ஏ. ஹெச். ஜாபர் உல்லா
The curse of Hila marriage By A. H. Jaffor Ullah
ஒரு சமூகத்தை ஆராயவேண்டுமென்றால், அதன் உறுப்பினர்களின் சொந்த வாழ்க்கையை நுணுகிப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்களது சமூக பழக்க வழக்கங்களை பார்க்க வேண்டும் என்று யாரோ ஒரு ஞானி சொன்னார். சமீப காலங்களில், கிராமப்புற பங்களாதேஷின் கிராமப்புறங்களில் நடக்கின்றவற்றை பார்த்தபின்னால், நமது சமூகத்தில் இருக்கும் தீய சமூகப்பழக்க வழக்கங்களை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடாதே என்று வெட்கப்படுகிறேன். வெட்கத்தால் என் முகத்தை மூடிகொள்ளத்தான் வேண்டும். என்னுடைய ஒரு நண்பன், ஹிலா திருமணம் என்றால் என்ன என்று கேட்டதும் எனக்கு வேர்த்தேவிட்டது.
நமது கிராமப்புறங்களில் இருக்கும் சமூக பழக்க வழக்கங்களில் அதிகம் பின்பற்றப்படாதது இந்த ஹிலா திருமணம். இதனை மொழிபெயர்த்தால், தற்காலிக திருமணம், அல்லது இரண்டு திருமணங்களுக்கு இடையேயான திருமணம் என்று சொல்லலாம். குழப்பமாக இருக்கிறதா? ஆமாம் குழப்பமானதுதான்.
ஹிலா திருமணம் என்ற இந்த வினோதமான, பிற்போக்கான பழக்கம் புதியதல்ல. இது சுமார் ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னால், நமது விவசாய சமூகத்தில் “அமைதிமார்க்கமான” இஸ்லாமின் நுழைவுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒரு விஷயம் நன்றாக தெரியும். இந்த ஹிலா திருமணத்தில் எந்த வித அமைதியும் இல்லை.
இஸ்லாமில், அரபிய வார்த்தையான “தலாக்” என்ற வார்த்தையை மூன்று முறை ஒரு கணவன் உச்சரித்தால், அவன் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிடுகிறான். அந்த கணவன் தனது உச்சரிப்பை வாபஸ் வாங்கிகொண்டு தன் மனைவியுடன் திரும்ப வாழ விரும்பினால், எங்கிருந்தோ இந்த ஹிலா திருமணம் தோன்றிவிடுகிறது. இஸ்லாமின்படி, தலாக் நாமா கணவனால் சொல்லப்பட்டபின்னால், அந்த மனைவி அந்த கணவனுடன் (முன்னாள் கணவனுடன்) சட்டப்படியான கணவன் மனைவியாக சேர்ந்து வாழ முடியாது. ஷரியாவின் படி(இஸ்லாமிய சட்டத்தின்படி) இது அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்கள் தங்களது பிரச்னைகளை தீர்த்துகொண்டு முன்னைப்போல சேர்ந்து சந்தோஷத்துடன் வாழ விரும்பினால், இந்த செய்தி அந்த பகுதி முல்லாவின் காதுகளுக்கு எட்டினால், இந்த சந்தோஷ தம்பதியினரின் சந்தோஷம் காலி.
இந்த தம்பதியினர் பாவ வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று முல்லா ஒரு பத்வா கொடுப்பார். உடனே அந்த தம்பதியின் சந்தோச வாழ்க்கை முடிவுக்கு வரும். அவர்கள் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள். எப்படி? கூட்டம் சேர்ந்து அந்த தம்பதிகளை பிரித்து வைக்கும். அங்கேயும் இந்த பிரச்னை முடிவுக்கு வராது. அங்கேதான் அந்த பெண்ணின் தீக்கனவே ஆரம்பிக்கும். அந்த பெண் ஹிலா திருமணம் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவார். அந்த பெண் அழகாகவும் இருந்தால் பிரச்னை இன்னும் மோசமாகும். அந்த பெண்ணை ஹிலா திருமணம் செய்யவிரும்பும் ஆண்கள் கூட்டமே கூடிவிடுவார்கள். ஏன்? ஏனென்றால், ஹிலா திருமணத்தின் மூலம் அந்த பெண்ணோடு சட்டப்பூர்வமாக உடலுறவு கொள்ளலாம். இந்த பெண்ணோடு ஹிலா திருமணம் செய்யும் ஆண் முஸ்லீம் சமுதாயத்தில் வெகுகாலமாக இருக்கும் இந்த பழக்கம் மூலமாக அந்த பெண்ணை அனுபவிக்கலாம். இது குமட்டவில்லையா? மதத்தின் பெயரால், ஊர் பேர் தெரியாத ஒரு ஆணோடு உடலுறவு கொள்வதற்கு அந்த பெண் வெறுக்கலாம். ஆணுக்கோ இது ஒரு பாலுறவு வேட்கை. ஒரு கட்டுப்பாடும், கட்டாயமும், பணமும் செலவு இல்லாத சுகம். ஒரு ராத்திரி நிகழ்வு. பலியாடான அந்த பெண்ணோ இந்த அவமானத்தை வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டும். காரணம் அவளது கணவன் தலாக் என்ற அரபிய வார்த்தையை மூன்று முறை சொன்னான். அவ்வளவுதான். அந்த குடும்பத்துக்கு இந்த ஹிலா திருமணத்தின் மூலம் வரக்கூடிய அவமானத்தை யாராவது சிந்தித்து பார்த்தார்களா? அந்த பெண்ணுக்கு வயதுக்கு வந்த ஆண்பிள்ளைகளோ பெண் பிள்ளைகளோ இருந்தால், தனது தாய்க்கு மதத்தின் காரணமாக நிகழ்ந்த அவமானத்தை நிச்சயம் அறிவார்கள்.
ஆழ்ந்த மத நம்பிக்கையுள்ள ஆண்மகன் ஹிலா திருமணத்தில் ஒரு தவறும் இல்லை என்று சொல்வார். இது குரானில் எழுதப்பட்டுள்ளது. ஆணானாலும் பெண்ணானாலும் நாம் குரானில் எழுதப்பட்டுள்ளதை பின்பற்றியே ஆகவேண்டும் என்று சொல்வார். இந்த வசனத்தை கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்வார். இதற்கு ஒரு ஆழமான காரணம் இருக்க வேண்டும் என்று சொல்வார். இல்லையென்றால், ஏன் நமது புனிதப்புத்தகத்தில் இது இருக்கவேண்டும் என்று கேட்பார். பொறுப்பு ஏற்றுகொள்வது எளிதானதல்ல. சும்மா, புனிதப்புத்தகத்தில் இருக்கிறது என்று சொல்லிவிடுவோம்.
ஆனால், நிஜ வாழ்க்கை இதனை விட மனத்தை கலக்கமடிக்கக்கூடியது. பங்களாதேஷின் மேற்கு மாவட்டத்து கிராமத்தில் ஒரு பெண் ஊர்விலக்கம் செய்யப்பட்டார். அவரது கணவன் தலாக் என்ற வார்த்தையை மும்முறை கூறினார். அதனால், அந்த திருமணம் அப்போதே முறிக்கப்பட்டுவிட்டது. அந்த கிராம முல்லாவின் அறிவுரையின்படி ஹிலா திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனெனில், அந்த கணவன் தன் மனைவியை மீண்டும் ஏற்றுகொள்ளவேண்டுமென்றால், அந்த பெண் ஹிலா திருமணம் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். அதுமட்டுமல்ல. அந்த திருமணம் முழுமையடையவேண்டும். அதாவது இந்த தற்காலிக தம்பதியினர் உடலுறவு கொள்ளவேண்டும். இப்போது பிரச்னை என்னவென்றால், அந்த கணவன் தனது முன்னாள் மனைவியை மீண்டும் தன் மனைவியாக ஆக்கிகொள்ள மறுக்கிறான். ஏனெனில், அவனை பொறுத்தமட்டில், அந்த பெண் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்டுவிட்டாள். பாலுறவு தூய்மை என்பது இந்த பகுதியில் மிகவும் பெரிய விஷயம். மேற்குலகில் வேண்டுமென்றால், இப்படிப்பட்ட உறவுகள் முக்கியத்துவமில்லாமல் இருக்கலாம். ஆனால், பங்களாதேஷில் இவை மிகப்பெரிய விஷயங்கள். இதிலேயே மிகவும் மனத்தை கலங்கடிக்கக்கூடியது அந்த பெண்ணின் நிலைதான். தனது விவாகரத்தில் அந்த பெண்ணுக்கு எந்த பங்கும் இல்லை. கணவன் கோபத்தில் மும்முறை சொன்ன ஒரு தவறான வார்த்தையால் அவளது திருமணம் முறிக்கப்பட்டது. அதனால், இந்த பெண் இன்னொரு ஆணை திருமணம் செய்யவேண்டும். இந்த முழு நிகழ்வுமே அபத்தத்தின் உச்சம். நாம் ராக்கெட் யுகத்தில்தானே இருக்கிறோம்?
பங்களாதேஷிகளில் இணைய விவாதகளத்தில் ஹிலா திருமணத்தை ஆளாளுக்கு திட்டிகொண்டிருந்தார்கள். டோக்கியோவிலிருந்து ஒரு தீவிர நம்பிக்கையாளர் ஒருவர் இவை அனைத்தும் நமது புனித புத்தகத்தில் உள்ளன என்று கடுமையாக எதிர்த்து வாதாடிகொண்டிருந்தார். நுணுகி பார்க்கச்சொல்லி எங்களிடம் காட்டிய ஒரு வசனம் இது.
“And if he hath divorced her (the third time), then she is not lawful unto him thereafter until she hath wedded another husband. Then if he (the other husband) divorces her it is no sin for both of them that they come together again if they consider that they are able to observe the limits of Allah. These are the limits of Allah. He manifesteth them for people who have knowledge.” (2:230)
2:230. மீட்ட முடியாதபடி – (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து – அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் – மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (1)
(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாக ரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாக ரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
எங்களது நண்பர் கல்லாகிவிட்ட உறைந்துவிட்ட மனங்கள் இருக்கும் உலகத்தில்தான் வாழ்கிறார் என்று நினைக்கிறேன். அதில் சந்தேகமில்லை. அவரது பார்வையிலிருந்து மாறமுடியாத மதக்கட்டளை மட்டுமே இருக்கிறது. அந்த வசனம் எந்த அளவுக்கு ஒரு பங்களாதேஷிக்கு பொருந்தும் என்பது அவரது மனத்தில் கேள்விக்குட்பட்டதாகவே இல்லை. மேலும், 14 நூற்றாண்டுகளுக்கு முந்திய இந்த வசனம் காலத்துக்கொவ்வாததாக இருப்பதும் அவருக்கு தோன்றவில்லை. அவரது பார்வையிலிருந்து “நமது மாபெரும் மதம் இந்த பிரச்னையை இப்படி அணுகசொல்லியிருக்கிறது. கேள்வி கேட்காமல் அதனை பின்பற்றுவதுதான் இஸ்லாமின் பாதையில் நாம் செல்லவிரும்பினால் செய்யவேண்டியது.” இஸ்லாமில் எதாவது டோக்கியாவுக்கு போகச்சொல்லியிருக்கிறதா? அங்கு வேலை தேடச்சொல்லி சொல்லியிருக்கிறதா? ஒரு பிரச்னைக்கு விளக்கம் குரானில் இல்லை என்றால் ஒரு முஸ்லிம் என்ன செய்யவேண்டும்? டோக்கியோவுக்கு போகாமலிருப்பதா? என்னுடைய சிந்தனை வித்தியாசனமாதாக இருக்கலாம். நான் சொல்ல வருவது இதுதான். நாம் புனித புத்தகத்தை வார்த்தைக்கு வார்த்தை பின்பற்ற வேண்டுமா? பாரிஸுக்கோ, லண்டனுக்கோ, ஆம்ஸ்டர்டாமுக்கோ நியூயார்க்குக்கோ போவதை பற்றி புனித புத்தகத்தில் எதுவும் சொல்லவில்லை என்றால், அந்த நகரங்களுக்கு நாம் போகலாமா? இதுதான் நான் கேட்பது.
நமது சமூகத்தில் இருக்கும் மூளைக்கொவ்வாத பழக்க வழக்கங்களை எல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட நமது மாபெரும் மதத்தின் பெயரால் நாம் சப்பைக்கட்டு கட்டுவதை வெகுகாலம் செய்துவருகிறோம். எனக்கு தெரிந்து எந்த விளக்கமும் தெரியவில்லை. தனது பிரியத்துக்குரிய கணவனோடு ஒரு பெண் சேர்ந்து வாழ விரும்பினால், அதற்காக அந்த பெண்ணின் வாழ்க்கையை இப்படி அழிக்க வேண்டுமா? தலாக் கூறும்படி அந்த பெண் கூக்குரலிடவில்லை. இல்லையா? அவளது கணவனின் படுமுட்டாள்தனத்துக்கு அவள் ஏன் விலையாக வேண்டும்? இந்த ஹிலா திருமணத்தை எப்படியும் சப்பைக்கட்டு கட்டமுடியாது.
பங்களாதேஷ் நீதிமன்றங்களும் உப்புக்கு சப்பாணி அல்ல. ஹிலா திருமணம் பற்றி ஏராளமான கதைகளை காது புளிக்க கேட்டுவிட்டார்கள். பங்காள பெண் தனக்கு நீதி வேண்டும் என்று கேட்பதை பலமுறை கேட்டுவிட்டார்கள். ஹஜ்ரத் உஸ்மானின் கிலாபத்(அரசு)ஆல் பிரசுரிக்கப்பட்ட புத்தகத்தின் பெயரால் நடக்கும் அநீதிகள் அவர்களது மனத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. அதனால்தான், அந்த பத்வா சட்டத்துக்கு புறம்பானது என்று ஜனவரி 1, 2001இல் பங்களாதேஷ் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. ஹிலா திருமணங்களே பங்களாதேஷில் தடை செய்யப்பட வேண்டும் என்று கோருவதுதான் மனிதநேய பார்வையில் சரியானது என்று மற்றவர்களும் இப்போது கூறுவதை கேட்க இனிமையாகவே உள்ளது. என்னிடம் திரும்பவும், புனித புத்தகத்தில் இருக்கிறது என்று கூறவேண்டாம். அது இந்த காலத்தில் பிரயோசனப்படாது.
http://cyber_bangla0.tripod.
(1) http://tamililquran.com/qurandisp.php?start=2
- சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி – 1
- தாகூரின் கீதப் பாமாலை – 34 விடைபெறும் நேரத்தில் !
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)
- சூர்ப்பனகை கர்வபங்கம் – தோற்பாவைக் கூத்து
- தேவதை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –31
- மதிலுகள் ஒரு பார்வை
- கதையே கவிதையாய் (8)
- ஏதோவொன்று
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 40) காதலியைக் கவர்ந்த கள்ளன் !
- சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருது
- நடுங்கும் ஒற்றைப்பூமி
- திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்
- மொழிவது சுகம்- அக்டோபர் 5 -2012
- ரத்தத்தை விடக் கனமானது தண்ணீர்
- நம்பிக்கை ஒளி (2)
- முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்
- விற்பனைக்கு வர இன்னும் சில தினங்களே! திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்
- அக்னிப்பிரவேசம் – 4
- யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான்
- அம்மாவின் மோதிரம்
- குருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- ஹிலா திருமணம் என்ற சாபம்