நாள்தோறும் நல்லன செய்வோம்.

This entry is part 34 of 41 in the series 23 செப்டம்பர் 2012

முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர்,
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை

உயிரினங்கள் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகள், செயல்கள் பற்பலவாகும். காலை எழுவது, பல் துலக்குவது, உடல் சுத்தம் செய்வது, உண்பது, அலுவலகப் பணிகள் ஆற்றுவது,  மின்சாரக் கட்டணம் கட்டுவது, தொலைபேசிக் கட்டணம் கட்டுவது, குழந்தைகளின் கல்வியில் நாட்டம் செலுத்துவது, உறங்குவது என்பது போன்ற பணிகள் நாள்தோறும் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கூட இதுபோன்றே பற்பல பணிகள் உண்டு.  இப்பணிகளைக் குறைவின்றிச் செய்தால் மட்டுமே உயி;ர் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். இவற்றில் குறை வைத்தால் வாழ்க்கை இனிக்காது.

இதுதவிர மனித உயிர்கள் மனதின் அமைதிக்காகத் தியானம், கடவுள் வணக்கம், யோகா போன்ற பலவற்றைச் செய்யவேண்டியுள்ளது. உடலையும், உயிரையும் ஒருசேர வளர்க்கிற இனிய பண்பே, அமைதியான வாழ்க்கைக்கு  அடிப்படையாக அமைகின்றது. உடல், உயிர் அமைதியைத் தாண்டி மன அமைதி, அறிவின் அமைதி போன்றனவும் உயிர் வாழ்க்கைக்கு உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகும்.
இவ்வமைதிகளைக் கருத்தில் கொண்டு மனித உடலினை இறைத் தத்துவங்கள் பற்பல தொகுதிகளாகப் பிரித்துக் கொள்கின்றன. இவற்றைக் கோசம் என்று குறிக்கின்றனர். இக்கோசங்கள் ஐந்து ஆகும். அவை அன்னமய கோசம், பிரணாமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்த மய கோசம் என்பனவாகும்.

அன்னமய கோசம் என்பது உயிர்கள் உண்ணும் உணவைச் சக்தியாக மாற்றி உயிர்களை வாழவைக்கும் தகுதி வாய்ந்த உடலுறுப்புகளின் தொகுதிகளைக் குறிப்பதாகும். பிரணாமய கோசம் என்பது உயிர்கள் சுவாசிக்கும் காற்றைப் பெற்று  அதனை இரத்தத்துடன் கலக்கச் செய்யும் உடல் உறுப்புகளின் தொகுதியைக் குறிப்பதாகும். மனோமய கோசம் என்பது உயிர்களின் உடலினுள் அமைந்துள்ள மனதின் கட்டளையின்படி உடலை இயக்கவைக்கும்  தன்மை பெற்ற உறுப்புகளின் தொகுதியைக் குறிப்பதாகும். விஞ்ஞான மய கோசம் என்பது அறிவின் காரணமாக இது நல்லது, தீயது என்பதை அறியச் செய்கின்ற அறிவின் ஆக்கத்தினை உடலுக்குத் தரும் தொகுதியின் பெயர் ஆகும். அன்னமய கோசம், பிரணாமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மய கோசம் ஆகிய ஐந்தின் தடையற்ற இயக்கத்தால், அதன் விளைவால் கிடைப்பது ஆனந்தம் ஆகும். இவ்வானந்தம் கிடைப்பதற்கும் சில உடலுறுப்புகளின் தொகுதி செயற்படவேண்டியுள்ளது. இவற்றை ஆனந்த மய கோசம் என்று குறிப்பர்.
இவ்வைந்து கோசங்களும் இணைந்து உயிரினங்களின் உயிர் இருப்பினை, உடல் வளத்தினை பாதிக்கவும் செய்கின்றன. வளமாக்கவும் செய்கின்றன. ஆனந்த மய கோசத்தினை அடைய இந்த மனித உயிர்கள் பாடாதபாடு படுகின்றன. இன்பம் என்னும் உயிர் அமுதத்தினை உயிர் அடைய இந்த ஐந்து கோசங்களையும் வளமாக வைத்துக் கொள்ள மற்றவற்றைத் தள்ள அஞ்ச வேண்டியிருக்கிறது.

கோசம் அஞ்சுக் கஞ்சி நிற்கும் அன்பர்கட்கு
எல்லாம் உத்தம தத்துவமே உதவி செய்வான்
(கெவன மணி மாலிகா அடி 18)
என்பது கெவனமணி மாலிகாவின் அருள் அடிகளாகும். இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள அன்பர்கள் என்ற குறிப்பு அன்பின் வயப்பட்டவர்கள் மட்டுமே கோசங்களுக்கு அஞ்சி நடக்கக் கூடியவர்கள் என்பதைக் காட்டுகின்றது. கோசங்களுக்கு அஞ்சி நடக்காதவர்கள் அன்பு வயப்படாதவர்கள் ஆவர். இவ்வாறு அஞ்சி நடக்கின்ற அன்பர்களுக்கு இந்த ஐந்து கோசங்களைத் தாண்டி ஆறாவது கோசமான உத்தம கோசத்தை அளிக்கின்ற பெருமை உடையவர் அகண்ட பரிப+ரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள் ஆவார். இவரை அடைந்தால், இவரின் வழியைப் பின்பற்றினால் ஆனந்தமய கோசத்தையும், அதனைத் தாண்டிய உத்தம தத்துவ கோசத்தைப் பெற இயலும் என்பதே மேற்கண்ட அடிகளின் பொருளாகும்.

நாள்தோறும் மேற்சொன்ன ஐந்து கோசங்களும் ஒழுங்காகச் செயற்பட்டால் மட்டுமே உயிர்கள் உயிர் வாழஇயலும். இவை ஐந்தும் ஒரு புறம் நன்றாகச் செயல்பட்டாலும் இவற்றில் எங்கேனும் குறைகள் நேரலாம். அக்குறைகளைச் சுத்தி செய்து மீளவும் அக்குறை மேவாமல் காக்கின்ற நன்முறையை உயிர்கள் அறிந்து நடந்தால் அது பரிப+ரண ஆனந்தத்தை நல்கும்.

தினம் மலம் சுத்தி செய்து இருப்பாயானால்
ஆனந்தம் ஊட்டிவிடும் இந்த நாதன்
(கெவனமணி மாலிகா, ப.19)
என்பது நாள்தோறும் குற்றம் நீக்குகின்ற நல்லபணியை உயிர்கள் செய்யவேண்டும் என்பதைக் குறிப்பதாக உள்ளது.
தினம் தினம் குளிக்கிறோம். வயிற்றின் அழுக்கை நீக்குகிறோம். இதன்வழியாக அன்னமய கோசம் சுத்தம் ஆகின்றது. மூச்சுப் பயிற்சியின் காரணமாக பிரணாமய கோசத்தை சுத்தப்படுத்தலாம். தினம் தினம் மனதின் அழுக்கை நீக்கி ஆண்டவனைத் தொழுதால் மனோமய கோசமும் சுத்தம் பெறும். அறிவின் அழுக்கைப் போக்க நல்ல நூல்களைக் கற்கவேண்டும். இவற்றின் காரணமாக துன்பத்தின் நிழலைப் போக்கி ஆனந்த மய கோசத்தின் எல்லையைத் தொட முடிகின்றது. இதற்கு மேலான தத்துவ மயத்தை சற்குருவின் துணையால் அடைய முடியும்.

நாள்தோறும் உடல், மூச்சு, மனம், அறிவு ஆகியன இயங்குகின்றன. அவற்றைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு தினம் தினம் மலம் சுத்தி செய்து வாழ்ந்தால் ஆனந்தம் வந்து சேறும் என்பதைத்தான் இந்த அடிகள் உணர்த்துகின்றன.

நாள்தோறும் மனிதர்கள் நடக்கின்ற வாழ்க்கை முறை ஒரு சட்ட திட்டம் கொண்டது. அந்த சட்ட திட்டத்தில் தினம் தினம் அப்படிக்கு அப்படியே சொன்னது சொன்னபடியே மாறாமல் நடந்திடுவதில்லை. பற்பல மாற்றங்கள் நிகழும்;. நன்மைகள், தீமைகள் நிகழும் நண்மைகளை நடத்தி,  குற்றம், குறைகளைக் களைந்து வாழ்;ந்தால் அதுவே அமைதியை நோக்கியத் தத்துவப் பயணம் ஆகும். நிறைநிலை அடைகின்ற நல்ல நிலை ஆகும்.
எனவே நாளும் உடல் வளர்க்கவேண்டும். உயிர் வளர்க்க வேண்டும். நல்ல மணம் வளர்க்க வேண்டும். நல்லறிவு வளர்க்க வேண்டும். நல் ஆனந்தம் தூய்க்க வேண்டும். நல் தத்துவம் நோக்கிச் செல்ல வேண்டும். நாளும் குற்றம் நீக்க வேண்டும். நாளும் குறைகள் களைய வேண்டும். இவை உயிர்கள் இருக்கும்வரை தொடர வேண்டிய பணிகள் ஆகும். 

Series Navigationஅடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்சுறாக்கள்
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    kavignar ara says:

    உங்கள் நடையும் விஷயங்களும் நன்கு சொல்லப்பட்டிருக்கின்றன.நன்றி ஆரா.

  2. Avatar
    சு.துரைக்குமரன் says:

    தத்துவப்பயணம் நாடும் மனங்கள் மட்டுமல்ல நல்வாழ்வு வாழ விரும்புவோர் நாளும் தொடர வேண்டிய பணிகள் இவை. சிறப்பான செய்தி. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *