காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்

This entry is part 7 of 26 in the series 9 டிசம்பர் 2012

I

ஜென் வழி(The Way of Zen)-ஒரு விளக்கம்

ஜென் வழியில் மெய்யுணர்வு (realization/enlightenment) அடையும் கருத்தாக்கங்களில், காளை மேய்த்தல் படங்கள் மிகவும் அறிமுகமானவை. காளை என்ற குறியீட்டின் மூலம் மெய்யுணர்வுக்கான அடுத்தடுத்த பத்துக் கட்டங்களை இந்தப் படங்கள் விளக்குகின்றன. காளை என்ற குறியீடு உணர்வுறும் எல்லா உயிர்களின்(sentient beings) ஆதி இயல்பு(primordial nature). அவற்றின் உண்மையான இயல்பு  (True-nature).  உண்மையான இயல்பு தான் புத்த இயல்பு அல்லது புத்த மனம்.( Buddha nature or Buddha mind). இந்த புத்த மனம் நமது பெற்றோர்கள் பிறப்பதற்கு முன்பேயான நமது முகம். இது நமது மூலம்.(Source). ஆனாலும் இதனின்று தான் கணக்கிலடங்கா நினைப்புகள் எழுகின்றன. அவை நாம் நமது உண்மை இயல்புக்குப் புறமுதுகு காட்டியதால் எழுபவை. எனவே ’ஜென் வழி’  சொல்கிறது. ”நினைப்புகளின்  மூலம் அறிய ‘ எனது மனம் என்ன?’ என்று கேள்வி கேள். உனது மனத்தை உள் நோக்கு.( Just look into your mind). ‘எனது மனம் என்ன?’ என்ற கேள்வியில்  உள்ளாழ்ந்து செல். நினைப்புகள் எழும்; மறையும். எழும் நினைப்பைத் தடுக்காதே; எழுந்த நினைப்பைப் பிடித்துக் கொண்டிராதே; நினப்புக்களான் மாசுண்ட மனம் இருமையில் இயங்கும். தான், மற்றவை, உள், புறம், இருப்பு, இருப்பின்மை, பிறப்பு, இறப்பு என்ற  அறியாமையில் உழலும். கேள்வியில் இன்னும் உள்ளாழ்ந்து செல். உனது இருப்பின் ஒவ்வொரு கூறும், அணுவும் அதைக் கேட்கட்டும். ஒரு கட்டத்தில் அறிவு  மேலும் செல்ல முடியாத சுவர் வந்து முட்டும். அப்போது நினைப்பு முற்றிலும் தடுக்கப்படும். மனம் நாட மனம் இல்லாது போகும். நினைப்புகளற்று ’தான்’( Self) என்று ஒன்றில்லை என்ற புரிதல் ஏற்படும். புலன்களும், புலன்கள் சார் வெளிப்பாடுகளும், புலன்கள் சார் உணர்வுகளும், பிரக்ஞைகளும்- எல்லா நிலைமைகளும்(all dharmas)  மாறுதலுக்கு உட்பட்டு தோன்றி மறைந்து கொண்டே இருக்க தனிப்பட்ட மாறுதலுக்கு அப்பாற்பட்ட நிலையான ‘தான்’ என்று ஒன்றில்லை. ஆக எதுவும் ‘தான்’ இல்லையாக, சூன்யம்( emptiness) தான். ஆனால் இது வெறும் சூன்யம் அல்ல. ‘தான்’ இல்லாத சூன்யம் ( empty of Self).”

இதனின் மறுதலையாகப் புரிந்து கொள்ள வேண்டியது சார்ந்த சேர்ந்துயிர்ப்பில்( dependent co-arising) என்ற உண்மை. எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. ஒன்றின் இருப்பு ஏனை எல்லாவற்றின் இருப்புக்களை உணர்த்துகின்றன. எல்லாவற்றின் இருப்புகளும் ஒன்றின் இருப்பில் உணரப்படுகின்றன. இலையைக் காணும் போது சூரியனையும் நட்சத்திரங்களையும் காணலாம். ஏனென்றால், சூரியனின்றி, வெப்பமின்றி இலை இருக்க முடியாது. இது இதுவாய் இருக்கிறது. ஏனென்றால் அது அதுவாய் இருக்கிறது. இலையில் மேகங்களைக் காணலாம். மேகங்களின்றி மழையில்லை. மழையின்றி இலையில்லை. இது இதுவாய் இருக்கிறது. ஏனென்றால் அது அதுவாய் இருக்கிறது. அதே போல இது இதுவாய் இல்லை. ஏனென்றால் அது அதுவாய் இல்லை. தம்முள் சார்ந்திருக்கும் மூலத்திலிருந்து (interdependent origin) எல்லாம் தோன்றுகின்றன; எல்லாம் மறைகின்றன. பிரபஞ்சமே தம்முள் இணைந்த வலை(interconnected net).  ஒரு நிகழ்வின்( phenomenon-) இருப்பு மற்ற எல்லா நிகழ்வுகளின் இருப்பைச் சாத்தியமாக்குகின்றன. மற்றவையின்றி தனியாய் ஒரு நிகழ்வில்லை. ஒவ்வொரு நிகழ்வும் சூன்யமாயிருக்க- அதாவது ‘தான்’ இல்லாத மற்றவறை உள்ளடக்கியதாக- எல்லா நிகழ்வுகளும் இருப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருக்க வேண்டியிருக்கின்றன. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால் ஒன்று எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது. எல்லாம் ஒன்றில் உள்ளடங்கியுள்ளன.  இந்த உண்மை தான் சார்ந்த சேர்ந்துயிர்ப்பு. இந்த சூன்யம், தம்முள் இணைப்பு( interconnectedness) என்ற இரு உண்மைகளைப் புரிந்து கொண்டால்  பிறப்பு, இறப்பு என்ற அனுமானங்களைக்(notions) கடந்து போகும் விடுதலை சாத்தியமாகும்.

    நினைப்புகளற்று ‘தான்’ இல்லையான சூன்யம் பிரக்ஞையாகும் போது  ( awareness of emptiness) அது தான் மெய்யுணர்வு என்று தவறாகக் கருதி விடக் கூடாது. இன்னும் சூன்யம் உணரும் நிலை தொக்கியுள்ளது. ஜென் வழியின் அடுத்த கட்டம் சொல்லும்: ”பிரக்ஞையாகும் சூன்யத்தை மேலும் உள்ளாழ்ந்து பார். ஒரு கட்டத்தில் பிரக்ஞையாகும் சூன்யமும் மறைந்து போகும். சூன்யம் மட்டும் நிலைக்கும். இந்த சூன்யம்  ‘தான்’ இல்லாத ’எல்லாமும் ஒன்றில், ஒன்றில் எல்லாமும்’ என்றான புத்த மனம். ஒருமை மனம் (One Mind) .இது தான் உனது மூலம்.முன் சொன்னது போல உன் பெற்றோர்கள் பிறப்பதற்கு முன்பேயான உனது முகம். இந்த புத்த மனத்தில் முதல் தடவையாக உன் காதால் நீ கேட்காத போது நீ உண்மையாகவே கேட்கிறாய்; உன் கண்களால் நீ காணாத போது, நீ உண்மையாகவே காண்கிறாய் என்பதைக் கண்டுபிடிப்பாய்.”

    இந்தக் கட்டத்தில், இரமண மகரிஷியின் ‘நான் யார்?’(Who am I?)  என்ற கேள்வி நினைவுக்கு வருகிறது. நானென்ன உடலா? மனமா? உடல், மனம் முதலிய அளவுக்குட்பட்டவன் தானென்று எண்ணுவது தவறு. அப்படி அளவுக்கு உட்படுத்திக் கொள்ளும் போது தான் துன்பங்கள் காரணமாகின்றன.. தூக்கத்தில் காண்பான் இல்லை. காணப்படும் உலகமில்லை. அது ஒரு ஆனந்த நிலை. ஆனால் விழித்தெழும்போது நானென்றொரு அகந்தை எழுகிறது. அவ்வகந்தையில் நினைப்புமயமான உலகம் விரிகிறது. தன்னைப் போதாமையாய்க் கருதி மேலும் மேலும் வெளியுலகம் நாடி ஏதோவடைய விரும்பித் துன்பத்திற்குள்ளாகிறது. மனம் என்ற ஒன்று உண்டா? மனம் என்பது என்னவென்று அமைதியுடன் கவனித்தால் மனம் இல்லையாகிறது. அவ்விடத்தே நீங்கா அடிப்படையாம்(substratum/very essence) தனக்கேதும் அயலிலில்லாத அகண்டாத்மாவே எஞ்சுகிறது. அதன் பின் தேட வேண்டியது ஒன்றுமே இல்லை. தேடுபவனே ஒழிந்து விடுவதால். உபாதிகளற்ற  இந்தப் பரிபூரணமே நமதியல்பு. நமது மூலம்.

    ஜென் வழியில் மனதின் மூலம் நாடி மனமில்லையாகும் போது தான்( empty of Self) இல்லாத சூன்ய அனுபவம் நிலை கொள்கிறது. ஆத்ம விசாரணையில் அகண்டாத்மா ( Absolute Self) அனுபவம் நிலை கொள்கிறது. இந்த இரண்டு அனுபவங்களும் ஒப்புமை உடையனவா? இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால், ’தான்’ இல்லாத சூன்யத்தில் அனுபவமாகும் பிரபஞ்சத்தின் தம்முள் இணைப்பும்- அதாவது  ‘சார்ந்த சேர்ந்துயிர்ப்பும்’ -ஆத்ம விசாரணையில் அனுபவமாகும் அகண்டாத்மாவும் ஒன்று தானா? சார்ந்த சேர்ந்துயிர்ப்பில் தம்முள் மாறிக் கொண்டே இருக்கும் நிலை (state of flux) அடிப்படையாய் இருக்கும் போது ஆத்ம தர்சனம் தனக்கேதும் அயலில்லாத மாறாத அகண்டாத்மா அடிப்படையில் அமைகிறது. இங்கு ‘அகம் பிரம் அஸ்மி( Aham Brahm Asmi (I am Brahman, the Eternal)) என்ற உபநிஷத் மகாவாக்கியத்தை நினைவு கூரலாம். புத்தம் சொல்லும் மாறிக் கொண்டே இருக்கும் நிலையில் இந்தக் கணம் தான் எல்லாம். ஆக மாறாததிலல்ல அகண்டம். மாறும் ஒவ்வொரு இந்தக் கணத்தில் தான் அகண்டம். இந்தக் கணம் தான் உன் இருப்பு. உன் இருப்பு தான் இந்தக் கணம். டோஜன்(Dogen) என்ற ஜென் ஞானியின் பார்வையில் நீ இருப்பும் இந்தக் கணமும் (Being-Time).  அது போலத் தான் ஒவ்வொன்றும் இருப்பும், இந்தக் கணமும். இந்தக் கணத்தில் அயலேதும் வேறு கணம் இல்லாததாக, இந்தக் கணம் தான் எல்லாக் கணமும்.(the whole of time). ஆக  நீயும், ஒவ்வொன்றும்- இருப்பும், இந்தக் கணமுமாய்-எல்லாக் கணமும்;எல்லாமும். சென்ற கணத்திலும், வரப் போகும் கணத்திலும், நினைப்புகளில் நீ தொலைந்து போகிறாய். இந்தக் கணத்தில் எதுவும் நேருக்கு நேராக மனம் சார் அலைக்கழிப்புகள் இல்லை. அதாவது இந்தக் கணத்தில் தான் வாழ்க்கையோடு உனது நேரடி தொடர்பு. அதாவது இந்தக் கணத்தில் இங்கு உள்ளாழ்ந்து வாழ்வதில்(mindful living) தான், உன் நிலைப்பும் விடுதலையும் (stability and freedom) அடங்கியுள்ளது. ஆனால் ஆத்ம விசாரணை தனிமனிதனின் ஆத்மா உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அகண்டாத்மா தான் என்ற ஏகாத்மா அனுபவத்தில் விடுதலை தேடுகிறது. ஆனால் பிரபஞ்சத்தின் அகண்டாத்மா ஏன் தன்னை தனி ஆத்மாக்களாக குறுக்கிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழும் போது மாயை என்ற கோட்பாட்டை(Theory of Maya) முன்வைக்க வேண்டியிருக்கிறது. இது பரம் சார்ந்தும் ,பரிணாம வளர்ச்சி( theory of evolution) போன்றதான அதி பெளதீக (metaphysical)வாதங்களுக்கும்) இட்டுச் செல்லும். இதற்கு மாறாய், சூன்யம், சார்ந்த சேர்ந்துயிர்ப்பு என்ற இரு இயல்புகளில் நிலைபெறும் புத்தமனம்  இகம் சார்ந்து அமைகிறது. அதனால் மாயை போன்ற கோட்பாடுகளுக்கு அவசியமில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அத்வைதத்தின் படி உனது உண்மையான இயல்பு ஆத்மா. அது தான் எல்லாவற்றின் நீங்கா அடிப்படையான பிரம்மன். புத்தத்தின் படி உனது உண்மையான இயல்பு  இருப்பெனும் இந்தக் கணம்(Being-Time). அப்படியென்றால் நீ இலை; மரம்; மேகம்; மழை; வானம்; பக்கத்து வீட்டுக்காரர்; பாதையில் பார்க்கும் ஒருவர்; அதாவது நீ ஒரு தம்முள்-இணைப்பு(interconnectedness) அத்வைத ஆன்மானுபவத்தில் பரம் சார்ந்தும்,விலகியும் தன்னை அறிதலாகிறது., புத்தத்தில் சூன்யானுபவத்தில் இகம் சார்ந்தும்,வாழ்ந்தும் தன்னை அறிதலாகிறது . புத்தம் அத்வைதத்தைப் புரட்டிப் போட்டது போல் இருக்கிறது. மேற்கண்ட     ஒப்பீட்டுக் கருத்துக்கள் எதனையும் நிறுவுவதற்கல்ல. அவரவர் அனுபவத்தில் நிலை கொண்டு உண்மை அறிய வேண்டியது. புத்தர் சொன்னது போல், நிலவைச் சுட்டும் விரல் நிலவல்ல.

இனி பத்து காளை மேய்த்தல் படங்கள் பற்றி சில செய்திகள். பன்னிரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த காகுவான் செய்ன்(Kakuan Shien(Kuo-an-Shih-yuan)) என்ற ஜென் ஞானி,  ஜென் ஞானத்தின் நடைமுறை வழியைச் சொல்லும் ‘காளை மேய்த்தலில்’ வரும் படங்களையும் மற்றும் அவற்றின் விளக்கங்களையும் வரைந்தார் என்று கருதப்படுகிறது. ஆனால் அவரே ஜென் ஞானத்தின் பல கட்டங்களை முதல் முதலில் விவரித்தவர் அல்லர். அவருக்கு முன்பே, ஐந்து மற்றும் எட்டு கட்டங்களில் ஜென் ஞானம் அடையும் வரைபடங்களும் விளக்கங்களும் இருந்தன. அவற்றில் கடைசிப் படம் ஒரு வட்டமாக இருந்தது. அந்த வட்டம் ’ஒருமையின்’ குறியீடாய் ஜென் ஞானத்தின் இலக்கைச் சுட்டுவதாய் இருந்தது. மேலும் முழுமை சேர்க்கும் முகமாக இன்னும் இரண்டு படங்களை ‘குவொ-அன்( Kuo-an) என்பவர் வட்டத்திற்கு அடுத்துச் சேர்த்தார். ஜென் ஞானம் பெற்றவர் பல்வகைக் காட்சிகளிலும் தோற்ற மயக்கங்களிலும் ஒதுங்கித் தனித்திருப்பவர் அல்லர். அவர் ‘தான் புத்தன்; புத்தனில்லை’ என்ற பண்புகளையெல்லாம் கடந்து சுதந்திரமாய்ச் சாதாரண மனிதர்களோடு கலந்து தம்முடைய பேரன்பாலும் பெருங்கருணையாலும் அவர்களை ஊக்குவித்து புத்தர் வழியில் நடை போடச் செய்பவர். ஏனென்றால். ஒவ்வொருவரும் தகுதியாகக் கூடிய புத்தர்(potential Buddha). இந்த உண்மைகளையும் விளக்கும் வரைபடங்களோடு மொத்தம் பத்து படங்கள் இந்த ‘காளை மேய்த்தல்” என்ற ஜென்  கருத்தாக்கத்தில் முழுவரைவு பெறுகின்றன. இந்த வரைவு தான் ஜப்பானில் பெரிதும் போற்றப்படுகிறது மட்டுமல்லாமல் ஜென் நடைமுறை வழிக்கான ஆதர்சனமாகவும் இருக்கிறது.

    இந்த விளக்கம் தை- நாத்- ஹன் (Thich Nhat Hanh) என்ற வியட்நாம் புத்த துறவி எழுதின ‘பழைய வழி, வெள்ளை மேகங்கள்’( Old path and White clouds(2011) ‘பிலிஃப் காப்ளே( Phillip Kapleau) என்பவர் எழுதிய ஜென்னின் மூன்று தூண்கள் (Three pillars of Zen) என்ற இரண்டு நூல்களின் அடிப்படையிலானது. முன்னது புத்தர் வாழ்க்கையைச் சித்திரிப்பது. பின்னது முன்னைய மற்றும் தற்போதைய ஜென் ஞானியரின் போதனைகளையும் , ஜென் வழியைப் பின்பற்றும் பல மேற்கத்தியரின் அனுபவங்களையும் விரித்துச் சொல்வது. பகுதி-2-ல் வரும் காளை மேய்த்தல் படங்களுக்கான பாடல்களும் உரையும், குறிப்புக்களும் பிலிஃப் காப்ளேயின்  நூலில் உள்ளவையே. அவை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இரமண மகரிஷியின் ஆத்ம விசாரணை விவரிப்பு பகவத் வசனாம்ருதம்( ஆங்கில மூலம்: முனகால வேங்கடராமையா; தமிழாக்கம்: விஸ்வநாத ஸ்வாமி) என்ற நூலின் அடிப்படையிலானது.

II

காளை மேய்த்தல்-ஜென் விளக்கப் படங்கள் (தமிழாக்கம்)

1.காளையைத் தேடி (Seeking the Ox)

உண்மையிலேயே காளை வழிதவறிப் போய் விடவில்லை.எனவே எதற்கு அதைத் தேட வேண்டும்? தன் உண்மையான இயல்புக்குப் புறமுதுகு காட்டியதால் அந்த மனிதன் காளையைக் காண முடியாது. அவனுடைய குற்றங்களான் காளையின் காட்சியைத் தவற விட்டு விட்டான்.  திடீரென்று வலைப்பின்னல் போலான குறுக்கும் நெடுக்குமான சாலைகளை அவன் எதிர்கொள்கிறான். உலக ஆதாயங்களுக்கான பேராசையும், இழப்பின் அச்சமும் சுட்டெரிக்கும் பிழம்புகளாய் ஊற்றெடுக்கின்றன. சரி, தவறு என்ற கருத்தாக்கங்கள் விசுக்கென்று குறுங்கத்திகளாய் வெளி உருவுகின்றன.

வனாந்திரங்களில் வெறித்தும்

காடுகளில் பயந்தும்

காண முடியாத காளையை

தேடிக் கொண்டிருக்கிறான் அவன்.

இருளில் மேலும் கீழும்

பெயர் தெரியாப் பெருவெள்ள நதிகளென்றும்

உள் மலைப்புதர்களென்றும்

பற்பல சிறு வழிகளைக் கடக்கின்றான்.

என்பு சோர்ந்து

அகம் வாடி

இன்னும் காண முடியாத ஒன்றுக்காக

தேடிக் கொண்டே இருக்கின்றான்.

மாலையில்

மரங்களில்

’சிக்கடா’க்கள்

கீச்சிடுவதைக் கேட்கின்றான்.

குறிப்பு: இங்கு ‘சிக்கடாக்கள்’ என்பவை ஒரு வகைப் பூச்சிகள்.

2.வழித்தடங்களைக் கண்டு(Finding the Tracks)

காளையின் வழித்தடங்களைச் சூத்திரங்களாலும்,போதனைகளாலும் கண்டறிவான். பொன்னாலான பல்வடிவப் பொன்பாத்திரங்கள் அடிப்படையில் பொன் என்பது போல, ஒவ்வொன்றும் ‘தானின்’ நிலைப்பாடு. ஆனால் அவனால் தீயதினின்று நல்லதையும், உண்மையினின்று பொய்மையையும் பகுத்தறிய முடியவில்லை. உண்மையிலேயே வாயிலை அவன் இன்னும் அடையவில்லை. ஆனால் காளையின் வழித்தடங்களை ஒரு அனுமான வகையில் காண்கிறான்.

அவன்

கானிலும்

நீர்நிலை ஓரங்களிலும்

எண்ணிலடங்காக் காலடிச்சுவடுகளைக் காண்கிறான்.

அங்கே

மிதிபட்ட புற்களைக்

கண்டுவிட்டானா?

விண்ணை எட்டும் இந்தக் காளையின் மூக்கை

உயர்ந்தோங்கிய மலைகளின்

மிக ஆழ்ந்த பிளவுகளும்

மறைத்து விட முடியாது.

3.காளையின் முதல் தென்படல்(First Glimpse of the Ox)

அவன் ஒவ்வொரு நாளின் ஓசைகளையும் உன்னிப்பாய்க் கவனித்தானென்றால் மெய்யுணர்வான். அந்தக் கணத்திலேயே மூலத்தையும் காண்பான். இந்த ஆறு புலன்களும் உண்மையான இந்த மூலத்திலிருந்து வேறானவையல்ல. ஒவ்வொரு செயலிலும் மூலம் நிலைபெறுகிறது. இது தண்ணீரில் உப்பு அல்லது வர்ணக் கலவையில் பசை போன்றது. உள் தர்சனம் சரியான முறையில் குவியும் போது, காண்பனவெல்லாம் உண்மையான மூலமே என்பதை ஒருவன் அறிவான்.

ஒடிந்த மரக்கிளையிலிருந்து

ஒரு நைட்டிங்கேல் பறவை மெல்லதிர்ந்து பாடும்.

அலைந்திடும் ‘வில்லோ’ மரங்கள் மேல்

ஞாயிறு ஒளி வீசும்.

அங்கே தான் காளை நிற்கும்.

வேறெங்கு போய் அது

ஒளிய முடியும்?

அந்த

அருமையான தலையை

அந்த மிடுக்கான கொம்புகளை

எநதக் கலைஞன் தான்

சித்தரித்து விட முடியும்?

குறிப்பு1:  இங்கு உரையில் ஓசைகள்’ பற்றிய குறிப்பு வருகிறது. ’இது என்ன மனம்?( What is this Mind”?) என்ற கேள்வி போல ‘இந்த ஓசைகளைக் கேட்கும் இது என்ன?( What is it that hears these sounds?) என்ற கேள்வியும் ஜென்னில் ஒரு முடிச்சு. அந்த முடிச்சு ஜென்னில் கோவான்(koan) எனப்படும். இந்தக் கேள்வியில் உள்ளாழ்ந்து செல்லும் போது உன்னுள் ‘நான்’ அல்லது யாரும் இல்லை ஓசைகளைக் கேட்க என்பது உணர்வாகும். ஒரு சூன்யம் உணர்வாகும். இன்னும் உள்ளாழ்ந்து செல்லும் போது சூன்யம் என்று உணர்வதும் இல்லாது போகும். கேள்வி மட்டுமே நீயாகி, கேள்வி வெடித்துச் சிதறும். அப்போது நீ ’ஒருமையாவாய். அதாவது நீ மூலமாவாய்.. அது தான் மெய்யுணர்வு.

குறிப்பு2: இங்கு உப்பு என்பது சூன்யத்தையும் (emptiness), தண்ணீர் என்பது தோற்றத்தையும் (Form) குறிக்கும். சமாதியின்/மோனத்தின் சுவை அறியும் வரை ஒருவர் சூன்யத்தை அறியாதவராயும், தோற்றத்தையே அங்கீகரிப்பவராயும் இருப்பார். மெய்யுணர்வுக்குப் பின், இரண்டும் வேறல்ல என்பது விளங்கும்

4.காளையைப் பிடித்து (Catching the Ox)

வெகு காலமாகக் கான் நிலங்களில் துள்ளிக் குதித்து திரிந்து கொண்டிருந்த காளையை இன்று அவன் எதிர் கொண்டு விட்டான். உண்மையிலே அதைப் பிடித்தும் விட்டான். இந்தச் சூழல்களிலேயே வெகுகாலம் திரிந்து களி ஏறிய காளைக்கு தனது பழைய பழக்கங்களிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதாயில்லை. சுவையான புற்களுக்காக அது ஏங்கிக் கொண்டேயிருக்கும். இன்னும் அது பிடிவாதமாயும்,கட்டுப்படாததயுமாயும் இருக்கும். அதை முழுக்க அடக்க வேண்டுமானால், அந்த மனிதன் சாட்டையை எடுக்க வேண்டும்.

காளைக்கு இன்னும்

சரியற்ற போக்குகள் இருப்பதால்

கயிற்றை அவன் இறுக்கமாய்ப்

பிடித்துக் கொள்ள வேண்டும்.

அதை விட்டு விடக் கூடாது.

இப்போது அது

மேட்டு நிலங்களின்

மேலேறிப் பாயும்.

மஞ்சு சூழ் பள்ளத்தாக்குகளில்

நடமாடும்.

5.காளையை அடக்குவது(Taming the Ox)

ஒரு எண்ணத்தை அடுத்து, அடுத்தடுத்து எண்ணங்கள் உதிக்கும். இந்த எண்ணங்கள் நமது உண்மை இயல்பினின்று உதிப்பதால் அவை உண்மையானவை அல்ல என்றல்ல என்ற ஞானத்தில் தெளிவு பிறக்கும். இது எதனாலென்றால் அவை உண்மையானவை அல்ல என்ற கற்பிதத்தின் மயக்கம் இன்னும் இருப்பதால். இந்த மயக்க நிலை நமது மனத்திலிருந்து உதிக்கிறதேயொழிய காட்சி உலகத்திலிருந்தல்ல.

அவன்

மூக்கணாங் கயிற்றை

இறுக்கமாகப் பிடிக்க வேண்டும்.

அங்குமிங்கும் காளையைத் திரிய விடக் கூடாது.

இல்லையென்றால்

அது திரிந்து கிடக்க வேண்டிய கலங்கின

குட்டைகளைப் போய்ச் சேரும்.

உரிய முறையில் வளைத்ததும்,

காளை சுத்தமாயும் பண்பாயும் ஆகியிருக்கும்.

கட்டவிழ்த்து விட

தன்னுடைய எஜமானனை விரும்பித் தொடரும்.

6.வீடு நோக்கி காளையைச் சவாரித்து (Riding the Ox Home)

போராட்டம் ஓய்ந்தது. ஆதாயமோ, இழப்போ அவனை இனிமேல் பாதிக்காது. அவன் காட்டுவாசியின் கரடான மெட்டை முணுமுணுப்பான். கிராமத்துச் சிறார்களின் எளிமையான பாடல்களை இசைப்பான். காளை முதுகின் இருபுறங்களிலும் கால்களைப் போட்டுக் கொண்டு, மேலே மேகங்களை மோனத்தில் இமைக்காது பார்ப்பான். இனி சபலங்களின் திசைகளை நோக்கித் திரும்பாது அவன் தலை . யாராவது அவனை நிலை குலைக்க முயற்சித்தாலும், அவன் நிலை குலையான்.

மாலை வேளை மஞ்சினூடே

அகல வைக்கோல் தொப்பியோடும்

தளர்ந்த நீள் அங்கியோடும்

காற்று போல்

சுதந்திரமாய்ச் சவாரித்து

உற்சாகமாய் வீடு திரும்புவான்.

அவன் உள்ளத்தில்

ஆழமான மோனம் நிலைக்கும் வேளையில்

எங்கு சென்றாலும் அவன்

ஒரு புதிய தென்றலை வீசுவான்.

இந்தக் காளைக்கு

ஒரு புல்லின் இதழ் கூடத் தேவையில்லை.

குறிப்பு: புல்லின் இதழ் கூடத் தேவையில்லை என்பது தன்னில் குறைவின்றி நிறைவான- காளை என்னும் குறியீடாக- புத்த மனத்தைச் சொல்கிறது

7.காளையை மறக்க, ‘தான்’ மட்டும் (Ox Forgotten, Self Alone)

தர்மத்தில் இருமையில்லை. காளை அவனது ஆதி இயல்பு. இதனை இப்போது அவன் கண்டு கொண்டான். ஒரு முயல் பிடிபட்ட பின் ஒரு பொறி மேலும் தேவையில்லை. ஒரு மீன் விழுந்த பின் ஒரு வலை உபயோகமில்லை. எப்படி தாதினின்று பொன் பிரித்தெடுக்கப்படுகிறதோ, எப்படி நிலா மேகங்களைக் கிழித்து வெளி வருகிறதோ அது போல் ஒளிர்ந்திடும் ஒளியின் ஒரு கீற்று ஒளி விடும் காலாகாலத்துக்கும்.

காளை மேலேறித்தான்

அவனால்

வீடு வந்தைடைய முடிந்தது.

ஐயகோ!

காளை இப்போது

காணாமல் போய் விட்டது.

தனித்து

மோனமாய் அமர்ந்திருப்பான்

அந்த மனிதன்.

சலனமின்றி அவன்

கனவு கண்டு கொண்டிருக்கும் போது

செஞ்சூரியன்

வானில் உச்சி சேர்வான்.

அங்கே

வேய்ந்த வைக்கோல் கூரை அடியில்

சும்மா கிடக்கும்

அவனது

சாட்டையும் கயிறும்.

8.காளையும் ‘தானும்’ மறந்து போயின (Both Ox and Self Forgotten)

மயக்க எண்ணங்கள் மடிந்தன. புனிதம் பற்றிய கருத்துக்களும் மறைந்தன. ‘புத்தன்’ ( ‘நான் ஒரு புத்தன்’ என்ற நிலை)  என்று அவன் நடமாட்டம் இல்லை. விரைவில் அவன் ‘புத்தனில்லை’( ’இப்போது ‘நான் புத்தனில்லை என்ற அகந்தை உணர்வையும் களைந்து  விட்டேன்’ என்ற நிலை) என்பதையும் கடந்து போகிறான். ஐநூறு புத்தர்கள் மற்றும் ஞானியரின் ஆயிரம் கண்கள் கூட அவனிடம் குறிப்பிட்ட பண்பினைக் கண்டறிய முடியாது. இப்போது நூற்றுக் கணக்கான பறவைகள் அவனது அறையைச் சுற்றி பூக்களைத்  தூவினாலும் அவன் தன்னைக் குறித்து வெட்கப்படுவானேயன்றி வேறொன்றும் அவனால் செய்ய முடியாது.

சாட்டை, கயிறு, காளை, மனிதன்-

எல்லாம் ஒரே படித்தாய்

சூன்யத்திற்குச் சொந்தமானவை.

எவ்வளவு

அகன்றும், முடிவுமில்லாதது

நீலவானம்?

அதை

எவ்விதமான

கருத்தாக்கமும் தொட்டு விட முடியாது.

கொளுந்து விட்டெரியும் நெருப்பில்

ஒரு பனித்துகள்

தப்பிப் பிழைக்க முடியாது.

இந்த மன நிலை

உணரும் போது

பூர்வ ஞானியரின் உள்ளொளி

கடைசியில் புரிதலாகும்

குறிப்பு1: இங்கு பறவைகள் பூக்களைத் தூவும் குறிப்பு தவாங்  வம்சத்தைச்(T’ang dynasty) சார்ந்த ஹோயூ-ழெஞ்சி (Hoyu-zenji( Niu-t’-ouFa-yung)) என்ற ஜென் ஞானியை மையமாக வைத்துக் கூறப்படும் கதையைக் குறிப்பிடுகிறது. இவர் நியு-டோ( Niu-t’ou) என்ற மலையில் வாழ்ந்தார். மலைத் தனிமை வாசத்தில் ‘ஜாஜென்’ (zazen) என்ற ஜென் தியானப் பயிற்சியை உண்மையாகவே ’நறுமணம்’ கமழ மேற்கொண்டவர் என்று பரவலாகப் போற்றப்பட்டார். அதனால் அவர் குடிலில் இருக்கும் போது ,பறவைகளும் நறுமணத்தால் பூக்களை வழங்கி அவர் பெற்றியைப் போற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவர் முழுமையாய் மெய்யுணர்வு அடைந்த பின், பறவைகள் பூக்களின் அர்ச்சனையை நிறுத்திக் கொண்டதாகவும், ஏனென்றால் அவர் மெய்யுணர்வுக்குப் பின் எந்த வித ஒளிவட்டத்தையும், பண்பு, அர்ப்பணிப்பையும் கூட வெளியிடவில்லை என்று கதை வழங்குகிறது

குறிப்பு2: இங்கு நீலவானம் சுத்த மனத்தைக்(Pure-mind) குறிக்கிறது.

குறிப்பு3: ”கொளுந்து விட்டெரியும் நெருப்பில்—’ என்று வரும் தொடர் முழுமையான மெய்ஞானத்தில் எல்லாவிதமான மயக்க எண்ணங்கள்- மெய்ஞானம் அல்லது மாயை உட்பட- மறைந்து போகும் என்பதை உணர்த்துகிறது.

9.மூலத்திற்குத் திரும்புதல்(Returning to the Source)

தன்னுள் உறையும் பரிசுத்தத்தை மாசு படுத்த, ஆரம்பத்திலிருந்தே ஒரு தூசி அளவு கூட ஏதுமில்லை. அவன் அசைக்கமுடியாத மோனத்தில் முயற்சியின்றி நிலை கொண்டிருக்கும் போது, வாழ்வின் ஏற்றமும், இறக்கமும் கண்டு கொண்டிருப்பான். இந்த ஏற்றமும், இறக்கமும் பேய்களல்ல; மாயையல்ல. அவை மூலத்தின் நிலைப்பாடுகளே. பிறகு ஏன் ஏதேதோ தேடும் பாடு தேவை? நீர் நிலைகள் நீலமானவை. மலைகள் பசுமையானவை. தன்னோடு மட்டும் தனிமையில், அவன் காட்சிகள் முடிவின்றி மாறிக் கொண்டே இருப்பதை கவனிப்பான்.

அவன்

ஆரம்பத்திற்குத் திரும்பி விட்டான்.

மூலத்திற்கு வந்து சேர்ந்து விட்டான்.

ஆனால்

அவன் எடுத்து வைத்த

காலடிகள் வீணாகிப் போயின!

இப்போது ஏதோ

அவன்

குருடும், செவிடும் போல இருக்கிறான்.

குடிலில் அமர்ந்து கொண்டு

வெளியுலக நாட்டம் கொள்ளான்.

ஓடைகள்

அவை வழியில் தாமாய் நடக்கும்.

சிவப்புப் பூக்கள்

இயல்பாகவே

சிவப்பாய்ப் பூக்கும்.

குறிப்பு1: ”பிறகு பின் ஏதேதோ படும் பாடு தேவை’ என்ற கேள்வியை டோஜன்(Dogen) இப்படி வினவியதாக சூத்திரங்கள் சொல்கின்றன: “போதி( செம்மை)(Bodhi(perfection)) என்பது அடிப்படையான இயல்பு என்றால், ஏன் எல்லா புத்தர்களும் மெய்ஞானத்திற்கும், செம்மைக்கும் முயன்றனர்”. இந்த முரண்பாடு பல ஆண்டுகள் பெருமுயற்சியின் பின் அடைந்த ஆழமான மெய்ஞானத்தின் பின் தான் அவருக்கு விளங்கியது.

குறிப்பு2: அவன் குருடும் செவிடும் போல இருக்கிறான் என்ற தொடர் விளக்குவது இது தான். “முழுமையாய் மெய்ஞானம் பெற்றவன், புலன்கள் சார் காட்சிகளில் அகப்படாது இருப்பதனால், எந்த விதமான ‘தான்’ உணர்வின்றி இயல்பாகக் காண்பதுவும், கேட்பதுவமாக லயிப்பான். அதாவது காண்பது காண்பதில்லையாகவும், கேட்பது கேட்பதில்லையாகவும் லயிப்பான்.

குறிப்பு3: வெளியுலக நாட்டம் கொள்ளான். மெய்ஞானத்தில் ஒருவன்  பிரபஞ்சத்தையும், அதிலுள்ள எல்லாவற்றையும் தழுவிக் கொள்கிற பான்மையில், எதை நாடிப் பின்னால் அலைய வேண்டும்?

10.உதவும் கரங்களுடன் சந்தைக்குள் நுழைதல்(Entering the Market Place with Helping Hands)

 

அவனது குடிலின் வாசல் மூடியிருக்கிறது. மிக அறிவானவரும் கூட அவனைக் கண்டு பிடிக்க முடியாது. அவனது மனோமயம் கடைசியில் மறைந்து விட்டது. முன்னிருந்த ஞானியரின் வழிகளைத் தொடரும் எந்த முயற்சியும் செய்யாது அவன் அவனது சொந்த வழியில் செல்வான். குடுவையைத் தூக்கிக் கொண்டு சந்தையில் உலவுவான். அவனது கைத்தடியில் சாய்ந்து கொண்டு வீடு திரும்புவான். புத்தரின் வழியில் விடுதிக் காப்பாளர்களையும், மீன்கடைக்காரர்களையும் வழி நடத்துவான்.

திறந்த மார்போடு

வெறுங் காலடியோடு

அவன்

சந்தைக்கு வருவான்.

சேறு படிந்தும்

தூசி சேர்ந்தும் கூட

எப்படி அவன் முறுவலிக்கிறான்!

யோக சித்திகளின் தேவையின்றி

அவன்

பட்டுப்போன மரங்களையும்

’பட்’டென்று

துளிர்க்கச் செய்வான்.

குறிப்பு1: இங்கு சந்தை மாசுண்ட உலகைக் குறிக்கிறது.

குறிப்பு2; மிக அறிவானவரும் அவனைக் கண்டு பிடிக்க முடியாது என்பது அவனது தூய்மையைக் குறிக்கும். அவனது செம்மையின் அடையாளங்கள் கூடக் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் அவன் தூயனாகவும், செவ்வியனாகவும் இருப்பான்.

குறிப்பு3: மனோமயம் எல்லாவிதமான கருத்துக்கள், கோட்பாடுகள், அனுமானங்கள், விருப்பு வெறுப்புகள் போன்றவற்றைக் குறிக்கும்.

குறிப்பு4; பழங்காலச் சீனாவில் குடுவைகள் மதுக் குடுவைகளாக சர்வசாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டன. இங்கு சொல்லப்படும் கருத்து என்னவென்றால் மதுவின் மேல் நாட்டம் கொண்டோரை அவர்களின் மயக்கங்களிலிருந்து விடுவிக்க அவர்களோடு சேர்ந்து மது அருந்தவும் மெய்ஞானத்தில் நிலைநின்றோர் தயங்கார் என்பது தான். இங்கு மெய்ஞானம் எய்திய ஒருவரின் நடத்தையை நோக்கும் விதம் ஹீனயான, மகாயான புத்தமரபுகளில் வித்தியாசப்படுகிறது. ஹீனயானாவில் ஆன்மீகத்தில் உன்னதமுற்ற பிரம்மச்சர்ய துறவி சாதாரண மக்களிடமிருந்து தனித்து கருதப்படுகிறார். சமுதாயம் கருதுகின்ற அவரது நடத்தையில் ஒழுகுவதற்கு, அவர் ஞானியாகவும், பண்புகளின் உறைவிடமாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, அவர் மது அருந்துபவர் என்று தெரிய நேர்ந்தால், அது இன்னும் தொக்கி நிற்கும் மாசு என்றும், அவரது ஆன்மீகம் இன்னும் நேர்த்தியடையவில்லை என்றும் பொருள்படும். ஆனால் மகாயான புத்த மரபில், ஆழ்ந்த ஞானம் பெற்றோர் மெய்ஞான நறுமணத்தையோ அல்லது புனிதத்துவத்தின் ஒளிவட்டத்தையோ வெளிக்காட்டார். அப்படி வெளிக்காட்டினார் என்றால் அவர்களின் ஆன்மீக நிலை குறையுள்ளதாகக் கருதப்படும். அவர்கள் உலகின் தீயவைகளிலிருந்தும் தங்களைத் தனிப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் குற்றங்களான் பாதிக்கப்படாது, மற்றவர்களை அவர்களின் குற்றங்களிலிருந்து விடுவிப்பதில் தம்மால் இயன்றதைச் செய்வார்கள். இதில் அவர்கள் தாமரை போன்றவர்கள். பெளத்தத்தின் தூய்மையையும், செம்மையையும் குறிக்கும் தாமரை சேற்றில் முளைத்தாலும், சேற்றினால் கறை படுவதில்லை.

குறிப்பு5: ‘யோக சித்திகளை– –என்று வரும் தொடரை இன்னொரு விதத்தில் புரிந்து கொள்ளலாம். முழுமையாய் மெய்ஞானம் பெற்றவர் அவருடைய ஆளுமை முழுதுமே உள்ளொளியில் கவிவதால், இருளிலும், அவநம்பிக்கையிலும் இருப்போருக்கு வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் தருகிறார்.

Series Navigationஅரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)வெளி
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *