2016 ஒபாமாவின் அமெரிக்கா

This entry is part 11 of 28 in the series 9 செப்டம்பர் 2012
சித்ரா சிவகுமார்
ஹாங்காங்
நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில், அமெரிக்க திரைப்பட ரசிகர்களைப் புயலெனத் தாக்கியுள்ளது ‘2016 ஒபாமாவின் அமெரிக்கா’ என்ற ஆவணத்திரைப்படம். ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்..  அமெரிக்கா எப்படி இருக்கும்? என்பது தான் இந்த ஆவணப்படத்தின் முக்கிய கரு.
2010இல் வெளியான “ஒபாமாவின் பெருங்கோபத்திற்கான ஆணிவேர்” (ரூட்ஸ் ஆப் ஒபாமாஸ் ரேஜ்) ஒபாமாவைப் பற்றிய பல விவரங்களைத் தந்தது.  இதை அமெரிக்காவில் 17 வயதில் குடியேறிய இந்திய அமெரிக்கரான தினேஷ் டி’சோசா எழுதி வெளியிட்டார்.  அவர் ரோனால்ட் ரீகன் பதவிக்காலத்தில் அவருக்குக் கொள்கை ஆலோசகராகப் பணியாற்றியவர்.  வெள்ளை மாளிகையை நன்கு அறிந்தவர். பல  அதிபர்களை அறிந்தவர்.  ஜூராசிக் பார்க், ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் போன்ற சிறந்தப் படங்களைத் தயாரித்த ஹாலிவுட் புகழ் ஜெரால்ட் மோலன் இந்தப் படத்தை தினேஷ் அவர்களுடன் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.
ஜூலை 13, முதல் நாள் மிகச் சில திரையரங்குகளில் வெளியான இப்படம், இன்று 2500 திரையரங்குகளில், நிரம்பிய அரங்கத்தில் பிய்த்துக் கொண்டு ஓடுகிறதாம். தினேஷ் அவர்கள் பல தொலைக்காட்சிகளில் நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
ஆவணப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது?
“விரும்புகிறீர்களோ, வெறுக்குறீர்களோ, அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாது” என்று சுவரொட்டிகளில் விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கும் இப்படத்தில், ஒபாமாவின் கொள்கைகளை விலாவாரியாக எடுத்து விளம்புகிறது இந்தப் படம்.
அமெரிக்கா, அடுத்த நான்கு வருடங்கள் ஒபாமாவின் கைகளில் இருந்தால், உலக வல்லரசு என்ற இடத்திலிருந்து, உலக நாடுகளில் ஒன்றாக இருக்கும்.  கடந்த நான்கு வருடங்களில் 40 சதவீதம் குறைந்துள்ள அமெரிக்காவின் சேமிப்பு நிதி, அதே ரீதியில் குறைந்தால் அடுத்த நான்கு வருடங்களில், கடந்த எட்டு ஆண்டுகளில் 66 சதவீதம் குறையும் வாய்ப்பு உள்ளது என்று எடுத்துக் கூறுகிறார் தினேஷ்.
ஒபாமாவின் உறவினர்களை, நண்பர்களை, அவரை அறிந்தவர்களைச் சென்று சந்தித்து, அவற்றைப் படமாக்கி, அவரது கொள்கைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது இந்தப்படம்.  என்னால் படத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், சிறு சிறு துண்டுகளாக வந்திருக்கும் செய்திப் படங்களையும், படத்தைப் பற்றிய விமர்சனங்களையும், தினேஷ் அவர்கள் கொடுத்துள்ள நேர்காணல்களையும் கண்டு, படத்தைப் பற்றிய பல விஷயங்களை நான் புரிந்து கொண்டேன்.  அதை நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலில் தான் இந்தச் சிறு கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.
வெள்ளை மாளிகையில் நட்பின் அடையாளமாக ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துப் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்சில் அவர்களின் நெஞ்சளவு உருவச் சிலை ஒன்றை முந்தைய அதிபருக்குப் பரிசாகக் கொடுத்திருந்தார்கள்.  ஒபாமா பதவிக்கு வந்து வெள்ளை மாளிகைக்குள் வந்ததுமே, அந்த உருவச்சிலையை அகற்ற முடிவு செய்தார்.  அதை அருங்காட்சியகத்திற்கு கொடுத்திருக்கலாம்.  ஆனால் அப்படிச் செய்யாமல், பரிசாகக் கொடுத்த ஆங்கிலேயர்களிடமே இதைத் திருப்பிக் கொடுத்தாராம் ஒபாமா.  இதை அறிந்த போது, தினேஷ் அவர்களுக்கு ஒபாமாவின் இந்தச் செய்கை மிகவும் வித்தியாசமாகப் பட்டது.  அமெரிக்க மக்கள் முற்றிலும் அறிந்திராத ஒபாமாவைப் பற்றி அறியும் ஆவல் ஏற்பட்டதன் விளைவே, அவரைப் பற்றி பல்வேறு கோணங்களில் செய்திகளைச் சேகரிக்கும் எண்ணம் ஏற்பட்டதாம்.  கிடைத்தச் செய்திகளை புத்தகமாக வெளியிட்டார். இப்போது இதையே ஆவணப்படமாகவும் ஆக்கியுள்ளார்.
வின்சென்ட் சர்சிலை ஏன் பிடிக்கவில்லை?
ஒபாமா காலனி ஆதிக்கத்திற்கு எதிரானவர் என்பதே காரணம் என்று சொல்கிறார் தினேஷ்.
ஒபாமாவின் தந்தை, ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்த கென்யாவில் வாழ்ந்தவர்.  கென்ய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்.  அப்போது இங்கிலாந்துப் பிரதமராக இருந்தவர் சர்சில்.  அதன் காரணமாகத் தான் சர்சிலை வெறுத்தார் ஒபாமா என்கிறார் தினேஷ்.  ஒபாமாவின் தந்தை கொண்டிருந்த மக்கள் உரிமைக் கொள்கையை முழுமையாக பின்பற்றி, தந்தையின் கனவை நனவாக்கி வருகிறார் என்பது தினேஷின் கூற்று.  டிரிம்ஸ் ஃப்ரம் மை பாதர், தந்தையிடமிருந்த கனவு என்ற தன் சுயசரிதைப் புத்தகத்தில் ஒபாமா, தந்தையின் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக எழுதியிருப்பது இதற்குச் சான்று என்று காட்டுகிறார் தினேஷ்.
மக்களை மயக்கக் கூடிய முகமூடியை அணிந்து கொண்டு, தன்னுடைய கொள்கைகளை, தன் தந்தை கொண்டிருந்த கொள்கைகளை செவ்வனே ஒபாமா நிறைவேற்றுவதை, இதில் தெளிவாக்கியுள்ளார்கள் படத் தயாரிப்பாளர்கள்.
லிபிய அதிபர் முகம்மது கடாபி, எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் இருவரையும் பதவியிலிருந்து நீக்க உதவிய அதிபர் ஒபாமா, ஏன் இரானிலும் சிரியாவிலும் நடந்த கலவரங்களை ஒடுக்க முற்படவில்லை?  நண்பர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்பு கொண்ட முதல் இருவரை அழிக்க உதவிய போதும், கடும் எதிரிகளான மற்ற இருவரை ஒடுக்க முயலாத காரணம், காலனி ஆதிக்கம் செய்யத் தயாராக இல்லை என்பதால் தான் என்று குறிப்பிடுகிறார் தினேஷ். ஒபாமா அமெரிக்காவை 1500களில் இருந்தது போன்று, வல்லரசுகளே இல்லாத உலகை உருவாக்க நோக்கம் கொண்டிருக்கிறார் என்று காட்டுகிறது படம்.
சகோதரத்துவத்தை நிலைநிறுத்துங்கள், சகோதரனுக்கு உதவுங்கள் என்று சொல்லிக் கொண்டு, மக்களுக்குத் தேவையாக சீர்திருத்தங்களை நிறைவேற்றும் ஒபாமா, ஒபாமாவின் தந்தைக்கும் மாற்றுத் தாய்க்கும் பிறந்த ஜார்ஜ் ஒபாமா 6க்கு 10 அடி கொண்ட குடிசையில், கென்யாவில் குப்பத்தில் வாழும் சகோதரனுக்கு ஏன் உதவவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறார்.  எந்தத் தலைவரை எடுத்துக் கொண்டாலும், உறவினர்களுக்கு உதவாமல் இருந்தால், சர்ச்சைகள் எழத்தானே செய்கிறது. உறவுகளுக்கு மட்டுமே உதவும் தலைவர்கள் மத்தியில், ஒபாமா கென்யாவில் குப்பத்தில் வாழும் தன் சகோதரனுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பதை பிபிசி தொலைக்காட்சியில் காண நேர்ந்து, அவரை நேரடியாகவே சென்று சந்தித்து, விவரங்களைக் கேட்டு படமாக்கியிருக்கிறார் தினேஷ்.  அதில் சில நல்ல கருத்துக்களையும் அறிய முடிகிறது.  உலகத்திற்கு நல்லது செய்யும் ஒபாமா, எனக்கும் நல்லது தானே செய்கிறார் என்று சொல்லும் ஜார்ஜ், தன்னைப் பார்த்துக் கொள்ள தனக்குத் தெரியும் என்கிறார்.
கென்யா விடுதலை பெற்ற போது சம நிலையில் இருந்த சிங்கப்பூரும் மலேசியாவும், இன்று எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது. கென்யா ஏன் இன்னும் பின்னடைந்திருக்கிறது என்பது பற்றி இவரது நூலில் எழுதியிருந்த கருத்தைப் பற்றி கேட்கும் தினேஷ_க்கு, ஜார்ஜ், கென்ய மக்கள் எதற்கு என்று தெரியாமலேயே சண்டைகளைச் செய்து கொண்டு முன்னேறாமல் இருக்கிறார்கள். ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் தென் ஆப்பிரிக்கா எவ்வளவு முன்னேறியிருக்கிறது.  தென் கொரியா எங்கிருந்து எங்கு வளர்ந்திருக்கிறது.  இதற்குக் காரணம் மக்களேயன்றி யாரையும் குறை சொல்லக் கூடாது என்று சொல்லும் ஜார்ஜின் கூற்று முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்று.
ஹவாயில் பிறந்து, இந்தோனேஷியாவில் நான்கு வருடங்கள் வாழ்ந்து, பாகிஸ்தானுக்கும் கென்யாவிற்கும் பலமுறை சென்று வந்து, இறுதியில் 17வது வயதில் அமெரிக்க மண்ணில் கால் பதித்து, நின்று நிமிர்ந்து, இன்று உயர்ந்து நிற்கும் அதிபர் ஒபாமா, அமெரிக்காவை மற்ற நாடுகளுக்கு ஒப்பாக கொண்டு வர வேண்டும் என்ற விருப்பம் கொண்டு செயல்படுகிறார்.
கடலிலே செல்லும் கப்பல், ஒரு பக்கம் ஏற்றத்துடனும் மற்றொரு பக்கம் இறக்கத்துடனும் இருந்தால் எப்படி பிரயாணம் சுகப்படாதோ, அது போன்றே அமெரிக்கா ஐரோப்பா போன்ற பணக்கார நாடுகள் ஏற்றத்துடனும் மற்ற அனைத்து நாடுகளும் ஏழை நாடுகளாக இறக்கத்தில் இருப்பது உலகத்திற்கு நலனைக் கொடுக்காது என்பதால், ஏற்றத்தைக் குறைக்கவும், இறக்கத்தை ஏற்றவும் பாடுபடுகிறார் ஒபாமா என்று தினேஷ் கூறும் உவமை, கேட்க இனிமையாக இருக்கிறது. அது எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை இன்னும் சில காலம் பொறுத்துத் தான் அறிந்து கொள்ள முடியும்.  அதற்கு ஒபாமா பதவியில் மீண்டும் அமர்வாரா என்றும் பார்க்க வேண்டும்.
Series Navigationஉறு மீன் வரும்வரை…..தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *