மாத்தி யோசி…!

This entry is part 29 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

“என்னப்பா, வேலு என்ன முடிவு செய்திருக்கே.. 300 ரூவா பணம், பிரியாணி பொட்டலம், தண்ணி பாக்கெட்டு, ஒரு குவார்ட்டர்.. ஆறு மணிநேரம் ஜே போடோணும் அவ்ளோதான். என்ன வர்றயா .. இல்லையா?”

“அண்ணே.. எனக்கு இதெல்லாம் பயக்கமில்லண்ணே… வேற எதனாச்சும் வேலை இருந்தா சொல்லுண்ணே.. “

“ஏன்..துரை அரசாங்க உத்தியோகந்தான் பாப்பீகளோ… ?”

“இல்லண்ணே.. மூட்டை தூக்கற வேலையா இருந்தாலும் தேவல.. குழந்தைக்கு உடம்பு சரியில்ல. ஆசுபத்திரிக்கு கூட்டிப்போகக் கூட காசு இல்லண்ணே. கொஞ்ச்ம் மனசு வையிண்ணே..”

“மூட்டை தூக்கற வேலையின்னு அவ்ளோ சுளுவா சொல்ற.. அவிங்க சங்கத்துல சேர்ந்த பொறவுதான் நீ மூட்டை தூக்க முடியும்.. தெரியுமில்ல.. இப்போதைக்கு உன் அவசரத்துக்கு இது ஒன்னுதான் வழி.. கைமேல காசு, வயிறு நிறைய சோறு, கவலையை மறக்க குவார்ட்டரு.. என்ன சொல்லுத..?”

வேண்டா வெறுப்பாக தலையாட்டினான், வேலு. உழைச்சு உரமேறின உடம்பு. இதுபோல கூலிக்கு மாரடிக்கிற வேலை செய்ய மனம் ஒப்புக் கொள்ளவில்லை அவனுக்கு. வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பரம்பரை, பரம்பரையாக பண்ணையார் குடும்பத்து வயலுதான் அவர்களுக்கு உயிர் மூச்சு. விடியலில் ஆரம்பிச்சு, பொழுது சாயும்வரை, நாத்து நட்டு, கதிர் அறுத்து, நீர் பாய்ச்சி, வரப்பு கட்டி, காவல் காத்துக் கொண்டு, வெள்ளாமை எடுக்கும்போது உள்ளமெல்லாம் பூரித்துப்போய் சுகமான வாழ்க்கை அது. பழைய சோறும், பச்சை மிளகாயும் கூட தேவாமிர்தமாக சுவைத்த சுகமான பொழுதுகள் அவை. பச்சைப் பசேலென்ற அந்த குளுமையான வயல்வெளியும், கீச்… கீச்சென்று பறவைகளின் இனிமையான ஓசைகளும், ஒட்டுக் குடிசையானாலும் ஓடியாடி ஓய்ந்துபோய் நிம்மதியான தூக்கமும், விகல்பமில்லாத நல்ல மனிதர்களுடன் குழப்பமில்லாமல், இன்பமாக கழிந்த காலங்கள் இன்று நினைவுகளாக மட்டுமே … இந்த பட்டணத்து வாழ்க்கை துளியும் ஒட்டவில்லை.

திடுதிப்பென்று ஒரு நாள் சின்ன முதலாளி அனைத்து பண்ணையாட்களையும் கூப்பிட்டு, இந்த வயலையெல்லாம் அழித்துவிட்டு பெரிய சக்கரை மில் கட்டப்போவதாக சொன்ன போது அதிர்ச்சியில் அனைவரும் வாயடைத்து நின்றாலும், கொஞ்ச நாட்களாகவே அரசல் புரசலாக, சின்ன முதலாளி வெளிநாடு சென்று படித்துவிட்டு வந்ததிலிருந்தே சலசலத்துக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் முப்போகம் விளையும் இந்த பொன்னான பூமியையும், தென்னந் தோப்பையும் அவ்வளவு எளிதாக அழிக்க மனம் வரும் என்று நம்பமுடியவில்லை அவர்களால். மைனாக்கூட்டமும், குயிலும், கிளியும், குதூகலமாய் கூடுகட்டி வாழ்ந்த அரண்மனை அது. எல்லாம் நொடியில் அநாதையாகிப்போனது போன்ற சோகம் சூழ்ந்தாலும், முதலாளி கொடுத்த கனிசமான தொகையை வாங்கிக் கொண்டு, அனைவரும் திக்கிற்கு ஒருவராக மனம் நிறைய பாரத்துடன் கிள்ம்பிய தருணம் தங்கள் வாழ்நாளில் நீங்காத வடுவாகிப்போன ரணம்.

பட்டணத்து வாழ்க்கை இந்த ஒரு சில மாதங்களிலேயே எட்டிக்காயாய் கசந்துதான் போனது. சுத்தமான மனசும், காற்றும், குடிநீரும் இல்லாத இந்த வாழ்க்கை எப்படி சுவைக்கும்? சரியான பொழைப்பு கிடக்காதலால் கையிருப்பு கரைந்து கொண்டிருக்க, கவலையும் சூழ்ந்து கொண்டது. மனைவியும், நான்கு வயது குழந்தையும் வைத்துக்கொண்டு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்ற நிலையில் தவித்துக் கொண்டிருந்த போதுதான் கமிஷன் ஏஜெண்ட் சாமியண்ணனின் தொடர்பு கிடைத்தது.. அவர் சொல்லி சின்னச் சின்ன வேலை பலதும் செய்தாகிவிட்டது. எப்படியும் சீக்கிரமாக நிரந்தரமாக ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறான் வேலு.

அரசியல் வாடையே ஆகாத தனக்கு இப்படியொரு சோதனை இன்று. பணத்தேவை, வேறு என்ன செய்வது… ஆட்டு மந்தைகள் போல லாரியில் அடைத்துக் கொண்டு போனார்கள். எதற்காக, யாருக்காக “வாழ்க, வாழ்க,” என்று சொல்கிறோம், யாரை வெறுத்து “ஒழிக.. ஒழிக” என்று சொல்கிறோம் என்று எதுவுமே புரியாமல் முன்னால் நிற்கும் தலைவர் என்ன சொல்கிறாரோ அதை அப்ப்டியே கிளிப்பிள்ளைகளாக திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ”அழிக்காதே.. அழிக்காதே.. பச்சை வயலை அழிக்காதே.. கட்டாதே.. கட்டாதே சக்கரை ஆலை கட்டாதே..”

மதியம் 12 மணி உச்சி வெய்யிலில் ஏற்றிக் கொண்டு போனவர்கள் மாலை ஆறு மணிக்கும் மேல் ஆகியும் இன்னும் கோஷமும் நிற்கவில்லை, திருப்பி அனுப்பும் சுவடும் தெரியவில்லை.

திடீரென கோஷங்கள் நின்றது. முன்னால் தலைவரைப்போல துண்டு நீளமாக போட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தவரிடம் சாமியண்ணன் நெருங்கி ஏதோ இரகசியம் பேச அவரும் இறங்கி பேசிக்கொண்டே ஓரமாக ஒதுங்கினார்கள். வேலுவிற்கும் குழந்தை நினைவு வந்து வாட்டியது. காய்ச்சல் எப்படி இருக்கிறதோ தெரியவில்லையே, பொழுது போய்க்கொண்டிருக்கிறது, டாக்டரிடம் கூட்டிச் செல்ல வேண்டுமே என மனம் பதைக்க ஆரம்பித்து விட்டது. அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் கூட்டத்தை விலக்கி வெளியே வந்து, அந்த லாரியை விட்டு இறங்கி, சாமியண்ணன் சென்ற பக்கம் தானும் சென்றான், எப்படியாவது கெஞ்சி பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று. அங்கு டீக்கடையின் பின்புறம் சாமியண்ணனும், குட்டித் தலைவரும் சீரியசாக ஏதோ பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. மெதுவாகத் தயங்கித் தயங்கி அருகே சென்ற வேலு, தன் பழைய முதலாளி, சந்தானம் ஐயா பெயர் அடிபடவும் அப்படியே நின்று விட்டான்.

டீக்கடையின் தடுப்புச்சுவர், மறைத்துக் கொண்டதால் தான் நிற்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று புரிந்ததால் சத்தமில்லாமல் நின்றுகொண்டான். அவர்கள் பேச்சிலிருந்து, தங்கள் தலைவர் என்று சொல்லுகின்ற ஒரு குறிப்பிட்ட கட்சித்தலைவருக்கும், சந்தானம் முதலாளிக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லையாம். தலைவர் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லையாம்.. அதனால் அடுத்து அவர்கள் பேசிய விசயங்கள் சே.. என்ன மனிதர்கள் இவர்கள் என்று நெஞ்சம் பதைக்கச் செய்தது. ஒரு தொண்டர் சந்தானம் ஐயாவின் உருவ பொம்மையை எடுத்து வந்தார். அதை எரித்து பிரச்சனையை ஆரம்பிக்க வேண்டுமாம்… உருவ பொம்மையை எரித்தவுடன் கலவரத்தை ஆரம்பித்துவிட்டு, அடிதடி, குத்து,வெட்டு எல்லாம் தாராளமாகச் செய்துவிட்டு அவ்வளவும் ச்ந்தானம் ஐயாவின் ஆட்கள் செய்ததாக தோற்றம் ஏற்படுத்துவது என்று பேசிக் கொண்டார்கள். அதற்குரிய கனிசமான சம்பளமும் ஆட்களுக்கு உண்டாம்.. இதைக்கேட்டவுடன் தலையே சுற்றி விட்டது வேலுவிற்கு. பட்டணம் வந்த சொற்ப நாட்களிலேயே பலரின் அரசியல்களைப் புரிந்து கொண்டவனால் இதை ஜீரணிக்க மிகச் சிரமமாக இருந்தது.. தங்கள் குலப்பெருமையை மிக உயர்குடிப்பிறப்பு என்று சொல்லிக் கொண்டே, அரசாங்க ரீதியாக மிக பிற்படுத்தப்பட்டப் பிரிவில் தங்கள் சாதியையும் இணைக்க அரும்பாடுபடும் நல்லவர்கள் என்று பல விசயங்கள் அவனை ஆச்சரியப்படுத்தியிருந்தாலும் இது என்னமோ பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்தது அவன் மனம். எப்படியும் எல்லோரிடமும் பேசி ஒப்புக்கொள்ளச் செய்து, பிரச்சனையை ஆரம்பிக்க 30 நிமிடங்களாவது ஆகும், அதற்குள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கும் அதே சமயம் குழந்தையின் பரிதாபமான முகம் முன்னால் வந்தது. இருந்தாலும் அதைப் பின்னுக்குத்தள்ளி, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும், என்ற நம்பிக்கையோடு விரைவாக ஓடிவந்தவன், ஒலிபெருக்கி சத்தம் வந்த திசையின் கோட்டைப் பிடித்துக் கொண்டு கூட்டம் நடக்கப்போகும் இடத்தை வந்து அடைந்தான். அங்கு சந்தானம் ஐயாவுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். வேகமாக ஐயா என்று கத்திக்கொண்டே ஓடி அவர் காலைக் கட்டிக் கொண்டான். ஒன்றும் புரியாமல் விழித்த சந்தானம் அவனைத் தூக்கி நிறுத்தி,

“என்னப்பா.. வேலு என்னாச்சு. ஏன் இப்படி பதட்டமா வந்திருக்கே..?”

“ஐயா, சாமி மன்னிச்சிப்போடுஙக் சாமி.. நாலு தலமுறையா உங்கூட்டு உப்பைத் தின்னு வளந்தவிக நாங்க… உங்களுக்கு ஒரு கஷ்டம்னா எங்களால பாத்துக்கிட்டு இருக்க முடியாது சாமி… அத்தோட பல உயிர் போகப்போறத நினைச்சா வேதனையா இருக்கு சாமி… ஐயா எதுனாச்சும் பண்ணி காப்பாத்திப்போடுவீங்கன்னுதான் ஓடியாந்தேன் சாமி..” என்றான் படபடப்பாக.

ஒன்றும் புரியாமல் விழித்த சந்தானமும், உடனிருந்த காவல்துறை டி.எஸ்.பியும் அவனைச் சமாதான்ப்படுத்தி அவனிடமிருந்து மெதுவாக விசயத்தை வாங்கினார்கள்… நடந்ததை ஒன்று விடாமல் தெளிவாகக் கூறினான் வேலு. ”யார் வந்து கேட்டாலும் இதைச் சொல்லுவாயா” என்று கேட்டபோதும் சற்றும் தயங்காமல் சந்தானத்தின் முகத்தைப் பார்த்துக் கொண்டே ”கட்டாயம் சொல்வேன் ஐயா,” என்றான்..

ஒரு பெரிய கலவரம் நடக்கவிருந்ததை, ஒரு தனி மனிதனாக தம் உயிரையும் பணயம் வைத்து தடுத்து நிறுத்தியதோடு தம்மேல் விழ இருந்த எத்துனைப் பெரிய பழியிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிய வேலுவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார் சந்தானம். தாம் சக்கரை மில் அதிபராக ஆக வேண்டும் என்ற ஆசையில் இழக்க இருந்தது தம் பரம்பரைச் சொத்தான பசுமையான விவசாய நிலமும், அங்கு கூடுகட்டி வாழ்ந்த குட்டி உயிர்களையும் மட்டுமல்ல, அதற்கும் மேலான கபடமற்ற, வெள்ளந்தியான நல்லியதயங்களையும்தான் என்பதை உணர்ந்தபோது இதயம் நொறுங்கிப்போனது… எத்துனை பெரிய முட்டாள்தனம் செய்ய இருந்தோம்.. நாட்டில் உள்ள விளை நிலங்களனைத்தும் இப்படி அழிக்கப்பட்டால் நாளை சக்கரை ஆலைக்குத் தேவையான கரும்பிற்கு எங்கே செல்வது என்று எண்ணியபோது மனம் வலிக்கத்தான் செய்தது. மேட்டாங்காட்டில் மில் கட்டலாம், ஆனால் அங்கு பசுமையான பயிர்களை வளர்க்க முடியாது.. மில் கட்டுவதற்கு எங்கு வேண்டுமானாலும் இடம் வாங்கலாம். ஆனால் எங்கு வேண்டுமானாலும் பயிர் பண்ண முடியாது.. இந்த எண்ணம் வந்தபோது அப்படியே எழுந்து யோசனையில் நடக்க ஆரம்பித்தார்.. கார் டிரைவர் சார் என்று கூப்பிட்டுக்கொண்டே பின்னால் வருவதுகூட உணராமல் நடந்து கொண்டிருந்தார் ஆழ்ந்த யோசனையுடன்……..
—————-

Series Navigationவானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!ரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்
author

பவள சங்கரி

Similar Posts

6 Comments

  1. Avatar
    s.ganesan says:

    govt incl people should protect cultivable lands for our future generation…..avoiding r minimising converting these lands in 2 housing projects or industries…..it is high time 2 realise this fact by all…the author reveals this fact thro this story….good…

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு கணேசன்,

      தங்களுடைய வாசிப்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பரே.

      அன்புடன்
      பவள சங்கரி

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் ரேவதி நரசிம்ஹன்,

      தங்களுடைய உற்சாகமான வார்த்தைகள் ஊக்கமளிப்பவை. மிக்க நன்றி தோழி.

      அன்புடன்
      பவள சங்கரி

  2. Avatar
    punai peyaril says:

    என்னத்த சொல்ல.. உண்மையான கருத்தச் சொன்ன தான் பிடிக்காதே… அப்புறம் பனங்காட்டு நரி அது இதுன்னு உதார் வேறு விடுவாங்கப்பா…. வேடிக்கை பார்ப்பவன் அடுத்தவன் வேதனை உணர்ந்தாற் போல் சொல்ல வார்த்தை வித்தகம் போதாது… அனுபவம் வேண்டும்.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு புனைப்பெயரில்,

      தங்களுடைய உண்மையான , ஆக்கப்பூர்வமான கருத்தை மனமார வரவேற்கிறேன் நண்பரே. உண்மைதான், வேடிக்கைப் பார்ப்பவர்களின் வேதனை, அனுபவப்படுபவர்களின் வேதனைக்கு ஈடாக முடியாது. ஆயினும் வேதனையின் உச்சத்தில் இருப்பவர்களால் இது போன்று புலம்ப ஏது நேரம். நம்மால் புலம்ப முடிந்தால் அவர்களுடைய வேதனையைப் போக்க ஏதேனும் வழி கிடைக்கலாமல்லவா.. அது மட்டுமல்ல, விவசாய பூமியை அழித்துக் கொண்டுவருபவர்களின் மனதில் ஒரு சின்ன பாதிப்பாவது ஏற்படுத்தாதா என்ற நப்பாசைதான் நண்பரே. என் எழுத்தில் இன்னும் உயிர்ப்பு வேண்டும் என்று தாங்கள் சொல்ல வருவது புரிகிறது. முயற்சிக்கிறேன் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *