இரு கவரிமான்கள் – 5

This entry is part 32 of 32 in the series 13 ஜனவரி 2013

 

டேபிள் மேலே மாதவி எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து  விட்டுப் போன வைர நெக்லஸ் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது போலிருந்தது ரமேஷுக்கு. அவமானப் படுத்தி விட்டுப் போயிட்டாள் என்னும்  கோபத்தோடு அதை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டே….ஷிட்..! எவ்வளவு துணிச்சல் இவளுக்கு…மதிப்புத் தெரியாமல் தூக்கி எரிஞ்சுட்டுப் போறாள் தான் பெரிய அழகின்னு கர்வம். என்கிட்டயே இவளோடு திமிரைக்  காண்பிக்கலாமா? இவளுக்கு…..நான் யார்ன்னு  காண்பிக்கணும். அவன் இதயத்தை  ஏமாற்றம், இயலாமை, பொறாமை, புறக்கணிப்பு அனைத்தும் ஈட்டிபோல்  குத்திக் கிழித்தன.  ரமேஷ் மிகுந்த கோபத்தோடு…. “உன் கொட்டத்தை நான் அடக்கறேன்.  “கவரிமானா  நீ ….. உயிர் துறக்கத் தயாராக இரு…” மனதுக்குள் கருவிக்  கொண்டான். அப்படியே  ஓடோடி வந்து வெளியில் பார்க்கும் போது மாதவியின்  கார் அரை வட்டம் அடித்து ஹோட்டல் கேட்டைத் தாண்டி இறக்கத்தில் இறங்கி நழுவி விரைந்து  கொண்டிருந்தது.  அதிலிருந்து கிளம்பிய  ஒலி, மாதவி பதட்டத்துடன் இருப்பதாக அலறியது.

என்னை உதாசீனப் படுத்தி விட்டு நீ ஒடறியா …….! என்னை அவமானப் படுத்தி விட்டு நீ எங்கேயும் ஓடிப் போக முடியாது. நீ எங்க போனாலும் பின்னாடி வேதாளம் போல் வருவேன். தானும் அவளது காரை பின்தொடர்ந்து சென்று அங்கிருக்கும் சிக்னல் விழவும் பிரிந்து நின்று விடுகிறான். ரமேஷின் கண்கள்  முன்பு மாதவியின் கார் சிக்னலைத் தாண்டிப் பறந்தது…..சிகப்பு விளக்கு 14,13,12,11,10….என்று  எண்ணி  அவனது பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது.  அவன் பட்ட   அவமானம் அவனைப்  பழி தீர்க்கச் சொல்லி ஆத்திரத்தை மூட்டிக் கொண்டிருந்தது. சிக்னல் அவனது பொறுமையைத் தாண்டிப் போய் விட்ட து. அவன் கைகளால்  ஸ்டியரிங்கை ஓங்கி அடிக்கிறான். அதற்குள் அவனது கைபேசி அழைக்கிறது. எடுத்துப்  பார்த்தவன் ஜே.வி.ஆர் தங்க மாளிகையின் மேனஜிங் டைரக்டரின் அழைப்பு. எடுத்துப் பேசுகிறான்.

அவசரமாக கார் வானவில் ஆஃபீஸை  நோக்கி விரைகிறது.

காருக்குள் காரின் வேகத்தைக் காட்டிலும் மாதவியின் மனம் ஓடிக் கொண்டிருந்தது.

‘ச்சே ……..ச்சே ……எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி ஒரு கேள்வி அதும் என்னைப் பார்த்துக் கேட்பான்.? இனிமேல் இவனுக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கு,,,,? எல்லாம் பணத் திமிர்…தான் .!பெண் என்றால் இவங்களுக்கெல்லாம்  பார்பி டாலா? இந்த விஷயத்தில் இவனும் தன்னை சராசரி தான்னு சொல்லிட்டான்.

நல்லவேளை…..பைரவி இவனை விட்டு விலகி விட்டாள் …ஒரு வேளை  அவளுக்கும் இது போன்ற ஏதாவது அவமானம் நடந்திருக்குமோ.?….அவள் சொல்லவே இல்லையே?  இத்தனை நாட்கள் சேர்த்து வைத்த நம்பிக்கை அனைத்தும் சிதறித் தெறித்து விழுந்தது போல…..இதோ இப்பவே நான் நேரா….பைரவியைப்  பார்த்துப் பேசினாத் தான் என் மனசு ஆறும்.. அவன் சொன்ன வார்த்தைகள்  இவளது உடம்பில் அசிங்கத்தைக் கரைத்து ஊற்றியது போல சுருங்கினாள் .

பைரவியின் வீட்டு வாசலில் நின்ற ஸ்கூட்டரைப் பார்த்ததும், யாராயிருக்கும்….?மனசுக்குள் எழுந்த கேள்வியோடு  என்னால் இன்று இந்த விஷயத்தை பைரவியோடு  பேச முடியுமா? என்று சந்தேகத்துடன் நுழைந்த மாதவியை முகம் மலர வரவேற்றாள் பைரவி.   அங்கிருந்த ஆதித்தனைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைக்கிறாள் மாதவி.

இப்போத் தான் வந்தேன்…உங்களை இங்கே நான் எதிர்பார்க்கலை. வெரி ஹாப்பி டு மீட் யு…..பை த  பை கங்கிராட்ஸ்…! ரொம்பப் பிரமாதமா ஆடினீர்கள்  போட்டி போட்ட இருவருக்கும் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது போட்டியாக இருந்திருக்காது…இல்லையா?  என்கிறார் ஆதித்தன்.

“ஆதிக்கு…உன் நாட்டியம்  ரொம்பப் பிடித்ததாம்…உன்னைப் பார்த்து சொல்லணும்னு  சொல்லிண்டு இருந்தார்…அதுக்குள்ளே நீயே வந்துட்டே… ” என்று  பைரவி சொல்லவும்…!

மாதவி…மனசுக்குள்ளே..’போச்சு

டா….இன்னொரு பிரச்சனையா? என்று நினைத்தவள் பைரவி…..நான் இன்னொரு நாள் வரேன்…இப்போ அவசர வேலையாப் போறேன்…’ என்று சொல்லிக் கொண்டு கிளம்பத் தயாரானாள் .

‘இரு…இரு…வந்ததும் எங்க ஓடறே ….முக்கியமான விஷயமெல்லாம் இருக்கு சொல்றேன் ….ஒரு நிமிஷம்…இரேன்…..மாதவி….ப்ளீஸ்….’. என்று பைரவி கெஞ்சவும், மாதவி அமர்கிறாள்.

“அப்போ நான் கிளம்பறேன், பைரவி…நீங்க பேசிட்டிருங்க…” என்று பைரவியின் பதிலுக்குக் காத்திராமல்  ஆதித்தன் கிளம்புகிறார் . மாதவியிடம் ‘போயிட்டு வரேன் என்று சொல்லியவாறு கண்ணியத்துடன் நகர்ந்து விட்ட விதம்  மாதவிக்கும் பிடித்திருந்தது.

கேள்விக் குறியாக பைரவியைப் பார்க்க முகம் ஒத்துழைக்காமல் மாதவிக்கு மனம்சோர்வாகவே இருந்தது.

என்ன பைரவி..புது சானலா?  என்று கேட்பாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனவளாக ” ஏன் எப்படியோ இருக்கே மாதவி..?.ஆதியைப் பிடிக்கலியா? வேறென்ன பிரச்சனை? என்று கேட்டவள்..பார்த்தியா மாதவி….இந்த ரமேஷிடமிருந்து ஒரு அழைப்பும் இதுவரை வரவில்லை.வராதது எனக்கும் சந்தோஷம்தான். ஆனால் எனக்கு ஆச்சரியமா இருக்கு.  ஒரு விதத்தில் இப்போதான் நான் நிம்மதியா இருக்கேன்   எப்படி ஒரே நாளில் என்னைத் தூக்கி வீச முடிந்தது அவனால்…?

அப்போ இவனை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைத்திருந்தால் என் நிலை என்னாவது..? ச்சே…ச்சே….இனிமேல் அவனைப் பற்றி சிந்திப்பது கூட பெரும் பாவம்  தான் . இனி அவன் யாரோ நான் யாரோ. அவன் உன்னைப் பார்த்ததும் என்னைத்  தள்ளினான்… இல்லை,  ரமேஷ் நம் இருவரையும் நேசிப்பது போல் நடிக்கிறான்.   நம்மில்  ஒருத்தி  கிடைக்கட்டும் என்று மாற்றி மாற்றிப் பிடிக்கத் துரத்துகிறான். .

பேசிக் கொண்டே போன பைரவியை….ஒரு நிமிஷம்…ஒரு நிமிஷம்…என்று  மாதவி குறுக்கிட்டாள் .

சொல்லு மாதவி என்ன சொல்ல வரே நீ ..? அவனுக்கு வக்காலத்து வாங்க நீ இங்க வந்திருக்கேன்னா…என்கிட்டே அதைப் பத்தி இனிமேல்  பேசாதே..மாதவி… என்னை முழுசா பேச விடு கொஞ்சம்….இன்று தான் ஆதித்தன் வீட்டுக்கு வந்து  ப்ரபோஸ் பண்ணினார். அவருக்கு இத்தனை நாளா கேட்கத் தயக்கமாம்..அம்மாவிடம் சொல்லி என் சம்மதம், அப்பா சம்மதம் கேட்க வந்தாராம். எதுவாயிருந்தாலும் சொல்லுங்கோ, உங்க முடிவைக் கேட்டு நான் என் அப்பா, அம்மாவை அழைச்சிண்டு வரேன்னு சொன்னார்.

என்னால நம்பவே முடியலை. எனக்கும் பூரண சம்மதம்….! ன்னு சொல்லிட்டேன்.

ஒரு கலைஞனால்  தான் கலையை ரசிக்க முடியும். அந்த விதத்தில் நான் கொடுத்து வெச்சிருக்கேன். சுயநலமில்லாத அன்பு. எதையும் எதிர் பார்க்காத நட்பு. யதார்த்தமான பரிச்சயம். வெளிப்படையான பேச்சு… இதெல்லாம் தான் ஆதித்தன்..! யாரா இருந்தால் என்ன உண்மை கண்ணில் தெரிந்து விடும்.

என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட ஆதித்தனை ரொம்ப பிடிச்சிருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஜாதகத்தை தூக்கிண்டு  பொருத்தம் பார்த்து முஹூர்த்த நாள் குறிக்க  கிளம்பிடுவா பாரேன்….அவா ரெண்டு பேருக்கும் இனிமேல் வீட்டில் இருப்பே கொள்ளாது…என்று சிரிக்கிறாள்.

ஒரு கலைஞன் தான் நிஜமான ரசிகன்..கலையைப் பற்றி அதை அறிந்தவனுக்குத் தான் அதன் அருமையும் தெரியும் . புரிந்து ஆராதிக்கவும் முடியும்..என்ன சொல்றே நீ மாதவி…?  நான் சொல்வது சரி தானே.? இதை நான் போன வாரம் நம்ம நித்யஸ்ரீ ஆத்துக்குப் போனபோது புரிஞ்சுண்டேன்….அவர்களுக்கு என்னால் ஆறுதல் கூட சொல்ல முடியலை…அவள் தான் மனசுக்குள் அத்தனையையும் வெச்சு அழுத்திண்டு  இருந்தாலும் வெளியில் இம்மி கூடத்  தெரியாமல் வளைய வந்தாலும் பாரேன்…அவர் செய்த காரியத்தில் அவளை சுக்கல் சுக்கலா ஆக்கிட்டார்.

ஆமாம் பைரவி….அது ரொம்ப கொடுமை….இந்த ஆண்கள் எப்போ எப்படி மாறுவான்னு தெரிய மாட்டேங்கறது..ஆனால் அவாளைக் கேட்டால் பழியைத் தூக்கி நம்ம தலையில் போட்டுடுவா.   ஒருவிதத்தில் நீ எடுத்த முடிவு ரொம்ப சரி தான். எனக்கும்  ரொம்ப சந்தோஷமா இருக்கு பைரவி.

நாம் ரெண்டு பேரும் இப்படி ஃப்ரீயாப்  பேசிக்கணும்னு தான் ஆதி   உன்னைப்  பார்த்ததும்….ஓடிட்டார்….என்று சிரித்தவள் இந்தா ஸ்வீட்ஸ் எடுத்துக்கோ…அவர் தான் வாங்கிண்டு வந்தார்… என்று தட்டை  நீட்டிய பைரவியை ‘இருக்கட்டும்’ இப்போ வேண்டாம் என்று கைகளால் விலக்கினாள்  மாதவி.

அவளது இந்தப் போக்கு பைரவிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

என்னாச்சு மாதவி…? உனக்கு ஆதித்தனைப் பிடிக்கலையா? அப்பாடி..! என்கிறாள்…நெஞ்சில் கை வைத்தபடியே…பொய்யாக நடித்தபடி.

திடீரென பைரவி ஆதி புராணம் பாட ஆரம்பித்தது…மாதவிக்கு அப்போது இருந்த சூழலில் சிறிது எரிச்சலாகத்  தான் இருந்தது. இருந்தும் அதை வெளிக் காட்டாமல்…

“அது  சரி பைரவி….நானே  ரொம்ப குழப்பத்தில் இருக்கேன்…உன்னோட அவசரமாப் பேசணும்னு ஓடி வந்தேன்…கொஞ்சம் எனக்காக காதைக் கொடேன்..!

ஐம் சாரி….சொல்லு மாதவி…என்னாச்சு..?

இன்னைக்கு வரச் சொல்லிக் கூப்பிடாறேன்னு ஹோட்டலுக்கு லஞ்சுக்குப் போனேன். பைரவி….அங்கு வந்ததும் உடனே  ஒரு வைர நெக்லஸ் பரிசு கொடுத்து எனக்கு அதிர்ச்சி உண்டாக்கினார். முதலில் ஐந்து லட்சம் பரிசு !   இப்போ அதையும் மிஞ்சிய வைர நெக்லஸ் அன்பளிப்பு !  எனக்கு புரியவில்லை.  …ஏதேதோ பேசிக் கொண்டிருந்த ரமேஷ் திடீரென இப்படிச் செய்ததை  நான் எதிர் பார்க்கவே இல்லை….அந்த நேரத்தில் .’என்னோட லிவிங் டு கெதர் ‘ வர சம்மதமான்னு பட்டெனக் கேட்டான்…. எனக்கு எலெக்டிரிக் ஷாக் அடித்தது !  நான் பட்டென்று எழுந்து அப்படியே வந்துவிட்டேன்.

இடியட்… அதை அவன் கேட்டதும்..என் உடம்பு முழுதும் பதறியது.. எப்படி பைரவி..எப்படி?..இப்படி ஒரு வார்த்தை… என்னைப் பார்த்தால் அப்படியா தெரியறது. என் அம்மா காதில் இந்த வார்த்தை விழுந்தால் அவ்ளோதான். என்னால் ரமேஷ் இப்படி பேசுவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.

திடுக்கிட்ட பைரவி….” ஓ …மை காட்….உன்னையும் அப்படியாக் கேட்டான், நீ ஏன் பேசாமல் எழுந்து வந்தே……? கன்னத்தில் பளார்னு ஒண்ணு  விட்டுட்டு வர வேண்டியது தானே? சும்மா ஏன் பயந்துட்டு வந்தே..என் கிட்ட கூட ஒரு நாள் காரில்….என்றவள் ஆள் வரும் சப்தம் கேட்டதும் அப்படியே பேச்சை நிறுத்தினாள்  பைரவி.

அதே சமயம்  டிரைவர் ரத்தினம் உள்ளே நுழைகிறார் …..”பைரவியம்மா …இந்தாங்க நீங்க கேட்ட செய்தித்தாள் என்று கொடுத்து விட்டு…வழியில் நம்ம ஆதித்தன் ஸாரைப் பார்த்தேன்…..வண்டியை நிறுத்திட்டு பேசிட்டுப் போனார்மா..ரொம்பத் தங்கமானவர் … என்றவர். அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலையை  உணர்ந்தவராக…..ஏதாவது பிரச்சனையுங்களாம்மா..?

ஒண்ணுமில்லை…ஒண்ணுமில்லை … என்று அவசரமாக மறுத்தவள்….. நீங்க கிளம்புங்க ரத்தினம்…என்றவள் ஏதோ நினைத்தவளாக… இல்ல… இல்ல  நீங்க இருங்க கொஞ்சம்….மாதவியை இன்னைக்கு அவங்க வீட்டில் டிராப் பண்ணிடுங்க ப்ளீஸ்….என்கிறாள்.

அதுவரைக்கும் நான் கொஞ்சம் வெளிய வெயிட் பண்றேன்மா…என்று ரத்தினம் நகர்ந்தாலும் மனசுக்குள் ‘இவங்க ரெண்டு பேர் முகமும் சரியாயில்லையே….என்னவோ நடந்திருக்கு…என்னவாயிருக்கும் ? மனம் சிறிது கேளேன்,,,என்று கட்டளை போட்டது.

ரத்தினமும்  கதவருகே நின்று காதைத் தீட்டினார்.

அதற்குள் மாடியிலிருந்து இறங்கி வந்த பைரவியின் அம்மாவும் அப்பாவும்.. ‘அட….மாதவியா..வா…வா….வா...நல்ல நேரத்தில் வந்திருக்கே…..ஒருவழியா பைரவிக்கு  மனசுக்கேத்த மாப்பிள்ளை வந்தாச்சு… இனிமேல் நல்லபடியாக் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்… அதுக்கு நாள் குறிக்கத் ஜோசியரைப் பார்க்கப்  போறோம்..கொஞ்சம் நீயும் பைரவிக்குத் துணையாக இங்கயே இரேன்…பைரவியோட பேசிண்டு.. நாங்க வரும் வரை. நாங்க கார்ல தான் போறோம்….ரத்தினத்தைக் கூப்பிடும்மா பைரவி…என்ற அப்பா ஷூவை மாட்டிக் கொள்கிறார். அம்மா பட்டுப் புடவை சரசரக்க  ‘நாங்க சீக்கிரமா வந்துடறோம்…’
அதான்…இன்று ஆதித்தன் உனக்கு கொண்டு வந்து கொடுத்தாரே ‘பேப்பர் ஸ்ப்ரே “.  சமயத்தில் அதை கையில் வைத்துக் கொள்வது கொஞ்சம் நிம்மதி தான். எதுக்கும் வெச்சுக் கோங்க… நாங்க சீக்கிரமா வந்துடுவோம்.

அம்மா அது பேப்பர் ஸ்ப்ரே இல்லை…பெப்பர் ஸ்ப்ரே….என்று சிரிக்கிறாள் பைரவி.

இதென்ன புது வித ஸ்ப்ரே……..!   என்ன வாசனை வரும்..? ‘ வீணை போச்சு வாசனை வந்தது…டும்…டும்… டும்…டும்..! ‘என்று மாதவி அந்த ஸ்ப்ரே பாட்டிலை தலைக்கு மேலே தூக்கி வைத்தபடி ஆட்டிப் பார்த்து சிரிக்கிறாள்.

சீரியசாப் பேசும்போது என்ன பாட்டு வேண்டியிருக்கு உனக்கு….? வெடுக்கெனப் அதைப் பற்றிய பைரவி….இது மும்பைக்கு நாங்க போயிருந்தப்போ அந்த ஹோட்டலில்  ரூமுக்கு ஒரு  காம்ப்ளிமெண்டா தந்தது. தனக்குத் தேவைப் படாது என்று ஆதித்தன் இன்று தான் என்கிட்ட தற்காப்புக்கு உபயோகப் படுத்திக்கோன்னு கொடுத்தார். இது டேஞ்ஜர். இங்க தா.. என்றவள் அதை வாங்கி ஒரு ஓரமாக வைக்கிறாள் பைரவி.இதே போல என்கிட்டே ஒண்ணு  இருக்கு அதை உனக்குத் தரேன்  நீ எடுத்துக்கோ.

ரமேஷ் மாதிரி ஆண்களுக்கும்
உபயோகப் படும். என்று மெல்லிய  குரலில் சொல்கிறாள் மாதவி.

இதற்குள் அப்பாவையும் அம்மாவையும் ஏற்றிக் கொண்டு கார் கிளம்பிச் சென்றது. ரத்தினம் மனசுக்குள்….இந்த நேரம் பார்த்து நான் இல்லாமல் போயிட்டேனே….என்னமோ பயங்கரம் நடக்கப் போகிறது…இதை எப்படி ஐயாட்ட சொல்லுவேன்….என் மனசே சரியில்லையே….எப்படி இந்தக் காரை விட்டு நான் வீட்டுக்குப் போவது..? அய்யா முதல் தடவையா ஜோசியர் கிட்ட போகும்போது அபசகுனம் மாதிரி…நான் ஒண்ணும் பேசக் கூடாது….’ஐயனாரே….வீட்டுல ரெண்டு பெண்களும் தனியா இருக்காங்க..நீ தான் துணையா இருக்கணும்’ என்று வேண்டிக் கொண்டார் ரத்தினம். கார் இவர்கள் இருக்கும் ரோட்டைக் கடந்து மெயின் ரோட்டில் பறந்தது. காருக்குள் அய்யாவும், அம்மாவும் ரொம்ப சந்தோஷமாக ஆதித்தனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எதிர்புறத்தில் இவர்கள் காரை வேகமாகக் கடந்து சென்ற ரமேஷின் கார் மெல்ல பைரவி வீடு இருக்கும் தெருக்குள் நுழைவதைக் கண்ட ரத்தினம்…..’  அம்மா…இன்னைக்கே கண்டிப்பா ஜோசியர் வீட்டுக்குப் போகணுமாம்மா… அந்த வானவில் ஓனர்  ரமேஷ் நம்ம வீட்டுப் பக்கம் போறா மாதிரி தெரியுதுங்கையா’…என்று தயக்கத்துடன் சொல்கிறார் ரத்தினம்.

ரமேஷின் கார் பைரவியின் வீட்டை நெருங்கி நிற்கிறது . மாதவியின் காரும் அங்கு நிற்பதைக் கண்டு சிரித்துக் கொள்கிறான் ரமேஷ். அவன் முகத்தில் குரூரப் புன்னகை கோரமாக முற்றுகை இட்டது.  அவனது வலது கை  தானாக நிதானமாக  பாண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்து  தடவிப் பார்த்து திருப்தி அடைகிறது. அதனுள் ‘திராவகம் ‘ தயாராக மாதவியின் முகத்தை அழிக்கக்  காத்திருந்தது.

(தொடரும்)

Series Navigationஐன்ஸ்டைனின் பிண்ட சக்தி சமன்பாடு (E=mc^2) வளைந்த பிரபஞ்சக் கால வெளியில் பயன்படுமா ?
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *