கண்காணிப்பு

This entry is part 5 of 33 in the series 11 நவம்பர் 2012

நான் கடிகாரம் கட்டுவதில்லை. அதனால் ‘டீம் லீடர்’ அறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக என் ‘மொபைலில்’ நேரத்தைப் பார்த்தேன். மணிஏழடித்திருந்தது.அவன் நாளை காலை பார்க்கலாம் விவாதிக்கலாம் என்று குறிப்பிட்ட வேலைகளை நான் முடித்துவிட்டுக் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரமேனும் ஆகும் வேலை நான் எதிர்பார்க்கிற வேகத்தில் முன்னேறுகிற பட்சத்தில். எங்கள் வேலை ஒரு நிதி நிறுவனத்துக்குத் தேவையான மென்பொருளைத் தயார் செய்வது. அரசு வங்கிகளின் வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்யும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருந்தது . ஆனால் அவர்களுக்கு அந்த வேலையின் நுணுக்கத் தேவைகளைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. புதிது புதிதாக எதையாவது எங்களிடம் கேட்கக் கேட்க என் வேலையின் திசை மாறிக் கொண்டே இருந்தது.

அதிக நேரம் உட்காருபவர் இன்னும் எத்தனை பேர் என்று அறிந்து கொள்ள நான் எழுந்து நின்று பார்க்க வேண்டும். தலையும் கணிப்பொறியும் மறையுமளவான தடுப்புக்களின் அடைப்புக்களில் நாங்கள் அமர்ந்து பணி புரிந்து கொண்டிருந்தோம். அலுவல் சம்பந்தமானதை அனேகமாக மின்னஞ்சலில் செய்து கொள்வோம். ‘லேன்ட் லைன்’ சுற்றிணைப்பு அல்லது மொபைல் தாண்டி நாங்கள் பேசிக் கொள்ள நேரமோ தேவையோ இருக்காது.

ஏழரை மணிப் போல தான் எனக்கு ஒரு விஷயம் பிடி பட்டது. இப்போது நான் போராடிக் கொண்டிருப்பது பிரகாஷ் செய்ய வேண்டிய பகுதி. எங்கே போனான் அவன். எழுந்து நின்று பார்த்தேன். எதிர் வரிசையில் இறுதி பொந்து அவனது. இல்லை. மொபைலை முயன்றேன். ‘ஸ்விட்ச்ட் ஆஃப்’ என்று வந்தது. ‘டீம் லீடரி’டம் இதை விசாரிப்பது தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்குவது. ‘நீயே செய்’ என்று தான் எப்படியும் சொல்லப் போகிறான். ஏனோ மனது ஆறாமல் எங்கள் குழுவின் இன்னொரு உறுப்பினான வடிவேலுக்கு போன் செய்தேன். அழைப்பு ஒலிக்கு பதிலில்லை. ‘நான் ஒரு ‘பார்ட்டியி’ல் இருக்கிறேன். குறுஞ்செய்தி அனுப்பேன்’ . ‘பிரகாஷ் நாளை காலைக்குள் முடிக்க வேண்டிய இலக்கில் தன் பங்கைச் செய்ய வேண்டும். ஏன் அவனை மொபைலில் தொடர்பு கொள்ள இயலவில்லை’ என்று அனுப்பினேன். ‘பிரகாஷ் சில ஆச்சரியங்களை நாளை தரக் கூடும்’ என்று பதில் வந்தது. இந்தப் பிழைப்பில் வேலை நாளில் பாதிக்கு மேல் ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளுமாகத்தான் கழிகிறது. புதிதாக என்ன தரப் போகிறான்.

எட்டுமணிக்கு ‘இனிப் போராடத் தென்பில்லை’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். கண்கள் எரிந்தன. செய்த வரை ‘ஸேவ்’ செய்து வெளி வர 8.15. வளாகத்தை விட்டு வெளிவர 8.30. ஏழுமணிக்கே கம்பெனி வாகனம் கிளம்பியிருக்கும். ஒரே ஒரு ஆறுதல் பேருந்து நிறுத்தம் அருகில் தான். ஒரு நான்கு சக்கர வாகனம் வாங்க நினைப்பு வந்தாலும் திருமணத்தை ஒட்டி வைத்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்திருந்தேன்.

பேருந்து உடனே வராததும் சற்றே இளைப்பாற உதவியது. அலுவலகத்தின் மயான அமைதிக்கு நேரெதிராக வாகன மனித நடமாட்ட சுறுசுறுப்பு ஒரு மாற்றாக ஒரு இறுக்கத்தை வெட்டியது. சற்று நேரத்தில் ஒரு குளிர் சாதனப் பேருந்து வந்தது. உள்ளே அமர இடமும் இருந்தது. எனது மொபைலை எடுத்து ‘ஹான்ட்ஸ் ப்ரீ’யை மாட்டிக் கொண்டு பாடல்களைக் கேட்கத் துவங்கினேன். இசையில் ஆழ்ந்து விட்ட் நேரம் ஒரு மென்மையான தட்டல் என் தோளின் மீது. மாலதி. எங்களது போட்டி நிறுவனத்தில் பணி புரிகிறாள் என்று ‘பேஸ் புக்’கில் தெரிந்து வைத்திருந்தேன். எப்படி இருக்கிறாய் என்னும் பாவனையில் வலது கையை நாட்டிய அபிநயம் போல அசைத்தாள். நான்கு வரிசை பின் தள்ளி இருந்த இடத்தில் மறுபடி சென்று அமர்ந்து பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையைக் காட்டி வா என்று சைகை செய்தாள்.

ஒன்றாக சாப்பிடலாம் என்ற அவளது விருப்பத்தை நானும் , ‘பெசன்ட் நகர்’ முருகன் இட்லி கடைக்கு இன்னொரு நாள் போகலாம் – இன்று திருவான்மியூர் ‘ஹாட் சிப்ஸ்’ போதும் என்னும் என் கருத்தை அவளும் பரஸ்பரம் ஆமோதித்தோம்.

‘ஹாட் சிப்ஸ்’ஸில் அமர்ந்து உண்ணும் அறை நிரம்பி வழிந்தது. ‘சுய சேவை’யில் எங்கள் உணவு தயாராகி வரக் காத்திருந்தோம். இங்கே ‘ அமர்ந்து உண்பவர், வாங்கிச் செல்பவர், நின்று உண்பவர்’ என எல்லா வித வாடிக்கையாளருக்கும் ஒரு ஏற்பாடு இருக்கிறது பார்த்தாயா?’ என்றாள். என்னால் அப்போதைக்கு பசியைத் தவிர வேறு எந்த விஷயம் பற்றியும் யோசிக்க இயலவில்லை. ‘இது போல பல உணவகங்கள் உள்ளன’ என்று சொல்லி வைத்தேன் ஒப்புக்கு. ‘நான் சொல்ல வந்தது இந்த ஊரின் நகரும் மக்கள் நெரிசலுக்குப் பொருத்தமான வியாபார நுணுக்கம் இது என்றுதான்.’ என்றாள்.

உணவு வந்ததும் ஒன்றாய் நின்ற படி சாப்பிட நாங்கள் ஒரு இடத்தைக் கண்டதும் இந்த வேலையில் எனக்கு திருப்தி உள்ளதா என்றதற்கு இப்போதைக்குப் பணம் வருவதே முக்கியம் என்ற என் அணுகு முறையை நேர்மையாக எடுத்துரைத்தேன். உணவுக்குப் பின் பழரசம் அருந்தும் போது ‘நானும் சில நண்பர்களும் இன்னும் இரண்டு மாதத்துக்குள் ஒரு ‘ஸாஃப்ட்வேர் நிறுவனத்’தைத் துவங்க இருக்கிறோம். உன் குழுவின் ப்ரகாஷும் அதில் ஒரு பங்குதாரர்’ என்றாள்.

வெளியே வந்ததும் ‘ இன்னும் ஐந்து நிமிடம் இருக்குமா? சின்ன ‘ஷாப்பிங்’ என்றாள். பதில் ஏதும் சொல்லாமல் நான் அவளுடன் அருகிலிருந்த ‘சூப்பர் மார்க்கெட்’டில் நுழைந்தேன். விற்பனைப் பணியில் நிறைய இளம் பெண்கள். பெரிய அளவிலான அந்தக் கடையின் பலவேறு வரிசை அடுக்குத் தட்டுகளின் இடைபுகுந்து பொருட்களை மாலதி தேர்ந்தெடுக்கும் வரை இங்கிதம் கருதி தள்ளியே நின்றிருந்தேன். வாங்கி முடிந்து வெளியே வரும் போது ‘இத்தனை பணிப்பெண்கள் இருக்கும் போது யாருமே உதவாமல் நீ விசாரித்த போது மட்டும் அது இருக்கும் இடத்தைக் காட்டிவிட்டு நீ அலைவதை வேடிக்கை பார்க்கிறார்களே?” என்றேன். “அவர்கள் வேலை நாம் எந்தப் பொருளையும் திருடிச் செல்லாமல் கண்காணிப்பது தான் என்றாள்.” “அவர்களைக் கண்காணிப்பது யார்?” என்றேன். ” அதற்கு தான் காமிரா இருக்கிறதே” என்று சிரித்தாள் மாலதி.

Series Navigationவிடுமுறை நாள்நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.4.. லா.ச.ராமாமிருதம் – கங்கா
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *