தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012

This entry is part 11 of 34 in the series 28அக்டோபர் 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் வழங்கிவரும் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012ஆம் ஆண்டுக்கான விழாவை கடந்த அக்டோபர் 7ஆம் நாள் பெந்தோங் நகரில் சிறப்பாக நடந்தேறியது. இவ்வாண்டுக்கான 7000 மலேசிய ரிங்கிட் பரிசு (1,19,000 இந்திய ரூபாய்) கவிஞர் சீனி நைனா முகமது அவர்களின் “தேன் கூடு” என்னும் கவிதை நூலுக்கு அளிக்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் நடுவர்கள் குழுத் தலைவரான முனைவர் ரெ.கார்த்திகேசு நிகழ்த்திய  உரை வருமாறு:

இந்த ஆண்டு மரபுக் கவிதை நூலுக்கான பரிசு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட மரபுக் கவிதை நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன: அவையாவன:

எண்

ஆசிரியர்: தலைப்பு

 

1

மா.இராமகிருஷ்ணன்: மனத்தூறல்

 

2

கோவி மணிதாசன்: மெய்த்துளிகள்

 

3.

ம.அ.சந்திரன்: சமுதாயம்

 

4.

சி.பாரதிகண்ணன்: கண்ணன் கவிதைகள்

 

5

சி.பாரதிகண்ணன்: பாரதி கண்ணன் பாடல்கள்

 

6

சி.பாரதிகண்ணன்: பாரதி கண்ணனும் பட்டிக்காட்டானும்

 

7

சீனி நைனா முகமது: தேன் கூடு

 

8

காசிதாசன்: இரட்டை அரங்கம்

 

9

பெ.மு.இளம்வழுதி: திருக்குறள் கவிதைக் களஞ்சியம்

 

10.

தீப்பொறி பொன்னுசாமி:  தலைமுறை

இந்த ஆண்டுப் போட்டிக்கு மூன்று கவிஞர்கள் நடுவர்களாக இருந்தனர்: கவிஞர் ப.மு. அன்வர், கவிஞர் முரசு நெடுமாறன், பாவலர் ஐ.இளவழகு ஆகியோரே அவர்கள். நான் இந்தக் குழுவுக்கான நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினேன்.

மரபுக்கவிதை வடிவம் அருகி வருவதான அச்சம் ஏற்படும் வேளையில் இத்தனை நூல்கள் பரிசீலனைக்கு வந்திருப்பது நடுவர்கள் குழுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. சி.பாரதிகண்ணன் மிகுந்த முயற்சியுடன் மூன்று நூல்களை வெளிக்கொணர்ந்திருப்பதற்கு அவருக்குப் பாராட்டுக்கள்.

நடுவர்களின் தனித்தனிப் பரிசீலனைக்குப் பிறகு அவர்களின் குழுக் கூட்டத்திற்கு இறுதிப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவை மூன்று நூல்கள்:  அவை கவிஞர் காசிதாசனின் “இரட்டை அரங்கம்”, கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியின் “தலைமுறை”; கவிஞர் சீனி நைனா முகமதுவின் :”தேன்கூடு” ஆகியவையே அவை.

காசிதாசனின் இரட்டை அரங்கம் மிகவும் புதுமையான முயற்சி. நமது மரபில் உள்ள சிலேடைக் கவிதைகளின் சாயலில் மிகவும் புதிய கருப்பொருள்களை வைத்து புத்தம் புதிய கவிதைகளைப் பாடியுள்ளார். கவிதைகளில் பெரும்பாலானவை எள்ளலையும் நகைச்சுவையும் உள்ளடக்கியவை. எடுத்துக்காடூக்குச் சில:

 

பட்டினத்தார் என்னும் தலைப்பில் ஒரு கவிதை:

 

துவராடை பூணவில்லை

துறவறம் கொள்ளவில்லை

கவராடை அணிந்து வந்து

காளையர் மயங்கும் வண்ணம்

பொட்டிட்டுப் பூ முடித்து

புனையெழில் மிக்குச் செய்த

பட்டுப்போல் மேனி கொண்ட

பட்டு இனத்தாரே பெண்கள்.

 

துப்பட்டா என்னும் தலைப்பில் ஒரு கவிதை:

 

கைபட்டால் குற்றம் என்றும்

கண்பட்டால் தப்பே என்றும்

பொய்ப்பாட்டுப் பாடும் பெண்கள்

போட்டிடும் சுடிதார் மீது

துப்பட்டா வேண்டாமென்று

தூக்கியே எறிந்துவிட்டார்

துப்பட்டா காறிக்கிட்டு

துப்பட்டா எட்டிக்கிட்டு.

 

குருநாடகம் என்னும் தலைப்பில் ஒரு கவிதை:

 

மங்களம் என்னும் மங்கை

மனத்துயர் தீரவேண்டி

அங்குள குருவைக் கண்டு

அருள்பெறச் சென்றாள்: சாமி

மங்களம் உண்டாக என்றார்

மடத்தினில் தங்கவைத்தார்

மங்களம் உண்டானாள் ஓர்

மகவையும் பெற்றுத் தந்தாள்.

 

இந்தக் கவிதைக்கிடையில் நகைச்சுவை பளிச்சிடும் இன்னொரு வரி:

 

நாளெல்லாம் உண்ணா நோன்பு

நடுநிசி உடுத்தா நோன்பு..

தீப்பொறியாரின் கவிதைகளில் தீவிரமான சமுதாயச் சிந்தனைகள் இருக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே. அவருடைய “தலைமுறை” என்னும் இந்நூலிலும் சமுதாயச் சாடல்களில் தீப்பொறி பறக்கவே செய்கிறது.

 

புள்ளிக்கணக்கு என்னும் தலைப்பில் ஒரு கவிதை:

 

அவரைவிட இவர் மிகவும் நல்லவர் என்றும்

இவர் வந்தால் அதைநிமிர்த்திக் கிழிப்பார் என்றும்,

சுவரைவிடச் சித்திரமே மேல்தான் என்றும்

சொல்லுவதை மெல்லுவதே நமது வேலை

தவறிவிழுந்தார் செத்துப்போனார் என்றும்

தவறுசெய்வார் தகவல் தருகிறார்கள்

துவரைநட சுரைக்காயா காய்த்துத் தொங்கும்?

தொடுவதற்குத் துவையலிருந்தால் போதாதோ!

 

விடியலுக்கு முன் ஒரு விண்ணப்பம்

 

சிக்கனமும் சேமிப்பும் இல்லாத வாழ்க்கை

சூரியனும் வெண்ணிலவும் தோன்றாத வானம்

பக்கபலம் இல்லாத வீடென்ன வீடு?

படையின்றித் தற்காக்கும் நாடென்ன நாடு?

துக்கத்தை – தூக்கத்தை நாம் துறக்க வேண்டும்

தோல்விகளின் மேலேறி வெற்றிகளைத் தொடுவோம்

அக்கறையே இல்லாது முன்னேற்றம் ஏது?

அவரவரும் முயலாமல் சமுதாயம் இல்லை.

 

நீதிக்குமணன்

 

மென்மைக் குளிர்ப்பேச்சு மெலிந்த இளந்தோற்றம்

கண்ணாடிக்குள் சுழலும் கனிவான தமிழ்விழிகள்

விடியலுக்காகவே கிழக்கைக் கிழித்த நீ

துடிக்கவே செய்தாயே தூரப் பறந்துபோய்.

 

இந்த இரங்கல் கவிதையை இப்படி முடிக்கிறார்:

 

ஆதி குமணனென்று அரசாண்ட வள்ளலே

நீதிக்குமணன் என்று நிருபித்துவிட்டாயே.

 

சீனி நைனா முகமதுவின் முதல் கவிதைத் தொகுதியாக வந்திருப்பது “தேன்கூடு”. தமிழ் உலகின் இன்றைய நிலைமையை சமுதாய நோக்கத்தோடு அணுகுகின்ற நல்ல கவிதைகள்:

 

எங்கே நீ இருக்கின்றாய் அம்மா?

 

அனைத்துயிர்க்கும் நேரில் வந்து கருணை செய்ய

ஆண்டவனுக் கியலாத காரணத்தால்

தனித்தனியே தாய் படைத்தான் என்று மக்கள்

தாய்க்குலத்தைப் புகழ்ந்துரைக்கக் கேட்டேன், ஆனால்

எனக்கு மட்டும் கருணைசெய்யக் குப்பைத் தொட்டி

ஏற்றதென ஏன்விடுத்துப் போனாய் அம்மா?

தனக்கெனவே வாழாத தாய்மை என்னைத்

தண்டிக்க என்ன பிழை நான் புரிந்தேன்?

 

பூனையென்ன நாயென்ன கொடுமனத்துப்

புலிகூட குட்டியொன்று போட்டுவிட்டால்

யானையெதிர் வந்தாலும் மகவைக் காக்க

இறக்கும்வரை போராட்டம் நடத்துமாமே

தானுணவுக் கலைந்தாலும் நிழலில் வைத்துத்

தன்சிசுவைப் பால்கொடுத்துக் காக்குமாமே

கானகத்துக் கொடுவிலங்கும் காட்டும் அந்த

கருணையுனக் கேன்இன்றிப் போனதம்மா?

எப்போதும் அழகுதான்: பினாங்குத் தீவின் அழகைப்பற்றிய வருணனை:

 

காலையில் உதயத்தில் மாலை மந்தாரத்தில்

கடலிசை பாடிடும் இரவில் நிலாவினில்

பாலத்தில் வந்தாலும் ஃபேரியில் வந்தாலும்

பறந்து விமானத்தில் இறங்கையில் பார்த்தாலும்

அப்போதும் இப்போதும் அழகுதான்.

 

கத்தும் கடல்வந்து நித்தம் கரைகளில்

முத்தம் வழங்கும் மலேசிய மங்கைக்கு

முத்தாலே போட்டதோர் மூக்குத்தி தானெங்கள்

முத்தான தீவென்று கற்பனை செய்தாலும்

அப்போதும் இப்போதும் அழகுதான்.

 

1996இல் எழுதப்பட்ட கவிதை: 2012க்கும் பொருந்தும் “பாரிசான் ஆண்ட போதும் அழகுதான், பாக்காத்தான் ஆளும்போதும் அழகுதான்” என நாம் சேர்த்தும் கொள்ளலாம்.

 

சூப்பர் ஸ்டார் படம் என்றால் அடித்துப் பிடித்துக்கொண்டு மக்கள் ஓடுவதை இப்படி எள்ளுகிறார்:

 

பாரு பாரு நல்லா பாரு!

 

பாரு பாரு நல்லா பாரு

பாயிறாரு சூப்பர் ஸ்டாரு

சேரு சேரு கூட்டம் சேரு

சிவாசிராவு படத்தைப் பாரு.

 

கூரை மேலக்கட்டவுட்டு பாரு

குடத்துப்பாலை ஊத்திப் பாரு

பேரைச்சொல்லி தேங்காய் நூறு

பெருமையாக உடைச்சிப் பாரு!

 

நூறு லச்சம் நம்ம காச

நொட்டிட்டாரு ரசனி சாரு

வாரிவாரி சொந்த ஊரில்

வாங்குராறு சொத்துப்பாரு.

 

யாரு யாரு நம்மைப்போல

இளச்சவாயி வீரன் யாரு?

பேரு பேரு தமிழன் பேரு

பீத்தலாகிப் போச்சு பாரு.

 

மலேசியாவிலேயே கலைக்கும் சமுதாயத்துக்கும் உழைக்கும்பலர் இருக்க, இந்தியாவின் ஷாருக்கானுக்கு மலேசியாவின் உயர்ந்த “டத்தோ” விருதை வழங்கியது பற்றிய எள்ளல்:

 

சாருகானு உசத்தியா?

 

சாருகானைப் பாத்தியா நம்

டத்தோ பட்டம் சேத்தியா?

பேருபெத்த நம்மநாட்டு

பெருமைக்கிது நேர்த்தியா?

 

ஆச்சிமாரு மயங்கிப்போயி

அதிகநாளு ஆச்சையா

ஆட்சிகூட மயங்கியிப்போ

அசிங்கமாகிப் போச்சையா!

 

இன்னொருகவிதை:

 

நாய்கள் குறைத்து ஞாயிறு சாயுமோ?

 

வைகறை தோன்றி இரவுவரை – விரி

வானில் அயர்வின்றி ஊர்ந்து – அது

செய்த நலன்கள் மறந்துவிட்டே – இந்தச்

செக்கடி நாயெல்லாம் சேர்ந்து – கனல்

கக்கினவே குணம் தாழ்ந்து.

 

காய்கிறவேலை நிறைவடைந்தால் – ஒளி

ஞாயிறும் ஓய்ந்திடும்தானே – அது

நாய்கள் குரைப்பதால் சாய்வதில்லை- இது

ஞாலம் அறிந்ததுதானே – இந்த

நாய்கள் குரைப்பதேன் வீணே?

 

இது சூரியன் பற்றியோ அல்லது நாய்கள் பற்றியோ ஆன பாடல் அல்ல என எந்த வாசகனும்புரிந்து கொள்ள முடியும்.

 

தேர்வுக்கு வந்திருக்கும் நூல்களில் நிறைவான கவிதை நூல் என்று சொல்லத்தக்கதாக அமைந்திருப்பது “தேன்கூடு”. பிழையில்லாத தமிழ், சிதைவில்லாத யாப்பு, கவிதைக்குச் செழுமை சேர்க்கும் கற்பனை, உவமை எளிமை, பரந்த சமுதாய நோக்கு, பரவலான கருப்பொருள் தேர்வு, உத்திகள் என்று விரிவான தளத்தில் கவிதைகள் யாக்கப்பட்டுள்ளன.

 

ஆகவே 2012 தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் மரபுக்கவிதைக்கான புத்தகப் பரிசு கவிஞர் சீனி நைனா முகமது இயற்றியுள்ள “தேன் கூடு” கவிதைத் தொகுப்பிற்கு வழங்கப்படுகின்றது.

 

அன்னாருக்கு நமது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Series Navigation‘பாரதியைப் பயில…’நான் ரசித்த முன்னுரைகளிருந்து………….. 2. பாரதியார் – பாஞ்சாலி சபதம்.
author

ரெ.கார்த்திகேசு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *