அக்னிப்பிரவேசம்-18

This entry is part 25 of 32 in the series 13 ஜனவரி 2013

yandamuri veerendranath

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

வாழ்க்கையில் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வயதில் உற்சாகத்துடன் ஒரு காரியத்தைச் செய்ய முற்படுவார்கள். அதைத் திருமணம் என்பார்கள்.

எந்த தகுதியும் இல்லாவிட்டாலும் மனிதனுக்கு திருமணம் பண்ணிக்கொள்ளும் அருகதை மட்டும் உண்டு. அது தெய்வம் தந்த எளிமையான வரம்.

ஆனால் பந்தத்தை நிலை நிறுத்திக் கொள்வது மட்டும் ரொம்ப கஷ்டம். பந்தம் நீடிக்கலாம். ஆனால் அது… எல்லோரும் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்றோ, ஒழுக்க நெறிமுறைகளுக்கு பயந்தோ, தனியே போய் வாழ முடியாது என்றோ, குழந்தைகளிடம் வைத்திருக்கும் அன்பின் காரணமாகவோ, ’ஏதோ ஒரு விதமாய் போய்க் கொண்டுதானே இருக்கிறது. இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்’ என்றோ, பிறந்த வீட்டுக்குப் போனால் இந்தச் சுகம் கூட இருக்காது என்றோ, மற்ற விஷயங்களில் அவர் நல்லவர்தான் (அவள் நல்லவள்தான்) இந்த ஒரு விஷயத்தில் மட்டுமேதான் பலவீனம் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு இருப்பதாலோ,  துணைவரிடம் இல்லாததை வெளியில் தேடிக்கொண்டு திருப்தி அடைந்து விடுவதன் மூலமாக விவாக பந்தத்தை வெற்றிகரமாக நீடிக்கச் செய்து கொண்டு வருவது துரதிருஷ்டமானது.

இருவரும் சேர்ந்து வாழ்வேண்டியிருக்கும் போது சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துக்கொண்டு போக வேண்டியதுதான். ஆனால் சமாதானமாகப் போக வேண்டிய குணங்களே அதிகமாக இருக்கும் போதுதான் இடைஞ்சல் வந்து சேரும். குழந்தைகள், வீடு, பாதுகாப்பு, ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கை … இவையெல்லாம் மட்டும் இல்லை என்றால் விவாக பந்தம் என்பது என்றோ சிதைந்து விட்டிருக்கும்.

கணவன் மனைவி பந்தத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த நிறுவனம் ஒன்று அனுப்பி வைத்த கேள்வித் தாளில் “உங்கள் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது?’ என்ற கேள்விக்கு தொண்ணூறு சதவீதம் இல்லத்தரசிகள் ‘திருப்திகரமாய்’ என்று பதில் கொடுத்தாலும், ‘உங்கள் கணவரிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம் ஒன்றைச் சொல்லுங்கள்’ என்ற கேள்விக்கு “என்னைப் புரிந்துகொள்ளா முடியாமல் போனது’ என்று தொண்ணூறு சதவீதம் பேர் பதிலளித்து இருப்பது கவனிக்கத் தக்கது.

மோரீன் கிரீன் கொள்கையின்படி தாம்பத்திய வாழ்க்கை ஆங்கில எழுத்து W வுடன் ஒப்பிடலாம். முதல் இரண்டு வருடங்கள் இருக்கும் ஆர்வம பிறகு மெதுவாக குறைந்து போய்விடும்.

நள்ளிரவில் குழந்தையின் அழுகை, யார் தூக்கிக் கொண்டு சமாதானப் படுத்துவது என்ற கேள்வி, செலவுகள், எரிச்சல்கள், இவற்றால் அன்புக் கொடு கீழே இறங்கி போகாமல் என்ன பண்ணும்? ஆனால் பத்து பன்னிரண்டு வருடங்கள் ஆகும்போது, சில பொறுப்புகள், பொருளாதார ரீதியில் கொஞ்சம் காலூன்றிக் கொள்வதால் திரும்பவும் அன்பு கூடுகிறது. குழந்தைகளுக்கு பதினெட்டு, இருபத்தி இரண்டு வயது வரும் [போது திரும்பவும் வரதட்சணை பிரச்சனைகள், குழந்தைகளின் எதிர்மறையான பதில்கள், ஒத்துப் போகாத கருத்துகள்.. திரும்பவும் கொடு கீழே இறங்கிவிடும். எல்லோரும் போய்விட்ட பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் என்ற உணர்வுடன் திரும்பவும் ஆரோகணம் தொடங்கி விடுகிறது.

ஆனால் ஒவ்வொரு உண்மைக்கும் சில விதிவிலக்குகள் உண்டு. பெரும்பாலான தம்பதிகளின் வாழ்க்கை W  ஆக இருக்கும் போது பாவனாவின் குடும்ப வாழ்க்கை ஆங்கில எழுத்து I  ஆகிவிட்டது. கீழே இறங்கியதுடன் சரி. ஆரோகணம் தென்படும் அறிகுறிகளே இல்லை.

“அப்பாவைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. ரொம்ப வேதனையாய் இருக்கு. போய் பார்த்து விட்டு வரலாம் வாங்க” என்று பாவனா கேஞ்சியபோது பாஸ்கர் ராமமூர்த்தி ஒப்புக்கொண்டான்.

அதற்கு முன்னால் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆன பொழுது கடிதம் போட்டாள். தந்தை விழுந்தடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அவர் போனதும், ‘இவ்வளவு சின்ன விஷயத்திற்கு அவரை எதுக்கு வரச் சொன்னாய்?” என்று திட்டினான் அவன்.

அவள் தலை குனிந்தவாறு பதில் சொல்லவில்லை.

“நான் ரொம்ப பயந்தாங்குளி என்றும் சின்ன விஷயத்திற்கும் கலங்கிப் போய் விடுவேன் என்றும் உன் வீட்டாருக்கு பறைச் சாற்றணும் என்பது தானே உன் எண்ணம்?”

அவள் அதற்கும் பதில் சொல்லவில்லை.

அதற்குப் பிறகு சில நாள் கழித்து அவனுக்கு இரண்டாவது தடவை ஆக்சிடென்ட் ஆன போது அவள் தந்தைக்குத் தெரியப்படுத்தவில்லை. ஆஸ்பத்திரியிலிருந்து டிச்சார்ஜ் ஆகித் திரும்பி வந்த பிறகு வசந்தி சொன்னாள்.

“இவ்வளவு பெரிய ஆக்சிடென்ட் ஆகியும் உன் மாமனார் வரவில்லையே, ஏன் ராமு?”

“அப்பாவுக்கு இதைப்பற்றி அவள் கடிதம் போடவில்லையோ என்னவோ?”

“அம்மா, அப்பா இல்லாத மாப்பிள்ளை இல்லையா? பெற்ற பிள்ளையைப் போல் பார்த்துக் கொள்ள வேண்டாமா?”

அதே சம்யத்தில் பாவனா சமையலறை வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். அவர்கள் பேசுவது காதில் விழுந்தது.

“பெற்ற பிள்ளையைப் போல் பார்த்துக் கொண்டால் சொத்து பகிர்ந்து கொடுக்க வேண்டியிருக்கும் இல்லையா.” சிரிப்புகள். “இல்லாவிட்டால் ஆஸ்பத்திரி செலவை எல்லாம் தான் கட்ட வேண்டியிருக்குமோ என்னவோ என்று பயம் போலிருக்கு.”

கேட்டுக் கொண்டிருந்த பாவானா வியந்து போனாள். மனிதனுக்கு இரண்டு நாக்குகள் உண்டு என்பதை அப்பொழுதுதான் கண்கூடாகக் கண்டாள். தங்கை சொன்னதை ஆமோதிக்க வேண்டும் என்பதற்காகவே, தான் சொன்னதையே இல்லை என்று மனசாட்சிக்கு விரோதமாய்ப் பேசுபவனா தன் கணவன் என்று திகைத்துப் போய்விட்டாள்.

அவளுக்கு சைலஜாவைப் பற்றிய நினைப்பு வந்தது. சுந்தரியின் நினைப்பு வந்தது.

தந்தையை மட்டுமே பார்த்துவிட்டு எல்லா ஆண்களும் அதுபோலவே இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தாள். அவள் எல்லை ரொம்ப சின்னது. அவள் தந்தை ஒரு பெண் தனக்கு மனைவியாய் வருவதாகச் சொன்ன போது, வேண்டாம் என்று, தங்கையாய் பார்த்துக் கொண்டார், சுந்தரியை. இங்கே அவள் கணவன் ஒரு பெண்ணை தங்கச்சி என்று சொல்லிக்கொண்டே கட்டிக்கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் சகோதர பந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

கணவனுடன் பிறந்த வீட்டுக்குக் கிளம்பினாள் பாவனா. ஸ்டேஷனில் எல்லோரின் கண்களும் அவள் மீதே இருந்தன. பாவனா நல்ல சிவப்பு. ஆரோக்கியமாய் அழகாய் இருப்பாள். இன்னும் திருமணம் ஆகாத கன்னிப்பெண் போலவே இருப்பாள். (அதில் மிகை எதுவும் இல்லையே) அதோடு அவள் மஞ்சள் நிற பார்டர் புடவையை உடுத்தி இருந்தாள். அவள் மேனியின் நிறமும், அந்த பார்டரும் ஒன்றோடு ஒன்று போட்டியிடுவது போல் இருந்தன,

த்ரீ டயர் கம்பார்ட்மெண்டில் கணவன் மனைவி இருவரும் உட்கார்ந்து இருந்தார்கள். ரயில் கிளம்ப இன்னும் சில நிமிடங்களே இருந்த போது கணவன் மனைவி ஜோடி ஒன்று கைக்குழந்தையுடன் அந்த கம்பார்ட்மெண்டில் ஏறியது. குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கலாம். அவள் திரும்பவும் நிறைமாத கர்ப்பிணியாய் இருந்தாள். பருமனாய் கருப்பாய் இருந்தாள். கணவன் அந்தக் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான்.

“இப்படியா பால் கொடுப்பாங்க குழந்தைக்கு? அதுகூட தெரியாதா?” என்றாள் அவள். அந்த கம்பார்த்மென்ட் முழுவதும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் முன்னிலையிலேயே கணவனை அப்படிப் பேசினாள் என்றால் வீட்டில் அவன் நிலைமை இன்னும் எப்படி இருக்குமோ என்று நினைத்துக் கொண்டாள் பாவனா. அப்படி நினைத்த போது அவன்மேல் இரக்கத்தோடு, சிரிப்பும் வந்தது.

அவர்கள் வந்து எதிரே இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். பால் பாட்டிலை குழந்தையின் வாயிலிருந்து எடுத்து, பையில் வைக்கப் போனபோது அவன் நிமிர்ந்தான். அவனைப் பார்த்ததும் பாவனா அதிர்ந்து போய்விட்டாள்.

அவன் சுதர்சன்!

அதே சமயத்தில் அவனும் அவளைப் பார்த்தான்.

ஆனால் அவன் அவளை அடையாளம் கண்டுகொள்ள கொஞ்சம் நேரம் ஆயிற்று. சில ஆண்டுகளுக்கு முன்னால் அவன் எல்லைமீறி காதலித்தாலும், அது ஒரே ஒரு தடவை பார்த்ததுதானே! அதுதான் மறந்து விட்டான். அதோடு குடும்ப வாழ்க்கை அவன் தலையில் இருந்த முடியை அந்த வயதிலேயே நரைக்கச் செய்திருந்ததோடு காதல் மயக்கத்தை ஓங்கி அடித்து தணித்து விட்டிருந்தது.

அவளை அடையாளம் தெரிந்து கொண்ட பிறகு மட்டும் அவன் அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்துவிட்ட மனைவி “நீங்க இப்படி வந்து உட்காருங்க” என்று இடத்தை மாற்றி தான் அவன் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

பாவனாவுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அது அவனைப் பற்றி இல்லை. தன்னைப் பற்றியேதான்.

ஒருகாலத்தில் எத்தனையோ அபூர்வமாக தென்பட்ட அனுபவங்கள் கொஞ்சம் வயது வந்த பிறகு நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருவது போல் தோன்றும். ‘பேனா நட்பு’ என்ற பெயரை நினைத்துப் பார்த்தாலே அவளுக்கு இப்பொழுது சிரிப்பு வந்தது. இப்பொழுது இவனைப் பார்த்தால் சைலஜா எப்படி அழ வைப்பாளோ? ஏற்கனவே அவள் குறும்புக்காரி!

“என் இதய வீணையில் காதல் தந்திகளை மீட்டிவிட்டு போய்விட்ட சுந்தரி… உனக்காக ஆயிரம் கண்களுடன் எதிர்பார்த்துக் கொண்டே வாழ்நாளெல்லாம் கழிக்கவேண்டும் என்று தீரமானித்துவிட்ட உன் காதலன்” என்று எழுதிய சுதர்சன், அதற்குப் பிறகு சைலஜாவைக் காதலித்து, இப்பொழுது, தற்சமயம் இந்த விதமாய் எதிர்ப்பட்டு இருக்கிறான் என்றால்…

மனிதர்களுக்கு காதல் என்றால் எவ்வளவு இளப்பமாகிவிட்ட்டது!

யோசனையில் ஆழ்ந்திருந்த அவள் ரயில் நகரத் தொடங்கியதைக் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அவள் பாத்ரூம் பக்கம் போனாள். வெளியே வரும்போது கதவிற்கு அருகில் அவன் நின்று கொண்டிருந்தான். ஒரு விதமான தன்னிரக்கத்தொடு “என்னை அடியாளம் தெரியவில்லையா?” என்றான். அவன் அந்த விதமாய் அங்கே நின்றிருப்பான் என்பதை எதிர்பார்க்காத பாவனா தடுமாற்றமடைந்தவளாய்  தலையை அசைத்தாள்.

அவள் அவனைத் தாண்டிக்கொண்டு போகும் போது ‘சைலஜா எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான். “நன்றாகத்தான் இருக்கிறாள்.” சுருக்கமாய் சொல்லிவிட்டுத் திரும்பப் போன அவள் சட்டென்று நின்றுவிட்டாள். எப்பொழுது வந்தானோ தெரியாது, பாஸ்கர் ராமமூர்த்தி அங்கே வந்து நின்று கொண்டு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

********

“எவன் அவன்?” அறைக்குள் அழைத்து வந்து அவன் கேட்ட முதல் கேள்வி அது.

“எனக்குத் தெரியாது.”

அவள் கன்னம் சுளீரென்றது.

“தேவிடியா மகளே! நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர், பார்த்துக் கொண்டது, சிரித்துக்  கொண்டது, நீ போனதுமே அவனும் உன் பின்னாடியே வந்தது எல்லாம் கவனிக்கவில்லை என்று நினைத்து விட்டாயா? சொல்லு, யார் அவன்?”

அவள் அழத் தொடங்கினாள். அவன் விடவில்லை.கையைப் பிடித்துத் திருகி சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தினான். அவள் தேம்பிக் கொண்டே நடந்ததை எல்லாம் சொன்னாள். தன் தவறு எதுவும் இல்லை என்றும், கேவலம் ரயிலில் பார்த்துவிட்டு, காதலித்து வாழ்க்கையை நாசம் பண்ணிக்கொள்ள வேண்டாம் என்றும் கடிதம் எழுதியதாகவும் ஒப்புக்கொண்டாள். ஷைலஜாவும், அவனும் காதலித்துக் கொண்டதையும், சைலஜா அவனை அழ வைத்ததையும் கூட சொன்னாள்.

கேட்டுக் கொண்டிருந்த அவன் முகம் கடினமாக மாறியது. தன்னைக் கொன்றுப் போட்டு விடுவானோ என்று நினைத்தாள். ஆனால் அவன் வேறொன்றும் பேசவில்லை. அறையை விட்டு வெளியே போய்விட்டான்.

பிறந்த வீட்டுக்கு வந்தோம் என்ற சந்தோஷம் கூட இல்லாமல் போய்விட்டது. பாவனா வந்ததை அறிந்து சைலஜா வந்தாள். அவளுடன் பேசுவது கொஞ்சம் ஆறுதல்!

பாவானவின் தந்தைக்கு வயோதிக பாரம் அதிகமாகிவிட்டது. இன்னும் மகள்களின் திருமணம் நடத்த வேண்டுமே என்ற கவலை முகத்தில் வெளிப்படையாக தெரிந்து கொண்டிருந்தது.

“எப்படிம்மா இருக்கிறாய்?” மகளைக் கேட்டான் விஸ்வம்.

“நன்றாகத்தான் இருக்கிறேன் அப்பா” என்றாள்.

“மாப்பிள்ளை நன்றாக பார்த்துக் கொள்கிறாரா?”

“நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறார் அப்பா.”

அவன் மகளைப் பார்த்தான். தலை குனிந்துகொண்டாள். அவள் நிலைமை அவனுக்குப் புரிந்துவிட்டது. தந்தைக்குப் புரிந்துவிட்டது என்று அவளுக்கும் புரிந்துவிட்டது.

இருவருமே ஆதரவற்றவர்கள்தான். சில உணர்வுகளைச் சொல்வதற்கு வார்த்தைகள் தேவையில்லை.

திரும்பிப் போகும்போது சைலஜா ஸ்டேஷனுக்கு வந்திருந்தாள். பாஸ்கர் ராமமூர்த்தி ஏதோ புத்தகங்கள் வாங்குவதற்காகப் போனான். ரயில் இன்னும் வரவில்லை.

சொல்லுவோமா வேண்டாமா என்ற சங்கடத்தில் கொஞ்சம் தடுமாறிய சைலஜா “உன் கணவர் கொஞ்சம் வினோதமான ஆளாய் இருக்கிறாரே?” என்றாள்.

பாவனா வியப்பும், பயமும் கலந்த குரலில் “என்ன நடந்தது?” என்று கேட்டாள்.

“ஒன்றும் இல்லை.”

“சொல்லாவிட்டால் என்மீது ஆணை!”

சைலஜா குரலைத் தாழ்த்தி “ஆண்களை அழ வைக்கிற குணம் என்னிடமிருந்து எப்பொழுதுதான் போகுமோ? ரொம்பவும் கேட்ட குணம்தானே இது?” என்றாள்.

“என்னதான் நடந்தது?” என்றாள் பாவனா கலவரத்தோடு.

‘ச்சே.. நீ பய்படுவது போல் ஒன்றும் ஆகவில்லை. உன் கணவர் அப்படி ஒன்றும் தீர புருஷன் இல்லை.”

“உண்மையில் என்னதான் நடந்தது?”

“இரண்டு நாளாய் உன் கணவனை கவனித்துக் கொண்டுதான் வந்தேன். கொஞ்சம் வித்தியாசமான ஆளாய் தென்பட்டார். கொஞ்சம் நெருங்கிப் பேசியதும் நல்ல பழக்கம் ஏற்பட்டு விட்டது. தன்னை நீ வாழ்க்கையில் இனி புரிந்துக்கொள்ளவே முடியாது என்றான். தன் வாழ்க்கை சீர்குலைந்து போய்விட்டது என்றான்.”

பாவனாவின் இதழ்கள் பற்களுக்கிடையில் நலிந்து போய்க் கொண்டிருந்தன. அவ்வளவு எரிச்சல் அவளுக்கு என்றுமே வந்தது இல்லை. இரண்டு நாள் அறிமுகத்தில் ‘தன்னைப்’ பற்றி அவளிடம் சொன்னது! தன் சிநேகிதியிடம் கூட அவள் அவனுடைய குறையைப் பற்றி சொல்லவில்லை.

அப்படி இருக்கும் போது அவன்…….

சைலஜா மேலும் சொன்னாள். “அந்த அளவுக்காவது ஆறுதலை எதிர்பார்த்தேன் என்றான். அவனுடைய பேச்சில் விரசமோ அல்லது மற்றவர்களைப் போல் என்னை வலையில் வீழ்த்தவேண்டும் என்ற முயற்சியோ இருக்கவில்லை. அவன் விரும்புவதெல்லாம் இரக்கம் மட்டும்தான். சுதர்சனைப் பற்றிச் சொல்லி என் மடியில் தலைவைத்துக் கொண்டு அழுதான்.”

“எ,,ன்ன..து?” நடுங்கும் குரலில் கேட்டாள் பாவனா. “இவ்வளவு குறுகிய அறிமுகத்தில்..”

அவள் பேச்சை இடைமறித்தாள் சைலஜா. “பாஸ்கர் ராமமூர்த்தி போன்றவர்களுக்கு யாருடைய ‘மடி’ என்பதெல்லாம் தேவையில்லை. தலையை வைத்துக்கொண்டு அழுவதற்கு யாரோ ஒருத்தருடைய மடி தேவை. அவ்வளவுதான்” என்றாள். “முதலில் இதையெல்லாம் உன்னிடம் சொல்லக்கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால் என் மீதே எனக்கு அருவருப்பு ஏற்பட்டது. சிநேகிதியான உன்னிடம் சொன்னால் தவிர அந்த அருவருப்பு போகாது போல் இருந்தது. ஐ யாம் சாரி.”

ரயில் புறப்பட்டது.

பாவனா மௌனமாய் ஜன்னல் வழியாய் வெளியே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

‘பாஸ்கர் ராமமூர்த்தி போன்றவர்களுக்கு யாருடைய மடி என்பதெல்லாம் தேவையில்லை. தலையை வைத்துக்கொண்டு அழுவதற்கு ஒரு மடி வேண்டும். அவ்வளவுதான்”  சைலஜாவின் வார்த்தைகளே எதிரொலித்துக் கொண்டிருந்தன.

திருமணம் ஆன புதிதில் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ரொம்ப முயற்சி செய்தாள். பிள்ளைப் பருவத்திலிருந்து திருமணம் ஆகும் வரையில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அழகாய்க் கதையைப் போல் நாள் முழுவதும் சொல்லி வந்தாள். ஆனால் அவன் மட்டும் வாயைத் திறந்து ஒன்றுமே சொல்ல மாட்டான். அப்படியே அவன் ஏதாவது சொன்னாலும்  அது வசந்தியைப் பற்றியோ, அவ்விருவரின் பந்தத்தைப் பற்றியோ அல்லது எதிர்காலத்தில் தாம் கழிக்கப் போகும் உல்லாசமான வாழ்க்கை பற்றியோ தான் இருக்கும். அவன் பேச்சையும், செயல்களையும் பார்த்தால் அவ்விருவருக்கும் இடையே இருப்பது அண்ணன் தன்கை உறவுதானா அல்லது, அந்த முக்காட்டிற்குள் ஆடும் நாடகமா என்ற சந்தேகம் கூட வராமல் போகவில்லை. ஆனால் அது வெறும் சந்தேகம் மட்டும்தான் என்று உறுதிப் படுத்திக்கொண்டாள். திருமணமான இளம்தம்பதிகள் இரவும் பகலுமாய் படுக்கை அறையிலேயேதான் இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறாள். ஆனால் பாஸ்கர் ராமமூர்த்திக்கு அந்த நினைப்பே ஒருநாளும் இருந்தது இல்லை. இதெல்லாம் கூட அவளுக்கு வருத்தத்தைத் தரவில்லை.

“ஒவ்வொரு மனிதனிடமும் குறைகள் இருக்கலாம். மாப்பிள்ளையிடமும் இருக்கலாம். அதையே கவனித்துக்கொண்டு அவனுக்கு வேதனையைத் தராமல் அவனிடம் உள்ள நல்ல குணத்தை நினைவில் வைத்துக்கொள்” என்று முதல் முறை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் போது தந்தை சொன்ன வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்து பழக்கப்படுத்திக் கொண்டாள். ஆனால் இன்று அவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்று அவளால் ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை.

*****

எதிர்பாராமல் பாஸ்கர் ராமமூர்த்தியின் அக்கா, அதான், குழந்தைகள் வந்து இறங்கினார்கள். அந்த நேரத்தில் அவன் வீட்டில் இல்லை. பாவனா அவர்களுக்கு எந்தக் குறையும் ஏற்பட்டு விடாமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டாள். சகல மரியாதைகளையும் பண்ணினாள். ஒரு விதத்தில் அவள் சந்தோஷமும் அடைந்தாள். மூர்த்தியின் நடவடிக்கையைப் பார்த்து அவள் கண்டிப்பாள் என்று ஆசைப்பட்டாள். அவள் அத்தனை அன்பாய் பேசினாள்.

“தாயில்லாத பெண் நீ. சந்தோஷமாய் இருக்கிறாயா?’ என்று கேட்டாள் பரிவுடன்.

“நன்றாகத்தான் இருக்கிறேன். எந்தக் குறையும் இல்லை அக்கா.”

“அவன் ஆஸ்பத்திரியில் இருந்தது தெரிந்து என்னால் வர முடியாமல் போய் விட்டது. எவ்வளவு அவஸ்தை பட்டாயோ என்னவோ?”

“பரவாயில்லை அக்கா” என்றாள் பாவனா.

அவள் வீட்டை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு ‘அப்படி என்றால் வீட்டுக்கு இவன் எந்த சாமான்களையும் வாங்கவே இல்லையா? ஒரு பிர்ட்ஜ் இல்லை. சோபா செட இல்லை. வரட்டும், கேட்கிறேன்.”

‘எனக்கு வேண்டியது அதெல்லாம் இல்லை அக்கா. கொஞ்சம் அன்பும், பாசமும்தான். அதைக் கொடுக்கச் சொல்லுங்கள், போதும்’ என்று சொல்லிவிடுவோமா என்று நினைத்தாள். குறைந்தபட்சம் அவளாவது தன் வேதனையைப் புரிந்துகொண்டு வசந்தி விஷயத்தில் அவனைக் கண்டித்தால் போதும். குழந்தைகள் இருவரும் பாவனாவுடன் நன்றாக ஒட்டிக்கொண்டு விட்டார்கள். வீடு கலகலவென்று சந்தடியாக இருந்தது.

ஆனால் பாஸ்கர் ராமமூர்த்தி வந்ததுமே சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. அவர்கள் வந்ததை அறிந்து வசந்தியும் வந்து விட்டாள். எல்லோரும் அறைக்குள்ளேயே உட்கார்ந்திருந்தார்கள். வெளியே வரவே இல்லை. அதற்கு அடுத்த நாள் முதல் அக்காவின் பேச்சில் முற்றிலும் மாறுதல் வந்துவிட்டது

“என்ன? என் தம்பி வரதட்சணை வேண்டாம் என்று சொல்லி விட்டான். சரிதான். அதை கேட்டுவிட்டு உங்க அப்பா விட்டது தொல்லை என்று எண்ணிவிட்டாரா ? வீட்டுக்கு வேண்டிய சாமான்களையாவது வாங்கித் தரக் கூடாதா? வேறு மாப்பிள்ளையாய் இருந்தால் ஐம்பதாயிரமாவது செலவழிக்கத் தயாராய் இருந்தார் இல்லையா? அதை வேறு விதமாகத் தரலாம் இல்லையா?”

“உங்க தம்பிதான் எதுவுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாரே. அதோடு அப்பா  எங்க அம்மா போன துக்கத்தில் இருந்தார்.”

“அதுக்காக? கல்யாணம் பண்ணிவைத்தாரா இல்லையா? ஏதோ அவன் ஆசைப்பட்டானே என்று நாங்களும் எதுவும் கேட்கவில்லை. அதுகூட தவறாகிவிட்டது போலிருக்கே?” அவள் நாள் முழுவதும் குத்திக் காட்டிக் கொண்டே இருந்தாள்.

வசந்தி அவளுக்கு உயிராகிவிட்டாள். அவர்களுக்கு ஊரெல்லாம் சுற்றிக் காட்டினாள். சினிமாவுக்கு அழைத்துச் சென்றாள். பாவனா அவர்கள் திரும்பி வரும் வேளைக்கு சமையலைப் பண்ணி வைத்திருப்பாள். சாப்பிட்டுவிட்டுத் திரும்பவும் சுற்றப் போய் விடுவார்கள்.

அவர்கள் இருந்த நான்கு நாட்களும் பாவனா நரகத்தை அனுபவித்தாள். குழந்தைகள் மட்டுமே அவளுடன் நேருக்கமாகி விட்டார்கள்.

அன்றைக்கு எக்ஸிபிஷனுக்குப் போவதாய்த் திட்டம் போட்டார்கள் அவர்கள்.  குழந்தைகள் பிடிவாதம் பிடித்ததால் பாவனாவையும் வரச் சொல்லி அழைக்க வேண்டியிருந்தது. எக்ஸிபிஷனில் வசந்தியும், பாஸ்கர் ராமமூர்த்தியும்  கைகளைக் கோர்த்துக்கொண்டு பேசியபடி நடந்து போவதைப் பார்த்து வெட்கத்தால் பாவனாவுக்கு மானம் போனாற்போல் இருந்தது.  கூடவே அக்காவும் அத்தானும் இருக்கிறார்கள் என்ற நினைப்பு கூட இல்லை அவர்களுக்கு. அவன் ஐஸ்க்ரீம் வாங்கி வசந்திக்கு ஊட்டிவிட்டான். அவள் வலுக்கட்டாயமாய் அவனை ஜெயின்ட் வீலில் ஏறச் செய்தாள். பாவனா முகம் கொடுத்து பேசாமல் இருந்ததைக் கவனித்து அவர்கள் மேலும் அதிகமாக ஆட்டம் போட்டார்கள்.

வீட்டிற்கு வந்த பிறகு …

“உங்கள் நடத்தை எனக்குப் பிடிக்கவில்லை. அத்தனை பேருக்கு முன்னால் தரக்குறைவாய் நடந்து கொண்டது அருவருப்பாய் இருக்கு. முக்கியமாய் உங்க அக்கா குழந்தைகள் வயதுக்கு வந்தவர்கள்.”

“என்னடி பெரிதாக சொல்ல வந்துவிட்டாய்? என் நடத்தையில் குறை கண்டுபிடிக்கிறாயா? என் தங்கையோடு கொஞ்சம் ஜாலியாய் இருந்துவிட்டால் நீ ஏன் பொறாமையில் வெந்து சாகிறாய்?” பாஸ்கர் ராமமூர்த்தியின் கத்தலைக் கேட்டு எல்லோரும் அந்த அறைக்குள் வந்து விட்டார்கள்.

“என்ன விஷயம்? என்ன சொல்கிறாள்?”

“எனக்கு பாடம் சொல்லித் தருகிறாள் அக்கா. கல்யாணம் ஆவதற்கு முன்னால் எவனையோ காதலித்து இருக்கிறாள். ரயிலில் வெட்கமில்லாமல் சரசமாடி இருக்கிறாள். தங்கையோடு நான் கொஞ்சம் ப்ரீயாய் இருப்பது தவறாம். நீதி போதனை செய்கிறாள்.”

அக்காவின் கணவர் சரேலென்று எழுந்தார். “நான் அப்போதோ சொன்னேன், இந்த சம்பந்தம் நமக்கு வேண்டாம் என்று. சொத்து கைக்கு வரும் என்று துடியாய் துடித்தான். காலணா காசுக்குப் பயன்படாத ஜென்மம” என்றார்.

இரண்டு பெண்கள், அதுவும் வயது வந்தவர்கள் இருக்கும்பொழுது அவர் அப்படிப் பேசியது அருவருப்பாய் இருந்தது பாவனாவுக்கு. “நீங்க எனக்கு அண்ணனைப் போன்றவர். என் கஷ்டசுகங்களைத் தெரிந்துகொண்டு உறுதுணையாய் நிற்க வேண்டியவர். நீகளே இப்படிப் பேசுவது நன்றாக இல்லை” என்றாள்.

‘என்ன? எங்க அத்தானை, வீட்டிற்கு வந்த விருந்தாளியை அவமானப்படுத்துகிறாயா? எவ்வளவு தைரியம் உனக்கு?” பாஸ்கர் ராமமூர்த்தி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான்.

பிறகு யார் பெரிதாக கத்தினார்களோ தெரியாது. நள்ளிரவில் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் எல்லோரும் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்கள். பாவனாவுக்கு அந்த நான்குபேரும் மனிதர்களாய்த் தோன்றவில்லை. அவ்வளவு பேருக்கு முன்னால் அடித்ததற்கு அவமானம் கூட ஏற்படவில்லை.

தனிமை என்ற கடலின் அடித்தளத்தை நோக்கி அவள் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்துச் செல்லப் படுகிறாள். மேலே இழுப்பதற்கு ஒரு கை வேண்டும். ஒரு சிறிய ஆறுதல் அவளுக்கு வேண்டும். புதைமணலில் இருந்து அவளை யாராவது இழுத்துவிட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று தோன்றியது.

அப்படிப்பட்ட கை அவளுக்கு சீக்கிரத்திலேயே கிடைத்தது.

 

(தொடரும்)

Series Navigationஅம்மாவின் அங்கி!வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -1 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி]
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *