எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

This entry is part 10 of 41 in the series 8 ஜூலை 2012

கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குறுகின் தெரிந்து. – நாலடியார்.

ஒரு மாணவனின் படிப்பு வாழ்க்கையை தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என்று பொதுவாக பிரித்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்த நடைமுறை உண்மைகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது. (மாணவன் என்பது என் வசதிக்கான குறியீடு அதில் மாணவியும் அடக்கம் எனக் கொள்க)

தொடக்கப் பள்ளி

நகரத்து பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மாணவனை விட அவன் பெற்றோர் படும் பாடு இங்கே ரொம்ப ரொம்ப அதிகம். எல்.கே.ஜி சீட்டுக்கு எம்.எல்.ஏ விலிருந்து ஜனாதிபதி வரை பரிந்துரை பெற்றாலும் எந்த பள்ளியும் அதை எல்லாம் மதிப்பது இல்லை. சரி, அப்ப நேரடியா சாதாரணமா அப்ளிகேசன் போட்டு வாஙக வேண்டியது தானே? என்று தானே கேட்கிறீர்கள். அட போங்க அப்படி எல்லாம் எளிதில் தர மாட்டாங்க.  ஒரு மாநகரத்து பள்ளியில் எல்.கே.ஜி சீட்டு வாங்க நீங்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று சும்மா தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

 

 1. முதலில் நீங்க இரவு பூரா கண் விழித்து வரிசையில் நின்று நம்ம ”மன்னன் சினிமா” ரஜினி மாதிரி முதல் எண் அப்பிளிகேசன் வாங்க வேண்டும். சில பள்ளிகளில் முதல் 50 பேருக்கு கண்டிப்பா இடம் உண்டுன்னு வெளியே பேசிக்குவாங்க. முதல் 50- ல நீங்க இல்லைன்னா பள்ளி நிர்வாகம் என்ன உங்க குழந்தை மேல உங்களுக்கு அக்கறை இல்லையா? இப்படி 500வது அப்பிளிகேசன் வாங்கிட்டு சீட்டு கேட்டா எப்படின்னும் கேப்பாங்க.

 

 1. ஸ்கூல்ல இருந்து 2 கீ.மீக்குள்ள உங்க வீடு இருக்கனும். சரி. வீட மாத்திரலாம்னு நினைக்கிறீங்களா? (ஆசை, தோசை, அப்பள வடை.?!)

 

 1. அப்பா, அம்ம ரெண்டு பேரும் மாஸ்டர் டிகிரி படிச்சிருக்கனும். சில ஸ்கூல்ல ரெண்டு பேரும் வேலைக்கு போனா முன்னுரிமை. சில ஸ்கூல்ல நேர் எதிர். சில ஸ்கூல்ல குடும்ப வருமானம் எவ்வளவு இருக்கனும்னு அளவு எல்லாம் இருக்காமுங்க.

 

 1. உங்க குழந்தைக்கு ”பப்புவானா நியு கினியா” நாட்டின் உள்துறை மந்திரி யாரென்று எதுக்கும் சொல்லி வைங்க? குழந்தைக்கு இண்டெர்வியூ இருக்கே.

 

 1. இந்த சாதி இருக்கு பாருங்க அது ரொம்ப முக்கியம். அதை யோசிச்சு அப்ளிகேசன் போடுங்க. எல்லா ஸ்கூல்லயும் எல்லாரையும் சேர்த்துட மாட்டாங்க. அப்படி சேர்த்துட்டா ஸ்கூலோட காலிபர் (Caliber) என்ன ஆகுறது? சில ஸ்கூல்ல குறிப்பிட்ட சாதிலயும் குறிப்பிட்ட பிரிவுக்கு தான் சீட் உண்டு.

(குலத்தால் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் – பாரதி பாவம்)

 

 1. ஒரு பெரும் தொகையை டொனேசனாக தர தயார இருக்க வேண்டும். (அட, பள்ளிக்கு இல்லைங்க அப்படின்னு அவங்க சொல்லுவாங்க). எல்லா பள்ளியும் ஒரு சொசைட்டியாகவோ அல்லது ஒரு டிரஸ்ட்டாகவோ தான் இருக்கும். நீங்க அந்த சொசைட்டி அல்லது டிரஸ்ட்டுக்கு தான் அந்த டொனேசனை தரவேண்டும்.

 

 1. பள்ளி நிர்வாகத்துடன் யாருக்கு நல்ல தொடர்பு இருக்குன்னு நீங்க துப்பறியனும். யாருக்கு இருக்கும் என்று அப்பாவியாக நீங்க கேள்வி எல்லாம் கேட்க கூடாது. யாருக்கு வேணும்னாலும் இருக்கும். தொடர்பு இருக்கின்ற ஒரு சிலருக்கு பள்ளி நிர்வாகம் ஒண்ணு ரெண்டுன்னு சீட் ஒதுக்கி இருப்பாங்க.

இதோ எனக்கு தெரிந்த அந்த லோக்கல் லிஸ்ட்.

 

அ) லோக்கல் இன்ஸ்பெக்டர் (லா & ஆர்டர்)

ஆ) டிராஃபிக் போலீஸ்

இ) பள்ளி வாகன பரிசோதகர்

ஈ) மின்சார அலுவலக என்ஜினியர்

உ) போஸ்ட்மான்

இது தவிரவும் ஒரு லிஸ்ட் இருக்கு. அது ”பெரும் புள்ளி”ங்க லிஸ்ட்.

அ) டிரஸ்ட், சொசைட்டி கணக்கு சரி பார்க்கிற அலுவலத்துல சொன்னா சீட் தருவாங்கலாம்.

ஆ) ஜனாதிபதி, முதல்வர், கல்வி மந்திரி இவங்க கிட்ட போனா சில சமயம் சீட் கிடைக்குமாம். சில சமயம் இவங்களை எல்லாம் பள்ளி நிர்வாகம் மதிக்கவே மாட்டாங்க. எல்லாம் உங்க நேரத்த பொறுத்தது.

 

இ) ஊரின் வேறு சில முக்கிய புள்ளிகள் ( இது அந்த அந்த ஸ்கூல பொருத்த மாட்டர். சினிமா துறை, டிராமா துறை, மருத்துவம், நீதி, இன்னும் பிற.,)

 

ஈ) (ஸ்ஸ்ஸ்…. காதை கொண்டாங்க) சொன்னா நம்ப மாட்டீங்க. எதிர்காலம் குறித்து பள்ளி நிர்வாகி ஜோசியம் பார்க்கும் ஜோசியக்காரருக்கு ரெண்டு சீட்டு உண்டாம்ங்க.

உ) பள்ளி நிர்வாகம் அக்கௌண்ட் வச்சிருக்கும் பாங்க் மானஜேருக்கு ஒரு சீட் உண்டு.

இது தவிரவும் இன்னும் இருக்கும். நீங்க தேடனும்.

 

ஏதாவது ஒரு வழியை மட்டும் பிடித்து சேர்ந்து விடலாம் என்று ஈசியா நினைத்துவிடாதீர்கள். நீங்கள் பல வழிகளில் முயற்சி செய்யவேணும். அப்ப தான் வேற வழியே இல்லாம சரி போனா போகுதுன்னு சீட் தருவாங்க.

 

இந்த வழி எல்லாம் நமக்கு சரிப்படாது என்று நினைத்தீர்களானால், சீட் வாங்கி தருவதற்கு வெளியே புரோக்கர்கள் எல்லாம் இருப்பாங்க. நீங்க எந்த முயற்சியும் செய்யாம சரியான புரோக்கரை பிடித்து விட்டீர்கள் என்றால் பணம் மட்டும் தான் செலவு செய்யவேண்டும். ஸ்கூல பொறுத்து வகுப்பை பொறுத்து இந்த பணம் அளவு மாறுபடும். சொன்னா நம்ப மாட்டீங்க. 1 லட்சத்துல இருந்து 7 லட்சம் வரைக்கும் தர வேண்டுமாம்.

 

சரி, அப்படி எதுக்கு இந்த ஸ்கூல்ல படிக்க வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள்? என்னங்க உங்க குழந்தையின் எதிர்காலம் குறித்த அக்கறையே இல்லையா? இப்படி எல்லாம் அலைந்து சீட் வாங்கினா தானே நாம பெருமையா வெளிய சொல்லிக்க முடியும். நீங்கள் சீட் வாங்குன கதைய 40 பேருக்கு சொல்வீர்கள். அது 400 பேரை சென்றடையும். அப்ப தானேங்க உங்க குழந்தை படிக்கிற ஸ்கூலுக்கு ஒரு பெருமை. ஈசியா கிடைச்சா நீங்க மதிக்க மாட்டீங்கங்கிற தீர்க்க தரிசனம்  ஸ்கூலுக்கு இருக்காதா என்ன?

 

இந்த வழி எல்லாம் சரியா வராது. அப்ப நல்ல ஸ்கூல்ல படிக்க வழியே இல்லையா என்று யோசிக்கிறீர்களா? ஒண்ணும் கவலை படாதீர்கள். சில சமயம் நீங்க எந்த முயற்சியும் செய்யாமலேயே கூட சீட் கிடைக்கும். என்ன சார் நீங்க, மேலே சீட் கிடைக்கிறதுக்கு அவர பிடி, இவர பிடின்னு எல்லாம் சொன்னீங்க, இப்ப சும்மாவே இருங்க சீட் கிடைக்கும் என்று குழப்புகிறீர்கள்னுதானே நினைக்கிறீங்க? பொறுமை. பொறுமை.

அப்ப ஒரு ஸ்குல்ல சீட் கிடைக்க என்ன தான் சார் அளவுகோல் வச்சிருக்காங்க? அது தாங்க யாருக்குமே தெரியாது. அது ராணுவ ரகசியம். நீங்க அப்ளிகேசன போட்டுட்டு வைத்தீஸ்வரன் கோவில்ல போய் ஓலைச் சுவடி பாருங்க. குழந்தைக்கு யோகம் ஓலைச் சுவடில இருந்தா சீட் கிடைச்சிடும். எல்லாம் உங்க நேரம் நல்லா இருக்கனும்.

(நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுத முயற்சிக்கிறேன்)

Series Navigationஅம்மாவாகும்வரை……!கோவை இலக்கியச் சந்திப்பு
author

அ.லெட்சுமணன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  punai peyaril says:

  அரசு நிலங்களை பள்ளி நடத்துகிறோம் என்று மிக மிக குறைந்த விலையில் பெற்று தங்கள் உறவினரை மட்டும் கொண்டு டிரஸ்ட் அமைத்து தமிழகம் முழுக்க சில குடும்பங்களே பள்ளிகள் நடத்துகின்றன… ஆர் டி ஐ போட்டு யாராவது இதை வெளி கொண்டு வர வேண்டும்… அதிலும் ஒய்.ஜி.பி குடும்பத்திற்கு நகரனின் மையப்பள்ளிகளில் இருக்கும் பள்ளிகள் பற்றி மக்கள் கேட்க வேண்டும்… வித்யாமந்திர் பள்ளிகளும் அதே ரகம் தான்… கிறிஸ்துவ பள்ளிகள் போல் இவை இந்துமத கோவில் சார்ந்து இருக்கலாம்.. சில குடும்பம் சார்ந்து இருக்கக் கூடாது…

 2. Avatar
  Kumar Venkatasubramanian says:

  Good one!! I like this point a lot.

  ஈ) (ஸ்ஸ்ஸ்…. காதை கொண்டாங்க) சொன்னா நம்ப மாட்டீங்க. எதிர்காலம் குறித்து பள்ளி நிர்வாகி ஜோசியம் பார்க்கும் ஜோசியக்காரருக்கு ரெண்டு சீட்டு உண்டாம்ங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *