வீதி

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 18 of 33 in the series 11 நவம்பர் 2012
                 வே.ம.அருச்சுணன் மலேசியா
           காலை மணி எட்டாவதற்கு முன்பே கவுன்சிலர் மணிவண்ணன் பூக்கடைக்கு வருகிறரர்.
          “நான் இருபது வருசமா இங்கு வியாபாரம் செஞ்சிக்கிட்டு வர்றேன்.                        இப்போ……திடீர்னு வந்து  இடத்தைக் காலிப் பண்ணச் சொன்னா நான் எங்கே போவேன்?”
           பூக்கடை உரிமையாளர் பூங்கோதை அந்த வட்டாரத்தின் நகராண்மைக் கழக  உறுப்பினர் மணிவண்ணனிடம் தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
           “கேள்விப் பட்டுதான் வந்திருக்கிறேன் தைரியமாக இருங்கள் அம்மா!”
           கவின்சிலர் பதவியேற்று மூன்று மாதங்களே ஆகியிருந்த மணிவண்ணன் அமைதியுடன் கூறுகிறார்.வாழும் காலத்தில் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்துச் செயல்படும் துடிப்பும் சமுதாயப் பற்றும் மிக்க இளைஞர் அவர்.
           மேரு,புக்கிட் இராஜா தோட்டத்தில் வாழ்ந்தபோது தனது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள்தாம் பூங்கோதையும் அவர் கணவர் செங்கேணியும். செங்கேணி வெளிக்காட்டுக் கங்காணி. மனைவி பூங்கோதை இரப்பர் மரம் சீவும்  தொழிலாளியாக வேலை பார்த்தவர்.
   ஆசைக்கொன்றும் ஆஸ்திக்கொன்றுமாக அவர்கள் இரண்டு பிள்ளைகளைப் பெற்றனர். ஆண் பிள்ளைக்கு வேந்தன் என்றும் பெண் பிள்ளைக்கு  பிரியா என்றும் பெயர் சூட்டி பிள்ளைகளைச் சீருடனும் சிறப்புடனும் வளர்க்கின்றனர். அவ்விரு பிள்ளைகளையும் புக்கிட் இராஜா தோட்டத் தமிழ்ப் பள்ளியிலேயே படிக்க வைக்கின்றனர்.
       பள்ளித் தலைமையாசிரியர் சிவசுப்பிரமணியம் அவர்கள் மிகுந்த கடமையுணர்வோடு பிள்ளைகளுக்குக் கல்விப் புகட்டுகிறார். அவரிடம் பணிபுரிந்த ஆசிரியர்களும் பொறுப்புடன் பணியாற்றிப் பல மாணவர்களைக் கல்வியில் உயர்த்திவிடுகிறார்கள்.
        அதன் விளைவு அவர்களின் இரண்டு பிள்ளைகளுமே கல்வியில் சிறந்து விளங்கியதுடன் அப்பள்ளியில் பயின்ற மாணவர்களில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் மாணவர்கள் என்ற பெருமையைத் தட்டிச் சென்ற போது,செங்கேணியும் பூங்கோதையும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
          தோட்டத்தில் வேலை முடிந்து பணி ஓய்வுக்குப் பிறகு தோட்டத்து அருகாமையில் ஒரு துண்டு நிலத்தை தங்களின் சேமிப்பு மற்றும்  இருவரது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு வாங்கிய அந்நிலத்தில் கணவரும் மனைவியும் மல்லிகைப் பூக்களைப் பயிர் செய்கின்றனர். பயிர் செய்த மல்லிகைப் பூக்களை அருகில்  அமைந்துள்ள கிள்ளான் பட்டணத்தில் பூவிற்பனையில் கணவரும் மனைவியும் கடந்த இருபது ஆண்டுகளாக  ஈடுபட்டுக் கணிசமான  வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.
         அன்று, இரவு உணவுக்குப் பின் குடும்பத்திலுள்ள நால்வரும் வரவேற்பு அறையில் ஓய்வாக  அமர்ந்து தொலைக்காட்சியில் ஒலியேறிக் கொண்டிருந்த
‘மலேசிய இந்தியர்களின் போராட்டம்’ எனும் தலைப்பில் ஒலியேறிக் கொண்டிருந்த குறும்படத்தைக் கண்டு களிக்கின்றனர். அனைவரின் முகங்களிளும் ஒருவித இறுக்கத்தைக் காண முடிகிறது! அவர்களின் முகங்களில் சோகம் கருமேகமாய்ப் படர்கிறது!
         இந்நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் ஆற்றிய பங்கினையும் செய்த உயிர்த்தியாகங்களையும் மிகவும் தத்துரவமாகக் காட்டியிருந்தார் நாட்டின் தலை சிறந்த இயக்குநர் ஜானகி இராமன் மாணிக்கம்.நாட்டுக்கு உரமாகிப் போன ஓர் இனம், ஏமாற்றத்தின் விளிம்பில் தள்ளாடும் அவல நிலையைப் பதிவு செய்து, காண்போரின் கண்களைக் குளமாக்கியது!
         படத்தைப் பார்த்த பின் அங்கு திடீரென ஓர் அமைதி நிலவுகிறது! ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். ஆனால், யாரும் பேசிக் கொள்ளவில்லை! இந்தியர்களின் வீழ்ச்சியை எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் நமது மனம் கவலையினால் வாடும் போலும்!
        நிலவிய       அமைதிக்கு      முற்றுப்புள்ளி     வைப்பது           போல்,
“அம்மா….நான் கேட்கிறேனு…… நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது!” பீடிகை போடுகிறான் வேந்தன்.
      “வேந்தன்….நீ என் செல்லப் பிள்ளை! அது மட்டுமல்ல….வீட்டுக்குத் தலைப்பிள்ளை வேற……! படிச்ச பிள்ளை தப்பா என்னத்தக் கேட்கப் போற….? ம்….மனசுலப் பட்டத…. அம்மா கிட்டத் தயங்காமக் கேளுப்பா…..!”
   அண்ணன், அம்மாவிடம் கேட்கப் போகும் கேள்வி மீது முழு கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள் தங்கை பிரியா…!
    “அம்மா….நாங்கச் சின்னப்பிள்ளையா இருந்தப்ப…..எங்கள வளர்த்து ஆளாக்கத் தோட்டத்துல குறைந்த வருமானத்திலப் படாதுப் பாடுபட்டிங்க…..! நீங்கப் பெற்று வளர்த்தப் பிள்ளைகள் நாங்கள் இருவரும் இன்றைக்கு நல்ல வேலைகளில் அமர்ந்து கைநிறையச் சம்பாதிக்கிறோம். பணி ஓய்வு பெற்ற பிறகும் அப்பாவும் நீங்களும் குடும்பத்துக்காக இன்னும் உழைக்கனுமா….?” கவலை தோய்ந்த குரலில் கேட்கிறான் வேந்தன்!
     “அம்மா…..அண்ணன் சொல்றது ஞாயம்தானே……? அவர் சொல்றபடி அப்பாவும் நீங்களும் பூந்தோட்டம், பூவிற்பனைன்னு இந்த வயசானக் காலத்தில் ஓய்வில்லாமல் உழைக்கிறத விட்டுட்டு வீட்டுல ஓய்வா இருக்கனும்.
உங்கள உட்கார வைச்சுச் சாப்பாடு நாங்கப் போடுறோம்,செலவுக்கு வேண்டிய பணத்தைக்கொடுக்கிறோம். உங்களுக்கு என்ன…..வேண்டும் சொல்லுங்க? அத்தனையும் செஞ்சிக் கொடுக்கிறோம்” மனமிறங்கிக் கூறுகிறாள் பிரியா!
     “எங்களுக்கு என்ன வயசு ஆயிடுச்சு…..? வயசு அறுபதுதானே ஆவுது? அரசாங்கம் கூட அறுபது வயது வரையிலும் வேலைச் செய்யலாமுனு சட்டம் கொண்டாந்திருக்கே……! உடம்பிலத் தெம்பு இருக்கிற வரையிலும் உழைக்கிறோம்…..!” தனக்கு மனதில் பட்ட ஞாயத்தை எடுத்துக் கூறுகிறார் தாயார் பூங்கோதை!
      “பிள்ளைங்க இருக்கும் போது…..ஒரு ஜான் வயிற்றைக் கழுவ  வயசானக் காலத்தில  தெருவில நின்னு, வருமானத்துக்காக உயிர் போராட்டம் நடத்தும் நிலையைப் பார்த்து உலகம் எங்களைக் கன்னாப் பின்னா வென்றுத் திட்டும்!” வேந்தன் கவலையுடன் கூறுகிறான்.
      “அட….நான் பெத்தச் செல்வங்களா…..! பெற்றவங்க மீது எவ்வளவு பாசம் வெச்சிருக்கிறீங்கன்னு எங்களுக்கு விளங்காம இல்ல….!  உலகம் ஆயிரம் சொல்லும். அதையெல்லாம்நினைச்சுக்கிட்டு இருந்தா நாம நிம்மதியா
வாழமுடியாது. உழைச்ச உடம்பு சும்மா இருக்க முடியுமா? உயிரோடு இருக்கிற வரையிலும் உழைச்சிடுட்டுப் போறோமே? அதான் எங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்! ”
        தாய், பிள்ளைகளின் உரையாடலில் அப்பா செங்கேணி  ஏதும் கருத்து சொல்லாவிட்டாலும் புன்முறுவலுடன் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்! அவர் எப்போதும் அதிகம் பேச மாட்டார். அது அவரது பிறவிக்குணம். அம்மாதான் கருத்து சொல்வதில் முன்னணி வகிப்பார்.அது அவரது குணமாக இருந்தது!
          பிள்ளைகள் சொன்னது எதையும் அம்மா காதில் போட்டுக் கொள்ளவில்லை! எதற்கும் அவர் மசிந்துவிடவும் இல்லை.பெற்ற பிள்ளைகள் என்றாலும் தனக்கு உடன்படாதக் கருத்தென்றால் ஒரு போது அவர் யாருடனும் ஒத்து போகமாட்டார்!
          வயதான காலத்தில் பெற்றோர்கள் ஏன் சிரமப்பட வேண்டும்? வீட்டில் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிள்ளைகள் பல முறை சொல்லியும் பெற்றோர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து தங்களின் வியாபாரத்தைக் கவனித்து வந்தனர்.
         வேறு வழி இல்லாமல் பிள்ளைகள் இருவரும் பெற்றோர் தங்களின் விருப்பப்படியே சுதந்திரமாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அமைதியாக இருந்துவிடுகின்றனர்.
         காலம் வேகமாக விரைகிறது.வயதான காலத்திலும் ஓய்வின்றி உழைத்து வந்த செங்கேணி ஒருநாள் திடீரென மாரடைப்பினால் காலமாகிறார்.கணவரின் மறைவினால் பூங்கோதை நிலைகுழைந்து போகிறார்.இன்னும் பல ஆண்டுகளுக்குத் தங்களின் வாழ்க்கை எந்தவொரு பிரச்னையுமின்றி மகிழ்ச்சியாகச் செல்லும் என்று நம்பிக்கொண்டிருந்த பூங்கோதைக்குப் பெரிய ஏமாற்றமே தள்ளாத வயதில் இடியாக வந்து போகிறது!
         தள்ளாத வயது; அப்பாவின் திடீர் பிரிவு! மனம் தளர்ந்து போயிருக்கும் அம்மா இப்போதாவது தங்களின் வழிக்கு   வருவார்     என்ற நம்பிக்கையுடன்  அப்பாவுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களும் முடிந்த பிறகு பிள்ளைகள் இருவரும் அம்மாவின் ஓய்வு பற்றி அவரிடம் பேச முயல்கின்றனர்.ஆனால், மீண்டும் பிள்ளைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது!
          அம்மா….பூவிற்பனைச் செய்யும் தொழிலைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினார்.அவர் தன் தொழிலில் கணிசமான வருமானத்தை ஈட்டி வந்தார். அம்மாவின் வியாபாரத்திற்குப் பிள்ளைகளும் கை கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டனர்!
          கல்வி அறிவே இல்லாத அம்மா, தள்ளாத வயதிலும் சுயக்காலில் நின்று வியாபாரம் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டுகிறார்கள்.
      பட்டப்படிப்பைக் கொண்டிருந்தும் குறைந்த வருமானத்திற்காக    கை கட்டிப் பிறரிடம் அடிமையாக வேலை செய்வதைக் காட்டிலும் அம்மாவிற்கு உதவியாக வியாபாரத்தில் ஈடுபடுவதே நல்லது என்ற முடிவிற்கு வந்தவுடனே, இரண்டு பிள்ளைகளும் தங்களின் வேலைகளை இருபத்து நான்கு   மணிநேரத்தில் இராஜினாமா செய்துவிட்டு அம்மாவிற்கு உதவியாக வியாபாரத்தில் ஈடுபடத்தொடங்கினர்.
         அம்மாவுக்குக் கொடுக்க வேண்டிய ஓய்வை இப்போது பிள்ளைகள் கொடுத்துக் கொண்டிருந்தனர்.அம்மா கள்ளாவில் முதலாளியாக அமர்ந்திருக்கின்றார். ‘புலிக்குக் பிறந்தது பூனையாகுமா?’ என்ற கேள்விக்கு விடை கொடுக்கும் வகையில் பிள்ளைகள் இருவரும் தொழிலில் மின்னலாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்!
          அப்போது,தொலைவில் கனரக வாகனங்கள் பெரிய உறுமலோடு பத்து லாரிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட, கிள்ளான் நகராண்மைக் கழக ஊழியர்கள் பூங்கோதையின் பூக்கடையின்  முன் வந்து நிற்கின்றனர்!
            அங்கு, பெரிய பரபரப்பு ஏற்படுகிறது! பூங்கோதையுடன் பத்து பூக்கடை உரிமையாளர்களும் ஒன்று சேர்கின்றனர்.வேடிக்கைப் பார்க்க நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி நிற்கின்றனர்! சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சாலையிலேயே நிற்கின்றன.சிலவினாடிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போகிறது!
          இன்னும்,சில நிமிடங்களில் இருபது ஆண்டுகளாக அந்த வட்டார இந்து மக்களுக்கு மட்டுமின்றி பல இன மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த குடும்பங்களின் கடைகள் தரைமட்டமாகப் போவதை உறுதி படுத்துவது போல், புல்டோசர்கள் பயங்கர உறுமலுடன் பூக்கடைகளை நெருங்கின, நகராண்மை ஊழியர்களும் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் தயாராகின்றனர்!
         “இந்த நாட்டு குடியுரிமைப் பெற்ற பிரஜை நான்.இருபது வருடமாக ‘லைசன்ஸ்’ சுக்காக மனு செய்தும், அனுமதி கொடுக்க மறுக்கும் நகராண்மைக் கழகம், கள்ளக்குடியேறிகளுக்கு நூற்றுக் கணக்கில் ‘லைசன்ஸ்’ கொடுத்து உள்ளூர் மக்களின் சோற்றில் மண்ணைப் போடுவது எந்த வகையில் ஞாயம்? எங்கள் உரிமைய ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்…!”
           பாராபட்சமுடன் இயங்கும் நகராண்மை கழகத்தின் போக்கை ஆட்சேபித்து உறுமிக் கொண்டிருந்த புல்டோசர் முன் பூங்கோதை அமர்கிறார்! அவருக்கு ஆதரவு தெரிவித்து மற்ற பூக்கடைக்காரர்களும் ஆதரவாளர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவருடன் அமர்கின்றனர்!
           வருகை புரிந்த நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்துல்லா  பூங்கோதையிடம் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிப், போராட்டத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்! ஆனால், புதிதாகப் பதவி ஏற்ற கவின்சிலர் மணிவண்ணன் அவரிடம் சில சட்ட நுணுக்கங்களை எடுத்து வைக்கிறார். டத்தோ அப்துல்லா வியப்பால் அகலமாக வாயைப் பிளக்கிறார்!
                                            முற்றும்
Series Navigationதலைதப்பிய தீபாவளிஇது தான் காலேஜா – நிஜங்கள்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    வீதி எனும் மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் சிறுகதை படிக்க சுவையாக இருந்தது. இது வெறும் சிறுகதை மட்டுமல்ல. ஒரு இனத்தின் வீழ்ச்சியை கூறும் மன வேதனைதான் கையாலும் கணினியாலும் இங்கே எழுதப்பட்டுள்ளது!
    ” நாட்டுக்கு உரமாகிப் போன ஓர் இனம் ஏமாற்றத்தில் தள்ளாடும் அவல நிலையை ” மிகவும் அழகாகவே இங்கே பதிவு செய்துள்ளார் வே. ம. அருச்சுணன்.
    அது என்ன என்பதை நாம் அறிந்துகொள்வது நல்லது.
    சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் அன்றைய மலாயாவை ஆண்டபோது அடர்ந்த காடுகளையும் உயர்ந்த மலைகளையும் வெட்டி வீழ்த்தி இரப்பர் தோட்டங்களையும், வீதிகளையும், புகைவண்டி பாதைகளையும், பட்டணங்களையும் நகரங்களையும் உருவாக்க தென்னிந்தியாவில் இருந்து பாமர மக்களை சஞ்சிக் கூலிகளாக கொண்டுவந்து இறக்கினர். அவர்கள் பெரும்பாலும் தமிழர்களும் தெலுங்கேருமேயாவார்கள் இவர்கள் அடிமைகளாக எந்தவிதமான வசதியுமில்லாமல் வேலை செய்யும் நிலைக்கு உள்ளாயினர். பலர் காடுகளில் பாம்பு கடிக்கும் மலேரியா காய்ச்சலுக்கும் பலியாகி உயர் நீத்தனர். இதுவே தமிழ் தெலுங்கு பாட்டாளிகளின் அன்றைய பரிதாப நிலை.
    ஆனால் அதே ஆங்கிலேயர்கள் இவர்களுக்கு மேல் அதிகாரிகளாக யாழ்ப்பாண தமிழர்களையும் மலையாளிகளையும் கொண்டுவந்து நியமித்தது அதைவிட கொடுமையாகும்.நம் மக்களை அவர்களும் அடிமைகளாகவே நடத்தினர் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதையாகும்.
    இதுபோன்றதுதான் அன்றைய தோட்டப்புற வாழ்க்கை அதில் ஒன்றுதான் கதையில் வரும் மேரு புக்கிட் ராஜா தோட்டம் எனாலாம்.
    பூங்கோதையின் கதை பின்னோக்கி கூறப்பட்டு, இன்று சொந்தத்தில் முப்பது வருடங்கள் பூ வியாபாரம் நடத்தி வந்தாலும், எத்தனையோ விண்ணப்பங்கள் செய்தும் பயனற்ற நிலையில் கடையை இடிக்கும் நிலைக்குதான் உத்தரவு வருகிறது. ஊருக்கு உழைத்த இனத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதே இக் கதையின் கரு.
    கதைக்கு மெருகூட்டும் வண்ணமாக வேந்தனும் பிரியாவும் படைக்கப்பட்டு பெற்றோர் நலம் நாடும் பிள்ளைகளாக காட்டப்பட்டுள்ளனர்.பட்டப்படிப்பு இருந்தாலும் சொந்த வியாபாரம் செய்வதே மேல் என்பதையும் கதையினூடே கூறியுள்ளார்.கதை முடிவில் ஒரு பரபரப்பை உண்டுபண்ணி முடித்துள்ள விதமும் நன்று. உங்கள் கதைகள் பலவற்றை ” தாரணி மைந்தன் ” எனும் புனைபெயரில் மலேசியா நண்பன் பத்திரிகையில் திறனாய்வு செய்துள்ள நான் இப்போது திண்ணையிலும் உங்களை சந்திப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறது. இதுபோன்று வருங்காலத்தில் உங்களுடைய படைப்புகள் உலகளாவிய நிலையில் தமிழ் வாசகர்களிடையே திண்ணை மூலமாக சென்றடைய எனது வாழ்த்துக்கள். அதோடு உங்களுக்கும் திண்ணை வாசகர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! …டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar
    வே.ம.அருச்சுணன் says:

    அன்புள்ள டாக்டர் ஜி.ஜோன்சன் அவர்கட்கு,’வீதி’ எனும் என் சிறுகதையை வாசித்து கருத்துரை வழங்கியத் தங்களுக்கு முதலில் என் பணிவான நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    தங்களின் உற்சாக வார்த்தைகளைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.தங்களின் திறனாய்வு எழுத்துலகில் சாதனைப் படைக்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்துடன் 1961 ஆண்டு தொடங்கி எழுதிவருகிறேன்.தங்களின் உற்சாக வார்த்தைகளால் மிகவும் மகிச்சியடைந்துள்ளேன்.எனது குடும்பத்தாரும்தான்.தங்களின் பல ஆய்வுகளைப் படித்து என்னை நானே செதுக்கியுள்ளேன்.ஆய்வுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.வே.ம.அருச்சுணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *