புள்ளியில் விரியும் வானம்

This entry is part 39 of 41 in the series 8 ஜூலை 2012

புதிய கம்பெனியில் முதல்நாள் அனுபவம். உற்சாகத்துக்குக் குறைவு இல்லை. வேலை எனச் சேர்ந்தவர்களே வெவ்வேறு ஊர்க்காரர்கள். புதிய பாஷைக்காரர்கள். ஆனால் எல்லாருமே தாய்மொழியை விட ஆங்கிலம் அதிகமாகவும், நன்றாகவும் பேசினார்கள். ஒரே பாஷைக்காரர்களே கூட தங்களுக்குள் ஆங்கிலம் பேசிக்கொள்ளவே விரும்பினார்கள்.
மணிவண்ணனுக்குத்தான் என்னமோ தாய்மொழி என்று, அதில் தான் சரியாக ஊட்டம் பெறவில்லை என்று இருந்தது. தமிழ்பேசும் இன்னொரு புதியவனைப் பார்த்ததும் என்னமோ மனசு இளகிக் கொடுத்தாப் போலிருந்தது. ஆனால் மற்றவன் இவனது எல்லா தமிழ்க் கேள்விக்கும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னது ஏமாற்றமாய் இருந்தது.
கம்பெனி ஏற்பாடு செய்தபடி முதல் பத்து நாட்கள் ஒரு விடுதி வாசம். பிறகு உள்ளூர் தரகன் ஒருவன் மூலம் ஜாகை பார்த்தான். மூன்றடுக்குக் கட்டடம் ஒன்றில் ஆக மேல் தளம். பக்கத்தில் ஓர் அறை, ஆனால் பூட்டிக் கிடந்தது. அடுத்து பெரிய ஒரு அறையில் கட்டில். ஒரு கணினி மேசை. ஒதுக்கமாக, குளியல் கழிவறை சேர்த்த இணைப்பறை. முற்றிலும் தனிமையான இதமான அறையாகப் பட்டது. பிடித்துப் போனது.
அலுவலகத்தில் வேலை நெரித்தது. அத்தனை சம்பளத்துக்கு முடிந்தஅளவு ஆளைப் பிழிகிறதான அலுப்பான வேலை. கண்ணெல்லாம் மயங்கி தள்ளாடி அறையைவிட்டு வெளியே வருவான். தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்து அதன் ஒளிச்சிதறலைக் கண்ணில் வாங்கி வாங்கி கண்கள் ஓய்வுக்கு ஏங்கும். தட்டச்சு செய்து அலுத்த விரல்களுக்கு ஒத்தடமாக ஒரு அக்குபிரஷர் பந்து. அடிக்கடி அதை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு இதமாய் அமுக்கிக் கொள்வான்.
பரபரப்பான அலுவலகம். அதன் இலக்கணம் அது என்கிறாப்போல எல்லாரும் டை அசைய யானைகளாய்த் திரிந்தார்கள். எப்பவும் ஓரிடத்தில் நிற்க முடியாத கோவில் யானைகள், இப்புறமும் அப்புறமும் அசைந்தாடிக் கொண்டிருக்கும். சோம்பேறித்தனம் அறியாத யானைகள். கணினி யந்திரத்தின் முன் அமர்ந்து அவர்கள் அந்த அமைதியில் ஆழ்ந்து இயங்கிக் கொண்டிருந்தார்கள். அத்தனை பேர் அமர்ந்திருக்கிற அந்த அறையில் மின்விசிறி கிடையாது. குளிர்சாதனம் சத்தமின்றி இயங்கிக்கொண்டிருந்தது. ஒரு தூரப்பார்வைக்கு எது இயந்திரம் எது மனிதன் என்று சந்தேகிக்கிற அளவு அவர்கள் இயந்திரத்தோடு ஐக்கியமாகி யிருந்தார்கள். ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதே கூட மெய்ல் மூலமே. கணினி மூலமே, எழுத்து மூலமே என்றாகி யிருந்தது.
மொழி அதன் சத்த வியூகத்தை இழந்திருந்தது அங்கே. சட்டையுரித்த பாம்புகள்.
நினைத்தபடி எழுந்து வெளியேவர சுற்றித்திரிய முடியாதபடி ஒழுங்குகள். அலுவலகத்தின் மூலைகள் வரை உள்ளிணைப்பு படக்கருவி சதா படம் எடுத்துக்கொண்டே யிருக்கிறது. சி சி டிவி. அபார சுத்தம். அந்த சுத்தமும் குளிரும் கூட மனிதருக்காகவா? அல்ல, அந்த கணினி யந்திரங்களுக்காக. கோவிலுக்குள் நுழையும் மரியாதையுடன் அவர்கள் செருப்புகளைக் கழற்றிவிட்டே அறைக்குள் பிரவேசித்தார்கள். யந்திரங்களே கடவுள்கள் அங்கே.
அந்த மாடியின் தனிமை அவனுக்குப் பிடித்திருந்தது. அங்கிருந்து உலகத்தை யாருடையதோ போல அவன் பார்த்துக் கொண்டிருந்தான். பொதுவாகவே அவனது இந்த வாழ்க்கை, யாருடையதையோ தான் வாழ்வது போலவே அவனுக்குப் பட்டது. ஒழுங்குபடுத்தப்பட்ட ஒடுங்கிய வாழ்க்கை. மனதை அடக்குதல் நாகரிகம் என்கிற நியதிகள். மனசை அலைய விடாமல் கட்டுப்படுத்த நினைத்துவிட்டு, பிறகு அந்தக் கட்டுப்பாட்டுச் சிறையில் அவனே மாட்டிக்கொள்கிற அவலம் எப்படியோ நேர்ந்து விட்டது.
கதவை உள்தாழிட்டுக் கொண்டு திறக்கத் தெரியாமல் அழும் குழந்தை.
வாழ்க்கை என்பது சதுப்புநிலக் காடு.
அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. பாசத்தை விட அவர்களுக்கு அவனைச் சான்றோனாக்குதல் பெரும் லட்சியமாய் இருந்தது. குன்னூரில் தங்கிப் படிக்கிற பள்ளிக்கூடத்தில சின்ன வயசில் இருந்தே அவன் அப்பா அம்மாவை விலகி படிக்கப் போனான். காலை ஆறு மணிக்கு எழுந்துகொள்ள, குளித்துத் தானே தயாராக, பாடம் படிக்க, மற்றும் விளையாட்டுக்களுக்கு என்று பள்ளியில் எல்லாவற்றுக்கும் கால அட்டவணை இருந்தது. இதை மாற்றிச் செய்வது அபத்தம் அங்கே. அவனிடம் கையில் அழுத்தித் தரப்பட்ட நியதிகள் அவை. கொடையளிக்கப்பட்ட நியதிகள். அதன் அருமை அவனுக்குத் தெரியாது. கையளிக்கப்பட்ட அந்த நியதிகளால் அவன் சுதந்திர வேட்கையை அருமையான விஷயமாகக் கொள்ள நேர்ந்தது. எப்போதும் மனிதன் மறு கரையில் வாழவே உந்தப்படுகிறான்… இதன் தாத்பர்யம் விளங்கவில்லை அவனுக்கு.
தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வரும்போது அவனைக் கொண்டாடினார்கள். பரிவும் பராமரிப்புமாய் அவனை அப்பா அம்மா பார்த்துக்கொண்டார்கள். ஒழுங்குகள் நிறைந்த குடிமகனாக அவன் வளர்ந்து வருவதில் அவர்கள் பெருமிதம் கண்டார்கள். அவர்களை திருப்திப்படுத்த அவனுக்குக் கொடையளிக்கப்பட்ட நியதிகளை வீட்டிலும் அவன் கைக்கொள்ள வேண்டியிருந்தது. வாழ்வதற்கு கால அட்டவணை அவசியம்.
ஆனால் கல்லூரி வாழ்க்கை வித்தியாசமான அனுபவங்களை அளித்தது. இளமை, எல்லைகளை அளந்து, அவற்றைத் தகர்க்க ஏனோ ஆவேசப்படுகிறது. பெற்றோர்களைத் தாண்டி சுய சிந்தனைகளை, சுய நிர்ணயங்களை இளமை கைக்கொள்கிற பருவம், பெற்றோர்களிடம் குறை காண, ஆத்திரப்பட முனைகிறது. தாங்கள் வேறு மாதிரி வளர்க்கப் பட்டிருக்கலாம், என அவர்கள் இந்த, புத்தி தெளிய ஆரம்பிக்கிற பருவத்தில் ஆதங்கப்பட நேர்ந்து விடுகிறது. கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் ஒரு கீழ்ப்படிதலை, அடிமைத்தனத்தை நிர்ப்பந்திக்கின்றன. இளமையின் உற்சாக வெள்ளத்தில் அவை அடித்துப்போகப் படுகின்றன.
கல்லூரித் தேர்வு விடுமுறைகளில் வீட்டில் காலை நேரங்கழித்து எழுந்துகொண்டான் மணிவண்ணன். அவனது மாற்றங்கள் அவர்களை ஆச்சர்யப்படுத்தியது. உடம்பு சரியில்லையோ என அவர்கள் பதறியது அவனுக்கு வேடிக்கையாய்க் கூட இருந்தது. உதட்டுக்கு மேல் மீசை முளைத்துக்கொண்டிருக்கிற பருவம். அவனிடம் கடிந்துகொள்ள அவர்கள் பயப்பட்டார்கள். இப்போதெல்லாம் சட்டுச் சட்டென்று அவனுக்குக் கோபம் வருகிறது. ”இந்த மாதிரில்லாம் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதேன்னு சும்மா உதார் காட்டிட்டிருந்தீங்கன்னா லீவுக்குக் கூட நான் வரமாட்டேன்…” என்று கத்தினான் அவன்.
நம்ம மணிவண்ணனா இது, என அவர்கள் வாயடைத்துப்போய்ப் பார்த்தார்கள்.
மூணாம் தளத்தின் மொட்டை மாடியில் அவன் இப்போது தனியே தங்க ஆரம்பித்திருந்தான். பள்ளியிலும் கல்லூரியிலும் விடுதி வாசம். கூட நிறையப் பையன்கள். சாவி பொம்மைகள் போல அவர்கள் அவனுக்குப் பட்டார்கள். அவனும் அப்படியேதான் இருந்ததாகப் பட்டது. தானே அமைத்துக்கொள்கிற ஒழுங்கு முறைகள், நியதிகள், பெற்றோரும், கல்விக் கூடங்களும் போதித்தவை…. இவை தாண்டி வேறேதொ ஒன்று வாழ்க்கை என்று அவனுக்குப் பட்டது. இயல்பான பாசத்தை, நல்லுணர்வுகளை, யதார்த்த மன வியாகூலங்களை யெல்லாம் இந்த சமூக நியதிகள் அழுக்குத் துணியாய் நீருக்குள் அமுக்கி விடுகின்றன.
இந்தத் தனிமை. இது அவனை நிறைய யோசிக்க வைப்பதாய் இருந்தது. ஒருவேளை தனிமைபோர்த்திய அளவில் இப்படி பள்ளியிலும் கல்லூரியிலும், அவன் வளர்க்கப் படாவிட்டால், இப்படி தனியே தன்னளவில் யோசிக்கிற பழக்கம் வந்திருக்குமா தெரியவில்லை. அப்பா அம்மாவின் நகலாக ஒருவேளை நான் ஆகிப் போயிருக்கலாம். அவர்களை ஆதர்சமாகக் கொண்டு வாழ்வின் சராசரித்தனங்களை வெற்றிகளாக நினைத்து மயங்கியும் இருக்கலாம்.
மூணாவது அடுக்கில் அவன். கீழே இரு தளங்களில் யார் யார் குடியிருக்கிறார்கள் என்பதே அவனுக்குத் தெரியாது. வீட்டு சொந்தக்காரர் துபாயில் இருக்கிறார். அவருடைய உறவினர் பொறுப்பில் இருந்தது வீடு. வாடகை வாங்கக் கூட அவர் வருவது இல்லை. வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்திவிட வேண்டியிருந்தது. கணினியில் அமர்ந்தபடி பணப் பரிமாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. யாரும் யாரையும் சந்திக்கவே வாய்ப்பு தராத, விரும்பாத சமூக வாழ்க்கை அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
பெற்றோரை விட்டு விலகியே வாழ்ந்த மனிதன் தான் அவனும். என்றாலும் பருவ மாற்றங்களைப் போல மனசுக்கும் பருவங்கள் உண்டு தானே? சேர்ந்து வாழ்கிற இந்த மனித சிந்தனை எப்படி வந்தது அவனில்? அத்தோடு எப்போதிருந்து அதைப் புறக்கணிக்க அவன் ஆரம்பித்து தனியே தன் வீடு என்று கதவைச் சாத்திக்கொள்ள ஆரம்பித்தான், அதுவே விசித்திரம். ஒரு விஷயத்தை நம்பி இயங்கி பாதிக் கிணற்றில் இப்படிச் செய்வது தவறு என்கிற முடிவு… முழு நாசத்தையே அல்லவா விளைவிக்கிறது?
இன்றைய திரைப்படங்கள் அவனுக்குப் பிடிக்கவில்லை. இளைஞர்களை வெறும் காதல், கேளிக்கை போன்ற அல்பமான உணர்வுக் கிளர்ச்சிகளுக்கு அவை இட்டுச் செல்கின்றன. இவை தேவை அல்ல, என்பது அல்ல விஷயம். இவை மாத்திரமே உலகம் என்கிற பிரம்மாண்ட போலித் தோற்றத்தை இளைஞர்களிடையே விதைப்பது நல்லது அல்ல.
சனி, ஞாயிறு என இரு நாட்கள் வேலையில் இருந்து ஓய்வு கிடைத்தது அவனுக்கு. அதை அனுசரித்தே வெள்ளிக்கிழமைகளில் அதிக வேலைச்சுமையும் தர நிர்வாகம் தயங்கியதே இல்லை. எப்படியும் வெள்ளியிரவு வீடு திரும்ப பின்னிரவு கூட சில சமயம் தாண்டியிருக்கும். வீடு திரும்ப நிர்வாகம் வண்டி தந்து உதவும் தான். ஊரே அடங்கி இருளில் கிடக்கும் என்று பார்த்தால், அந்நேரமும் உணவு விடுதிகளில் ஆட்கள் எதாவது சாப்பிட்டபடி வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டிருப்பார்கள். சிறு குழந்தைகள் கூட அந்நேரம் விழித்திருக்கிற நகரத்து ஆச்சர்யம். பகலின் கடும் வெயில் கடந்து இரவின் இந்த அமைதியை ஆசுவாசத்தை மனிதன் விரும்புகிறானோ என்று தோன்றியது அவனுக்கு.
எல்லாருமே பொருள் திரட்ட ஆவேசப்பட்டு, நியதிகளை, கால அட்டவணைகளை இழந்து, இப்போது புதிய நியதிகள் துவக்கி விட்டிருக்கலாம். குழந்தைகள் பள்ளியில், பெற்றோர் – அம்மா அப்பா இருவருமே அலுவலகத்தில் என்று குடும்பம் சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையில், சேர்ந்து வாழ ஆசைப்பட்ட, ஆவேசப்பட்ட மனிதர்கள் இரவுகளில் விழித்து வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்கள். விடுமுறை நாட்கள் அவர்களை சற்று முக இறுக்கம் தளர்த்துகின்றன.
சிலபோது வீடு திரும்புகையில் பார்த்திருக்கிறான். தரைத் தளத்தில் பெரியவர் ஒருவர் வசிக்கிறார். அவர் மகன் வங்கி அதிகாரி என வாசலில் பளபளவென்று பொலியும் பித்தளைத் தகடு சொல்கிறது. மாடி யேறும்போது உள்ளே அவர் தட்டுப்படுவது உண்டு. ஆங்கில தினசரி வாசித்தபடியோ, ஜிப்பா மாட்டிக்கொண்டு எங்கோ வெளியே கிளம்புமுகமாகவோ அவர் தட்டுப்படுவார். முழு வழுக்கைத் தலை. முகம் பொலிவுடன் சதா புன்னகைத்தபடி காணும்.
சிக்கல் அற்ற எளிய வாழ்க்கை அவருடையது என்று தானறியாமல் நினைப்பு ஓடும். தேவைகளைக் குறைத்துக்கொள்கையில் மனசு சஞ்சலம் அடங்கி அமைதி சூழ்கிறது. சப்தங்கள் மிகுந்த முதல் மாடியில் இருந்து இது முற்றிலும் நேர் மாறானது என்றிருந்தது அவனுக்கு. முதல் தளத்தின் இரு வீடுகளிலும் சதா தொலைக்காட்சிப் பெட்டி பெரும் சத்தத்துடன் அலறிக்கொண்டிருக்கும். புதிய படங்களின் டிவிடி ஓடிக்கொண்டிருக்கும் சில வேளை. வாழ்க்கையை மேலதிக அளவில் அனுபவிக்க ஆவேசப்பட்ட சனங்கள். இதெல்லாம் வாழ்வின் சுகங்கள் என பரவலாய் அறியப்பட்டவைகளை அனுபவிக்கிற சுகம் மாத்திரமே இவர்களுக்கு. தனித்தன்மை பற்றி அவர்களுக்கு அக்கறையோ குறைந்தபட்ச கவனமோ கூட இல்லை. தற்போது நடைமுறையில் இருக்கிற இரண்டு மணி நேர மின்தடை சமயத்தில் அவர்கள் எப்படி அங்கலாய்த்து திகிலடைந்து விடுகிறார்கள்… வீட்டில் உடனடியாக இன்வர்ட்டர் வாங்கியாயிற்று.
மணிவண்ணன் கீழ் வீட்டுக்காரர்களையிட்டு தான் சற்று கடுமை பாராட்டுவதாய் நினைத்துக்கொண்டான். என் வீட்டையே எடுத்துக்கொண்டால் நான் வீடு வரும்போது எனக்கு சகல வசதிகளும் கிடைக்க என் அப்பா அம்மா ஆவேசப்படவில்லையா என்ன… என நினைக்க புன்னகை வந்தது. வசதி என்பது வசதியின்மை என்கிற ஆயாசத்தின் மறுபக்க ஆவேசம். மின்தடைக் காலங்களில் அந்தப் பெரியவர் என்ன செய்வார்? கதவைத் திறந்து வைத்துக்கொண்டு ஈசிசேரைப் போட்டுக்கொண்டு வாசல்பக்கமாக உட்கார்ந்து கொள்வார் என்று பட்டது. அல்லது… வாசல் தாண்டி தெருவில் ஒரு வேப்ப மரம் இருந்தது. அதனடியில் கூட அவர் காற்று வாங்கலாம்…
வெள்ளி இரவு வேலை அதிகம் என்று ஆகிப்போனால் வீடு திரும்ப நேரமாகி விடுகிறது. தரைத்தள, முதல்தள எல்லா வீடுகளும் அப்போது சப்தம் ஒடுங்கி மின்விசிறியோ, குளிர்சாதனமோ ஓடும் சத்தம் மாத்திரம் கேட்க மாடியேறுவான் மணிவண்ணன்.
சத்தமற்ற உலகம் வேறாக இருந்தது அவனுக்.கு. இந்த உலகமே பகலில் ஒரு மாதிரியும் இரவில் வேறு மாதிரியும் ஆகிப்போகிறது. ஊற வைத்த துணிபோல பகல் ஆசை நுரைகளுடன் ஒருவித உருமல் சத்தம் போடுகிறது. அமைதி வெளியில் பாம்புகள் சத்தமற்று ஊர்வது போல இரவு நம்மைக் கடந்து போகிறது. அரவம் ஊர்வதான அரவம் அற்ற உலகம்!
சில சமயம் மொட்டை மாடியின் நிலா வெளிச்சம் அவனை மயங்க வைக்கும். வீடு வரை கம்பெனி கார் கொண்டு விட்டாலும், தரையில் பால் சிந்தினாப்போல துல்லிய வெளிச்சம். சொன்னானே ஒரு ஹைகூ கவிஞன் –
பளீரென்று பௌர்ணமி
எங்கே தட்டுவேன்
சிகரெட் சாம்பல்
உறவு சார்ந்த கட்டுக்கள் தளர்ந்த இந்த உலகத்தில் ஹைகூ கவிதைகள் மனித உணர்வுகளை மீட்டெடுக்க வல்லவையாக அவன் உணர்ந்தான். நிறைய ஹைகூக்கள் இப்படித்தான் வாசிக்கையில் பெரிதும் பாதிப்பு தராத அவை, திடுதிப்பென்று ஒரு முகூர்த்த கணத்தில் மொட்டு திறந்து வாசனை பரத்தி விடுகின்றன.
மணிவண்ணன் அந்தமட்டில் புகைபிடிக்கவோ, மது அருந்தவோ கற்றுக்கொள்ளவே இல்லை. வாழ்க்கை சற்று ஏமாற்றமாய் எதிர்கொள்ளப் படுவதாலோ, அல்லது எதிர்பார்ப்புகளோடு அணுகப்படுவதாலோ தான் மனிதன் சமூக ஒழுங்குகளுக்கு அப்பாற்பட்ட பழக்கங்களைக் கைக்கொள்கிறான் போலும். பால் கொட்டும் நிலா வெளிச்சத்தில் தனித்த இரவில் மொட்டை மாடி அற்புதமாய் இருந்தது. அலுவலகக் களைப்பும் மறந்து சிறு உலாவல். வந்து தழுவும் காற்று விவரிக்க வியலாத உணர்வுக் கிளர்ச்சிகளைத் தந்தவாறிருந்தது.
இயற்கை உன்னைத் தழுவிக்கொண்ட கணம் அது…. நிஜத்தில் வலிந்து நாம் கைக்கொண்ட உறவுகள் இந்த அப்பா அம்மா அண்ணன் தங்கை, மேலும் சித்தப்பா தாத்தா…. ஆனால் இயல்பாகவே அமைந்த இந்த உறவு, இயற்கையுடனான நட்பு, இதை நாம் உணர்ந்திருக்கிறோமா என்றிருந்தது. பௌர்ணமி இரவில் சில சமயம் எஃப் எம் கூட மெல்லிசையான அழகான பாடல்கள் ஒலிபரப்பும். பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா… என அற்புதமாய் மனசை வீணை நரம்பெனச் சுண்டும் பாடல்கள் ஒலிபரப்புவார்கள். இந்தக் கவிஞர்கள் வாழச் சொல்லித் தருகிறார்கள்… என திகட்டிய கணம் அது.
அப்படி இரவுகளில் தூங்கவும் மனம் இராது. பின்னிரவு வரை நேரம் நழுவுவது தெரியாத அளவில் அந்த பாற்கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பான். தானறியாத அசதியில் படுக்கப் போனால் மீண்டும் விழித்தெழ வெயில் வந்திருக்கும். கண்ணெல்லாம் சிவந்து எரியும்.
இந்த நிலா… அது பெண் போல. அம்மா போல. வேலைக்குப் போகாத அம்மா. குழந்தைகள் பணத்தேவைகளுக்கு, அப்பாவை அல்ல. அமமாவையே நாடுகிறார்கள். சூரிய ஒளியை வாங்கி நிலா அம்மா தன் குழந்தைகளுக்கு அளிக்கிறாள்… சூரிய அப்பாக்கள், எவ்வளவுதான் உனக்குச் செலவு செய்வது என்கிற உக்கிரத்துடன் வெளிச்சத்தை அல்ல, வெப்பத்தை உமிழ்கிறார்கள்…
தாமதித்து விழித்தெழுந்த ஒரு பகலில் மணிவண்ணன மொட்டை மாடியில் இருந்து பார்த்தான். நீட்டிக் கிடக்கும் தெரு. அவிழ்த்துப்போட்ட துண்டு. இந்த வீட்டு வேப்ப மரம் தாண்டி தெருவில் வேறெங்கும் மரங்கள் இல்லை. நல்ல வெயிலில் அதிக வாகனப் போக்குவரத்து கூட இல்லை. விடுமுறை நாளின் சோம்பேறித்தனம் தெரிந்தது தெருவில். வண்டி ஒன்று அவர்களைப் பார்க்க வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
ஒரு பாரசிகக் கவிதை ஞாபகம் வந்தது அப்போது.
ரோஜாக்களை விற்றுப்பாகிறான் வியாபாரி. கவிஞன் வியக்கிறான் – இந்த ரோஜாக்களை விற்று, இதைவிட அருமையான எதை வாங்கிவிட முடியும்?
பூந்தொட்டிகளும் உர மண் கட்டிகளுமான வண்டி. ஆளில்லாத தெருவில் அவன் என்ன நம்பிக்கையுடன் பூச்செடிகள் எடுத்து வருகிறான் தெரியவில்லை. பூந் தொட்டீய்… என்கிறதாக அவன் கூவவும் இல்லை. அவர்கள் வீட்டுப் பக்கமாக அவன் வந்துகொண்டிருந்தான். என்ன தோணியதோ தடதடவென்று மணிவண்ணன் கீழேயிறங்கி வந்தான்.
கீழே அந்தப் பெரியவர் புன்னகைத்தார். ”என்ன விடுமுறையைக் கொண்டாடுகிறாயாக்கும்?” என ஆங்கிலத்தில் கேட்டார். எப்போதும் தூய உடை. அலுப்புக் காட்டாத முகம். அவனுக்குப் பெரியவரைப் பிடிக்கும். மென்மையாகத் தலையாட்டி தெருவில் இறங்கினான்.
நல்ல வெயில். நடந்து வந்துகொண்டிருந்த இருவர் அவர்கள் வீட்டு வேப்ப மரத்தடியில சிறிது நின்று ஆசுவாசப்பட்டார்கள்.
ரோஜாவில் இத்தனை வகைகள் பார்த்தது இல்லை அவன். தண்ணீர் தெளித்து தொட்டியின் ஈரத்துக்கு குளுமையாய் ஒரு வாசனை தட்டியது. பூத்த செடி என்று இல்லாமல் மொட்டு விட்டிருந்த ஒரு செடியை வாங்கிக்கொண்டான் மணிவண்ணன்.
”இது எப்ப மலரும்?”
”நாளைக்குப் பார் தம்பி…” என்றான் வண்டிக்காரன் புன்னகையுடன்.
தெருவில் பழகவந்து ஒட்டிக்கொண்ட நாய்க்குட்டியை வீட்டுக்குத் தூக்கிவரும் பரவசம் இருந்தது மணிவண்ணனிடம்
ஆ இத்தனை நாள் நான் அனுபவித்த தனிமை… இனி இல்லை, என்கிறாப்போல வாஞ்சையுடன் மணிவண்ணன் அந்தப் பூச்செடியைப் பார்த்தான். சிறு காற்றுக்கு அது லேசாய் அசைவு காட்டியது பேசுகிறாப் போலவே சிலிர்ப்பு தட்டியது. மொட்டைமாடி சுற்றுச்சுவரில் தொட்டியை வைத்துவிட்டு ஒரு டிப்பர் தண்ணீர் ஊற்றினான். குப்பென்று தாவர வாசனை அவனை நிறைவித்தது. என்ன அனுபவம் இது. நாய்க்குட்டிகள் வாலாட்டுகின்றன. தாவரத்துக்கு வாசனை அடையாளம்.
அன்றிரவு அருமையாய்த் தூக்கம் வந்தது. வெறிதான சிந்தனைகள் குடையக் குடைய வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பான் மணிவண்ணன். மனசில் கேள்விகள் அடங்கி சில பதில்களை எட்டியதாக ஒரு பிரமை. சிறு அசைவும் இல்லாமல் உடம்பு அப்படியே ஓய்வு கொண்டது. சமூக உறவுகள் கிளைபரப்பாத ஒற்றைப் பனைமரமாக அவன் தன்னை உணர்ந்து கொண்டிருந்தான் இதுவரை. சீக்கிரமே படுக்கப் போயிருந்தான். மனசு அடங்கிக் கிடக்கிற போது அவயவங்கள் கட்டுத்தளர்கின்றன.
அதிகாலை சீக்கிரமே விழிப்பு வந்தது. ஊய்ங்கென்று ஒரு வண்டின் ரீங்காரம். சன்னலில் மோதி மோதி உள்நுழைய முய்ற்சி செய்யும் ஒரு வண்டு. அவனை எழுப்ப, அவனிடம் எதோ சொல்ல வந்ததா அது? அதுநாள் வரை அவன் இப்படி வண்டுகள் வந்து இரைந்ததைக் கேட்டதே இல்லை. ஒருவேளை அவன்தான் கவனித்தது இல்லையோ? விருந்தினர் அற்ற ஜாகையாகவே அது இருந்தது. உன் அழைப்பை ஏற்றேன் வண்டே… என்கிற புன்னகையுடன் எழுந்து கதவைத் திறந்தபோது ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.
அவன் வைத்த ரோஜாச்செடி மலர்ந்திருந்தது. இது எப்ப பூவிடும்?… என அவன் கேட்டதும், வண்டிக்காரன் நாளைக்கு… என்று சொன்னதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. அழகான சிறு ரோஜா. காற்றில் சற்றே நகைப்புக் காட்டி ஆடும் ரோஜா. அந்த இடத்துக்கே உயிர் வந்தாப்போல இருந்தது அப்போது. நான் தனியன் அல்ல, என்கிற பைத்தியக்கார எண்ணம் பிறந்த கணம் அது.
ஊய்ங்கென்று வண்டிரைச்சல். அவன் அந்தப் பூவிடம் போனவன் அப்படியே நின்றான். வண்டு மெல்ல அந்தப் பூவை தட்டாமாலை சுற்றியது. ஆ அந்தப் பூவின் சிரிப்பு. அதை அந்த வண்டு உணர்ந்து கொண்டாப் போலிருந்தது. மெல்ல இரைந்தபடி அந்த வண்டு போய் பூவில் அமர்ந்தது. நான் தனியே இல்லை… என்றல்லவா நினைத்தேன். இந்த உலகில் எதுவும் தனியே இல்லை என்று கண்டுகொண்டான் மணிவண்ணன்.
நேற்று இந்த பூச்செடியை வாங்கிக்கொண்டு மாடியேறினான் மணிவண்ணன். அந்தப் பெரியவர் அவனைப் பார்த்துப் புன்னகைத்தது ஞாபகம் வந்தது.
”நம்ம வீட்டு வாசல் வேப்ப மரம்… நல்ல நிழல் சார் அது…” என இவனும் புன்னகை செய்தான்.
”நான்தான் அதை நட்டேன்…” என்றார் பெரியவர். ”இத்தனை நீளத் தெருவில் நிழலுக்கு என்று அது இப்போது எல்லாருக்கும் பயன்படுகிறது. எத்தனை தூரம் வெயிலில் வந்தாலும் நம்ம வீட்டு வாசலில் கொஞ்சம் இளைப்பாறச் சொல்லி அடைக்கலம் அளித்து அது அனுப்பி வைக்கிறது பார்த்தியா? யாராவது அதைப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா?” என்றார் பெரியவர்
ஊய்ங்கென்று மீண்டும் கிளம்பிய வண்டு அவன் நினைவைக் கலைத்தது.

>>
Thamarai monthly June 2012
storysankar@gmail.com

Series Navigationகுறிஞ்சிப் பாடல்சுப்புமணியும் சீஜிலும்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *