அக்னிப்பிரவேசம் -10

This entry is part 19 of 29 in the series 18 நவம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

நிர்மலா எல்லா வார, மாதப் பத்திரிகைகளை வாங்கி வரச் செய்வாள். அதுதான் அவளுடைய பொழுதுபோக்கு. மதுரையிலிருந்து வெளிவரும் ஒரு மாதப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தவள் ஓரிடத்தில் அப்படியே நின்று விட்டாள். அதில் பரமஹம்சாவின் போட்டோ இருந்தது.

பரமஹம்சா வருடத்திற்கு ஒருமுறையோ இரு முறையோ வருவான். வரும் பொழுதெல்லாம் அவளுக்கு தைரியமளிக்கும் வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் போவான். சந்திரனின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வான். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுவதற்காகப் பாடுபடுவான்.

ஆனால் இந்த வருடம் முழுவதும் வரவே இல்லை. அவள் பரபரப்புடன் கட்டுரையைப் படித்தாள். மதுரையில் ஆறு மாதங்களுக்கு முன்னால் நிறுவப்பட்டிருந்த “பக்த சேவா சமாஜம்” பற்றிய கட்டுரை அது.

சுமார் ஐந்து பேருடன் தொடங்கபட்ட இந்த சமாஜம், இரண்டு மாதங்களுக்குள்ளேயே ஐநூறு பேர் அங்கத்தினருடன் வளர்ச்சி அடைந்துவிட்டது. தினந்தோறும் காலையிலும் மாலையிலும், பண்டிகை நாட்களில் நாள் முழுவதும் அங்கே பிரார்த்தனை நடக்கும். குடும்பப் பொறுப்புகளில் மூழ்கிவிட்ட இன்றைய சமுதாயத்தில் அமைதி, தூய்மை  வீட்டில் கிடைக்காததால் தினமும் கொஞ்ச நேரமாவது பக்தியாய் கடவுள் தியானத்தில் கழிப்பது அசாத்தியமாகிவிட்டது. கோவிலுக்குப் போனாலும் அங்கேயும் அமைதி கிடைப்பதில்லை.

இந்த பக்த சேவா சமாஜத்தில் எந்த சந்தடியும், பரபரப்பும் இருக்காது. எந்த சமயத்தில் வேண்டுமானாலும் போகலாம். நிசப்தமாய் கடவுளை தியானம் பண்ணலாம். அதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

பக்தியானது மனதை எப்போதும் சுறுசுறுப்பாய் வைத்திருக்கும். பிரார்த்தனை டென்ஷனை போக்கடித்து மனதை தூயமையாய் வைத்திருக்கும். அமைதியான சூழ்நிலையில் எந்த தடங்கலும் இன்றி மனிதன் கடவுளை தியானம் செய்ய முடிந்தால், அது கொஞ்ச நேரமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் மாறுபாட்டை ஏற்படுத்த வல்லது.

புதிய சமுதாயத்தை நிறுவுவதற்கு, மறைந்து கொண்டிருக்கும் பழைய கலாச்சாரங்களை திரும்பவும் நிலை நாட்டுவதற்கு  இந்த சமாஜம் செய்து வரும் சேவை மகத்தானது. இப்படிப்பட்ட எண்ணம் வந்ததே பெரிய விஷயம். அதை நடைமுறையில் கொண்டுவந்த திரு பரமஹம்சா  பாராட்டிற்கு உரியவர். மக்களுக்கு இடையில் பக்தி உணர்வை வளர்ப்பதற்கும், அந்த உணர்வு இருப்பவர்களுக்கு தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதுதான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்று  அவர் நம் நிருபரிடம் தெரிவித்தார்.

நிர்மலாவுக்கு பரமஹம்சாவிடம் பக்தி ஏற்பட்டது. ஒருமுறை வந்து விட்டுப் போனால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

அன்று மாலையே வந்தான் அவன்.

“வாங்க, உங்களைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். பத்திரிகையில் பார்த்தேன். ரொம்ப பெரிய ஆளாயிட்டீங்க. நாங்க நினைவில் இருப்போமா என்று சந்தேகம் வந்தது” என்றாள் வரவேற்றுக் கொண்டே. அவன் வருகை அவளுக்கு சந்தோஷத்தை, நிம்மதியை அளித்து.

அவன் கண்களில், முகத்திலும் கூட மாற்றம் தெரிந்தது. புதுவிதமான ஒளியுடன் அவன் கண்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.

“நான் ரொம்ப சாதாரண மனிதன். உங்களைப் போன்ற உத்தமர்களை எப்படி மறந்துபோவேன்? நீங்க என்னைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கீங்க என்று ஏனோ எனக்குத் தோன்றியது. ராத்திரி பூஜையில் இருந்த போது உங்கள் அழைப்பு கேட்டது. வந்து விட்டேன்” என்றான் அவன்.

நிர்மலா அவனை பக்தியோடும், ஆர்வத்தோடும் பார்த்தாள். அவன் ஒரு அபூர்வ மனிதனாய்த் தோன்றினான்.

“சந்திரன் எப்படி இருக்கிறான்? உடம்பு சரியாக இல்லையோ?”

“ஆமாம்.” கவலையுடன் சொன்னாள். “நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்கள். குடிப்பது அதிகமாகிவிட்டது. என் பேச்சை கேட்பதே இல்லை.”

“என் பேச்சை அவன் கேட்க மாட்டான். தினமும் ஒரு மணி நேரம் என்னுடன் பிரார்த்தனையில் உட்கார்ந்து கொண்டால் போதும். எந்த மருந்தும் இல்லாமல் அவன் நோய் குணமாகிவிடும். என் பேச்சைப் பொருட்படுத்த மாட்டான். என்னால் செய்யக் கூடியது எதுவும் இல்லை.”

“அதற்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்கள். என் பேச்சை கேட்கமாட்டார். பூஜை புனஸ்காரம் பிடிக்காது. கேலி செய்வார்.”

“சிறுவயதிலிருந்தே அவன் அப்படித்தான். அவனை இப்பொழுது மாற்றுவது கடினம். சரி, ஏதாவது வழியை யோசித்துப் பார்க்கிறேன்” என்றான். அவன் அதுபோல் வாக்களிததுமே அவள் மனம் இலேசாகிவிட்டது. சந்திரன் வீடு திரும்பும் வரையில் காத்திருக்காமல் வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

சந்திரனிடம் பரமஹம்சா வந்ததைச் சொன்னாள் அவள். “அவன் ஒரு ஃபிராட்.. நம்பாதே” என்று எடுத்தெறிந்துப் பேசினான் சந்திரன்.

***

கோடை லீவு முடிந்துவிட்டது. பள்ளிக்கூடம் திறக்கும் நாள் வந்தது. பள்ளிக்குப் புறப்பட்டாள் சாஹிதி. தோட்டத்தில் பூத்த மல்லிகை மலர்களை பறித்து வந்து மாலையாய்த் தொடுத்தாள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு டீச்சரைப் பார்க்கப் போகிறோம் என்ற உற்சாகம் தொகை விரித்தாட காரில் ஏறிக்கொண்டாள்.

ஸ்கூலுக்குள் அடியெடுத்து வைத்ததுமே அவள் கண்கள் டீச்சரைத் தேடின. எங்கேயும் தென்படவில்லை. பிரார்த்தனை முடிந்த பிறகு வகுப்புக்குள் நுழையும்போது யாரோ சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது. “கோமளா டீச்சர் ரிஸைன் பண்ணிவிட்டுப் போய்விட்டாளாம்” என்று. கையிலிருந்த ரோஜா மலர் நசுங்கி கீழே விழுந்தது.

டீச்சர் இனி வரமாட்டாள். தென்படமாட்டாள் என்ற உண்மையை உடனே ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அன்று முழுவதும் எதையோ இழந்தாற் போலவே உடகார்ந்து இருந்தாள்.

டீச்சர் உடுத்துக் கொள்ளும் புடவைகளைக் கவனித்துவிட்டு அவளுக்கு ரோஜா நிறம் மிகவும் பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அந்த நிறத்திலேயே டிரஸ் வாங்கிக்கொண்டாள். அவள் கையில் இருந்த சிறிய வாட்ச் போலவே தானும் வாங்கி கட்டிக் கொண்டாள். டீச்சரின் செருப்பைப் போலவே தானும் வாங்கிக் கொள்ள ஆசைப்பட்டு ஒரு நாள் முழுவதும் கடைத்தெருவில் அலைந்து திரிந்து வாங்கிவிட்டாள். அவையெல்லாம் இப்போது அவளைப் பார்த்துப் பழித்துக் கொண்டிருதன. ஒருநாள் லீவு வந்து விட்டால் போதும். டீச்சரைப் பார்க்காமல் எப்படி உயிர் வாழ்வது என்று நினைத்துக் கொள்வாள். இனி என்றுமே டீச்சரைப் பார்க்க முடியாது என்று நினைத்ததுமே துக்கம் பொங்கி வந்தது.

டிபன் கூட சாப்பிடாமல் போய் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டாள். அவளுக்குத் திரும்பத் திரும்ப அன்று ராஜேஷின் மகன் பமீலாவைப் பிடுங்கித் தூக்கியெறிந்த காட்சி நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அவளுக்கு எது மிகவும் விருப்பமானதோ அதையே தன்னிடமிருந்து பிரித்துவிட எல்லாவிதத்திலும் முயற்சி நடந்து வருகிறது என்ற உணர்வுதான் அவளை மிகவும் வருத்தப்படச் செய்தது.

அதற்குள் ஏதோ யோசனை வந்தாற்போல் ரோஜாச் செடிகள் இருந்த இடத்தை நோக்கிப் போனாள். ஐந்து நிமிடங்கள் கழித்து “சாஹிதி! இன்னும் டிபன் கூட சாப்பிடாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாயே?” என்று மகளைத் தேடிக்கொண்டு வந்த நிர்மலா சாஹிதியின் நடவடிக்கையைப் பார்த்து பதற்றமடைந்தாள்.

“என்ன இது? பூக்களை எல்லாம் ஏன் இப்படி நாசம் பண்ணுகிறாய்? பைத்தியம் பிடித்துவிட்டதா உனக்கு?” என்று மகளைப் பிடித்து இழுத்தாள்.

“வேண்டாம்மா. நம் வீட்டில் இனி ரோஜாச் செடிகளே வேண்டாம். தோட்டக்காரனிடம் எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து விடச் சொல்லு. இல்லாவிட்டால் நானே பிடுங்கிப் போட்டு விடுகிறேன்.”

நிர்மலா புரியாமல் விழித்தாள். “ஆகட்டும். அப்படியே செய்யச் சொல்கிறேன். நாளைக்கே சொல்லி பிடுங்கி எறிந்து விடச் சொல்கிறேன். நீ உள்ளே வா” என்று கையைப் பிடித்தாள். அவள் உடம்பு அனலாய்க் கொதித்துக் கொண்டிருந்தது.

ஒரு வாரம் வரைக்கும் அவளுக்கு ஜுரம் குறையவே இல்லை. பைத்தியம் பிடித்தது போல் உளறிக் கொண்டிருந்தாள். டாக்டர் கொடுத்த மருந்துகள் வேலை செய்தாற்போல் தெரியவில்லை. நிர்மலாவுக்கு பரமஹம்சா தந்துவிட்டுப் போன வீபூதி நினைவுக்கு வந்தது. அதை கொண்டு வந்து நெற்றியில் இட்டாள். பாலில் கலந்து குடிக்கச் செய்தாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜுரம் குறையத் தொடங்கியது. நிர்மலா மனதிலேயே பரமஹம்சாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள்.

‘மம்மி! நான் இனி ஸ்கூலுக்குப் போகப் போவதில்லை” என்றாள் சாஹிதி ஜுரம் குறைந்த இரண்டாவது நாள்.

‘சரி, உன் விருப்பம் போல் செய்” என்றாள் நிர்மலா. ‘நீ ஜுரமாய் படுத்துக் கொண்டிருந்த போது உன் கிளாஸ்மேட் ஒரு பெண் வந்தாள். உனக்கு ஸ்கூல் அட்ரெசுக்குக் கடிதம் வந்ததாய்ச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனாள். இரு, கொண்டு வருகிறேன்.”

கடிதத்தின் மீது முத்து முத்தாய் இருந்த எழுத்துக்களைப் பார்த்ததுமே சாஹிதியின் முகம் மலர்ந்து விட்டது. அது கோமளா டீச்சரின் கையெழுத்து. பரபார்ப்புடன் பிரித்துப் படித்தாள்.

சாஹிதி,

நலமாய் இருப்பாய் என்று நம்புகிறேன். வருத்தப் படுகிறாயா? சொல்லாமல் போக வேண்டி வந்து விட்டது. சாரி சாஹிதி. வயது ஏற ஏற அறிமுகமாகும் நபர்களும் அதிகரிக்கிறார்கள். அனுபவங்கள் பெருகுகின்றன. எந்த பந்தமும் இல்லாமலேயே இணை பிரியாதவர்கள் ஆகி விடுகிறார்கள் சிலர். பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதும், பிரியும் போது வருத்தப் படுவதும் மனித சுபாவம். ஆனால் வாழ்க்கையில் வேண்டியது வெறும் அன்பும், பிரியமும் மட்டுமே இல்லை. எண்ணங்கள் தான் முக்கியம். மனிதர்கள் தொலைவிற்குப் போய்விட்டதாலேயே அன்பு போய் விடாது. ஐ லைக் யூ. நீ எங்கே இருந்தாலும் உன்னை நான் மறக்கமாட்டேன்.

எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. நல்ல செய்திதான் என்றாலும் அது உனக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்றுதான் சொல்லவில்லை. ராஜினாமா கடிதத்தை அனுப்பும் போது உன்னைப் பற்றித்தான் யோசித்தேன் என்று சொன்னால் நம்புவாயா? நான் பம்பாயில் செட்டில் ஆகிவிட்டேன். அதனால்தான் இந்தக் கடிதம்.

உன்னை விரும்பும் ஒருத்தியாய், டீச்சராய் நான் சொல்லக்கூடியது ஒன்றுதான். நீ நன்றாகப் படிக்க வேண்டும். உன் முதல் இடத்தை விட்டு விடக் கூடாது. இது என் விருப்பம். அதுதான் நீ எனக்குத் தரும் பரிசு. நிலை நாட்டுவாய் என்று நம்புகிறேன். உன் முன்னேற்றத்தை கடிதம் மூலமாய் தெரியப்படுத்தினால் சந்தோஷப்படுவேன்.

ஆசிகளுடன் கோமளா

கடிதத்தை படித்து முடித்த பிறகு சாஹிதிக்கு துக்கம் வந்தது. அது ஆனந்தத்தோடு கூடிய துக்கம். டீச்சர் அவளை மறந்து போகவில்லை.

அவளை நினைவு வைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருக்கிறாள். அது போதும்.

‘மம்மி! நான் நாளை முதல் ஸ்கூலுக்குப் போகிறேன்.” பெரிதாக கத்தியபடி சொன்னாள்.

டீச்சருக்கு உடனே கடிதம் எழுத உட்கார்ந்து கொண்டாள். மனதிலேயே பக்கம் பக்கமாய் எழுதினாள். பிடிக்கவில்லை. தன் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. எதிரே இருந்த வெள்ளைக் காகிதம் பழிப்பது போல் இருந்தது.

ஊசியை எடுத்து விரலில் அழுத்தமாய் குத்திக் கொண்டாள். சொட்டுச் சொட்டாய் துளிர்த்த இரத்தத்தால் “ஐ லவ் யூ டீச்சர்” என்று எழுதி போஸ்ட் பண்ணினாள்.

சுய இரக்கத்திற்கு அது உச்சநிலை.

டீச்சர் என்ற வார்த்தை மிக உயர்ந்த அர்த்தத்தை குறிக்கிறது. டீச்சருக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்ற எண்ணம் நிறைய குழந்தைகளிடம் இருக்கும். வாஸ்தவத்தில் அது உண்மைக்குப் புறம்பான விஷயம்.

கொமளவின் வயது இருபத்தியாறு. அவளுக்கே வாழ்க்கையைப் பற்றி சரியாக தெரியாது. டீச்சராக வேலைப் பார்த்து வந்தவள், திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தப் போய்விட்டாள். டீச்சர் என்ற முறையில் தன்னுடைய மாணவிக்கு நன்றாகப் படி என்று அறிவுரை வழங்கி கடிதம்  எழுதினாள். அவளுடைய கருத்தின்படி கல்விதான் நிறைய பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காட்ட வல்லது. இருக்கலாம். ஆனால் அது ஒன்று மட்டுமே போதுமானதாய் இருந்தால் இவ்வளவு மனிதர்களும் இத்தனை பிரச்னைகளால் வருந்த வேண்டியிருக்காது. வேறு ஏதோ ஒன்று வேண்டும். அந்த ‘வேறேதோ’ என்னவென்று சாஹிதிக்கு எந்த டீச்சரும் சொல்லித் தரவில்லை. வாழ்க்கைதான் சொல்லிக் கொடுத்தது. அதுவும் கொஞ்சம் கால தாமதமாக.

(தொடரும்)

Series Navigationநம்பிக்கை ஒளி! (7)வதம்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *