வாழ்வியல் வரலாற்றின் சிலபக்கங்கள் –24

This entry is part 5 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

 

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாதீர் வையக்கு அணி

 

இரு செய்திகளைப் பதிவு செய்யவே இத்தொடர் தொடங்கப்பட்டது

வெறும் செய்திகளை மட்டும் கூறுதல் அந்தச் செயல்பாடுகளின் வலிமை தெரியாமல் போகும்.

அரசு எடுக்கும் எந்தத் திட்டமும் மக்களுக்காகத்தான்..

அதாவது நமக்காக.

செலவழிக்கப்படும் நிதியும் நம்முடையது.

எனவே முழுமையான பலன் கிடைக்க நம்முடைய பொறுப்புகளையும் எழுத வேண்டி வந்தது. சில எடுத்துக் காட்டுகளுடன் விளக்கம் தரப்பட்டது. இப்பொழுது தொடரைத் தொடரலாம்.

குழந்தைகள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைப் பற்றி ஓரளவு எழுதிக் கொண்டு வருகின்றேன்.இப்பகுதியில் இப்பொழுது புள்ளி விபரங்கள் அதிகம் கொடுப்பதைப் பொறுத்துக் கொள்ள வேண்டிக் கொள்கின்றேன். இப்பணியில் சம்பந்தப்பட்டவர்கள் இத்தொடரைப் படித்து வருகின்றார்கள். இனி வரும் பயிற்சி காலங்களீல் இந்த விபரங்கள் அவர்களுக்கு உதவும்.

மகளீர் நலக் கிளைகள் மூலமாக 48 இடங்களில் குழந்தைகள் மையமும் சேர்க்கப்பட்டு இயங்கிவந்தன. அப்பொழுது அதனை “பால்வாடி” என்று கூறிவந்தோம். சமூக நலவாரியமும், வேறு சில அமைப்புகளிலும் இதைப் போன்ற 105 மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடத்தின.. 1962 இல் தமிழக அரசால் ஊராட்சி ஒன்றியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 1240 கிராமங்களில் “குழந்தைகள் கல்வி மையங்கள்” (preschools) தொடக்கப்பட்டன. முக்கிய சேவிக்காக்களுக்குப் பயிற்சி தரப்பட்டு அவர்கள் மூலமாக இந்த அமைப்பாளர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது.. முதல் பிரிவில்தான் நான் தேர்ந்தெடுக்கப் பட்டுச் சென்னையில் சிறப்புப் பயிற்சி பெற்றேன்

(சென்னையில் தங்கிய ஆறுமாத காலத்தில் பயிற்சியுடன், என் பயணத்தில் பல திசைகள் சென்று புதிய அனுபவங்கள் பெற்றேன்.)

பின்னர் குழந்தைகள் மையங்களுக்கு  “CARE” உதவியுடன் சத்துணவு கொடுக்கப்பட்டது. பல இடங்களில் கட்டடங்களூம் கட்டித்தரப்பட்டன.

இந்தத் திட்டங்களில் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பகுதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் கர்ப்பிணி, குழந்தைகள் உடல் நலம் கவனிக்கும் திட்டம் இணைக்கப்படவில்லை.

1963 இல் பூந்தமல்லியில் ஓர் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 50 கிராமங்களில் மையங்கள் தொடங்கப்பட்டு,.. இதில் குழந்தைகள் மையப் பணிகளுடன் உடல்நலப் பணிகளும் இணைக்கப்பட்டன. மகளிர் நலக் கிளையில் பணியாற்றிய அமைப்பாளர் போல் இங்கு பணியாற்றி யவர்களுக்கும் மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. மற்ற இடங்களில் மதிப்பூதியம் தரப்பட்டது. ஒவ்வொரு பயிற்சியிலும் சிறிது சிறிதாக செயல்பாடுகள் சேர்க்கப்பட்டன

1975 இல் மத்திய அரசு மூலம் ஒருங்கிணந்த குழந்தைகள் நலத்திட்டம் தொடங்கப்பட்டது.  அப்பொழுது ஊனமுற்றோர் நலம், இன்னும் சில திட்டங்கள் மகளிர் நலத்துறையுடன் இணக்கப்பட்டு பெயரை சமூக நலத்துறை என்று மாற்றினர். சமூக நலத்துறையும் சுகாதார நலத்துறையும் இணைந்து செய்யும் திட்டமாக இது அமைக்கப்பட்டிருந்தது. மூன்று ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள கிராமங்களில், மற்றவைகள் நகரச் சேரிகளில் தொடங்கப்பட்டன. (Slum Centers)  நகரச் சேரிகளில் ஆரம்பித்த  திட்டங்களில் 1000 ஜனத்தொகைக்கு ஒரு மையம் என்ற கணக்கில் மையம். ஒரு திட்ட அலுவலத்தில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஒருவர், நான்கு மேற்பார்வையாளர்கள், இவர்களுடன் உடல்நலம் கவனிக்கும் நான்கு செவிலியர்களும் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு திட்ட அலுவலதிற்கு ஓர்  மருத்துவர் ஆலோசராகவும் அவருடன் பகுதிக்கு ஓர் மருத்துவர் என்று நான்கு மருத்துவர்களும் அமைந்தது இத்திட்டத்தின் சிறப்பு.

ஓர் பணியைத் தொடங்கினால் அது சீராக நடக்க ஊழியர்களின் அமைப்பும்  அதற்கேற்ப இருத்தல் வேண்டும்.

இந்தத் திட்டம்பற்றி விளக்கும் முன்னர் குழந்தை நலப்பணிகளைக் கவனிக்க அமர்த்தப்பட்ட ஒரு பெண்மணியைப் பற்றி கூற வேண்டும். அவர் பெயர் திருமதி வசந்த குமாரி. கல்லூரிப் படிப்பை முடிக்கவும் நேரடியாக அரசுக்கு உதவி இயக்குனர் பதவிக்கு வந்தவர். அரசியல் செல்வாக்கில் வந்தவர்தான். இவர் தந்தை திரு ஆசைத்தம்பி அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னிலையில் இருந்த ஒருவர். வந்த வழி எப்படியாயினும் வந்தவரின் பணிகளை துறை மறக்க முடியாது.

ஒரு நாள் கூட அரசியல் பேசியதில்லை. மிகவும் நேர்மையானவர். கிராமங்களுக்குச் செல்லும் பொழுது ஊழியர் ஒரு காபி கொடுத்தாலும் உடனே அதற்குரிய காசை மேசையில் வைத்துவிடுவார். வேலையிலும் திறமை சாலி. கள அனுபவம் எனக்கு இருந்தது. அவருக்குப் புதிய விதிகள் தெரியும். நாங்கள் இருவரும் இணைந்து பல திட்டங்கள் தீட்டினோம். ஒற்றுமையாகச் செயல்பட்டோம். எங்கள் துறையில் எல்லோரும் அறிவர். இவரைப்பற்றி இவ்வளவு கூறுவதற்குக் காரணம் சொல்லப் போகும் திட்டங்களை சிறப்பாக வடிவமைத்தவர், வழி நடத்தியவர் என்றால் இவரே முதன்மையானவர்.

இப்பொழுது மத்திய அரசுத் திட்டத்தைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாட்டிலும் வளர்ச்சியின் போக்கு ஒன்றாக இருக்கும் என்பதில்லை. இந்திய நாட்டின் வளர்ச்சிக் கேற்ப ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வரைபடம் தயாரிக்கப்பட்டது.. அதில் ஐந்து நிலைகள் இருக்கும். ஒவ்வொரு மாதமும் குழந்தையின் எடை எடுக்கவும் குறிக்கவும் வேண்டும். இரண்டாம் கோட்டிற்கு வந்தால் ஊழியர்கள் குழந்தை விஷயத்தில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். கண்காணிக்கத் தவறினால் விரைவில் மூன்று நான்கு நிலைக்குப் போய் விடும். அது வளர்ச்சி குறைவைக் காட்டுவது. அத்தகைய குழந்தைகளுக்கு உடல் நிலை பாதித்தால் குழந்தை இறந்துவிடும்.

குழந்தையின் உயிர்காக்கும் திட்டம்.

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவது முதல் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதிலும் சொட்டு மருந்து கொடுப்பதிலும் சிறப்பு கண்காணிப்பு இருக்கும். குழந்தைகளின் எடை குறையும் பொழுது டாக்டர்களிடம் குழந்தைகளை எடுத்துச் செல்வர். ஒவ்வொரு திட்டத்திற்கும் டாக்டர்கள் இருப்பினும் மையங்களை அருகில் இருக்கும் ஆஸ்பத்திரிகளுடன் இணைத்திருப்போம். அங்கு சென்று பரிசோதனை செய்து குழந்தைக்கு வேண்டிய சிகிச்சை தரப்படும்.

இந்த மையத்தில் கவனிக்கப்படும் குழந்தைகளின் வயதைக் குறிக்கும் பொழுது 0 to 6 என்று கூறுவோம். பள்ளிக்குச் செல்லும் வரை அவர்களின் பொறுப்பு இந்த மையத்தைச் சேர்ந்தது. காலையில் 9 மணிக்கு வந்தால் மாலை 3 மணி வரை குழந்தைகள் இருப்பர். அதற்கேற்ப கல்வித் திட்டங்கள், விளையாட்டுகள் கூட அதன் மூலம் குழந்தைகளுக்கு திறனை வளர்க்கவும் ஒழுங்கு கற்கவும் ஏற்ப இருக்கும்.

1978 இல் எனக்கு ஓர் சோதனை வந்தது. அரசியல் சூறாவளியில் சுருட்டி உருட்டி அடிக்கப்பட்டு கடைசியில் சென்னையில் இருந்த திட்டத்திற்கு 1979 இல் ஓர் அலுவலராக போய்ச் சேர்ந்தேன். எனக்குப் பயிற்சி டில்லியில் என்றார்கள். 1979 ஜூன் மாதம் டில்லிக்குச் சென்றேன். பயிற்சி காலத்தில் உத்திரப்ரதேஷ், ஹரியானா மாநிலங்களில் கிராமங்களுக்குச் சென்றோம். பீஹார், காஷ்மீர் மாநிலங்களிலும் கிராமங்களைப் பார்த்தேன்.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று மேடையில் சில நேரங்களில் முழக்கம் ஒலித்த காலம். ஆனால்  கிடைத்த பணத்தில் திறமையாக செயல் பட்டது தெற்கேதான். இங்கு கண்ட வளர்ச்சி அங்கு காண முடிய வில்லை. இன்னொரு அனுபவமும் கிடைத்தது.

இந்தி மொழிப் பிரச்சனை.

வட மாநிங்களில் முதுநிலைப் பட்டதாரிகளாக வந்த பலருக்கு ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. எனவே வகுப்பில் இந்தியில் பாடம் எடுத்த பொழுது நான் வகுப்பை விட்டு வெளியில் புறப்பட்டேன். அவர்கள் காரணம் கேட்டார்கள். எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்திருக்கின்றவர்களுக்கு ஆங்கில் மொழியில்தான் வகுப்பு எடுக்க வேண்டும். அதுதான் நிர்ணையிக்கப் பட்ட விதி. புரியாத மொழியில் வகுப்பு நடத்தினால் எப்படி இருக்க முடியும்? நான் விளக்கியவுடன் ஒருவர் கூறியது “தமிழ் நாட்டான் எப்பொழுதும் பிரச்சனை” என்றார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலுருந்து வந்தவர்களுக்கு இந்தி புரிந்தது. நான் ஒருத்திதான் தனித்துவிடப்பட்டேன்.

வட நாட்டாரின் இந்தி வெறியும் தெரிந்தது. நம் மொழிப்பற்றால் பாதிப்பு இருப்பதும் புரிந்தது.

ஆனாலும் அங்கே பயிற்சிக்கு வந்த அனைவரும் ஒற்றுமையாக உற்சாகமாக இருந்தோம்.

விடுமுறை நாட்களில் வெளியில் செல்வோம். எனக்கு கரோல்பாக் பிடிக்கும். தமிழர்கள் வாழும் பகுதி என்று மட்டுமில்லை. அந்த நீண்ட கடைத்தெருவில் ஒரு முறை நடந்து திரும்பினால் பொழுது போய்விடும். அப்படி நடந்து கொண்டிருக்கும் ஒரு நாள் ஒரு புதிய நட்பு கிடைத்தது. பெயர் வசந்தா. அவர்கள் வீடு கரோல்பாக்கில்தான் இருந்தது. வீட்டிற்குக் கூப்பிட்டார்கள் சென்றோம். அவர்கள் வார இதழ், மாத இதழ்களில் வரும் கதைகள் நிறைய படிப்பவர்.. எங்களைப் பிணைத்தது இந்தக் கதை படிப்பதில்தான். அவர்கள் வீட்டில் இருக்கும் பொழுது வசந்தாவின் கணவர் கிருஷ்ணனப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டேன். அவர் மத்திய அரசில் பணி புரிகின்றவர். நிலாச் சாப்பாட்டிற்கு ஒரு நாள் வரச் சொன்னார். அவரிடம் ஸ்கூட்டர் உண்டு. என் பயிற்சி நிலையத்திற்கு வந்து அவர் வண்டியில் கூட்டி வந்தார். அது எனக்கு முதல் அனுபவம். இப்படி ஓர் வண்டியில் உட்கார்ந்து பயணம் செய்வது முதலில் பயமாக இருந்தது.. பின்னால் பழகிவிட்டது.

நிலாச் சாப்பாடு விருந்தில் இன்னொருவர் அறிமுகமானார்.

திரு முரசொலி மாறன் அவர்கள்.

கிருஷ்ணன் அரசியல்வாதியல்ல. அரசுப் பணியாளர். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.. நிலவொளியில் அரசியல் பேசவில்லை. பத்திரிகைகளைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் நிறைய பேசினோம்.

டில்லியில் இருக்கும் பொழுது என் நண்பர் மணியன் வந்திருந்தார். அவருடன் தாமரை மணாளனும் வந்திருந்தார். திருமதி. இந்திராகாந்தி அவர்களைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். நான் எங்கு இருந்தாலும் அந்த ஊருக்கு வந்தால் என்னைப் பார்க்கமல் போக மாட்டார் மணியன். அவர் மட்டுமல்ல. என்னுடன் பழகியவர்கள் எல்லோரும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான்.

டில்லி வாழ்க்கையில் இன்னும் சில அனுபவங்கள். இமையமலைச் சூழல், எழில்மிகுந்த காஷ்மீர்ப் பகுதிகள், ஆன்மீகப் பாதையில் என் குருநாதர் சுவாமி சிவானந்த மகரிஷியின் ரிஷிகேசம் ஹரித்துவார் பார்க்க முடிந்ததில் திருப்தி. ரிஷிகேசத்தில் குருஜியின் சமாதி காணவும் அழுதுவிட்டேன். கல்லூரியில் படிக்கும் பொழுது ஏற்பட்ட தொடர்பு. துறவியாக விரும்பினேன். ஆனால் குருஜி என்னைப் படிக்கும்படி சொல்லிவிட்டார். என் ஆசை நிறைவேறி யிருந்தால் ரிஷிகேசத்தில் வாழ்ந்திருப்பேன். எல்லாம் இறைவன் சித்தம்.

பயிற்சி முடிந்து சென்னைக்கு வந்து சிறிது காலம் அப்பணியில் இருந்தேன். அப்பொழுது இன்னொரு சிறப்புத் திட்டம் தோன்றுவதற்குரிய அறிகுறிகள் தென்படலாயிற்று.

குழந்தைகள் நலனுக்காக ஓர் திட்டம் ஏற்படுத்தி ஓர் ஆய்வு செய்ய விரும்பியது உலக வங்கி. அவர்கள் தேர்ந்தெடுத்த நாடுகள் இரண்டு. ஒன்று இந்தியா. மற்றொன்று ஆப்பிரிக்கா. இந்தியாவில் தமிழகம் தேர்ந்தெடுக்கப் பட்டது. திட்டம் தொடங்கு முன்னர் அதன் வடிவமைக்க ஆய்வு செய்தனர். வசந்தகுமாரியும் நானும் குழந்தை நலனுக்காக இருக்கும் எல்லாத் திட்டங்களையும் காண்பித்தோம்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண் கர்ப்பமாக இருக்கும் பொழுதோ அல்லது பிரசவ காலத்திலோ இறப்பதையும் குழந்தைகள் மரணத்தையும் குறைக்கவேண்டும்.

(To reduce maternal mortality rate and infant mortality rate. )

ஏற்கனவே இருந்த திட்டங்களில் குறிப்பாக மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தில் ஊழியர் பல வேலைகளைக் கவனிக்க வேண்டி யிருக்கின்றது.  கவனிக்கப்பட வேண்டிய காலம் குழந்தை கருவான முதல் மூன்று வயது வரை அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. குழந்தையைப் பலஹீனமாக்கும் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பூச்சி இவைகளில் தனிக் கவனம் செலுத்தப்படவேண்டும். வயிற்றுப் போக்கு கண்டவுடன் உப்பு சக்கரைத் தண்ணீர் அடிக்கடி கொடுத்து நீரிழப்பைச் சரி செய்து வர வேண்டும். தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் கூட்டிச் சென்று சிகிச்சை செய்தல் வேண்டும். வயிற்றில் பூச்சி இருந்தால் நாளடைவில் குழந்தையின் பசி பாதிக்கப்படும் வளர்ச்சியும் குன்றிவிடும். எனவே வயிற்றுப் பூச்சிக்கு மருந்து கொடுத்து அதனை நீக்க வேண்டும். தடுப்பூசிகள் தவறாது போடவேண்டும். குழந்தைகள் உடல்நிலை பாதிக்க ஆரம்பிக்கும் பொழுதே உடன் சிகிச்சை செய்தல் வேண்டும்.

பலஹீனமான குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து கிடைக்க சத்துமாவு கொடுத்தல் வேண்டும். அதன் அளவும் கூட உடல் எடையைப் பொறுத்துத் தர வேண்டும். சத்து மாவில் என்னென்ன கலக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கேற்ப சத்து மாவு கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டு மையங்களுக்கு வினியோகிக்கப்பட்டது. பின்னர் மகளிர் மன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்த்து கூட்டுறவு முறையில் சத்து மாவு தயாரிக்கப்பட்டு வினியோகிக் கப்பட்டது.

.இந்த பொறுப்புகளைக் கவனிக்க பல துறைகளை ஒருங்கிணைத்து ஓர் அமைப்பும் முடிவானது.

HEALTH DEPARTMENT

SOCIAL WELFARE DEPARTMENT

COMMUNICATION WITH PROJECT OFFICE

MONITERING AND EVALUVATION

திட்டம் ஆரம்பிக்கும் முன் களத்தின் நிலையை மதிப்பீடு செய்தல் வேண்டும். பின்னர் தொடர்ந்து மதிப்பீடு செய்து உடனுக்குடன் காணும் குறைகளைத் தெரிவிக்க வேண்டும். இப்பணி செய்யும் துறைகள் ஒருங்கிணைந்து குறைகளைக் களைந்து பணிகளைச் சீர் செய்தல் வேண்டும். இந்த புதிய முறை இத்திட்டத்தில்தான் சேர்க்கப்பட்டது.. இதனால் உடனே தவறுகளைச் சீர்செய்ய முடிந்தது.

வீடுகள் பார்வையிடப்பட்டு புள்ளிவிபரங்கள் சேகரித்து ஓர் பதிவேடு வைத்திருக்க வேண்டும். வீடுகளில் சேரும் புதியவர்கள், வீட்டைவிட்டுப் போகும் மனிதர்கள், பிறப்பு, இறப்பு எல்லாம் அவ்வப்பொழுது பார்வையிடப்பட்டு குறித்தல் வேண்டும். மதிப்பீட்டுத் துறை இதனை கண்காணிப்பர். அமைப்பாளர்தான் இதற்குப் பொறுப்பு.

முதலில் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் எல்லாக் கிராமங்களிலும் இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியது. பின்னர் மதுரை மாவட்டத்தில் எல்லாக் கிராமங்களிலிலும் அதாவது 1800 மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளில் ஆறு மாவட்டங்கள் அனைத்துக் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்பட்டது. (இப்பொழுது அவைகள் 14 மாவட்டங்கள்)  உடனுக்குடன் பிரச்சனைகள் களையப்பட்டு வழி நடத்தப் பட்டதால் திட்டம் முடியவும் ஆய்வு செய்த பொழுது, திட்டத்தின் பலன் திருப்திகரமாக இருந்தது உலக வங்கிக்கு நிறைவைக் கொடுத்தது .

முதலில் கொட்டாம்பட்டியில் 1980 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1981 இல் மதுரை மாவட்டம் முழுவதும் விரிந்தது. அப்பொழுது மதுரை மாவட்டத்திற்குப் பொறுப்பாக என்னை அமர்த்தினர்.

மாவட்டக் கூட்டத்தில் கொடுக்கும் அறிவுரைகள் மறு நாள் மாலைக்குள் மையப் பணியாளர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். ஒரு வட்டத்திற்கு ஓர் பயிற்சியாளர், 10 மையங்களுக்கு ஓர் மேற்பர்வையாளர் என்று இருந்ததால் உடனுக்குடன் தகவல் பரிமாற்றங்கள் விரைவாகவும் ஒழுங்காகவும் நடை பெற்றன.

ஓராண்டுக்குப் பின்னர் இதே திட்டத்திற்கு இயக்குனர் அலுவலத்தில் இருந்துகொண்டு மற்ற மாவட்டங்களைக் கவனிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. திருமதி வசந்த குமாரி துணை இயக்குனராகவும் நான் உதவி இயக்குனராகவும் பணியாற்றினோம்.

பல துறைகள் சேர்ந்து பணியாற்ற வேண்டும். எங்களுக்குள் சண்டை வரும் ஆனாலும் அது போட்டியாக அமைந்து பணிவிஷயத்தில் ஒருங்கிணைந்து பணி புரிந்தோம். என் பணிப்பயணத்தில் மறக்க முடியாத சிறந்த காலம் இது. இத்திட்டத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் அதில் பணியாற்றிய பயிற்றுனர்களுக்குப் பெரும் பங்குண்டு. அவர்களுக்கு நிர்வாகப் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. பயிற்சியும் வழிகாட்டலும் தான். கல்லூரியில் படித்து முடிந்தவுடன் வேலைக்கு வந்தவர்கள். ஆர்வத்துடன் வேலை பார்த்தனர்.

ஓர் திட்டம் வெற்றி பெற களப்பணியாளர்களின் அக்கறையும் உழைப்பும் மிக மிக முக்கியம். திட்டத்தில் பயன் பெறும் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

1. ஓர் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க, இருக்க, கர்ப்பிணிகள் பாதுகாப்பு முக்கியம். வீட்டில் கர்ப்பிணிகளின் மனம் அமைதியாகவும் மகிழ்வாகவும் இருக்கும்படி குடும்பத்தார் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. ஊட்டச்சத்து முக்கியம். உடனே பணம் பற்றி பேச ஆரம்பித்துவிடுவோம். நாகரீக வாழ்க்கையில் சாப்பிடும் உணவு வகைகளில் ஊட்டச் சத்து போய் விடுகின்றது. கேழ்வரகுக் கஞ்சியும் கீரையும் கொடுக்கும் சக்தி வறுத்த உணவில் இல்லை பிறக்கும் பொழுது குழந்தைக்கு இருக்கும் எடையை வைத்து அதன் வளர்ச்சி அமையும். குழந்தையின் வளர்ச்சிக்குக் கர்ப்ப காலத்திலேயே கவனம் ஆரம்பித்துவிடுகின்றது.

3. கர்ப்பிணி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பிரசவ காலத்தில் வலிப்பு வராது

அமெரிக்காவில் ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால் அவளுக்கு மட்டுமல்ல அவள் கணவனையும் வரவழைத்து, சேர்த்துத் தான் அறிவுரைகள் கூறுவார்கள். இருவருக்கும் பயிற்சி கொடுக்கப்படும். பிரசவ நேரத்தில் கணவனையும் உடன் இருக்கச் சொல்வர். இருவருக்கும் பொறுப்புகள் உண்டு.

4. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். அது உணவு மட்டுமில்லை

தாய்ப்பால் கொடுப்பதால் அழகு போய்விடும் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். நாகரீக வாழ்க்கையில் நாம் செய்து கொள்ளூம் பல காரியங்களில் நம் கவர்ச்சியும் அழகும் அதிகம் பாதிக்கப்படுகின்றது. கூட்டல் கழித்தல் கணக்கு போட்டு பார்த்தால் குழந்தையுடன் அரவணைப்பில் பலன் அதிகம்.

5. குழந்தைகளுக்குத் தவறாமல் தடுப்பூசிகள் போட வேண்டும்.

DPT தொடர்ந்து மூன்று மாதங்களில் போட வேண்டும். பல வியாதிகளைத் தடுக்கும்.

சொட்டு மருந்து இளம்பிள்ளைவாதம் வராமல் தடுக்கும். பின்னால்  booster  ம் போட வேண்டும்.

5 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துணவு கொடுக்க வேண்டும்.

6. வளரும் சூழலை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். மனம் பாதிகப்படும் நிகழ்ச்சிகள் குழந்தைக்கு முன் நடத்தல் கூடாது

7. விளையாட்டுகள் கூட அவர்கள் திறன், குணம் வளரும்படியாக பார்த்து அமைத்துத தரவேண்டும்.

8. குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபின் அவர்களின் தன்னம்பிக்கை வளரும்படியாக பெற்றோர்களும், வீட்டில் இருக்கும் மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும். வெளி உலகம் முதலில் காணும் பொழுது அவர்களுக்குப் பல புதிய அனுபவங்கள் கிடைக்கும். குழம்பாமல் இருக்கத்தான் பெரியவர்கள் உதவ வேண்டும்.

9 படிக்கும் விஷயத்தில் வழிகாட்டியாக இருக்க வேண்டும். பயமுறுத்தல், கட்டாயப் படுத்துதல் கூடாது. அவர்கள் தவறாகப் புரிந்திருந்தால் சொல்ல வேண்டிய முறையில் சொல்ல வேண்டும்.

10. குழந்தைகள் மீது இருக்கும் பாசத்தில் தவறு செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்டு அசட்டையாக பெரியவர்கள் இருத்தல் கூடாது.

மாற்றங்களின் வேகம் அதிகம். எந்த உருவிலும் வரலாம். குழந்தைகளை வளர்ப்பது சுலபமானதல்ல. பிள்ளைகள் பெற்றால் மட்டும் போதாது. அவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். இது நம் கடமை

தமிழ்நாடு பல திட்டங்களில் நாட்டிற்கே முன்னோடியாக இருந்து வந்திருக்கின்றது. எல்லோரையும் ஈர்த்த இன்னொரு திட்டமும் தமிழகத்தில் தோன்றியது.

முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்

முதலில் இப்படித்தான் அழைக்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் காப்பகம் என்றும் சத்துணவு மையம் என்றும் அழைக்கலாயினர்.

ஒரு மனிதரின் உள்ளத்தில் வெகு காலமாக தங்கியிருந்த ஆதங்கத்தில் பிறந்த திட்டம்.

அதன் விபரங்களை எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதனைப் பார்க்கலாம்.

“உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு, உத்தமர் இயல்பு”

— வேதாத்ரி மகரிஷி

தொடரும்

 

Series Navigationவேதனை – கலீல் கிப்ரான்நினைவுகளின் சுவட்டில் (96)
author

சீதாலட்சுமி

Similar Posts

4 Comments

 1. Avatar
  சமீரா says:

  உங்களின் கட்டுரை மூலம் பல தகவல்கள் அறிய முடிந்தது.. நானும் பால்வாடி-ல் பயன்பெற்றவள் என் சிறுவயதில்…
  நல்ல உபயோகமுள்ள ஒரு மக்கள் பணி இந்த திட்டம்.. இதில் பயனுற்ற பயனாளிகளை நான் அறிவேன்… உங்களின் அனுபவங்களை பகிர்ந்ததற்கு நன்றி அம்மா..

  1. Avatar
   seethaalakshmi says:

   சமீரா எங்கள் மகள் என்பதை அறிந்து மகிழ்ச்சி. மகளுக்கு நன்றி கூறக் கூடாது. என் மனப்பூர்வமான ஆசிகள்
   சீதாம்மா

 2. Avatar
  பவள சங்கரி says:

  அன்பின் சீதாம்மா,

  மிகப்பயனுள்ள தகவல்கள். வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய பல செய்திகளைத் தாங்கிவருவது இத்தொடரின் தனிச்சிறப்பு. தொடருங்கள். வாழ்த்துகள்.

  அன்புடன்
  பவள சங்கரி

  1. Avatar
   seethaalakshmi says:

   அன்பின் பவளா
   தங்களுடைய புரிதல் கண்டு மகிழ்ச்சி. வாசிப்பிற்கு நன்றி
   சீதாம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *