மணமான அந்தப் பெண்களின் பெயரில்…

This entry is part 26 of 32 in the series 1 ஜூலை 2012

 

உருது மூலம் – இஸ்மத் சுக்தாய்

ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி

மாலை நான்கு அல்லது நாலரை மணி இருக்கலாம். வாசலில் அழைப்பு மணி அலறியது.  வேலைக்காரன் ஓடிச்சென்று கதவைத் திறந்தவன் கலவரமான முகத்துடன் ஓடிவந்தான்.

“யார் அது?”

“போலீஸ்”.  இந்தத் தெருவில் ஏதாவது ஒரு வீட்டில் களவு போனால் இங்குள்ள எல்லா வீடுகளின்  வேலைக்காரர்களிடம் முதலில் விசாரணை நடக்கும்.

“போலீஸ்?” என்று எரிச்சலுடன் கேட்டுக் கொண்டே பரபரப்புடன் எழுந்தார்  ஷாஹித்.

“ஆமாம் ஜனாப்” நடுங்கினான் அவன்.  “நான் ஒன்றும் செய்யவில்லை ஸாஹிப்.  சத்தியமாக எனக்கு ஒன்றும் தெரியாது”.

“என்ன விஷயம்?” ஷாஹித் கதவுக்கு அருகில் சென்று உரக்கக் கேட்டார்.

“சம்மன்..”

“சம்மனா?   எதற்கு?  யாருக்கு?”

“இஸ்மத் சுக்தாய்.  தயவு செய்து அவரைக் கூப்பிடுங்கள்”

வேலைக்காரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

“எதற்காக?  அவருக்கு  எதற்கு இப்போது சம்மன்?” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டார் ஷாஹித்.

“தயவு செய்து அவங்களைக் கூப்பிடுங்க ஜனாப்.   சம்மன் லாஹூரில் இருந்து வந்திருக்கிறது”

இரண்டு வயது மகள் சீமாவுக்காக பாட்டிலில் சூடான பாலை ஊற்றி வைத்து சூடு ஆறுவதற்காகக் காத்திருந்தேன்.  “லாஹூரில் இருந்து சம்மனா?” சூடான பால் பாட்டிலை தண்ணீரில் முக்கியவாறு வாசலை நோக்கிக் கேட்டேன்.

“ஆமாம்.  லாஹூரில் இருந்துதான்”.  அமைதியை இழந்த குரலில் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்  ஷாஹித்.  கையில் பால் பாட்டிலை ஏந்தியவாறு செருப்பணியாத கால்களுடன் வாசலை நோக்கி வந்தேன்.

“எதற்காக இந்த சம்மன்?”

“படித்துப் பாருங்கள்”  இன்ஸ்பெக்டர் விரைப்பாக சொன்னது போல இருந்தது.

Ismat Chughtai Vs The Crown என்ற முதல் வரியைப் படித்ததுமே உரக்க சத்தம் போட்டு சிரிக்கத் துவங்கினேன்.  “அடக் கடவுளே… மேன்மை தங்கிய மன்னருக்கு   வழக்கு தொடுக்கும் அளவுக்கு என் மீது என்ன  அத்தனை கோபம்?”

“பாருங்க.  இது ஒன்றும் வேடிக்கையான விஷயம் இல்லை” சற்றுக் கடுமையான குரலில் சொன்னார் அந்த இன்ஸ்பெக்டர்.  “முதலில் படித்து விட்டு கையெழுத்து போடுங்கள்.”  அந்த சம்மனை படித்துப் பார்த்தேன்.  ஆனால் முழுக்கப் புரியவில்லை.  என்னுடைய “லிஹாஃப் (போர்வை) கதையில் ஆபாசங்கள் நிறைந்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.  அதற்காக அரசாங்கம் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது.  ஜனவரி மாதத்தில் நான் இந்த வழக்குக்காக லாஹுர் உயர்நீதிமன்றத்தில்  ஆஜர் ஆகவேண்டும்.  தவறினால் அரசாங்கம் என்னைக் கடுமையாகத் தண்டிக்கும்.

“ஓஹோ.  நான் இந்த சம்மனை வாங்கிக் கொள்ள மாட்டேன்”

“நீங்கள் கட்டாயமாக வாங்கித்தான் ஆகவேண்டும்”

“ஏன்?” – வழக்கப்படி நான்  கடுமையான குரலில் விவாதிக்கத் துவங்கினேன்.

“என்ன நடக்குது இங்கே?” என்று கேட்டுக் கொண்டே மொஹ்ஸின் அப்துல்லா படியேறி வந்தார்.  அவர் எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை.  உடல் முழுக்க புழுதி படிந்திருந்தது.

“பாருங்கள்.  இவர்கள் என் மீது குற்றம் சுமத்தி சம்மன் கொடுக்கப் பார்க்கிறார்கள்.  நான் எதற்கு வாங்கிக் கொள்ள வேண்டும்?” மொஹ்ஸின் சட்டப் படிப்பு முடித்தவர்.

“ஓஹோ.. எந்தக் கதை அது?” என்று சம்மனைப் படித்து முடித்ததும் கேட்டார்.

” என் தலையெழுத்து.  ரொம்ப நாட்களாக எனக்குப் பலவகைகளிலும் சித்திரவதையைத் தந்து கொண்டிருக்கிறது  அந்தக் கதை”

“நீ சம்மனை வாங்கித்தான் ஆகவேண்டும்.”

“ஏன்?”

“பிடிவாதம்  பிடிக்காதே” என்று சுட்டெரிக்கும் பார்வையில் சொன்னார் ஷாஹித்.

“நான் வாங்க மாட்டேன்”

“வாங்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் உன்னைக் கைது செய்வார்கள்” என்று மொஹ்ஸின் உறுமினார்.

“என்னைக் கைது செய்யட்டும். நான் அந்த சம்மனை வாங்க மாட்டேன்”

“உன்னை சிறையில் தள்ளுவார்கள்”.

“சிறையிலா?  அருமையான விஷயம்.  எனக்குப் பல  நாட்களாக சிறையைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்னை ஏதாவது சிறைக்குக் கூட்டிப் போ என்று யூசுஃப் பிடம் பலமுறை கேட்டு விட்டேன்.  அவர் வெறுமனே சிரித்து விட்டு சாக்கு போக்கு காட்டுகிறார்.  இன்ஸ்பெக்டர் சாஹிப்.  தயவு செய்து நீங்களாவது என்னை சிறைக்கு அழைத்துப் போக வேண்டும்.  கைவிலங்கு ஏதாவது எடுத்து வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.

இன்ஸ்பெக்டர் குழம்பிப் போனார்.  மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த  முயற்சித்தவாறு, “வேடிக்கையை நிறுத்துங்கள்.  இதில் கையெழுத்துப் போடுங்கள்” என்றார்.

ஷாஹித்தும் மொஹ்ஸினும் என்னைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் நான் மிகவும் சந்தோஷத்துடன் எதையோ உளறிக் கொண்டிருந்தேன்.  “அபா ஜான், ஸாம்பர் நகரத்தில்  நீதிபதியாக இருந்தார்.  அப்போது கோர்ட் எங்கள் வீட்டு மர்தானாவில் (ஆண்கள் கூடும் முன்னறை) கூடும்.  திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களை கைவிலங்குகளாலும் சங்கிலிகளாலும் பூட்டி  அழைத்து வருவதை நாங்கள் ஜன்னல் வழியாக ஒளிந்திருந்து வேடிக்கை பார்ப்போம்.  ஒருமுறை மிகவும் ஆபத்தானவர்கள் என்று சொல்லப்பட்ட கொள்ளையர்களை அங்கு அழைத்து வந்தார்கள்.  அவர்களுக்கு இடையில் ஒரு பெண்மணியும் இருந்தாள்.  அவள் மிகவும் கம்பீரமாக இருந்தாள்.  அவளுடைய கோட்டும்  முக்கால் நிஜாரும் அவளுக்கு  இன்னும் கம்பீரத்தைக் கூட்டியது.  அவளுடைய கண்கள் கழுகின் கண்களைப் போலக் கூர்மையாக இருந்தன.  சிறுத்தையைப் போலக் குறுகிய இடுப்பு.  வளமான கருத்த நீண்ட கூந்தலுடன் இருந்தாள்.  அவள் என்னை மிகவும் கவர்ந்தாள்.  அவளைப் பார்ப்பதற்கே எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது…”

ஷாஹித்தும் மொஹ்ஸினும் என்னை கையெழுத்திடுமாறு வற்புறுத்தினார்கள்.  சம்மனில் கையெழுத்து இடுவதற்கு வசதியாக நான் கையில் பிடித்திருந்த பால் பாட்டிலை இன்ஸ்பெக்டர் கையில் கொடுக்க முயற்சித்தேன்.   தன் கையில் ஏதோ துப்பாக்கியை திணித்தது போல திடுக்கிட்டுப் பின்வாங்கினார் இன்ஸ்பெக்டர்.  மொஹ்ஸின் என்னுடைய கையில் இருந்து  பாட்டிலை மிகவும் வேகமாகப் பிடுங்கிக் கொண்டார்.  நான் முனகியவாறு சம்மனில் கையெழுத்திட்டேன்.

“போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சில படிவங்களில் நீங்கள் கையெழுத்துப் போடவேண்டும்.  ஜாமீன் தொகை ஐந்நூறு ரூபாய் ஏற்பாடு செய்து கொண்டு வரவேண்டும் நீங்கள்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“என்னிடம் இப்போது ஐந்நூறு ரூபாய் கிடையாது”

“உங்களிடம் இருக்கத் தேவை இல்லை.  உங்களுக்காக யாராவது முன்வந்து  உத்தரவாதம் அளிக்க வேண்டும்”

“எனக்கு யாரையும் இதில் ஈடுபடுத்த விருப்பம் இல்லை.  நாளை நான் கோர்ட்டுக்குப் போகவில்லை என்றால் எனக்கு உத்தரவாதம் அளித்த அந்த மனிதர் அவதிப் படவேண்டும். அவருக்குப் பண  இழப்பும் ஏற்படும்” என்னுடைய சட்ட ஞானத்தை வெளிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பது போலச் சொன்னேன்.  “தயவு செய்து என்னைக் கைது செய்யுங்கள்”.

இந்தத் தடவை இன்ஸ்பெக்டர் கோபம் கொள்ளவில்லை.  புன்னகைத்தவாறு   சோபாவில் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த  ஷாஹித்தை ஏறிட்டுப் பார்த்தார்.  பிறகு என்னிடம் மென்மையான குரலில் சொன்னார், “தயவு செய்து என்னோடு வாருங்கள்.  ஒரு சில நிமிடங்களுக்குத்தான் அங்கே வேலை இருக்கும்”.

“ஆனால் ஜாமீன்?” சமாதானப் படுத்தும் தொனியில் கேட்டேன்.  என்னுடைய  முட்டாள்தனமான நடத்தை எனக்கே சற்றுக் கூச்சம் அளித்தது.

“உனக்கு நான் ஜாமீன் தருகிறேன்” என்றார் மொஹ்ஸின்.

“குழந்தை பசியோடு இருக்கிறாள்.  அவளுடைய ஆயா ரொம்பவும் சின்னப்பெண்.  அவளுக்கு அனுபவம் கிடையாது”

“குழந்தைக்குப் பால் புகட்டி விட்டு வாருங்கள்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அப்படி என்றால் தயவு செய்து உள்ளே வந்து காத்திருங்கள்” என்று மொஹ்ஸின் இன்ஸ்பெக்டரிடம் கேட்டுக் கொண்டார்.  இன்ஸ்பெக்டரின் கவனம் இப்போது ஷாஹித் பக்கம் திரும்பியது. அவர் ஷாஹித்தின் ரசிகராம்.  ஷாஹித்தை அளவுக்கு மீறி முகஸ்துதி செய்யத் துவங்கினார்.  அவருடைய எரிச்சல் இப்போது மறைந்திருந்தது.  ஷாஹித்துடன் திரைப்படங்கள் பற்றி மிகவும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

நான், மொஹ்ஸின் மற்றும் ஷாஹித், மாஹிம் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கிளம்பிப் போனோம்.  கையெழுத்திடுவது போன்ற சம்பிரதாயங்களை முடித்து விட்டு நான் கேட்டேன், “கைதிகள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள்??

“உங்களுக்கு அவர்களைப் பார்க்க வேண்டுமா?”

“கண்டிப்பாக”

கம்பிகளுக்கு அந்தப் பக்கத்தில் பத்து அல்லது பன்னிரெண்டு பேர் தாறுமாறான நிலையில் படுத்திருந்தார்கள்.

“இவர்கள் எல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.  கைதிகள் கிடையாது” என்றார் இன்ஸ்பெக்டர்.

“என்ன குற்றம் செய்தார்கள்?

“தகராறு, வன்முறை, பிக்பாக்கெட், குடித்துவிட்டு அடிதடி…”

“இவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்?”

“அபராதம் விதிப்பார்கள் அல்லது சில நாட்கள் சிறை தண்டனை கிடைக்கும்.  இங்கு சிறிய அளவிலான திருடர்களை மட்டுமே பார்க்க நேர்ந்தது குறித்து சற்று வருத்தப்பட்டேன்.  கொலைகாரர்களாகவோ அல்லது வழிப்பறிக் கொள்ளைக் காரர்களாகவோ இருந்திருந்தால் என்னுடைய இந்த போலீஸ் ஸ்டேஷன் வருகை கொஞ்சமாவது அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.  உற்சாகமாக இருந்திருக்கும்.

“என்னை எங்கே சிறை வைப்பீர்கள்?”

“பெண்களுக்கான சிறை வசதிகள் இங்கே இல்லை.  அவர்களை கிராண்ட் ரோடு அல்லது மாதுங்காவுக்கு அழைத்துச் செல்வோம்”.

வீட்டுக்குத் திரும்பியதும் ஷாஹித்தும் மொஹ்ஸினும் என்னை வன்மையாகக் கடிந்து கொண்டார்கள்.  சொல்லப்போனால் அன்று இரவு முழுதும் ஷாஹித் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்.  விவாகரத்து செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.   அமைதியாக இல்லை என்றால் நான் காணாமல் போய்விடுவேன் என்றும் பிறகு அநியாயத்துக்கு ஐந்நூறு ரூபாயை இழக்க வேண்டி இருக்கும் என்றும் மொஹிஸினை அமைதிப்படுத்தினேன்.  அரசாங்கம் எனக்கு எதிராகத் தொடுத்த வழக்கினால் ஏற்பட்ட அவமானத்தையும் சிறுமையையும் தாங்க முடியாமல் ஷாஹித் மிகவும் அவதிப்பட்டார்.  அவருடைய பெற்றோர்களுக்கும் மூத்த சகோதரர்களுக்கும் இதுகுறித்து அறியவந்தால் மிகவும் வேதனைப்படுவார்கள்.

செய்தித் தாள்களில் இந்த வழக்கு குறித்த செய்திகள் வந்தபோது என்னுடைய மாமனார் ஷாஹித்துக்கு ஒரு பெரிய கடிதம் எழுதியிருந்தார்.    அந்தக் கடிதத்தில், “மருமகளுக்கு நல்லவிதமாகச் சொல்லிப் புரிய வைக்கவும்.  அல்லாஹ்வின் திருநாமத்தையும் இறைத்தூதரின் திருநாமத்தையும் இடைவிடாமல் ஜெபிக்கச்சொல்.  கிரிமினல் வழக்கு என்பது மிகவும் மோசமான விஷயம்.  அதுவும் ஆபாசத்தைக் காரணம் காட்டி தொடுக்கப்பட்ட வழக்கு அதை விட மோசம்.  எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.  ஆண்டவன் உன்னைக் காப்பாற்றட்டும்” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது.

தன்மீதும் இப்படி ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்று மாண்ட்டோ தொலைபேசி வழியாகத் தெரிவித்தார்.  அவரும் அதே கோர்ட்டில், அதே நாளில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்திருப்பதாகச் சொன்னார்.  அவரும் ஸாஃபியாவும் எங்கள் வீட்டுக்கு வந்து இறங்கினார்கள்.  தனக்கு ஏதோ விக்டோரியா கிராஸ் விருது கிடைத்தது போல மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார் மண்ட்டோ.  கொஞ்சம் தைரியமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், எனக்கு தர்மசங்கடமாக இருந்தது.  மிகவும் பதட்டமாகவும் இருந்தது.  ஆனால் மண்ட்டோ என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.  அதனால் என்னுடைய பதட்டம் சற்றுத் தணிந்தது போல இருந்தது.

“அட… ஏன் கவலைப்படுகிறாய்?  நீ எழுதிய மகத்தான கதை இது ஒன்றுதான்.  ஷாஹித், ஆண்பிள்ளையாக இரு.  எங்களுடன் லாஹூருக்கு வா.  லாஹூரின் குளிர்காலம் மிகவும் கடுமையாக இருக்கும்.  அந்தக் குளிரில்… ஆஹா, விஸ்கியுடன் கொஞ்சம் வறுத்த மீனையும் சாப்பிடவேண்டும்.  ஒரு காதலனின்  உள்ளத்தில் மூண்டு எரிகின்ற தீயைப் போல கணப்பை மூட்டிக் கொண்டு ரத்தச் சிகப்பான மால்டா பழங்களை உறிஞ்சுவது ஏதோ காதலியின் மிருதுவான கன்னங்களில் முத்தமிடுவதுபோல இருக்கும்…”

“மண்ட்டோ சாஹிப், சற்று பேசாமல் இருங்கள்” என்று ஸாஃபியா அவரைக் கடிந்து கொண்டாள்.

பிறகு, ஆபாசமான வசைச் சொற்களைத் தாங்கி  எங்களுக்குக் கடிதங்கள் வரத்துவங்கின.  அந்தக் கடிதங்களில் மிகவும் மோசமான வசவுகள் இருந்தன.  கேவலமான வகையில் எழுதப்பட்ட ஆபாசமான சொற்கள் இருந்தன.  உறவுகளைக் கொச்சைப்படுத்தும் வார்த்தைகள் இருந்தன.  ஒரு பிணத்தின் முன்பு அந்த வசவுகளை எறிந்தால் கூட அந்தப் பிணம் கூட தலைதெறிக்க எங்காவது ஓடி முகத்தைப் புதைத்துக் கொள்ள அலையும்.  என்னை மட்டுமல்ல… என்னுடைய முழுக்குடும்பத்தையும், ஷாஹித் மற்றும் என்னுடைய இரண்டு மாதங்களே ஆன எங்கள் குழந்தையையும் அந்தக் கடிதத்தில் இழுத்திருந்தார்கள்.

சேறு, சாணம் மற்றும் பல்லியைப் பார்த்தால்  நான் மிகவும் பயப்படுவேன்.  சிலர் தைரியசாலிகள் போல நடிப்பார்கள்.  ஆனால் செத்து விழுந்திருக்கும் எலிக்குஞ்சைப் பார்த்து பயப்படுவார்கள்.  எனக்கு வந்த கடிதங்களைப் பார்த்து நான் பயப்படத் துவங்கினேன்.  அவற்றின் உறைகளில் ஏதோ கொடிய விஷப்பாம்புகளும்,  பிரம்மாண்டமான கொடுக்குகள் உள்ள தேள்களும் ராட்சச விலங்குகளும் பதுங்கி இருப்பதைப் போன்ற நடுக்கத்தை அளித்தன.  அந்தக் கடிதங்களின் முதல் ஓரிரு வரிகளைப் படித்துவிட்டு அப்படியே அவற்றை தீயிட்டுப் பொசுக்கி விடுவேன்.  எப்படியோ அது ஷாஹித்தின் கைகளுக்குப் போனதென்றால் நான் தொலைந்தேன்.  என்னை விவாகரத்து செய்து விடுவேன் என்று தன்னுடைய மிரட்டலை மீண்டும் ஆரம்பித்து விடுவார்.

கடிதங்களைத் தவிர இலக்கியப் பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களில்  கட்டுரைகளும், இலக்கியக் கூட்டங்களில் என் கதை குறித்த விவாதங்களும் சூடு கிளப்பிக் கொண்டிருந்தன.  என்னைப் போன்ற இறுகிப்போன இதயம் உள்ள பெண்மணியால் மட்டுமே அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியும்.  நான் அவற்றுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.  என்னுடைய தவறுகளை ஏற்றுக் கொள்ள நான் மறுக்கவும் இல்லை.  என்னுடைய தவறுகள் என்னவென்று எனக்குத் தெரியும்.  என்னுடைய கோழைத்தனத்தைக் கண்டு பெருத்த கோபம் கொண்டது மாண்ட்டோ மட்டுமே.  நான் என்னுடைய சுயத்துக்கு நேரிடையாக இருந்தேன்.  மாண்ட்டோ என்னை ஆதரித்தார்.  என்னுடைய  நண்பர்களோ ஷாஹித்தின் நண்பர்களோ இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.  என்னால் அத்தனை உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் அப்பாஸ் என்னுடைய லிஹாஃப் (போர்வை) கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு யாரோ பதிப்பித்து இருந்ததை எப்படியோ  வாங்கி வைத்திருந்தார். முற்போக்குவாதிகள் என்னுடைய கதையைப் பாராட்டவும் இல்லை.  அதில் குறையும் காணவில்லை.  இது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது.

நான் ‘லிஹாஃப்’ கதையை எழுதிய போது என்னுடைய சகோதரன் வீட்டில் தங்கியிருந்தேன்.  ஓர் இரவில் இந்தக் கதையை எழுதி முடித்தேன். விடிந்ததும் என்னுடைய அண்ணிக்கு அந்தக் கதையை வாசித்துக் காட்டினேன்.  அந்தக் கதையில் விவரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களை அவரால் அடையாளம் காண முடிந்தாலும் அந்தக் கதை விரசமாக இருந்தது என்று அவர் நினைக்கவில்லை.  பிறகு என்னுடைய அத்தை மகள் ஒருத்திக்குப் படித்துக் காட்டினேன். அவளுக்குப் பதினான்கு வயதிருக்கும்.  அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அந்தக் கதையை நான் அதாப்-இ-லதீஃப்  இதழுக்கு அனுப்பி வைத்தேன்.  அவர்கள் அதனை உடனடியாகப் பிரசுரித்தார்கள்.  ஷாஹித் அஹ்மத் தெஹ்லவி அப்போது என்னுடைய  சிறுகதைகளை ஒரு தொகுப்பாகத் தொகுத்து வெளியிட முயற்சித்துக் கொண்டிருந்தார். இந்த லிஹாஃப் கதையை அந்தத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டார்.  அந்தக் கதை 1942ல் பிரசுரிக்கப்பட்டது.  எனக்கும் ஷாஹித்துக்கும் இடையில் நட்பு நெருக்கமாகி நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்தக் கதை வெளியானது. ஷாஹித்துக்கு இந்தக் கதை சுத்தமாகப் பிடிக்கவில்லை.  நாங்கள் சண்டை போட்டுக் கொண்டோம்.  ஆனால் லிஹாஃப் தொடர்பான சர்ச்சைகள் பம்பாய் வரை வந்து சேரவில்லை.  நான் ஸாக்கி மற்றும் அதாப்-இ-லதீஃப்  போன்ற இரு பத்திரிகைகளை மட்டுமே வரவழைத்துக் கொண்டிருந்தேன்.  ஷாஹித் அப்போது அத்தனை கோபமாக இல்லை.  நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

1944 டிசம்பர் மாதத்தில் எங்களுக்கு சம்மன் கிடைத்தது.  ஜனவரி மாதம் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார்கள்.  எங்களுக்கு அபராதம் மட்டும் விதிப்பார்கள். சிறை தண்டனை எல்லாம் கிடைக்காது என்று எல்லோரும் சொன்னார்கள்.  எனவே நாங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தோம்.  லாஹூரின் குளிருக்கான  ஆடைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டோம்.

சீமா கைக்குழந்தையாக இருந்தாள்.  மிகவும் பலவீனமாக இருந்தாள்.  எப்போதும் கீச்சென்ற குரலில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பாள்.  அவளை நாங்கள் ஒரு குழந்தைகள் மருத்துவரிடம் அழைத்துப் போனோம்.  அவள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் உறுதி அளித்தார்.  ஆனாலும் லாஹூரின் கடுமையான குளிரில் அவளை அழைத்துப் போவது சரியாக இருக்காது என்று நினைத்தோம்.   எனவே, குழந்தையை அஜ்மீரில் உள்ள சுல்தானா ஜாஃப்ரியின் தாயாருடைய  பொறுப்பில்  விட்டு விட்டு நாங்கள் லாஹுருக்குப் புறப்பட்டோம்.  ஷாஹித் அஹ்மத் தெஹ்லாவி மற்றும் என்னுடைய கதையை நகல் எடுத்த காலிகிராஃபரும் என்னுடன் டெல்லியில் இருந்து சேர்ந்து கொண்டார்கள்.  இந்த நகல் எடுத்த மனிதரையும் குற்றவாளிகளில் ஒருவராக பிரிட்டிஷ் அரசு சேர்த்து இருந்தது.  அதாப்-இ-லத்தீஃப் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கவில்லை.  அந்தக் கதையை தொகுப்பில் சேர்த்து இருந்த ஷாஹித் அஹ்மத் தெஹ்லவி குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

ரயில்வே ஸ்டேஷனுக்கு எங்களை அழைத்துச் செல்ல சுல்தானா வந்திருந்தாள்.  அவள் லாஹூர் ரேடியோ நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள்.  லுக்மன் சாஹிப்பின் வீட்டில் தங்கியிருந்தாள்.  மிகப் பெரிய மாளிகை அது.  லுக்மன் சாஹிப்பின் மனைவி குழந்தைகளுடன் தன் பெற்றோர்களைப் பார்க்க ஊருக்குப் போயிருந்தாள்.  எனவே அந்த மாளிகை முழுதும் எங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தது.

மாண்ட்டோவும் லாஹூர் வந்தடைந்தார்.  அங்கு பல இடங்களில் இருந்து எங்களுக்கு அழைப்புக்கள் குவிந்தன.  அவர்களில் பலரும் மாண்ட்டோவின் நண்பர்கள்.  ஆனால் அவர்கள் அனைவரும் என்னைப் போன்ற ஒரு  விசித்திரமான பிராணியைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.  நாங்கள் ஒரு நாள் கோர்ட்டார் முன்பு ஆஜரானோம்.  நீதிபதி என்னுடைய பெயரைக் கேட்டார்.  அந்தக் கதை நான் எழுதியதா என்றும் கேட்டார்.  நான் தான் அந்தக் கதையை எழுதினேன் என்று ஒப்புக் கொண்டேன்.  அவ்வளவுதான்.

எங்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.  எங்கள் வழக்கறிஞர் எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருந்தார்.  அவர் என்ன பேசுகிறார் என்பது எங்களுக்கு அதிகம் பிடிபடவில்லை.  ஏனென்றால் அவர் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் எங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தோம்.   விசாரணைக்கான அடுத்த தேதி அறிவிக்கப்பட்டது.  நாங்கள் இப்போதைக்குப் போகலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.    மாண்ட்டோ, ஷாஹித் மற்றும் நான் ஒரு டோங்காவில் ஏறி கடைவீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தோம்.  கஷ்மீரி ஷால்கள்  மற்றும் காலணிகளை வாங்கினோம்.  நாங்கள் காலணிகள் வாங்கிய போது மாண்ட்டோவின் மென்மையான பாதங்கள் எனக்குள் பொறாமையைக் கிளப்பியது.  என்னுடைய கரடுமுரடான அழகற்ற பாதங்களைக் கண்டபோது எனக்கு அழுகை அழுகையாக வந்தது.

“என்னுடைய பாதங்களை நான் வெறுக்கிறேன்” என்றார் மாண்ட்டோ.

“ஏன்?  அவைதான் அத்தனை அழகாக இருக்கின்றனவே?”

“ஒரு பெண்ணின் பாதங்களைப் போல இருக்கின்றன”

“அதனால் என்ன?  உங்களுக்குத் தான் பெண்கள் மீது அதீதமான ஆர்வம் உண்டே…”

“நீ எப்போதும் தவறான கோணத்தில் வாதம் செய்கிறாய்.  ஒரு ஆணாக இருந்து பெண்களை விரும்புகிறேன்.  ஆனால் அதற்காக நானே ஒரு பெண்ணாக மாற வேண்டும் என்று எப்போதும் விரும்ப மாட்டேன்”.

“சரி.  பரவாயில்லை.  இந்த ஆண் பெண் சர்ச்சையை விட்டு விடுவோம்.  பொதுவாக மனிதர்களைப் பற்றிப் பேசுவோம்.  உங்களுக்குத் தெரியுமா?  இது போல மிருதுவான பாதங்களை உடைய ஆண்கள் எப்போதும் கூருணர்வு உள்ளவர்களாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.  என்னுடைய சகோதரன் அஸிம் சுக்தாய்.. அவனுக்கும் இதே போல மிருதுவான பாதங்கள் உண்டு.  ஆனால்…

அவன் இறக்கும்போது அவனுடைய பாதங்கள் எப்படி கோரமாக வீங்கிப் போயின என்பது என் நினைவில் வந்து போனது.  ஆப்பிள்கள் மற்றும் மலர்களால் புதுமணப் பெண்ணைப் போல அலங்கரிக்கப்பட்ட லாஹூர் திடீரென்று ஏதோ என்னுடைய சகோதரன் புதைக்கப்பட்ட மணற்பாங்கான ஜோத்பூரின் இடுகாடு மாதிரி மாறிவிட்டதாக எனக்குப் பட்டது.  கழுதைப் புலிகள் வந்து பிணத்தை இழுத்துப் போகாத வண்ணம் அவனுடைய கல்லறையின் மீது அப்போது அடர்த்தியான முட்புதர்கள் அமைக்கப்பட்டன.  அந்த முட்புதர்களில் அடர்ந்திருந்த முட்கள் என்னைக் குத்தத் துவங்கின.  கடையின் பஷ்மினா ஷால் என் ஸ்பரிசத்தில் பட்டது.

லாஹூர் அழகாகவும் வசீகரமாகவும் உயிர்ப்புடனும் இருந்தது.  இரு கரங்களாலும் அனைவரையும் அரவணைத்து வரவேற்றது.  நேசம் மிகுந்தவர்களின், வாழ்க்கையை நேசிக்கின்றவர்களின் நகரமாக இருந்தது.  பஞ்சாபின் இதயமாகத் திகழ்ந்தது.

பாக்கெட்டுக்களில் பாதாம் பருப்பினை நிரப்பிக் கொண்டு  நாங்கள் லாஹூரின் தெருக்களில் திரிந்து கொண்டிருந்தோம்.  பாதாமைக் கொறித்து கொண்டே தீவிரமாக விவாதித்தவாறு தெருக்களில் நடந்து கொண்டிருந்தோம்.   குறுகலான சந்து ஒன்றில் விற்றுக் கொண்டிருந்த வறுத்த மீன்களை  வாங்கி நின்று கொண்டே சாப்பிட்டோம்.  எனக்கு அபாரமாகப் பசித்தது.  லாஹூரின் ஆரோக்கியமான தட்பவெப்ப நிலையில் சாப்பிட்டது எல்லாம் மிகவும் எளிதாக செரித்தன.  நாங்கள் ஒரு உணவகத்தில் நுழைந்தோம்.  அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஹாட் டாக் மற்றும் ஹம்பர்கர்களைப் பார்த்து எனக்கு நாக்கில் எச்சில் ஊறத் துவங்கியது.

‘ஹம்பர்கரில்’ ‘ஹாம்’ அதாவது பன்றியின் இறைச்சி அடங்கியிருக்கிறது.  நாம் ஹாட் டாக் சாப்பிடுவோம்” என்றார் ஷாஹித்.  மதரீதியான தடை உள்ள உணவான  ஹம்பர்கரை விலக்கி நல்ல முஸ்லிம்களாக நடந்து கொண்டோம்.  ஹாட் டாக் வாங்கி வாயில் திணித்துக் கொண்டோம்.  அதனைத் தொடர்ந்து மாதுளை ரசத்தை வயிற்றில் ஊற்றிக் கொண்டோம்.

ஆனாலும் மிக விரைவிலேயே இந்தப் பறங்கியர்கள் எத்தனை பெரிய தந்திரக்காரர்கள் என்று புரிந்து கொண்டோம்.  ஹம்பர்கரில் பன்றி இறைச்சி நேரடியாக இருந்தால், ஹாட் டாக் கில் பன்றி இறைச்சியைக் குழைத்து மசாலாவாகப் பூசுவார்கள் என்று யாரோ சொன்னார்கள்.  இதைக் கேள்விப்பட்டதும் ஷாஹித் இரண்டு நாட்கள் எதையும் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டார்.  எப்போதும் வாந்தி வருவது போன்ற உணர்வில் மிகவும் அசௌகரியமாக இருந்தார்.  ஒருவர் அறியாமல் இதுபோன்ற தவறுகள் செய்தால் அவற்றுக்கு மன்னிப்பு உண்டு என்று ஒரு மௌல்வி சாஹிப் எங்களிடம் சொன்னதும் ஷாஹித் சற்று ஆறுதல் அடைந்தார்.  அவருடைய அவஸ்தைகள் நின்று போனதைப் போல உணரத் துவங்கினார்.

மாலை ஷாஹித்தும் மாண்ட்டோவும் மது அருந்த உட்கார்ந்த போது இந்த ஹம்பர்கர்-ஹாட் டாக் சர்ச்சை மீண்டும் கிளம்பியது. விவாதம் சிறிது நேரம் தொடர்ந்தது.  ஒருவழியாக இவற்றில் ஹலால் எது ஹராம் எது என்று இறுதியாகத் தீர்மானிக்க முடியாததால் இரண்டையும் முற்றாக ஒதுக்கி வைப்பது என்று அவர்கள் தீர்மானித்தார்கள்.

நாங்கள் அனார்கலி கல்லறை மற்றும் ஷாலிமார்   தோட்டத்தை சுற்றிப் பார்த்து விட்டு வந்தோம்.  நூர்ஜஹானின் கல்லறையைப் பார்த்தோம்.  பிறகு கணக்கற்ற அழைப்புக்கள், கவியரங்கங்கள் மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் பொழுதைக் கழித்தோம்.

திடீரென்று எனக்கு பிரிட்டிஷ் அரசர் மீது ஒருவகையான நன்றி உணர்ச்சி பிறந்தது.  என் மீது இப்படி ஒரு வழக்கைத் தொடுத்து அதன் வழியாக லாஹூருக்கு எங்களை வரவழைத்து இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சுற்றுவதற்கு வாய்ப்பளித்ததற்கு மன்னரை நன்றியுடன் நினைவு கூர்ந்தேன்.   இரண்டாவது விசாரணைக்கான நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கத் துவங்கினேன்.  இந்த வழக்கில் நீதிபதி என்னைத் தூக்கில் இடுமாறு உத்தரவு பிறப்பித்தாலும் பரவாயில்லை.  அது லாஹூரில் நிகழ்ந்தால் நான் கண்டிப்பாக தியாகிகளின் பட்டியலில் இடம் பெற்றுவிடுவேன்.  லாஹூரின் மக்கள் எனக்கு மிகவும் அற்புதமான வகையில் இறுதிச் சடங்கினை நடத்தி வைப்பார்கள்.

இரண்டாவது விசாரணை நவம்பர் 1946க்கு உத்தரவானது.  மிகவும் அற்புதமான தட்பவெப்ப நிலை அப்போது இருக்கும்.  ஷாஹித் தன்னுடைய திரைப்பட வேலைகளில் மிகவும் தீவிரமாக இருந்தார்.  சீமா இப்போது நல்ல ஆரோக்கியமான குழந்தையாக இருந்தாள்.  அவளுடைய ஆயாவும் அவளை நன்றாக கவனித்துக் கொள்வதில் தேர்ச்சி பெற்றுவிட்டாள்.  எனவே அவளை பம்பாயில் விட்டு விட்டு நான் டெல்லிக்கு விமானத்தில் கிளம்பினேன்.  ஷாஹித் அஹ்மத் தெஹ்லாவி மற்றும் என்னுடைய கதையை நகலெடுத்த காலிகிராஃபர் ஆகிய இருவரும் டெல்லியில் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள்.  நாங்கள் மூவரும் ரயில் வண்டியில் லாஹூர் கிளம்பினோம்.  அந்தக் கதையை நகல் எடுத்த காலிகிராஃபரைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருந்தது.  ஒரு தவறும் செய்யாமலே அவன் பாவம் இந்த வழக்கில் இழுக்கப்பட்டிருக்கிறான்.  அவன் மிகவும் அமைதியானவனாக இருந்தான்.  எந்த வகையிலும் யாருக்கும் தீங்கு இழைக்க நினைக்காத ஜீவன்.  எப்போதும் குழப்பங்கள் நிறைந்த ஒரு முகத்தைப் பொருத்திக் கொண்டு அவன் வேலையை கவனித்துக் கொண்டு எளிமையாக வாழ்ந்து வருகின்றவன்.     அவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் குற்ற உணர்ச்சி அதிகரிக்கும்.  என்னுடைய சர்ச்சைக்குரிய கதையை நகல் எடுத்த ஒரே காரணத்துக்காக அவனுக்கு இத்தனை சிரமமும் ஏற்பட்டிருக்கிறது.  அவனைக் கேட்டேன்.  “நீ என்ன நினைக்கிறாய்?  இந்த வழக்கில் நாம் வெற்றி பெறுவோமா?

“என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.  நான் உங்களின் அந்தக் கதையைப் படிக்கவில்லை”.

“ஆனால் நீதானே அந்தக் கதையை நகல் எடுத்திருக்கிறாய்?”

“நான் ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாக மட்டுமே பார்ப்பேன்.  அவற்றின் அர்த்தங்களின் மீது எப்போதும் கவனம் செலுத்தியது கிடையாது”.

“விநோதமாக இருக்கிறதே!  அந்தக் கதைகள்  அச்சான பிறகு  கூட அவற்றை நீ படிக்க மாட்டாயா?”

“படிப்பேன்.  ஆனால் என்னுடைய வேலையில் ஏதாவது தவறு இருக்கிறது என்று யாராவது சுட்டிக்காட்டினால் கண்டிப்பாகப் படிப்பேன்”

“ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாகவா?”

“ஆமாம்”.  அவன் ஒருவகையான தர்மசங்கடத்துடன் நெளிந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டு பதிலளித்தான்.  சில விநாடிகளுக்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு என்னைக் கேட்டான்.

“நான் ஒன்று சொன்னால் நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?”

“கண்டிப்பாக எடுத்துக் கொள்ள மாட்டேன்”

“உங்கள் கதைகளில் பல ஒற்றுப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இருக்கின்றன”.

“எனக்குத் தெரியும்.  சிக்கலான வார்த்தைகளை நான் குழப்பிக் கொள்கிறேன்.  இது முழுமூச்சாக உச்சரிப்பில் கவனம் செலுத்தி படிப்பவர்களுக்கும் நேர்கிறது”

“நீங்கள் சிறுவயதில் வார்த்தைகளுக்கான சரியான எழுத்துக்களை ஒழுங்காக சிலேட்டில் எழுதிப் பழகவில்லையா?”

“செய்திருக்கிறேன்.  ஆனால் பல தவறுகள் நேரம்.  அவற்றுக்காக பலமுறை ஆசிரியர்களால் கடுமையாக தண்டிக்கப் பட்டிருக்கிறேன்”

“உண்மை என்னவென்றால், நான் தனித்தனி வார்த்தைகள் மீது மட்டும் கவனம் செலுத்துவது போல, நீங்கள் உங்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களின் மீது முழு கவனம் செலுத்துகிறீர்கள்.  அதனால் பொறுமையற்றுப் போய் வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு, ஒற்றெழுத்துக்கள், இலக்கணம் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிறீர்கள்”

இவனைப் போன்ற நகல் எடுப்பவர்கள், காலிகிராஃபர்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.  இவனைப் போன்றவர்கள் என்னுடைய எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகளைத் திருத்தி விடுவார்கள்.  பெரிய தருமசங்கடத்தில் இருந்து நான் தப்பித்து விடுவேன்.

நான் ஷாஹித் தெஹ்லவி சாஹிப்புடன் எங்கள் நண்பர் அஸ்லம் சாஹிப்பின் வீட்டில் தங்குவதற்கு சென்றேன்.  அவருடைய வீட்டில் நுழைந்த அடுத்த கணமே, வாழ்த்துக்களைக் கூடப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு அளிக்காமல் என்னுடைய எழுத்துக்களில் உள்ள ஆபாசங்கள் பற்றி உரக்கப் பேச ஆரம்பித்தார் அஸ்லம் சாஹிப்.  எனக்கும் ஏதோ வெறி பிடித்தது போலக் கோபம் வந்தது.  ஷாஹித் சாஹிப் என்னை அடக்க முயற்சித்தார்.  ஆனால் அவருக்குத் தோல்விதான் கிட்டியது.

“நீங்கள் உங்களுடைய குனா கீ ராதேன் கதையில் அத்தனை ஆபாசமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருக்கிறீர்களே” என்று அஸ்லம் சாஹிப்பைக் கேட்டேன்.  சொல்லப்போனால் கலவி பற்றிய நுணுக்கமான விவரணைகளை வெறும் பரபரப்புக்காக மட்டுமே அந்தக் கதையில் சேர்த்து இருக்கிறீர்கள்” என்றேன்.

“என்னுடைய கதை வேறு.  நான் ஆண்”

“அதற்கு என்னைப் பழிக்க முடியுமா?”

“என்ன சொல்ல வருகிறாய்?” அவருடைய முகம் கோபத்தில் சிவந்தது.

“நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் – ஆண்டவன் உங்களை ஆணாகப் படைத்து இருக்கிறான்.  அதில் என்னுடைய பங்கு ஏதும் கிடையாது.  என்னை அவன் பெண்ணாகப் படைத்து இருக்கிறான்.  அதில் உங்களுக்கு ஏதும் பங்கு கிடையாது.  எதை வேண்டுமானால் எழுதும் சுதந்திரம் உங்களுக்குக் கிடைத்து இருக்கிறது.   அதற்கு என்னுடைய அனுமதி உங்களுக்குத் தேவை இல்லை.   அதேபோல, நான் என்னுடைய விருப்பப்படி எழுதுவதற்கு உங்களிடம் ஏதும் அனுமதி கேட்கத் தேவை இல்லை என்றுதான் நினைக்கிறேன்”.

“நீ ஒரு கௌரவமான முஸ்லிம் குடும்பத்தில் இருந்து வந்த படித்த பெண்ணாக இருக்கிறாய்”

“நீங்களும் ஒரு கௌரவமான முஸ்லிம் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள்.  மெத்தப் படித்து இருக்கிறீர்கள்”

“ஆண்களுக்கு இணையாக வரவேண்டும்  என்று நினைக்கிறாயா?”

“கண்டிப்பாகக் கிடையாது. நான் எப்போதும் வகுப்பில் ஆண்களை விட அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்காகக் கடுமையாக உழைத்து இருக்கிறேன்.  அதில்  பலமுறை வெற்றியும் அடைந்திருக்கிறேன்.

எனக்குத் தெரியும்.  வழக்கப்படி நான் முட்டாளாக்கப்படுகிறேன்.  அஸ்லம் சாஹிப்பின் முகம் கோபத்தில் கனலாகச் சிவந்து போனது.  ஒன்று அவர் என்னை ஓங்கி அறையப் போகிறார் அல்லது அவருடைய தொண்டைக்குழி இன்று கிழியப் போகிறது என்று எனக்கு பயமாகி விட்டது.  ஷாஹித் தெஹ்லாவி சாஹிப் அச்சத்தினால் திணறிப் போயிருந்தார்.  ஒன்றும் பேசமுடியாமல் உறைந்து போய் நின்று கொண்டிருந்தார்.  ஏறக்குறைய அழுதுவிடுவார் போல இருந்தது.  என் குரலில் மென்மையையும் பணிவையும் வரவழைத்துக் கொண்டு சொன்னேன், “அஸ்லம் சாஹிப்…  லிஹாஃப் கதையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் பற்றி எழுதுவது பாவமான காரியம்  என்று என்னிடம் யாரும் சொல்லவில்லை.  அது போன்ற ஒரு வியாதி அல்லது அதுபோன்ற மனப்பிறழ்வு பற்றி எழுதக் கூடாது என்று எங்கும் சொன்னதாக நான் எந்தப் புத்தகத்திலும் படிக்கவில்லை.  என்னுடைய மனம் ஒன்றும் அப்துல் ரஹ்மான் சுக்தாய் போன்ற ஓவியனின் தூரிகை அல்ல.  ஆனால் யதார்த்தத்தை அப்படியே படமாக சிறைப்பிடித்து வைக்கும் ஒரு சாதாரணமான கேமரா.  என்னுடைய மனம் சில விஷயங்களை வென்றெடுக்கும்போது என் கையில் உள்ள பேனா செயலற்றுப் போகிறது.  மனதுக்கும் பேனாவுக்கும் இடையில் உள்ள போக்குவரத்துக்கு இடையூறாக எதுவும் குறுக்கில் வரமுடியாது”

“மதரீதியான கல்வி ஏதாவது உனக்குப் புகட்டப்பட்டதா?”

“அஸ்லம் சாஹிப்.  நான் பேஹிஸ்தி ஸேவர் (சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான கல்வி குறித்த இஸ்லாமிய கோட்பாடுகளை நெறிப்படுத்தும் கையேடு).  படித்து இருக்கிறேன்.  அதில் பல வெளிப்படையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன” என்று அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னேன்.  அஸ்லம் சாஹிப் முகம் மிகவும் வாடிப்போயிருந்தது.  நான் தொடர்ந்தேன்.  “சிறு வயதில் அந்தப் புத்தகத்தைப் படித்த போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.  அவை எல்லாம் எனக்கு மிகவும் ஆபாசமாகத் தோன்றின.  ஆனால் நான் பி.ஏ. படிப்பை முடித்த பிறகு மீண்டும் ஒருமுறை படித்தேன்.  அப்போது அவை ஆபாசமான விஷயங்கள் அல்ல என்றும்  அனைவரும் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கையின் மிகவும் முக்கியமான அம்சங்கள் என்றும் புரிந்து கொண்டேன்.  அது சரி.  வேண்டுமென்றால் உளவியல் படிப்புக்காகவும் மருத்துவத்துக்காகவும் உள்ள நூல்களை ஆபாசமான நூல்கள் என்று மக்கள் சொல்லட்டும்”.

புயல் ஓய்ந்தது.  நாங்கள் இயல்பான தொனியில் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம்.  அஸ்லம் சாஹிப் சிறிது தணிந்து போயிருந்தார்.  இடையில் காலைச்சிற்றுண்டி வந்தது.  நாங்கள் நான்கு பேர் மட்டுமே இருந்தோம்.  ஆனால் சுமார் பதினைந்து பேர் சாப்பிடும் அளவுக்கு ஏற்பாடுகள் அமர்க்களமாக இருந்தன.  நான்கு வகையான முட்டைகள் – சாதா முட்டைகள், வறுத்த முட்டைகள், ஆம்லெட், வேக வைத்த முட்டைகள், ஷம்மி கபாப், பரோட்டா, பூரி, வெள்ளை மற்றும் மஞ்சள் வெண்ணெய் தடவப்பட்ட ரொட்டித் துண்டுகள், தயிர், பால், தேன், முந்திரி, திராட்சை, முட்டை ஹல்வா, கேரட் ஹல்வா மற்றும் சோஹன் ஹல்வா…

“கடவுளே… எங்களைக் கொல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்களா?”

அவரைத் தேவையான அளவு சீண்டி விட்டேன்.  அதனை சரிக்கட்டுவதற்கு இப்போது அவருடைய எழுத்துக்களைப் புகழ ஆரம்பித்தேன்.  அவருடைய நர்கிஸ் மற்றும் குனா கி ராத்தேன் வாசித்து இருக்கிறேன்.  அவற்றை உச்சத்தில் வைத்துப் புகழ்ந்தேன்.  ஒரு வழியாக ஒரு தெளிவான பார்வைக்கும் விஷயத்தை நன்கு விளக்குவதற்கும் நேரடியான வர்ணனைகள் அவசியம் என்பதை ஏற்றுக் கொண்டார். பிறகு அவர் எழுதிய எல்லா புத்தகங்களின் சிறப்புக்கள் பற்றிப் பட்டியல் இடத் துவங்கினார்.  இப்போது அவர் சகஜமான மனநிலைக்கு வந்து விட்டார் என்று தோன்றியது.

“நீதிபதியிடம் மன்னிப்புக் கேட்டுவிடு” என்று மெதுவாகச் சொன்னார் அஸ்லம் சாஹிப்

“ஏன் கேட்க வேண்டும்?  இந்த வழக்கில் எங்களுக்குத்தான் வெற்றி கிட்டும் என்று வக்கீல்கள் சொல்கிறார்கள்” என்றேன்.

“மண்ணாங்கட்டி.  நீயும் மாண்ட்டோவும் மன்னிப்புக் கேட்டு விட்டால் இந்த வழக்கு ஐந்து நிமிடங்களில் முடிந்து விடும்”.

“இந்த வழக்கை எங்கள் மீது தொடர வேண்டும் என்று பல முக்கியமான நபர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்கள்”.

“மண்ணாங்கட்டி” என்று மீண்டும் சீறினார் அஸ்லம் சாஹிப்.  ஆனால் அவர் என்னுடைய கண்களை நேருக்கு நேராக சந்திக்கத் தயங்கினார்.

“பிரிட்டிஷ் மன்னரோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ எங்கள் கதையைப் படித்து விட்டுத்தான் எங்கள் மீது இப்படி வழக்குத் தொடுத்திருப்பார்கள்  என்று   உண்மையாகவே சொல்ல வருகிறீர்களா?”

“அஸ்லம் சாஹிப்.  சில எழுத்தாளர்களும், விமர்சகர்களும், உயர் பதவியில் இருக்கும் சில அதிகாரிகளும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்கள்.  இந்தப் புத்தகங்களில் ஒழுக்கத்துக்கு எதிரான விஷயங்கள் இருப்பதாக அவர்கள் எடுத்துக் காட்டி இதுபோன்ற வழக்கை தொடுக்க வைத்திருக்கிறார்கள்” என்று மிகவும் பணிவான குரலில் ஷாஹித் தெஹ்லவி சாஹிப் சொல்லத் துவங்கினார்.

அவரை இடைமறித்து, “இது போன்ற தருமத்துக்குக் கேடான ஒழுக்கத்துக்குக் கேடான நூல்கள் மீது தடை விதிக்காமல் அவற்றுக்குப் பூஜை செய்யச் சொல்கிறீர்களா?” என்று சீறினார் அஸ்லம் சாஹிப்.  ஷாஹித் சாஹிப் தருமசங்கடத்துடன் விவாதத்தில் இருந்து பின்வாங்கினார்.

“அப்போது எங்களுக்கு தண்டனை விதிக்க வேண்டியதுதான்” என்றேன்.

“மீண்டும் முட்டாள்தனமாகப் பேசுகிறாய்”

இல்லை.  அஸ்லம் சாஹிப். நான் உண்மையாகவே சொல்கிறேன்.  நான் உண்மையிலேயே குற்றம் இழைத்து இருந்தேன் என்றால், அப்பாவிகள் என்னால் நேர்மையற்ற வழியில் வழிநடத்தப் பட்டார்கள் என்றால் வெறுமனே மன்னிப்புக் கோரிவிட்டு தண்டனையில் இருந்து நான் ஏன் தப்ப வேண்டும்?  ஏதாவது குற்றம் இழைத்து இருந்தால் அது நிரூபிக்கப்பட்டால் தண்டனை மட்டுமே என்னுடைய மனசாட்சிக்கு நிம்மதியை அளிக்கும்” என்று எள்ளளவும் கிண்டல் செய்யாது மிகவும் நேர்மையுடன் இந்த வார்த்தைகளை சொன்னேன்.

“பிடிவாதம் பிடிக்காதே.  மன்னிப்புக் கேட்டுவிடு”

“என்ன தண்டனை கிடைக்கும்?  அதிக பட்சம் அபராதம் விதிப்பார்கள்.  அவ்வளவுதானே?”

“அது உனக்கு அவமானம்தானே?”

“ஏற்கனவே தேவையான அளவு   நான் அவமானப் படுத்தப் பட்டிருக்கிறேன்.  அவற்றை விட மோசமாக யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.  எனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுடன் ஒப்பிட்டால் இந்த வழக்கு ஒன்றுமே கிடையாது”.  பிறகு கேட்டேன்.  “எத்தனை ரூபாய் அபராதம் விதிப்பார்கள்?”

“இருநூறு அல்லது முன்னூறாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார் ஷாஹித் சாஹிப்.

“அவ்வளவுதானா?”

“ஒருவேளை ஐந்நூறாகவும் இருக்கலாம்” என்று மிரட்டும் தொனியில் சொன்னார் அஸ்லம் சாஹிப்.

“அவ்வளவுதானா?”

“ஏன்?  எங்காவது நிறைய பணத்தைப் பதுக்கி  வைத்திருக்கிறாயா?  என்று எரிச்சலுடன் கேட்டார் அஸ்லம் சாஹிப்.

“உங்களுடைய ஆசீர்வாதம்.  என்னிடம் பணம் இல்லையென்றால் கூட நான் சிறைக்குச் செல்வதைத் தடுக்கவாவது நீங்கள் அந்த ஐந்நூறு ரூபாயை எனக்காகக் கட்ட மாட்டீர்களா?  லாஹூரில் மிகவும் முக்கியமான பிரமுகர் இல்லையா நீங்கள்?”

“பொல்லாத நாக்கு உனக்கு”

“என்னுடைய அம்மாவும் இதையேதான் சொன்னாள்.  பொல்லாத நாக்கு எப்போதுமே துரதிருஷ்டத்தைத்தான் சுமந்து வரும் என்று”

எல்லோரும் சிரித்தார்கள்.  அங்கு நிலவியிருந்த இறுக்கம் சற்றுக் குறைந்த மாதிரி இருந்தது.  ஆனால் சில நிமிடங்கள் கழித்து அஸ்லம் சாஹிப் மன்னிப்புக் கேட்கும் படலத்தை மீண்டும் ஆரம்பித்தார்.  எனக்கு, அவருடைய தலையையும் என்னுடைய தலையையும் சுக்கு நூறாக உடைத்து எங்காவது எறிய வேண்டும் என்று தோன்றியது.

திடீரென அவர் பேச்சை மாற்றுவதற்கு முயற்சித்தார்.  “துஸ்ஸாக்கி” யை ஏன் எழுதினாய்?” என்று கேட்டார்.

மண்டையை யாரோ பிளப்பது போல இருந்தது எனக்கு.

“உன்னுடைய உடன் பிறந்த சகோதரனையே நரகத்தில் வசிப்பவனைப் போல சித்தரித்து எழுதியிருக்கிறாயே.  நீயெல்லாம் என்ன மாதிரியான சகோதரி என்று எனக்கு விளங்கவில்லை” என்றார்.

“அவன் நரகவாசியாக இருக்கட்டும்.  சொர்க்க வாசியாகவே இருக்கட்டுமே.  இதனால் நீங்கள் எந்தவகையில் பாதிக்கப்பட்டீர்கள்?”

“அவன் என்னுடைய நண்பன்”

“அவன் என்னுடைய சகோதரன்”

“உன்னை மாதிரி ஒரு சகோதரி அவனுக்குக் கிட்டிய சாபம்”

நான் ‘துஸ்ஸாக்கி’ யை எழுதியபோது என்ன விதமான மன உளைச்சல்களுக்கு ஆட்பட்டேன் என்பதை இதுவரை எங்கும் சொல்லவில்லை.  எந்த நரகத்தின் தீயைக் கடந்து சென்றேன் என்பதையும் அந்தத் தீ எந்த அளவுக்கு என்னைச் சுட்டு எரித்தது என்பதையும் சொல்லவில்லை. அப்போது இரவின் பெரும்பகுதி கழிந்திருந்தது.  நான் எழுதி முடித்த போது மணி இரண்டித்தது.  எத்தனை பயங்கரமான இரவு அது?  என் வீட்டின் முகப்புப் படிகள் வரை கடல் பொங்கி எழுந்திருந்தது.  காம்பவுண்ட் சுவர் அப்போது கட்டியிருக்கவில்லை.   என் மார்பகத்துக்குள் புயல் பொங்கி எழுந்து வீசியது.  நான் எழுதிய அனைத்தும் என் முன்பு ஒரு சினிமாப் படச் சுருளைப் போல ஓடிக்கொண்டிருந்தன.  விளக்கை அணைத்தபோது மூச்சுத் திணறியது போல உணர்ந்தேன்.  அச்ச உணர்வினால் மீண்டும் விளக்கைப் பொருத்தினேன்.  இருட்டு என்னை பயமுறுத்தியது.  என்னுடைய சகோதரனின் சடலம் ஆட்களால் குழிக்குள் இறக்கப்படும் காட்சி மீண்டும் என் கண்கள் முன்பு தெளிவான காட்சியாக விரிந்தது.   அவனுடைய கல்லரையைப் பார்த்தது முதல் பல மாதங்கள் என்னுடைய அறையில் தூங்க முடியாது தவித்திருக்கிறேன்.  என்னுடைய அத்தையின் மகள், என்னை விடப் பல ஆண்டுகள் இளையவள் என் அருகில் படுத்துக் கொள்வாள்.  எனக்குத் துணையாக இருப்பாள்.  ஜோத்பூரில் எனக்கு மூச்சுத் திணறலாக இருந்தது.  எனவே நான் பாம்பே ஓடிப் போய்விட்டேன். பத்து தலையணைகளில் ஒன்று குழிந்து போனது.  அது உருவாக்கிய கடலின் ஆழத்தை யாரால் உணர முடியும்?

அஸ்லம் சாஹிப்புக்கு பதில் ஏதும் அளிக்காமல் நேராக அறைக்குச் சென்று துணிமணிகளை என்னுடைய பெட்டியில் அடுக்கத் துவங்கினேன்.  சுல்தானாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக இங்கு வந்து என்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.  “ஒருவேளை அஸ்லம் சாஹிப் தடுக்க முயன்றால் என்றால் அவரை ஊதித்தள்ளி விடு” என்றேன்.

“என்ன ஆச்சு?  என்னுடைய அலுவலகம் முடிந்த உடனே சரியாக ஐந்து மணிக்கு நான் அங்கே இருப்பேன்” என்றாள்.

“ஐயோ வேண்டாம்.  உடனே, இப்போதே இங்கே வா.  இல்லையென்றால் இங்கே ஒன்றோ அல்லது இரண்டு கொலையோ    நிகழ்ந்து விடும்.  தாமதிக்காமல் இப்போதே வந்துவிடு”

சில நிமிடங்களில் சுல்தானா வந்துவிட்டாள்.  அஸ்லம் சாஹிப் என்னைப் போகவிட வில்லை.  ஆனால் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி சுல்தானா அவரிடம் விட்டுக் கொடுக்கவில்லை.  பிடிவாதமாக நின்றாள். இருபக்கமும் வாதங்கள் அதிகரித்த போது நான் உரக்க சிரித்தேன்.  இறுதியாக நான் சுல்தானாவுடன் கிளம்பி விட்டேன்.

விசாரணை நாளன்று நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜரானோம்.  மண்ட்டோவின் ‘பு’ (Bhu) மற்றும் என்னுடைய லிஹாஃப் கதைகளில் ஆபாசம் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டிய சாட்சி கோர்ட்டுக்கு வந்திருந்தான்.    விசாரணை துவங்கும் வரை எதற்கும்  நான் வாய் திறக்கக் கூடாது என்று என்னுடைய வழக்கறிஞர் நிபந்தனை விதித்து இருந்தார்.  கேள்விக்குத் தகுந்தபடி தானே பதிலளிப்பதாக சொன்னார்.

‘பு’ கதை முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

“இந்தக் கதை ஆபாசமாக உள்ளதா?” என்று மண்ட்டோவின் வழக்கறிஞர் கேட்டார்.

“ஆமாம்” என்று சாட்சி பதிலளித்தார்.

“எந்த வார்த்தை ஆபாசமாக இருக்கிறது என்று நீங்கள் உங்கள் விரலை வைத்து சுட்டிக் காட்ட முடியுமா?”

சாட்சி:  “மார்பு” என்ற வார்த்தை”

வழக்கறிஞர்:  “கனம் நீதிபதி அவர்களே, ‘மார்பு’ என்பது ஆபாசமான வார்த்தை கிடையாது”

சாட்சி:  இல்லை.  இந்த இடத்தில் எழுத்தாளர் சுட்டிக் காட்டுவது ஒரு பெண்ணின் மார்பகத்தை”

மாண்ட்டோ அனிச்சையாக எழுந்து நின்று உரக்கக் கத்தினார், “ஒரு பெண்ணின் மார்பை ‘மார்பகம்’ என்றுதான் சொல்லவேண்டும்.  நிலக்கடலை என்று சொல்ல முடியாது”

கோர்ட்டில் இருந்த அனைவரும் குபீரென்று சிரித்து விட்டார்கள்.  மண்ட்டோவும் உரக்கச் சிரிக்கத் துவங்கினார்.

“குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் ஒருமுறை இப்படி அநாகரிமாக நடந்து கொண்டால் அவர் உடனடியாக வெளியேற்றப்படுவார் அல்லது கோர்ட்டை அவமதித்த குற்றத்துக்காக கடுமையாக தண்டிக்கப்படுவார்”

மண்ட்டோவின் வழக்கறிஞர்கள் மாண்ட்டோவின் காதில் குசுகுசுவென்று எதையோ சொன்னார்கள். அவரும் நிலைமையைப் புரிந்து கொண்டார்.  வாதம் தொடர்ந்தது.  சாட்சிக்கு ‘மார்பு’ என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.  அந்த வார்த்தை ஆபாசமானது என்பதை அவரால் நிரூபிக்க முடியவில்லை.

“மார்பு என்ற வார்த்தை ஆபாசம் என்றால் அப்போது முட்டி அல்லது தோள் என்ற வார்த்தைகளும் ஏன் ஆபாசமாக இருக்கக் கூடாது?”  என்று மாண்ட்டோவைக் கேட்டேன்.

“மண்ணாங்கட்டி” என்று முணுமுணுத்தார் மாண்ட்டோ.

வாதங்கள் தொடர்ந்தன.  நாங்கள் வெளியில் சென்று அங்கிருந்த பெஞ்சு ஒன்றின் மீது அமர்ந்து கொண்டோம்.  அஹ்மது நதீம் காஸ்மி ஒரு கூடை நிறைய மால்டா பழங்களை வாங்கி வந்திருந்தார்.  அவற்றை ரசனையுடன் உண்ணும் கலையையும் எங்களுக்குக் கற்றுத் தந்தார்.  “மாம்பழத்தைப் பிசைவது போல இந்த மால்டாவை நன்றாகக் கூழாகப் பிசைந்து கொள்ளுங்கள்.  பிறகு சிறிய ஓட்டை ஒன்றைப் போட்டு அந்த ஓட்டை வழியாக சாற்றை சந்தோஷமாக உறிஞ்சிக் குடியுங்கள்”.  அந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு கூடையில் இருந்த அத்தனை பழங்களையும் கசக்கி உறிஞ்சி எறிந்தோம்.

அந்த மால்டாப் பழங்கள் எங்களுடைய பசியைத்தான் அதிகரித்தன.  அதனால் மதிய உணவு வேளையில் ஒரு உணவகத்துக்குப் போனோம்.  சீமா பிறந்தபோது நான் மிகவும் பலவீனமாக இருந்ததால் பெருமளவு எடையை இழந்திருந்தேன்.  கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை நான் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர் தடைவிதித்து இருந்தார்.  எப்படி இருந்தாலும் எங்களுக்கு வைக்கப்பட்ட கோழிக்கறி விரைத்துப்போய் பருந்தினைப் போலக் கடினமாக இருந்தது.  அதனை நாங்கள் பெரிய கருமிளகினால் அலங்கரித்து குல்ச்சாவுடன் சேர்த்து சாப்பிட்டோம்.  தண்ணீருக்குப் பதிலாக காந்தாரி மாதுளம்பழச் சாற்றினைக் குடித்தோம்.  அனிச்சையாக எங்கள் மீது வழக்கு தொடருவதற்கு ஏற்பாடு செய்த மனிதர்களுக்கான பிரார்த்தனை ஒன்று என்னுடைய மனத்தில் ஓடியது.

அன்று மாலை லுக்மன் சில எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் அழைத்திருந்தார்.  அங்கு என் வாழ்வில் முதன்முறையாக ஹிஜப் இம்தியாஸ் அலியை சந்தித்தேன்.  அவள் மிகவும் பெருத்த தேகத்தைக் கொண்டிருந்தாள்.  கண்களில் மையைப் பட்டையாகத் தீட்டிக் கொண்டிருந்தாள்.  கொஞ்சம் கோபமாகவும் கொஞ்சம்  எழுச்சி குன்றியும் காணப்பட்டாள்.  அவளை நோக்கி யார் கேள்வி கேட்டாலும் வானத்தை உற்றுப் பார்த்து விட்டு பதில் அளிக்கத் தயார் செய்து கொள்வாள்.

“சரியான ஃபிராடு” என்று தன்னுடைய கண்களை உருட்டியவாறே என் காதுகளில் கிசுகிசுத்தார் மாண்ட்டோ.

”இல்லை.  அவள் தன்னுடைய பேனாவினால் உருவாக்கிய ஒரு கனவுலகில் தொலைந்து போய் அந்த வண்ணமயமான கூட்டிலேயே தங்கி இருக்க விரும்புகிறவளாக இருக்கலாம்”

நான் இம்தியாஸ் அலியைத் தேடிப் பிடித்துப் பேசிக் கொண்டு இருந்தபோது ஹிஜப் இம்தியாஸ் அலி நெடுநேரமாக வானத்திலேயே எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.  ஒரு கணவன் மனைவிக்கு இடையிலேயே மனிதர்களுடன் பழகுவதில் எத்தனை வேறுபாடு?  இம்தியாஸ் சாஹிப் மிகுந்த நட்புணர்வுடனும் நகைச்சுவை உணர்வுடனும் அனைவருடன் கலகலப்பாகப் பழகினார்.  அவரால் சபையே கலகலப்புடன்  இருந்தது.  எனக்கு என்னமோ அவருடன் பல ஆண்டுகள் பழகியதைப் போன்ற உணர்வு இருந்தது.   அவருடைய எழுத்துக்களை விட அவருடைய பேச்சு இன்னும் உயிர்ப்புடன் இருந்தது போலத் தோன்றியது.  சமீபத்தில் நான் பாகிஸ்தான் சென்றிருந்தபோது ஹிஜப் இம்தியாஸ் அலியை மீண்டும் சந்தித்தேன்.  அவள் சற்று லேசான ஒப்பனையுடன் இருந்தாள்.  முன்பு பார்த்ததை விட மேலும் இளமையுடன் உயிர்ப்புடன் இருந்தாள்.  அவள் அடியோடு மாறியிருந்தாள்.  மிகவும் சகஜமாகவும் நட்பு உணர்வுடனும் அனைவருடன் பழகினாள்.  அவள் ஏதோ மீண்டும் பிறந்து வந்தது போல எனக்குத் தோன்றினாள்.

அவளுடைய கதையில் அடிக்கடி பிரயோகிக்கும் ‘ஆர்கனூன்’ ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டிருந்தேன்.  அவளுடைய வீட்டுக்குப் போனபோது அவளிடம் கேட்டேன்.  “உன் வீட்டில் உண்மையாகவே ‘ஆர்கனூன்’ வைத்திருக்கிறாயா?”

“ஆமாம்.  உங்களுக்குப் பார்க்க வேண்டுமா?”

“கண்டிப்பாக.  உன்னுடைய கதைகளில் வரும் இந்த வார்த்தை எனக்கு ஒருவகையான போதை கலந்த மயக்கத்தை அளித்திருக்கிறது”.  அவளுடைய உரைநடை ஒன்றை அப்படியே நகல் செய்து எழுதி விட்டு பின்னர் அதனை தீயிட்டுப் பொசுக்கியது பற்றியும் அவளிடம் சொன்னேன்.

அந்த ‘ஆர்கனூனைப்’ பார்த்த மறு நொடியில் எனக்குள் பொங்கிக் கொண்டிருந்த ஆர்வமும் மயக்கமும் என்னை விட்டுத் தெளிந்தது.  டிமெலோ தன்னுடைய திரைப்படங்களில் வாசிக்கும் குட்டி பியானோவைப் போன்று இருந்தது அந்த ஆர்கனூன்.  கதாநாயகி கோபமான மனநிலையில் இருக்கும்போது பின்னணியில் வாசிக்கப்படும் கருவி அது.  ‘ஆர்கன்’ என்ற வார்த்தை மிகவும் சோகையாக இருந்தது.  அதனுடன் “காநூன்’ என்ற வாலை ஒட்டியதும் ஏதோ விசேஷமான மயக்கத்தை அளிப்பது போலத் தோன்றியிருக்கிறது.

மறுநாள் கோர்ட்டில் பெரும் கூட்டம் கூடியிருந்தது.  பல பேர் எங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்டு விடுங்கள் என்று அறிவுறுத்திச் சென்றார்கள்.  எங்கள் சார்பில் அபராதத்தைக் கட்டவும் பலர் தயார் நிலையில் வந்திருந்தார்கள்.  கோர்ட்டில் பரபரப்பு சற்று மந்தமாகி இருந்தது.  லிஹாஃப் கதையில் ஆபாசமான வார்த்தைகள் இருக்கின்றன என்று நிரூபிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த சாட்சியங்களை என்னுடைய வழக்கறிஞர்கள் வெகுவாகக் குழப்பி இருந்தனர்.  அவர்களால் என்னுடைய கதையின் எந்த வார்த்தையின் மீதும் விரல் வைத்து ஆபாசமாக இருக்கிறது என்று நிரூபிக்க முடியவில்லை.  நீண்ட நேரத்துக்குப் பிறகு சாட்சியங்களில் ஒருவன் சொன்னான், “இந்த ‘கட்டுண்ட காதலர்கள்’ என்ற சொற்றொடர் ஆபாசமாக உள்ளது” என்றான்.

“எந்த வார்த்தை ஆபாசம்?  ‘கட்டுண்ட’ என்பதா அல்லது ‘காதலர்கள்’ என்பதா? எது ஆபாசமாக இருக்கிறது?

“காதலன்’ என்று தயங்கியவாறு சொன்னான் அந்த சாட்சி.

“கனம் கோர்ட்டார் அவர்களே!  ‘காதலன்’ என்ற வார்த்தை மிகப்பெரிய கவிஞர்களாலும் மிகவும் தாராளமாக உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை.  ‘நாட்’ என்ற கவிதை வடிவிலும் இந்த வார்த்தை பிரயோகிக்கப்பட்டுள்ளது.   இறைத்தூதரின் புகழைப் பாடும் பாடல்கள் இவை.  கடவுளுக்குப் பயப்படும் மனிதர்கள் கூட இந்த வார்த்தைக்குப் பெரிய இடத்தை அளித்திருக்கிறார்கள்”.

“ஆனால் சிறுமிகள் காதலர்களை சேர்த்துக் கொள்வது ஆட்சேபணைக்கு உரியது” என்றான் சாட்சி.

“ஏன்?”

“ஏனென்றால்…. ஏனென்றால், நல்ல பெண்கள் அப்படி நடந்து கொள்வது ஆட்சேபணைக்கு உரியது”.

“அப்போது பெண்கள் நல்லவர்களாக இல்லாமல் இருந்தால் அது ஆட்சேபணைக்கு உரியதா?”

“ம்ம்ம்… இல்லை”

“என்னுடைய கட்சிக்காரர் அப்படி நல்லவர்களாக இல்லாத பெண்கள் பற்றி அப்படி சொல்லி இருக்கலாம்.   மேடம்… நீங்கள் கெட்ட பெண்கள் காதலர்களை சேர்த்துக் கொள்வார்கள் என்ற பொருளில் எழுதினீர்களா?”

“ஆமாம்”.

“சரி.  அப்போது அது ஆபாசமாக இருக்க வேண்டாம்.  ஆனால் ஒரு படித்த நாகரிகமான குடும்பத்தில் இருந்து வந்துள்ள ஒரு பெண்மணி அதைப் பற்றி  எழுதுவது கண்டனத்துக்கு உரியது” என்று கர்ஜித்தான் அந்த சாட்சி.

“உங்களுக்கு இஷ்டமான படிக்கு வசதியான படிக்கு தடைகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்.  ஆனால் அது சட்டத்தின் வரையறைக்குள் அடங்காது”

“நீ மன்னிப்புக் கேட்க ஒப்புக் கொண்டால் உனக்கு ஏற்பட்ட முழு செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்”என்று எனக்கு சுத்தமாக அறிமுகம் இல்லாத யாரோ ஒருவன் என் காதுகளில் குசுகுசுத்தான்.

“என்ன மாண்ட்டோ சாஹிப்?  மன்னிப்புக் கேட்டு விடலாமா?  நமக்குக் கிடைக்கும் பணத்தில் நிறைய பொருள்களை வீட்டுக்கு வாங்கிச் செல்லலாம்” என்று அவரிடம் சொன்னேன்.

“மண்ணாங்கட்டி” என்று அகண்டிருந்த கண்களை உருட்டி கர்ஜித்தார் மாண்ட்டோ.  கோபத்தில் அவருடைய விழிகள் பிதுங்கித் தெரித்தன.

“என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.  அந்தக் கிறுக்கு மாண்ட்டோ இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை”.

“ஆனால் நீங்கள்… நீங்கள் ஏன் ஒப்புக் கொள்ளக் கூடாது?”

“வேண்டாம்.  உங்களுக்குத் தெரியாது.  இந்த மனிதன் எத்தனை தகராறு பிடித்தவன் என்று.  பம்பாய்க்குத் திரும்பியதும் என்னுடைய வாழ்க்கையை நரகமாக்கி விடுவான்.  இந்த மனிதனின் கோபத்தைக் கிளறுவதை விட தண்டனையை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்”

நீதிபதி அவருடைய இருக்கைக்குப் பின்புறமாக உள்ள அவருடைய தனியறைக்கு என்னைக் கூப்பிட்டார்.  மிகவும் சகஜமான முறையில் சொன்னார், “உங்கள் எழுத்துக்கள் அத்தனையும் படித்து இருக்கிறேன்.  லிஹாஃப் உட்பட அத்தனை கதைகளையும் படித்து இருக்கிறேன். அவற்றில் அத்தனை ஆபாசம் கிடையாது.  ஆனால் இந்த மாண்ட்டோவின் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் ஆபாசம் விரவிக் கிடக்கிறது”

“இந்த உலகமும் ஆபாசங்களால் நிறைந்து வழிகிறதே” என்று மிகவும் பலவீனமான குரலில் பதிலளித்தேன்.

“அதனைக் கிளறுவது மிகவும் அவசியமா?”

“அவற்றைக் கிளறினால் அவை அனைவரின் பார்வைக்கும் வருகிறது.  அவற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே தோன்றுகிறது”.

நீதிபதி உரக்க சிரித்தார்.

அந்த வழக்கு தொடரப்பட்ட போது நான் எந்த வகையிலும் கவலைப்படவில்லை.  இப்போது இந்த வழக்கில் வெற்றியடைந்தபோதும் அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.  ஆனால் லாஹூருக்கு மீண்டும் திரும்பி வருவதற்கு ஏதாவது காரணம் கிடைக்க நீண்ட நாட்கள் ஆகலாம் என்ற விஷயம் மட்டும் எனக்கு வருத்தம் அளித்தது.

லாஹூர்! அந்த வார்த்தையே எத்தனை இனிமையாக இருக்கிறது!  லாஹூரி உப்புப் படிமங்கள் வைரக் கற்களைப் போல மின்னும் – வெண்மையாகவும் பழுப்பு நிறத்திலும்…  இந்த உப்புக்கற்களை சந்தன மாலையில் கோர்த்து ஏதாவது அழகிய மலைவாசிப் பெண்ணின் அன்னம் போன்ற கழுத்தில் அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும்.”

“நம்மி நம்மி தாரியன் தி லௌ” என்ற சுரிந்தர் கௌரின் மாயக்குரல் மயக்கம் அளித்தது.  அவளுடன் இணைந்து பாடும் அவளுடய கணவன் சோதியின் குரல் மிருதுவான பட்டு நூல் இழைந்ததைப் போல உடன் தழுவித் தொடாந்தது.  லாஹூர் நகரம் சுரிந்தர் மற்றும் சோதியின் மாயக்குரல்களையே எப்போதும் எனக்கு நினைவுபடுத்தியது.  இந்தக் குரல்களைக் கேட்கும்போதே மனம் கிளர்ச்சி அடையும்.

லாஹூரின் காற்று பிரத்யேகமான ஒரு ஜோதியின் ஒளியில் பாய்வது போல இருக்கும்.  மணிகள் மௌனமாக ஒலிக்கும்.  ஹிஜப் இம்தியாஸ் அலியின் எழுத்துக்களில் உருவான வாசம் நிறைந்த இனிமையான சூழலை அங்கு ஒருவரால் உணரமுடியும்.  அவளுடைய கதைகளில் வரும் வைகறையின் மங்கலான ஒளியில் அவர்கள் கரைந்து போவார்கள்.

பிறகு எல்லாம் மாறிப்போனது.

நான் சார்லஸ் டிக்கன்ஸின் டேவிட் காப்பர் ஃபீல்ட், ஆலிவர் ட்விஸ்ட், டோனோ புங்கே மற்றும் கார்க்கியின் மதர்   போன்ற படைப்புக்கள் அனைத்தும் என்னை ஒரு மாயாவாத உலகத்தில் இருந்து யதார்த்தவாத உலகத்துக்கு இழுத்து வந்தது.  செக்காவ், எமிலி ஜூலா, கோகோல், டால்ஸ்டாய், தாஸ்தாவ்ய்ஸ்கி, மாப்பஸான்…

என்னுடைய கனவுகளின் அத்தனை கோட்டைகளும் நொறுங்கி விழுந்தன.  நாங்கள் வாழ்ந்து வந்த அலிகரின் லால் டிக்கியின் அருகில் இருந்த ஒரு பங்களாவில் முன்பு இருந்த அதே கோலத்தில் தூக்கி எறியப்பட்டேன்.  அந்த பங்களா பச்சை செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. யாராவது நகத்தில் கீறினாலும் சிமெண்ட் மணலுடன் குழைந்து பெயர்ந்து வெளிக்கிளம்பியது.  தரை முழுதும் புறா எச்சமிட்டிருந்தது.  வீடு முழுக்க அவை கூடுகளைக் கட்டியிருந்தன.  தூலங்களில் வவ்வால்கள் தொங்கிக் கொண்டிருந்தன.   பங்களாவைச் சுற்றி மண்தரையாக இருந்தது.  எப்போது சூறைக்காற்று வீசினாலும் வண்டி வண்டியாக மண்ணையும் தூசையும் வீட்டுக்குள் அள்ளிக் கொண்டு வந்தது.  அந்த வீட்டில் மின்சாரமோ தண்ணீர்க் குழாயோ கிடையாது.  ஒட்டகத்தோலில் நீரை தினமும் சுமந்து வந்தான் பிஷ்டி.  கயிற்றுக் கட்டில்கள் இருந்தன. அவற்றின் மீது அழுக்கான காக்கி நிறப் படுக்கை விரிப்புக்கள் விரிக்கப்பட்டிருந்தன.  தலையணைகளில் எண்ணெய் அடையாகத் தேங்கியிருந்தது.  அம்மா பெரிய பார்ஸி பைஜாமாக்கள் உடுத்துவதை நிறுத்தி தோத்திக்கு மாறியிருந்தாள்.  அந்தப் பார்ஸி பைஜாமாக்களைத் தைப்பதற்கு சுமார் பன்னிரெண்டு கஜம் துணி வேண்டியிருந்தது.

ஒரு காலத்தில் இந்த வீட்டில் வேலைக்காரர்கள் பெரும்படையாக இருந்தார்கள்.  வீட்டுக்கு யார் யாசகம் கேட்டு  வந்தாலும் அம்மா அவர்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறாள்.   அபா மியான் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அம்மா சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.  வேலைக்காரர்களில் அலி பகஷ் மற்றும் அவருடைய  மனைவி ஷெகானி புவா மட்டுமே தங்கினார்கள்.  இவர்களைத் தவிர கொச்வான் மற்றும் அவருடைய மனைவியையும் நிறுத்திக் கொள்ள வேண்டியதாகப் போயிற்று.  ஏனென்றால் எங்கள் வீட்டில் இரு குதிரைகளும் ஒரு எருமையும் இருந்தன.  அவற்றைப் பராமரிக்கும் வேலை இவர்களுக்கு இருந்தது.

இம்தியாஸ் அலி உருவாக்கியிருந்த கவித்துவமான தேஜோமயத்தைக் கண்டு நான் ஒருவேளை பொறாமை கொண்டு இருந்திருக்கலாம்.  எங்கள் குடும்ப சூழலில்  காதல் சுவை என்பதெல்லாம் அரிதான விஷயமாக இருந்தது.  என்னுடைய முதல் கதையான ‘பச்பன்’ (பிள்ளைப் பிராயம்) என்னுடைய அனுபவங்களின் எதிரொலியாக அமைந்தது.  எங்கள் வீட்டுக்கு ஒரே ஒரு பத்திரிகைதான் வந்து கொண்டிருந்தது.  அது தெஹ்ஜீப்-இ-நிஸ்வான்.  அந்தப் பத்திரிகைக்குத்தான் என் முதல் கதையை அனுப்பி வைத்தேன்.  அது ஆசிரியரின் கண்டனக் கடிதத்துடன் எனக்குத் திரும்பி வந்தது.  ஆசிரியர் மும்தாஜ் அலி சாஹிப், இம்தியாஸ் அலி தாஜின் தகப்பனார்.  அந்தக் கதையில் என்னுடைய குழந்தைப் பருவத்தை நான் ஹிஜப் இம்தியாஸ் அலியின் குழந்தைப் பருவத்துடன் ஒப்பீடு செய்திருப்பேன்.  ஆசிரியருடைய முக்கியமான ஆட்சேபணை என்னவென்றால், குரானை என்னால் சரியாகப் படிக்க முடியவில்லை என்பதால் மௌல்வி சாஹிப் என்னை தண்டித்ததைப் பற்றி எழுதியிருந்தேன்.  என்னால் ‘ain’ என்னும் வார்த்தையை சரியாக உச்சரிக்க முடியவில்லை.  அழுத்தி உச்சரித்தபோது அது ‘qaaf’ என்று வந்தது.  குரானை நான் கேலி செய்திருப்பதால் நான் விசுவாசம் குறைந்தவளாகவும் மதிப்புக் குறைவான செயலில் இறங்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் பத்திரிகை ஆசிரியர்.

பின்னாளில் என்னுடைய கதைகள் பல பத்திரிகைகளில் வெளிவரத் துவங்கின.  இந்தக் கதை ‘ஸாக்கி’ பத்திரிகையில் வந்தது.  வாசகர்கள் இந்தக் கதையை மிகவும் விரும்பிப் படித்தார்கள்.  நானும் அஸிம் பாயின் காதல் ரசம் சொட்டும் கதைகளால் ஒருவகையான சோர்வினை அடைந்தேன்.  அவை போலியாகவும் அவருடைய வாழ்க்கையை எந்த வகையிலும் பிரதிபலிப்பதாக இல்லாத வகையிலும் அமைந்திருந்தன.  அவருடைய சகோதரர்களின் குறும்புகளையும் கோமாளித்தனங்களையும் தன்னுடையதைப் போல விவரித்து எழுதியிருப்பார்.

நான் வம்புகள் அதிகம் பிடித்த பெண்ணாக இருந்தேன்.  என்னுடைய குறும்புகளுக்காகவும் உண்மையை நேரடியாக சொன்னதற்காகவும் நிறைய திட்டுக்களையும் அடிகளையும் வாங்கியிருக்கிறேன்.  ஆனால் இந்த சண்டைகள் எல்லாம் அபா மியானிடம் தீர்ப்புக்கு செல்லும் போது அவர் பெரும்பாலும் எனக்கு சாதகமாகவே இருந்திருக்கிறார்.  தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் விதவையான என்னுடைய மூத்த சகோதரி வாழ்க்கையைப் பற்றி ஒரு கசப்பான உணர்வைக் கொண்டிருந்தாள்.  அவள் அலிகர் தனவந்தர் குடும்பங்களின் வாழ்க்கை முறைகளால் பெரிதும் கவரப்பட்டிருந்தாள்.  குறிப்பாக க்வாஜா குடும்பத்தினரின் மீது அவள் பெரும் ஈர்ப்பு கொண்டிருந்தாள்.  அந்தக் குடும்பத்தின் பேகம்களுடன் என்னால் ஒரு நிமிடத்தைக் கூடக் கழிக்க முடியாமல் இருந்தது.  நான் ஒரு பைத்தியம் – வெளிப்படையாக எதையும் பேசுபவள் – ஒழுக்கம் இல்லாதவள் என்று என்னை வகைப்படுத்தி இருந்தார்கள்.  என் மீது பர்தாவைத் திணித்திருந்தார்கள்.  ஆனால் என்னுடைய நாக்கு உறையில் இடாத வாளினைப் போலச் சுழன்று கொண்டிருந்தது.  யாராலும் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

என்னைச் சுற்றிய உலகம் மாயத்தோற்றமாக இருந்தது.  பார்வைக்குக் கூச்சம் நிறைந்தவர்களாகவும் மரியாதைக்கு உரிய வகையில் நடத்தை கொண்டவர்களாகவும் இருந்த இந்தக் குடும்பத்தின் இளம்பெண்களில் பலர்  தங்களின்  உறவினர்கள் குடும்பங்களில் இருந்து வரும் விடலைப் பையன்கள் தங்களை குளியல் அறைகளிலும் இருட்டான மூலைகளிலும் இழுத்து வைத்து முத்தம் கொடுக்க மகிழ்ச்சியுடன் அனுமதித்தார்கள்.  அது போன்ற பெண்கள் மிகவும் கட்டுப்பெட்டிகளாகவும் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் மதிக்கப்பட்டார்கள்.  என்னைப் போன்ற தட்டையான பெண்கள் பின்னால் எந்தப் பையன் வருவான்?  நான் நிறையப் படித்தேன்.  வாதத்துக்கு வரும் பையன்களை என்னுடைய வாசிப்பின் வலுவில் அடித்துக் கூழாக்கினேன்.  அந்தப் பையன்கள் புத்தகங்கள் என்றாலே பல காததூரம் தலைதெறிக்க ஓடுகிறவர்கள்.  தாங்கள் ஆண்களாக இருக்கும் ஒரே காரணத்தினால் மட்டுமே பெண்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணம் கொண்டவர்கள் அந்த இளைஞர்கள்.

பிறகு நான் உலகின் சூழ்ச்சிகள் பற்றி விபரமாக எழுதியிருக்கும் அங்காரே  என்ற புத்தகத்தைப் படித்தேன்.  ரஷீத் ஆபா மட்டுமே எனக்குள் ஒரு வகையான நம்பிக்கையை விதைத்தவர்.  அவரை நான் என்னுடைய வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டேன்.  கபடமும் தந்திரங்களும் சூழ்ந்த அலிகர் சூழலில் ரஷீத் ஆபா மிகவும் பழிக்கு ஆளான பெண்மணியாக இருந்தார்.  என்னுடைய வெளிப்படையான பேச்சுக்களை அவர் மிகவும் பாராட்டினார்.  அவர் பரிந்துரைத்த அத்தனை புத்தகங்களையும் மிகவும் சிரத்தையுடன் வாசித்தேன்.

பிறகு எழுதத் துவங்கினேன்.  என்னுடைய ஃபஸாதி என்னும் நாடகம் ஸாக்கி பத்திரிகையில் வெளியானது.  பிறகு நான் நிறைய கதைகள் எழுதினேன்.  அவற்றில் எந்தக் கதையும் நிராகரிக்கப் படவில்லை.  திடீரென சிலர் அந்தக் கதைகளை ஆட்சேபிக்கத் துவங்கினார்கள்.  ஆனால் பத்திரிகைகளில் இருந்து அவற்றுக்கான கிராக்கி அதிகரித்துக் கொண்டே வந்தது.  ஆட்சேபணைகள் பற்றி நான் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.

அப்பொழுதில் இருந்தே நான் ஒரு ஆபாசாமான எழுத்தாளராக வகைப்படுத்தப் பட்டிருக்கிறேன்.  லிஹாஃபுக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு நான் என்ன எழுதினேன் என்று யாரும் கவலைப்படவில்லை.  நான் ஆபாசமான வகையில் இச்சைகளைத் தூண்டும் வகையில் எழுதுகிறவள் என்று இழிக்கப்பட்டேன்.  இப்போது ஒரு சில ஆண்டுகளாகத்தான் இளைய தலைமுறையினர் என்னை ஒரு யதார்த்தவாதி என்றும் ஆபாசமாக எழுதுகிறவள் அல்ல என்றும் ஏற்றுக் கொள்ளத் துவங்கி இருக்கிறார்கள்.

என்னுடைய வாழ்நாளிலேயே நான் பாராட்டப் பட்டது என்னுடைய அதிருஷ்டம்.  தீவிர குடிகாரராக மாறும் வரை இவர்கள் மாண்ட்டோவை துரத்தித் துரத்திப் பைத்தியமாக்கி இருக்கிறார்கள்.  முற்போக்குவாதிகள் அவரை எந்த வகையிலும் காப்பாற்ற முன்வரவில்லை.  என்னுடைய விஷயத்தில் இந்த முற்போக்குவாதிகள் என்னை முற்றாக ஒதுக்கி வைத்து விடவில்லை.  எனக்கு ஏதும் பெரிய கௌரவங்களையும் அளிக்கவில்லை.  மாண்ட்டோ பாகிஸ்தானில் கொடுமையான வறுமையில் தள்ளப்பட்டார்.  என்னுடைய சூழ்நிலை சற்று வசதியாகவே இருந்தது.  திரைப்படங்களில் இருந்து எனக்குக் கிட்டிய வருமானம் போதுமான அளவில் இருந்தது.  எழுத்துக்கள் வழியாகவும் இலக்கியத்தின் வழியாகவும்  வாழ்வது பற்றியோ அல்லது கொடுமையான வறுமையில் சாவது பற்றிய கவலைகளோ ஏதும் இல்லாமல் இருந்தேன்.  நான் முற்போக்குவாதிகளைப் பின்பற்றுபவளாகவும் அவர்கள் வலியுறுத்தும் புரட்சியில் நம்பிக்கை கொண்டவளாகவும் இருந்தேன்.

நான் இன்னுமே ‘லிஹாஃப்’ என்ற கதையை எழுதியவளாகத்தான் அடையாளம் காணப்படுகிறேன்.  அந்தக் கதை எனக்கு வாழ்க்கையை வெறுக்கும் அளவுக்குப் பிராபல்யத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.  என்னை அடிப்பதற்கான குண்டாந்தடியாக பல நேரங்களில் அந்தக் கதை பலருக்கு உதவியிருக்கிறது.  அந்தக் கதைக்குப் பிறகு நான் எழுதிய அத்தனையும் அதன் பாரத்தில் நசுங்கிக் கூழாகிப் போனது.

நான் தெஹ்ரி லகீர்  என்னும் நாவலை எழுதி ஷாஹித் அஹ்மத் தெஹ்லவிக்கு அனுப்பி வைத்தேன்.  அவர் முஹமத் ஹஸன் அஸ்கரியிடம் அந்தக் கதையைக் கொடுத்து அவருடைய அபிப்ராயத்தைக் கேட்டிருக்கிறார்.  அதைப் படித்துவிட்டு அஸ்கரி சாஹிப் என்னை அழைத்து,   இந்தக் கதையின் நாயகியையும் லிஹாஃப் கதையில் வருவது போல லெஸ்பியனாக மாற்றுமாறு எனக்கு அறிவுரை தந்தார்.  எனக்கு விபரீதக் கோபம் வந்தது.  நகல் எடுக்கும் காலிகிராஃபர் தன் வேலையைத் துவங்கியிருந்தும் அந்த நாவலை வலுக்கட்டாயமாகத் திரும்ப வாங்கி லாஹூரின் நஸீர் அஹமதிடம் ஒப்படைத்தேன்.  அப்போது லாஹூர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது.

‘லிஹாஃப்’ என்னுடைய வாழ்க்கையை துயரம் மிகுந்ததாக ஆக்கியது.  அந்தக் கதையை வைத்து நானும் என் கணவர் ஷாஹித்தும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டோம். ஒருவகையில் வாழ்க்கையே பெரும் போராட்டக் களமாக மாறிப்போனது.

பல வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் அலிகர் போயிருந்தேன்.  பூமி எனக்குக் கீழே நழுவிப் போவதைப் போல இருந்தது.  கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் எப்போதும் சுமந்திருக்கும் அகலமான விழிகளால் அவள் என்னைப் பார்த்தாள்.  கூட்டத்தில் இருந்து ஒருவழியாக சிரமப்பட்டு பலரையும் இருகரங்களால் ஒதுக்கி அந்த ஜனசமுத்திரத்தை நீந்திக் கடந்து என்னை நோக்கி வந்தாள்.  என்னை அடைந்ததும் இரு கரங்களாலும் என்னை இறுக அணைத்துக் கொண்டு ஒரு மூலையை நோக்கி என்னைத் தள்ளிக் கொண்டு போனாள்.  “உனக்குத் தெரியுமா?  நான் அந்த நவாப் சாஹிப்பை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்.  அல்லாஹ்வின் அருளால் முத்தான பையன் ஒருவன் எனக்குப் பிறந்திருக்கிறான்” என்றாள்.

யாருடைய கரங்களிலாவது அடைக்கலம் அடைந்து இதயமே வெடித்து விடும் அளவுக்கு அழுது கரைய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.  என் கண்களில் வழிந்த நீரை உண்மையாகவே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.  உரக்க சிரித்துக் கொண்டிருந்தேன்.  என்னை தன்னுடைய ஆடம்பரமான விருந்துக்கு அழைத்தாள்.  அவளுடைய மலர் போன்ற மென்மையான மகனைப் பார்த்த போது எனக்கு ஏதோ விருது கிடைத்தது போல உணர்ந்தேன்.  அவன் ஏதோ என்னுடைய மகன் என்பது போன்ற உணர்வு எனக்குள் பெருகியது.  என்னுடைய மூளையின் ஒரு பாகம்.  என்னுடைய மூளையின் உயிர்ப்புடன் உள்ள ஒரு பாகம்.  என்னுடைய பேனாவில் உதித்தவன்.

அந்தக் கணத்தில் எனக்குத் தோன்றியது – பாறையிலும் நம்மால் பூக்களை மலர வைக்க முடியும்.  ஆனால் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால்,  நம்முடைய இதயத்தில் வடியும் குருதியை அந்தச் செடிக்கு நீராக ஊற்றி வளர்க்க வேண்டும்.

இன்னும் ஒரே ஒரு விஷயம்தான்.

நான் ஒரு கனவானைக் கேட்டேன்.  “லிஹாஃப் கதையை நீங்கள் நெறி தவறியது என்று கருதுகிறீர்களா?”

“சந்தேகமே இல்லாமல்”

“ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?”

“அதைப் படிக்கும் ஒருவன் பாலியல் ரீதியாகத் தூண்டப்படுகிறான்”

“ஓஹோ.  நீங்கள் லிஹாஃபில் (போர்வையில்) யாரையாவது கட்டியணைத்துக் கொள்ள விரும்பமாட்டீர்களா?”

“அப்படி எல்லாம் இல்லை.  சொல்லப்போனால் பேகம் ஜான் மிகவும் கவர்ச்சியாக இருப்பார்கள்.  மிகவும் அழகாகவும் இனிமையே வடிவான முறையில் அடுத்தவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் வகையிலும் இருப்பார்கள்.   சரியான வகையில் வடிவக்கப்பட்ட கட்டுடல், வெதுவெதுப்பான உதடுகள், போதையேற்றும் கண்கள்.  அவள் சுடர்விடும் தீபம்.  நிரம்பி வழியும் மதுக்கிண்ணம்”

“அதனால் என்ன?”

“சைத்தான் என்னைத் தூண்டி விடும்”.

“என்ன சொல்வாள்?”

அவளை —– என்று”

சைத்தான் மிகவும் விவேகமானது.  என்னுடைய நோக்கமே அதுதான்.  யாராவது தைரியசாலி அவளை ஆள்பவனின்  கரங்களில் இருந்து விடுவித்து அவனுடைய வலுவான கரங்களால் அவளைச் சுற்றியணைத்து அவளுடைய தாகத்தைத் தணிப்பவனாக இருக்க வேண்டும்.  தாகத்தில் தவிக்கும் ஒரு ஜீவனுக்கு நீரை வார்க்கும் புண்ணியமான காரியமாக இருக்கும் அது.

“அவளுடைய முகவரி எனக்குக் கிடைக்குமா?”

“நீங்கள் மிகவும் தாமதமாகப் பிறந்து விட்டீர்கள்.  அவள் இப்போது பாட்டியாகி விட்டாள்.  பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாயக்கோட்டையில் சிறை வைத்திருந்த கருத்த பூதத்திடம் இருந்து இளவரசன் ஒருவன் அவளைக் காப்பாற்றி வாழ்க்கையின் வசந்தத் தோட்டத்தில் அவளை மாற்றிக் குடிவைத்திருக்கிறான்”

பக்கத்தில் இருந்த ஒரு குடியிருப்பில் இருந்து நையேரா நூரின் குரல் காற்றில் மிதந்து வந்தது.  அவள் ஃபைஸ் அஹமத் ஃபைஸ் எழுதிய ஒரு கவிதையின் வரிகளைப் பாடிக்கொண்டிருந்தாள்.

மணமான அந்தப் பெண்களின் பெயரில்
காதலற்று மெலிந்த  தேகங்கள்
ஏமாற்றங்கள் வழியும்  படுக்கைகளில்
அலங்கரிக்கப்பட்ட தேகங்களாக…

நான் ஆச்சரியப்பட்டேன்.  இந்தியாவின் லட்சியப் பெண் எங்கே போனாள்?

சீதை – தூய்மையின் வடிவமாக இருந்தும் அவளுடைய குளிர்ச்சியான பாதங்கள் தீக்கங்குகளைக் கடந்து பயணிக்க வேண்டியிருந்தது.

மீரா பாய் – தன்னுடைய கரங்களால் ஆண்டவனை இறுக்கி அணைத்தவள்.

சாவித்திரி- எமனின் கரங்களில் இருந்து தன் கணவனின் உயிரை மீட்டு எடுத்தவள்.

பிறகு ரஸியா சுல்தானா – பெரிய சாம்ராட்டுகளின் விதியை உருட்டிப் புரட்டியவள் – தன்னுடைய விதியை ஒரு யாகூத் என்னும் அடிமையின் வாழ்வுடன் பிணைத்துக் கொண்டவள்.

அவள் இன்று போர்வைக்கு அடியில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறாளா?

அல்லது ஃபராஸ் சாலையில் தன்னுடைய ரத்தத்தால் ஹோலி விளையாடிக் கொண்டிருக்கிறாளா?

உருது மூலம் – இஸ்மத் சுக்தாய்
ஆங்கிலம் வழி தமிழில் – ராகவன் தம்பி

குறிப்பு- இந்தக் கதையில் அதிகம் பேசப்படும் லிஹாஃப் (போர்வை) நெடுங்கதை என்னுடைய மொழிபெயர்ப்பில் உயிர்மை இதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது.

Series Navigationதுருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதிதிண்ணைப் பேச்சு – புத்தகங்களிற்கு எதிரான போர்
author

ராகவன் தம்பி

Similar Posts

2 Comments

  1. Avatar
    Geetha Sambasivam says:

    லாஹூர் அழகாகவும் வசீகரமாகவும் உயிர்ப்புடனும் இருந்தது. இரு கரங்களாலும் அனைவரையும் அரவணைத்து வரவேற்றது. நேசம் மிகுந்தவர்களின், வாழ்க்கையை நேசிக்கின்றவர்களின் நகரமாக இருந்தது. பஞ்சாபின் இதயமாகத் திகழ்ந்தது.//

    இதைப் படிக்கையில் நாம் இழந்துவிட்டதைக் குறித்து மனம் கனத்தது. போர்வைகள் கதையின் மொழிபெயர்ப்பின் சுட்டியையும் கொடுங்கள். அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிவிட்டது. அந்தக் கால கட்டத்தில் ஆபாசமாக இருந்திருக்கலாம். இப்போது எழுதுவதோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இருக்காது. :)))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *