‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வெட்டியொட்டிவைத்த புன்னகை
பளீர்ச்சிரிப்பு
பளாரென்றறையும் கோபாவேசத்தெறிப்புகள் சில
குட்டிக்குட்டித்தலையசைப்புகள்
ஒட்டியும் வெட்டியும்
சுட்டித்தனமான ஆர்வக்கிளர்ச்சியை வெளிப்படுத்தும்
கண்சிமிட்டல்கள், உதட்டுச்சுழிப்புகள்
வெட்டு ஒன்று துண்டு இரண்டெனும்
அறிவின் முதிர்ச்சி பிரதிபலிக்கும் தீர்க்கப்பார்வை
முகப்பூச்சைக் கலைக்காமல் வழியும் வேர்வை
காக்க காக்க கனகவேல் காக்கவெனும்
கண்மூடிய சரணாகதி நிலையும்
கடவுளா கல்லா என்ற பட்டிமன்ற கர்ஜனையும்
இரண்டு சேர்ந்த தேர்ந்த பாவனை
யான பிற எல்லாமுமாக
ஆளுக்கேற்ப இடத்திற்கேற்ப
நாளும் நடக்கும் நயத்தகு நாடகமேடைக்குச்
செல்லும் வழியெல்லாம் ஒத்திகை பார்த்தபடியே
ஆணாகிய, பெண்ணாகிய, ஆனானப்படவராகிய
அவர்(கள்)..
Once again, this poem is strikingly beautiful. Reminds me of my Manadigan in Thinnai.