பவள சங்கரி
”ஐயா.. நன்றிங்க. சாமியாட்டமா வந்து எம்பட குழந்தையை காப்பாத்திப்போட்டீங்கோ… எங்க குலசாமியே நீங்கதானுங்கோ. புருசனும் இல்லாம என்னோட வாழ்க்கைக்கே ஆதாரமா இருக்குற இந்த ஒத்தைப் புள்ளையையும் நோய் கொண்டுபோயிடுமோன்னு உசிரை கையில புடிச்சிக்கிட்டிருந்தேங்க.. மவராசன் ஒத்த காசு கூட வாங்காம எம் புள்ளைய காப்பாத்திப்போட்டீங்க.. உங்க குலமே நல்லா வாழோணும்.. அந்த ஆத்தா மகமாயி உங்க குடும்பத்தையே காப்பாத்துவா”
அம்மா.. அம்மா.. எழுந்திருங்க . இப்படி காலில் எல்லாம் விழாதீங்க. பையனுக்கு மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா கொடுங்க. இன்னும் 2 மாதமாவது ரொம்ப ஜாக்கிரதையா ரெஸ்ட்டுல வச்சிருங்க. மேஜர் ஹார்ட் ஆபரேஷன் இது. “
சரிங்க ஐயா. ரொம்ப சந்தோசமுங்க. வாரேனுங்க.
“சரி, 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து காட்டிட்டுப் போங்க”
மாற்று இருதய அறுவை சிகிச்சையில் டாக்டர் மகேந்திரன் தான் நம்பர் ஒன்று என்பது ஊருக்கேத் தெரிந்த விசயம். ஆனாலும் தம் வாழ்நாளில் ஒரு பெரும்பகுதியை ஏழை எளியோருக்கு இலவச சேவை செய்வதை இலட்சியமாகவேக் கொண்டவன்.
என்றும் இல்லாதத் திருநாளாக இன்று உள்ளமும், உடலும் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறதே.. இருக்காதா பின்ன.. 10 வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கப்போகும் காலம் அல்லவா. ஜெனீவாவில் நடக்கப் போகும் உலக சுகாதார மையத்தில் தம்முடைய ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கப்போகும் இந்த தருணத்திற்காகத்தானே காத்துக் கொண்டிருந்தான்.. இரவு விமானத்தில் கிளம்பப் போகும் அந்த பொன்னான நேரத்தை எதிர்நோக்கி, மனைவியும், மகளும் கூட ஆவலாக இருந்தார்கள். பெட்டிகளெல்லாம் புறப்படத் தயாராக அணிவகுத்துக் கொண்டிருந்தன. கிளம்பும் நேரம்வரை மருத்துவமனையிலேயே இருக்க வேண்டுமா, கிளம்பி வந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு புறப்படத் தயாராகலாமேன்னு வீட்டில் மனைவியிடமிருந்து இதோடு மூன்றாவது முறையாக அழைப்பு வந்துவிட்டது. இனி கிளமப வேண்டியதுதான். திரும்ப வர 10 நாட்கள் ஆகுமே. தான் இல்லாத நேரத்தில் உள் நோயாளிகளை ஒழுங்காக கவனித்துக்கொள்ள்த் தகுந்த ஏற்பாடுகள் எல்லாம் முடித்துவிட்டுதானே கிளம்ப முடியும். மனதில் சொல்ல முடியாத அளவிற்கு அத்துனை உற்சாகம் இருந்தது.
எல்லாம் முடிந்து கிளம்பப்போகும் நேரம். ரிசப்ஷனிலிருந்து போன் கார்டியாலஜிஸ்ட் இன்பசேகரனிடமிருந்து. அவசரமாக பார்க்க வேண்டும் என்று. நேரம் ஆகிவிட்டபடியால் வந்து பேசுவதாகச் சொல்லியும் எதிர்முனையிலிருந்து மிகவும் கட்டாயப்படுத்தியதால், ஒரு ஆலோசனை மட்டும் வழங்கிவிட்டு கிளம்பி விடலாம் என்று முடிவெடுத்தது சரியா, தவ்றா தெரியவில்லை.
நேரம் செல்லச் செல்ல படபடப்பு அதிகமானது. இன்னும் 4 மணி நேரத்தில் கிளம்ப வேண்டுமே. சரியான நேரத்திற்கு சென்று விமான நிலையம் சேர வேண்டும் என்ற கவலை ஆரம்பித்தாலும், வருபவர் உச்சநீதிமன்ற நீதியரசர், அவருக்கு உரிய மரியாதை அளிக்கவேண்டும். அவருடைய இருதய நோய் பற்றிய ஆலோசனைக்காக வருவதாகத் தகவல் அளிக்கப்பட்டது.
உள்ளே நுழைந்த மனிதரைக் கண்டவுடன் தம்மையறியாமல் எழுந்து நின்று கும்பிட்ட மகேந்திரனின் கண்களில் தோன்றும் மின்னலைக் கண்ட நீதியரசர் பரமசிவத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் மகேந்திரனிடம் தெரிந்த அந்த தடுமாற்றம் சற்று வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவருடைய மெடிகல் ரிப்போர்ட்டை வாங்கி பொறுமையாக நோட்டம் விட்டவன், அடுத்து சில சோதனைகள் செய்தவுடன், இருதயத்தில் உள்ள பிரதான இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அவர் இருப்பதை உணர்ந்தான், சில மணித்துளிகள் யோசனையில் ஆழ்ந்தவன், தெளிவாக ஒரு முடிவுக்கு வந்தான், அவருக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை உடனே செய்ய முடிவெடுத்தவுடனே மளமளவென அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டனர், என்றாலும் செவிலியர்களுக்கும், உதவியாளர்களுக்கும். தம் வெளிநாட்டுப் பயணத்தை திடீரென்று இப்படி நிறுத்திவிட்டு இந்த அறுவை சிகிச்சையை தானே செய்ய வேண்டிய அவசியம் என்னவாக இருக்கும் என்று அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் மனைவியும், மகளும் எவ்வளவு ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் என்றும் புரிந்தாலும், அவர்களைப் போய் சமாதானம் செய்து கொள்ளலாம் என்றே தோன்றியது.
இரவெல்லாம் கண் விழித்து பரமசிவம் ஐயாவிற்கு மருத்துவம் பார்த்ததில் அசதி ஒரு புறமும், உலக சுகாதார மையத்தில் ஆய்வறிக்கையை வெளியிடும் தன்னுடைய பத்தாண்டுக் கனவு நிறைவேறாமல் போன வேதனை ஒரு புறமும், மகளையும், மனைவியையும் ஏமாற்றி விட்டோமே என்ற வருத்தம் ஒரு புறமும் வாட்டி எடுத்தாலும் தனக்கு உயிர் கொடுத்த அந்த உத்தமரை காப்பாற்றிய முழுமையான மன நிறைவு அவையனைத்தையும் புறம் தள்ளிவிட்டது.
வீட்டில் நுழையுமுன்பே அப்பா என்று ஆசையாக ஓடி வந்து கட்டிக்கொள்ளும் அன்பு மகள் இன்று கோபமாக முறைத்துக் கொண்டு நிற்பதையும், தம்முடைய வாழ்நாள் இலட்சியத்தையே தியாகம் செய்யும் அள்விற்கு அப்படி என்ன முக்கியத்துவம் அவருக்கு, வேறு எந்த மருத்துவரையாவது வைத்து அறுவை சிகிச்சை செய்திருக்க்லாமே , ஏன் இப்படி கிடைத்ததொரு அரிய வாய்ப்பை இழக்க வேண்டும் என்று பல நூறு கேள்விகள் முடிச்சுகளாக அவள் முகத்தில் வெளிப்பட, எதற்கும் பதில் சொல்லும் நிலையில் அப்போது தான் இல்லை என்பதால் மௌனமாகவே நேரே குளியலறை நோக்கிச் சென்றவன் ஷவ்ரின் அடியில் நேரம் போவதே தெரியாமல் பழைய நினைவுகளுடன் கரைந்துபோய் நின்றிருந்தான்.. திடீரென ஒலித்த தொலைபேசி மணியோசை தம்மை நினைவுலகிற்கு இட்டுச் செல்ல ,தண்ணீரை நிறுத்திவிட்டு, உடையணிந்து, பூத்துவாலையால் தலையை துவட்டியபடியே வெளியில் வந்தவன் பூஜை அறையில் சில நொடிகள் நின்று சாமி கும்பிட்டுவிட்டு, மேசையின் மீது மனைவி வைத்திருந்த காபியை அதே மௌனத்துடன் பருகிவிட்டு படுக்கையறைக்குச் சென்று படுத்துவிட்டான். வரும் போதே நர்சிடம் தான் மதியத்திற்குப் பிறகுதான் வரமுடியும் என்பதையும், டியூட்டி டாக்டரை பரமசிவம் ஐயா அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டுத்தான் வந்தான். ஏதேனும் அவசரம் என்றால் உடனே போன் வந்துவிடும், வீடும் அருகிலேயே இருப்பதால் சீக்கிரமே சென்றுவிடலாம் என்று போய் படுக்கையில் சாய்ந்தான். ஆனாலும் தன் வாழ்க்கையின் மறந்து போன பழைய நினைவுகள் துரத்திக் கொண்டிருக்க தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்த கணவனை நெருங்கினாள், மலர்விழி.
கணவனுடன் வாழ்ந்த இந்த 12 வருட வாழ்க்கையில், இதுவரை பார்த்திராத முகம் இது. அருகில் சென்று அமர்ந்தவள் மெல்ல தலைகோதி, “என்னப்பா.. ஏதும் பிரச்சனையா.. இதுவரை இப்படி உங்களை நான் பார்த்ததேயில்லையே….என்னாச்சுப்பா” என்றாள் மென்மையாக.
திடீரென மகேந்திரனுக்கு ஏனோ இளம் வயதிலேயே தம்மை விட்டுச்சென்ற தாயின் நினைவு வந்தது. மெல்ல நகர்ந்து மலர்விழியின் மடிமீது தலை வைத்தவன், நிமிர்ந்து படுத்து அவள் கண்களை உற்று நோக்கினான்.
“நான் பலமுறை என் கடந்த காலம் பற்றி முழுசா சொல்ல நினைச்சும், என்னை நீ காதலிச்ச காலத்திலிருந்தே அதை நீ கேட்கத் தயாரா இல்ல.. உனக்கு என்மேல அத்தனை நம்பிக்கையாடா குட்டிம்மா…..?”
“அடடா, என்ன ஆச்சு ஐயாவுக்கு இன்னைக்கு.. சரி இப்ப சொல்லுங்க கேக்கறேன். உங்க மனசுல இருக்கற பாரமாவது குறையட்டும்”
“நான் பிறந்ததே ஒரு விபத்துன்னு அப்பா அடிக்கடி சொல்லி வெறுப்பேத்தியே என் இளமைக்காலம் வீணாச்சு. அம்மா இருந்த வரைக்கும் அன்புக்கும், வயித்துக்கும் பஞ்சமில்லாமத்தான் இருந்தது. ஆனா அந்த ஆண்டவனுக்கு அதுவும் பொறுக்கல. உயிருக்குயிரான என் அம்மாவை நோய் கொண்டுபோக விட்டுப்போட்டு , என் அப்பா தான் விரும்பிய வாழ்க்கையைத் தேடி போயாச்சு. அப்பவே என் உயிர் போயிருக்கணும்… எந்த தைரியத்துல வாழத் துடிச்சேன்னு எனக்கேத் தெரியல, மலர்” என்றவன் நினைவு எங்கோ போனது. கண்களில் தாரை, தாரையாகக் கண்ணீர் வடிந்தது.
மனம் பதைத்த மலர்விழி, அவனை அந்த இறுக்கமான சூழலிலிருந்து வெளியே கொண்டுவர நினைத்தவள், மெல்ல அவன் அதரங்களைப் பொத்தி, கண்ணீரையும் துடைத்து,
“சரி, சரி, இன்னும் நீங்க சாப்பிடவேயில்ல இல்லையா. எழுந்து வாங்க டிபன் சாப்பிட்டுட்டு பேசலாம்” என்று எழுந்திருக்க எத்தனித்தாள்.
ஆனால் அவன் எழுந்திருக்க விடாமல், அவள் இடுப்பை அணைத்துக் கொண்டவன், “இருடா.. என்னை இன்னைக்காவது முழுசா பேசவிடு.” என்று சொன்னதில் இருந்த அழுத்தம் அவளை அங்கேயே கட்டிப்போட்டு வைத்ததோடு அவன் சொன்ன விசயம் அவளுக்கு ஆச்சரியமும், வேதனையும் சேர்த்து தம் கணவன் மீது இருந்த பாசம் பன்மடங்கு பெருகியது.
தாய் இறந்த மூன்றாம் நாள், சொற்ப உறவுகளும் ஒரேயடியாக விலகிப்போக, தந்தையின் கோர முகம் தன்னை மிகவும் பயமுறுத்த செய்வதறியாது திகைத்த நேரத்தில் தன் தந்தையிடமிருந்து அப்படி ஒரு குண்டு விழும் என்று நினைக்கவில்லை அவன். தாம் ஊரை விட்டே போகப் போவதாகவும், ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளும்படியும் சொல்லி, கையில் 100 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு போன மனிதரை இன்றுவரை பார்க்கவில்லை. 100 ரூபாய் சில நாட்களிலேயே கரைந்து போக அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று புரியாத நிலையில் ஒரு சாப்பாட்டு விடுதியில் வேலை செய்து வயிறு வளர்த்துக் கொண்டு அங்கேயே ஸ்டோர் ரூமிலேயே ஒரு மூலையில் தங்கிக்கொள்ள ஆரம்பித்தாலும், படிப்பின் மீது கொண்ட ஆர்வம் மட்டும் வெறியாக மாறிப்போனது. டாக்டராக வேண்டும் என்ற தம்முடைய கனவு பலிக்காமலே போய்விடுமோ என்று வேதனையில் மனம் துடித்தது. 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவன் வாழ்க்கையில் இப்படி ஒரு புயல் வீசும் என்று நினைத்தவனில்லை.
பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் புத்தகமும், நோட்டும் வாங்க வேண்டுமே என்று, முதலாளியிடம் எவ்வளவோ கெஞ்சியும், அவர் மனம் இறங்கவில்லை. கூட வேலை பார்க்கும் பையனின் தவறான வழிகாட்டுதலால் அன்று அவன் செய்த தவறுதான் அவனுடைய வாழ்க்கைக்கே திருப்புமுனையாக அமைந்தது.
’உன் நண்பன் யாரென்று சொல்.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பார்கள். நண்பனின் படிப்பு தாகத்தைப் பார்த்து வேதனைப்பட்டவன் முதலாளியின் கல்லாவில் கைவைக்க திட்டம் போட்டுக் கொடுத்தான். முதலில் அச்சம் இருந்தாலும் படிப்பின் மீது இருந்த ஆசை அத்னை வென்றுவிட்டது. கல்லா நிறைந்திருக்கும் சமயம் பார்த்து காத்திருந்தான். அன்று வங்கி விடுமுறையானதால் முதலாளி பணத்தை கல்லாவிலேயே வைத்துவிட்டு சாப்பிடப் போயிருந்தது, அதுவும் சாவியையும் மறந்து வைத்துவிட்டுப் போனது அவனுக்கு வசதியாய் ஆனது. இதுதான் சமயம் என்று மகேந்திரன் கல்லாவைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் சாவியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டான்.
திருடுவது அதுதான் முதல் முறை என்பதாலும், இயல்பாகவே, ஒழுக்கமானவன் என்பதாலும், மடியில் இருந்த கனம் முகத்தில் வியர்வை வெள்ளமாகக் கொட்டியது. நண்பன் எவ்வளவோ சொல்லியும் அச்சம் நீங்காதவனாகவே இருந்தான். முதலாளி வந்து பணம் மொத்தமும் காணாமல் வெகு எளிதாக ஒன்றும், ஒன்றும் இரண்டு என்பது போல பணத்தேவையில் இருந்ததையும், முகத்தில் தெரிந்த அச்சத்தையும் வைத்து மகேந்திரன் தான் திருடியிருக்க வேண்டும் என்று கண்டுபிடித்துவிட்டார். அடுத்து நடந்ததெல்லாம் அவனுடைய வேதனையின் உச்சம்.
சினிமாவில் மட்டுமே காவல் நிலையத்தைக் கண்டிருந்த சிறுவனவன் பாவம் அச்சத்தால் உறைந்தே போனான். இனி உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்து, அங்கே கீழே கிடந்த துண்டு பிளேடு ஒன்றின் மூலம், மணிக்கட்டு நரமபை அறுத்துக் கொண்டு இரத்த வெள்ளத்தில் மயங்கிப் போனான்.
மருத்துவமனையில் சேர்த்துவிட்டு டாக்டருக்குப் போன் செய்த காவல்துறை அதிகாரி, அவர் அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் கோல்ஃப் கிளப்பில் தம் ஆத்ம நண்பர் மேஜிஸ்டிரேட் பரமசிவத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார். இன்ஸ்பெகடர் பேசியதைக் கேட்ட டாக்டர், தம் நண்பரிடம் விசயத்தைச் சொல்லிவிட்டு கிளம்பினார். ஏனோ பரமசிவத்திற்கு, அந்தப் பையனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட தானும் டாகடருடனே மருத்துவமனை சென்றார்.
மகேந்திரன் படுக்கையில் துவண்டு கிடப்பதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவனருகில் சென்று, “எதுக்குடா இந்த வயசுல உனக்கு இந்த திருட்டுப் புத்தி? இனி காலம் பூரா திருடன்கிற பட்டத்தோட என்ன செய்யிறதா உத்தேசம்?” என்று அதட்டலாக கேட்டார் மாஜிஸ்டிரேட்.
உடனே ஓவென்று கதறியவன் கையில் இருந்த சலைன் பாட்டிலையும் கண்டு கொள்ளாமல் எழுந்திருக்க முயன்றான். அவனை எழவிடாமல் தடுத்துவிட்டு, “சொல்லு இப்ப, ஏன் அப்படி பண்ணினே. செய்யிறதையும் செஞ்சுப்புட்டு தற்கொலை முயற்சி வேற செய்து பாவ்லா காட்டறயா? உன்னை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலதான் போடுவாங்க தெரியுமில்ல..?” என்றார்.
உடனே அவன், “சார், ஐயோ வேண்டாம் சார். படிக்கணும்ங்கற ஆசையிலதான் அப்படி பண்ணிட்டேன் சார். மன்னிச்சிடுங்க சார். இனிமே அப்படி பண்ணவே மாட்டேன்” என்று கதறினான்.
அவனுடைய கதறலில் கொஞ்சம் உண்மை இருப்பதாகப்படவும், சற்றே யோசித்து, அவனிடம் பேச்சுக் கொடுத்து அவனைப் பற்றி விசாரித்தார். அவன் தன்னைப் பற்றி சொன்னதில் ஏதும் பொய் இல்லை என்பதை கள்ளத்தனம் அற்ற அவன் கண்கள் சொல்லியது. .தன் அனுபவத்தினால் அவரால் அதை உணரவும் முடிந்தது.
காவல்துறை அதிகாரியையும், தம் டாக்டர் நண்பனையும் தனியே அழைத்துப் போய் பேசினார். முதலில் அவர் கேட்ட கேள்வி, எஃப்.ஐ.ஆர் போட்டாச்சா என்பதுதான். நல்ல வேளையாக இந்த்ப் பையன் செய்த கலாட்டாவில் இன்னும் எஃப்.ஐ.ஆர் போடாமல் இருந்ததுதான் அவனுக்கு சாதகமாக ஆனது. ஏனோ அந்தப் பையன் மீது அவருக்கு ஒரு பரிவும், நம்பிக்கையும் வந்தது. அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க வேண்டும் என்றும் தோன்றியது. காலங்கள் இது போலத்தான் சில நேரங்களில் எதிர்பார்க்காத மாற்றங்களையும், அட்சதையையும், அள்ளித் தூவிவிடும்.
அந்த நீதிபதி அன்று அவன் மீது முழுவதுமான நம்பிக்கை வைத்து எடுத்த திடமான முடிவுதான் இன்று அவனை சமுதாயத்தில் ஒரு தலை சிறந்த மருத்துவராக உருவாக்கியுள்ளது. ஆம், அவர், இன்ஸ்பெக்டரிடம் சொல்லி ஓட்டல் முதலாளியை வரவழைத்து அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கச் செய்து கேசை வாபஸ் வாங்கச் செய்தார். ஆனால் இவர்கள் பேசிய பேச்சு அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட அந்த முதலாளி தன் பங்கிற்கு தானும் அந்தப் பையனுக்கு படிக்க உதவி செய்வதற்காக அந்தப் பணத்தை அவனுக்கேக் கொடுப்பதாகச் சொன்னார். அவனை ஒரு கிறித்துவ ஆசிரமத்தில் சேர்த்து, இலவசமாக கல்வி கற்கவும் ஏற்பாடு செய்தார். அவன் பள்ளியிறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் மருத்துவப் படிப்பில், கட்டணம் இல்லாமல் படிப்பதற்கான ஃபிரீ சீட்டும் கிடைத்தது. , படித்து முடிக்கும் வரை மற்ற செலவுகளுக்கும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து உதவி செய்துக் கொண்டிருந்தார்கள். மாலையில் சின்னச் சின்ன வேலைகளும், குழந்தைகளுக்கு, டியூசன் சொல்லிக் கொடுத்தும் சம்பாதித்து தம் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டான். பாதிரியாரின் ஆலோசனைப்படி, தம்மை உண்மையாக நேசித்த ஆசிரமத்தில் வளர்ந்த ஒரு பெண்ணையே திருமணமும் செய்து கொண்டு இன்று அழகான ஒரு பெண் குழந்தையுடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். இடையில் இவர்களின் தொடர்பு விட்டுப்போனது. டாக்டர் வெளிநாடு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டான். நீதிபதியும் மாற்றலாகி சென்றுவிட்டதால் தொடர்பு விட்டுப்போனது. தன்னை ஏற்றிவிட்ட ஏணியை பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கண்டவுடன் இன்ப அதிர்ச்சியில் நா எழவில்லை அவனுக்கு.
அடுத்த நாள் தம் மனைவியையும், மகளையும் உடன் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றவன், பரமசிவம் ஐயாவின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கியதோடு தம் மனைவி மற்றும் மகளையும் விழுந்து வணங்கச் செய்தான். ஒன்றும் புரியாமல் விழித்த அந்த தன்னலமற்ற சேவையின் நாயகன், நீதியரசர் பரமசிவம், “என்ன சார் இது. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எனக்காக, என் உயிரைக் காப்பதற்காக உங்களுடைய பல்லாண்டு கனவைக்கூட துறந்துவிட்டு என்னை காப்பாற்றியிருக்கிறீகள் என்று கேள்விப்பட்டேன். இப்படி குடும்பத்தோடு வந்து என் காலில் விழறீங்களே.. நான் என்ன சொல்றது?” என்றார் பரபரப்பாக.
“ஐயா, என்னை யாருன்னு தெரியலையா. நான் யாருன்னு தெரிஞ்சா இப்படி பேச மாட்டீங்க.. நான் தான் உங்க மகேந்திரன் என் வாழ்க்கையில விளக்கேத்தி வச்ச தெய்வம் நீங்கதானே.. 20 வருசத்துக்கு முன்னால உங்க முன்னாடி ஒரு தப்பானவனா நின்ன அதே மகேந்திரன் தான் ஐயா. அன்று மட்டும் நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னைக் காப்பாற்றியிருக்காவிட்டால் இந்நேரம் என் நிலை எப்படியிருந்திருக்கும் என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை .” என்றான்.
மெல்ல, மெல்ல பழைய கதை நினைவிற்கு வர, “அட, அந்த மகேந்திரனா நீ.. ரொம்ப சந்தோஷம்ப்பா.. “ என்றார் கண்கள் பணிக்க, அவனைக் கட்டிக்கொண்டு!
- கருணையினால் அல்ல…..!
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1
- கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்
- கேள்விகளின் வாழ்க்கை
- இடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42
- மொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்
- அஸ்லமின் “ பாகன் “
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு
- உறு மீன் வரும்வரை…..
- 2016 ஒபாமாவின் அமெரிக்கா
- தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்
- மிஷ்கினின் “ முகமூடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27
- இந்த நேரத்தில்——
- Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்
- முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)
- சத்யானந்தன் மடல்
- தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.
- (99) – நினைவுகளின் சுவட்டில்
- திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு
- காலம்….!
- கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!
- இஸ்லாமிய பெண்ணியம்
- 35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.
- ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!
- கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற
- Bharathiar-Bharathidasan Festival 2012,Singapore