நண்பர் ராஜன் வழக்கம்போல அவர் பாணியில் நக்கலும் நையாண்டியுமாக ஜெயமோகனுக்கு பதிலெழுதியிருக்கிறார்.
http://mdmuthukumaraswamy.blogspot.com/அதனை இங்கே காணலாம். அந்த கட்டுரையிலிருந்து சில முக்கியமான பகுதிகளை இந்த கட்டுரையிலேயே மேற்கோள் காட்டுகிறேன்.
ராஜனின் கட்டுரை முழுவதும் விரக்தி நெடி அடிக்கிறது. தமிழ் “அறிவுஜீவி எழுத்துக்களின் என்னத்த கன்னையா” என்ற பெயரில் அவருக்கு அழியாத இடம் கிடைத்துவிடும் என்று கருதும் அளவுக்கு புலம்பி வைத்திருக்கிறார். இருந்தாலும், அவற்றை அவர் “தர்க்கரீதியான மறுப்பு” என்ற அடைப்பு வேறு கொடுத்துவிட்டதால், பேசிவிடுவோம் என்று நானும் களத்தில் குதித்துவிட்டேன். பொதுவாக நான் எழுதும் கட்டுரைகளுக்கு ராஜன் மறுப்பு எழுதமாட்டார் (இவனுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தா நம்ம ரேஞ்சு என்னாகிறது? என்ற கவலையாக இருக்கலாம்.)
இறையாண்மையே கேள்விக்குறியதாகவும், பொருளற்றதாகவும் மாறிவரும் இந்த காலகட்டத்தில் இறையாண்மை போய்விடும் என்று ஜெயமோகன் தேவையில்லாமல் பூச்சாண்டி அரசியல் பண்ணுகிறார் என்பது ராஜனின் முதலாவது ”தர்க்கரீதியான மறுப்பு”
ஜெயமோகன் செய்வதை பூச்சாண்டி அரசியல் என்று வரையறுக்கிறார்.
//சில சமயம் உள்நாட்டில் பல்வேறு விதமாக பாதிக்கப்படும் மக்களின் உரிமைக் குரல்களை அடக்குவதற்கு அரசும், அரசியல்வாதிகளும் அந்நிய சக்திகள், ஏகாதிபத்தியம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டுவார்கள். அதுதான் பூச்சாண்டி அரசியல். //
ஜெயமோகன் அடக்க நினைக்கும் மக்களின் உரிமைக்குரல்களாக ராஜன் கண்டுபிடித்தது என்ன என்று கட்டுரை கடைசிவரை போய் பார்த்துவிட்டேன். தெரியவில்லை. என் அஞ்ஞானக் கண்ணுக்கு தெரியாமல் எங்கேயேனும் மறைந்திருந்தால், யாரேனும் தெளிவு படுத்துங்கள்.
இந்த பூச்சாண்டி அரசியலை பெரியாரும் பயன்படுத்தியிருக்கிறார் என்று ராஜன் சொல்கிறார். பெரியார் செய்திருக்கும் இந்த பூச்சாண்டி அரசியலை ராஜன் எப்போதாவது கண்டித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. அதனை “அவருக்கே உரிய வழியில்” பிரயோகித்துள்ள பெரியார், எந்த மக்களின் உரிமைக்குரல்களை அடக்க என்ன பூச்சாண்டி அரசியலை செய்தார் என்றும் விளக்கலாம். அமார்க்ஸிடம் போட்டுக்கொடுக்க வசதியாக இருக்கும்.
முதலாம் உலகப்போருக்குப் பின்னர்தான் இறையாண்மை என்ற கருத்தே தோன்றி பலப்படுகிறது. அதற்கு முன்னால், இளகிய எல்லைக்கோடுகள், தொடர்ந்து முடிவுறாத போர்கள் என்று எவருடைய இறையாண்மையையும் எவரும் மதித்ததில்லை. அந்த போர்களுக்கு ஒரு முடிவு கட்டும் விதமாகத்தான் இறையாண்மையை மதிப்போம் என்று லீக் ஆஃப் நேஷன்ஸ் பிறகு ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை வந்து எல்லைக்கோடுகளையே போடுகின்றன. அப்போதுதான் மற்றவர்களது உள் விவகாரங்களில் ஒரு நாடு தலையிடக்கூடாது என்ற கொள்கையை லீக் ஆப் நேஷன்ஸ், ஐக்கிய நாடுகள் சபை கொள்கையாக முன்வைக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் லீக் ஆப் நேஷன்ஸ் கோரியதன் பின்னால் ஓரளவுக்கு உலகம் அமைதி அடைந்தது என்று கருதலாம். அதற்கு முன்னால் இந்த “இறையாண்மை” கொள்கை எங்கே இருந்தது? அது சரி, இறையாண்மை கொள்கை வந்ததும், அதுவரை பேயாட்டம் போட்டுகொண்டிருந்த நாடுகள், காலனியாதிக்க நாடுகள் எல்லாம் உடனே திருந்திவிட்டனவா? இல்லவே இல்லை. நடந்திருப்பது என்ன என்று ராஜனுக்கு தெரியும் என்றாலும் திரும்ப சொல்லுகிறேன். உச்சாணி கொம்பில் உட்கார்ந்திருக்கும் ஐந்து நாடுகள் மட்டும்தான் உன் விவகாரத்தில் நான் தலையிடுவதில்லை, என் விவகாரத்தில் நீ தலையிடாதே என்று பகிரங்கமாக ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. அப்படியும் தலையிடாமல் இருப்பதில்லை. இந்த “ஓரளவு ஒப்பந்தம்” காரணமாகவே உலகத்தில் ஓரளவு அமைதி நிலவுகிறது. ஆனால், இந்த காலனியாதிக்க நாடுகளான, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷியா, பிரான்ஸ் போன்றவை எந்த காலத்திலும் ஆப்பிரிக்க, ஆசிய, தென்னெமெரிக்க காலனிய நாடுகளில் பூந்து விளையாடுவதை நிறுத்தவே இல்லை. மேலும் இப்படிப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளில் யாருடைய செல்வாக்கு அதிகரித்துகொள்வது என்று போட்டி போடுகின்றன. அதற்கு பலியாவது அப்பாவி மக்கள்.
இப்படிப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் இறையாண்மையை பெயரளவுக்கு மேற்கண்ட நாடுகள் வைத்துகொண்டாலும், அவற்றின் இறையாண்மையை எப்போதுமே மேற்கண்ட ஐந்து நாடுகளும் மதித்ததே இல்லை என்பதும், இந்த நாடுகளும் தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திகொள்ள விடாது போராடிக்கொண்டே இருக்கின்றன என்பதும் புதிய விஷயமா? இதனை ஜெயமோகன் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியுமா? அது தற்போது மாறிவிட்டதா? இந்த ஐந்து நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் உதவுவதும் ஒருவருக்கொருவர் இறுக்கமான பொருளாதார உறவுகள் வைத்திருப்பதும் ஆச்சரியமா? இங்கிலாந்தும், அமெரிக்காவும் கொண்டிருக்கும் நெருக்கமான உறவை வைத்து பார்க்கும்போது பரவலாக பேசப்படும் சீனா – அமெரிக்கா உறவு அவ்வளவு முக்கியமானதல்ல. சீனாவை ஒரு manufacturing base ஆகத்தான் அமெரிக்கா கருதுகிறது. அந்த manufacturing baseஐ நம் நாட்டில் வைத்துகொண்டு கொஞ்சம் காசு பண்ணலாம் என்று இந்தியா, பிரேசில் உட்பட்ட மற்ற நாடுகள் முனைகின்றன.
”இப்போது தேசங்களுக்கிடையே இன்று அப்படி ஒரு பிரச்னை தீவிரமாக நிலவுகிறது” என்று ராஜன் எழுதுகிறார். எந்த தேசங்களுக்கிடையே? அமெரிக்க வலது சாரிகள், அமெரிக்க இடது சாரிகள் என்ற மாயவலைக்கும் ராஜனும் விழுந்துவிட்டார் போலிருக்கிறது. ஈராக்கை எந்த முறைகளில் வழிக்கு கொண்டுவருவது என்றுதான் வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் பிரச்னையே தவிர, ஈராக்கின் விவகாரத்தில் நாம் தலையிடலாமா இல்லையா என்பதில் அல்ல! ”இந்தியாவோ ஐக்கிய நாடுகளோ உள்ளே நுழைந்து முள்ளிவாய்க்காலை தவிர்த்திருந்தால் இடதுசாரி நண்பர்கள் பலரும் மகிழ்ந்திருப்போம்” என்று சொல்லி தன்னை இடதுசாரியாக பார்த்துகொண்டிருக்கும் ராஜன் எழுதுகிறார்.
இலங்கை இறையாண்மையை ஆரம்பம் முதல் மற்ற நாடுகள் மதித்திருந்தால், முள்ளிவாய்க்காலே நிகழ்ந்திருக்குமா என்பது ஒரு கேள்வி. அதனை விட்டுவிடுகிறேன். ஆனால், நிச்சயமாக பெரும் பேரழிவுகள் மனித அவலங்கள் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த காலனியாதிக்க நாடுகள் அந்த நாடுகளின் இறையாண்மையை மதிக்காததால்தான் நிகழ்ந்தன என்பதை ராஜன் அறிவார். ஈரானில் மொஹம்மது மொஸாடெக் அவர்களை பதவியிலிருந்து கிழிறக்க அமெரிக்கா முனையவில்லை என்றால், ஈரானில் இஸ்லாமிய புரட்சி நடந்திருக்குமா? எல்லைகளை மதிப்பதில் நிச்சயம் பிரச்னை வரும். இல்லையென்று சொல்லவில்லை. ஹிட்லர் போன்றவர்கள் உலகத்தில் தோன்றத்தான் செய்வார்கள். அவர்களை நிறுத்த தலையிட்டுத்தான் ஆகவேண்டும். மாவோ போன்றவர்கள் பெரும் பேரழிவை உருவாக்கியவர்கள். தலையிட்டிருந்திருக்க வேண்டும். போல்போட் போன்றவர்கள் பெரும் பேரழிவை உருவாக்கியவர்கள். தாமதமாகத்தான் தலையிட்டார்கள். ஸ்டாலின் உக்ரைனில் பெரும் பஞ்சத்தை உருவாக்கி பல லட்சம் உக்ரைன் மக்களை கொன்றார். ஆமாம் தலையிட்டிருக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்கான “உரிமை குரலை” இடதுசாரிகளிடம் எதிர்பார்க்கமுடியுமா? ஒரு பெங்காளி நாடோடி கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ராஜாவுக்கு விசித்திரமான பழக்கம். ராஜாவின் ஆட்கள் சந்தைக்கு போவார்கள். அங்கே ஏழைபாழையாக பிச்சையெடுக்கும் இரண்டு பிச்சைக்காரர்களை பிடித்துகொண்டுவந்து அரண்மனை புல்வெளியில் விடுவார்கள். கசையடிப்பவன் ராஜாவை தெண்டனம் பண்ணி, அங்கேயிருக்கும் இரண்டு பிச்சைக்காரர்களையும் சாகும் வரைக்கும் கசையால் அடிப்பான். அந்த பிச்சைக்காரர்கள் கசையடி வாங்கி செத்ததும் ராஜா சந்தோஷமாக உள்ளே போவார். அன்றைக்கும் இரண்டு பிச்சைக்காரர்களை கொண்டுவந்து கசையால் அடித்தார்கள். சாகப்போகிற தருவாயில் ஒரு பிச்சைக்காரன் மற்றொரு பிச்சைக்காரனிடம் சொன்னான். “உன்னைவிட நான் உசத்தியாக்கும். நம்மளை கசையால் அடிக்கிறானே.. இவன் எங்க ஊர்க்காரன்.. தெரியுமா?” என்று சொல்லி அந்த பிச்சைக்காரனின் உயிர் பிரிந்தது. எங்க ஊர்க்காரன், எங்க ஜாதி, எங்கள மாதிரி இடதுசாரி என்று எதுவேண்டுமானாலும் போட்டுகொள்ளலாம்.
ஆனால், தலையிடுவது என்பது வேறு, விமர்சனம் என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்வதில்தான் ராஜனின் திறமையே இருக்கிறது. மனித உரிமை தளத்தில் சீனா கடுமையான அழுத்தங்களை சந்தித்துகொண்டிருக்கிறது என்கிறார். யாரிடமிருந்து. உள்ளேயிருக்கும் சீன குடிமக்களிடமிருந்து. அங்கிருந்து வெளியேறிய ஒரு கண்பார்வையற்ற வக்கீல் அமெரிக்க தூதரகத்தில் சரணடைந்தது, சீனாவைவிட அமெரிக்காவுக்குத்தானே தலையிடியாக இருந்தது? ”சுமுகமாக” அந்த பிரச்னை முடியவேண்டும் என்று ஆனானப்பட்ட ஹிலாரி கிளிண்டனே ஏமாற்று வேலை செய்ததை பார்த்தோமே. விமர்சனத்துக்கான இடத்தைக் கூட மறுக்கக்கூடிய இடதுசாரிகள், விமர்சனம் என்று பேசுவது வேடிக்கைதானே? லெனினின் காலத்திலிருந்து, இங்கே கேரளாவில் இடதுமுன்னணியின் வன்முறை அரசியல்வரை உள்கட்சி விமர்சனத்தையும் கட்சி வெளியிலிருந்து விமர்சனத்தையும் இடதுசாரிகள் எதிர்கொள்வதைத்தான் பார்க்கிறோமே!
//மனித உரிமைகள் என்ற கருத்தாக்கம் சார்ந்து, சர்வதேச குடிமைச் சமூகம் உருவாகிறதா, வடிவமற்றுப் பரவும் எதிர்பாற்றலால் தேசங்கள் கடந்த மக்கள் திரள் (multitude) சக்திகள் உருவாகின்றனவா என்பதெல்லாம்தான் இன்று அரசியல் தத்துவம் தீவிரமாக விவாதிக்கும் கேள்விகள். //
என்று சொல்கிறார் ராஜன். இவை யாருடைய கேள்விகள் என்று அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஆப்பிரிக்காவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க போகும் எதிர்கால அறிவாளி கூட்டத்தின் கேள்வியா? கண்ணுக்கு முன்னே நடப்பதை விட்டுவிட்டு கற்பனையுலகில் சிந்தனைகளை வடிவமைக்கும் விளையாட்டு விளையாடுபவர்களுக்கு இதெல்லாம் தோன்றும் போலிருக்கிறது. அரபு வசந்தம் என்று இடதுசாரிகள் கொண்டாடியபோது தேசங்கள் கடந்த மக்கள் திரள் சக்திகள் உருவாகின்றன என்றெல்லாம் கோட்டை கட்டினார்கள். அது துனிஷியாவில் இஸ்லாமிய அடிப்படைவாத அரசாங்கத்தையும், எகிப்தில் முஸ்லீம் பிரதர்ஹூட் என்ற பிற்போக்கு சக்தி ஆட்சிக்கு வந்ததையும் பார்த்துவிட்டுமா இன்னும் பேசுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
அடுத்து கருத்தா நேர்மையா என்ற பிரச்னையை கொண்டுவருகிறார் ராஜன். கேள்வியே தப்பு. அவர் கருத்தா நேர்மையா என்று கேட்கவில்லை. கருத்தா, கருத்து நேர்மையா என்று கேட்டிருக்கிறார். ஜெயமோகன் எழுதியதை சுமாராக படிக்கும் வாசகர் கூட செய்யாத தவறு இது.
//பெரியார் அழகாக சொன்னார். திருடனாகவோ, சுயநலமியாகவோ, பச்சோந்தியாகவோ இருந்தால் உங்களுக்கு என்ன? நான்
சொல்வது சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் //
இது வேறு. கருத்து நேர்மை என்பது வேறு.
ஒருவன் திருடனாகவோ அல்லது சுயநலமியாகவோ இருக்கலாம். ஆனால், அவனுக்கு கருத்து நேர்மை இருக்கலாம். குடிகாரனாக இருக்கலாம். ஆனால் கருத்து நேர்மை கொண்டவனாக இருக்கலாம். உதாரணமாக, கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் பத்திரிக்கையில் தனது கட்டுரை பிரசுரமாக வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்டு கட்சிக்கு உகந்த கட்டுரை எழுதி ஆர்.எஸ்.எஸ் ஒழிக என்று எழுதும் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் கருத்து நேர்மை அற்றவர். அவரது சொந்த கொள்கை வேறு. காசுக்காகவோ வேறெந்த காரணத்துக்காகவோ வேறொரு கருத்தை பரப்புபவர் கருத்து நேர்மையற்றவர். இவரது கருத்துக்களை மதித்து பதில் சொல்வது வீண் வேலை.
இப்போது ராஜனையே எடுத்துகொள்வோம். அவர் இடதுசாரி எழுத்தாளர். திடீரென்று, ஒரு ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பத்திரிக்கையில், இடதுசாரி தத்துவம் எல்லாம் கெட்டது என்று விலாவாரியாக கட்டுரை எழுதி பிரசுரிக்கிறார் என்று வைத்துகொள்வோம். ராஜனிடம் கேட்டால், “இதிலென்ன இருக்கிறது? காசு கொடுக்கிறேன் என்றார்கள். எனக்கு காசு தேவையாக இருந்தது. நான் எழுதி தந்தேன்” என்று சொல்லிவிட்டு, “ அவர் எந்த அரசியல் ஆதாயத்திற்காக இதை சொல்கிறார், அவர் பின்னால் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் நான் யோசிக்க மாட்டேன். அவர் ஒரு கருத்தை சொல்கிறார். அதை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் என் கோட்பாடு. ”என்றா நான் சொல்லுவேன்? அல்லது ராஜனாவது அப்படி கூறுவாரா?
ஜெயமோகன் சொல்லுவது, அப்படிப்பட்ட ஆட்களது புத்தகங்களுக்கு மதிப்பு தரமாட்டேன் என்பதுதான். அந்த இரட்டை வேடத்தை என்னால் கேள்வி கேட்கமுடியும் என்பதுதான். அந்த கேள்வியைத்தானே கேட்கிறார். அவர் என்ன கமிஸார் போல உட்கார்ந்துகொண்டு புத்தகங்களுக்கா தடைவிதிக்கிறார்?
—
மூன்றாவது கருத்து கிறிஸ்துவ நிறுவனங்கள், ஏகாதிபத்திய நலன்களுக்காக இயங்கும் முன்னணி அமைப்புகள் என்பது உண்மையா பொய்யா?
ஏகாதிபத்தியம் என்பது imperialism.
விக்கி அளிக்கும் இந்த விவரணை ஒப்புக்கொள்ளக்கூடியதாகவே எனக்கு தோன்றுகிறது.
பேரரசுவாதம் (Imperialism) என்பது, ஒரு பேரரசு ஒன்றை உருவாக்கும் அல்லது அதனைப் பேணும் நோக்குடன், ஒரு வெளி நாட்டின்மீது தொடர்ச்சியான கட்டுப்பாட்டையோ மேலாதிக்கத்தையோ செலுத்தும் கொள்கையாகும். இது ஆட்சிப்பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலமோ, குடியேற்றங்களை ஏற்படுத்துவது மூலமோ, மறைமுகமான வழிமுறைகள் மூலம் அரசியல் அல்லது பொருளாதாரத்தின்மீது செல்வாக்கு அல்லது கட்டுப்பாட்டை வைத்திருப்பதன் மூலமோ இது சாத்தியப்படுகின்றது. இச் சொல், அடக்கப்பட்ட நாடு, தன்னைப் பேரரசின் ஒரு பகுதியாகக் கருதுகிறதோ இல்லையோ என்பதைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு நாடு தொலைவிலுள்ள நாடுகளின்மீது கொண்டிருக்கும் மேலாதிக்கக் கொள்கைகளை விபரிக்கவே பயன்படுகின்றது.
இங்கே சீனா, ஐரோப்பா, அமெரிக்கா, ரஷியா, போன்ற நாடுகள் இன்றைய உலக அரசியல் தளத்தில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை இம்பீரியலிஸம் என்று நிச்சயமாக வரையறுக்கலாம். இங்கே மற்ற பகுதிகள் என்பன, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகள் ஆகியவற்றை குறிப்பிடலாம். காலனிய காலத்தில் எவ்வாறு கனிம வளங்களுக்காகவும், மேலாதிக்கத்துக்காகவும் செல்வாக்குக்காகவும் இந்த நாடுகளிடையே போட்டி நிலவியதோ அதே போலத்தான் இன்றும் நிலவுகிறது. அது மட்டுமல்ல, சீனா ஐரோப்பாவிலும், அமெரிக்கா சீனாவிற்குள்ளும் செல்வாக்கையும் கட்டுப்பாட்டையும் வைத்துகொள்ளவும் இடையறாது முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. இதில் காமெடி பீஸாக வடிவேலு மாதிரி இருக்கும் இந்தியா, நைஜீரியாவில் முதலீடு செய்கிறது என்று சொல்லி இந்தியாவையும் மேற்கண்ட நாடுகளையும் ஒரே தரத்தில் வைத்து பேச விழைகிறார். ஒரு சுவாரஸியமான விஷயம் சொல்கிறேன். அவருக்கு தெரிந்திருக்கும். நம் ஊர் மணிஷங்கர் அய்யர் பெட்ரோலிய மந்திரியாக இருந்தார்.
விக்கிலீக்ஸ் வழங்கும் ”இந்தியாவில் அமெரிக்க மேலாதிக்கம்”
http://www.ndtv.com/article/india/wikileaks-cable-pro-us-cabinet-reshuffle-91832
மணி சங்கர் அய்யர், நைஜீரிய எண்ணெய் வயலில் இந்தியாவின் பங்காக இருந்த 45 சதவீதத்தை விட்டுகொடுத்து, அது ஒரு சீன கம்பெனி எடுத்துகொள்ள வழி வகுத்தார்.
http://www.consumercourt.in/product-services/34251-aiyar-defends-decision-let-go-nigerian-oil-field.html
கொசுறு செய்தி: மணி சங்கர் அய்யர் லண்டனில் படித்துகொண்டிருந்தபோது, மார்க்ஸிஸ்ட் சொசைட்டியில் உறுப்பினர். சீனா இந்தியா போரின்போது சீனாவுக்காக பணம் சேகரித்தவர்.
இவரை பெட்ரோலிய மந்திரியாக ஆக்க யார் முனைந்திருப்பார்கள்? இவர் பெட்ரோலிய மந்திரியாக ஆவதால், யாருக்கு லாபம்? இவரை பெட்ரோலிய மந்திரி பதவியிலிருந்து இறக்குவதில் யாருக்கு லாபம்?
யார் இங்கே சூதாடிகள்? இதில் அமெரிக்க குடிமக்களையும் இந்திய குடிமக்களையும் ஒன்றே போல வைத்து, “ ஒவ்வொரு தேசத்தின் உழைக்கும் மக்களும்,
வறியவர்களும் செய்வதறியாது நிற்கின்றனர். ஏதோ போராடுகின்றனர், கோஷங்கள் போடுகின்றனர், வோட்டுப்போடுகின்றனர், ஆட்சியை மாற்றுகின்றனர். ஆனால் வரலாறு
அவர்கள் கைகளிலிருந்து சூதாடிகளின் மேஜைக்கு போய்விட்டது. ” என்று எழுதுவதில் பொருள் ஏதும் உண்டா? அல்லது கொலம்பிய பல்கலைக்கழக வாழ்க்கை அப்படி பேச வைக்கிறதா? அமெரிக்காவில் ஒவ்வொருவரும் பேசும்போது பகிரங்கமாக “what is american interest?” என்ற வார்த்தையை பிரதானமாக பேசுகிறார்கள். இடதுசாரியாகட்டும், வலது சாரியாகட்டும். இருவருமே பேசுவது “what is american interest?” ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? இஸ்ரேலோடு தொடர்பு கொள்ளுவது இந்திய முஸ்லீம்களின் மனது புண்படும் என்று மார்க்ஸிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லீம் லீக கட்சி, காங்கிரஸ் கட்சி எல்லாம் சொல்லுகின்றன. இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் ஸ்னானபிராப்தி ஏதேனும் உண்டா? இஸ்ரேலின் பிரச்னைக்கும் இந்தியாவின் பொருளாதார பிரச்னைகளுக்கும் என்ன சம்பந்தம்? பொருளாதாரமே பிரதானம் என்று சொல்லும் கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் பாலஸ்தீன பிரச்னைக்காக கும்மிடிப்பூண்டியில் ஊர்வலம் போகின்றன? இவர்கள் யாருடைய ஏகாதிபத்தியத்தின் கருவிகள் என்று கேட்பதில் பொருளில்லையா?
ஆகவே ஏகாதிபத்தியம் என்பது தேச உணர்வற்ற முதலீடு என்ற பரம்பொருள் அல்ல. அந்த ஏகாதிபத்தியம் இன்றும் தேசம் சார்ந்தும், இனம் சார்ந்தும்தான் இயங்குகிறது. அந்த தேசம் சார்ந்து இயங்கும் ஏகாதிபத்தியத்துக்கு இன்னமும் மதங்கள் என்பன ஏகாதிபத்திய கருவிகளாகத்தான் இருக்கின்றன. ஏகாதிபத்திய மதங்களான கிறிஸ்துவமும் இஸ்லாமும் முன்பு கொண்டிருந்த இன மேலாதிக்கத்தை மூடி மறைத்திருக்கலாம். ஆனால், இன்னமும் அவை ஏகாதிபத்தியத்தின் கருவிகளாகத்தான் செயல்படுகின்றன. அவை மற்ற நாடுகளின் உள் அரசியலில் தலையிடுவதற்கு ஏற்ற கருவிகளாகத்தான் செயல்படுகின்றன. இதனை புரிந்துகொள்ள கொலம்பியா பட்டப்படிப்போ ஆராய்ச்சி அனுபவமோ தேவையில்லை. சும்மா நியூஸ்பேப்பர் படித்தால் போதும் என்றுதான் நான் கருதுகிறேன்.
இறுதியில், பூச்சாண்டி ஓடிப்போ என்று ஜெயமோகனை விரட்ட முனையும் ராஜன், அவருடைய தரத்துக்கு பொருந்தாத பல வாதங்களை வைக்கிறார். ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1) இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அந்நிய முதலீட்டை விரும்புகின்றன. அப்படி அந்நிய முதலீடு போடும் நாடுகள் ஏன் இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க வேண்டும் என்று கேட்கிறார்.
”அந்நிய நிதி மூலங்கள் இந்திய அரசினை கைக்குள் வைத்திருக்க பல்வேறு அதிருப்திகளை வளர்த்து வைத்துக்கொள்ள விரும்புகின்றன; தேவைப்பட்டால் அவற்றை தூண்டிவிட்டு பெரிதாக்க விரும்புகின்றன என்கிறார் ஜெயமோகன். இது எவ்வளவு அடிப்படையற்ற கற்பனை என்பதை புரிந்துகொள்ள அந்நிய நிதி என்பதை அளவு ரீதியாக முதலில் கவனித்தால் போதும். ”
” எனக்குத் தெரிந்து ஒரு தனிப்பட்ட நபர் அல்லது அமைப்பு பெறும் நிதி என்பது இலட்சங்களில்தான் இருக்கிறது. அப்படியே ஒரு அமைப்பு சாரா நிறுவனத்திற்கு சில கோடிகள் கிடைத்தாலும் அவர்கள் அதை ஆயிரக்கணக்கானோருக்கு பகிர்ந்தளிக்க நேர்கிறது. ”
http://dailypioneer.com/home/online-channel/360-todays-newspaper/45898-christian-missions-pump-whopping-funds-to-ngos.html
The analysis of the Home Ministry’s 42-page report shows that 14,233 NGOs received foreign contribution of Rs10,337.59 crore. The highest contribution came to Delhi (Rs1,815.91 crore) followed by Tamil Nadu (Rs1,663.31 crore) and Andhra Pradesh (Rs1,324.87 crore). Interestingly, in district-wise analysis Chennai topped the list of foreign contribution with Rs871.60 crore, followed by Bengaluru (Rs703.43 crore) and Mumbai (Rs606.63 crore).
தொழிற்சாலையை உருவாக்க 5000 கோடி தேவைப்படுகிறது என்றால், விளம்பரத்துக்கு 3 கோடிதான் போடுவார்கள். 5000 கோடி போடமாட்டார்கள். ஆகவே ஒரு தொழிற்சாலையை உருவாக்க 500 கோடி ஆகிறது.. ஆனால் NGOக்கள் பெறும் அந்நிய நிதி ஒருவருடத்தில் மொத்தமாகவே 10000 கோடிதான் என்று தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் ராஜன்.
The biggest fund inflow to NGOs has come from the USA (Rs3,105.73 crore) followed by Germany (Rs1,046.30 crore) and the UK (Rs1,038.68 crore). These three countries have topped in the donors’ list of Home Ministry for many years. Most the funding has been generated from Christian missionaries of these three nations. The donor missionaries have also formed their Indian subsidiaries.
The other toppers come from Italy (Rs583.47 crore), the Netherlands (Rs509.46 crore), Spain (Rs437.25 crore) Switzerland (Rs302.06 crore), Canada (Rs297.98 crore), France (Rs189.12 crore) and Australia (Rs148.28). The eleventh big donor to Indian NGOs is from UAE with Rs133.15 crore.
இதற்கடுத்துதான் ராஜனின் காமெடியே வருகிறது
//இப்படியிருக்க அரசை கட்டுக்குள் வைத்திருக்க ஆய்வாளர்களுக்கு
சுண்டைக்காய் பணம் கொடுத்து, அவர்கள் ஆய்வை திசை மாற்றி, கருத்தியலை உருவாக்கி, அதை ஊடகத்துள் செலுத்தி, பின்னர் இந்திய அரசிற்கு சிக்கலை ஏற்படுத்தும் திட்டம் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கும்
சாமர்த்தியமாக இருக்கிறது. என்னவோ அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும், தேசிய முதலாளிகளும் இந்த தேசத்தை பாதுகாக்க துடிப்பது போலவும், அறிவுஜீவிகள் மட்டுமே காசு வாங்கிக்கொண்டு காட்டிக் கொடுப்பது போலவும் ஜெயமோகனின் பூச்சாண்டி அரசியல் காமெடி ஃபில்ம் காட்டுகிறது. உண்மை என்னவென்றால் தேசமென்பது மக்கள் என்று கொண்டால் அறிவு ஜீவிகள் மட்டுமே அவர்கள் நலனை பேச முனைகிறார்கள். அதிகாரப் பரவலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறார்கள். வறியவர்கள் சந்திக்கும் அநீதியின் கோர தாண்டவத்தை மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறார்கள். தேசத்தை அந்நிய நிதி மூலங்களுடன் சேர்ந்து சுரண்டும் கும்பலுக்கு அது பிடிக்காததால் இவர்களை தேச விரோதிகள் என்கின்றன. ஜெயமோகனிடம் இடம் என்ன என்பதை அவர் தீர்மானிக்கட்டும். வாசகர்கள் முதலில் என்ன நடக்கிறது என்பதில் தெளிவு பெற வேண்டும். //
அறிவுஜீவிகளின் வேலை என்ன என்பதை அவராகவே அழகாக தெரிவித்துவிட்டார். அறிவுஜீவிகள் பொதுப்புத்தியில் என்ன பேசப்படும் என்பதை நிர்ணயிக்கிறார்கள். ஏன் பெரியாரிஸத்தையே எடுத்துகொள்வோமே. எம்ஜியாரின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில், ஏறத்தாழ பெரியார் ஒரு கிராமப்புற நாத்திகனின் லெவலுக்கு உதாசீனம் செய்யப்பட்டு காலாவதியான பின்னால், திடீரென்று பெரியாருக்கு மகத்தான தத்துவ முலாம் பூசி அறிவுஜீவி கட்டுரைகள் வெளியாயின. தமிழ்நாட்டின் செகுவேரா லெவலுக்கு பெரியார் கொண்டு போகப்பட்டது இந்த கால கட்டத்தில்தான். இதற்கு கோ ராஜாராம், ராஜன் குறை போன்றவர்கள் காரணம். இன்றைக்கும் பெரியார் பேசப்படுவது திராவிட கழக வீரமணியால் அல்ல. இந்த அறிவுஜீவிகளால்தான். இந்த மனச்சாய்வை உருவாக்குவதே அறிவுஜீவிகளின் முக்கிய பணி. ராகுல்காந்திக்கும் ராஜீவ்காந்திக்கும் அறிவுஜீவித்தனத்துக்கும் என்ன சம்பந்தம்? ஆனால், ராஜீவ் காந்தி வரும்போதும், ராகுல்காந்தி தற்போது வரும்போதும், அறிவுஜீவிகளை சந்திப்பதை முக்கிய வேலையாகவே வைத்திருந்தனர். அதற்கு தமிழ்நாட்டு அறிவுஜீவிகளை ஒன்றுபடுத்தி அவர்களை காங்கிரஸ் இளவரசர் ராகுல்காந்தியிடம் பேச வைத்தேன் என்று சிலர் பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள். ஏன்? பல்லாயிரம் கோடி செலவு செய்யும் காங்கிரஸ் கட்சி ஏன் தக்கணூண்டு “அறிவுஜீவிகளை” கண்டு பேச ராகுல்காந்தியை அனுப்பி வைக்கிறது? இவர்களிடம் ஒரு காங்கிரஸ் மனச்சாய்வை ஏற்படுத்துவது முக்கியமான வேலை. இது ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் காசு கொடுக்காத விளம்பரமாக காங்கிரஸின் புகழ்பாடப்படும்.
இதற்காகத்தான் முன்பு அமெரிக்காவும் ரஷியாவும் சீனாவும் இந்திய “அறிவுஜீவிகளுக்கு” பலவகைகளில் பெருமைப்படுத்துவதையும் உதவுவதையும் செய்தன. லெனின் பரிசு அளிப்பதும், அமெரிக்க பயணமும், சீன பயணமும் கொடுக்கப்பட்டன. இன்னும் பல்வேறு வழிகளில் அவை வழங்கப்படுகின்றன.
—
அடுத்து இந்திய அரசே காட்டும் பூச்சாண்டி என்று ஐந்தாவது புள்ளிக்கு வருவோம்.
இந்திய அரசு மீது பல்வேறு வழிகளில் குற்றம் சாட்டலாம். இந்திய அரசு அப்படி இளையதாக முள் மரம் கொல்லும் அரசு அல்ல என்று நன்றாக தெரிந்துகொள்ளலாம். தும்பை விட்டு வாலை பிடிக்க முனையும் இந்திய அரசு “ஜனநாயகமற்ற அரசு” என்று பெயர் வாங்குவதில் முன்னணி அரசு. செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள் இருக்கும் இந்தியாவில் என்ன பிரச்னை?
இந்தியாவில் எந்த அறிவுஜீவியும், டெக்ஸாஸ் தனி நாடு கோரிக்கை பற்றி ஆய்வு நடத்தி, அமெரிக்காவிலிருந்து ஆட்களை கூட்டிவந்து மாநாடு நடத்துவதில்லை.
ரஷியாவில் முஸ்லீம் பிரதேசங்கள் மீது நடக்கும் ஒடுக்குமுறை அடக்குமுறையை பற்றி உலகளாவிய வர்க்கப்போராட்டத்துக்கும் பாலஸ்தீனத்து முஸ்லீம்களுக்காக கோயம்பேட்டில் ஊர்வலம் போகும் தோழர்கள் மாநாடு நடத்துவதில்லை.
உய்குர் மக்கள் மீதும் திபெத்திய மக்கள் மீதும் சீன கம்யூனிஸ குடியரசு நடத்தும் அடக்குமுறையை பற்றி நம் செந்தோழர்கள் மாநாடு போடுவதுமில்லை, நமது அறிவுஜீவிகள் பக்கம் பக்கமாக எழுதி, முஸ்லீம்களிடம் நல்ல பெயர் வாங்குவதுமில்லை. ஏனென்றால், அதுவெல்லாம் “முற்போக்காக” இருக்காதுதானே? ஆனால் பாருங்கள் வடகொரிய கிம் இல் சுங் அவர்கள் அந்த நாட்டு காந்தி மாதிரி என்று பிரண்ட்லைன் கட்டுரை வரையலாம். இந்திய மக்களோ, இந்திய அரசாங்கமோ எதுவும் கண்டுகொள்ளுமா என்ன?
அல்லது நக்ஸலைட்டுகள் குண்டு வைத்து மக்களை கொல்வதும், டெலிபோன் டவர்களை உடைப்பதும் இந்திய மக்களின் நன்மைக்காகத்தான், இந்திய மக்களின் முன்னேற்றத்துக்காகத்தான் என்று தாராளமாக எழுதலாம். அதெல்லாம் கருத்து சுதந்திரத்தில் வந்துவிடுமல்லவா? அதையெல்லாமா இந்திய அரசு தடுக்கப்போகிறது? பல லட்சம் கோடி ரூபாய் போட்டு ஒரு அணு உலையை திறக்கும் தருவாயில் அதை திறக்கக்கூடாது என்று கூட்டம் போட்டு தர்னா செய்யும்போது, நம்ம வடிவேலு ரேஞ்சில் தத்தக்கா பித்தக்கா என்று ஏதோ செய்யமுனைகிறது. உடனே நம்ம ராஜன் போன்ற அறுவுஜீவிகளுக்கெல்லாம் அறச்சீற்றம் பொங்கிவிடுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் அந்த உடையுடனே போராட்டத்துக்கு நேரே வந்து ஆசீர்வாதம் செய்கிறார். ஆனால் பாருங்கள், பிரான்ஸில் 55 சதவீத மின்சக்தி அணு உலையிலிருந்துதான் வருகிறது. அங்கே எந்த பாதிரியாரும் வந்து போராட்டம் பண்ணியதாக தெரியவில்லை. அணு சக்தி இல்லை என்றால், பாதி ஐரோப்பா இருண்டு போகும். கத்தோலிக்க சர்ச் ஒரு சத்தமும் போடக்காணோம். என்ன காரணமாக இருக்கும்?
பூச்சாண்டி அரசியலை உருப்படியாக பண்ணத்தெரியவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இறுதியாக ஆய்வுக்கு ஆதரவு கொடுங்கள் என்று ஜெயமோகன் சமூகத்தில் பிரேரனை வைத்திருக்கிறார் ராஜன். இங்கேதான் நகைச்சுவையே இருக்கிறது. எப்போருள் யார் யார் வாய் கேட்பினும் என்று குரல் பேசியவர், விஷ்ணுபுரம் அறக்கட்டளை, ஹிந்துஜா போன்றவர்களிடம் நன்கொடை வாங்கி நடத்துவது “தேசிய” நன்கொடை என்று கிண்டலடிக்கிறார். இங்கே அவரது நக்கலுக்கு இரையாகியுள்ளது, “இந்திய இறையாண்மை, இந்திய நாட்டின் பண்பாடு” ஆகியவை. இவர்கள் காசு கொடுத்து ராஜன் பண்பாட்டு ஆய்வு செய்ய தயாராக இருக்கிறாராம். அப்படி என்ன பண்பாட்டு ஆய்வு செய்வீர்கள் ராஜன்? செய்யும் ஒவ்வொரு பண்பாட்டு ஆய்விலும் அதன் தலைப்பிலிருந்து இறுதி முற்றுப்புள்ளி வரைக்கும் நான் அரசியலையே பார்க்கிறேன். அந்த அரசியல் தெளிவாகவே எந்த மனச்சாய்வுடன் எழுதப்பட்டதை என்பதையும் பார்க்கிறேன். அது உங்களது இறுதி பாராவிலும் வெளிப்படுகிறது. இவர் பண்பாட்டு ஆய்வு செய்வதற்காக கடுமையாக உழைப்பதெல்லாம் ஒரு துப்புரவு தொழிலாளி கௌரவமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என்று அறிந்து எவ்வளவு புளகாங்கிதம் அடைகிறேன்!
—
கிண்டல் தவிர்த்து.
இங்கே அரசியல் என்பது இறுதி துப்புரவு தொழிலாளி கௌரவமாக வாழ வேண்டும் என்பதுதான் என்பதை அறிவேன். அது அணு உலைகளை நிறுத்துவதால் வராது. அது அணைகளை நிறுத்துவதால் வராது. பிச்சை எடுக்கும் மனிதர்கள் இருக்கும்போது வானவெளி பிரயாணம் எதற்கு என்று கேட்பதால் வராது. நியூட்ரினோ ஆராய்ச்சிசாலைகளை தடுப்பதால் வராது. அவ்வாறு நியூட்ரினோ ஆராய்ச்சிசாலைகளால் மனிதர்கள் சாவார்கள் என்றெல்லாம் பிலிம் காட்டுவதுதான் என்னை பொறுத்தமட்டில் பூச்சாண்டி அரசியல். அந்த பூச்சாண்டி அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள், இந்தியச் சார்பு நிலையை முன்வைக்கும் ஜெயமோகனின் கருத்துகளை பூச்சாண்டி அரசியல் என்று நிராகரிப்பதும், இந்திய அரசியலை பூச்சாண்டி அரசியல் என்பது நகைப்புக்கிடமானது.
- முள்வெளி அத்தியாயம் -15
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 19
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32
- நினைவுகளின் சுவட்டில் (91)
- ஏகாலி
- சித்திரவதைக் கூடத்திலிருந்து
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -1
- தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்த
- “ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)
- சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு
- தாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி !
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-8)
- காலணி அளவு
- ஹைக்கூ தடங்கள்
- உள்ளோசை கேட்காத பேரழுகை
- பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்
- துரத்தல்
- ஏழாம் அறிவு….
- கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -3 நிறைவுப் பகுதி)
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு
- பத்தாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா
- அஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்
- சின்னஞ்சிறு கிளியே…!
- துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி
- மணமான அந்தப் பெண்களின் பெயரில்…
- திண்ணைப் பேச்சு – புத்தகங்களிற்கு எதிரான போர்
- ஒரு வெளிர் நீல நிறப் புள்ளி : பூமி மீது ஓர் அன்னியப் பார்வை
- குழந்தைகள் நலனைப் பலி கொடுக்கும் மதவாதக் கலாசாரம்
- அன்பிற்குப் பாத்திரம்
- அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சி
- ஜெயமோகனின் இந்தியா : ராஜன் குறையின் “தர்க்க” ரீதியான மறுப்பும் பூச்சாண்டி வேடக் கலைப்பும்