முள்வெளி – அத்தியாயம் -23

This entry is part 19 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

ஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். மொட்டை மாடிக் கதவுக்குப் பின் இருந்த ‘ப்ளக் பாயிண்ட்’டிலிருந்து வந்த ஒயரின் முனையில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு சிறு சணலால் நிலையின் மீது அடிக்கப்பட்ட ஆணியில் ஒயர் சுற்றப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. ஈசல்களும் கருப்பு நிற சின்னஞ்சிறு பூச்சிகளும் அந்த பல்பை மொய்த்து சிலரின் சட்டை மற்றும் தலை மீது விழுந்து அவர்களது அசைவின்மையைத் தற்காலிகமாய்க் கலைத்தன.

கணேசன் எழுந்து பேச ஆரம்பித்தார் “எல்லாருக்கும் என்னோட வணக்கம். நம் மாவட்டத்தில இருக்கிற எல்லா எழுத்தாளர்களையும் இந்த வித்தியாசமான இலக்கிய அமர்வுக்கு நான் அழைச்சப்போ கிட்டத்தட்ட எல்லாருமே என்னை உற்சாகப் படுத்தினாங்க. நான் போஸ்ட் கார்டில குறிப்பிட்டிருந்த மாதிரி இரண்டு இளம் படைப்பாளிங்க தங்களுடைய சில கருத்துக்களை விவாதத்துக்கு வைக்கறாங்க. ஒரு எளிய இரவு உணவும் விவாதமுமா இந்த இரவுப் பொழுதை நாம் இலக்கியவாதிகளின் சந்திப்பா கழிப்போம். முதலில் ராச மாணிக்கம் ‘வாசிப்பும் படைப்பும்’ என்கிற தலைப்பில் தன் கருத்துக்களை முன் வைத்து விவாதத்தைத் தொடங்குகிறார். அவர் நல்ல விமர்சகர் என்கிறது நாம் எல்லாருமே அறிந்த விஷயம்.”

ராஜமாணிக்கத்துக்கு ஒரு நிமிடம் உதறல் எடுத்தது. முதலில் குணசேகரனைப் பேச வைப்பார் என நம்பியிருந்தான். “டேய்.. குணா முதல்லே நீ பேசேன். கொஞ்சம் பயமா இருக்குடா” என்று அவன் காதில் கிசுகிசுத்தான். “ப்ரீயா பேசிட்டு வா. பயப்படாதே ” என்றான் குணா. ஒரு காலை நகர்த்தி சம்மணமிட்டிருந்தவர்கள் வழி விட்டார்கள்.

“என்னை விட குணா தவிர்த்து நீங்க எல்லாருமே மூத்த படைப்பாளிகள். அதனால கொஞ்சம் பயத்தோட தான் என் சிறு கட்டுரையை வாசிக்கிறேன். உங்க எல்லாருக்கும் என் தாழ்மையான வணக்கம்”

“எதுக்கு படைப்பாளி தாழ்மையா வணங்கணும்? தைரியமாய்ப் படிங்க தம்பி” ஒரு குரல் மத்தியிலிருந்து வந்தது. விரல்களின் நடுக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு ராஜ மாணிக்கம் படிக்க ஆரம்பித்தான்.

‘இலக்கியம் என்பது இதுதான் என்று வரையறுத்துச் சொல்ல இயலாது. வியாபார நோக்கமோ, விரசமோ, தூற்றும் உள் நோக்கமோ, இல்லாத இலக்கியங்களைப் பிரித்து இனங்கண்டு அடையாளப் படுத்தலாம்.

மொழியைப் பேணுவதாகவும், மொழியின் தேய்மானத்தை சிதைக்கப் பட்ட அதன் கூர்மையை அழகை சரி செய்வதாகவும், அதன் புதிய சாத்தியங்களை வெளிப்படுத்துவதாகவும் ஒரு படைப்பின் உருவம் அமைகிறது. அதன் உள்ளடக்கம் மொழியும் மரபும் மதமும் வாழ்க்கை முறையும் பழக்கப் படுத்தியுள்ள தடங்களைத் தாண்டி ஒரு வாசிப்பின் மூலம் வாசகனுடன் அவன் விரையுமளவு விரியும் ஒரு வெளியில் அவனை இட்டுச் செல்கிறது.

இந்த உருவமும் உள்ளடக்கமும் வாசிப்பை அதாவது வாசகனை மட்டுமே மையமாகக் கொண்டு அமைபவை.

வாசகனை அறிவு ஜீவி, அற்ப ஜீவி என இரு வகையாக அடையாளம் கண்டு வியாபாரரீதியில்லாத படைப்புகள் வெளி வருகின்றன. வாசிப்பு அனுபவத்தை புறந்தள்ளும் கலைக் கட்டுமானங்களும், ஒரு முனை சஞ்சரிப்புகளும், தத்துவ விசார வாக்குமூலங்களும் பல சந்தர்ப்பங்களில் வாசகனை விசிறி அடித்து விடுகின்றன.

இதனால் உடனடியாக நிகழ்வது விடுதலை பெற்று எந்த் வெளியையும் நோக்கி நகராமல் வாசகன் வாசிப்பிலிருந்து வெளியே வந்து விடுகிறான். ஒரு படைப்பாளியே பல சமயம் சக படைப்பாளியின் கலையை, அவன் உழைத்து உருவாக்கிய கட்டுமானத்தை, முக்குளித்து அவன் கண்டெடுத்த முத்துக்களை இனங்கண்டு நல்லதொரு விமர்சனத்தை முன் வைக்க முடியாமற் போய் விடுகிறது. ஒரு போக்குக் காட்டி ஒரு புதை மணலில் வாசகனை சிக்க வைக்கும் படைப்புக்கள் சிலவும் இருண்மையாய் சிலவும் வெளிவருகின்றன. ஒரு கானல் நீர் கசப்பை அல்லது அது தரும் அயர்ச்சியை, தற்போது வெளிவரும் கவிதைகளில், கதைகளில் ஒரு சில கட்டுரைகளில் காண்கிறேன்.” ஒரு வழியாக உரையை முடித்த நிறைவுடன் உள்ளே புகுந்து யாரையும் சிரமப் படுத்தாமலிருக்க எண்ணி கதவருகே அமர்ந்தான். ஓரிரு பூச்சிகள் காத்திருந்தது போல அவன் சட்டை ‘காலர்’ வழியே உள்ளே புக, தட்டி விட்டான்.

கணேசன் தாம் அமர்ந்திருந்த இடத்திலேயே எழுந்து நின்று “உட்கார்ந்தபடியே ஒவ்வொருத்தரா முடிஞ்ச வரை சுருக்கமா விவாதத்தைத் தொடர்ந்து நடத்தித் தரணும்” என்று அமைந்தார். குணாவுக்கு அருகில் இருந்தவர் தொண்டையைச் செருமிக் கொண்டு “ராச மாணிக்கம் தன்னுடைய கட்டுரைகளிலேயே தான் எழுப்பிய கேள்விகளை அலசி இருக்கிறாரு. ஆனா அவர் சொன்ன மாதிரி வாசகனை அறிவாளி ஏனையருன்னு பகுத்துப் பாக்கிற அளவுக்கெல்லாம் ஒரு படைப்பாளி கவனிக்கறதில்லே. ஒரு பொறியில் ஒரு படைப்பு உருவாகும் போது தானேஅது ஒரு சொல்லாடாலை உருவாக்கிக்கிது. படைப்பாளியோட கவனமெல்லாம் தான் கொடுக்க நெனச்சதுக்கு ஏற்ற மாதிரியான ஒரு மொழி வடிவத்தில தான். கவிதையோ, கூர்மையான சிறுகதையோ, விஸ்தாரமான நாவலோ, அது அவன் தர்ற வாசிப்புக்கான வடிவத்தின் பரிமாணங்களைப் பொருத்தது. உருவம் பல சமயம் உள்ளடக்கத்தைப் பன்முகமாக் காட்டக் கூடியது. கலையை எடுத்துக்குவோம். சிற்பமும் ஓவியமும் ஏன் திரும்பத் திரும்ப ரசிக்கப் படுது? அதுல உள்ள கலை. இதே கலையம்சம்தான் மறுவாசிப்பு செய்ய வைக்கிற படைப்புக்களுக்கான அடையாளம். வாசிப்பு வளப்படணும்கிறது வாசகனக்கும் கடமைதான். வாசிக்க வாசிக்க பலாப் பழமாத் தென்பட்டது வாழைப் பழமா மாறிடும். கானல் நீரா ஒரு படைப்புத் தென்படக் காரணம் வணிகமயமான படைப்பை மட்டுமே வாசித்த பழக்கம். ஒரு நல்ல படைப்பு ஜீவ நதி மாதிரி அது கானல் நீரா ஆகவே முடியாது”

ஒரு பக்க சுவரில் சாய்ந்தபடி ஆழ்ந்த குரலில் அடுத்தவர் ஆரம்பித்தார் ” ஒரு படைப்பாளி வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளை சந்திச்சானா அதாவது வறுமை, ஒரு பெண்ணால் நிராகரிப்படுதல் அல்லது சமூகத்தால் குடும்பத்தால் நிராகரிக்கப் படுதல், அவமானப் படுதல் மனச் சம்நிலை பாதிக்கப் படுதல், மிகப் பெரிய எதாவது ஒரு இழப்பில், அல்லது ஏமாற்றத்தில் நிலை குலைஞ்சு மனமுடைதலின்னு ஏதேனும் ஒன்றை அவன் கடந்து வந்திருக்கணும். அப்ப தான் அவன் படைப்புல ஒரு வலி சுமக்கிற ஆன்மா வெளிப்படும். அந்தப் படைப்புக்களை அவன் தூக்கிப் பிடிக்க வேண்டியதேயில்ல. அது காட்டுத்தீ மாதிரி கண்ணுக்கு தூரத்திலிருந்தே தென்பட்டிடும்”

கணேசன் தன் தரப்பிலிருந்து “ஐயா குறிப்பிட்ட மாதிரி இந்த வலி, நிராகரிப்பு இதையெல்லாம் காலங்காலமாத் தலைமுறை தலைமுறையா அனுபவிச்சவங்க ‘தலித்’துகள். மண்ணின் மணத்தையும் இந்த மண்ணுல நடந்த மன்னிக்கவே முடியாத அனியாயங்களையும் உள்ளடிக்கி அசலான இலக்கியமா ‘தலித்’ எழுதும் இலக்கியங்கள் இப்பத்தான் வர ஆரம்பிச்சிருக்கு. வாசிக்கிறவன் தன் பார்வையையே சரி செய்துகிட்டு வாசிக்க வைக்கிற எழுத்துக்கள் அவை. இன்னும் இருபது வருஷம் கழிச்சுப் பாத்தா. ‘தலித்’ இலக்கியத்தைத் தவிர தாக்குப் பிடிக்கிற எழுத்துக்கள் மிகவும் குறைவாகத்தான் மிஞ்சும்.”

மற்றுமொருவர் ஆரம்பித்தார். ” பத்துக்கு ஒம்பது படைப்பாளிங்க விஷயத்தில அவங்க ஆரம்ப கால எழுத்துக்கள் தன்னைப் படைப்பாளியா நிலை நிறுத்திக்கிற தன்னை நிரூபிக்கிற ஜாக்கிரதைத்தனமான சுருதி பேதங்களைச் சுமந்திருக்கும். அதைத் தாண்டி தன்னுடைய உள்ளே தேடும் படைப்புகள் அவுங்க கிட்டேயிருந்து வெளிவரும் வரைக்கும் வாசகனும் இலக்கியமும் காத்திருக்கத்தான் வேணும். அப்போ வாசிப்பு அனுபவம், கலை, நுட்பம், தத்துவ விசாரம் எல்லாமே கூடி ஒரு பஞ்சலோக விக்கிரகம் மாதிரி அவன் படைப்புகள் வெளிப்படும் போது இலக்கியத்துக்கு இன்னும் வளமான சொத்து கிடைக்கிது.”

நிறைய தலை முடி வளர்த்து கண்ணாடி அணிந்த ஒருவர் ஆரம்பித்தார் “ஒரு நல்ல படைப்பாளி தன்னுடைய கற்பனை வளத்தை ஊற்றெடுக்கிற சுதந்திரமான சிந்தனையைக் காப்பாத்தி அதைக் கலையாப் படைக்கிறவன். அவனோட குழந்தை கதை கேட்டாலும் அதுக்குத் தினம் ஒரு வித்தியாசமான கதை சொல்லுறது அவனுக்கு சாத்தியமாகணும். படைப்புக்கான கற்பனை வரம் கடவுள் வரமோ உடம்போட பிறந்து வருவதோ கிடையாது. தனது சுதந்திரமான சிறகடிக்கிற சிந்தனைப் போக்கின் இயல்பைத் தக்க வெச்சிக்கிறது தான். இலக்கியம் வார்த்தைகளைத் தாண்டி பேசாமலேயே பேசும். பாத்திரங்களைத் தாண்டித் தேங்கிக் கிடக்கிற மனித கூட்டத்தைப் பார்த்து அதன் கட்டாயங்களைப் பார்த்து வாசகன் பதறி மேலே சிந்திப்பான்”

சற்றே தள்ளி சுவரை ஒட்டி இருந்த ஒருவர் கையோடு கொண்டு வந்திருந்த சிறிய மது பாட்டிலிலிருந்து கொஞ்சம் ஏற்றிக் கொள்வது ராஜ மாணிக்கம் கண்ணில் பட்டது.

சட்டையில் செல் போன் சட்டைப் பையைத் தாண்டி வெளியே தெரிய இருந்த ஒருவர் பேச ஆரம்பித்தார். “வணிக இலக்கியம்னு பொதுப்படையா ஒதுக்கிடறோம். நிறைய வாசகர்களைப் போயிச் சேருர மாதிரி ஒரு இலக்கியத் தரமான பத்திரிக்கையை நடத்தற முயற்சியை யாராவது தொடர்ந்து செய்யிறாங்களா? சிறு பத்திரிக்கை வெகு ஜென பத்திரிக்கையின்னு இரண்டா பிரிச்சி நாம் அவுங்களையும் அவுங்க நம்மையும் நிராகரிச்சாச்சி. சினிமா, சீரியல் எல்லாமே நமக்கு தீண்டத்தகாத விஷயங்கள். குறைந்த பட்சம் ஒரு நல்ல பத்திரிக்கை சிறுவருக்கு பல பக்கம், பெண்ணுரிமை, ‘தலித்’துகளுக்கான உரிமைகள், பண்பாடு பற்றிய விவாதங்களின்னு சுவையா ஒரு இதழை நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது? நம் மாவட்டத்திலேயே தொடக்கத்திலே போட்டு வித்துப் பாக்கலாமே?”

“அதுக்கு உன்னை மாதிரி சினிமாக் கதை சொல்லி சில்லரை சேத்திருக்கணும்” என்றார் ஊற்றிக் கொண்டவர். அவர் கண்கள் சிவக்க ஆரம்பித்திருந்தன.

“தனிப்பட்ட விமர்சனம் வேண்டாமே” கணேசன் பதறினார்.

“நீங்க இருங்கைய்யா.. என்னடா சொன்னே? நான் சினிமாவுக்கு சொன்ன கதைக்கி விருது கிடைச்சதில பொறாமை உனக்கு. நான் இலக்கியத்தை சினிமாவுக்குக் கொண்டு போறேன். உன்ன மாதிரி எளுத்தைக் காட்டி ரெண்டு மூணு பொண்ணுங்களைத் தள்ளிக்கிட்டிப் போல…”

“நடிகை ……….யை நக்குறவண்டா நீ… நாயே….”

“போடா பொம்பளப் பொறுக்கி நாயே…” இரண்டு மூன்று பேரின் கை கால்களை மிதித்த படி அவர் பாயும் போது செல் போன் கீழே விழுந்தது. இதை எதிர்பார்க்காத ஓரிருவர் கீழே விழ, தாக்கப் பட்டவர் சட்டை கிழிய அவர் நண்பர் ஒருவர் “அவன் மேலே கையை வைக்க நீ யாருடா? ‘” என்று வேறு ஒரு திசையிலிருந்து பாய்ந்த போது எல்லோருமே எழுந்து விலக, இருவர் ஒருவரைத் தாக்கும் மின்னல் வேக நிகழ்வில் சுதாரித்து ஓரிருவர் வேட்டியை மடித்துக் கட்டி ஆளுக்கு ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்துப் பின்னே இழுத்தும் காதில் கேட்க முடியாத வார்த்தைகள் சரமாரியாக வந்து கொண்டே இருந்தன. “ஸார்.. ப்ளீஸ்.. அக்கம் பக்கத்தில வேடிக்கை பாக்கறாங்க… ப்ளீஸ்..” என்று கணேசன் கை கூப்பிக் குரலை உயர்த்திக் கெஞ்சினார். அனேகர் மெதுவாகப் படி இறங்கி வெளியேறினர்.
**__
**__**
**
வாளின் கூர்முனையில்
உன் இருப்பைக் குவித்துக்
காத்துக் கொள்

சச்சரவுச் சறுக்கல்கள்
சாட்சி சொல்லும் கட்டாயங்களுக்கு
அப்பாற்பட்டு
நெடிதுயர்ந்து தலை நிமிர்ந்து
நிற்பது
மலைகளுக்கே சாத்தியம்

உன்னுள்
கனன்று கொண்டிருந்தது
சூரியனா சூளையா
என்னும் கேள்வி
ஒலிவடிவிலோ
வரிவடிவிலோ
வரப்போவதில்லை

உறக்கத்தில் உயிர் நீத்து
இமை திறந்து
உயிர்த்தெழுதல்
பழகி விடு

ஒப்பனைக் கிண்ணங்கள்
மதுக் கோப்பைகள்
வடிவில் மட்டுமே
சாக்ரடீஸ் விட்டுச்
சென்றதை விடவும்
வடிவில் மட்டுமே
வேறு பட்டவை

Series Navigationதகப்பன்…மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 40
author

சத்யானந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    MURALI says:

    I cant take this as a story – may be real??? when i read it….RA.Murugan…Jayamohan ….Gnani..and rajesh kumar came in to my mind

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *