வாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்

This entry is part 3 of 23 in the series 14 அக்டோபர் 2012

மேலாண்மை தத்துவத்தில் விவாதங்கள் நடைபெறும் முறைகளை பலவாறாக வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு விவாத முறையும் வெவ்வேறான உத்திகளை கொண்டுள்ளது. இவற்றில் Brainstorming, Reverse Brainstorming, Charette Procedure, Crawford Slip Writing Technique, Reframing Matrix, Concept Fan, Appreciative Inquiry, Affinity Diagrams போன்றவை சில உத்திகளாகும். சில சமயங்களில் இதில் எந்த முறையிலும் அடங்காமல் சில விவாதங்கள் நடைபெறும். அதை பற்றி ஜாலியாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். நீங்களும் படிச்சு சிரிச்சு சந்தோசமாக இருங்க.

 

முதலில் ஒரு விவாதம் என்பது எப்படி ஆரம்பிக்கிறது என்று பார்ப்போம். ஒரு இணைய இதழில் ஒருவர் “மைசூர் போண்டா” செய்வது எப்படி என்று ஒரு கட்டுரை எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதை ஒருவர் படித்துவிட்டு விவாதத்தை இப்படி ஆரம்பிப்பார்.

 

”நீங்கள் மைசூர் போண்டாவை தேர்ந்தெடுத்ததில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது.” விவாதத்தை ஆரம்பிப்பவர்

 

”இல்லீங்க எந்த உள்நோக்கமும் இல்லீங்க” என்று பதிலுரைப்பார் கட்டுரை எழுதியவர்.

 

”மைசூரில் உயர்ந்த சாதியை சேர்ந்த மனிதர்கள் தாழ்த்தப்பட்டவர்களை மைசூர் போண்டா சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருள சொல்லி இருக்கிறார்கள். அந்த உயர் சாதி இந்துக்களுக்கு ஆதரவாகத்தான் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.”

“அய்யோ, அப்படி எல்லாம் நான் நினைக்கவே இல்லை. எனக்கு அந்த விசயமே தெரியாதுங்க. நான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான ஆள் இல்லீங்க. ஒரு நாள் நல்ல மழை. என் மனைவி போண்டா சுட்டாங்க. நல்லா இருந்துச்சு. சரி எல்லாருக்கும் சொல்லலாமேன்னு தோணுச்சு. அதை கட்டுரையா எழுதீட்டேன். அதிலயும் கூட என் மனைவிதாங்க செய்முறை சொன்னாங்க. நான் வேற ஒரு தப்பும் பண்ணலீங்க.”

 

”ஒஹோ, உங்க மனைவிக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா? அவரும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவரா? நான் சொன்ன விசயம் ஹிண்டுலேய வந்திருக்கே. தெரியாத மாதிரி நடிக்கீறீங்க.”

 

”சே சே. அவங்க அப்படி எல்லாம் இல்லீங்க. என் பையன் கூட போண்டா நல்லா இருக்குன்னு சொன்னாங்க.”

 

”ஓஓஓ. உங்க பையனும் அப்படிதானா? குடும்பமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானதா?”

 

”இல்லவே இல்லீங்க. அது போண்டா பற்றிய கட்டுரைதாங்க. நீங்க தவறா புரின்சுகிட்டீங்க.”

 

“அப்படி சமையல் குறிப்பு எழுதனும்னா ஒரு மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படின்னு எழுதி இருக்கலாமே?”

 

”சரிங்க. உங்க மனசு புண்பட்டிருந்தா மன்னிச்சுக்கங்க. இனிமேல், பஜ்ஜி செய்யுறத பத்தி எழுதறேன். எனக்கு எதுக்குங்க வம்பு.”

 

அடுத்து அதே எழுத்தாளர் “குடை மிளகாய் பஜ்ஜி” செய்வது எப்படி என்று ஒரு கட்டுரையை எழுதிவிட்டு ஆர்வமாக விவாதத்திற்கு காத்திருக்கிறார்.

 

திரும்ப பழைய ஆள் விவாதத்தை ஆரம்பிக்கிறார்.

”இதிலும் உங்கள் உள் நோக்கம் தெரிந்துவிட்டது”.

 

”ஐயகோ, இதிலுமா? நீங்க சொன்னதால் தானேங்க பஜ்ஜி செய்வது எப்படின்னு எழுதியிருக்கேன்.”

 

”நான் பஜ்ஜி செய்வது எப்படின்னு தானே எழுத சொன்னேன். நீங்க ஏன் குடையை சேர்த்துகிட்டீங்க. அங்க தாங்க இருக்கு மாட்டர். சரி. இதுக்கு பதில் சொல்லுங்க. குடை என்ன கலர்ல இருக்கும்? என் பதிலை உங்கள் பதில் மடல் பார்த்தவுடன் எழுதுகிறேன்.”

 

”இது என்னங்க பெரிய கேள்வி. குடை பொதுவா கருப்பாதாங்க இருக்கும்.”

 

”சரியா சொன்னீங்க. தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் கருப்பா இருப்பாங்கன்னு குத்தி காட்றீங்களா? இது கண்டிப்பா தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கட்டுரைதான். நான் உங்கள பஜ்ஜி பத்தி எழுத சொன்னா அங்க எதுக்கு கருப்பு குடை வருது. உயர் சாதி திமிர்.”

 

கட்டுரை எழுதியவர் இதை படித்து விட்டு ரத்த அழுத்தம் அதிகமாக கணினி கீ போர்டை போட்டு உடைத்து மயங்கி விழுகிறார். அவர் குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு போகிறார்கள். டாக்டர் தனியாக அவரிடம் பேசிவிட்டு மருந்து சீட்டை எழுதி கொடுக்கிறார். குடும்பத்தார் மருந்து சீட்டை வாங்கி பார்க்கிறார்கள்.

 

அதில்,

”இணைய இதழ்களில் எழுதுவது, படிப்பதை நிறுத்தவும்” என்று இருக்கிறது.

 

இப்பொழுதெல்லாம் எழுத்தாளர் போண்டா, பஜ்ஜி சாப்பிடுவதையே விட்டு விட்டதாக கேள்வி.

பி.கு:  “இக்கட்டுரையில் வரும் சம்பவங்களும் நபர்களும் கற்பனையே. யாரையும், எதையும் குறிப்பிடுவன அல்ல”

Series Navigationசாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி -2பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம
author

அ.லெட்சுமணன்

Similar Posts

27 Comments

 1. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  ஆஹா ‘மைசூர் போண்டா’வை தேர்ந்தேடுத்ததிலிருந்தே தெரியவில்லையா இவர் ‘தமிழினத்தின் எதிரி’, தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கன்னடத்தானின் அடி வருடி என்று ? :))

 2. Avatar
  Kavya says:

  கட்டுரையை எழுதியவர் தன் கட்டுரையை உயர்ந்த எண்ணத்தைக்கொண்டது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தால், ஒன்று, அதை எப்படி என்று விளக்குவார்; இல்லாவிட்டால், ஒன்றும் சொல்லாமல் படிப்பவர் தன் விருப்பப்படி பார்க்கட்டும் என்று விட்டுவிடுவார்.

  அதற்கு மாறாக, இரத்த அழுத்தம் வந்து மயங்கி விழுந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி ஆகின், அவர் எழுத்தில் அவருக்கு நம்பிக்கையில்லையென்றுதான் வரும். மேலும், அவ்வெழுத்து ஒரு தீமையைப் பரவிவிடும் நோக்கத்தின் எழுத்ப்பட்டிருந்தால், அதை மற்றவர்கள் கண்டுபிடித்துவிட்டார்களோ என்ற அச்சம் அவருக்கு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

  குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். மடியில் கனமிருந்தால் வழியில் பயமுண்டு.

  நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் எழுத்தாளர்களுக்குத் தேவை. இல்லையென்றால் அவர்கள் குற்றம் செய்திருக்கிறார்கள் என்றே பொருள். எட்டுணையும் ஐயமில் !

 3. Avatar
  Kavya says:

  எழுத்தாளர்கள் சமூகத்தில் நச்சு கருத்துக்களை பரவவிட்டு மக்களின் வாழ்க்கையைக் கெடுக்கும் செயலில் இறங்க எழுதக்கூடாது. குறிப்பாக, சமூகக்கட்டுரைகளை வரைவோருக்கு இஃது அவசியம். எனினும் சிலர் இத்தீச்செயலில் இறங்குவர்; அவர்தம் எழுத்துக்களிலுள்ள நஞ்சைச் சுட்டிக்காட்டி படிப்போரை எச்சரிப்பது சமூக நலனில் அக்கறையும் அவாவும் கொண்டோரின் தார்மீகக்கடமையாகும்.

  எத்தனை நக்கல்களும் இழிச்சொற்களும் தம்மீது ஏவவிடப்பட்டாலும், இக்கடமையை நல்லோர் செய்தே ஆகவேண்டும்.

  அடிக்க அடிக்க அம்மியும் நகரும். எடுத்துக்காட்ட எடுத்துக்காட்ட எழுதியோர் இனியும் எழுதாமல் தம்மைத் திருத்திக்கொள்ள பார்ப்பர் என்ற நம்பிக்கைதான்!

  திண்ணைக் கட்டுரைகளும் அவ்வாறு கணிப்புக்குட்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படவேண்டும். இல்லையென்றால் போலிகள் உண்மைகள் என்று விநியோகிக்கபடுமன்றோ?

 4. Avatar
  Rams says:

  ஒரு திருத்தம் .. முதலில் கட்டுரை எழுதியவரை சற்று தடுமாற வைக்க வேண்டும்..
  உ.ம் : ” முதலில் சரியாக தமிழ் எழுத கற்கவும்”.
  ஏகப் பட்ட எழுத்து பிழைகள்.. அல்லது , இந்த வார்த்தை , தமிழே அல்ல, இது வட மொழி திணிப்பு. இந்த குற்றச்சாட்டை தமிழில்தான் எழுத வேண்டும் என்பதில்லை.. எஸ்.எம்.எஸ். ஆங்கிலத்திலும் எழுதலாம், ஏனென்றால் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர் திண்ணையில் அதிகம் காண்பதில்லை.

  அடுத்து மேலும் குழ்ப்ப, கட்டுரையின் முக்கியமில்லாத ஒரு வரிக்கு அதி முக்கியம் கொடுத்து வாதிடலாம்..
  உ.ம்: மிளகாய் பஜ்ஜியின் காரமே அதிக ருசி என்று எழுத தூண்டியது உயர் சாதி நாக்கு. மிளகாய்தான் அதிக ருசி என்றால், அதை மட்டும் எண்ணையில் போடாமல், எதேச்சதிகாரமாய், மாவை அதன் விருப்பட்திற்கு மாறாக போட்டது தவறு. மேலும் மற்ற பஜ்ஜியெல்லாம் ருசி அற்றவை என்ற நீங்கள் சமைத்தால், அதை ஒத்துக்கொள்ள முடியாது.

  1. Avatar
   Kavya says:

   ராமுக்கு நன்றிகள். தமிழ் பிழைகளில்லாமல் எழுதப்படவேண்டும். அப்படி பிழைகளிருப்பின் அவை சுட்டிக்காட்டப்பட வேண்டும் பிறரால்.

   ஆங்கில இணைய தளங்களில் சரியாக எழுதும் தமிழர், தமிழ் தளத்தில் எப்படி எழுதினாலும் போட்டுவிடுவார்கள்; படிப்பவர்களும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

   சுதாகர் எழுதிய சிறுகதையில் குண்டுவுக்கு என்பதை குண்டியிற்கு என்று எழுதுகிறார். இன்னொருவரோ, இயற்கை என்ற சொல்லை திரும்பதிரும்ப இயர்கையென்றும், மாறி என்ற சொல்லை, மாரி என்றும் எழுதுகிறார்.

   கவிதையிலும் கூட அடைப்படை இலக்கண அல்லது சொற்பிழைகள்.

   பன்மை, ஒருமை விகுதிகளைத் தமிழர் முற்றிலும் மறந்து விட்டார். சந்திப்பிழைகள் ஏராளம். வல்லெழுத்து மிகுமிடம், மிகாவிடம் என்னவென்றே தெரிவதில்லை. றகரத்துக்குப் பின் ககரம் வராது என்று எந்த தமிழ் ஆசிரியரும் சொல்லிக்கொடுக்கவில்லை போலும். என்ன கல்வி பெற்றார்கள் இவர்கள்?

   பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுதவேண்டாம். எளிய தமிழில் ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவி, அல்லது மாணவனிடம் எதிர்ப்பார்க்கும் தமிழாவது இருக்கக்கூடாதா திண்ணையில்?

   ராம்ஸ் எனப்வர் சிந்திக்கலாம் இக்கேள்வியை.

 5. Avatar
  இளங்கோ says:

  சொல்ல வந்ததை சுருக்கமா, ஆனா தெளிவா சொல்லிட்டீங்க..படைப்பாளிகள் தங்கள் படைப்பின் தரத்தை உயர்த்த வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு விமர்சகர்களும் தங்களை அவ்வப்போது உரசிப் பார்க்க வேண்டும், தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். படைப்பாளியைப் போலவே விமர்சகனையும் வாசகர்கள் மதிப்பீடு செய்கிறார்கள் என்பதையும், விமர்சகனின் விருப்பு வெறுப்பற்ற கருத்துக்கள் படைப்புகளின், சமகால இலக்கியத்தின், தரத்தையும் உயர்த்தும் என்பதையும் விமர்சகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

  1. Avatar
   Kavya says:

   இளங்கோ அருமையாகச் சொல்லிவிட்டார். விமர்ச்கர்கள் வெறுமனவே ‘மலைத்தேன், வியந்தேன்’ என்று தேன்களாக அடுக்கிவிடாமல், உய்த்துணர்ந்த விமர்சனங்களை படிப்போரின் சிந்தனைக்கு விருந்தாகயிருக்கும்படி வைக்கவேண்டும்.

 6. Avatar
  கௌதமன் says:

  வாழ்த்துக்கள் அ.லெட்சுமணன்! உமது அலசல் யாரைச் சென்று அடைய வேண்டுமென்று நீங்கள் நினைத்ததாக நான் நினைத்தேனோ (:-)), அவரை சரியாகச் சென்று அடைந்து விட்டதை பின்னூட்டங்கள் காட்டுகின்றன.

 7. Avatar
  Rams says:

  தமிழில் எழுதிய பின்னூட்டங்களுக்கு பிழை கண்டு சுட்டிக்காட்டுவது மிகவும் தேவையான ஒன்றே. ஆனால் அது ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும் என்பதே எனது அவா. வெறுமனே ‘ உனது தமிழில் பிழை உள்ளது .. இதைக்கூட சரிசெய்ய இயலவில்லையா ‘ என்பதற்கு பதில் என்ன தவறென்று சரியாக சுட்டிக்காட்டினால் எழுதுபவர் கற்றுக்கொள்வர். குறை கூறுபவர் மீது மேலும் மதிப்பு உயரும். தமிழின் மீதான ஆர்வமும் படிப்பும் பல வருடங்களாகவே தரத்தில் பின்னோக்கியே சென்றுவருகிறது. தமிழை நன்கு அறிந்தோர்தான் அதை சரி செய்ய முயல வேண்டும். ஆங்கிலத்தில் உள்ளது போல் (வழக்குத்தமிழ் ) அகராதிகளை திண்ணையுடன் இணைக்க முடியுமா ?
  கருத்துப் பிழைகளுக்கு விளக்கத்துடன் பதில் அளிப்பதுபோல் எழுத்து பிழைகளையும் விளக்காமல் குற்றம் சாட்டுவது ‘ மலைத்தேன், வியந்தேன்’ என்று கூறுவதற்கு சமம் என்று கூறலாமா?

  1. Avatar
   K A V Y A says:

   தமிழ்ப்பிழைகளைச் சுட்டிக்காட்டுவோர் தன்னைப் பிறர் மதிக்க வேண்டுமென்று செய்வதில்லை. அவற்றை விளக்கப்புகின் ஒரு கட்டுரைக்கான பின்னூட்டக்களம் இலக்கணவகுப்பாக இலகுவாக மாறிவிடும். ஆக்கப்பூர்வம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எவரும் எவருக்கும் ஆசிரியர் வேலையிங்கு பார்க்கவில்லை.

   போகிறபோக்கில் காட்டப்படுகின்றன அவை. எழுதுபவர் அடுத்த தடவை ஒரு பொறுப்புணர்ச்சியோடு எழுதுவார். சிலர் நனறாக எழுதுகிறார்கள். தமிழ் தெரியாவிட்டால் பரவாயில்லை. அவர்கள் எப்படியாவது பேசினால் போதும் என்ற நிலையில் செய்யும்போது இரசிக்கலாம். அல்லது விட்டுவிடலாம். எ.கா. ஒரு சேட்டு: நிம்ப்ள் மேல் நம்பள் கோர்ட்டு மேலோ போறான்!’

   இஃதை இரசிக்கலாம். அவர் தமிழுக்குப் புதியவர். அல்லது அம்மொழி அவருக்கு முடியவில்லை. எனினும் முய்ல்கிறார்.

   அவரின் நிலையா இங்குள்ளவர்களுக்கு? அனைவருக்கும் தாய்மொழி தமிழ்தானே? செந்தமிழிலில் எழுதத்தேவையில்லை. அது செயறகையும் கூட. எளிய தமிழில் எழுதினால் போதும்.

   Tamil is your mother tongue. It has within itself a whole heritage of your ancestors and your parents. A vibrant both ancient and modern, literature of which you are rightly proud of. It is a beautiful language, as beautiful if not more, than English.

   Disrespect to your mother tongue is disrespect to your own parents because they passed the priceless heritage to you and they expect you pass it to your children exactly as given to you. Be conscientious.

 8. Avatar
  paandiyan says:

  ஆங்கிலத்தில் இதை எல்லாம் கண்டு கொள்வது இல்லை. என்ன விஷயம் என்று புரிந்தால் சரி என்று விட்டு விடுகின்றார்கள். உதரணமாக comming யை coming என்று எழுதினால் அங்கு யாரும் பெரிய விஷயமாக பேசுவது இல்லை. இங்குதான் என்னோவோ இவர்கள் தான் ஒரு மொழியை கண்டுபுடித்தது போலவும் இவர்களிடம் தான் படென்ட் இருபது போலவும் குதிகின்ரார்கள். கட்டுரை சரி இல்லை என்றால் அதை படித்து நன்றாக சிரித்து எப்படி பின்னூடம் போடுகின்றார்கள் என்று புரியவில்லை. இது ஒன்றும் நோபெல் பரிசு வாங்க போகும் இலக்கிய நாவல் இல்லை . உண்மையை — அவர்களை மாதரி கத்தி கதறி சொல்லாமல் கொல்லாமல் நகைசுவைக்காக எழுதப்பட்டு ஒன்று . அதை மனதில் வைத்து படித்தால் ஒரு பிரச்னை இல்லை …–வாழ்த்துக்கள் லெட்சுமணன்.

  1. Avatar
   K A V Y A says:

   எந்த கட்டுரையும் இங்கு ஒரு நோக்கமில்லாமல் போடபபடுவதில்லை. நகைச்சுவையும் ஒரு நோக்கமே. வெறும் நகைச்சுவையெனபது கோமாளிதனத்தில் மட்டுமே முடியும். குழந்தைகளுக்காக கோமாளிகள் தரும் நகைச்சுவை குழ்ந்தைகள் சிரித்துவிட மட்டுமே. பெரியவர்களுக்காக சர்க்கஸில் கோமாளிகள் இல்லையென்பதை அறிக.

   இணைய தள நகைச்சுவைக் கட்டுரைகள் அங்கத வகையைச்சேர்ந்தவை. அஙகதம் ஒரு நோக்கத்தையடையவே செய்ய்யபடுவது. இல்லாவிட்டால் கோமாளித்த்னம்தாம்.

   எப்படியும் எழுதலாம் தமிழ்ப்பொது அரங்குக்ளில் என்ற் கோரிக்கையை அங்கதமாகச் சொல்கிறது. இக்கட்டுரை. இஃது ஆபத்தானது; ந்ல்லதன்று. படித்து விட்டுச் சிரித்தால் தமிழை அவம்திப்புச் செய்தலாகும்.

   எல்லாரும் இக்கட்டுரைப்பொருளைஆதரித்தால், – சொல்லி விடட்டுமா? –

   ‘தமிழினி மெல்லச்சாகும்!”

 9. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அபாரம் லெட்சுமணன். லெட்சுமணனால் எழுதப்பட்டாலும் ராமபாணம் தான் போங்கள். இலக்கு தவறவேயில்லையே!!!!

  பின்னிட்டும் (விதண்டா) வாதத்தினரின் பல உத்திகளை விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.

  ஒரே ஆள் பல பெயரில் கருத்துக்கள் பதிவது ஒரு உத்தி.

  உதாரணத்திற்கு ரம்யா என்ற பெயரில் “மைசூர் போண்டா” என்ற பெயரில் உயர் ஜாதியினருக்கு வக்காலத்து வாங்கும் படி எழுதிய எழுத்தாளர் உயர் ஜாதிக்காரர் என்று ஜாதிச்சான்றிதழ் அளிப்பார்.

  பின்னர் அதே அன்பர் திருத்துழாய்மார்பன் என்று இன்னொரு அவதாரம் எடுத்து, umbrella is black, everybody can understand as to why this writer has written an article on “kudaimilagai” with ill intentions. He should mend himself. We would not tire until the writer mend himself. எனக்குப்பார் எவ்வளவு தமிழ்ப்பற்று. நான் தமிழில் மட்டும் தான் எழுதுவேன். தமிழ் என் மூச்சு. தமிழ் என் பேச்சு. தமிழ் என் தும்மல். தமிழ் என் விக்கல். எழுத்தாளருக்கு தமிழ்ப்பற்று இருந்தால் கன்னடத்தில் விளையும் (பெங்களூரு) குடை மிளகாயைப்பற்றி எழுதுவாரா. தமிழ் மிளகாயைப்பற்றியோ வெங்காயத்தைப்பற்றியோ இவருக்கு ஏன் தோன்றவில்லை. எழுத்தாளர் ஜாதிவெறியர் மட்டுமில்லை. தமிழுக்கும் எதிரி என்பதையும் இதன் மூலம் தெரிவித்து விட்டார் என்று அசத்துவார்.

  போதாதென்று ஜார்ஜ் கமலன் ஃபெர்னாண்டஸ் என்று இன்னொரு அவதாரம் எடுத்து நான் ஆழ்வார்களைக் கரைத்துக் குடித்து பின்னர் சவால் விடுகிறேன். எந்த ஆழ்வாராவது போண்டாவைப் பற்றியாவது பஜ்ஜியைப் பற்றியாவது எழுதியுள்ளாரா? அப்படியிருக்க செல்லப்பிள்ளை கோயில் கொண்டிருக்கும் மைசூரை வேண்டுமென்றே போண்டாவுடன் இணைத்து சிரிவைணவர்களை நக்கலடிப்பதற்காகவே எழுத்தாளர் இப்படியெல்லாம் ஆகாத்தியம் பண்ணுகிறார். ஏன் தமிழ்ப்பற்று இருந்தால் பரிசுத்தமான ஆவியில் வேகும் இட்டலியைப்பற்றி இவர் எழுதியிருக்கலாமே என்பார். ஆவி சம்பந்தம் கூடாது என மத வெறியும் கூட எழுத்தாளரின் எழுத்துக்களில் தொனிக்கிறது என கனல் தெறிக்க அசத்துவார்.

  வாசிப்பவர்கள் எல்லாரும் பாருங்கய்யா போண்டா பஜ்ஜி பற்றி எழுதினாலும் கூட எழுத்தாளர் எப்படி ஜாதி வெறி மொழி இளக்காரம் எல்லாம் கொண்டுள்ளார் என திகைப்பர். அதுவும் ஆண் பெண், ஹிந்து க்றைஸ்தவர் என பால் மத வேறுபாடி இல்லாது இப்படி பலபேரும் எழுத்தாளரை சாத்து சாத்து என சாத்தினால் உண்மை இருக்கலாமே என எண்ணுவர்.

  1. Avatar
   paandiyan says:

   இன்னும் ஒன்று விட்டு விட்டீர்கள.. பெயரை வைத்து ஜாதியை கண்டுபுடிபது அப்படி கண்டுபுடிக்க முடியவில்லை என்றால் கோவத்தில் கத்துவது . என்னைய ஒரு பின்னூட்டத்தில் பாண்டியன் எப்படி பிராமின் க்கு ஆதராவாக எழுத முடியும் என்று கத்திய கூட்டம் இங்கு உண்டு. இந்த ஜாதி இன்ன பெயராகத்தான் இருக்கவேண்டும் என்று இங்கு தெளிவாக உள்ளார்கள் . தமிழன் இந்தவிசயத்தில் வெரி strong . அது சரி 1967 இல் இருந்து இவர்களுக்கு VERY STRONG experience இருகின்றதே !!

  2. Avatar
   Kavya says:

   அற்புதம். இலக்குமணனின் கட்டுரையை இவரே எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். Krisha kumaar’s feedback comments read more interesting than Lakhsmanan’s main essay.

   கிருஸ்ணகுமாரிடன் ஒரு கேள்வி. இங்கு இப்போது நீங்கள் எழுதியவற்றில் ஒரு வடமொழிச்சொல் கூட இல்லை. இப்படி தமிழில் அழகாக எழுதத் தெரிந்த நீங்கள் ஏன எவருக்குமே புரியாத வடமொழிச்சொற்களைப்போட்டு எழுதுகிறீர்கள்? பத்தாண்டு என்பதை தசாப்தம் என்று எழுதுகிறீர்களே? ’பத்தாண்டு’ என்று உங்களுக்கும் தெரியும்; படிப்பவருக்கும் புரியும். பின், ’தசாபதம்’ ஏன்? ’பதில்’ என்று உங்களுக்கும் தெரியும், படிப்பவருக்கும் புரியும். பின், ’உத்தரம்’ ஏன்? ஞானச்செருக்கு என்பதைத்தவிர வேறென்ன சொல்லமுடியும்?

   //நான் தமிழில் மட்டும் தான் எழுதுவேன். தமிழ் என் மூச்சு. தமிழ் என் பேச்சு. தமிழ் என் தும்மல். தமிழ் என் விக்கல்//

   அப்படியெல்லாம் நான் தமிழைப் பார்க்கவில்லை. ஆங்கிலமே எனக்குப்பிடித்த மொழி. தமிழ் இரண்டாவதுதான் என்பதை திண்ணையில் பலவிடங்களில் எழுதியிருக்கிறேன். தமிழ் வெறியர்களை எனக்கும் பிடிக்காது.

   இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தமிழைப் பள்ளியில் குழந்தைப் பருவத்திலிருந்து பன்னிரன்டாம் வகுப்புவரை படித்து வெளிவருகிறார்கள். ஆக மொத்தம், 14 ஆண்டுகள் மழலை வகுப்புகளையும் சேர்த்து. தாய்மொழி தமிழ். வெளியிடமும் தமிழ்நாடே. தமிழைத்தாய்மொழியாகக்கொண்டோரான ஆசிரியர்களிடமே கற்கிறார்கள்.

   இருப்பினும் ’இயற்கை’ என்ற சொல்லை, இயர்கை என்றும், மாறி மாறி என்பதை மாரி மாரி என்றும் எழுதுபவரின் பத்தாண்டு படிப்பு என்னவாயிற்று? இவர்கள் ஆங்கிலத்தைப்படிக்க அவ்வளவு மெனக்கெடுவார்கள் இல்லையா?

   உங்கள் கருத்தென்ன கிருஸ்ணகுமார்?

 10. Avatar
  புனைப்பெயரில் says:

  சபாஷ்… காவ்யாக்களுக்கு இனி மைசூர் போண்டா என்றில்லை.. மதுரை புராட்டாவில் கூட ஜாதி தெரியும்..

  1. Avatar
   Kavya says:

   மதுரைக்கு வெளியே கிராமங்களில் டீ டம்பளர்களில் ஜாதி உண்டு. இர்ட்டைத்தம்ளர் முறைதான்.

 11. Avatar
  ஷாலி says:

  பாவம் க்ருஷ்ண குமார், ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவர் பின்னூட்டத்திலேயே தெரிகிறது.

 12. Avatar
  இளங்கோ says:

  /* விமர்ச்கர்கள் வெறுமனவே ‘மலைத்தேன், வியந்தேன்’ என்று தேன்களாக அடுக்கிவிடாமல்,*/

  அதே போல் “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்றும் விமர்சிக்கக்கூடாது என்பது என் அவா.

  1. Avatar
   Kavya says:

   ரொமப் சரி இளங்கோ. விமர்ச்கர்களுக்கும் பொறுப்பு உண்டு. இஃது உங்கள் அவா மட்டுமன்று. அனைவரிந்தான்.

 13. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \இணைய தள நகைச்சுவைக் கட்டுரைகள் அங்கத வகையைச்சேர்ந்தவை. அஙகதம் ஒரு நோக்கத்தையடையவே செய்ய்யபடுவது. இல்லாவிட்டால் கோமாளித்த்னம்தாம்.
  எப்படியும் எழுதலாம் தமிழ்ப்பொது அரங்குக்ளில் என்ற் கோரிக்கையை அங்கதமாகச் சொல்கிறது. இக்கட்டுரை. இஃது ஆபத்தானது; ந்ல்லதன்று. படித்து விட்டுச் சிரித்தால் தமிழை அவம்திப்புச் செய்தலாகும்.\

  அன்பார்ந்த காவ்யா, தங்களுடைய கணிப்பு முற்றிலும் தவறு.

  நகைச்சுவையுடன் மிக முக்யமான கருத்தை எழுத்தாளர் பகிர்ந்துள்ளார். பேசுபொருளிலிருந்து முற்றிலும் விலகி எப்படி விதண்டாவாதங்கள் இணையதளத்தின் நோக்கத்தையே செல்லாக்காசாக ஆக்குகிறது என்பது தான் இங்கு விவாதத்திற்குறிய பொருள்.

  காமா சோமாவென்று சம்பந்தமே இல்லாது விவாதத்தை திசை திருப்புவது ஒவ்வொரு திரியிலும் நிகழ்ந்து வரும் அவலம். இந்த இம்சை தாங்காது தான் ஸ்ரீ லெட்சுமணன் அவர்கள் இப்படி எழுதப்புகுந்தார் போலும்.
  ஆம் விதண்டாவாதிகளுக்கு இக்கட்டுரை ஆபத்து மணி.

  \எல்லாரும் இக்கட்டுரைப்பொருளைஆதரித்தால், – சொல்லி விடட்டுமா? –
  ‘தமிழினி மெல்லச்சாகும்!”\

  கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழா தமிழா என்னை கடலில் போட்டால் கட்டுமரமாக ஆவேன் என்று சொல்வதையெல்லாம் விஞ்சி விடுவீர்கள் போல இருக்கிறது.

  தமிழ் மொழி எழுதுமுறைக்கும் அல்லது மொழிப்பயன்பாட்டிற்கும் இக்கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்.

  வழக்கம் போல ஏன் திசைதிருப்புகிறீர்கள் ஐயன்மீர்?

  விதண்டாவாதம் கட்டுரையின் நோக்கத்தையும் இணையதளத்தின் நோக்கத்தையும் திசை திருப்புகிறது என்பது தான் கட்டுரையின் பேசுபொருள்.

  அப்படிச் சொல்வது ஆர் ஆர் (யார் யார் என்பது தான் சரி என்பது இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்த சொல்கிறது) என்று பிழையான தமிழில் வறுத்தெடுக்காதீர்கள். இப்படியெல்லாம் வறுத்தெடுத்தால் தான் தமிழினி மெல்லச்சாகும். இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் அனைவருக்கும் மற்றும் கட்டுரையாசிரியர் உள்பட அனைவரின் ஆதங்கமும் விதண்டாவாதத்தை சுட்டிக்காட்டுவது தான் அன்பரே.

  தமிழ் என்ற சோற்றில் விதண்டாவாதம் என்ற முழுப்பூசணிக்காயை மறைக்க முயலாதீர்கள்.

  1. Avatar
   K A V Y A says:

   கிருஸ்ணகுமார்ஜி!

   கட்டுரையின் நோக்கம் தங்கள் தங்கள் விருப்பத்துக்குத் தகுந்தாற்போல புரிகிறார்கள்.

   தமிழுக்கு வருவோம். கருநாநிதியிடம் ஏன் போகிறீர்கள்? நானல்லவா உங்கள் முன் நிற்கிறேன்? தமிழ்மொழிதான் பேசப்படுகிறதோயொழிய தமிழ்ப்பண்பாடு பேசப்படவில்லை. எப்படியும் தமிழைக்கொலை பண்ணிவிடலாம். எனினும் தமிழினிச்சாகாது என்பதை எந்த தமிழறிஞர்களும், தமிழார்வலரும் ஏற்கவில்லை. இது திண்ணம். இன்றைய தமிழகத்தில் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நாமளித்த இளக்காரம். இறுக்கிப்பிடிக்கத் தவறியதால், இன்று தமிழக அரசு ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தி தமிழை அழிக்கப்பார்க்கிறது.

   இக்கட்டுரையில் நல்ல தமிழைப் பரிகாசம் செய்கிறது. சமூக அநீதிகளைத் தட்டிகேட்பபாரை கிண்டல்டிக்கிறது. இதை மறுக்க முடியுமா உங்களால்?

   தமிழ், தமிழ் எழுதும் முறை, இவையெல்லாம் பின்னூட்டங்களில் பேசப்படல் திசைதிருப்பும் முயற்சியன்று. இக்கட்டுரை அப்படி விசாலமானது. கட்டுரையாளர் தன் எண்ணங்களை ஒரு சோதனைக்குட்படுத்த ஏதுவாகலாம்.

 14. Avatar
  Kavya says:

  //”மைசூரில் உயர்ந்த சாதியை சேர்ந்த மனிதர்கள் தாழ்த்தப்பட்டவர்களை மைசூர் போண்டா சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருள சொல்லி இருக்கிறார்கள். அந்த உயர் சாதி இந்துக்களுக்கு ஆதரவாகத்தான் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.”//

  இது ஒரு கட்டாயமாகப்பார்க்கப்பட வேண்டிய சொற்றொடர். நகைச்சுவையில்லை அங்கதமென்றேன். அங்கதம் ஒரு நோக்கத்தை அடைய, அல்லது படிப்போருக்குத் தெரிவிப்பது. Satire has an intended purpose. It just does not ridicule someone. Rather, it uses the device of ridicule to bring home to the readers to know the mesasage that the act of the person under ridicule is worthless or harmful.

  இதுதான் அங்கதமாகும். இலக்கியப்படைப்பிலக்கணத்தில் இஃது ஒரு உறுப்பு. எல்லா மொழிகளிலும் உண்டு. ஆங்கிலத்தில் வெகு பிரபலம். அங்கதத்தின் நோக்கம் ஒரு சமூக நலனே என்பாரங்கே. அதுவே தமிழிலும் இருக்கவேண்டும்.

  இந்த அங்கதம் என்ன செய்கிறது என்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கிறது.

  மட சேனா என்பது ஒரு கோயில் விழா. கருநாடக மாநிலத்தில் தும்குர் மாவட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடக்கும் அந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சி, பிராமணர்கள் எனத் தங்களை வருணித்துக்கொள்ளும் கன்னட பிராமணர்கள் விருந்துண்டபின் அந்த எச்சில் இலைகளிலன்மேல் பிராமணர்களல்ல்லாதோர் விழுந்து உருண்டு புரண்டெழுந்தால் சுப்பிரமணிய சுவாமி அருளால் தோல் நோய்கள் குணமாகுமமாம். இவ்விழா ஆண்டு தோறும் நடக்கிறது. போனவாண்டு தி ஹிந்து நாளிதழ இதைக்கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தது. அதையொட்டி இங்கு கட்டுரையாக நான் வரைந்திருந்தேன்.

  அதைத்தான் இலக்குமண்ன் தன் அங்கதக்கட்டுரையில் சொல்லி நம்மைப்புரிய வைக்கிறார் இப்படிப்பட்ட பிராமணத்தூடனை பண்ணக்கூடாது என்பதைத்தான் நாம் புரியவேண்டுமென அங்கதம் அமைகிறது. மேலே சுட்டிய அவரின் எழுத்துக்களைப்படியுங்கள். நகைச்சுவையா? சிரித்துவிட்டுப்போய்விடலாம? முடியாது. ஏன்? சமூகக் குற்றம் இவ்விழா. ஒரு ஜாதியார் தங்களைப் புனிதர்கள் என்று மற்றவரை இறைவன் பெயரைச்சொல்லி ஏமாற்றுகிறார். அதைச்சுட்டிக்காட்டுவது தவறென்கிற கருத்தைக் காட்டவே இந்த அங்கதக்கட்டுரை.

  இப்படியாக சமுகத் தீமைகள் திண்ணையில் சுட்டிக்காட்டப்பட்டால் அக்குற்றங்களை தமக்குப்பிடித்தோர் செய்திருந்தால் மட்டுமே ஒரு அங்கதக்கட்டுரை எழுதப்பட்டு, இஃது ஆரையும் குறிப்பிடுவதன்று என்று முடிக்கப்படும்.

  எல்லா எழுத்துக்களுமே பொதுவில் வைக்கப்பட்டால் ஒரு சமூக நலன், அல்லது அக்கறையில் முடியப்படவேண்டும். வடிவேலுவின் நகைச்சுவையில் கூட சமூக அக்கறையும் நலனும் உண்டு. ஊரை ஏமாற்றித்திரிபவன் கடைசியில் கண்டு பிடிக்க்ப்பட்டு அவ்வூரார் தண்டிக்கப்படுவான் என்பதே அவரின் நகைச்சுவை காட்டும் பொதுநலக்கருத்து.

  Tears behind laughter. Or a social message. This is the true purpose of comedy.

 15. Avatar
  Kavya says:

  சில இணைய தள் விவாதங்களின் சமூக அரசியல் சார்ந்த தலைப்புக்களின் பங்கு பெற்ற போது கிடைத்த அனுபவமே இங்கும் கிடைக்கிறது.

  குழுக்களாக விவாதம்புரிவோர் சேர்ந்து கொள்வர். ஒரு குழுவினர் அல்லது அக்குழு உறுப்பினர் வைக்கும் வாதங்களை அங்கேயே அவரால் எதிர்க்க முடியாதபடி அஃது அமைந்துவிடும். எனவே காத்திருப்பார்கள் வேறு இடத்திற்காக. அவ்விடம் அமையப்பெறும்போது அங்கு குழுமிவிடுவார்கள்./

  இங்கு எழுதுபவர்கள் ஏன் மட சேனா கட்டுரையில், தாங்கள் கன்னட பிராமணர்கள் மற்றவரைவிட உயர்ந்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறோம். எனவே அவர்களை எதிர்த்த கட்டுரை தவறு என்று ஏன் சொல்லவில்லை அங்கேயே?

  கிருஸ்ணகுமார் ஏன் நான் ஆழ்வார்களைப்பற்றி எழுதும்போது குறுக்கிட வில்லை?

  இன்னொன்றையும் நோக்கவேண்டும். பார்ப்பனத்தூடணை என்ற சொல்லை வைத்து நாம் சமூக குற்றங்களைப் போர்த்து பாதுக்காக்க முடியாது.

  எவர் செய்தாலும் – தேவர் தலித்தையடித்தாலும், கன்னடப்பார்ப்ப்னர மற்றவரை அடிமையாக நடாத்தினாலும் – குற்றம் குற்றமே. இதைச்சொல்ல பிரமாதமான மன தைரியம் வேண்டிதில்லை.

  ஆனால் இதைத்தடுக்க அத்தைரியமிருக்கிறது. அதை நாம் இங்கே காண்கிறோம்.

  இத்துடன் என் கருத்துக்கள் இங்கு முடிந்துவிட்டன. மற்றவிடங்களில் சந்திக்கலாம்

 16. Avatar
  பூவண்ணன் says:

  நல்ல நகைச்சுவையான ஆனால் ஒருபக்க சார்பு கட்டுரை
  மைசூர் போண்டாவில் சாதியை தேடுவது இருக்கட்டும்,பஞ்சாபி நட்பை பற்றிய கட்டுரையில்,நினைவுகளில் இட ஒதுக்கீட்டில் வந்த இன்னொரு சக பணியாளர் மரியாதை தெரியாதவராக ,கெட்டவராக ,தன மகனுக்கு கூட இட ஒதுக்கீடு கிடைத்து அவனும் உயர் அதிகாரியாகி விடுவான் என்று சொல்பவராக இருக்கிறார் என்று எழுதுவதை என்ன சொல்வது .
  இடியாப்பத்தை பற்றி எழுதினாலும் இட ஒதுக்கீட்டை,அது கிடைக்கும் சாதியினரை குத்திக்காட்டும் கட்டுரைகளுக்கு பின் எப்படி பின்னூட்டம் போட முடியும்

 17. Avatar
  லெட்சுமணன் says:

  *//இக்கட்டுரையில் நல்ல தமிழைப் பரிகாசம் செய்கிறது.//*
  *//எல்லாரும் இக்கட்டுரைப்பொருளைஆதரித்தால், – சொல்லி விடட்டுமா? – “தமிழினி மெல்லச்சாகும்!”//*

  இக்கருத்தை வன்மையாக எதிர்க்கிறேன். இக்கட்டுரை தமிழுக்கு எதிராக எழுதப்பட்டது அல்ல என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இக்கட்டுரை யார் மனதையும் புண்படுத்தவேண்டும் என்பதற்காகவும் எழுதப்படவில்லை. பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துக்கள் எல்லாம் கட்டுரையாளரின் கருத்துக்கள் அல்ல என்பதையும் தெரிவிக்கவிரும்புகிறேன்.

  வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.

  இடித்துரைத்த நண்பர்களு(ரு)க்கு ஒரு படி அதிகமான நன்றிகள்.

  “இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்”

 18. Avatar
  Dr.S.Soundarapandian says:

  அலுவலக நண்பரை ஒருவர் சந்தித்தார். இருவரும் பொங்கினர்!”நம் இனம் இப்படி இருக்கலாமா?” எனக் கொதித்தனர்! அதன்பிறகு சில நாட்கள் அவர் அலுவலக நண்பரிடம் தொடர்ந்து பணம் வாங்கிச்சென்றார்;”சங்கத்துக்காக’’ என்று ஒவ்வொருமுறையும் கூறுவார்! இப்போதெல்லம், “அவர் வந்தால், நான் இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்று பக்கத்து ஆளிடம் சொல்லிவைத்துவிட்டார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *