மொழிவது சுகம் 22:. இருவேறு மனிதர்கள் இருவேறு உலகம்

This entry is part 8 of 41 in the series 23 செப்டம்பர் 2012

                                                            – நாகரத்தினம் கிருஷ்ணா

 

 

1. உ.வே.சா

“தம்மின் தம்மக்கள் அறிவுடமையை” மருந்தாளுனர் பையன் மருத்துவர்; தாலுக்கா அலுவலக ஊழியர் மகன்  மாவட்ட ஆட்சியர்; எனப் பொருள்கொள்ளாமல் இரு வேறு காலத்தைச்சேர்ந்த ஒரு சமூகத்தின் சந்ததியினரை ஒப்பீடு செய்து பெருமிதம் கொள்ளுதல் என விளங்கிக்கொள்ளவேண்டும். .

 

தம்மின் தம்மக்கள் அறிவுடையவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் நமக்களித்த பாரம்பரிய ஞானத்தை பட்டைத்தீட்டி, அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.  தகவலை அனுப்புவது அல்லது பரப்புதல் என்பது உடனுக்குடன் நிகழ்வது. தகவலைக் குறைக்கவோ கூட்டவோ செய்யாமற் பெறுநரிடம் சேர்பிக்கவேண்டும். பெறுநர் சமகாலத்தவராக இருப்பார். மாறாக பாரம்பரிய அறிவை அடுத்தசந்ததியினருக்குக் கொண்டுபோக பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறே, தகவல் பரப்புகை அனுப்புநர் பெறுநர் என்ற இரண்டு மனிதர்களின் பங்களிப்பினால் நடைபெறுகிறது. ஆனால் பாரம்பர்ய ஞானத்தைக் கையளிக்க மூவர் தேவைப்படுகின்றனர். முன்னோர்கள் விட்டுச்சென்றதைச் செழுமைப்படுத்தி பின்வரும் சந்ததியினருக்கு அளிக்கவேண்டுமென்பது அதன் வாய்பாடு. ஒகுஸ்த் கோந்த்’ (Auguste Compte) என்ற பிரெஞ்சு தத்துவவாதி ‘இறந்தவர்கள் உயிருள்ளவர்களை ஆள்கிறார்கள்” என்கிறார். நம்முடைய மரபுகளும், சம்பிரதாயங்களும், அரசியல் சட்டங்களும் பிறவும் இன்று நம்மிடையே இல்லாத, மனிதர்களால் எழுதப்பட்டவை. நேற்றைய தலைமுறைக்கு, அன்றையக் காலக்கட்டத்தில் எது உகந்ததோ அதை வாய் மொழியாகவும், எழுதியும் வைத்தனர். மரபு, வழக்கு, பாரம்பரியப் பெருமைகள், மூத்தோர்வாக்கு என்ற பெயரில் நம்மோடு நமது வாழ்க்கையோடு கலந்தவை அவை. மூதாதையர் சொத்து எனச்சொல்லப்படுவது ஒரு சமூகத்தைபொருத்தவரையில் மேற்கண்டவைகள்தான். நமது கல்வி நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள், தொல் பொருள் இலாக்காக்கள், அருங்காட்சியகங்கள், இலக்கியங்கள், வரலாறுகள் ஆகியவை முன்னோர்கள் கையளித்த சொத்துகளுக்குண்டான ஆவணங்கள்.

 

மனிதர் வரலாற்றில் தொடக்கக்காலத்தில் ‘பாரம்பர்ய ஞானத்தை’ அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தார்மீகப்பொறுப்பு  ஒரு பக்கம் குருக்களிடமும், இன்னொருபக்கம் ஆட்சி, அதிகாரம் எனக் கோலோச்சியவர்களிடமும் இருந்தது:  மன்னர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்கள், நாட்டாமைகள், குடும்பத்தலைவர்கள்  அதனைச் செய்தார்கள். பின்னர் அப்பொறுப்பை மதங்களும் அவற்றின் பிரதிநிதிகளும் எடுத்துக்கொண்டனர். அக்காலங்களில் மரபுகளும் நெறிகளும் கடவுளின்பேரால் திருத்தி எழுதப்பட்டன. மேற்கத்திய நாடுகளில் தொழிற்புரட்சியும் அறிவியல் புரட்சியும் உள்ளேபுகுந்த பின் சமூகத்தின் மரபுகளையும் நெறிகளையும் சீர்தூக்கி எது சரி எது தப்பு என சொல்வதற்குண்டான அதிகாரத்தை ஜனநாயகத்தின் பேரால் மக்கள் எடுத்துக்கொண்டனர்..

 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிர்வாணமாக காட்டில் தனது தேவைபொருட்டு  ஒற்றையாக  அலைந்த நேற்றைய மனிதனின் இன்றைய பரிணாம வளர்ச்சியில் முன்னோர் கையளித்த அறிவுக்கும் அனுபவத்திற்கும் பெரும் பங்குண்டு. இத் தொடரோட்டத்தை நடத்துபவர்கள் யார்? கல்வியாளர்கள், அறிவாளிகளென்று மொக்கையாக பதில் சொல்லலாமா? வெறும் கல்விமட்டுமே இந்த மாயத்தை நிகழ்த்திடத்தான் முடியுமா? படிப்பு, படிப்பின் முடிவில் ஒரு பட்டம், பின்னர் வேலை என்றக் கல்வி சூத்திரத்தில் நெய்யப்பட்ட இவ்வுலகில்  ஒட்டுமொத்த மனிதகுலத்திற்காகவும் உழைப்பவர்கள் மிகவும் சொற்பம். இருந்தும் உ.வே சா. போல இரண்டொருவர் ‘பாரம்பர்ய ஞானத்தை’ அடுத்த தலைமுறைக்கு கையளிக்க பிடிவாதத்துடன் வண்டிபூட்டிக்கொண்டு அலையவே செய்கிறார்கள்.

 

ஒருநாளைக்கு 150 பறவைகளுக்கு 22 மனிதர்களுக்கு, பத்து விலங்குகளுக்கு  உதவிக்கொண்டிருக்கிறேனென எந்த மரமும் தினசரியில் அறிக்கை விடுவதில்லை. மானுடத்திற்குப் மடிபிச்சை அளித்தவனென்று துதிபாடிகளைக்கொண்டு தனக்குத்தானே விருது வழங்கிக்கொள்வதில்லை. காற்றைப்போல, ஒளியைப்போல தமது உயிர்வாழ்க்கையைப் பிறருக்கென்று அளித்து பிரபஞ்சத்தின் தொடரோட்டத்திற்கு தன் கடமையை ஆற்றிய நிறைவோடு மரம் தனது ஆயுளை ஒரு நாள் முடித்துக்கொள்கிறது. எதிர்காலத்தில் தமதில்லம் தமிழர்களால் இடிக்கப்படுமென்ற தீர்க்கதரிசனம் அவருக்கிருந்திருக்குமோ என்னவோ, ஆனால் தம்மின் தம்மக்கள் அறிவுடமைக்குறித்த கனவுகள் உ.வே.சா. விற்கு இருந்திருக்கலாம். ஆங்கில தினசரியில் இடிபடும் வீட்டைபார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. உ.வே.சா. தமிழ்ச்சமூகத்திற்கு ஆற்றிய பெரும்பணிக்கு நன்றிக்கடனாக நமக்கு எது சாத்தியமோ அதைச் செய்திருக்கிறோம்.

 

 

அப்துல் ஹக்கீம்

 

கேட்பவர்களிடம் வயது நினவிலில்லை,  தோராயமாக ஐம்பது அல்லது அறுபது வயதிருக்கலாம் என்கிறார், ஆப்கானிஸ்தானத்தின் காந்தகார் பிரதேசத்தில் அலைந்துகொண்டிருக்கும் இம்மனிதர். அவரது தொழில் ஆபத்தான இடங்களில் கிடக்கிற மனித உடல்களை மீட்டெடுத்தல். பிணங்கள் தலிபான்களாகவும் இருக்கலாம், மேற்கத்தியர்கள் அல்லது அமெரிக்கர்களாகவும் இருக்கலாம். மேற்கத்திய வீரர்களின் உடல் தலிபான்களின் கட்டுபாட்டிலுள்ளதென நம்ப்பப்படும் வெளிகளில் விழுந்தாலோ அல்லது தலிபான்கள் உடல் மேற்கத்தியர்கள் கட்டுபாட்டிலுள்ள பிரதேசங்களில் விழுந்திருந்தாலோ உடையவர்களிடம் கொண்டு சேர்க்கிற பொறுப்பை ஹக்கீம் செய்கிறார்.

 

‘யாராக இருந்தாலும் செத்தபின் அவர்களுக்குரிய இறுதிச்சடங்கை ஒழுங்காக நடத்தவேண்டுமில்லையா? அதுவன்றி அல்லாவின் கீர்த்திக்காகவும், எங்கள் நாட்டிற்காகவும் ஏதோ என்னால் முடிந்தது, ” என்கிறார்.

 

இத்தொண்டுப்பணியில் முதன்முதலாக அவர் ஆர்வம் காட்ட நேர்ந்தது 2005. செஞ்சிலுவைச் சங்கத்திற்காக இதனைச் செய்திருக்கிறார். ஒரு நாள் மாலை தலிபான்கள் இவரைச் சந்தித்தனர். அமெரிக்கர்களுக்கும் தலிபான்களுக்குமிடையேயான யுத்தமொன்றில் கொல்லப்பட்ட அவர்கள் தலைவனின் உடல் தேவைப்பட்டிருக்கிறது. செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றுவதால் அவரால் முடியும் என்றிருக்கிறார்கள். அவர்கள் கூறியதைப்போலவே தலிபான் தலைவனின் உடலை அவர்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். அதற்கு அடுத்த சில தினங்களில் காந்தகார் காவற்துறை தலைவர் அவரை அழைத்திருக்கிறார். தலிபான்களுடனான யுத்தத்தில் தங்களுடைய ஐந்து வீரர்கள் மாண்டடிருப்பதாகவும் அவர்கள் உடல்களை எப்பாடுபட்டாகினும் கொண்டுவரமுடியுமா எனக்கேட்டிருக்கிறார். சாக்ரி மாவட்டத்திலிருந்த அந்த இடம் மிகவும் ஆபத்தான இடம். எனினும் தலிபான் தலைவரைச் சந்தித்து நிலமையை எடுத்துக்கூறி திரும்பும்போது ஐந்து வீரர்களின் பிணத்தோடு வந்திருக்கிறார்.

 

அதற்கடுத்த கிழமைகளில் ஹக்கீம்  பெயர் ஆப்கானில் பிரசித்தமாகிறது. தலிபான்களுக்காக மேற்கத்திய தரப்பிலும், மேற்கத்தியர்களுக்காக தலிபான்களிடமும் தூதுசென்று பல பிணங்கள் முறைப்படி அடக்கம்செய்ய அல்லது மேற்கத்திய நாடுகள் தங்கள் நாடுகளுக்கு அப்பிணங்களை அனுப்பிவைக்க ஹக்கீம் காரணமாகியிருக்கிறார். சில நேரங்களில் தலிபான்களின் தற்கொலை படையினர் வெடித்துச் சிதறியிருப்பார்கள். அவர்கள் அங்கங்களை பொறுக்கியெடுத்து உடையவர்களிடம் சேர்க்கவும் ஹக்கீம் தயங்கியதில்லை. ஹக்கீம் பலமுறை குண்டுமழையிலிருந்து தப்பியிருக்கிறாராம். மூன்று கனடா நாட்டு வீரர்களின் பிணங்களை மீட்க கண்ணிவெடி புதைத்திருந்த பகுதிக்குள் செல்லவேண்டியிருந்தது. தலிபான்கள் புண்ணியத்தில் ஆபத்தில்லாமல் மீண்டிருக்கிறார். இப்பணியில் தொடர்ந்து இயங்கப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு ஹக்கீம், “இளம் வயதில் ரஷ்யர்கள் நடத்திய தாக்குதலில் என் தந்தையையும், சகோதரரையும் இழந்துவிட எங்களின மக்களுக்குத் தலைவனாகப் பொறுப்பேற்க வேண்டியிருந்த அப்போதே பிறருக்கென என் வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றதோடு, நான் இதைசெய்யாமற்போனால் இங்கே வேறு யார் அதனைசெய்ய முன்வருவார்கள்? ஒருவரும் வரமாட்டார்கள்”, என்றாராம்.

 

இவருக்கு மேற்கத்தியர்களின் கட்டுபாடிலுள்ள நிலப்பகுதில் சுதந்திரமாக வலம் வர பிரத்தியேக அனுமதிப்பத்திரம் வழங்கியிருக்கிறார்கள். தலிபான்களும் இவர் நம்மில் ஒருவர் அவருக்கு எவ்வித ஆபத்தும் நேராமால் பாதுகாப்பது நமது கடமையென கூறியிருக்கிறார்களாம்.  இந்த ஹக்கீமுக்கு போனவருடம் சோதனைக்காலம். தலிபான்களின் தாக்குதலால் மாண்ட இரு ஆப்கானியர் உடலை மீட்கசென்றபோதுதான் இறந்திருப்பவர்கள் அவர் பிள்ளைகளென்று தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து இப்பணியிலிருக்க விருப்பமா என்க்கேட்டபோது அவர் கூறிய பதில் யுத்தம் என்றைக்கு முடிகிறதோ அன்றைக்குத்தான் நிறுத்துவேன்.

 

Merci à L’Express, France

—————————-

 

 

 

 

 

 

 

 

Series Navigationமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -44 (முற்றும்)இரட்டுற மொழிதல்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *