ஒரு வெளிர் நீல நிறப் புள்ளி : பூமி மீது ஓர் அன்னியப் பார்வை

author
2
0 minutes, 18 seconds Read
This entry is part 28 of 32 in the series 1 ஜூலை 2012

நெல் க்ரீன்ஃபீல்ட்பாய்ஸ்

(An Alien View Of Earth
by Nell Greenfieldboyce
February 12, 2010)

இந்த வாரம் ஒரு புகைப்படத்தின் 20ஆம் ஆண்டுவிழா. அது மிகவும் ஆழமான பொருள் பொதிந்த புகைப்படம். இருப்பினும் அந்த புகைப்படம் இருட்டாகவும், ஏறத்தாழ ஒன்றுமே இல்லாததாகவும் தோற்றம் கொண்டது.

 

1990ல் நாசா வின் வாயேஜர் 1 விண்வெளிக் கலம் எடுக்த புகைப்படம் இது. 4 பில்லியன் மைல்களுக்கு அப்பால் நம் பூமி எப்படி தோற்றமளிக்கும் என்று காட்டும் படம் இது. பூமி மேலே இடது மூலையில் ஒரு துளியூண்டு புள்ளியாக தோற்றம் அளிக்கிறது.வெளிர் நிறக் கோடு சூரிய ஒளி பட்டுச் சிதறும் போது காமிராவில் விழும் கோடு.

இந்த புகைப் படத்தின் 20வது ஆண்டு விழா. மிக நாடகத் தன்மை வாய்ந் இந்த புகைப் படம் முதல் பார்வையில் இருண்டு எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒன்றாய்க் காட்சி அளிக்கிறது.

கொஞ்சம் கூர்ந்து பார்த்தீர்களென்றால், அங்கே ஒரு சிறிய ஒளியை பார்க்கலாம். அந்த சிறிய ஒளிதான் பூமி. ரொம்ப ரொம்ப ரொம்ப தூரத்திலிருந்து பார்த்தால் தெரியும் பூமி.

இருபதாண்டுகளுக்கு முன்னால், கேண்டிஸ் ஹான்சென் கோஹர்செக் என்பவரே அந்த ஒளித்துகளை முதன்முதலில் பார்த்தவர். கலிபோர்னியாவில் நாஸாவின் ஜெட் புரபல்ஸன் லேபில் உட்கார்ந்துகொண்டிருந்தபோது பார்த்த படம். “அன்று அலுவலகத்தில், உண்மையில் ,  நான் தனியாய் இருந்தேன் ” என்றார் அந்தப் பெண்மணி.

அலுவலகம் அப்போது இருட்டாய் இருந்தது. ஜன்னல் திரைகள் மூடியிருந்தன. .அப்போதுதான் வாயேஜர் 1 எடுத்த ஒளிப்படங்கள் வந்துகொண்டிருந்தன.  அப்போது வாயேஜர் 1 சுமார் 4 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தது. “வருகின்ற தகவல்கள் எப்படி உள்ளன என்று நான் பார்க்க விரும்பினேன்.” என்றார் அவர்.

இறுதியில் அவர் அதனை பார்த்தார்.

”சின்ன ஒளிப்புள்ளி. இரண்டு பிக்ஸெல்தான் இருக்கும். பெரியது அல்ல” என்று நினைவு கூர்கிறார்.

ஆனால் அதுதான் பூமி. அதுவரை வேறெந்த மனிதரும் பார்க்காத வகையில் பூமி!

 

தற்செயலாக விண்வெளிக்கலத்தின் எதிரொளி பட்டு இந்தச் சிறு துகள் வெளிச்சத்தால் ஒளி பெற்றது போல் தோன்றியது.”இப்போது நினைத்தால் கூட எனக்கு மயிர்க்கூச்செறியும் ஒரு நிகழ்வு அது.” என்கிறார் அவர். ஒளிவள்ளம் பாய்ந்த அந்தப் புள்ளி தான் நம்முடைய பூமி. அது ஒரு சிறப்பு வாய்ந்த தருணம்.”

 

நீங்கள் தேடவில்லையென்றால் அந்த புள்ளியை கண்டே பிடிக்க முடியாது. அப்பல்லோ விண்பயணிகள் பூமியை ஒரு பெரிய நீல பளிங்குக்கல்லாகவும், அதன் மீது கண்டங்களும் மேகங்களும் உள்ளதாக எடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த படம் பிரம்மாண்டமான வானவெளியில் ஒரு மிக மிகச்சிறிய தூள் போல பூமி இருப்பதை காட்டுகிறது

பூமிக் கிரகம் பற்றிய ஒரு புதுப் பார்வை.

 

காலஞ்சென்ற விண்வளி ஆய்வாளர்  கார்ல் சாகன் தனது “மங்கிய நீல புள்ளி” (Pale Blue Dot) என்ற புத்தகத்தில் இதனை அழகாக பேசுகிறார்.

அந்த புள்ளியை பாருங்கள். அது இங்கே இருக்கிறது.  அதுதான் வீடு. அதுதான் நாம். இதன் மீதுதான் நாம் அன்பு செலுத்திய அனைவரும் இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்த அனைவரும் இருக்கிறார்கள். நீங்கள் கேள்விப்பட்ட அனைவரும் இருக்கிறார்கள். இதுவரை இருந்த ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்நாளை இதன் மீதுதான் கழித்தார்கள். நமது ஒட்டுமொத்த சந்தோஷம், துயரம்,  தானே சரி என்று கருதும் ஆயிரக்கணக்கான மதங்கள், கொள்கைகள், பொருளாதார கொள்கைகள், ஒவ்வொரு வேட்டைக்காரரும், கிடைத்ததை தின்னுபவரும், ஒவ்வொரு நாயகரும், கோழையும், சமூகத்தை உருவாக்கும் ஒவ்வொருவரும் , அழிக்கும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு அரசரும், ஒவ்வொரு குடியானவரும், ஆழ்ந்த காதலில் கிடக்கும் ஜோடிகளும், ஒவ்வொரு தந்தையும் ஒவ்வொரு தாயும், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கும் குழந்தையும், கண்டுபிடிப்பவரும், ஆராய்ச்சியாளரும், ஒழுக்கத்தை சொல்லித்தரும் ஆசிரியரும், ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதியும், ஒவ்வொரு சூப்பர்ஸ்டாரும், சுப்ரீம் லீடர்களும், ஒவ்வொரு துறவியும், பாவியும், நமது வரலாற்றில் இருந்த அனைவரும் இங்கேதான் வாழ்ந்தார்கள். ஒரு சூரியக்கதிரின் மீது தொலைந்தாடும் ஒரு புழுதித்துகளின்மீது.

கும்ப்ரியா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ராபர்ட் பூலே வானத்திலிருந்து பூமியை பார்த்த படங்களை தொகுத்து புத்தகம் எழுதியிருக்கிறார்.  இந்த புகைப்படம் ஒரு வேறொரு சூரியக்குடும்பத்திலிருந்து வரும் ஒரு விண்பயணி எப்படி பூமியை பார்ப்பார் என்ற கோணத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று எழுதியிருக்கிறார்.

”இது நமது பார்வை அல்ல. நாம் எப்படியோ அங்கே வெளியே போயிருக்கிறோம். அங்கிருந்து வேறொருவர் பார்க்கும் பார்வைதான் இது. அப்பல்லோ எடுத்த நீல பளிங்குகல் ஒளிப்படம் நமது பார்வை. எல்லோரையும் போல இந்த புகைப்படத்தை நான் பத்திரிக்கையில் பார்த்தபோது, அறிவுப்பூர்வமாக இது மகத்தானது என்று யோசித்தேன்” என்கிறார் ராபர்ட் பூலே.

 

இப்படிப்பட்ட ஒளிப்படங்கள் எப்போதாவது ஒருமுறைதான் நிகழ்கின்றன. இவற்றை எடுப்பதும் எளிதல்ல. சொல்லப்போனால், இந்த படத்தை நாம் எடுக்காமலேயே போயிருப்போம். வாயேஜர் 1 திட்டத்தின் போது கார்ல் சாகன் இந்த புகைப்படம் எடுக்க வேண்டும் என்று பலரை சந்தித்து முயற்சி செய்தார். ஆனால், இதனை எடுக்க பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சூரியனுக்கு மிக அருகில் பூமி இருப்பதால், சூரியனை நோக்கி வாயேஜரின் காமிராவை திருப்பினால், காமெரா வெப்பதில் காலியாகிவிடும் என்று எதிர்த்தார்கள்.

 

“அதன் பிரயோசனம் என்னவாக இருக்கும் என்று பலரும் விவாதித்தார்கள் என்று எட்வர்ட் ஸ்டோன் தெரிவிக்கிறார். அது ஒரு அறிவியல் ஒளிப்படம் அல்ல. அது ஒரு மாதிரி நாம் இங்கே இருக்கிறோம் என்று அறிவிக்கும் படம் அவ்வளவுதான். முதன்முதலாக அந்த படத்தை நாம் எடுக்கிறோம். இரண்டாவது பூமியையும் அது இருக்கும் சூரிய குடும்பத்தையும் ஒரே பார்வையில் பார்க்கவும் முடியும்” என்றார்.

 

ஆனால் இந்த கருத்தும் ஆலோசனையும்  பல வருடங்கள் மூலையில் கிடந்தது.  வாயேஜர் 1 சூரியக்குடும்பத்தின் வழியே பறந்து சென்று சனிகிரகம், வியாழக்கிரகத்தின் படங்களை அனுப்பியது.

 

1989இல் வாயேஜர் திட்டம் முடிவுக்கு வர ஆரம்பித்தது. அதில் வேலை செய்த பலர் விடுப்பு எடுத்து செல்ல ஆரம்பித்தனர். கார்ல் சாகன் கடைசியாக ஒருமுறை இந்த ஒளிப்படத்தை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்.

 

ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் ரிச்சர்ட் டுலி நாஸாவின் தலைவராக இருந்தார். அவர் நினைவு கூர்கிறார். “கார்ல் சாகன் என்னை வந்து பார்த்தார். பல விஷயங்களை பேசினோம். அந்த பேச்சின் ஊடே இந்த ஐடியாவையும் சொன்னார். வாயேஜரோ வெகுதொலைவில் இருக்கிறது. அது திரும்பி பூமியையும் மற்ற கிரகங்களையும் படம் எடுப்பதில் என்ன பிரச்னை என்று யோசித்தேன். பூமியை அவ்வளவு தொலைவிலிருந்து எடுப்பது நல்ல ஐடியாவாகத்தான் தோன்றியது. அது எடுக்க வேண்டுமென்று விரும்பினேன். ஆனால், நான் அதற்கான பெருமை எனக்கல்ல. சாகனுக்குத்தான்” என்கிறார்

1990, பெப்ருவரி 13ஆம் தேதி வாயேஜர் பூமியை நோக்கி திரும்பியது.

பிரமாண்ட பெரும் விண்வெளியில் ஒரு சிறு வஸ்து

பிறகு அந்த ஒளிப்படம் மிகுந்த விளம்பரத்துடன் உலக பத்திரிக்கைகளுக்கு வினியோகிக்கப்பட்டது. ஆனாலும் புகழ்பெற்ற அப்பால்லோஒளிப்படத்தை போல மக்கள் மனதை ஆட்கொள்ளவில்லை.

 

”இன்னும் உங்களது மூளையால், நமது பூமியின் மிக மிக சிறிய அளவை  நமது சூரியக்குடும்பத்தின் மிக மிகப்பெரிய அளவோடு சிந்திக்க முடியவில்லை, அது மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது என்றே கருதுகிறேன்” என்கிறார் ஸ்டோன்.

இந்த ஒளிப்படத்தின் முழு வீச்சை பார்க்க வேண்டுமென்றால், வாயேஜர் சூரியக்குடும்பத்தின் அனைத்து கிரகங்களையும் எடுத்த புகைப்படங்களை அதன் தூரத்தை கணக்கிலெடுத்துகொண்டு சுவற்றில் ஒட்டினால்தான் முடியும்.

நாஸா ஆடிட்டோரியத்தின் சுவரில் இந்த முழு புகைப்படங்களையும் ஒட்டி வைத்திருந்தார்கள். ”12 அல்லது 14 அடி பரப்பளவில் ஒட்டப்பட்டிருந்த சுவரில் இந்த கிரகங்களிலிருந்து வரும் ஒளி மிகச்சிறிய துகள்தான். பூமியும் அதே போல சிறிய துகள்தான்” என்கிறார் ஸ்டோன்.

”அந்த சுவரை பராமரித்துகொண்டிருந்த ஊழியர் அந்த புகைப்படத்தை திரும்ப திரும்ப மாற்றிகொண்டே இருக்க வேண்டியிருந்தது என்று சொன்னார். ஏனெனில், அந்த படத்தை பார்க்க வருபவர்கள் அனைவருமே அந்த பூமியை தொட்டுப்பார்ப்பார்கள்” என்கிறார் ஸ்டோன்.

வாயேஜர் 20 வருடங்களுக்கு முன் இருந்த தூரத்தை விட இப்போது மும்மடங்கு தொலைவுக்கு சென்றுவிட்டது. வாயேஜர் அவ்வப்போது பூமிக்கு தொலைபேசுகிறது. இருந்தாலும் அதன் கேமிராக்கள் ஒளிப்படங்களை எடுப்பதில்லை. அது ஒருவேளை இன்னொரு புகைப்படத்தை அனுப்பினால், பூமி இன்னும் மங்கியதாக இன்னும் சிறியதாகத்தான் தோற்றமளிக்கும்.

http://www.npr.org/2010/02/12/123614938/an-alien-view-of-earth

இதர இணைப்புகள்

http://www.npr.org/2012/06/21/155442322/a-final-voyage-into-the-wild-black-yonder

http://www.npr.org/2010/02/12/123613649/views-of-earth-from-the-middle-ages-to-the-space-age
http://www.npr.org/player/v2/mediaPlayer.html?action=1&t=1&islist=false&id=123614938&m=123659336
http://voyager.jpl.nasa.gov/spacecraft/music.html

Series Navigationதிண்ணைப் பேச்சு – புத்தகங்களிற்கு எதிரான போர்குழந்தைகள் நலனைப் பலி கொடுக்கும் மதவாதக் கலாசாரம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    தங்கமணி says:

    சிந்திக்க வைக்கும் அறிவியல்கட்டுரை.
    நன்றி

  2. Avatar
    punai peyaril says:

    பிரயோஜமான கட்டுரை. நன்றி… மேலும், கார்ல் சாகனின் புத்தகங்களூம் இரிக் வான் டானிகன் புத்தகங்களும் படிக்கப்பட வேண்டிய ஒன்று. தெளிவு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *