொல்லிக்கொண்டிருந்தபோது அமீரா தன் அறையை நோக்கி அவர்களைக் கடந்துசென்றாள். அவளது பார்வையில் என்றைக்குமில்லாத துணிச்சல் மிகையாகத் தெரிய அதனை எதிர்கொள்ள வழியின்றிக் கோபமாகத் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிய அபுவுக்குக் காமகோபம் மீண்டும் தறிகெட்டாடியது. இரவளிக்கும் நரகத்தில் வகை தெரியாது அமீராவை அலங்கோலப்படுத்தினான். சிரிப்பும் அழுகையும் கலந்த அந்தர நிலையில் தாங்கவொண்ணா உடல் உபாதைகளோடு சிரித்தாள். உடலில் விழுந்த காயங்கள் மட்டும் அவளுக்குத் தெரிந்திருந்தன.

முன் நடந்த சம்பவமும் முடிவெடுத்த அந்த அர்த்த இராத்திரியும்

புலரியின்போது அமீராவின் குழப்பம் உச்சநிலை அடைந்திருந்தது. தன் நெருங்கிய பள்ளித் தோழிகளிடம்கூட வெளியில் சொல்ல முடியாத தர்மசங்கடம் உருவாக, காலை ஒன்பது மணியளவில் அபுவுக்கு அவசர அழைப்பு வரவே புறப்பட வேண்டியதாயிற்று. மாணவர் நல ஆசிரியர் அறையில் அமீரா தலைகவிழ்ந்து நிற்க, அபு ஆசிரியருக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தான். ஏற்கெனவே, காலை ஏழரை முதல் அமீராவுடனான விசாரணை நடந்து முடிந்திருந்தது. ஒரு கட்டத்தில் அமீரா இதே பள்ளியிலோ, பக்கத்துப் பள்ளியிலோ பயில அனுமதிக்கப்பட்டால் அடுத்த விபரீதம் என்னவென்று பெருத்த கலவரத்திற்குத் தள்ளப்பட்டிருந்தான் அபு.

‘இனி அமீரா இங்குப் படிக்கவும் கூடாது; யாரிடமும் எந்த ஒட்டும் உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது. நடந்த விபரீதங்கள் ஒருகால் சல்மாவுக்குத் தெரியவந்து காவல்துறை அளவுக்குப் போகுமென்றால்… சே சே ! அவ்வளவு தூரம் எல்லாம் போகமாட்டாள் . முதல் கணவன் இறந்தபின், குடும்பத்தை நகர்த்த அவள் படும்பாடு அவளுக்குத் தெரியாதா என்ன? அப்படியே போனாலும், ‘தாலாக்’ தவிர வேறு வழியேயில்லை. ஆனாலும், அந்த அளவுக்குப் போகமாட்டாள்! அமீராவைக் கடுமையாக மிரட்டி வைத்திருப்பதால் அவளும் வெளியே சொல்லமாட்டாள்!’

பள்ளியில் அமீராவைப் பற்றி எல்லோரும் வாய்க்கு வந்தபடி வசைபாடிக்கொண்டிருந்தனர். அவள் வகுப்பறைகளைக் கடந்து செல்கின்றபோதெல்லாம், தீராச் சொற்களால் விமர்சிப்பதும், கெட்ட கெட்ட சைகைகளில் வர்ணிப்பதும் தீவிரம் அடைந்திருந்தன. வோங் மட்டும் அவளைப் புதியவனாக எதிர்கொண்டு அவளது துக்கத்தில் கொஞ்சம் பங்குபெற்றிருந்தான்.சகலமும் மறத்துப்போயிருந்தன அவளுக்கு. பள்ளியைக் கடைசி கடைசியாய்ப் பார்ப்பதுபோல் கழிப்பறைக்குள் நுழைந்து இதயம் வெடிக்குமட்டும் அழுதாள். ஒரு கால் , உடலின் சப்தங்கள் உள்ளத்தின் பேரொலியாக வெடிக்கும் காலத்தில் மற்றவர்களுக்குக் கேட்கலாம். அப்பொழுது இரண்டும் ஒன்றென வாழ்வு மாயையென ஓய்ந்துபோயிருக்கும்.

       முற்றும்

Series Navigationஹைக்கூ தடங்கள்பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்
author

ஜாசின் ஏ.தேவராஜன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ULLOSAI KETKATHE PERAZHUGAI BY MALAYSIA A.DEVARAJAN is another example of the high standard of Malaysian Tamil writers. The language used is Tamil without any adulteration. The writer has narrated in bold terms the pathetic story of a school girl, AMEERA.She represents the modern trend of early sexual passion among our school children. Because of the free access to pornography in the internet our children are being exposed to sexual matters during their school days. As a result they have started experimenting on sex at a very early age. The incidents in the classroom and the toilet are no exaggeration.The writer has not hidden anything but has exposed everything without any inhibition. This has been the modern trend among writers.It gives the story a realistic approach. The step-father using drugs, and his sexual assault on Ameera on various occassions are not imagination. There are many such cases in societies where divorse and remarriage are prevalent widely. The helpless Ameera sobbing at the end and the writer’s remarks are appropriate and captivating! THE MALAYSIAN lITERARY WORLD is proud of you A.DEVARAJAN! Congratulations!..Dr.G.Johnson.

    1. Avatar
      ஏ.தேவராஜன் says:

      மிக்க நன்றி டாக்டர் ஜி.ஜான்ஸன் அவர்களே! உடனுக்குடன் விமர்சிக்கின்றது ஒரு புறம், பிறர் செய்ய அவகாசமில்லாத பணியை மலேசிய தமிழ் அச்சு ஊடகங்கள் அனைத்திலும் செய்து வருகிறீர்கள். அதோடு,தங்களுக்குள் இருக்கும் படைப்பாளிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இப்பணியைச் செய்கிறீர்கள்!அதற்காக மலேசிய தமிழ் இலக்கிய உலகம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது.தங்களது ‘உடல்,உயிர்,ஆத்மா’ எனும் புதினத்தின் தலைப்பைக் கொண்டே எமதன்பைப் புலப்படுத்துகிறேன்!சிறுகதைகளில் இன்னும் சொல்லப்படாத இடங்கள், உணர்வுத்தளங்கள் உள்ளன. தொடர்வேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *