முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!

This entry is part 33 of 34 in the series 28அக்டோபர் 2012

 
பொதுவாக நவராத்திரி  தீபாவாளிக்கு முன்னம்  கொண்டாடப்படும் இந்துப் பண்டிகை. நவராத்திரம் என்னும் வடமொழிச்  சொல் , தமிழில் நவராத்திரி என்று மருவி வழங்குகிறது. இது ஒன்பது இரவைக் குறிக்கும். துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல வாழ்வையும் அருளச்  செய்த தேவியை வழிபடும் காலமாக நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் இருக்கிறது.

நவராத்திரி வந்தாலே போதும்…பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஏக குஷியும்  கொண்டாட்டமும்  தான். வித விதமாக  பட்டுப் பாவாடை உடுத்திக் கொண்டு பூத் தைத்து , கழுத்து நிறைய ஜொலிக்கும்  நகைகளும் போட்டுக  கொண்டு அசல்  அம்மனாகவே தங்களையும் அலங்கரித்துக் கொண்டு  கோவிலுக்குச் செல்வார்.   அங்கும் அலங்கார தேவிகளைக் கண்டு தொழுது  வீட்டுக்கு கை நிறைய சுண்டல் கொண்டு வரும் மகிழ்ச்சி…..வேறு எந்த விழாவில் சுண்டல் கிடைக்கும்.?  ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகள் தெய்வ அம்சமாகவே பாவித்து..பாட்டும், சிரிப்பும், சிலிர்ப்பும்…வேறு எந்த பண்டிகையும் இத்தனை நிறைவைத் தருவதில்லை. பத்து பதினைந்து குழந்தைகள் ஒன்றாகக் கூடி கோல்களை எடுத்துக் கொண்டு கொலு வைத்திருக்கும் வீட்டுக்குச் சென்று அங்கு கோலாட்டாம் ஆடி….மகிழ்ந்தபடியே…இறுதியா

க தமது வீட்டுக்குள் நுழையும் போது  கை கொள்ளாது…எடுத்து செல்லும் பையும்  கொள்ளாது… அவ்வளவு தாம்பூலம்…சுண்டல்…குங்குமச் சிமிழ்…கண்ணாடி என்று மனசும் நிறையும். இதெல்லாம் நாற்பது வருடங்கள் முன்பாக நியதியாக இருந்தாலும் இன்றும்  இது போன்ற சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப் படுவது தொடர்வது மனதுக்கு இதமாக இருக்கிறது. இதற்கு தொலைக்காட்சியும் முக்கிய காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது.

நவராத்திரி என்னும் பெருவிழாவானது  புரட்டாசியில் வரும் மாதப் பிரதமை முதல் நவமி வரை ஆக… ஒன்பது  நாட்கள் காலமாகும். படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் அன்னை பராசக்தியே.முத்தொழில் புரியும் முமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் வணங்கும் பரம்பொருள் அன்னை பராசக்தி அம்பிகையே.

நாம் அனுதினமும் அம்பிகையைத் தொழுதாலும் இந்த நவராத்திரி சமயங்களில் ஒன்பது மடங்கு அதிகமாக பூஜிக்க வேண்டும். ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரி வந்தாலும் அனைவரும் தெரிந்து கொண்டாடுவது சாரதா நவராத்திரிக்கு மட்டும் சிறப்புகள் அதிகம்.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி  ஆகிய மூவரும் மகிஷாசுர  மர்த்தினி  சக்தியாக உருவெடுத்து மகிஷனை வதம் செய்து அழித்ததையே  “சாரதா நவராத்திரியாக” இன்றும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

நவராத்திரி காலம் முழுதும் பெண்களை சக்திஸ்வரூபங்களாகவே பாவனை செய்து மகிழ்விப்பது தேவியை ஆராதிப்பதற்கு ஒப்பானது.  அதுவும் பெண் குழந்தைகளை “கன்னியாப் பெண்கள்” பாலா திரிபுர சுந்தரியாகவே பாவனை செய்தலும் கன்னியா பூஜை  செய்வதும் மிகுந்த நற்பயனையும் இகபர சுகத்தையும் தரும். அதே போல  இந்த ஒன்பது நாட்களிலும் அன்னதானம் செய்விப்பது தேவியை குளிர்வித்து சகல நன்மைகள் பெற வழி வகுக்கும்.

சில இக்கட்டான சூழ்நிலையால் நவராத்திரிக்கு ஒன்பது நாட்களும் பூஜிக்க இயலாத நிலை வந்த போதும் 8 வது நாளான அஷ்டமி,அன்று ஒரு நாள் மட்டும் மனதார அம்பாளை வேண்டிக் கொண்டு ஆராதனை செய்தால் கூடப் போதும்;  அவள் அருளைப் பெற்றிடலாம்.

இந்த ஒருநாளில் கூட சுமங்கலிகளுக்கும், கன்னியாப் பெண்களுக்கும் தாம்பூலம் தருவித்து தந்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். நவராத்திரி அத்துணை விசேஷமானது.

இந்தியா முழுவதும் இந்த நவராத்திரி பெரிய அளவில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. அதே சமயம் பல விதக் காரணங்களும் சொல்லப் படுகிறது.

கர்நாடகாவிலும், வங்காளத்திலும்  வெகு பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் தசரா என்னும் நவராத்திரி தான்.மஹாராஷ்டிரா  பகுதியில் தசரா சமயங்களில்  “தாண்டியா ரஸ் ..” என்னும்  நமது கோலாட்டத்தை மிகவும் உற்சாகமாக பெண்களும் ஆண்களும் தாளத்தோடு ஆடிப் பாடுவது மிகவும் இனிமையாகவும், ரசிக்கும் படியாக இருக்கும்.விநாயகர் சதுர்த்தி போலவே…பெரிய அளவிலான துர்க்கை அன்னையை அங்கங்கே வைத்து பத்து நாட்களும் பூஜைகள் செய்து தொழுது பிறகு நதியில் அல்லது கடலில் கரைப்பார்கள்.

ஆந்திராவில் ஒரு பழக்கம் உண்டு.சிலரது வீடுகளில் சுமங்கலிப் பெண்கள் இந்த ஒன்பது நாட்களும் மௌன விரதத்தை அனுஷ்டித்து ஒரு தனி பூஜை அறையில் அமர்ந்திருப்பார்கள். மிகவும் கஷ்டமான ஆசார அனுஷ்டானத்தை மேற்கொண்டு “ஒக்கப்போது ” என்னும் ஒரு நாளைக்கு ஒரே வேளை  மட்டும் உணவு.  அதுவும் உப்பு, காரம், புளி ,அரிசி  என்று  இதை எதுவும் சேர்க்காமல் உண்பதைக் கடைபிடிப்பார்கள். அதை விடச் சிறப்பான விஷயம் என்னவென்றால்…, “ஒக்க லக்ஷ  பசுப்பு..” அதாவது அந்தப் பெண்கள் தங்களின் முன்பு மலை போல புத்தம் புதிய அல்லது காய்ந்த வரளி  மஞ்சள் இவற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களைப் பார்க்க வரும் சுமங்கலிகளுக்கு அவர்களது புடைவைத் தலைப்பில் தனது  இரு கைகளின்  முழங்கை வரைக்கும் எத்தை மஞ்சள் கிழங்குகளை அள்ளி தாராளமாக எடுத்து மூன்று முறை நிரப்புவார்கள். அதே போலத் தான் சுத்தமான குங்குமமும்…அள்ளி அள்ளித் தருவார்கள்.

இந்த ஒன்பது நாட்களுள் மூன்று லக்ஷம் மஞ்சள் கிழங்குகள் வரைக்கும் கூட அள்ளிக் கொடுப்பார்கள் சிலர். இது ஒரு சிறப்பான வேண்டுதல் ஆகும். இதைக் கொடுக்கும் வீட்டின் முன்பு எப்போதும் பெண்களின் கூட்டம் நிறைந்திருக்கும்
இந்த முறையைப் பின் பற்றி தருபவருக்கும் பெறுபவருக்கும் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்
அதே போல விடியற்க்காலையில்  நான்கு மணியிலிருந்து அடுத்த நாள் இரவு ஒரு மணி வரைக்கும் கூட நீண்ட வரிசையில் இந்த மஞ்சள் வாங்கிக் கொள்ளப் பெண்கள் வரிசையில் காத்திருந்தபடியே “லலிதா சஹஸ்ரனாமத்தைப்” பாராயணம் செய்து கொண்டே இருப்பார்கள். எனக்கும் இந்த சுகமான அனுபவம் கிடைத்ததை நான் பெற்ற வரமாகவே நினைக்கிறேன். ஆந்திராவில் ராவண வதம்…என்று பத்துத்  தலை ராவணன் உருவம் பிரம்மாண்டமாக செய்து அதற்கு அம்பு விட்டு…வதம் செய்வது போல பத்தாவது நாள் விமரிசையாக நடத்துவார்கள். பின்பு மகா பெரிய “சொக்கப்பனை” கொளுத்துவார்கள். இது போன்ற நிகழ்வு எனக்குத் தெரிந்து  தமிழகத்தில் நடப்பது இல்லை.

தமிழகத்தில் எப்படி “கொலு” வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று “கொலு பார்க்க வந்திருக்கோம்” என்று சென்று கொலுவைப் பார்த்துவிட்டு தாம்பூலமும் சுண்டலும் வாங்கிச் செல்வார்களோ…அதே போல ஆந்திராவிலும் “லட்சப் பசுப்பு” என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம் அலைமோதும்

மதுரையிலும்  சம்பிரதாயம் எதுவும் மாறாமல் ஒன்பது படிகள் கொலு வைத்து பெண் குழந்தைகளை அழைத்து “கோலாட்டம்” வைத்துக் கொண்டு ஆடியும்…அந்தந்த நாளுக்கான ராகத்தைப் ..பாடிக்கொண்டே கும்மியடித்தும் அம்பாளை சந்தோஷப் படுத்துவார்கள்.ஒன்பது நாட்களும்   நித்தியம் வந்து பாடிவிட்டு மகிழ்வோடு தாம்பூலம் வாங்கிக் கொண்டு செல்வதைக் காணும்போது தான் கொலு வைத்தவர் மனதில் அந்த அம்பிகையே…பராசக்தியே நேரில் வந்திருந்து ஆசீர்வாதம் செய்த திருப்தி இருக்கும்.

அத்தனை கோயில்களிலும் கூட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷ அலங்காரமும் ஆராதனையும் நடக்கும். கோயில்களில் கொலு பார்க்க வேண்டியே தினமும்  கூட்டம் கட்டுக்கு அடங்காது.  மீனாக்ஷி அம்மன் கோவிலில் அம்பிகையைக்  கொலு  மண்டபத்தில் நவ வித பூஜையோடு நவ வித அலங்காரத்தோடு வீற்றிருக்கும்  அன்னையைக் காண ஜென்ம பலன் கிட்டும். மண்டபத்தின் வழியெங்கும் இருபக்கமும் ஆறடி உயரத்தில் வெள்ளியில் தங்க முலாம்  பூசப்பட்ட…யானை,மயில்,கிளி,அன்னம்,காமதேனு,கருடன்,சிம்மம்,மூஞ்சூறு,கடோத்கஜன்,நந்தி ..ஆகிய வாகனங்கள்  தக தகவென்று மின்னிக் கொண்டு நிறுத்த வைக்கப் பட்டிருக்கும் அழகு அபாரமானது.
ஒரு முறை கண்டால் போதும்…என்றென்றும் நெஞ்சத்தை விட்டு அகலாது. பொற்றாமரைக் குளம் முழுதும் விளக்கொளியில் அலங்கரிக்கப் பட்டு ஜகஜ் ஜோதியாக மின்னிக் கொண்டிருக்கும் அழகு. சித்திரைத் திருவிழாவைப்  போலவே “நவராத்திரிக்கும்” மதுரையே  ஜே…ஜே.. என்று மல்லிகை, பிச்சி,ஜாதி முல்லை,தாழம்பூ,பன்னீர் ரோஜா ஆகிய சுகந்த மலர்களின் இனிய மணத்தை  தாங்கி மணத்துக்  கொட்டும்.இதுவரை ஒரு முறை கூட கண்டிராதவர்கள் அவசியம் ஒரு முறையேனும் கண்டு வரவேண்டும். அந்த சுகமே அலாதியானது.

தேவி பாகவதத்தில் கூறப் பட்டுள்ள படியே இந்த நவராத்திரி பூஜை சிறப்பாக கொண்டாடும் மற்றோர் இடம் சிதம்பரம் ஆகும். கோயிலின் பிரகாரத்தின் உள்ளே பிரமாண்டமான முறையில் பொம்மைக் கொலு…! நீளத்திலும் அகலத்திலும் அந்தப் பிரகாரத்தையே சிறப்பிப்பதாக அமையும் வகையில் இருக்கும். ஆயிரக் கணக்கில் மிகவும் புராதனக் களிமண் பொம்மைகள் கூட வீற்றிருக்கும்.நித்தம் சாஸ்திர சம்பிரதாயப் படியே ஹோமங்களும், நித்தியா அன்னதானமும், சுவாசினி பூஜையும், 1008 கன்னியா பூஜை மற்றும் ஒரு லக்ஷத்தி எட்டு ரவிக்கைத் துண்டுகள்   ஒன்பது வண்ணங்களில் அர்ச்சனை  செய்வித்து பாலாம்பிகையை வணங்கும் விதத்தைக் காண மனம் நெகிழும்.இந்த ஒன்பது நாள் பூஜையின் இறுதியில் மகா சண்டி யாகம் நூற்றி எட்டு குருக்கள் இணைந்து கலந்து கொண்டு வேத கோஷம் முழங்க பூர்ணாகுதி நடக்கும் போது அம்பிகையே நேரில் வந்து ஆசீர்வதிப்பது  போல இருக்கும்.

விஜயதசமி அன்று நடராஜர் முன்பு இருக்கும்  மண்டபத்தில் பரதம் அறிந்த  குழந்தைகளும் , பெரியவர்களும்  பரதம் ஆடுவார்கள். அன்று பல கோயில்களில் அக்ஷராப்பியாசம்..என்னும் முதன் முதலில் குழந்தைகளுக்கு எழுதக்   கற்றுத்  தருவது வழக்கம். இந்த நாளில் செய்யும் அனைத்துக் காரியமும் நம்மை வெற்றியோடு விளங்கச் செய்யும் என்ற நம்பிக்கை என்றும் உண்டு.புதிதாக வீடு கட்டப போவதன் முன்பு வாஸ்து பூஜையும் இந்த நல்ல நாளில் செய்தால் எவ்விதத் தடங்கலும் இன்றி ஜெயம் உண்டாகும் என்பதும் வழக்கத்தில் உள்ளது.

கும்பகோணம் அருகில் தமிழ்நாட்டில் இருக்கும் சரஸ்வதிக்கென்று தனிக் கோயில் பூந்தோட்டத்தில் இருக்கிறது.ஒட்டக்கூத்தருக்கு அன்னை அருள் பாலித்த திருத்தலம் அதனால் கூத்தனூர் சரஸ்வதி  என்றே அழைக்கப் படுகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது எனபதை உணர்த்தும் வண்ணம் அன்னை கலைகளுக்கரசி…வீணையோடு வீற்றிருக்கும் எழிலைக் காண கண் கோடி வேண்டும். இத்தகைய ஞான சக்தி வழிபாடு நமது  நமது அறியாமையை அகற்றி அறிவையும், சத்துவ குணத்தையும் வளர்க்கிறது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிலேட்டு, நோட்டுப் புத்தகம்,பேனா பென்சில் இவற்றை அம்மனின் காலடியில் சமர்பித்து எடுத்து வருவது நல்லது உத்தமம். குழந்தைகளுக்கு கொல்லூர் மூக்காமிபை கோயிலில் மற்றும் கேரளக் கோவிலில் நடை பெறுவது போலவே இங்கும் அக்ஷராப்பியாசம் வெகு விமரிசையாக நடை பெரும்.

பூந்தோட்டதிலிருந்து  ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது திருமீயச்சூர்..இங்கு அன்னை லலிதாம்பிகை அருள்பாலிக்கிறார். தேவியின் லலிதா சஹஸ்ரநாமம் தேவியே சொல்ல இங்கு தான் அகஸ்தியரால் பாடப் பெற்றது. அமைதியும், எழிலும், கலைவண்ணமும் கொண்ட திருக்கோவில். அம்பாளைக் காண மதி மயங்கும்.
ஒவ்வொரு நவராத்திரி சமயத்திலும் வேறு எங்குமே இல்லாத வகையில் இங்கு தான் அம்பாளின் முன்பு சக்கரைப் போன்களைப் பரப்பி, தில் குளம் வெட்டி அது நிறைய ததும்பு ததும்ப நெய்யை ஊற்றி அதில் லலிதாம்பிகாவின் பிம்பம் உருகிய நெய்யில் விழுந்து காட்சி தருமாறு சேவிப்பார்கள். நெய்விளக்கின் ஒளியில் அம்பாளின் உருவம் கண்ணாடியாக மின்னும்…அழகே அழகு. வருடத்தில் ஒருமுறை மட்டுமே காணக் கிடைக்கும் அற்புதக் காட்சியாகும். மாதா ஜெயா ஓம் லாலிதாம்பிகையே …என்ற நவரத்னா மாலையில் பாடுவது போல “காணக் கிடையா கதியானவளே ..” என்ற வரியை உணர்த்தும் அனுபவம்..நிச்சயம் கிடைக்கப் பெறும்.

நவராத்திரியில் நவாட்சரி மந்திரம் செய்வது 24 அக்ஷரங்கள் கொண்ட நவாட்சரி காயத்ரிக்கு ஈடான மகாமந்திரமாகும். சகல காரிய சித்திக்கும் அற்புத மந்திரம். இந்த மந்திரத்திற்கு மகா லட்சுமியும்  , மகா சரஸ்வதியும் சக்தி தேவியர்களாக  அருள் பாலிக்கிறார்கள். “நவாட்சரி மகாமந்திர ஜபம் கரிஷ்யே என்று கூறி “ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே” என்று 108 முறை ஜபம் செய்து பால் பாயசம் நைவேத்யம் செய்தால் தேவியின் அருள் நிலைத்திருக்கும்.

இச்சா சக்தி அதாவது துர்க்கை வீரத்தின் தெய்வம், சிவப் பிரியை, வெற்றியின் தேவதை, எருது உருவம் கொண்ட மகிஷன் எனும் அரக்கனை  ஒன்பது இரவுகள் போரிட்டு வெற்றி கண்டவள். அவனை வதம் செய்த நாளே  “விஜயதசமி”. மகிஷனை வதைத்ததால் “மகிஷாசுர  மர்த்தினி” . நவ துர்க்கை வழிபாடு நவராத்திரியில் சிறப்பானது.கொல்லூர் செல்லும் வழியில் தான் கட்டில் வன துர்க்கை (துர்கா பரமேஸ்வரி ) அருள் பாலிக்கிறாள். மிகவும் சாநித்யம் படைத்த “கட்டில் துர்க்கைக்கு” நிமிஷா நிமிஷம் சூட்டைத் தணிக்க இளநீர் அபிஷேகம் செய்வதைக் கண்கூடாகக் காணலாம் .

கிரியா சக்தி செல்வத் திருமகள், லட்சுமி. மலரையொத்த மென்மையான அழகு நிரம்பியவள். செல்வத்தின் உறைவிடமே இவளின் இருப்பிடம், விஷ்ணுப் பரியை, பார்கடலில் அமுதத்துடன் உதித்தவள். சமுத்ரராஜனின் குமாரி. செந்தாமரையில் வீற்றிருப்பவள். திருச்சானூர் நாயகி. நவராத்திரியில் நாலாவது நாளிலிருந்து ஆறாம் நாள் வரை அஷ்டலக்ஷ்மிகளின் தரிசனம் அனைத்து கடாக்ஷத்தையும் நல்கும்.

ஞான சக்தி, ஆயக் கலைகளுக்கும் சகல கல்விக்கும் அதிபதி சரஸ்வதி..! வைரத்தின் பிரகாசம் கொண்ட ஸ்படிகம் போன்ற அறிவின் தன்மையைக் கொண்டவள். பிரம்மாவின் பிரியை.அஷ்ட சரஸ்வதியின் தரிசனம் பெற்று கடைசி மூன்று நாட்களும் வழிபட்டால்…கலைமகளின் பூரண கடாக்ஷத்தைப் பெறலாம்.

கூத்தனூர் சரஸ்வதியைத் தவிர ஆந்திராவில் இரண்டு இடங்களில், பாஸர்  மற்றும் பாசரா என்ற இடங்களில் மலை மீது சரஸ்வதிக்கு கோயில் இருக்கிறது. கொல்லூர் மூகாம்பிகையும், ஸ்ரின்கேறி சாரதாம்பிகையும், கூட சரஸ்வதி தான். நவராத்திரியில் நீல சரஸ்வதியைத் தொழுதால் ஞானம் பெறலாம்.

கலைகளைத் தரும் தேவிக்கு சிலைகள்  பஞ்சலோகத்தில் மூர்த்தம் வடிக்கும்  சில்பிகளைச் சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது. அத்தனை நேர்த்தியான வேலைகளில்….மெய்மறந்து ரசித்துக் கொண்டே நின்றவள்..அவர்களிடம் கேட்ட கேள்வி…எப்படீங்க எல்லாம் ஒரே மாதிரி அச்சில் வார்த்தாலும்..மேற்கொண்டு உளியின் செதுக்கியும்…அதே நயத்தோடு வருகிறது..ஒவ்வொன்றும் ஒன்றை விட இன்னொன்று என்று கச்சிதமாக சிலா ரூபம் எடுக்கிறது என்று ஆவல் மேலிடக் கேட்டேன். அவர்கள் சொன்ன பதில்…” எல்லாம் அந்த சரஸ்வதி தேவியின் அருள் கடாக்ஷம் தாங்க….”என்று பதிலாகக் கேட்டதும்….”ஆம்..அவளின்று ஏது கலை…?” இதோ எழுத ஆரம்பிக்கும் போது  அவள் நினைவால் தொடங்கினேன்..எண்ணமெல்லாம் எழுத்தாக அவளே முடிவு வரை நடக்கிறாள்.

வீரமும், கல்வியும், செல்வமும் ஆக இந்த முப்பெரும் சக்திகள் தான் இந்த புவனைதையே ஆளுகிறது…அதற்காக வருடத்தில் ஒரு ஒன்பது இரவுகள் இந்த மூன்று தேவிகளை ஒவ்வொரு நவராத்திரியிலும் மனம் நிறைந்த பக்தியோடும் கருணையோடும் துதித்து வரம் பெறுவோம்..
=========================================================

Series Navigationசிறுவன்மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *