பொதுவாக வெகு ஜன ஊடகத்தில் இயங்குபவர்களும் சரி, சாதாரணர்களும் சரி வாழும் முறையை இரு கூறுகளாக பிரித்துக்கொள்கிறார்கள். தனக்கு என்று வரும்போது ஒரு நிலையையும், சமூகம்/பொதுநிலை என்று வரும்போது ஒரு நிலையையும் எடுக்கிறார்கள். அதாவது யதார்த்தத்தை அணுகும்போது ஒரு வழிமுறையையும், அது தொடர்பான கருத்துக்களை பேசும்போதும் எழுதும்போதும் வேறு விதமான நிலையையும் எடுக்கிறார்கள். வெகுஜன ஊடகத்தில் இயங்குபவர்கள் பெரும்பாலும் இதை தெளிவாக புரிந்துவைத்திருக்கிறார்கள். இன்னும் குறிப்பிட்டு சொல்வதென்றால் ”சொல்வேறு, செயல் வேறு” என்று தெளிவாக வரையறுத்துக்கொண்டு விடுகிறார்கள். “உபதேசம் ஊருக்கு தான்” , “ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது” என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள்.
சாதரணர்கள் கூட இதில் விதி விலக்கல்ல என்ற நிலை ஆச்சர்யம் அளிக்கிறது. அவர்களும் மாறிக்கொண்டே வருகிறார்கள். நாம் படிப்பது என்பது வேறு, பார்ப்பது என்பது வேறு, கேட்பது என்பது வேறு, ரசிப்பது என்பது வேறு. ஆனால், நாம் நடைமுறை வாழ்வில் வாழும் முறை என்பது வேறு என்று தெளிவாக இருக்கிறார்கள். லஞ்சத்தில் கொழுத்த ஒருவர் என்னிடம் சொன்னார் “இந்தியன் படம் ரொம்ப நல்லா இருக்குங்க” . வாழ்க்கை நடைமுறையை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்.
சில சமயங்களில் ஒழுங்கை பின்பற்ற நினைக்கும் ஒரு சில சாதாரணர்களின் நிலை கவலைக்கிடமானது. சாலை விதிகளை ஒழுங்காக பின்பற்றும் ஒருவர் ஒரு சிக்னலில் சிவப்பு ஒளிரும்போது முதலில் நிற்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். எதிர் வழியில் வேறு வாகனங்கள் எதுவும் உடனே வரவில்லை. பின்னால், இருப்பவர்கள் எல்லாம் உடனே போக ஹாரன் அடிக்கிறார்கள். இப்போது ஒழுங்காக சாலை விதிகளை கடை பிடிக்கும் இவர் என்ன நிலை எடுப்பது? இன்றைய சமூகச் சூழலில் நேர்மையாக விதிகளின் படி நடப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளது. இனிமேல், இயலாமலே போகுமோ என்று நினைக்கும் போது மனது கனத்து போகிறது.
நல்ல வாசகனும் எழுத்தாளரும், படம் எடுப்பவரும் நல்ல ரசிகனும், பத்திரிக்கையாசிரியரும் செய்தியை நம்பி படிப்பவனும், பேச்சாளரும் நல்ல கேட்பாளனும் தூரத்திலேயெ இருப்பது நலம். மீதி இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல உள்ளங்களுக்கு ஒரு யோசனை. நீங்கள் ஆதர்சிக்கும் நபரிடமிருந்து விலகியே இருங்கள். இல்லை என்றால் ஏமாந்து போவீர்கள். அந்த “நல்லவர்கள்” தாங்கள் சொன்ன மாதிரியே தான் நிஜ வாழ்விலும் நடந்து கொள்வார்கள் என்று நினைத்து கொண்டே வாழ்ந்துவிடலாம்.
“நாணயம், நேர்மை, ஒழுக்கம், சமூக ஒழுங்கு, விதிகள், கடமை” போன்ற சொற்கள் எல்லாம் சொற்களாகவே போய்விடும் போலிருக்கிறது. வாழும் முறைக்கும் இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமலேயே போய்விடும் என்று தான் நினைக்கிறேன்.
சிலர் பட்டிமன்றங்களை கேட்கிறார்கள். சொற்பொழிவுகளை ஆராய்கிறார்கள். சிலர் யோகா குரு(Guru) க்கள் நடத்தும் வகுப்புகளுக்கு போகிறார்கள். எல்லாவற்றையும் பொழுதுபோக்காக அல்லது அனுபவிக்கும் விதமாக தெளிவாக எடுத்துக்கொள்கிறார்கள். அதை நடைமுறை வாழ்வுடன் பொறுத்திப்பார்க்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை. பேசுபவர்கள் அதை விட திறமைசாலிகள். அவர்களும் இதை எல்லாம் யாரும் நடைமுறையில் பின்பற்றவேண்டும் என்று பேசுவதில்லை. அவர்களுக்கு வருமானம், புகழ் கிடைக்கிறது பேசுகிறார்கள். ஒரு சில கார்பொரேட் சாமியார்கள் செய்வது இன்னும் சிறப்பு. முதலில் ஏதாவது ஒரு பள்ளியில் இலவசமாக ஒரு மணி நேரம் பேசுவார்கள். அதற்கு அடுத்த வாரம் பிரபல நாளிதழ்களில் விளம்பரம் வரும். மேற்படி சாமியார் இன்ன “ஸ்டார்” ஹோட்டலில் இன்ன தேதியில் பேசுகிறார். பதிவு செய்ய இன்னாரை அணுகவும்.
“ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு”
மிகப்பெரிய பேச்சாளர்கள் எல்லாம் மேடையில் சொல்வது என்பது வேறு யதார்த்தம் என்பது வேறு என்று தெளிவானவர்களாக இருக்கிறார்கள். ஏசி காரென்ன, ஓசி சோரென்ன?!. கிருபானந்த வாரியார் போன்றவர்கள் இவ்வளவு தெளிவானவர்களாக இல்லை. பாவம். பிழைக்க தெரியாதவர்கள்.
பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரிடம் ஒருமுறை ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “நீங்கள் லஞ்சம் கொடுத்து ஒரு வேலையை முடித்து கொள்வீர்களா?” பத்து பேர் நிற்கும் வரிசையில் பத்தாவது ஆளான எனக்கு முதலில் அந்த சர்வீஸ் கிடைக்கும் என்றால் லஞ்சம் தர ரெடி என்றார். ஆனால், காந்தி முற்றிலுமாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் தன்னுடைய கொள்கையில் உறுதியுடன் இருந்திருக்கிறார். தன்னுடைய குடும்பத்தாரையும் நிர்பந்தித்திருக்கிறார்.
அரசியல்வாதிகள் பற்றி தனியாக எதுவும் சொல்வதிற்கில்லை.
நீண்ண்ண்ண்ட காலமாக வெளிவரும் சமூக அக்கறையுள்ள பத்திரிக்கைகள் எல்லாம் சென்னையின் அனுமதி பெறாத சுவர்களிலும், மெட்ரோ ரயிலுக்கு அடைக்கப்பட்ட தகரங்களிலும் ஒட்டியிருக்கும் தங்கள் பத்திரிக்கையின் விளம்பர போஸ்டர்களை பார்த்தால் அவர்களின் சமூக அக்கறை தெள்ளென விளங்கிவிடுகிறது. இவர்களுக்கு இன்னுமொரு சௌகர்யம். தாங்களே பிரிண்டிங் பிரஸ் வைத்து புத்தகம் அச்சிடுவதால் இந்த போஸ்டர்களையும் அடித்து தெருத் தெருவாக அனுமதி பெறாத சுவர்களில் எல்லாம் ஒட்டி தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதுடன் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி விடலாம். பள்ளிச் சுவர்கள், அரசு அலுவலக சுவர்கள், மற்றும் மரங்கள் இவை எவையும் விதி விலக்கல்ல. வியாபாரம் தெரிந்த மனிதர்கள்.
சமீபத்தில் ஊழலுக்கு எதிரான ஒரு இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த கருத்தரங்கின் விளம்பர சுவரொட்டி சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தின் சுவரிலும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகே இருந்த அரசு மருத்துவ மனையின் சுவரிலும் ஒட்டப்பட்டிருந்தது. இன்னும் கொடுமை என்னவேன்றால், அந்த சுவரில் சென்னை மாநகராட்சி வரைந்து வைத்திருந்த அழகான ஓவியங்களின் மீது இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்த நபர்கள் எல்லாம் உயர் நிலையில் இருப்பவர்கள். இப்படி எல்லாம் அத்து மீறி சுவரொட்டிகள் ஒட்டுவது இவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை. ஆனால், எனக்கு ஒன்று தெரிந்த்து “எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது”. இந்த கருத்தரங்குகளை நடத்துபவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளை மிகக்டுமையாக எதிர்ப்பவர்கள். அரசியல்வாதிகள் ஒட்டிய சுவரொட்டிகளும் அடுத்து இருந்தன. இரு சுவரொட்டிகளும் ஒரே சுவற்றில் பல் இழித்துக்கொண்டிருந்தன. ஒரு தவறான மனிதராக அடையாளப்படுத்தப்பட்டவர் தவறு செய்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. தன்னை மிக ஒழுக்க சீலனாக காட்டி கொள்பவர் தவறு செய்யும் போதுதான் கோபமாக வருக்கிறது. துரியன் செய்யலாம். தர்மன் செய்யலாமா?
”படிப்பது இராமாயணம் இடிப்பது அனுமார் கோவில்” என்று ஒரு சொலவடை உண்டு.
யார் உண்மை சொல்கிறார்கள்? யார் சொல்வதை நம்புவது? அதில் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா? என்றெல்லாம் சிந்தித்து உண்மையை அறிவது இன்றைய நாளில் இயலாததாக ஆகிவிட்டது. இன்றைய மிகப்பெரிய காமெடிகள் எல்லாம் தினசரிகளின் செய்திகள் தான். அவற்றை மேலெலுந்த வாரியாக படிக்காமல் சற்றே உள்வாங்கினோம் என்றால், இது எதற்காக சொல்லப்பட்டிருக்கும் என்று நினைத்தால் நன்றாக சிரிப்பு வரும்.
ஒரு தினசரியில் ஒரு செய்தி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவற்றை மதிப்பிட கீழ்க்கண்டவற்றையெல்லாம் யோசிக்க வேண்டும்.
-
எந்த கட்சி பத்திரிக்கை?
-
பத்திரிக்கைக்கு என்ன லாபம்?
-
பத்திரிக்கை ஆதரிக்கும் கட்சி ஆளும் கட்சியா எதிர் கட்சியா?
-
பத்திரிக்கை ஆதரிக்கும் கட்சிக்கு மத்தியில் என்ன நிலை?
-
அந்த பத்திரிக்கை குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்க என்ன காரணம்?
உண்மையான உண்மையை கண்டு பிடிக்க என்ன முயன்றாலும் கண்டே பிடிக்க முடியாது.
நிலைமை என்ன இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்று ரொம்ப கவலைப்படாதீர்கள். ஒன்றும் நடந்து விடாது. நமது ஜனநாயகம் ஒரு ஸ்திரத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்லப்போனால் நமது ஜனநாயகம் எதையும் சகித்து கொள்ளும் இதயத்தை பெற்று விட்டது என்று தான் நினைக்கிறேன்.
”தனது வெற்றியில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டார் என்று சாப்ளினிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் Brothers are important.
வெற்றி பெற்ற பலருக்கும் அவரது திறமைகளை அடையாளம் கண்டு அதைப் பணமாக, புகழாக மாற்றிக்காட்டியவர் இன்னொருவரே”- எஸ்றா
அப்படி புரிந்துகொள்ளாதவர்கள் ஏமாளிகளாகவோ அல்லது தோற்றுப்போனவர்களாகவோ தான் இருக்கிறார்களோ?.
அப்படியானால் இந்த உலகம் யாரால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. யார் வாழத்தெரிந்த்வர்கள்? யார் வாழத்தெரியாதவர்கள்? வாழ்க்கையின் வெற்றி என்பது என்ன? யார் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்?
வாழ்க்கை என்பது ஒரு ________________.
இந்த கோடிட்ட இடத்தை நிரப்புமாறு ஒரு வகுப்பில் அறிவிக்கப்பட்டதாம். பலரும் பலவாறாக எழுத ஒரு மாணவர் மட்டும் “வெங்காயம்” என்று எழுதினாராம். வாழ்க்கையை உரித்து உரித்து பார்க்க உள்ளே ஒன்றுமே இல்லையாம்.
அ.லெட்சுமணன்.
- மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)
- பறக்காத பறவைகள்- சிறுகதை
- சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’
- இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்
- கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு
- வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3
- வங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்
- அக்னிப்பிரவேசம்-20
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்
- பள்ளியெழுச்சி
- விற்பனைக்குப் பேய்
- விழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்
- ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்
- வால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- விதி
- தாய்மை
- கவிஞர் நெப்போலியனின் காதல் கடிதங்கள் 2013
- உண்மையே உன் நிறம் என்ன?
- ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2
- குப்பை
- கவிதை பக்கம்
- ரயில் நிலைய அவதிகள்