அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்

This entry is part 14 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

பூமி உருவான ஆரம்ப காலங்களில் காடு மிகவும் வேறுபட்டு காணப்பட்டது. முதல் மனிதர்களுக்கு உண்பதற்கு வெறும் இலைகளும் நாவற்பழங்களும் மட்டுமே கிடைத்தன.

அகௌடி காட்டின் நடுவிலே நடந்து சென்றான். அவன் மிகவும் ருசியான வித்தியாசமான உணவினைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனாலும் அவனுக்கு இலைகளும் நாவற்பழங்களை விட்டால் வேறெதுவும் கிடைக்கவில்லை.

அன்று அவன் எவ்வளவு தூரம் நடந்து இருப்பான் என்று சொல்ல முடியாத அளவு வெகு தொலைவு நடந்துவிட்டிருந்தான். அன்று அவனுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அவன் கடைசியில் முன்பின் பார்த்தேயிராத மிகவும் வித்தியாசமான இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் அங்கு முன்பின் நுகர்ந்திராத இனிய நறுமணம் வருவதை உணர்ந்தான். ஆனந்தத்தில் காற்றை மூச்சு முட்ட நுகர்ந்தான்.

வாசமே இனிப்பாக இருப்பதாக உணர்ந்தான். ருசிக்க நல்லதாக ஏதோ இருக்கிறது என்று எண்ணியதும் அவன் நாவில் எச்சில் ஊறியது. அகௌடி தன் மூக்கைத் தொடர்ந்தான். அவன் மேலும் மேலும் நடந்த வண்ணம் இருந்தான். கடைசியில் ஒரு மரத்தின் முன் வந்து நின்றான். அதன் கிளைகள் வானத்தைத் தொடுமளவு உயர்;ந்து காணப்பட்டது.

“அம்மாடியோவ்..” என்று தன்னையறியாமல் கத்தினான் அகௌடி. மரத்தில் எல்லா விதமானப் பழங்களும் தொங்கிக் கொண்டிருந்தன. வாழை, மாம்பழம், தேங்காய், ஆரஞ்சு, இலந்தை என்று எந்தப் பெயரைச் சொன்னாலும், அவை அனைத்தும் அங்கு இருந்தன.

அகௌடி கிளைகளைப் பிடித்து மேலே ஏறினான். “நான் யாருக்கும் இந்த மரத்தைப் பற்றிச் சொல்ல மாட்டேன். இங்கிருக்கும் பழங்கள் எனக்கு மட்டுமே” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

ஒரு வாரம் கழித்து, அகௌடியின் சகோதரன் மகௌனைமா, சகோதரனின் நடத்தையில் மாற்றத்தை உணர்ந்து, தன் மற்ற சகோதரர்களிடமும், நண்பர்களிடமும், “அகௌடியைப் பார்த்தீர்களா.. சற்றே பெருத்துவிட்டானல்லவா?” என்று கேட்டான்.

“ஆமாம்.. ஆமாம்.. இலைகளையும் நாவற்பழங்களையும் தவர, அவன் வேறு எதையோ சாப்பிடுகிறான் போலிருக்கிறது. அதனால் தான் பருத்திருக்கிறனோ என்னவோ..” என்று தங்கள் ஐயத்தை வெளியிட்டனர்.

அடுத்த நாள் காலை, மகௌனைமா ஊஞ்சல் படுக்கையிலிருந்து இறங்கி அகௌடி கிளம்புவதைக் கண்டான். அகௌடிக்கோ பயங்கரப் பசி. அவன் சற்று தூரம் சென்றதும், அவன் பின்னால் அவனுக்குத் தெரியாமல் மகௌனைமா தொடர்ந்தான். சிறிது தூரம் சென்றதும் பொறுக்காமல், அகௌடி முன் தோன்றி, “காலை வணக்கம் அகௌடி..” என்றான்.

சகோதரனின் வரவை எதிர்பார்க்காத அகௌடி, வெறுப்புடன், “வணக்கம்” என்று மட்டுமே சொல்லிவிட்டு அமைதியானான்.

“நாவற்பழங்களைத் தேடிச் செல்கிறாயா?” என்று கேட்டான் மகௌனைமா.

“ஆமாம்..” என்று இடைவெட்டினான்.

“நானும் உன்னுடன் வருகிறேன்..” என்று சொன்னான் மகௌனைமா.

“வேண்டாம்.. நானே போய் கொள்கிறேன்” என்றான் வீம்புடன் அகௌடி.

“இல்லையில்லை.. நானும் வருவேன்..” என்றான் மறுபடியும் மகௌனைமா.

“வேண்டாம் என்றால் கேட்க மாட்டாயா? நீ வேறு இடத்தில் தேடு.. என்னுடன் வர வேண்டிய அவசியமில்லை..” என்றான் கோபத்துடன் அகௌடி.
“அகௌடி.. நீ என்னிடம் எதையோ மறைக்கிறாய். நீ இலைகளையும் நாவற்பழங்களையும் தவிர எதையோ கண்டுபிடித்திருக்கிறாய்.. உண்மையா? இல்லையா?” என்று கேட்டான்.

சகோதரனிடம் இனியும் தப்ப முடியாது என்பதை உணர்ந்து, “சரி.. சரி.. நான் அது என்ன, எங்கே என்று சொல்கிறேன். அதை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்” என்றான் அகௌடி.

“சரி.. சத்தியம் செய்கிறேன்” என்றான் மகௌனைமா.

அகௌடி தன் சகோதரனை மரம் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

மகௌனைமாவிற்கு மரத்தின் மேல் பலவிதமான பழங்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதுமே நாக்கில் எச்சில் ஊறியது.
“இது வாழ்வு தரும் மரமாச்சுதே.. இதை நம்மிடமே வைத்துக் கொள்ளுவது சரியா?” என்று எண்ணலானான்.

பல பழங்களைப் பறித்து, எவ்வளவு எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான். பழங்களை சகோதரர்களுக்கும் கிராமவாசிகளுக்கும் பகிர்ந்து கொடுத்தான்.

பழங்களின் ருசியில் மயங்கிய கிராமவாசிகளில் ஒருவன், “இதை எங்கேக் கண்டாய்” என்று கேட்டான். “இந்தப் பழங்களைக் கொடுக்கும் மரம் இருக்கும் இடத்தை எங்களுக்கும் சொல்.. நாங்களும் கொஞ்சம் பறித்துக் கொள்கிறோம்..” என்றனர் கிராமவாசிகள்.

“வாருங்கள்.. நான் காட்டுகிறேன்..” என்று தான் செய்த சத்தியத்தை ஊர் மக்களின் நன்மைக்காக மறந்து, அவர்களை அடுத்த நாள் அழைத்துச் சென்றான்.

அகௌடிக்கு சகோதரனின் செயல் பிடிக்காத போதும், இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று புரிந்து கொண்டு யாரும் வரும் முன்னே அங்கு சென்றான். நடுமரம் வரை ஏறி அமர்ந்து கொண்டு பழங்களைப் பறித்துக் தின்றான்.

கிராமம் முழுவதும் வாழ்வு தரும் மரத்தைக் காணப் புறப்பட்டு வந்தது. அம்மரத்தை அடைந்த மக்கள் ஆவலுடன் பழங்களைப் பறிக்க எத்தனித்தனர். “போங்க.. போங்க.. இது என்னுடைய மரம்” என்று கத்தினான் அகௌடி.

அவனையும் அவன் கூறியதையும் யாரும் கண்டு கொள்ளவில்லை. கீழே பழுத்து விழுந்திருந்த பழங்களை முதலில் எடுத்து ருசித்தனர். குழந்தைகள் தாழ்ந்த கிளைகள் மேல் ஏறி அமர்ந்து பழங்களைப் பறித்துத் தின்ற படியே விளையாட ஆரம்பித்தனர்.

“ஜாக்கிரதை.. பத்திரம்.. நாளைக்கு வரைக்கும் பழங்கள் மரத்தில் இருக்கட்டும்..” என்று கத்தினான் அகௌடி.

“முட்டாளே.. மரம் நாளைக்கும் நிச்சயம் பழங்களைத் தரும்..” என்று கூறிச் சிரித்தனர் கிராமவாசிகள்.

மேலும் மேலும் குழந்தைகள் மரத்தைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் பழங்களைப் பறித்துக் கீழே எறிந்தனர். ஒரு சிறுவன் மரத்தில் இருந்த கூட்டை என்னவென்று அறியாமல் உடைத்து விட்டான். இது குளவிக் கூடு. உடனே குளவிகள் கோபமாக வெளிக் கிளம்பின. அந்தச் சிறுவனை கொட்டின.
சிறுவன் அலறுவதைக் கண்ட தந்தை, குளவிகள் கொட்டியிருப்பதை அறிந்து, “போதும்.. போதும்.. மேலும் யாருக்கும் ஊறு ஏற்படும் முன்னே.. மரத்தை வெட்டிச் சாய்ப்பது நல்லது” என்று நல்லதொரு அறிவுரையைத் தந்தார்.

இதைக் கேட்ட அகௌடியும் மகௌனைமாவும் “வேண்டாம்.. வேண்டாம்..” என்று உறக்கக் கத்தினர். ஆனால் கிராமவாசிகளின் சிரிப்பொலியின் நடுவே, அவர்களின் குரல் காணாமல் போனது. பெரிய மரம் தடாலெனச் சாய்ந்தது.

திடீரென ஒரு சீற்றம். மரத்தின் வேரிலிருந்து குளிர்ந்த நீர் வெள்ளமெனப் பெருக்கெடுத்தது. விரைவில் காடே நீரில் மூழ்கியது. பழங்களைப் பறிப்பதை விட்டு, மகௌனைமாவும் மற்றவர்களும் உயர்ந்த மலையின் மேல் தஞ்சம் புகுந்தனர்.

மகௌனைமா தன் செயலுக்கு மிகவும் வருந்தினான். இருந்தாலும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போதும் வழியறியாது அந்த இடத்திலே இருக்க வேண்டியதாயிற்று.

அங்கு அவர்கள் பல நாட்கள் சூரிய ஒளியை மட்டுமே பார்த்துக் கொண்டு உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடைசியில் நீர் வடிந்ததும், மகௌனைமா அனைவரையும் காட்டிற்குள் அழைத்துச் சென்றான். வாழ்வு தரும் மரம் எங்கேயும் தென்படவில்லை. ஆனால் காடு முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய மரங்கள் விதவிதமான பழங்களைத் தாங்கி நின்றன. அவை வெள்ளத்தால் சிதறிய பழங்களிலிருந்து வெளிப்பட்ட நீரில் அடித்துச் செல்லப்பட்ட கொட்டைகளிலிருந்து மரமாக வளர்ந்துவிட்டிருந்தன.

———-

Series Navigationஆனந்த் ராகவ் வின் இரண்டு நாடகங்கள்குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *