பாஸ்கர் லக்ஷ்மன்
ஜனனமும் மரணமும் நம் வாழ்வின் தொடர் நிகழ்வுகள். மரணம் பல சமயங்களில் நமக்கு ஒரு செய்தியாக மட்டும் நின்று விடுகிறது. ஆறு வயது குழந்தை இறந்த செய்திக்கு, அதன் பெற்றோரை நினைத்து வருந்துகிறோம். நாற்பது வயதில் ஒருவர் காலமான செய்தியைக் கேட்கும்போது, “கடங்காரன், அற்ப ஆயுளில் போய் விட்டானே!” என அவன் குடும்பத்தை நினைத்து ஒரு பெருமூச்சு. நன்றாக வாழ்ந்து 70 அல்லது 80 வயதில் இறந்த செய்திக்கு, கல்யாணச் சாவு என டிகிரி காபி சாப்பிட்டு நம் ஆற்றாமையைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால் நமக்கு மிகவும் வேண்டப்பட்ட உறவினரோ அல்லது நெருங்கிய நண்பரோ மரணமடையும்போது அது செய்தியாக இருப்பதில்லை – நம் மனதைத் துயரம் புகையாய் சூழ்கிறது. அவர்களின் நினைவுகள் – அவர்களோடு இணைந்து கடந்த பாதையில் நாம் எதிர்கொண்ட துக்கம், சந்தோஷம், கஷ்டம் என பல சம்பவ நினைவுகள் – நம் எண்ணங்களில் அலை போல் வந்து மோதும். நமக்கு நெருக்கமானவர்களின் மரணங்களில் நமக்கு அறிமுகமாகும் வாழ்வின் தீராத மோகத்தை, அதன் ஆறாத் துயரை, எஸ்ரா உறுபசி என்ற தன் நாவலில் மூன்று நண்பர்களின் வழியாக சம்பத் என்ற நண்பனின் முடிந்து போன வாழ்க்கையின் நினைவுகளாக படர விடுகிறார்.
சம்பத்தின் மரணம்தான் நாவலின் துவக்கம். அழகர், ராமதுரை, மாரியப்பன் எனும் மூன்று நண்பர்கள் ஒரு மலைப் பயணத்தின் போதும் அங்கு தங்கி இருக்கும் வேளையிலும் சம்பத்துடன் தாங்கள் கழித்த நாட்களில் எதிர்கொண்ட அனுபவங்கள் மற்றும் அவனுடைய குணாதிசயங்கள் குறித்த விவாதங்கள் நாவலில் கருக்கொள்கின்றன.. கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் நண்பர்கள் அதிலிருந்து வெளியேறும் பொழுதில் வெவ்வேறு வாசல்களைத் தேர்ந்தெடுத்து வெவ்வேறு பாதைகளில் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஆனால் அந்தப் பாதைகளின் சிறப்பு அவர்கள் கல்லூரியில் பிரகாசித்ததை அளவுகோலாய் கொண்டு அமைவதில்லை.
தமிழ் பாடத்தை விருப்பமாக எடுத்து படிப்பைத் துவங்கும் சம்பத், நாத்திக வாதத்தில் முழுமையான ஈடுபாடு கொண்டு கல்லூரியின் சூழலின் மறு முனையில் தன்னை ஓர் எதிர்ப்பு சக்தியாக வெளிப்படுத்திக் கொள்கிறான். கம்பராமாயணப் பிரதிகளை எரிக்கிறான். ஓர் அரசியல் கட்சியின் முக்கிய பிரசார மேடைப் பேச்சாளன் என்ற அந்தஸ்து அவனுக்குக் கிடைக்கிறது. அதனுடனே குடிப் பழக்கம். காம இச்சைகள். கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் சம்பத்துடன் ஒத்த கருத்துடைய யாழினி என்ற பெண் வந்து சேர்கிறாள். யாழினியின் தந்தையும் நாத்திகப் பிரச்சாரத்திற்கும், பேச்சிற்கும் சம்பத்தை பயன்படுத்திக் கொள்கிறார். யாழினி மேல் சம்பத் மோகம் கொள்கிறான். யாழினியும் சம்பத்தைக் காதலிக்கிறாள்..ஆனால் அவனுடைய போக்கைப் பார்த்து அவனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முடியாது என யாழினி முடிவெடுக்கிறாள். அவள் வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டு தனக்கான வழியில் பயணிக்கிறாள். குடிப்பழக்கம் அதிகமாகி மேடைப் பேச்சு வாய்ப்புக்கள் பறி போய், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு சம்பத் தன் சுய அடையாளத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கிறான். தொலைபேசிச் சாவடியில் வேலை பார்க்கும ஜெயந்தியை மணக்கிறான். ஏதாவது தொழில் செய்து இழந்த வாழ்க்கையை மீட்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் தவிக்கும்போது அவனது 42ம் வயதில் வரும் மரணம் சம்பத்திற்கு விடுதலை அளிக்கிறது.
உறுபசியின் சில சிறு சம்பவங்களேயும்கூட சம்பத்தின் மனப்போக்கை வெளிச்சமிடப் போதுமானதாக இருக்கின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் நண்பனை ஒரு விலைமாதுடன் திரையரங்கில் சந்திக்கும் சம்பத் அவன் நண்பனின் மனைவி கருத்தடை செய்துகொண்டு விட்டாளா எனக் கேட்பதோடல்லாமல், சரளாவையும் அறிமுகப்படுத்தும் சமயம் அவனுடைய யதார்த்தம் வெளிப்படுகிறது. செடிகளை வாங்கி விற்று வாழ்க்கை நடத்தலாம் என சம்பத்தும் அவன் மனைவி ஜெயந்தியும் முடிவெடுத்து அதனை செயல்படுத்தும்போது, திடீர் என ஒரு நாள் சம்பத் செடிகளை விற்றுப் பிழைப்பு நடத்துவது தவறு என முடிவெடுத்து அந்தத் திட்டத்தை கைவிடுவதில் சம்பத்தின் மென்மையான உணர்வுகள் தெளிவாகின்றன. தன் நண்பனுடன் ஊருக்குச் சென்று விடுபட்ட உறவுகளைப் புதுப்பிக்க நினைக்கும்போது, அங்கு அவன் தந்தை அவனை அடிப்பதும், அவன் தன் வயதான தந்தையை அடித்துச் சாய்ப்பதும் அவனது மூர்க்கத்தையும், பிரச்சனைகளை அணுகும் முறையில் முதிர்ச்சியின்மையும் நிதர்சனமாய் வெளிப்படுத்துகின்றன.
இந்த நாவலில் எஸ்ராவின் நுட்பமான விவரிப்பை நான் ரசித்த பகுதியைக் குறிப்பிட விரும்புகிறேன்: தன் நண்பன் மற்றும் மனைவியுடன் சம்பத் கரும்பு சாறு குடிக்கும் இடத்தில், கரும்புச் சாறு இயந்திரத்தில் நசுக்கப்பட்டு வரும் சக்கை அரசியல் அவனை எப்படி பயன்படுத்தி இன்று சக்கையாக்கி விட்டிருக்கிறது என்பதையும், அதன் பிறகு அவன் மனைவியுடன் “நீர்க்குமிழி” சினிமா பார்க்கச் செல்லும் போது அவன் வாழ்க்கையின் முடிவை நெருங்கி விட்டதையும் படிமமாக்குகிறது.
பொதுவாக சம்பத்துக்கு வாழ்கையில் சமரசம் என்ற சிந்தனையே கிடையாது. தன் போக்கில் வாழ்க்கையைச் செலுத்திச் செல்ல முயல்கிறான். தன் தங்கையின் மரணத்திற்கு தானே காரணம் என்ற நினைவே அவனை மூர்க்கனாக மாற்றியதாக சம்பத் கூறிக் கொள்கிறான். வேலையில்லாதவனுக்கு உடலுறவு மறுக்கப்படுவது நியாயமில்லை என்றும் வாதிடுகிறான். அந்த உணர்வு அவன் காமத்தின் தீராத மோகத்துக்கு விதையாகிறது. அரசியல் சூழ்ச்சி, ஏமாற்று வேலை தெரியாததால் அதிலும் தோல்வியே. இங்கு கண்ணதாசனின் வனவாசம் நினைவிற்கு வருகிறது.
நாவல் முழுதும் திரைப்பட தீம் இசை போல் காமத்தின் கரங்கள் படர்ந்துள்ளன. அழகர், ராமதுரை மற்றும் மாரியப்பன் விருப்பமில்லாமல் தமிழில் பட்டப் படிப்பை மேற்கொள்கிறார்கள். அதைத் தொடரும் சமரசங்கள் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை செலுத்துகின்றன. ஆனால் படிக்கும் காலத்தில் மிகப் பிரகாசமாக ஒளிர்விட்ட சம்பத் இறுதியில் தோல்வியின் வலியுடன் சாகும்படியாகிறது.
சம்பத் வழியாக எஸ்ரா பேசும் இந்த இடம்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. “ஒரு நாள் சம்பத் அவனிடம் மனிதன் கண்டு பிடித்ததிலே மிக மோசமானது எது என்று கேட்டான். அவனுக்குப் பதில் தெரியவில்லை.சம்பத் தானாகவே சுவர்கள் என்றபடி சுவர்களை எழுப்பி கட்டிடங்கள், வீடுகள், விடுதிகள் என்று பிரித்து வைத்து விட்டார்கள். சுவர்கள் இல்லாத காலத்தில் வசித்தது போல வெட்ட வெளியில் வாழ்ந்தால் நன்றாகத்தானே இருக்கும் என்றான்……….இந்த சுவர்கள் மட்டும் இல்லாமலிருந்தால் , எத்தனை சௌகரியமாக இருந்திருக்கும். நாம் கண்ணுக்குத் தெரிந்ததும், தெரியாதததுமான எத்தனை சுவர்களால் பிரிக்கப் பட்டிருக்கிறோம் என்பது எத்தனை வேதனைக்குரியது என்று தோன்றியது.”
காமம் பரவிய இந்த நாவலில் அழகுணர்ச்சியே இல்லை. சம்பத்தின் வாழ்க்கை போல் வரண்டிருக்கிறது.
இந்த நாவலில் ஒரு விஷயம் எனக்கு உறுத்தலாக இருக்கிறது: சம்பத் கம்பராமாயணத்தின் பிரதியை எரிப்பது போன்ற நிகழ்வுகளைப் பார்த்தால் இந்த நாவலின் காலம் 1960 களில் நடந்து 1980 களில் முடிவது போல் உள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் சம்பத் நண்பனுடன் இரயிலுக்குக் காத்திருப்பது என் புரிதலில் சற்று சிரமமாக இருந்தது. ஏனெனில் கன்னியாகுமரியில் எழுபதுகளின் இறுதியில்தான் இரயில் சேவை வந்ததாக நினைவு. மற்ற படி நாவல் நேரற்ற முறையில் சொல்லப்பட்டுள்ளது. ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவரைப் பற்றிய எண்ணங்கள் எந்த ஒழுங்குமின்றி வெளிப்படும் விதத்திலேயே இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
சம்பத் கெட்டவனா? நாம் நல்லவர்களா? நகுலலின் கவிதை நினைவிற்கு வந்தது.
இவர்கள்
உதட்டளவில் பேசுகிறார்கள். மனமறிந்து
பொய் சொல்கிறார்கள். ஒரு கணத்தில்
சொன்னதை அடுத்த கணத்தில் மறந்து
விடுகிறார்கள். எதிரில் இருப்பவன்
பிரக்ஞையின்றி தங்களைப் பற்றியே
பேசிக்கொண்டிருக்கிறார்கள். வயிறு
காலியானாலும் வீடு நிறைய சாமான்
களை வாங்கி வைக்கிறார்கள். உடமை
கருதி செத்துக் கொண்டிருக்கும் ஒருவன்
முன், “இவன் ஏன் இன்னும் சாகமாட்
டேன்” என்கிறான் என்று பொறுமை
இழந்து நிறகிறார்கள். எல்லாவற்றிலும்
அதிசயம் என்ன வென்றால் இவர்கள்
தங்களைப் போல் நல்லவர்கள் இல்லை
என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்
இவர்களுடன் தான் உறவுகளை
வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது
நாம் வாழும் உலகில் தான் இவர்களும்
வாழ்கிறார்கள். …
உறுபசி படித்து முடிக்கும்போது மிகுந்த வலியில் மனம் தத்தளித்தது. அது சுய பரிசோதனையின் வலி என்பதைப் பின்னர் தான் உணர்ந்தேன்.
———————————–
- அதிகார நந்தீசர் – புத்தக வெளியீட்டு விழா
- தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்
- ஆகமங்கள், அர்ச்சகர்கள், இரண்டுங் கெட்டானில் அவசரச் சட்டம்
- வேதனை – கலீல் கிப்ரான்
- வாழ்வியல் வரலாற்றின் சிலபக்கங்கள் –24
- நினைவுகளின் சுவட்டில் (96)
- கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்
- முள்வெளி அத்தியாயம் -20
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37
- எஸ்ராவின் உறுபசி – தீராத மோகம்
- இறப்பின் விளிம்பில். .
- ஒரு தாயின் கலக்கம்
- ஆனந்த் ராகவ் வின் இரண்டு நாடகங்கள்
- அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்
- குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்
- தார் சாலை மனசு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -6
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 31) காதலின் மனக்காட்சி
- சாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.
- ம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘
- உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு
- “ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”
- அவளின் கண்கள்……
- ’ செம்போத்து’
- மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை
- சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்
- வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!
- மாத்தி யோசி…!
- ரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்
- தொலைந்த காலணி..
- மஹாளயத்தில் பொன்னம்மா யார்?
- பா. சத்தியமோகன் கவிதைகள்
- 2013 ஆண்டில் செந்நிறக்கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி
- பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்
- தாகூரின் கீதப் பாமாலை – 25 ஆத்ம நாடகம்.
- பஞ்சதந்திரம் தொடர் 55
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்று ஒன்று