கவிதையாக ஒரு கதை

author
0 minutes, 5 seconds Read
This entry is part 14 of 21 in the series 21 அக்டோபர் 2012

சகோதரத் துரோகம்

சகிக்காது தெய்வம்

 

அப்பா சொத்தில்

கப்பல்கள்கூட வாங்கலாம்

திரண்ட சொத்துக்கு

இரண்டு பேரே வாரிசு

 

கடைகள் காலனிகள்

வீடுகள் தோப்புகள்

தரிசு நிலங்களென

பத்திரங்கள் வைக்கவே

பத்துப் பெட்டகங்கள்

 

தங்கச் சொத்துக்களைத் தனக்கும்

தரிசைத் தம்பிக்கு மென்று

பத்திரம் செய்த அண்ணன்

தந்திரமாய்ப் பெற்றான்

தந்தையின் கையெழுத்தை

 

தனல்ச் செய்தி

தம்பிக்கு எட்டியது

நம்பிக்கைத் துரோக மென்று

நடுவர் மன்றம் நாடினான்

 

‘தரிசு மொத்தமும்

அண்ணனுக்கே தருகிறேன்

ஒருகாணி நிலமும்

ஓரிரண்டு வீடுமாவது தரட்டும்’

என்றான் தம்பி.

 

‘தர்மன் போல்

கேட்கிறான் தம்பி

கொடுத்துவிடு’ என்றது

நடுவர் மன்றம்

மறுத்தான் அண்ணன்

 

நீதிமன்றம்

சென்றான் தம்பி

‘தந்தையின் கையெழுத்து

பொய்யெழுத்து’ என்றான்

 

‘தர்மத்தை அடிக்கும்

சவுக்கல்ல சட்டம்

நீதிப்படி செய்’

என்றது நீதிமன்றம்

 

மேல்முறையீடு

செய்தான் அண்ணன்

 

தொடர்ந்தது வழக்கு

இதற்கிடையே

 

அனல்மின் நிலையத்திற்கு

தம்பியின் தரிசை

அரசு கேட்டது

 

‘அய்யய்யோ

அனல்மின் நிலையமா

சுற்றியுள்ள சொத்துக்கள்

சொத்தையாகி விடுமே’

 

கலங்கினான் அண்ணன்

 

அரசுநிலை மாற்ற

கணக்கில்லாமல்

தரகர்களுக்குத்

தாரை வார்த்தான்

 

தடம் மாறவில்லை அரசு

பத்திரப் பரிமாற்றங்கள்

சப்தமின்றி முடிந்தது

அனல்மின் நிலையம் எழுந்தது

 

தரிசுக்குத் தந்த விலை

அண்ணனின் சொத்துப் போல்

ஆறேழு பங்கு

வாழ்க்கைப் படிக்கட்டில்

ஏறினான் தம்பி

இறங்கினான் அண்ணன்

 

புன்னகைத்தது சத்தியம்

 

‘சகோதரத் துரோகம்

சகிக்காது தெய்வம்’

என்றனர் மக்கள்

 

அமீதாம்மாள்

Series Navigationகம்பன் விழா அறிக்கைஅனுராக் பாசுவின் “ பர்·பி ‘
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *