க.நாகராசன் புதுச்சேரி
( பாவண்ணன் எழுதியுள்ள ’மனம் வரைந்த ஓவியம்’ நவீன கவிதைகளைப்பற்றிய அறிமுக நூலை முன்வைத்து )
உயிரோசை இணையதளத்தில் ஒவ்வொரு வாரமும் பாவண்ணன் எழுதி வெளிவந்த நவீன கவிதைகளைப்பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘மனம் வரைந்த ஓவியம்’ என்னும் தலைப்பில் நூலாக தற்போது அகரம் பதிப்பகத்தால் வெளியிட்ப்பட்டுள்ளது. நூலில் மொத்தம் ஐம்பது கட்டுரைகள். ஒவ்வொன்றும் ஒரு நவீன கவிஞரின் கவிதையை அறிமுகப்படுத்துகிறது. கவிதையின் மையக்கருவுக்குத் தொடர்பான பாவண்ணனின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கட்டுரை தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட அனுபவத்தையோ அல்லது குறிப்பிட்ட பொருள் சார்ந்த பல அனுபவங்களையோ கட்டுரை முன்வைக்கிறது. அனுபவங்களை விஸ்தாரமாகச் சொல்லி வாசகன் மனத்தில் புள்ளிகளைக் கொண்டு கோலத்தைப் போடுவதைப்போல ஓர் ஓவியத்தை வரைந்து முடிக்கும் இறுதித்தருணத்தில் கட்டுரை கவிதைக்குள் பிரவேசிக்கிறது. கவிதையின் பல்வேறு பரிமாணங்களை விதந்தோதுகிறது. வாழ்க்கை அனுபவத்தையும் வாசக அனுபவத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது. கவிதையின் வார்த்தை பிரயோகங்களையும் வரிகளுக்கிடையில் உறைந்து கிடக்கும் மெளனங்களையும் அவை முன்வைக்கும் படிமங்களையும் வாசகன் பெறும் மகத்தான அனுபவங்களையும் வடித்தெடுத்து ஓவியத்தை வரைந்து முடிக்கிறது.
ஒருவகையில் இந்த நூலை பாவண்ணன் ஏற்கனவே எழுதியுள்ள ‘எனக்குப் பிடித்த கதைகள்’ மற்றும் ‘ஆழத்தை அறியும் பயணம்’ நூல்களின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடுகளான அந்த இரண்டு நூல்களிலும் தனது வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்து தமிழக, இந்திய, உலக எழுத்தாளர்களின் சிறுகதை ஆக்கங்களை உள்வாங்கும் விதங்களை இளைய வாசகனுக்கு அறிமுகம் செய்த பாவண்ணன் இந்த நூலில் கவிதைகளை அறிமுகம் செய்துள்ளார்.
பல விதங்களில் இந்த நூல் முக்கியமானதாகக் காட்சி அளிக்கிறது. நவீன கவிதையை வாசிக்கத் துடிக்கும் இளைய வாசகனுக்கு காய்தல் உவத்தல் இன்றி நடுநிலைமையோடு கவிதைகளை அறிமுகம் செய்கிறது என்பது முதற்சிறப்பு. நவீன கவிதையை எப்படி அணுகவேண்டும் என நூலைப் படித்து முடிக்கும்போது வாசகனுக்கு மிகச்சிறந்த புரிதலைத் தருவது இரண்டாவது சிறப்பு. பிரமிள், நகுலன், சுந்தர ராமசாமி என மூத்த கவிஞர்கள் தொடங்கி தேவதேவன், கலாப்ரியா, ஆத்மாநாம், கல்யாண்ஜி வழியாக அதிகம் பேசப்படாத சத்யன், தேன்மொழி, தேவமகள், கி.விஜயலட்சுமி, ராஜ சுந்தரராஜன், காசியபன், பாபு, சுயம்புலிங்கம் என புதிய கவிஞர்களின் கவிதைகளையும் நூல் உள்ளடக்குகிறது. சல்மா, உமா மகேஸ்வரி, மாலதிமைத்ரி, வெண்ணிலா என பெண்ணிய கவிஞர்களையும், தய்.கந்தசாமி உள்ளிட்ட தலித் கவிஞர்களையும் ரமேஷ் பிரேமின் பின் நவீன கவிதையையும் பதிவு செய்து ஒரு புதிய இளம்வாசகனுக்கு எல்லாத் தரப்புகளையும் எல்லாக் கவிஞர்களையும் அறிமுகம் செய்துவைக்கிறது என்பது மற்றொரு சிறப்பு.
பாவண்ணன் தேர்வு செய்துகொள்ளும் கவிதைகளைச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும். குறிப்பிட்ட கவிஞரின் அதிகம் பிரபலம் ஆகாத கவிதையை அவர் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். அதே நேரத்தில் அந்தக் கவிதை கவிஞரின் தனித்தன்மைக்ளையும் சிறப்பு ஆளுமைகளையும் வெளிப்படுத்தும் வல்லமை உள்ளதாகவும் கவிஞரை எதிரொலிக்கவல்லதாக இருக்கும்படியாகவும் கவிதையைத் தேர்வு செய்கிறார். எடுத்துக்காட்டாக கவிஞர் ஆனந்தின் ‘உள்ளேயும் வெளியேயும்’ , சமயவேலின் ‘எதிர்கொள்ளல்’ கவிதைகளைச் சொல்லலாம். ஆனந்த் விவரிக்கும் இயற்கையுள் கரையும் தன்மையைப் புராணகாலத்து இரணியனின் கதையைக் கொண்டு மிகச்சிறப்பான வார்த்தைகளில் பாவண்ணன் வார்த்திருப்பதைப் பாராட்டவேண்டும். சமய்வேலின் கவிதையில் ஒரு காட்சி. பழம் பொறுக்குபவன் முதுகில் தற்செயலாக மரத்திலிருந்து கல் விழுகிறது. முதலில் ஏற்பட்ட திடீர் சீற்றம் கல்லின் மெளனத்தால் அடங்குகிறது என்பது பாவண்ணனின் மகத்தான கண்டுபிடிப்பு. இந்த இரண்டு கவிதைகளுமே அந்தந்த கவிஞர்களின் நடைக்கும் வெளிப்பாட்டுக்கும் மிக்ச்சிறந்த மாதிரிகள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
மிகச்சாதாரணமாக்க் காட்சி தரும் கவிதைகூட பாவண்ணனின் பார்வையில் வியக்கத்தக்க கவிதையாக விரிவடைகிறது. எடுத்துக்காட்டாக விக்கிரமாதித்யனின் ‘பொருள்வயின் பிரிவு’ கவிதையை சங்கப் பாடலுக்கு நிகரானதாக முன்வைக்கிறார் பாவண்ணன். கவிதையில் மனைவி ஏன் மெளனம் சாதிக்கிறார்? வாகனஒட்டிக்கு அடுத்த இருக்கையில் அவர் ஏன் பயணம் செய்யவேண்டும்? என அடுக்கடுக்கான புரிதல்களைத் தந்தவண்ணம் உள்ளார்.
கவிதைகளின் மையப்பொருளும் பாவண்ணனின் வாழ்வனுபமும் பூட்டும் சாவியுமாக பல கட்டுரைகளில் தீர்க்கமான திறப்புகளைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக வண்ணநிலவனின் ‘குளத்துப்புழா ஆறு’. பாவண்ணன் பார்த்த தாஜ்மகாலின் ஏழைச்சிறுமிக்கும் கவிஞர் முன்வைக்கும் கடலை விற்கும் சிறுமிக்கும் பொருத்தம் கச்சிதமாக உள்ளது. இன்னொரு எடுத்துக்காட்டு மனுஷ்யபுத்ரனின் ‘நீரடியில் கொலைவாள்’. கவிதையிலே உள்ள இடையறாத நதியின் கருணை/ கழுவி முடிக்கட்டுமென்று / நீரடியில் கிடக்கிறது கொலைவாள் என்னும் வரிகள் பாவண்ணனுக்கு சோளிங்கபுரம் நரசிங்கர் கோயில் சக்கரத்தீர்த்த குளத்தின் அடியில் கிடக்கும் ஆஞ்சநேயர் பயன்படுத்திய திருமாலின் சக்கராயுதத்தை நினைவூட்டுகின்றன. இரண்டுமே ஒருவகையில் சாந்தப்படுத்தும் நீர்நிலைகள். அந்த நீர்நிலைதான் நம் மனம். கொலை ஆயுதம்தான் வெறுப்பு என்கிற வன்முறை. இவை பாவண்ணனின் அவதானிப்பு.
ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் கவிஞரைப்பற்றிய அறிமுகம், அவருடைய தனிச்சிறப்பு, வெளியிட்டுள்ள கவிதைத்தொகுப்புகள், மற்ற படைப்புகள் என ஒரு சில வரிகளுக்குள் முழு வரைபடத்தையும் பாவண்ணன் தருகிறார். ‘யாப்பின் கட்டுப்பாட்டையும் வடிவத்தின் சுதந்த்ரிஅத்தையும் ஒரே நேரத்தில் சி.மணியின் கவிதைகள் முன்வைக்கின்றன’ என்பது சி.மணிக்கு பாவண்ணன் தரும் அறிமுகம். ‘புதுமைத்தும்பிய படிமங்களால் நிறைந்த கவிதைகளை எழுதும் முக்கிய கவிஞர்’ என்பது ஜெ.பிரான்சிஸ் கிருபாவுக்கு வழங்கப்பட்டுள்ள அறிமுகக்குறிப்பு. அறிமுகத்தின் விளக்கத்துக்கு பிரான்சிஸ் கிருபாவின் கவிதையில் இடம்பெறும் தட்டானையே குறிப்பிடலாம். தழைகள் உருவப்பட்டு வெற்றுக்காம்புகளுடன் முரிந்து தொங்குகிற மர்க்கிளைக்குள் தன்னையே கண்ட சங்ககாலத் தலைவிக்கும் துணிக்கொடியில் தூங்குகிற தட்டானுக்குள் தன்னையே காணும் நவீன காலத்துப் பெண்ணுக்கும் இடையே இரண்டாயிரமாண்டு இடைவெளி உள்ளது. ஆனால் உணர்வளவில் அருகருகே இருக்கிறார்கள்.
பாவண்ணனின் பார்வை சில இடங்களில் வித்தியாசமாக உள்ளது. நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பை முன்னிலைப்படுத்தும் கலாப்ரியாவின் ‘பிரிவுகள்’ கவிதையை பாவண்ணன் வேதனைகளை முன்வைப்பவையாக்க் குறிப்பிடுகிறார். காத்திருத்தலுக்கும் ஒத்திப் போடுதலுக்குமான சுந்தர ராமசாமியின் ‘வருத்தம்’ கவிதையை போரை வெறுக்கும் மனநிலையை வெளிப்படுத்துவதாக பாவண்ணன் குறிப்பிடுகிறார். சாதாரணமாக வாசகர்களின் பார்வையிலிருந்து நழுவிப்போக வாய்ப்புள்ள ஒரு வரியின் வெளிச்சத்திலிருந்து கவிதையின் அனுபவத்தை விரிவுபடுத்த எண்ணும் பாவண்ணனின் முயற்சி பாராட்டுக்குரியது. பிரும்மராஜனின் ‘அறிந்த நிரந்தரத்தில்” கவிதையில் ஒலிக்கும் சிபனி இசையை பாவண்ணன் கவனிக்கத் தவறியதன் காரணம் புரியவில்லை. இரவு முழுவதும் விழித்திருப்பது சாமச்சேவலுக்கு ஒருவேளை சுமையாக இருக்கவில்லையோ.
ரா.ஸ்ரீனிவாசனின் ‘அசையாச் சிறுகல்’ கவிதையை ஹொய்சளர் காலத்து சிற்பங்கள் நிறைந்த கோயிலைப் பார்ப்பதுபோலவும் ந்குலனின் கவிதையை உணர்த்த பாவண்ணன் தீட்டும் இணை சித்திரமும் சரியாக ஒன்றிணையவில்லையோ என்று தோன்றுகிறது.
ஐம்பது கட்டுரைகளினூடான பயணம் வாசிப்பவருக்கு இனிமையையும் பரவசத்தையும் தரும் அனுபவமாக அமைகிறது. நவீன கவிதைகளை இளம் வாசகன் உணர்ந்துகொள்ளவும் உள்வாங்கவும் உணர்வுபூர்வமாக இந்த நூல் தயார் செய்கிறது. கவிதைகளைப் புரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சி சட்டென்று ஒரு தருணத்தில் வாழ்வைப்பற்றிய புரிதலைத் தருவதாக மடைமாற்றம் அடைகிறது. கவிதைளின் சிறப்பை உணர்த்த எழுதப்பட்ட வரிகள் எல்லாம் வாழ்வின் பிருமாண்டத்தையும் சிக்கல்களையும் சுவாரஸ்யங்களையும் அர்த்தங்களையும் முரண்களையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவையாகக் காட்சி அளிக்கின்றன. இதுதான் இந்த நூலின் வெற்றி.
நூலின் முன்னுரை குறிப்பிடத்தக்க ஒன்று. ஏ.கே.ராமானுஜத்தின் புகழ்பெற்ற கவிதை வரிகளைப் பாவண்ணன் தன் முன்னுரையில் மேற்கோள் காட்டுகிறார். ‘நமக்கு முன்னால்/ உள்ளவற்றைப் பார்க்க/ வெறும் இரண்டு கண்கள் மட்டும் போதாது/ கூடவே கொஞ்சம்/ அதிர்ஷ்டமும் வேண்டும்’. இவை என் அனுபவத்தில் மிகவும் சத்தியமான வரிகள் என்றே தோன்றுகிறது. எட்டு மாதங்களாக என் கண்களின் எதிரிலேயே மேசைமேல் ‘மனம் வரைந்த ஓவியம்’ இருந்தாலும் இந்த மகத்தான புத்தகத்தைப் படித்துமுடிக்க கொஞ்சம் அதிர்ஷ்டமும் எனக்குத் தேவைப்பட்டிருக்கிறது.
*கவிஞர் சண்முக சுப்பையா எழுதிய ‘உலகம்’ கவிதையின் கடைசி வரி.
(மனம் வரைந்த ஓவியம்- கட்டுரைத்தொகுப்பு. அகரம் வெளியீடு, எண்-1, நிர்மலா நகர், தஞ்சாவூர்.)
- இடைச் சொற்கள்
- கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்
- பூர்வீகப் பிரபஞ்சத்தின் பூதக் கருந்துளைகள் காலக்ஸிகளின் உள்ளே உதித்தனவா அல்லது அவற்றை உருவாக்கினவா ?
- கள்ளிப் பூக்கள்
- சீதாயணம் நாடக நூல் வெளியீடு
- மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -9
- சின்னவனைச் சுழற்றியெடுக்கும் ‘சுழிக் காற்று’
- கடிதம்
- கதையே கவிதையாய்! (2)
- இது…இது… இதானே அரசியல்!
- கடவுளும், கலியுக இந்தியாவும்
- ஆழி – ஜாகீர்ராஜா நூல்கள் வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 28 முடிவு காலம் நோக்கி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 34) முகிலும், மழையும்
- பெய்வித்த மழை
- ஏனோ உலகம் கசக்கவில்லை*
- தகப்பன்…
- முள்வெளி – அத்தியாயம் -23
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 40
- சாமி போட்ட முடிச்சு
- பழமொழிகளில் ‘புறங்கூறுதல்’
- மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)
- “கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-
- அழுகிய ’கேக்’கும் அமெரிக்கத் தமிழ் ஆடியன்ஸும்
- பா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “
- பூனைகளின் மரணம்
- இடைவெளிகள் (9) – புலம்பெயர்தலும் உருளைக்கிழங்கு பொரியலும்