“ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”

author
3
0 minutes, 0 seconds Read
This entry is part 23 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

-இராஜசோழன்

பத்திரிகை செய்தி படித்ததும் இவன் சாக வேண்டியவன் தான் என்று தோன்றியது.முதல் பக்கத்தில் வண்ணத்தில் படம் போட்டு செய்தி போட்டிருந்தார்கள்.வாரத்திற்கு இரண்டு,மூன்று செய்திகள் இப்படி வந்து விடுகின்றன.

பிற மொழிப் பத்திரிகையில் அரிதான தற்கொலை செய்திகள் மட்டும் தான் வரும்..சீன மொழிப் பத்திரிகைகளில்….. தெரியவில்லை.முன்பு தோட்டத்தில்,ஆமெங்…ஆச்சோய் எல்லாம் எத்தனை உதவியாக இருந்தார்கள்?அப்படி இதுப்போன்று செய்திகள் வராதிருந்தால்……..

‘அட போங்கடா நீங்களும் உங்க பத்திரிகையும்’ என்று தமிழிலேயேப் பேசி என் சந்தேகம் தீர்த்திருப்பார்கள்.

இப்போது பட்டணத்து சீனன் ‘உர்’ரென்று இருக்கிறான். எதை கேட்டாலும் முறைக்கிறான்.

“எனக்குத் தெரியாது” என்று திரும்பி பாராமல் நடக்கிறான்.

மீண்டும் செய்தி பார்த்தேன்.

பொடியன்.வயது பதினேழு.காதல் தோல்வி.ஒரு பெண்ணின் மீது கண்மூடித்தனமான காதல்.இவனின் ஒருதலைக் காதலை அப்பெண் ஏற்காததால்,விரக்தியில் தூக்கில் தொங்கிவிட்டான்

.பிறந்தது முதல் சிறகில் பொத்தி வளர்த்த குடும்பத்தை விட்டுப்போக எப்படி மனம் வருகின்றது?

காதல் இல்லாவிட்டால் என்னடா?

இயல், இசை, நாடகம்,ஓவியம்,எழுத்து,பேச்சு,விளையாட்டு..அரசியல் என்று எத்தனையோ திசைகள்!வரும் மரணத்தை எதிர்த்து வெல்ல வேண்டும்.மரணத்தை தேடிப்போவதற்காகவா நாம் ஜனித்தோம்?

எனக்கு புவனா ஞாபகம் வந்தது.சென்ற வாரம் பினாங்கில் ஒரு பரபரப்பான சாலையில் சந்தித்தேன்.என்னைக் கண்டதும் பரவசமானாள்.வெகு இயல்பாய் பேசினாள்.பழைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்டாள்.

நான் பணியிட பயிற்சிக்காக சென்றிருந்தேன்;அவள் சுற்றுலா வந்திருந்தாள்.இரண்டு குழந்தைகள் அவளை அணைத்துக் கொண்டு நின்றன.அவள் கணவனை அறிமுகப் படுத்தினாள்.மதனைவிட கம்பீரமாய் இருந்தான்.நல்ல நிறம்.வாட்ட சாட்டமான உருவம்.புவனாவோ சந்தனநிற அழகி.இருவருக்கும் நல்ல பொருத்தம்.

மதன் எனது பால்யக் காலத்து நண்பன்.ஒரு நாள் என்னைத் தேடிகொண்டு வந்திருந்தான்.

“நாதன் என் மனசு சரியில்லை.புவனா அம்மா என்னை கண்டபடி திட்டிட்டாங்க,தாங்க முடியலை” அழுதான்.அவன் அப்படி அழுது நான் பார்த்ததில்லை.

புவனாவின் அக்காவைதான் மதனின் அண்ணன் திருமணம் செய்திருந்தான்.இவன் இந்து,அவள் கிறிஸ்துவள்.கொஞ்சம் கால போராட்டத்திற்கு பிறகு அவர்களின் திருமணம் தோட்டத்து மாரியம்மன் கோவிலில் நடந்தது.

ஒரு பெண்ணைத்தான் கொடுத்தார்கள்; இன்னொருப் பெண்ணையுமா கொடுப்பார்கள்?

புவனா படித்தவள்.மதன் ஆறாம் வகுப்பு.புவனாவின் அம்மா திட்டியதில் நியாயம் இருந்தது.புவனா மதனுடன் காதல் வயப்பட்டிருந்தாலும் அத்தனை தீவிரமாய் இல்லை.எல்லோரும் சம்மதித்தால் கழுத்தை நீட்டலாமென்றிருந்தாள்.புவனா குடும்பத்தினர் எனக்கு நெருக்கமானவர்கள்.

“பேசிப் பார்க்கிறேன்” என்று மதனின் மனதை தேற்றியனுப்பினேன்.

அன்றைய இரவில் மதன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என்ற செய்திக்கேட்டு அதிர்ந்தேன்.

விஷம் குடித்து விட்டான்.மதியம் பேசிக்கொண்டிருந்த போது ஒரு வார்த்தையிலும் இப்படி செய்யப் போவதாய் கோடிட்டுக் காட்டவில்லை.தற்கொலை சட்டென்று வரும் முடிவா?

உள்ளுக்குள் குமைந்து பீறிட்டு வெடிக்கும் எரிமலை போல் கண நேரத்தில் சிதறுமா மனசு?

இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டான்.

மூன்றாம் நாள் புவனா வந்தாள்.அவளது அண்ணன் தான் அழைத்து வந்திருந்தான்.அவள் குடும்பத்தில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டார்களாம்.சந்தோசமாக இருந்தாள்.திரை சீலையை மூடச் சொல்லி அவனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தாள்..

மதன் புது உற்சாகம் பெற்றான்.

“ எனக்கு உயிர் வாழ ஆசையாய் இருக்குடா,எப்படியும் நான் பிழைத்துக்குவேன் தானே?” என் கரங்களை இறுகப் பற்றி ஏக்கம்மாய் கேட்டான்.

மருத்துவர் என் நண்பர் என்பதால் உண்மையை மறைக்காது சொன்னார்.

“உள்ளே எல்லாம் வெந்து விட்டது.இனி ஒவ்வொன்றாய் செயலிழக்கும்.நுரையீரல்கள் முடங்கும்,இருதயம் ஒத்துழைக்க மறுக்கும்.பேச்சு மட்டும் தெளிவாய் இருக்கும்.ஆனால் மரணம் நிச்சயம்.”

இதை நான் எப்படி மதனிடம் சொல்வேன்?

எட்டாம் நாள் இரவு பதினோரு மணிக்கு மதன் செத்துப் போனான்.புவனா பித்துப் பிடித்தவள் போலானாள்.மதனின் நினைவுகளில் உருக்குழைந்தாள்.இரவு நேரங்களில் மதன் அழைப்பதாகச் சொல்லி ஆர்ப்பாட்டங்கள் செய்தாள்.அவளை வெகு தூரத்திலுள்ள உறவினரின் வீட்டிற்கு இடம் மாற்றினார்கள்.

காலம் நீண்டுப்போன பின் மறுபடியும் இப்போதுதான் புவனாவை சந்திக்கின்றேன்.முன்பைவிட பூசினாற்போல் இருந்தாள்.முகத்தில் மகிழ்ச்சி அலைகள்.தனது வாழ்க்கையை அதன் போக்கிற்கு ஏற்ப மாற்றி கொண்டிருக்கிறாள்.

மனித மனம் எத்தகைய அற்புதமானது?பாம்பு மாதிரி தோலை உரித்து போட்டு விட்டு புதுப் பொழிவுப் பெற்று விடுகிறது.காலங்களும் எல்லா காயங்களையும் மறக்க வைத்து விடுகிறது.

புவனா மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.இந்த இனிமை புவனா வாழ்வில் நிலைத்திருக்க வேண்டுமென வேண்டிக்கொண்டேன்.

பாவம் மதன்!ஒவ்வொரு உயிரும் இறைவனால் விண்ணுலகிலிருந்து மண்ணுலகத்திற்கு அனுப்பட்ட தெய்வப்பிறவிகள் என்பதை ஏன் மறந்துப் போனான்?மறுபிறவியில் அவனுடைய ஆன்மா என்னவாயிருக்கும்?புழு, பூச்சி…பறவை? இப்போது அவன் வானில் பறந்துக் கொண்டிருப்பானா?

இப்படிதான் ஷீலாவும்!

அன்று கோலாலம்பூரில் செட்டி தெருவில் உள்ள உணவகத்தில் அமர்ந்திருந்தேன்.மூன்று கீரை வகையுடன் சாதம்.அந்த உணவகத்தில் சுறா மீன் குழம்பு பிரபலம்.நிறைய வெந்தயமும் பூண்டும் போட்டு புளிப்பாய் மணக்க மணக்க இருக்கும்.திக்கான சுறா மீன் குழம்பை ஊற்றினான் சிப்பந்தி.கொஞ்சம் சாதத்தை பிசைந்து கவளமாக்கி….. .கைப்பேசி அலறியது.இடது கையால் விசையை அழுத்தி காதில் வைத்தேன்.

“ஷீலா செத்துப் போச்சாம்.உங்களுக்கு செய்தி தெரியுமா?” என் மச்சான் பேசினான்.

“எந்த ஷீலா?” நான் சாதாரணமாக கேட்டேன்.

“நம்ப ஷீலா.உங்கள் அண்ணன் மகள் ”

“ஐயோ என்ன ஆச்சு?” என் உடல் சிலிர்த்தது.விபரம் சொன்னான்.

நான் இலையை மூடிவிட்டு ,எழுந்து கை அழம்பி கல்லாவில் பணத்தைக் கட்டினேன்.முதலாளி ஒரு மாதிரியாய் பார்த்தார்.

ஷீலா என் அண்ணன் மகள்.வயதுக்கு மீறிய வளர்ச்சி.பதினாறு வயதில் காதல் பண்ணினாள்.பதினெட்டு வயதில் சில உறவினர்களின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டாள்.

நாங்கள் அவளை ஒதுக்கி வைத்தோம்.இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி நிம்மதியாய் வாழ்வதாக கேள்வி.திடீரென்று ஏன் இப்படி?

திருமணத்திற்குப் பிறகு அவள் முகம் பார்க்க நான் விரும்பியதில்லை.எதிர் பாராமல் எதிர்ப்படும் சமையங்களில் பார்வையை வேறுப் பக்கம் திருப்பிக் கொள்வேன்.

இன்று அவள் முகம் காண மனசு துடித்தது.மனைவி பிள்ளைகளுடன் ஷீலா இல்லம் விரைந்தேன்.

காலையில் கணவனுடன் தகராறு.அடிக்கடி நடக்கும் சின்ன சின்னப் பிரச்சனைகள்.கணவன் பணிக்குச் சென்ற பின் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாள்

‘சாய்ந்திரம் வந்துப் பாருங்கள்,எப்படி இருப்பேன் என்று தெரியும்’

பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் பாட்டி வீட்டில் .இவள் மட்டும் தனிமையில்!தனிமையில் அழுத்தும் தீவிரமான சிந்தனைகள் ஒருவரை தவறான முடிவுக் கொண்டு செல்லும் என்பது ஷீலா வாழ்க்கையில் உண்மையாகி விட்டது.இவன் வாசல் திறந்து,கூடத்தில் தேடி,அறைக்கதவை திறந்தால் ‘சீலிங்’ மின் விசிறியில் சேலை மாட்டி கழுத்தில் சுறுக்கிட்டு தொங்குகின்றாள்.

மரணத்தின் கடைசி வினாடி பயங்கரத்தில் விழிகள்!

கட்டிலில் நாற்காலி சாய்ந்திருக்கின்றது.

அடிப்பாவி!

இதற்காக தானா இத்தனை வயதில் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்தாய்?

கல்யாணத்திலும் அவசரம்!சாவிலுமா அவசரம்?

ஷீலாவிற்கு இரண்டு குழந்தைகள்.ஒரு குழந்தை அழுதுக்கொண்டிருந்தது,ஒரு குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது.குழந்தைகள் சிரித்தாலும் அழகு,அழுதாலும் அழகு!இந்த அழகுகளை அரவணைக்க இனி தாயில்லாமல் போகும்.வானம் இழந்த நிலாக்களா இவர்கள்?

பெண் குழந்தை ஷீலாவின் சாயலை ஒத்திருந்தது.ஷீலா சின்னக்குழந்தையாய் இருக்கையில் இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு தத்தித் தத்தி நடந்து வரும் அழகே அழகு!

மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவேன்.அவள் சிணுங்குவாள்.

-நான் உடைந்தேன்.

பெட்டியை தூக்கினார்கள்.அவள் கணவன் கதறி கதறி அழுதது எல்லோரையும் கலங்க வைத்தது.நானும் அழுதேன்.உயிரோடு இருக்கும் போது வராத பாசம்,இறந்த பின் வருகிறது!

ஷீலாவிற்கு முதலாமாண்டு திவசம் முடிந்தது.அவள் கணவன் இன்னொரு திருமணம் செய்துக்கொண்டான்.இப்போது மொத்தம் நான்கு குழந்தைகள்.அவளுக்கு இரண்டு;இவளுக்கும் இரண்டு!மாறுதல்களை மனங்கள் ஏற்றுக்கொள்ளும்.இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்.

வாழ்வின் யதார்த்தம் புரியாத வயதில் கனி அண்ணனுடன் நெருங்கிப் பழகிய நினைவுகள் சுகமானது. அப்போது எனக்கு வயது பதிமூன்று இருக்கும்.என் மீது அதிக அன்பை செலுத்தியவர்.எங்கு சென்று வந்தாலும் எனக்காக ஏதாவது மறாவாமல் வாங்கி வருபவர்.

ஏனோ எனக்கு இப்போது கனி அண்ணனை பார்க்க வேண்டும் போலிருந்தது.நிச்சயம் பார்க்க வேண்டும். விரைவில் அண்ணனை அழைத்துக்கொண்டு சுங்கை சோ போகப் போகிறேன்.

நான் பிறந்து வளர்ந்தது சுங்கை சோ தோட்டத்தில். இந்திய சமுதாயம் சொத்துடமையாளராக இருக்க வேண்டும் என்ற உயரிய லட்சியத்தில் தேசிய நில நிதி கூட்டறவு சங்கம் வாங்கிய தோட்டங்களில் இதுவும் ஒன்று.

அடர்ந்த ரப்பர் காடு,இரவில் மரக்கிளைகளில் கூடி சத்தமிடும் மைனாக்கள்,மழைக்காலங்களில் விர்ரென்று பறக்கும் மழைக்குருவிகள்.நீரோடையாய் அசையும் ஆறு.புழுதி பறக்கும் செம்மண் சாலை.தடதடவென்று ஓடும் டிரக்டர்,பச்சை வண்ண லயங்கள்.தமிழ்ப்பள்ளி,மாரியம்மன் ஆலயம்,செயின்ட் ஜோசப் தேவாலயம்,ஆலய திருவிழா,தீமிதி…அற்புதமான மனிதர்கள் என்று அந்த நாட்களின் ஞாபகங்கள் இனிமையானவை.

ஒரு நாள் சமையல் கட்டில் அமர்ந்து வரக்காப்பி குடித்துக்கொண்டிருந்தேன்.

கனி அண்ணன் அவசரமாய் உள்ளே வந்தார்.

“நான் மருந்து குடிச்சுட்டேன்.என்னை காப்பாற்றுங்கள்” என்றவாறு நெஞ்சை அழுத்திக்கொண்டு தரையில் அமர்ந்தார்.

பதறிய அம்மா புளியை கரைத்து கனி அண்ணனின் வாயில் ஊற்றினார்.என் அண்ணன் கனி அண்ணனை கைத்தாங்கலாக வாகனத்தில் ஏற்றினார்.மருத்துவமனை நோக்கி வாகனம் விரைந்தது.பின் இருக்கையில் அமர்ந்து கனி அண்ணனின் தலையை என் மடியில் வைத்துக்கொண்டேன்.

கனி அண்ணன் வாந்தி எடுத்தார்.இமைகள் செருகி மயக்கமானார்.நான் முகம் சுளிக்கவில்லை.கனி அண்ணனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற பதைப்பதைப்பு மட்டுமே இருந்தது.மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீடு திரும்பும் போது விடிந்துவிட்டது.

கனி அண்ணன் குடும்பத்தில் ஏதோ பிரச்சனையாம்.

ஏழு நாட்கள் சென்று மரணத்தின் பிடியிலிருந்து திரும்பி வந்தார் கனி அண்ணன்.

“நீங்கள் இல்லாவிட்டால் நான் செத்திருப்பேன்”என்று அண்ணனிடம் கண் கலங்கினார்

.என்னை இறுக்கி அணைத்தார்.

“மன்னிச்சுக்கடா,உன் மேல வாந்தி எடுத்திட்டேன்”என்று வாஞ்சையோடு முத்தமிட்டார்

.கனி அண்ணன் சில காலம் சென்று திருமணம் செய்துக்கொண்டார்.குழந்தைகள் பிறந்தன.பின் ஊர் மாற்றிப்போனார்.

இப்போது கனி அண்ணன் எப்படியிருப்பார்?நாங்கள் காப்பாற்றியதை இன்னும் ஞாபகம் வைத்திருப்பாரா?வயதாகியிருக்கும்.செத்துப் போயிருப்பாரா?ச்சே இருக்காது.ஏன் என் மனம் இப்படி நினைக்கின்றது?

நாங்கள் தோட்டத்தை விட்டு வந்து,பத்து வருடங்களுக்கு மேலாகிறது.தோட்டத்துப் பெயரே இப்போது தாமான் புக்கிட் தெரத்தாய் என்று மாறிவிட்டது.இருந்தாலும் கனி அண்ணனின் உறவினர்கள் யாராவது அங்கு இருக்கலாம்.

எனக்கு கனி அண்ணனின் ஞாபகம் மேலெழும்பியது.

எங்களால்,என் அண்ணனால் தற்கொலையிலிருந்து மீட்கப் பட்ட ஓர் உயிர் கனி அண்ணன். இப்படி மதனையோ,ஷீலாவையோ அல்லது செய்தி தாளில் வந்த இந்த பொடியனையோ யாராவது காப்பாற்றிருக்க கூடாதா?

யாருக்காக அவர்கள் தற்கொலை செய்துக்கொண்டார்களோ அந்த காரணக்கர்த்தாக்கள் அவர்களது இறப்பிற்கு பிறகும் வாழ்கிறார்கள் என்பதை அந்த ஆன்மாக்கள் எங்கிருந்தாவது பார்த்தால் என்ன நினைத்துக் கொண்டிருக்கும்?

(முற்றும்)

Series Navigationவேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்புஅவளின் கண்கள்……
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    இளங்கோ says:

    ஆமாம். தற்கொலை செய்ய எண்ணுபவர்கள், முயல்பவர்கள், ஒரு வேளை உயிருடன் பிழைத்து இருந்தால், பின்னொரு நாள், அந்த செய்கையையும், எண்ணத்தையும் “பயித்தியக்காரத்தனம்” என்று தம்மைத்தாமே கேலி செய்வார்கள் என்பது நிச்சயம்.

  2. Avatar
    ஏ.தேவராஜன் says:

    சொல்லும் முறையில் சுவாரஸ்யத்தை உண்டுபண்ணும் கதை. சிறு சிறு வாக்கியங்கள்,அடுத்தடுத்த சம்பவத்திற்கு இழுத்துச் செல்லும் நடை. கவர்கிறது.தொடருங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *