ஓடியது யார்?

This entry is part 12 of 36 in the series 30 செப்டம்பர் 2012

பரசுவால் நீலு பேசும் ஒரு வார்த்தைளை பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியவே இல்லை. கோபித்து கொள்ளவோ தடுக்கவோ தைரியமுமில்லை. அவளுடைய பேச்சுக்குப் பேச்சு அதை கேட்க நேர்ந்தது. மனம் திடுக்கிட்டு பதறுகிறது. ஆனால் அதற்கு ஒரு காரணமிருந்தது. அவன் சிறுவயதிலேயே யாரோ சொன்ன விஷயம் மனதில் பதிந்து போனது வேறு.

யார்? பாட்டிதான் சொன்னாள். ஆமாம். “சிவசுவோட அம்மா குடுகுடுப்பாண்டியோட ஓடிப் போயிட்டாளாம். பாவம் குழந்தைகளை தாத்தா-பாட்டிகிட்டே வுட்டுட்டு அப்பன்காரன் கண்காணாம போயிட்டான். அவமானம்தாங்காம போயிட்டாலும் குழந்தைகளுக்காக பணம் அனுப்பித்தாரானாம்’’ என்றாள்.

சிவசுவைப் பார்க்கும்போதெல்லாம் பரசுவுக்கு குடுகுடுப்பாண்டி நினைவு வந்துவிடும்.

எங்கேயாவது குடுகுடுப்பை சத்தம் கேட்டால்கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்க்க கூடப்

பயம். இன்னமும் எதிரில் குடுகுடுப்பைக்காரன் வந்தால் திரும்பி வேறு பக்கம் போவது

அவன் வழக்கம்.

அப்படிப்பட்டவனின் மனைவி பேசும் பேச்சில் பாதி விஷயம் ’ஓடியேபோயிடுவேன்’ என்றால் அவனால் என்ன சொல்ல முடியும்? திருமணமான மறுநாளே ஏதோ பேசும்போது,“அம்மாடியோவ்! கொல்லைப்பக்கம் தனியாகவா போகவேண்டும். பயம்மா இருக்கே. யாராவது புடிச்சுண்டு போயிட்டா என்ன செய்கிறது? நான் ஓடியே போயிடு வேனம்மா!’’, என்றாள். பின், “பாவக்கா, சுண்டைக்காயெல்லாம் கசப்பா கசக்கும். எனக்கு புடிக்கவே புடிக்காது. சாப்பிட்டுத்தான் தீரணும்னா நான் ஓடியே போயிடுவனப்பா. அதெல்லாம் முடியாது.’’,“ஈரத்துணியோட ஆத்துல குளிச்சுட்டு வருவேளா? ஐயோ அம்மா! என்னால முடியாது. இடுப்புலே தண்ணிக் குடம வேறே சர்க்கஸ் போல ஈரத்துணி தடுக்கும். என்ன பண்ண முடியும்? நான் ஓடியே போயிடுவேனம்மா.’’ – இப்படியேதான் பேசிக்கொண்டிருப்பாள்.

இப்படி அவள் பேசுவதில் இடம்பெறும் ‘ஓடிப்போவதற்கு’ அர்த்தமே இல்லை என்பது பரசுவுக்கு புரிந்தது. ஆனால் மனம் அதிர்ந்தது. சாதாரணமாக இல்லை. பயங்கரமாக பீதி

அடைந்தது அவனுக்கு வேலையே ஓடவில்லை. என்ன செய்வான்? முதலில், திருமணமான புதிதில் அவன் கற்பனையில் நீலு ஓடிப்போய்விட்டாள். நண்பர்கள் அவனை கேலி செய்தார்கள். ”இவன் லக்ஷணத்திற்கு கல்யாணம் ஒரு கேடு. மனைவி ன்னு வந்து ரெண்டு மாசம் கூட வாழலை. ஓடிப் போயிட்டா”, என்றார்கள். அம்மாதான் சமாதானமாக என்னடா இப்போ கெட்டுப் போச்சு? ராஜாவாட்டம் இருக்கே. நல்ல பெண்ணாப் பாத்து நான் கல்யாணம் பண்ணி வச்சு ஓடிப் போனவ மூஞ்சியிலே கரி பூசறேனா இல்லையா பாரு” என்கிறா. பரசு திடுக்கிட்டு மனதை தைரியப்படுத்திக் கொண்டான்.

பரசு – நீலு திருமணமாகி ஆறு வருடங்களுக்கு மேலாகி ஒரு பெண்ணும் பிள்ளையும்

பிறந்து கேலியும் செய்கிறார்கள். ”அடேய், மணி நீ இப்படியெல்லாம் படுத்தினால் நம்ப அம்மா ஓடியே போயிடுவாள்” என்று அகிலா கேலி செய்கிறாள். ”அக்கா, நீ ஒழுங்கா வேலையெல்லாம் முடிச்சுட்டு என் கணக்கை கத்துக்கொடு. இல்லைன்னா அம்மா ஓடியே போயிடுவாள்!”, என்று மணியும் சொல்லுகிறான்.

குழந்தைகள் கேலிசெய்வதைக்கூட புரிந்து கொள்ளாமல் நீலு இன்னமும் ’ஓடிப்போயிடு வேன்’ மந்திரத்தை விடாமல் ஜபிப்பது நிற்கவில்லை. பரசுவும் கற்பனையில் தவிப்பது தொடர்ந்தது.

பெண் பிறந்தபோதும் ஒரு முறை நீலு ஓடிப்போய் விட்டதாக தவித்தான். பையன்

பிறந்தபோதும் இரண்டு பிள்ளைகளையும் விட்டு நீலு ஓடிவிட்டதாகவும் இருவரும் திண்டாடுவதாகவும் எண்ணி வருந்தி இருக்கிறான். நீலுவோ அவன் மனநிலையே புரியாமல் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து முறையாவது ஓடிப்போவது பற்றியே சொல்லி அவனை சித்ரவதை செய்தாள். பரசு மனம் நொந்து நூலாகிப்போனான். தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை அவனால்.

ஒரு நாள் பரசு அலுவலகத்திலிருந்து திரும்பவில்லை. மறுநாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று வந்தபின்னும் அவன் திரும்பிவரவேயில்லை. அவன் தனது எல்லா வருமானங்களையும் தன் மனைவி பெயரில் மாற்றிவிட்டான். வீட்டையும் மற்ற உடமைகளையும், சேமிப்புகளையும் அவளுக்கே எழுதிவிட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டான். ரயிலடியில் பார்த்ததாக யாரோ சொன்னார்கள். ஆனால் அவன் ஏன் போனான்? எங்கே போனான்? என்பது யாருக்கும் தெரியவில்லை.

நீலுதான் புலம்பினாள். “நான்தான் பேச்சுக்குப் பேச்சு ஓடிப்போயிடுவேன்னு சொல்லிண் டிருந்தேன். நீங்கள் ஒரு நாள்கூட தப்பித் தவறி சொன்னதேயில்லயே! ஏன் எங்களை இப்படி அனாதையா வுட்டுட்டுப் போனீங்க? வயசான தாயார் மனம் தவிச்சுப்போறா. என்ன தப்பு செஞ்சோம்? ஏன் ஓடிப் போயிட்டீங்க?”, என்று அழுதாள். தாயும் குழந்தை களும் வழியை எதிர்பார்த்தனர்.

ரிஷிகேசின் கங்கை கரையில் இருக்கும் பரசுவின் காதில் இவர்கள் சோகம் புலம்பல் எப்படி விழும்? உலகத்தொடர்பே வேண்டாமென்று அவன்தான் கூறாமல் சன்னியாசம் வாங்கிவிட்டானே….

0

Series Navigationநான்கு நண்பர்களும் சசிகுமாரும்ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்
author

கோமதி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *