பள்ளியெழுச்சி

1
0 minutes, 2 seconds Read
This entry is part 15 of 28 in the series 27 ஜனவரி 2013

 

நந்தகோபாலன் மகள்

நந்தாவே !

மார்கழி போய்

தையும் வந்தாயிற்று !

மூன்று நாட்கள்

விடுமுறை முடிந்து

திங்களும் விடிந்துவிட்டது !

பள்ளி செல்லவேண்டாமா ?

எழுந்திரு !

இந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றும்

நம் அரண்மனையல்ல !

நம் ஃப்ளாட்டோ

நடுத்தளத்தில்

ஒரு 2 BKH !

உன் அப்பன் எழுமுன்

நீ விழிக்காவிட்டால்

அவன் இடும்

சிங்க நாதம்

இந்த அப்பார்ட்மெண்டையே

கிடுகிடுக்க வைக்கும் !

இன்னும் அரைமணியில்

பள்ளி வண்டியும் வந்துவிடும் !

அந்த ட்ரைவர் கடங்காரன்

ஹார்ன் அடித்து

ஐந்து நிமிடத்திற்குள்

நாம் போகாவிட்டால்

எனக்கென்னவென்று

காத்திராமல் போய்விடுவான் !

நீ அதற்குள்

தயாராகாவிடில்

பஸ் நெரிசலில் கசங்கி

நான்தான் உன்னைக் கொண்டு

பள்ளி சேர்க்கவேண்டும் !

கருவிழியாளே ! கண் விழிப்பாயே !

உன்னுடன் படிக்கும்

பக்கத்து ஃப்ளாட்

யசோதையின் இளம் அராத்து

கிருஷ்ணன் கூட

அவன் அம்மா அடித்தபின்

அலறிக்கொண்டு எழுந்தது

உன் காதில் விழவில்லையா ?

அதைப்போன்றே

உன் சிவந்த மேனி

மேலும் சிவக்க

அடிக்க எனக்கு மனமில்லையே !

எத்தனை முறை சொல்வாய்

” இன்னும் ஃபைவ் மினிட்ஸ் மம்மி ”

என்று ?

பவளம் போன்ற

சிவந்த உதடுகளையுடைய

என் பட்டுப் பாப்பாவே !

எழுந்திரேன் !

உனக்குப் பிடித்த நூடுல்ஸும்

நான் வளர்கிறேனே மம்மி

என நீ பாடிக்கொண்டே அருந்தும்

ஹார்லிக்ஸும்

மேலும் டப்பாவில்

க்ரீம் ரொட்டிகளும்

தயாராகவே உள்ளன !

‘பொட்டி’ போட்டு வைத்திருக்கிற

உனக்கான சீருடையும்

பளபளப்பேற்றின காலணிகளும்

உனக்காகக் காத்துக்கிடக்கின்றன !

அக்கம்பக்கத்துப் பிள்ளைகளெல்லாம்

கீழே இறங்கிக்கொண்டிருக்கிறார்களே !

மார்கழி மாத்திரம் என்றில்லாமல்

எல்லா மாதங்களிலும்

என்னை இப்படிப் படுத்தும்

என் இனிய மோகினியே !

சின்னஞ்சிறு  கொடியே !

பள்ளி செல்வதற்குப்

பள்ளி எழுந்தருளாயே !

 

— ரமணி

 

Series Navigationபிரபஞ்சத்தி​ன் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலி​ருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்விற்பனைக்குப் பேய்
author

ரமணி

Similar Posts

Comments

  1. Avatar
    sekar says:

    Today only I have read this poem. The same is equally applicable to all the children who are attending colleges also. It has been written very nicely.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *