அ.குணசேகரனின் ‘இல்லாமல் இருத்தல்’-ஓர் அழகிய மக்கள் இலக்கியப் படைப்பு

author
1
0 minutes, 2 seconds Read
This entry is part 16 of 41 in the series 23 செப்டம்பர் 2012

மணி.கணேசன்

தமிழ்ச் சமூகம் தொன்றுதொட்டு வாழும் ஒரு கதைச்சொல்லிச் சமூகமாகும்.தம் வாழ்வியலை இரத்தமும் சதையுமாகக் கற்பனை கலந்து சுவைபட எடுத்துக்கூறுவதில் இது தன்னிகரற்றது.நாட்டுப்புறங்களில் வாய்மொழியாக வழங்கி வந்த பல்வகைப்பட்ட கதைகள் முறையாக எழுதப்படாமலும் தொகுக்கப்படாமலும் இலக்கியமாகப் பதிவுசெய்யப்படாமலும் இருந்த காரணங்களால் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகம் மேலை இலக்கியப் புத்திலக்கிய வரவாகச் சிறுகதையைக் கருதத்தொடங்கியது.

ஆதலாலே,தமிழ்ச்சிறுகதையின் பிதாமகர் வ.வே.சு.ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் எனும் சிறுகதை தமிழில் உருவான முதல் சிறுகதையாக உருவெடுத்தது என்றுதான் கூறவேண்டும்.மேலைநாட்டார் வகுத்துத்தந்த சிறுகதை இலக்கணத்தை அடியொற்றி எழுதப்பட்ட முதல் சிறுகதையென்று அதையழைப்பதே சாலப்பொருத்தமாகும்.அதன்பின்னர்,சிறுகதை இலக்கியத்தை மக்கள் இலக்கியமாக முன்னெடுக்க அயராது பாடுபட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக ந.பிச்சமூர்த்தி,புதுமைப்பித்தன்,கு.ப.ராஜகோபாலன், ஜெயகாந்தன்,கந்தர்வன் ஆகியோர் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் அறியப்படுகின்றனர்.

அதுபோல்,தமிழ்ச்சிறுகதையின் தொடக்க காலப் பாடுபொருள்களாக தனிமனித வாழ்வியல் மற்றும் உளவியல் சிக்கல்கள்,வேட்கைகள்,விழைவுகள்,சமூகப்பதிவுகள் போன்றவை காணப்பட்டன.அரசியல் மற்றும் பொருளியல் தாக்கம் அதன்பின் சிறுகதை உள்ளடக்கங்களாயின.பின் நவீனத்துவத்தின் எழுச்சிக்குப்பின், தமிழ்ச்சிறுகதைகள் பொது அடையாளங்களை ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக முன்னிறுத்துவதைப் புறம்தள்ளி ஒவ்வொரு சமூகத்திடமும் விளங்கக்கூடிய அதனதன் தனித்த அடையாளங்களை அதே உயிர்ப்புடன் தெரிவிப்பதைத் தலையாயக் கடமைகளாகக் கொண்டுள்ளன.

தலித்தியம்,பெண்ணியம்,திருநங்கையியம்,மாற்றுத் திறனாளியியம் எனச் சமூகத்தின் பொதுத்தளங்களுக்குள் உள்ளொடுங்கப்பெற்றும் குரலற்றும் காணப்பட்ட விளிம்புநிலையினர் பலர் தம் வாழ்க்கைப்பாடுகளைத் தாமே எடுத்துரைக்க இது அடிகோலியது.இதனால்,அடிமைப்பட்டுக் கிடந்த சமூகம் மெல்ல மேலெழும்பியது.வெளிச்சத்திற்கு வராத பல உண்மைகள் பல்வேறு வேதனைகளுடன் வெளிவந்து சமூகத்தை வருத்த ஆரம்பித்தன.ஒவ்வொரு சமூகத்தின் விடுதலை குறித்தும் அதன் அவசர,அவசியத் தேவைகள் குறித்தும் இச்சமுதாயம் சிந்திக்கத் தலைப்பட்டது.எனினும்,படிமம்,குறியீடு,இருண்மை போன்ற புரிதலில் பல்வேறு இடர்களை விளைவிக்கும் நவீன உத்திகளும் பாலியல் சார்ந்த வெளிப்படையான,தணிக்கைகளற்றத் தன்னிச்சை எழுத்துகளும் அண்மைக்கால சிறுகதைப்போக்குகளாகத் தோன்றி வளரவும் பெருகவும் இப்பின் நவீனத்துவச் சிந்தனையே அடிப்படையாகும்.

இத்தகைய சூழலில் எளிய நடையில் சமூகத்தின் கடைசியராக விளங்கும் விளிம்புநிலை மாந்தரின் வாழ்வியல் நடப்புகளைச் சமுதாய கண்ணோட்டத்துடனும் அழகியல் பாங்குடனும் வெளிப்படுத்திய மேற்குறிப்பிடப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் எண்ணத் தக்கவராக நாகை மாவட்டம்,மருவத்தூரைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அ.குணசேகரன் உள்ளார்.அண்மையில் கும்பகோணம்,கவிக்குடில் பதிப்பகம் மிக நேர்த்தியாய் வெளியிட்ட இவரது ‘இல்லாமல் இருத்தல்;’என்கின்ற சிறுகதைத் தொகுப்பில் காணப்படும் ஒன்பது சிறுகதைகளும் அதற்கு அத்தாட்சியாகும்.
எளிய மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள்,வாழ்வியல் செய்திகள்,சமூகப் பிரச்சினைகள்,உலகமயமாக்கல் விளைவால் உண்டான அந்நியமாதல் நிலைகள் முதலானவற்றை சமூக அக்கறையுடன் கூர்ந்து பேசும் அரிய தொகுப்பாக இந்நூல் காணப்படுவது சிறப்பாகும்.பெருமுதலாளிகளின் ஆசிபெற்று அவர்களது கைப்பாவைகளாக ஆகிப்போன பல்வேறு வணிகச் சிற்றிதழ்களின் புற்றீசல் பெருக்கத்தினூடாகவும் சமுதாயத்தின் போக்குகள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் மனம் போன போக்கில் அவற்றில் எதையெதையோ எழுதிக் குவித்துக்கொண்டிருக்கும் ஒன்றுக்கும் உதவாத காம,மாய எழுத்துக்குப்பைகளினூடாகவும் எளிமை ஒன்றையே அணிகலனாக அணிந்து உலாவரும் ஓர் அழகிய மக்கள் இலக்கியப் படைப்பாக இத்தொகுப்பு விளங்குகின்றது.
மேலும்,இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கதைகள் எளிய மனிதர்களின் சொல்லாடல்கள்,சொலவடைகள்,நாட்டார் வழக்குகள் போன்றவற்றை உள்ளீடுகளாகக் கொண்டு விளங்குகின்றன.கீழத்தஞ்சை மாவட்ட வட்டார வழக்குமொழி நடை கையாளப்பட்டிருப்பினும் தஞ்சைத் தமிழ்வழக்கு தமிழகம் அறிந்த எளிய வழக்காதலால் புரிந்துக்கொள்வதில் பெரிய இடையூறுகள் ஏதும் ஏற்படப் போவதில்லை என்றுதான் சொல்லவேண்டும்.வாசிப்பதற்கு தடைகள் ஏதும் விளைவிக்காத நல்ல ஆற்றொழுக்கான பேச்சுமொழியும் கதையமைப்பும் படைப்பாளி-வாசகர் இடையேயான நல்லுறவைப் பேணிக்காப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வுறவை நல்ல காத்திரமிக்க நெருங்கிய ஒன்றாக மாற்றியமைத்து விடுகின்றன.இதுதான் ஒரு படைப்பை படைப்பாளன் மக்கள் மத்தியில் வலிமைப்படுத்திடும் தலைசிறந்த முன்முயற்சி ஆகும்.

 

எந்தவொரு இலக்கியப் படைப்பிலும் வாசக மனநிலையென்பது ஒன்றிப்போக வேண்டும்.அப்போதுதான், அப்படைப்பு வாசகன் உணர்வைத் தட்டியெழுப்பி,தூங்க விடாமல் செய்து,துக்கத்தையோ,மகிழ்ச்சியையோ, விழிப்புணர்வையோ அவனுக்குள் உண்டுபண்ணி,அவனை மற்றுமொரு படைப்பாளியாகவோ,போராளியாகவோ உருமாற்றும் என்பது திண்ணம்.இக்குறிக்கோள்கள் பலசமயங்களில் பலரிடமிருந்து ஈடேறாதக் காரணங்களாலேயே புதுப்புதுப் படைப்புகள் நாளும் பெருகி வருகின்றன என்பது கண்கூடு.இதைத்தான் இவ்வெழுத்தாளர் இங்கே தாம் படைப்பாளியாக உருவெடுத்த விதம் குறித்து இங்ஙனம் முன்மொழிகின்றார்.

 

“எனக்குப் படிக்கக் கிடைத்த கதைகள் பலவற்றில் கண்டுகொள்ள முடிந்த களங்கள்,மாந்தர்கள்,வாழ்க்கை முறைகள் போன்றவற்றில் நம்மைக்காண முடியவில்லையே எனற உணர்வுந்தலின் காரணமாகச் சில கதைகளை எழுதிப்பார்க்க நேர்ந்தது.”தற்கால சிறுகதைப் படைப்புப் பிரதியில் காணப்படும் அந்நியத்தன்மைகள் விளைவால் புதுப்பிரதி உருவாகுதல் என்பது படைப்புச் சீர்கேடாகும்.இத்துயர நிகழ்வை இத்தொகுப்பு நிச்சயம் நமக்குத் தராது.இது பெருமைப்படத்தக்க சேதியாகும்.

 

தவிர,ஒணக்கை இத்தொகுப்பின் முதல்கதை.ஆகச்சிறந்த கதையும் கூட.வயல்நண்டு பிடித்தலும் அதைக் குழம்புவைத்துத் தின்னுதலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வியல் பண்பாட்டுக்கூறுகள் ஆகும். கிளுக்கியாட்டியும் மழையோசைக் கிளப்பியும் வளைக்குள்ளிருந்துப் பிடித்தல் மற்றும் நெற்பயிர்களினூடாக ஓடவிட்டு விரட்டி உதைத்துப்பிடித்தல் ஆகிய வேட்டைக் கலையினை அழகியல் பாங்குடன் காட்சிப்படுத்துவதன் வாயிலாகப் புதிய தலைமுறைகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்;, இயற்கை உணவுமுறைகளில் காட்டப்படும் சாதியம் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை நன்கு உணர்த்தப்பட்டுள்ளன.

படிப்பு மற்றும் பணி நிமித்தமாகவும் வேறுவேறு சாதிகள்கூடி கலப்பு சமுதாயமாக வாழும் நவீனச்சூழலுக்கேற்பவும் புதிதாக அமைத்துக் கொள்ளப்படும் தனிக்குடும்பங்களில் மனைவி மற்றும் பிள்ளைகளிடையே காணலாகும் பழக்கமின்மைக் காரணமாகவும் தற்போதைய உணவுப்பண்பாட்டுக் கூறுகள் புதிய ஆரியமயமாகுதல் விளைவால் முற்றிலும் சிதைக்கப்பட்டு வருகின்றன.இது எல்லா சாதியினருக்கும் அவரவர் நிலைகளில் பொருந்தக் கூடிய ஒன்றாகவே உள்ளது.ஒட்டுமொத்தமாக, அசைவம் உண்போர் அனைவரும் கீழானவர்கள் என்கின்ற தவறான கருத்து தீவிரமாகப் பரப்புரை செய்யப்படுவதை எளிதாக எடுத்துக்கொள்வது என்பது பேதைமையாகும்.அதிலுள்ள பண்பாடொழிப்பு நுண்ணரசியல் புலப்பாட்டை உணர்தலும் உணர்ந்து செயல்படுதலும் காலத்தின் கட்டாயம் என்பதை இக்கதை தௌ;ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பூசாரிகள் எனும் கதையில் நிகழ்கால அரசியல் நடப்புகள் சமூக அக்கறையுடன் ஓர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அவலக் குரலாக ஒலித்துள்ளது.அரசாங்கம் வழங்கும் நலத் திட்டங்கள்,உதவிகள்,சலுகைகள் போன்றவை தகுதிவாய்ந்த நபர்களுக்குப் போய்ச்சேராமல் அரசு அதிகாரிகள் சுயநலம்கருதி நந்திகளாகக் குறுக்கே நிற்பதொடு மட்டுமல்லாமல் வசதிப் படைத்த மேல்சாதிக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு சதிசெயலில் ஈடுபட்டுக் கொள்ளையடிப்பதை அழகாகச் சித்திரிக்கின்றது.
ஏழை,எளிய மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிய நிவாரணங்கள் இலஞ்சம்,ஊழல் காரணமாகக் கிடைக்காமல் போவது கண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தமக்குள் ஒன்றுகூடி நியாயம்கேட்டுப் போராடும் போராட்டம் பிற மக்கள் ஆதரவின்றித் தோல்வியில் முடிவதைக் கண்டிக்கும் முகமாக,”உண்ணாவிரதம் வெகு சிறப்பாக முடிந்தது.தலைவர்கள் வாழ்த்துரை சிறப்புரைகளுடன்.மனசு நிறைய நம்பிக்கை.கடைசியாக,காஞ்சு கிடந்த ஒவ்வொரு வயிற்றுக்கும் ஒரு டீயும் வடையும் தான் கண்ட பலன்.அதுவும் உண்ணாவிரதத்துக்காகச் சேர்த்த ஊர்ப்பணத்திலிருந்து.”என்று முத்தாய்ப்பாய் கதையினை முடித்துள்ளவிதம் அருமை.அதிகார வர்க்கத்தின் முதல் சூழ்ச்சியாக விளங்கும் பாட்டாளி வர்க்கச் சிதைவை நன்கு இக்கதை மூலமாகச் சுட்டிக்காட்டுவதுடன் அனைத்துத் தொழிலாளர் ஒற்றுமையின் தேவை குறித்தும் எடுத்தியம்புகிறது.முற்போக்கு எண்ணம் படைத்தவர்களின் அடிப்படை குணம் இதுவெனலாம்.
நால்வகை வருணங்களுக்கும் கீழாக, ஆகக் கடைசியராக எல்லா வகை வருணங்களிலும் வைத்து எண்ணப்படும் பெண்கள், உலக வரலாற்றில் தாய்வழிச் சமூக வீழ்ச்சிக்குப்பின் அடிமைகளாக,ஆண் உடைமைப் பொருள்களாக,நுகர்வுப் பண்டங்களாக,இரண்டாம்தர உயிரிகளாக வாழ விதிக்கப்பட்டுள்ளனர்.மானுட உலகின் அச்சாணியாகவும் மனித இனத்தில் சரி பாதியாகவும் திகழும் பெண்ணினத்திற்கு இச்சமூகம் குடும்பம்,சமுதாயம்,அரசியல் முதலானவற்றில் சம உரிமை,சம வாய்ப்பு,சம நீதி ஆகியவை வழங்கப்படுவதில் இன்னமும் பாகுபாடுகள் உள்ளன.இவை பெண் உளவியலையும் நடத்தையையும் மிகவும் பாதிப்பிற்கு ஆட்படுத்துகின்றன.இவற்றால் பெண்கள் பல்வேறு நெறிபிறழ் நடத்தைகளை வழக்கத்திற்கு மாறாகச் செய்ய தலைப்படுகின்றனர்.பேய்ப்பிடித்தல்,சாமியாடுதல்,குறி சொல்லுதல் போன்றன இவற்றின் பாற்படும் எனலாம்.
இம்மாறுபட்ட நடத்தைகளின் மூலம் ஆணாதிக்க,சாதிவெறிப் பிடித்த மனிதர்களை அச்சுறுத்தி,பயம்காட்டி,மண்டியிடச் செய்து இன்புறும் விசித்திரப்போக்கைச் சில பெண்கள் கைக்கொள்வதை இந்நூலாசிரியர் சொக்கங்கொளத்தா எனும் சிறுகதையில் அழகுமிளிரக் காட்டியுள்ளார்.மக்களிடம் மண்டிக்கிடக்கும் மத நம்பிக்கைகளைத் தமக்குச் சாதகமாகக்கொண்டு கீழான தம் சாதிப்படிநிலையைக் கடந்து அனைத்துச் சாதியினரும் நினைந்துப் போற்றத்தக்க வகையில் சங்க கால வெள்ளிவீதி,ஒளவை முதலான வீரம்செறிந்த இலக்கியப் படிமங்களுக்கு நிகராக சொக்கங்கொளத்தா படிமம் இங்கு இவரால் உருவாக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
பொதுநீர்நிலைகளில் நீரள்ள உரிமையின்மை,மேல்சாதியினர் வசிக்கும் தெருக்களில் சுதந்திரமாக நடமாட இயலாமை,இரட்டைக்குவளை முறை,மேலவளவு,தாமிரபரணி,பரமக்குடி படுகொலைகள்,மலம் தின்ன வைத்த திண்ணிய வன்கொடுமை,உத்தப்புரம் தீண்டாமைச்சுவர்,பொதுச்சுடுகாட்டில் பிணத்தை எரிக்க முடியாத அவலநிலை போன்ற சாதிக்கொடுமைகள் இன்றும் ஒழிந்தபாடில்லை.கௌதம புத்தர்,அயோத்திதாசர்,அம்பேத்கார்,பெரியார் வகுத்துத்தந்த நீண்ட நெடும்பாதையில் அடிபிசகாமல் நடந்துச்செல்லும் இவ்வெழுத்தாளரின் எழுத்துகள் இக்கொடுமைகளுக்கெதிராக சாட்டை சொடுக்கியுள்ளதை, தாழ்ந்த சாதிக்கார மூதாட்டியான சொக்கங்கொளத்தாவின் பிணத்தை மேல்சாதிக்காரத் தெரு வழியாகத் தூக்கிச் செல்லும்போது ஒரு சிறு சலனம்கூட ஏற்படாமலிருந்த நிகழ்வு மூலமாக அறியமுடியும்.சமூகத்தில் சாதிகளற்றநிலை அல்லது நல்லிணக்கநிலை உருவாக்கப்படவேண்டும் எனும் நல்லோரின் அவாவினையே இவரும் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.
வைக்கம் வீரர் உள்ளிட்ட பல தலைவர்களின் தொன்றுதொட்ட தொடர் போராட்டங்களின் விளைவினால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்குச் சமய வழிபாட்டு உரிமை சிறிதளவு எட்டியுள்ளது.இன்றும் சில கிராமங்களில் கோவில் நுழைவுக்காகவும் வழிபாட்டு உரிமைக்காகவும் அம்மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தவேண்டியச் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பது சமூக வெட்கக்கேடு.இவ்வுரிமைகளைக் கடவுள் மறுப்புக் கொள்கையுடன் இணைத்துப்பார்த்து ஆலயநுழைவைக் கைவிடுதலும் மத நடவடிக்கைகளை விமர்சித்தல் என்பதும் தலித்துகளுக்கு வேண்டாத வேலைகள் என இச்சிறுகதை எழுத்தாளர் தலித் சமூகத்தினருக்கு உணர்வு என்னும் தம் சிறுகதையின் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

“கோவில் என்பது வெறும் வழிபடும் இடம் மட்டுமல்ல. கண்டடைய வேண்டிய,பெற்றுக்கொள்ள வேண்டிய சங்கதிகள் இங்கு ஏராளமாகப் புதைந்து கிடக்கின்றன. ஏல்லாம் உள்ளே போகப் போகத்தான் புரியவரும்.”என்பதிலிருந்து சமூக நீதியை நிலைநாட்டிய பின் ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிவிற்குட்பட்ட அறிவுடைமைச் செயல்களில் ஈடுபடுதலின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.சக மனிதனிடமிருந்து ஒரு படைப்பாளி வேறுபடுதல் என்பது இதுபோன்ற சமுதாய சிந்தனைகளால் தான் என்பதை இப்படைப்பாளி இங்கே நிரூபித்துள்ளார் என்றே எண்ணிடவேண்டும்.மனிதனுக்குச் சிந்திக்க வாய்ப்புத் தராத எந்தவொரு இலக்கியப் படைப்பும் ஒரு சிறந்த படைப்பாகாது.அதுவும் ஓர் உப்பில்லாதக் குப்பைப் பண்டமே என்பதில் மிகையில்லை.வாழைப்பழத்தில் மெல்ல ஊசியேற்றுவது போல,இவர் மேற்கொள்ளும் பாதையில் எதிர்வரும் இளம் படைப்பாளிகள் தம் ஒப்பற்றச் சமூக,அரசியல்,பண்பாட்டுச் சிந்தனைகளை தம் படைப்பின் வாயிலாக இச்சமூகத்திற்கு விதைத்திட முயலுதல் நல்லது.

இத்தொகுப்பில் காணப்படும் கடைசி கதையான இல்லாமல் இருத்தல் ஓர் அழகான எள்ளல் தன்மைமிக்க உணர்வுப்பூர்வமான கதையாகும்.அகனி அத்தையின் இருப்பும் இறப்பும் அவருடைய வெகுளிப்பண்பும் வெள்ளந்தியான நடவடிக்கைகளும் கதையாசிரியரைப் போன்றே நம்மாலும் எளிதாய் மறக்கமுடியவில்லை.ஒரு கதைமாந்தர் படைப்பில் எழுத்தாளனிடம் காணப்பட வேண்டிய அருங்குணங்களுள் ஒன்றான துல்லியத்தை இதன்மூலமாக அறியவியலும்.இத்துல்லியப் பண்புதான் வாசகரை கதையுடன் ஒன்றிப்போகச் செய்யும் நற்பண்பெனலாம்.இது,இக்கதையில் மட்டுமல்ல இவருடைய எல்லா கதைகளிலும் காணப்படும் அரிய நற்பண்பாக உள்ளது.பல்வேறு சூழல்களில் எத்தனையோ தொகுப்புகளை வாசிக்க நேர்ந்திருந்தாலும், இத்தொகுப்பு நல்லதொரு அனுபவத்தைத் தரவல்லதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு உரமூட்டுவதாகவும் அமைந்துள்ளது.அந்தவகையில் இத்தொகுப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.இதை நீங்களும் பெறவேண்டுமென்பதே என் விருப்பம்.

 
மணி.கணேசன்,
11-2,ராஜூவ்காந்தி நகர்,
மன்னார்குடி-614001.
செல்பேசி:9442965431.

Series Navigationஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்)வெள்ளம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    a beautiful commentary written on a collection of short stories by A.kunasekaran by Mani. Ganesan…Very illustrative and informativce for the readers. Such written commentaries are helpful for readers to own the book…Congratulations to the writer and the commentator…Dr.G.Joihnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *