அக்னிப்பிரவேசம்-16

This entry is part 13 of 26 in the series 30 டிசம்பர் 2012

yandamuri veerendranath

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

பாவனாவுக்கு இன்னும் புது மணப் பெண்ணுக்குரிய வெட்கம் போகவில்லை.

பாஸ்கர் ராமமூர்த்தி அவளை அன்பாகத்தான் நடத்தி வந்தான். அன்று ஏனோ கணவன் பரபரப்புடன் இருந்ததை கவனித்தாள். காலையிலேயே அவன் புறப்பட்டுப் போய்விட்டான். அவன் போனது நிர்மலாவின் வீட்டிற்கு.

மாமனாரின் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த பிறகு அவன் இவ்வளவு நாளாய் காத்திருந்தது நல்ல நாளுக்காக. தன் மனைவியின் மூலமாய் வந்துக் குவியப் போகும் லட்சக்கணக்கான சொத்துக்காக முகூர்த்த நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

பாவானாவின் உண்மையான தந்தை சந்திரன் இறந்துவிட்டான் என்றும், வேறு யாரோ கார்டியன் அந்த விவகாரங்களை எல்லாம் பார்த்து வருகிறான் என்றும் தெரிய வந்தது. அது கொஞ்சம் அதிருப்தியைத் தந்தாலும், தாய் உயிருடன் இருக்கிறாள் இல்லையா என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். உண்மையை எடுத்துச் சொல்லப் போகும் அந்த முகூர்த்த நேரத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கும் போதே அவன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பரபரத்தது. தாயும் மகளும் சந்திக்கப் போகும் காட்சியைக் கற்பனையில் கண்டு களித்தபடியே அந்தப் பங்களாவுக்குள் அடியெடுத்து வைத்தான்.

முன் ஹாலில் பரமஹம்சா உட்கார்ந்திருந்தான்.

“என் பெயர் பாஸ்கர் ராமமூர்த்தி. உங்களிடம் கொஞ்சம் பேசணும்” என்றான் அவன். அந்த விசாலமான ஹாலில் பரவியிருந்த நிசப்தம் அவனை பயமுறுத்தியது. அவ்வளவு பெரிய ஹாலில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள்.

பிரமஹம்சா நிமிர்ந்து அவனைப் பார்த்தான். “சொல்லு தம்பி! என்ன விஷயமாய் பேசணும்?”

பாஸ்கர் ராமமூர்த்திக்கு அவனைப் பார்த்ததும் வியர்த்துக் கொட்டியது. நிர்மலாவைச் சந்தித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. பல லட்சங்களுக்கு கார்டியனாக இருக்கும் ஒருவன் இப்படி இருப்பான் என்று அவன் எதிர்பார்த்திருக்க வில்லை. நெற்றியில் குங்குமம், கழுத்தில் ருத்ராட்ச மாலையுமாய் பார்த்த மாத்திரத்தில் முனிவரைப் போல் தோற்றமளித்தான். ஆனால் உடைகள் மட்டும் எல்லோரையும் போல் இருந்தன.

“சீக்கிரமாய் சொல்லுப்பா. எனக்கு பூஜைக்கு நேரமாகிறது” என்றான் பரமஹம்சா.

”இறந்து விட்ட சந்திரனின் சொத்துக்கு நீங்கள்தான் கார்டியனாய் இருக்கீங்க என்று தெரிந்தது. அந்த விஷயமாய் பேச விரும்புகிறேன்” என்றான் துணிச்சலைக் கூட்டிக்கொண்டு.

பிரமஹம்சா பதில் பேசவில்லை. பொருள் போதிய பார்த்தான். அவ்வளவுதான். எந்த உணர்வுகளும் இல்லாத அந்த முகத்தைப் பார்த்த போது கொஞ்சம் அதைரியமாக இருந்தது.

“சொத்தைப் பற்றிப் பேசணும் என்று வந்திருக்கிறேன்” என்றான் திரும்பவும்.

“சொல்லு, கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். அந்த விவரங்கள் உனக்கு எதற்காக தேவை என்று தெரிந்து கொள்ளலாமா?”

“சொத்து விவரம் மட்டுமே இல்லை என்று வையுங்கள். அவர்களுடைய மகள் சாஹிதியைப் பற்றிய ரகசியம் எனக்குத் தெரியும்.”

பரமஹம்சா அதிர்ந்துவிடவில்லை. கவனமாய்ப் பார்த்திருந்தால் அவன் கண்களில் தென்பட்ட மாறுபாட்டை பாஸ்கர் ராமமூர்த்தி கண்டு பிடித்திருக்கலாம். ஆனால் அந்தக் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிந்தபடி உட்கார்ந்திருந்தான் அவன்.

“அது என்ன ரகசியம்?” அந்தக் குரலில் எந்த விதமான தடுமாற்றமோ சந்தேகமோ இருக்கவில்லை.

“அவள் சந்திரனுக்கும், நிர்மலாவுக்கும் பிறந்த குழந்தை இல்லை. அவர்களின் குழந்தை வேறொரு இடத்தில் வளர்கிறாள். அதுக்கு என்னிடம் சாட்சியம் இருக்கிறது.”

பரமஹம்சா அவனைக் கூர்ந்து பார்த்தான். நன்றாக படித்தவனாய் தான் தோன்றினான். பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து வந்தவனாய் தோன்றவில்லை.

“அப்படியா? எங்கே அந்த சாட்சியம்? காட்டு.” அவன் நேரடியாய் கேட்டு விடவும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டான் பாஸ்கர் ராமமூர்த்தி.

“எங்க அம்மா இறக்கும் முன் எனக்கு இந்த விஷயத்தைச் சொன்னாங்க. முதலில் அவள் ஏதோ த்ரில்லுக்காக இந்த மாதிரி குழந்தைகளை மாற்றி இருக்கிறாள்.  குழந்தையின் தொடையில் மச்சத்தைப் பற்றி கூட சொன்னாங்க.” பாஸ்கர் ராமமூர்த்தி பொறுமையாய் இருபது வருடங்களுக்கு முன்னால் நடததைச் சொன்னான். பரமஹம்சா முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“முடிந்துவிட்டதா?” இறுதியில் கேட்டான்.

“நான் சொல்வது சத்தியம். அவர்கள் இரண்டு பேரின் பிறப்புச் சான்றிதழ்களின் காப்பியைப் பாருங்கள். ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பிறந்தார்கள். எங்க அம்மா பண்ணிய குறும்புச் செயலால் இரண்டு குழந்தைகளின் தலையெழுத்தும் மாறிப் போய் விட்டது. சாஹிதி பணக்கார வீட்டுக்கு வந்துச் சேர்ந்தாள்.”

“இன்னொரு பெண்  ஏழையின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாளா?”

“ஆமாம். அவர்கள் ரொம்ப ஏழை. தந்தை ஸ்கூல் வாத்தியார். தாய் கேன்சர் நோயில் இறந்துவிட்டாள்.”

“அப்படியா? கதை ரொம்ப நன்றாய் இருக்கு. இதற்காக ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கிறாய் என்று சொல்லு.”

“இது கதை இல்லைங்க. வேண்டுமானால் இந்தப் போட்டோவைப் பாருங்கள். சந்திரன், நிர்மலாவின் ஜாடை நன்றாக தெரிகிறது” என்று பாவனாவின் போட்டோவைக் காட்டினான். அந்தப் பெண் அழகாய் இருந்தாள். ஆனால் நிர்மலா, சந்திரன் இருவரின் ஜாடை அச்சுபோல் இருப்பதாகத் தெரியவில்லை.

“இந்தப் பெண் சந்திரனின் மகள் என்கிறாயா? இதுதானா உன்னிடமுள்ள சாட்சியம்?” சிரித்தான் பரமஹம்சா. “இதோ பார் தம்பி! உனக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் நேரடியாக கேள். இப்படிப்பட்ட கட்டுக்கதை எல்லாம் சொல்லத் தேவையில்லை.”

“இல்லைங்க. இதெல்லாம் உண்மை. எனக்கு வேண்டியது உதவி இல்லை. சொத்து! என் மனைவியின் சொத்து.”

“அப்படி என்றால்?”

“பாவனா என் மனைவி.”

“ஓஹோ! இதுதானா உன் திட்டம்? இப்போ புரிந்துவிட்டது. பாவம், ரொம்பத்தான் கஷ்டப்பட்டு விட்டாய். நான் போலீசாரைக் கூபிடுவதற்கு முன்னால் போய்விடு. உன்னைப் பார்த்தால் எனக்கு இரக்கமாய் இருக்கு.”

“என்ன சார் இது? இப்படி எடுத்தெறிந்துப் பேசறீங்க? நான் சொன்னதெல்லாம் உண்மை சார்.”

“நீ சொன்னது எல்லாம் உண்மையாகவே இருந்தாலும் உன்னால் நிரூபிக்க முடியாது. இந்த மச்சங்கள், பிறப்புச் சான்றிதழ்கள் கோர்ட்டில் நிற்காது. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எங்க சாஹிதி பிறந்த தேதி நவம்பர் பதிமூன்று இல்லை. மே பதினைந்து. ஸ்கூல் ரிக்கர்டுகளைப் புரட்டிப் பார்த்தால் உனக்கு அந்த விஷயம் அப்போதே புரிந்திருக்கும். பாவம், டூப்ளிகேட் சர்டிபிகேட்க்காக ரொம்பவும் சிரமப்பட்டிருகிறாய்.”

பாஸ்கர் ராமமூர்த்தியின் முகம் கறுத்தது. சாஹிதியின் பிறந்த தேதி பள்ளிக்கூடத்தில் வேறொன்றாய் இருந்தால், தான் அந்த விஷயத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். அவன் எதிர்பாராத திருப்பம் இது. அவனுக்கு வியர்த்துக் கொட்டத் தொடங்கியது. இதையெல்லாம் அவன் எதிர்பார்க்கவில்லை. பாவனா தன் மகள் என்று தெரிந்ததுமே நிர்மலா ஓடி வந்து சின்ன வயதில் தவறிவிட்ட தன் மகளை கட்டிக்கொள்வாள் என்றும், அந்தச் சந்திப்பு மிக அருமையாய் இருக்கும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தான்.

பாவனாவுடன் தனக்கும் இந்த வீட்டில் ராஜோபசாரம் நடக்கும் என்றும் எண்ணியிருந்தான். இந்த சாட்சியங்களை, லிடிகேஷன்களை எதிர்பார்க்கவில்லை.

பரமஹம்சாவுக்கு அவனைப் பற்றிக் கொஞ்சமாய் தெரிய வந்தது.

“என்ன தம்பி? சொத்து வரும் என்று  அந்தப் பெண்ணைக் கல்யாணம் கட்டிக் கொண்டாயா?”

பாஸ்கர் ராமமூர்த்தி ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான். “நான் சொன்னதெல்லாம் உண்மைதான் சார். அவர்கள் பிறந்ததேதி சர்டிபிகேட் எனக்கு ஆஸ்பத்திரியிலிருந்து தான் கிடைத்தது. அந்த ரிக்கார்டுகள் எல்லாம் இன்னும் அங்கேதான் இருக்கு. கோர்ட்டுக்குப் போனால் எல்லாம் வெளியே வரும்.”

“கோர்ட்டில் எல்லோருக்கும் முன்னால் உன் மனைவியின் தொடையில் இருக்கும் மச்சத்தைக் காட்டச் சொல்லப் போகிறாயா?” பரமஹம்சா மெல்லச் சிரித்தான். “நீ எவ்வளவு கஷ்டப்பட்டாலும் லாபம் இல்லை. சந்திரன் தன் சொத்தை எல்லாம் மனைவியின் பெயரில்தான் எழுதி வைத்திருக்கிறான். அவள் அதை மகளுக்குத்தான் கொடுக்கணும் என்ற அவசியம் இல்லை. சொத்து முழுவதும் உன் கைக்கு வரும் என்று எப்படி நினைத்தாய்?”

“ஜோதிடம்! அவதார் பாபா எனக்கு ஜோசியம் சொல்லி இருக்கிறார். மனைவியின் மூலமாய் லட்சக் கணக்கான சொத்து கைக்கு வரும் என்று. அவர் வார்த்தை பொய்க்காது. எனக்குத் தெரியும்.”

“அப்படியா? நான் யாருன்னு தெரியுமா? ஜோதிடர்களுக்கே கடவுள்! என்னைப் பற்றி எப்போதும் கேள்விப்பட்டு இருக்க மாட்டாய். நான் சொல்கிறேன் சரியான ஜோசியம். ஒருவாரத்திற்குள் உனக்கு மூன்று கண்டங்கள் இருக்கு. அந்த மூன்றிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தால் பிழைத்துக் கொள்வாய். அப்பொழுது கூட உனக்கு மன நிம்மதி இருக்காது. ஒவ்வொரு நாளும் நரகத்தை அனுபவிப்பாய். போ.. என் ஜோசியம் தவறு என்று நிரூபிக்க முடிந்தால் திரும்பி வா. அப்பொழுது பேசிக்கொள்வோம்” என்று உள்ளே போய் விட்டான்.

பாஸ்கர் ராமமூர்த்தி இயலாமையுடன் வெளியே வந்தான். தன் திட்டம் இப்படி தவுடுபொடி ஆகிவிடும் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை. இந்த கார்டியனை சந்திக்காமல் நிர்மலாவையே சந்தித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆம், இந்த யோசனை அவனுக்குத் தட்டாமல் போனது துரதிர்ஷ்டம். நாளைக்கே நிர்மலாவைச் சந்திக்க வேண்டும். பெற்ற தாயின் வயிறு! பாவனாவைப் பார்த்தால் உருகிப் போகாமல் இருக்காது.

எவ்வளவு யோசனையில் இருந்த போதிலும் அவன் ஸ்கூட்டரை மெதுவாகத்தான் ஒட்டிக் கொண்டிருந்தான். சாதாரணமாகவே அவன் மெதுவாகத்தான் ஒட்டுவான்.  இன்று அந்த ருத்ராட்ச மாலை அணிந்த நபர் சொன்னதைக் கேட்டதும் பயந்தவாறு மெதுவாய் ஒட்டிக் கொண்டிருந்தான். எதிரே ட்ராபிக் சிக்னல் தென்பட்டது. அவன் அருகில் போகும் போது சிவப்பு விளக்கு எரிந்தது. ஸ்கூட்டரை நிறுத்தாமல் முன்னோக்கி ஓட்டினான்.

இடது பக்கத்திலிருந்து ஒரு கார் வேகமாய் வந்து கொண்டிருந்தது. பாஸ்கர் கலவரமடைந்தான். பிரேக் போடக் கூட நேரம் இருக்கவில்லை.

கார் கிறீச்சென்று நின்றது. அவன் துள்ளிக் கீழே விழுந்தான். தன் கதை முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தான். ஆனால் அதிர்ஷ்டவசமாக தலையில் அடிபடவில்லை. கால் சுளுக்கிகொண்டு விட்டது. கையில் கீறல் ஏற்பட்டது.

மக்கள் சுற்றிலும் கூடி விட்டார்கள். “என்ன அவசரம்? சிவப்பு விளக்கு எரிவதைக் கூட போருட் படுத்தவில்லை. டிரைவர் சமயத்தில் பிரேக் போட்டதால் தப்பிக்க முடிந்தது. இல்லாவிட்டால் இந்நேரம் நேராய் சுவர்க்கதிற்குப் போய்ச் சேர்ந்திருப்பீங்க.”

அவனுக்கு அந்த வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை. பரமஹம்சா சொன்னதுதான் காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

‘நான் ஜோதிடர்களுக்கே கடவுள்!’ என்ற வார்த்தைகள் செவிகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் போது அவனுக்கு நினைவு தப்பிவிட்டது.

*****

பாஸ்கர் ராமமூர்த்திக்கு நினைவு திரும்பிய பொழுது மேலும் அரைமணி ஆகிவிட்டிருந்தது.

கிழிந்த ஆடையுடன், முழங்கையில் காயத்துடன் வந்து கொண்டிருந்த கணவனைப் பார்த்ததுமே பாவனா கலவரமடைந்தவளாய் “என்ன நடந்ததுங்க?” என்று கேட்டாள்.

அப்பொழுது அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வாரம்தான் ஆகியிருக்கும்.

அவனுக்கு மட்டும் அவள் தன்னைப் பிடித்த சனியாய் தோன்றினாள். லட்சங்களை எதிர்பார்த்து எதிர்காலத்தில் பணக்காரன் ஆகிவிடுவோம் என்று கனவுகண்டு, சல்லிக்காசு வரதட்சணை வாங்கிக்கொள்ளாமல் இந்த தரித்திரத்தைக் கட்டிக்கொண்டான். இப்போ நடந்தது என்ன? இரண்டுங்கெட்டான் ஆகிவிட்டான்.

வேறு யாரையாவது பண்ணிக்கொண்டு இருந்தால் வரதட்சணையாவது கிடைத்திருக்கும். அவன் ஏமாந்து போய்விட்டான்.

எல்லோரும் தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ! அவன் மனைவியே சிரிக்கிறாள். மேலும் “என்ன நடந்தது?” என்று வேறு கேட்கிறாள்.

ரா…ட்..ச..சி!

இவ்வாறு நினைத்துக் கொண்டிருந்த பாஸ்கர் ராமமூர்த்தி அருகில் வந்து நின்ற பாவனாவை கையை நீட்டி பலமாக அடித்தான். கன்னத்தில் வந்து விழுந்த அடிக்கு பாவனா சுருண்டு கீழே விழுந்தாள்.

கணவன் தன்னை ஏன் அவ்வாறு அடித்தான் என்று அவளுக்குப் புரியவில்லை. அவள் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவளாகவே இருக்கலாம். பணம் காசு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவள் வீட்டில் ஒருவருமே அவளை ஒருவார்த்தை எடுத்தெறிந்து பேசியது கிடையாது. அப்படிப்பட்ட அன்பு நிறைந்த குடும்பத்திலிருந்து வந்த பெண், காரணமில்லாமல் கணவன் அடித்ததும் சிலையாய் நின்றுவிட்டாள்.

“கொஞ்சம் உப்பு கொண்டு வந்து திருஷ்டி சுற்றி அடுப்பில் போடு” என்றான் பாஸ்கர் ராமமூர்த்தி எரிந்து விழுந்தபடி. அவள் அப்படியே செய்தாள்.

அவன் போய் படுத்துக்கொண்டான். நள்ளிரவு தாண்டியது.

அவள் அப்படியே முழங்காலில் தலையைப் புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு ஏனோ இது அபசுருதியாய் தோன்றியது.

வரதட்சணை இல்லாமல் பாஸ்கர் ராமமூர்த்தி தன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதாய் முன்வந்த போது பூரித்துப் போய்விட்டாள். ஆனால் முதல் நாளே… முதல் இரவு அன்றே…

“எல்லோரும் உங்களை எப்படி கூப்பிடுவார்கள்?” கேட்டாள் பாவனா. அறையில் ஊதுபத்தியின் நறுமணம் பரவியிருந்தது.

“வீட்டில் எல்லோரும் மூர்த்தி என்று கூப்பிடுவார்கள். ஆபீசில் பாஸ்கர் என்று அழைப்பார்கள்.”

“அப்படி என்றால் நான் ராமு என்று கூப்பிடுகிறேன். அந்த அழைப்பு என் ஒருத்திக்கி மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும். சரிதானே?”

அவன் முகம் கறுத்து விட்டது. “வேண்டாம். எனக்குப் பிடிக்காது. என் தங்கை ஒருத்திதான் அப்படி கூப்பிடுவாள். அவளுக்கு மட்டும்தான் அந்த உரிமை உண்டு. அப்படி வாக்குக் கொடுத்திருக்கிறேன்.”

அவள் புரியாதவளாய் “உங்களுக்குத் தங்கை இருப்பதாய் எனக்குத் தெரியாதே?” என்றாள்.

“தங்கை என்றால் சொந்த தங்கை இல்லை. சிறு வயதிலிருந்தே எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கிறவள். எங்களுக்குள் நல்ல பழக்கம் உண்டு.”

“கல்யாணத்துக்கு வந்ததாய்த் தெரியவில்லையே?”

“வசதிகள் போறாமல் கஷ்டபடுவாள் என்று அழைத்துக் கொண்டு வரவில்லை” என்றான் அவன். “எங்க அம்மா நர்ஸ் இல்லையா. எப்போதும் ட்யூட்டிக்குப் போய்விடுவாள். நான் பெரும்பாலும் அவர்கள் வீட்டில்தான் இருப்பேன். அவங்கம்மா எனக்கு எல்லாமே பண்ணுவாள். இப்போ அந்தம்மா இல்லை. அவளுடைய நன்றிக்கடனை என்னால் தீர்த்துக்கொள்ளவே முடியாது.” அவன் கண்கள் கலங்கிவிட்டன. என்ன காரணம் என்று அவளுக்குத் தெரியவில்லை. தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு அப்படியே இருந்துவிட்டான். அவளுக்குப் பயமாக இருந்தது.

“என்னங்க!” என்றாள்.

“ஊம்.”

“என்னவாச்சு?”

“ஒன்றும் இல்லை” என்று அவளை நிமர்ந்து பார்த்தான் “பாவனா! உன்னை ஒன்று கேட்கட்டுமா?” என்றான்.

பாவானாவின் இதயத்தில் பாறாங்கல்லை அழுத்தினாற்போல் இருந்தது. பழைய நினைவுகளை, காதலைப் பற்றியும் கேட்டால் என்ன சொல்வது என்று நினைத்துக் கொண்டாள். ரயிலில் தன்னைப் பார்த்துவிட்டு, பத்திரிகையில் காதல் கடிதம் எழுதிய சுதர்சனைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்லுவது? சொல்லவில்லை என்றால்? சத்தியம் பண்ணு என்று கேட்டு விட்டால்?

“கேளுங்கள்” என்றாள் எப்படியோ மனதைத் திடப்படுத்திக்கொண்டு.

“எதிர்பாராமல் உனக்கு லட்சக் கணக்கான சொத்து வந்து சேர்க்கிறது என்று வைத்துக்கொள். என்ன பண்ணுவாய்?”

அவள் நிம்மதியாய் மூச்சு விட்டாள். “எனக்கு சொத்து எங்கிருந்து வரும்? லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கூட இல்லையே?” என்றாள் சிரித்துக்கொண்டே.

“வந்தது என்று வைத்துக்கொள். அதில் பாதியைத் தங்கைக்கு எழுதித் தருவாயா?”

“பாதி என்ன? முழுவதையுமே தந்து விடுகிறேன். போதுமா?”

“சொன்ன வார்த்தையைக் காப்பாற்றணும், தெரியுமா?”

“இப்போதே எழுதித் தரட்டுமா?” முறுவலுடன் கேட்டாள்.

“நம் வீட்டுக்குப் போன பிறகு எழுதி வாங்கிக் கொள்கிறேன்.” அது உண்மைதான் என்பது போல் சிரிக்காமல் சீரியஸாய் சொன்னான்.

அவள் பதில் சொல்லவில்லை.

“நீ ரொம்ப நல்லவள். அதான்தான் கல்யாணம் என்று பண்ணிக்கொண்டால் உன்னைத்தான் பண்ணிக்கொள்ளனும் என்று நினைத்தேன். உன்னை என் தங்கைக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று பயந்தேன். ஆனால் போட்டோவைக் காட்டியதுமே ஒ.கே. என்று சொல்லிவிட்டாள்.”

அவள் தலை குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். அவன் அவளைப் பற்றிக் கேட்கவில்லை. இந்த அரைமணி நேரத்தில் பத்து தடவையாவது ‘தங்கை’ என்று குறிப்பிட்டிருப்பான். அந்த அளவுக்கு அவன்மீது தாக்கம் ஏற்படுத்திய அந்தப் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

“அவள் எதுவரையில் படித்திருக்கிறாள்?”

“பத்தாம் வகுப்பு படித்துவிட்டு விட்டுவிட்டாள்.”

அவள் அவனை வியப்புடன் பார்த்தாள். தான் அதிகமாய் படிக்கவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை அவளிடம் இருந்து வந்தது. இப்பொழுது கொஞ்சம் சமாதானமாயிற்று.

அவன் அவளை அருகில் இழுத்துக் கொண்டான். அவள் வெட்கத்தால் முகம் சிவக்க அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவள் மெல்ல மெல்ல வெட்கத்தை விட்டுவிட்டு அவனுடன் ஒத்துழைத்தாள். அவனுடைய ஆவேசத்தில் கோரிக்கை இருந்ததே தவிர சாமர்த்தியம் இருக்கவில்லை. இரண்டு நிமிடங்கள் முயற்சித்து, பக்கத்தில் சரிந்துவிட்டான். “நான்… நான்” என்று முணுமுணுத்தான். அவளுக்குப் புரியவில்லை. புரியும் வயதோ, அனுபவமோ, உலக ஞானமோ கூட இல்லை.

(தொடரும்)

Series Navigationபதில்சங்க இலக்கியங்களில் அலர்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *