நம்பிக்கை ஒளி! (5)

This entry is part 21 of 31 in the series 4 நவம்பர் 2012

 

பணிக்குச் செல்லும் பரபரப்பு காலை நேரத்தில் வாடிக்கையான காட்சிதான் என்றாலும், வீட்டிலுள்ள அனைவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் டென்சன் தான். அதுவும் ஒரு குளியலறை, ஒரு கழிவறை என்று இருக்கும் வீடுகளில் கேட்கவே வேண்டாம். நீ முந்தி, நான் முந்தி என்று ஒரே கூத்துதான்.

 

சாவதானமாக உட்கார்ந்து துண்டு முடிந்துகொண்டு, காலையில் எப்.எம் ரேடியோவில் ஆரம்பித்து பின்பு டீவி சீரியல் ஒன்று பாக்கியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த பரமுவா இது என்று ஆச்சரியமாக இருந்தது. எண்ணெய் வழியும் முகமும், பரட்டைத் தலையும் என்று எப்பொழுது பார்த்தாலும் அழுது வடிந்து கொண்டிருந்தவள் இன்று அரை மணி நேரமாக கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பாவம் எத்தனை ஆசையை சுமந்து கொண்டிருந்திருக்கிறது இந்தப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டாள் மாலு. மாநிறமாக இருந்தாலும், நல்ல களையான வட்ட முகம் அவளுக்கு. செதுக்கி வைத்த சிற்பம் போல அளவான நாசியும், துருதுருவென்ற கண்களும், பட்டுக் கன்னமும் அழகாகவே இருந்தாள். பாவாடை தாவணி உடுத்திக் கொண்டு அதைத் திரும்பி, திரும்பி நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். தாவணி கலருக்கு மேட்ச்சாக வளையலும், காது தோடும், கழுத்து மணியும் போட்டுக்கொண்டு , பொட்டும் கூட அதே கலரில் வைத்துக்கொண்டு கிளம்பியதைப் பார்க்க ஆச்சரியமாக் இருந்தது.

 

“என்ன, மேக்கப்பல்லாம் ஓவரா இருக்கு.. எதுக்கு தேவையில்லாம இந்த பூச்செல்லாம். ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா திரும்பிவர எண்ணமிருக்கிறதா தெரியலியே.. வரவர ரொம்பத்தான் மாறிப்போயிட்டே பரமு, பாத்து சூதானமா நடந்துக்கோ. கடைவீதில இருக்குறவ நீ.. நாலு  சாதி சனம் பொழங்குற இடம். அனாவசியமா கெட்டப் பேரு பண்ணிப்புடாதே. பொழப்பை பாத்தமா, வந்தமான்னு இருக்கோணும் பாத்துக்க.. “

 

“ஏம்மா.. இப்படி பேசற. எனக்கும் மத்த புள்ளைங்க மாதரி டிரஸ் பண்ணிக்க ஆசை வரக்கூடாதா.. இவ்ளோ நாளுதான் வீட்டோட அடைஞ்சி கிடந்தேன். இப்பதான் மாலு அக்கா புண்ணியத்துல வெளி உலகத்துல நாலு பேரை பாத்து பேசி பழக முடியுது. மனசுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..?”

 

“அதனாலதான் சொல்றேன்.. இந்த சந்தோஷம் நிலைச்சு இருகணும்னா, நீ ஜாக்கிரதையா இருக்கோணும். காணாததை கண்ட மாதிரி இப்பிடி ஒரேடியா அலையக்கூடாது.. பாக்கறவுக அப்பறம் ஒரு மாதிரி பேசிப்புடுவாங்க…”

 

“அம்மா, விடுங்கம்மா.. என்னமோ பாவம் இவ்ளோ நாளைக்கப்பறம் இப்பத்தான் பரமு முகத்துல இவ்வளவு சந்தோசத்தை பார்க்க முடியுது. அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.. நல்லது, கெட்டது தெரிஞ்சவதான். நீங்க ஒன்னும் பயப்படாதீங்க”

 

“இல்லை மாலு, நான் சொல்றது இப்ப உனக்குப் புரியாது. காலம் கெட்டுக் கிடக்கு. முள்ளு மேல சீல விழுந்தாலும், சீலை மேல முள்ளு விழுந்தாலும், நட்டம் என்னவோ அந்த சேலைக்குத்தான. நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். பொட்டைப் புள்ளைய வெளியே அனுப்பிட்டு வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கறதாவுல்ல இருக்கு. உன் அளவுக்கு விவரம் இருந்தா நான் ஏன் கவலைப் படப்போறேன் சொல்லு. வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிற புள்ளையாயில்ல இருக்கு இது. பொறவு எப்படி கவலைப்படாம இருக்குறது நீயே
சொல்லு”

 

பரமுவின் முகம் வாடிப்போனதைப் பார்க்க பாவமாக இருந்தது. அவளைச் சமாதானம் செய்வது போல முதுகில் தட்டிக் கொடுத்து, ஜாக்கிரதையா போய் வாம்மா என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் மாலு. மினி பஸ் வாடிக்கையாக வரும் நேரம். தவறவிட்டால் பிரச்சனையாகிவிடுமே என்று வேகமாக ஓடினாள்.

 

அன்று முழுவதும் பல பணிகளுக்கிடையேயும் அவ்வப்போது பரமுவின் நினைவு வராமல் இல்லை. அவளுக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் தொற்றிக் கொண்டது. சமீப காலமாக கிட்டத்தட்ட தினந்தோறுமே முகேஷ் என்ற அந்த இளைஞனைக் காண முடிகிறது. தேவையில்லாமல் உரசிக் கொண்டு நின்றிருப்பதைக் காண முடிந்தாலும் பரமுவிற்கு அது புரிந்துதான் அமைதியாக இருக்கிறாளா அல்லது சொல்லத் தயக்கமா என்று தெரியவில்லை. ஆனாலும் அவளுடைய முகத்தில் தெரியும் பூரிப்பு அவளுடைய விருப்பத்தையும் காட்டுகிறது. இதில் எந்த அளவிற்கு முகேஷ் உண்மையாக இருக்கப் போகிறான் என்று தெரியவில்லையே என்று கவலையாகவும் இருந்தது. அன்று கல்லூரியில் வகுப்பும் சீக்கிரமாகவே முடிந்து போனதால் வழக்கத்திற்கு 1 மணி நேரம் முன்பாகவே வந்து சேர்ந்த போது, வழக்கம் போலவே அந்தப் பையன் பரமுவிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். மேசையின் மீது முழங்கையை ஊன்றிக் கொண்டு அவள் முகத்தின் வெகு அருகில் முகத்தை வைத்துக்கொண்டு ஏதோ பிதற்றிக் கொண்டிருந்தான். பரமுவும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது கூட்டம் அதிகம் இல்லாதலால் யாரும் கவனிக்கவில்லை. அவளுக்கு அப்படி ஒரு நினைவு இருப்பதாகவும் தெரியவில்லை.

பொதுவாகாவே பெண்களுக்கு எப்பொழுதுமே தன்னிரக்கம் அதிகம் என்றும் அதன் காரணமாகவே பலர் எளிதாக ஏமாற்றப்பட்டுவிடுகிறார்கள் என்றும் எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது. பரமு விசயத்தில் இது இரட்டிப்பாவத்ற்கும்  காரணம் அதிகமாகவே இருக்கிறதே….

 

’பரமு’வென அழைத்துக்கொண்டே மளமளவென உள்ளே நுழைந்தவள், “பரமு, என்ன நடக்குது இங்கே, யார் இது..?” என்றாள்.

 

“அக்கா, அது வந்து இது முகேஷ், என் நண்பர், நம் வாடிக்கையாளர்… “ என்று இழுத்தாள். அதற்குள் அவள் முகமெல்லாம் வேர்த்துக் கொட்டியிருந்தது. திருதிருவென விழிக்க ஆரம்பித்தாள். முகேஷ் மெதுவாக நகரப் பார்த்தான். “சரிங்க நான் கிளம்பறேன்” என்று சொல்லிக் கொண்டே…மாலு உடனே சற்றும் தயங்காமல்,

“ஹலோ, வாங்க இங்கே, உட்காருங்க” என்றாள். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காதவன், “இல்லைங்க, நேரமாச்சு நான் கிளம்பணும்” என்று பைக்கைப் பார்த்துக்கொண்டே நழுவப் பார்த்தான்.

 

“இல்லை ஒரு பத்து நிமிடம் உங்களிடம் பேச வேண்டும். இருங்கள் போகலாம்” என்றாள் சற்றே கண்டிப்புடன். ஒன்றுமே பேசாமல் அப்படியே நின்று கொண்டான்.

 

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”

 

“ஒன்றுமில்லையே…… சும்மா பேசிக்கொண்டுதானே இருந்தேன்..?”

 

“அதைக் கேட்கவில்லை பிரதர், என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டேன்”

 

“ம்ம்ம்… நான்… ஒரு கொரியர் ஆபீசில் வேலை பார்க்கிறேன்”

 

“ஓ,அப்படியா, உங்களுக்கு சொந்த ஊரே இதுதானா.. அம்மா, அப்பாவெல்லாம் எங்கு இருக்கிறார்கள். கூடப் பிறந்தவர்கள் இருக்கிறார்களா?”

 

“ம்ம்ம் ஏன்.. ஏன் கேக்கறீங்க.. எங்க சொந்த ஊர் இது இல்ல.. வேலைக்காக வந்தேன். அம்மா,அப்பாவெல்லாம் எங்க ஊர்ல இருக்காங்க” என்றான்

 

“அதான் எந்த ஊர்னு கேட்டேன்.. சும்மா உங்களைப்பத்தி தெரிஞ்சிக்கத்தான்”

 

“சிஸ்டர், அப்பப்ப இந்தப் பக்கம் போகும்போது இவங்ககிட்டே சும்மா கொஞ்ச நேரம் பேசுவேன். அவ்ளோதான், மத்தபடி வேற ஒன்னுமில்ல.. தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க. இனிமே இந்தப் பக்கமே வரலே..”

 

“அக்கா…. ஏங்க்கா இப்படி மிரட்டுறே.. பாவம். அவரு ஒன்னும் தப்பு பண்ணலையே”

 

“நீ பேசாம இரு பரமு..”

 

“முகேஷ், இப்ப சொல்லுங்க, உங்களுக்கு பரமுவை பிடிக்குமா.. ?”

 

“ம்ம்.. இல்லைங்க… அதான் சொன்னேனே.. சும்மா பேசிட்டுதான் இருந்தேன்னு”

 

“அதெல்லாம் சரி, ஒன்னும் பிரச்சனை இல்லை. பரமுவைப் பிடிக்கும்னா சொல்லுங்க. எங்க அம்மாவை கூட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு வந்து பேசறோம். “ என்றதுதான் தாமதம்

 

“ஐயய்யோ, வேண்டாங்க.எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.  வெட்டிப் போட்டுடுவாய்ங்க. எனக்கு இன்னும் இரண்டு மாசத்துல அக்கா பெண்ணோட கல்யாணம். பேசியிருக்காங்க … அதான்…..” என்று இழுத்தான்.

 

உடனே பரமுவின் முகம் அப்படியே வாடிவிட்டது. அவள் இந்த பதிலை துளியும் எதிர்பார்க்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும், அவளுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் தேவையாகத்தான் இருந்தது. பரமு தேவையில்லாமல் மனதில் ஆசையை வளர்த்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டுதான் மாலு இந்த முடிவிற்கு வந்தாள். ஆம், பள்ளியில் வேலை பார்க்கும் வாட்ச்மேன் ஐயாவிடம், இந்தப் பையனைப் பற்றி விசாரிக்கச் சொல்லிக் கேட்டிருந்தாள். அவர் இந்தப் பையனின் குடும்பத்தார் பற்றி தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும், வெட்டு, குத்து என்று தொட்டதற்கெல்லாம் அரிவாளைத் தூக்குபவர்கள் என்றும், அந்தப் பையனுக்கு ஏற்கனவே சொந்தத்தில் திருமணம் பேசி முடித்திருக்கிறார்கள் என்றும்  சொல்லியிருந்ததால், இந்த நட்பை எப்படியும் முடித்துவைக்க வேண்டும் என்ற முடிவோடுதான் வந்திருந்தாள். இனி கட்டாயமாக அந்தப் பையன் திரும்ப இந்தப் பக்கம் வரமாட்டான் என்று நம்பிக்கை வந்தது. என்ன, பரமு பாவம் சில நாட்கள் வருத்தமாக இருப்பாள். பின்பு காலம் அதனை மறக்கச் செய்யும். நல்ல வேளையாக முளையிலேயே கிள்ளிவிட்டது குறித்து மகிழ்ச்சியாகவும் இருந்தது. பாவம் சின்னம்மாவிற்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள், சொல்லாமல் விட்டுவிடலாம் என்று எண்ணினாள். பரமுவிடமும், அதற்கு மேல் ஏதும் அறிவுரை சொல்லத் தேவையில்லை என்று தெரிந்தாலும்,

 

”முகத்தை நார்மலா வச்சுக்கோ பரமு, இதை இத்தோடு மறந்துடு. தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சுன்னு நினைச்சுக்கோ, முகத்தில வருத்தம் இருந்தா சின்னம்மாவிற்கு தெரிந்து விடும். பிறகு உன்னை மேற்கொண்டு பூத்திற்கு அனுப்புவாங்களா தெரியாது. நடந்ததை கெட்ட கனவா நினைச்சு மறந்துட்டு வேலையில கவனம் செலுத்து பரமு, அதான் நாம எல்லோருக்கும் நல்லது.” என்றாள்.

 

“அக்கா, மன்னிச்சுடுக்கா, எனக்கு நல்லா புரியுது. இனிமே ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன்க்கா. அம்மாகிட்ட இதப்பத்தி எதுவும் சொல்லாதே” என்றாள் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு.

வாழ்க்கையில் அனுபவங்கள் கொடுக்கும் பாடம் என்றும் உறுதியானவை. துஷ்டரைக் கண்டால் தூர விலகும் பக்குவமும் தானே அமைந்து விடுகிறது. இதயத்தை இரும்பாக இறுக்கிக் கொள்ளும் வல்லமையையும் வழங்குவது. . தனியாக நின்று போராடவும் துணை நிற்பது. அந்த வகையில் மாலுவின் போராட்டம் சரியான எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தங்கக் கூண்டுக்கிளியாய்   அடைந்து கிடப்பவர்களும் பார்த்து பெருமூச்சுவிடும் வகையில் தம் வாழ்க்கையை செலுத்திக் கொண்டிருக்கும் அந்த அனுபவங்கள் கொடுக்கும் சக்தி ஆச்சரியப்படுத்துபவை. கதவு அடைபட்டாலும், சன்னல் சுகமான தென்றலை வீசிக் குளிரச் செய்கிறதே!

 

எம்.ஏ. பரீட்சை முடிவுகள் வெளியான அன்று மாலுவிற்கு அச்சம் இருந்தாலும், காலையிலேயே கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வந்தவள், அதற்குள் முடிவுகள் வெளியான தகவலை கணினி மையத்தில் தெரிந்து கொண்டு அவள் தம் எண்ணை நினைவில் கொண்டுவந்து ரிசல்ட்டை தெரிந்து கொள்வதற்குள் இருப்பு கொள்ளவில்லை. அவள் எதிர்பார்த்தது போலவே முதல் வகுப்பில், அதுவும் டிஸ்டிங்ஷனோடு தேறியிருந்தாள். எப்படியும் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கையும் மெல்ல துளிர் விட்டது..

 

அன்று மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை தங்கள் கலைவாணி கல்வி நிலையத்தின் கரெஸ்பான்டெண்ட் தில்லைராஜன் ஐயா வருவார் என்று தெரியும்.  பெரும்பாலும் அந்த நாளில் தவறாமல் அவர் பள்ளிக்கு வந்து முடிந்தவரை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களையும் சந்திப்பது வழக்கம். அன்று அவரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாக அவரே கூப்பிட்டு அனுப்பியிருந்தார்.

 

“என்னம்மா, மாலதி, எம்.ஏ. பரீட்சை ரிசல்ட் வந்துருச்சி போல இருக்கு..?”

 

“ஆமாம் ஐயா, இதோ என்னுடைய ரிசல்ட் “ என்று பிரிண்ட் அவுட்டை எடுத்துக் காட்டினாள். அதைப் பார்த்தவுடன் அவருடைய முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

 

“அடடே, பரவாயில்லையே நல்ல மார்க் வாங்கியிருக்கயே, மேற்கொண்டு என்ன செய்ய உத்தேசம்?” என்றார்.

 

“ஐயா, ஐ.ஏ.எஸ். படிக்க ஆசை. இது சம்பந்தமா அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிஞ்சுக்கத்தான் உங்களை சந்திப்பதற்காக காத்திருந்தேன்…..” என்று இழுத்தாள்.

 

“ஓ, அப்படியா, பலே.. பலே, நல்ல யோசனைதான். நம்ம பையன் ஒருத்தன் சென்னைல கோச்சிங் கிளாஸ் வச்சிருக்கான். அவன்கிட்ட விசாரிச்சு சொல்றேன். ஆனா நீ சென்னைல போய் படிச்சா உனக்கு வசதியா இருக்கும். வீட்டில் சின்னம்மாவிடம் கலந்துபேசி முடிவெடுத்துவிட்டு வாம்மா. நாளைக்கு எனக்கு இதே நேரம் போன் பண்ணும்மா.. அதுக்குள்ள நான் விசாரிச்சு சொல்றேன்”

என்று தன்னுடைய பிரத்யேக மொபைல் நம்பரைக் கொடுத்தார். மாலுவிற்கு அப்பொழுதே இந்த காரியம் நல்லபடியாக நடக்கும் என்றும் உள்ளுணர்வு சொல்லியது.

 

சின்னம்மாவிடம் இரவு பேச்சை மெதுவாக ஆரம்பித்தபோது, அவர் முகத்தில் லேசான அதிர்ச்சி இருந்தது. மாலு இங்கு வந்து சேர்ந்த சில ஆண்டுகளில் எப்படி தங்களிடம் ஒட்டிக்கொண்டாள். இவள் இல்லாமல் இனி இருக்க முடியுமா என்று தோன்றியது. அதற்குள் பரமு அவசரமாக,

 

“என்னக்கா, என்ன சொல்றே நீ, சென்னைக்குப் போகப் போறியா.

வேண்டாங்க்கா, இங்கேயே இருந்து படியேன். நீ இல்லாம் எப்படிக்கா……”“இல்லை பரமு, கரெஸ்பான்டெண்ட் ஐயா சொல்றார், சென்னைக்குப் போனா நல்லாயிருக்கும்னு.. லைப்ரெரி எல்லாம் அங்கே பெரிசா இருக்கும். படிக்க வசதியா இருக்கும். அதான் யோசிக்கிறேன். கொஞ்ச நாள்ல நல்ல வேலை தேடிட்டு உங்களையும் அங்கேயே கூட்டிட்டுப் போயிடலாம்னு நினைச்சேன்”

 

“மாலு நீ போயிட்டு வாடா. இப்படி குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டிக்கிட்டு இருந்தா சரியா வராது. வெளியே போய் நாலு உலக விசயமும் தெரிஞ்சிக்கணும். எப்படியும் அடிக்கடி வந்து போயிக்கிட்டுதானே இருப்பே. கொஞ்ச நாள் பழகினா சரியாயிடும். நீ ஒன்னும் கவலைப்படாம போய் வா. “ என்று சொல்லும்போது சின்னம்மாவின் கண்கள் கலங்கியிருந்ததையும் கவனிக்கத் தவறவில்லை அவள்.

 

“அக்கா, ஆமாம். அம்மா சொல்றதுதான் சரி. நீ போயிட்டு வாக்கா. கொஞ்ச நாளில் நாங்களும் அங்கேயே வந்துடுறோம்.. எனக்கும் சென்னையில இருக்கணும்னு ஆசையா இருக்கு. “

 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். மாலு, என்னால இந்த ஊரை விட்டு எங்கேயும் வர முடியாதும்மா. நீ அடிக்கடி வந்து போயிட்டு இரு கண்ணு, அது போதும். சீக்கிரமா உன் படிப்பை முடிச்சு நீ கலெக்டரா திரும்பி வர நாளை நினைச்சு சந்தோசமா காத்திட்டிருப்பேன். “பரமுவின் முகம்தான் வாடிப்போனது. ஆனாலும் மாலு சீக்கிரம் வந்து கூட்டிச் செல்வதாகச் சொல்லி அவளை அப்போதைக்கு சமாதானப்படுத்தி வைத்தாள்.

 

அடுத்த நாள் சொன்ன நேரத்தில் சரியாக போன் செய்தாள். போன் பிசியாக இருந்த அந்த கொஞ்ச நேரத்தில் படபடப்பாக இருந்தது.

 

“ஹலோ, சொல்லும்மா. உன் சம்பந்தமாத்தான் இப்ப பேசினேன். நான் சொல்ற இந்த அட்ரசை குறிச்சுக்கோம்மா. மயில் வாகனன் என்பவர் நம்ம சென்னை பிராஞ்ச் பள்ளியில் ஆசிரியரா இருக்கார். அவரைப் போய் பார்த்தால் மேற்கொண்டு என்ன செய்யணும்னு அவர் சொல்லுவார். அங்கு போய் பார்த்துவிட்டு எப்ப, எது தேவைன்னாலும் இந்த நம்பருக்கு கூப்பிடும்மா. உனக்கு தேவையான உதவி எல்லாம் மயில் வாகனன் சொல்லுகிற அந்த நபர் செய்வார். “ என்றார். முதன் முதலில் சென்னையில் அடி எடுத்து வைத்த அந்த நாள் அவள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் பல்வேறு நிகழ்வுகளுக்கு அச்சாணியாய் அமைந்தது. தங்குமிடம், உணவு உண்ண வேண்டிய இடம் என்று எந்த முன்னேற்பாடும் இல்லாமல் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல உணர்ந்தாள். பட்டணத்து நாகரீகம் அவளை அச்சமூட்டியது. முன்பின் அறியாத விடுதியில் தங்கும் தைரியமும் வரவில்லை. அப்போதைக்கு இரயில் நிலையத்தில் இரயில்வே பே – டாய்லெட்டில் சென்று குளித்து முடித்து தயாராகி, அங்கேயே கேண்டீனில் பெயருக்கு இரண்டு இட்லியை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மணியைப் பார்த்தால், 7.30 தான் ஆகியிருந்தது. இன்னும் 4 மணி நேரம் இருக்கிறது, தான் போய் பார்க்க வேண்டிய இடம் அண்ணா நகரில் உள்ள பள்ளி என்பதால், அங்கு கேண்டீனில் இருப்பவரிடமே பேருந்தின் எண்ணை விசாரித்து அறிந்து கொண்டு, பள்ளிக்குச் சென்று சேர்ந்தாள். 11. 30 வரை பள்ளியின் வரவேற்பு அறையிலேயே உட்கார்ந்திருந்தவளுக்கு எதிர்கால கற்பனையில் நேரம் போனதே தெரியவில்லை. தாம் நினைத்தபடி நல்லபடியாக எல்லாம் அமைய வேண்டுமே என்ற கவலையும் தொற்றிக் கொண்டது கையில் இருக்கும் பணம் தம் படிப்பு செலவிற்கு ஒரு வேளை போதவில்லையென்றால் என்ன செய்வது என்றும் மலைப்பாக இருந்தது. நேரம் பனியாய் கரைந்து விட்டது பியூன் வந்து,

 

”அம்மா, நீங்கதானே மாலதிங்கறது.. உங்களை சார் கூப்பிடுறார், ஸ்டாஃப் ரூம் போங்க. அதோ பாருங்க, அந்தக் கடைசி பில்டிங்குல 14ம் எண் அறைதான். அங்கே போய் பாருங்க. சார் உங்களுக்காக காத்திட்டிருக்கார் “ என்று சொன்ன போதுதான் தெரிந்தது.மாலதி வேகமாக எழுந்து ஸ்டாஃப் ரூம் நோக்கி நடையை எட்டிப் போட்டாள் மனதில் ஆயிரம் கேள்விகளுடன்!

 

தொடரும்

Series Navigationமொழிவது சுகம் – நவம்பர் -2- 2012சார் .. தந்தி..
author

பவள சங்கரி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *