பாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 33 of 37 in the series 2 செப்டம்பர் 2012
தியத்தலாவ எச். எப். ரிஸ்னா
சிறுவர் படைப்பிலக்கியத்தில் ஆழமாக தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர்களுள் திருகோணமலை செ. ஞானராசா அவர்களும் முக்கியமானவர். தனது மூன்றாவது சிறுவர் நூலாக பாவைப் பிள்ளை என்ற தொகுதியை வெளயிட்டிருக்கின்றார்.
சிறுவர் பா அமுதம் இவரது முதல் தொhகுதியும், புதிய பாதை என்பது இவரது இரண்டாவது தொகுதியுமாகும்.
அதிபராக கல்விப் பணியாற்றி வருவதுடன் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வரும் செ. ஞானராசா அவர்கள் இலங்கை தேசிய நூலக அபிவிருத்தி சபையால் இப்புத்தகத்துக்குரிய சான்றிதழையும் பெறிருக்கின்றார்.
மொத்தம் 20 பாடல்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இந்நூலானது  47 பக்கங்களில், வர்ணப் படங்களுடன் சர்வீனா வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இவ்விரண்டு வரிகளில் வாழ்க்கையின் அத்தனைப் பகுதிகளையும் தெட்டத் தெளிவாக கூறியிருப்பது திருக்குறள் என்று பலரும் சொல்வர். திருக்குறள் இன்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய மேன்மை பொருந்திய நூல் பற்றி சிறுவர்களும் உணர வேண்டும் என்பதற்காய் திருக்குறள் என்ற முதல் பாடலின் சில வரிகள் இவ்வாறு வருகிறது.
இரண்டு வரியில் உள்ளதாம்.
இனிய கருத்து நிறைந்ததாம்
திரண்ட செய்தி சொல்லுமாம்
திருவள்ளுவர் தந்ததாம்
செய்ய எதை வேண்டுமோ
செய்ய எதை வேண்டாமோ
மெய் உணர்த்தி வைக்குமாம்
மேன்மையான குறளதாம்
வேளைப்பளு அதிகரித்திருக்கும் இன்றைய காலத்தில் தந்தை மாத்திரமன்றி தாயும் தொழிலுக்குச் செல்லும் தேவை அல்லது திண்டாட்டம் வலுப்பெற்றிருக்கிறது. அவ்வாறாயின் அலுவலகத்துக்கு செல்லும் அவதியில் அவசர உணவுகள் தான் இன்று கைகொடுக்கின்றன.
பிட்டு, இடியப்பம், தோசை போன்ற பாரம்பரிய உணவுகள் மறக்கப்பட்டு பாஸ்ட்புட் உணவுகள் எம்மை ஆக்கிரமித்துவிட்டன. நல்லது என்ற தலைப்பிடப்பட்ட பாடல் சத்துணவுகளை இன்னொருமுறை ஞாபகப்படுத்துமாற்போல் இருப்பதை அவதானிக்கலாம்.
பாலும் பழமும் நல்லது
பச்சைக் காய்கறி நல்லது
பருப்பும் கிழங்கும் நல்லது
பலம் தருவதில் வல்லது
மீனும் முட்டை இறைச்சியும்
மிகவும் ஊட்டம் உள்ளது
சிறுவர்களை மாத்திரமல்லாது கவிஞர்களையும் கவர்ந்த ஒரு அதிசயம் நிலா. நிலாவைப் பற்றி எப்படியெல்லாமோ, யார் யாரெல்லாமோ கூறி விட்டார்கள். ஆனாலும் படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தமது ரசனைக்கேற்றாற்போல நிலவினைப் பற்றி பாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். நூலாசிரியரும் பாடுகிறார் இவ்வாறு..
நிலாப்பாட்டு பாடியே
நிலாவோடு சேருவோம்
உலாப் போகும் வெளியினை
உல்லாசமாய் நாடுவோம்
இரவைத் தேடும் உறவுப்பூ
இருளில் அழகு காட்டுதே
வரவுக்காக காப்பதால்
வழியில் மகிழ்ச்சி பூக்குதே
இலங்கை நாடு எம் நாடு என்று வெறுமனே பாடிக் கொண்டிருக்காமல் மூவின மக்களும் சமமானவர்கள், தாய் நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற கோட்பாட்டை மாணவர்கள் மத்தியில், எதிர்கால சந்ததியினர் மத்தியில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதியும், சுபீட்சமும் தோன்ற வழி பிறக்கும். கடந்த காலங்கள் போன்று எதிர்காலங்கள் ஆகிவிடக்கூடாது. ஒற்றுமையை வலியுறுத்தும்  முயற்சியாக எங்கள் நாடு என்று தலைப்பிட்ட கவிதையின் சில வரிகள் இதோ..
இந்து இஸ்லாம் பௌத்தம்
இனிய கிறிஸ்தவமும்
இந்த நாட்டின் நெறியாய்
இருக்கும் ஒரே விதமாய்
இனங்கள் பல உண்டு
இலங்கையர் நாம் என்று
சனங்கள் உணர்ந்து கொண்டால்
சரிசமமாய் வாழ்வோம்
நலன்புரி நிலையங்களில் வாழ்க்கை நடாத்துபவர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வாழுவதை அறிந்திருக்கிறோம். அவர்களுக்கு எம்மாலான உதிவிகளைச் செய்ய வேண்டும். சொந்த மண்ணில் இருக்கும்போது மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று கண்ணீர் கதைகளோடும், நினைவுகளோடும் வாழ்கின்றார்கள். கடந்துவிட்ட அவர்களது வாழ்வு மீண்டும் கிடைக்காதா என்ற ஆதங்கத்தோடு வாழு(டு)ம் அவர்கள் பற்றி நூலாசிரியர் செ. ஞானராசா அவர்கள் தனது நலன்புரி நிலையம் என்ற பாடலில் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
நலன்புரி நிலைய மாணவர்கள்
நலம் பல இழந்து போனவர்கள்
பலன் பெற உதவி செய்திடவே
பாசமாய் எழுந்து வாருங்கள்
வன்னியில் இருந்த போதினிலே
வாய்ப்பு வசதிகள் அவர்க்குண்டு
அன்னியப்பட்டுப் போனதினால்
அடிப்படை உரிமை இழந்தாரே
தனது பாடல்களால் சின்னஞ் சிறார்களை கவரும் வல்லமை ஆசிரியருக்கு இருக்கிறது. நூலுருவாக்கத்தில் நன்கு திட்டமிட்டு பயனுள்ள விடயங்களை சேர்திருக்கும் நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!
பெயர் – பாவைப் பிள்ளை (சிறுவர் பாடல்;)
நூலாசிரியர் – செ. ஞானராசா
முகவரி – 993, Anbuvalipuram, Trincomalee, Sri Lanka.
தொலைபேசி – 026 3267891, 077 5956789
வெளியீடு – சர்வீனா வெளியீட்டகம்
விலை – 200 ரூபாய்


நன்றி!
இப்படிக்கு,
தியத்தலாவ 
எச்.எப். ரிஸ்னா
Series Navigationபழமொழிகளில் கனவும் நினைத்தலும்குற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
author

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *