ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2

This entry is part 25 of 28 in the series 27 ஜனவரி 2013

 

தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர்,
சிதம்பரம்.

எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் :

Girija.jpg
1968

குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள், (Voice of Valluvar) காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் (Gandhi Episodes),  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் (Pearls from the Prophet),  சத்தியசாயி பாபாவின் வரலாறு (The Living God at Puttaparthi )  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET  இல் தொடர்களாக வந்துள்ளன.

விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி,  மன்னார்குடி” இந்த சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கெளரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

2. அதிர்ச்சி …!

குறுநாவல்  எழுதியவர்:  ஜோதிர்லதா கிரிஜா.
வெளியான வருடம்:  1970.

இரண்டாவது  மலராக நறுமணம் வீசும் இந்த “அதிர்ச்சி ” என்கிற இந்த குறிஞ்சி மலரைப்  பறிக்கிறேன்..

கதை குறிஞ்சிப்பூவாக மலர்ந்து கிட்டத்தட்ட 42 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும்  இன்னும் சிறுகதை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை நிரந்தரமாகப் பிடித்துக் கொண்டு படித்தவர் மனதை இறுக்கிப் பற்றிக்  கொண்டிருக்கிறது.

மலரின் கூம்பு  இதழ்களைப் போலவே இதில் பாத்திரப் படைப்புகளும் கச்சிதமாக கூம்பாக உள்வாங்கி உணர்வுகளைக் கொத்துக் கொத்தாக மென்மையாக மனதைக்  கவர்கிறது.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரையொத்த இந்த குறுநாவலைப் படிக்கும் ஒவ்வொரு உள்ளமும் “இது போன்ற ஒரு கதையை இது வரை படித்ததில்லை….இனியும் யாரும் இவ்வளவு அழகாக எழுதவும்  மாட்டார்” என்று எண்ணாமல் இருக்க முடியாது. படிக்கும் போதே கதை பேசும் ‘அதிர்ச்சி’ அனுபவம் உண்டாவதும் உறுதி.

இத்தனை ‘அதிர்ச்சி’ தரும் கதையில் அப்படி என்ன தான் இருக்கிறது..? குறிஞ்சி மலரை மலை சார்ந்த இடங்களில் உயரமான இடங்களில் மட்டுமே காணக் கிடைப்பது போல கதையைப் படிக்கும் போதே மலை ஏற்றம் தரும் உணர்வுடன் கொண்டு செல்வது புதுமை.

கதையின் சாரம்:

தனது  மனைவியை இழந்தவர் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தனக்கு இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டு மேலும் அரை டஜன் குழந்தைகளைப் பெற்று, இருக்கும் இயலாமை , ஏழ்மை இரண்டும் தீராமல் போக, வயது வந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாது இருக்கும் ஒரு தகப்பன்.

ஏழ்மை தனக்குத் தந்த வரமான வாழ்க்கையாக இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட அவரின் மனைவி தான் வெறும் பிள்ளைப் பெறும் இயந்திரம் மட்டுமே எனபதைப் போல பத்து வருடத்தில் ஆறு குழந்தைகளைப் படைத்து படைப்பாளியாகப் பெருமை கொள்ளும் விதமாக ‘சித்தி’ யின்  பாத்திரப் படைப்பு.

தாயை இழந்த மூத்த மகள் தன் தந்தை செய்த இந்த இரண்டாம் கல்யாணத்தை ஏற்க மனசில்லாமல்,மனதோடு புழுங்கி இப்படி செய்து விட்டாரே..என்று வேதனை பட்டு, ஆத்திரப் பட்டும், அதனாலேயே தனக்கு அன்னை முறையாக வந்த ‘சித்தி ‘ யைக் கூட மனசளவில் ஏற்காமல் தாயை நினைத்து வருந்துவது.

குடும்பத்தின் கஷ்டத்தை மனதில் கொண்டு அக்கா, தங்கை இருவருமே மாலையில் பஜ்ஜியும், போண்டாவும் செய்து தெருத் தெருவாக நடந்து விற்பனை செய்ய, அந்த வியாபார நேரத்தில் நடக்கும் வியாபாரம் செய்கிறேன் என்று வீடுகளில் ஆண்கள் செய்யும்  பல வித அத்துமீறல்கள்.., அவர்களின்  வக்கிரங்கள் , ஒரு ஏழைப் பெண் தனது வாழ்வாதாரத்துக்கு உழைத்து சம்பாதிக்க முனைந்தாலும் அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு, அவர்களின் நைந்து போன உள்ளத்தைப் பார்க்காமல்…உடலைப் பார்த்து தனது வக்கிரங்களுக்கு வடிகால் தேட முயலும் போது…மேலும் உள்ளம் புண்ணாக…அங்கங்கு வியாபாரம் செய்வதையே நிறுத்தி விடுகிறார்கள்.இதற்கெல்லாம் விடிவே கிடையாதா? என்றும்  மனசு ஏங்க  வைக்கிறது.

அக்காவுக்கு வயதாகியும் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கிறதே என்று மனசுக்குள் கவலைப் பட்டு…அதைத் தனது அக்காவிடமே எடுத்துச் சொல்லி…நானா இருந்திருந்தால் ‘ஓடிப் போயிருப்பேண்டி அக்கா….ஓடிப் போயிருப்பேன்…’ என்று தனது ஆதங்கத்தை வெளிப் படுத்துகிறார் தங்கை ஜானகி. தங்களது பெருகிய குடும்பத்தின் ஏழ்மையை விரட்ட வீடு வீடாகச் சென்று பஜ்ஜியும் , போண்டாவும் வியாபாரம் செய்து பணம் கொண்டு வருவதனால் தான் தனது தந்தை நம் இருவரையும் திருமணம் செய்து வைக்காமல் வீட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார். இதை நானே கேட்கிறேன்…என்று நேரம் பார்த்து தன்  தந்தையை கேட்கும்  அனல் பறக்கும் வார்த்தைகளைக்  கேட்டு அக்காவே தங்கையைத் திட்டுகிறாள்.

தனது இயலாமையை உணர்ந்தாலும் இப்போது தன்னால் ஏதும் செய்ய இயலாது , மகளின் திருமணத்திற்கு வரதட்சிணை ஏதும் தந்து நடத்தி வைக்க  இயலாது என்று தெரிவித்ததும்…இப்பேர்பட்ட குடும்பத்தை விட்டு ஓடினாலும் பரவாயில்லை என்னும் தனது உணர்வுக்கு சரியான முடிவாக அவள்  மனதுக்குள் ஏற்றுக் கொள்கிறாள்.

இந்நிலையில், அக்காவின் வாடிக்கையாக வியாபாரம் செய்யும்  பெட்டிக்கடைக்காரர் நடேசன் அவளைக் காதலிப்பதாகவும், தான் முதலியார் வகுப்பைச்  சேர்ந்தவர் என்பதால்  உள்ளூரில் மணந்து கொண்டு வாழ இயலாது என்பதால் எங்காவது வெளியூரில் சென்று வாழலாம்…அதற்கான  சம்மதம் கேட்டுக் கடிதம் எழுதித் தரவும். அதை வாங்கிப் படித்து மனம் ஏற்றாலும் , பரிபூரணமாக நடேசனைத் தானும் விரும்பினாலும், குடும்பத்தில் மூத்தவளாக இருந்து கொண்டு, தனக்கும் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்னும் ஒரே காரணத்தில் சுயநலமாக எண்ணி  தான் ‘நடேசனோடு ஓடிப் போனால்’ தன்  தங்கையின் திருமணம் தடைபட்டு விடுமே என்ற ஒரே நல்லெண்ணத்தில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு அவரைத் நிராகரித்து, தவிர்த்து விடுகிறாள்.

இருந்தும் சில நாட்கள் கழித்து நடேசனைப் பார்க்க வேண்டும் என்று மேலோங்கிய எண்ணத்தினால் அந்தப் பெட்டிக் கடைக்குச் செல்லும் போது  தான், அவர் அந்தக் கடையை வேறோருவருக்கு விற்று விட்டு சென்ற விஷயம். மனம் ஓடிந்தவளாக  வீடு திரும்பும் அக்கா இனி அவனைப் பார்க்கும் வாய்ப்பு தனக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு வருந்துகிறாள். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று தன்னைத் தேற்றி கொண்டு வளைய வரும் வேளையில்  தான் அவளது தங்கை ஜானகி தான் இரண்டு வருஷமாக அந்த ஊரின் மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தும் கேசவன் நாயரின் தம்பி மாதவன் நாயரைத் தான் என்பவரை மனதார விரும்புவதாகவும், அவர்கள் வீட்டில் திருமணத்துக்கு  அவசரப் படுத்துவதாலும், அவர்கள் குடும்பத்தோடு கேரளாவுக்கு சென்று விடுவதால் தானும் அவர்களோடு சேர்ந்து சென்று விடலாம் என்னும் எண்ணத்தில் இருப்பதாகவும் சொல்கிறாள்.

இரண்டு வருஷமாகச் சொல்லாமல் மூடி வைத்ததால், தங்கையின் எதிர்காலம் கருதி தனது காதலைக் கருக்கி விட்டேனே என்று மனதுக்குள் அழுதவளாக தனது அக்காவிடம் மட்டும் சொல்லி ஆசி வாங்கிச் செல்ல வரும் தங்கையின் தோளில் முகம் புதைத்து  மனத்தின் பாரம் இறங்க அடக்க முடியாமல் அழுகிறாள் அக்கா.

அதில், கூடப் பிறந்த தங்கையைப்  பிரிகிறோமே  என்ற வருத்தத்தைத் தாண்டி தான் ஏமாந்து விட்டேனே என்ற  ஆற்றாமையும் சேர்ந்து கொண்டது அவளது  தங்கைக்குத் தெரியாது .

பரிமளாவுக்கு  ஏற்பட்ட ‘அதிர்ச்சி’யை மிகவும் அழகாக எடுத்துக் கூறி தலைப்போடு கூடி கதை முடிகிறது.

இனி , கொத்தாக குறிஞ்சி மலர் :

இந்தக் கதையில் ஒரு சராசரி மனுஷியின் அத்தனை குணங்களும் பிரதி பலிக்கும் வண்ணம்
இருக்கும் பாத்திரப் படைப்புகளைச் சித்தரித்திருப்பது யதார்த்தம். கதை முடிந்த பின்பும் கூட மனதைத் தாக்கி மௌனப் படுத்திவிடும் ‘அதிர்ச்சி’.

இதோ.. மொட்டாக :

விளக்கைச்  சுற்றி சுற்றிப் பறந்து கொண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில் அதற்குள் விழுந்து விளக்கையும் அணைத்து தானும் அதிலேயே விழுந்து செத்துப் போய் கூடத்தை இருள் மயமாக்கியது. இந்த ஒரு நிகழ்ச்சி கூட தத்ரூபமாக எழுத்திலேயே ஒளியைக் காண்பித்தது .

கதையின் ஆரம்பம்,  இருட்டை ஒளிமயமாக்க வேண்டி தீப்பெட்டி தேடும் நிலையில் கதையின் நாயகி வெளியே வருகிறாள். அந்த நேரத்தில் அந்த இருளில் தீப்பெட்டி தேடும் போதே…நமக்கு தன தங்கை, சித்தி, அப்பா..இறந்து போன தனது அம்மா என்று ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைக்கும் விதம் அருமை.

விளக்கேற்றி அந்த இடத்தில் ஒளி வரும்போது, நம்மிடையே அந்தப் பாத்திரத்தின் பரிமளம் புரிபடுகிறது.

மெல்ல இதழ் விரிகிறது :

வெறுப்பு:
தன்னைப் பெற்ற தந்தையாகவே இருந்தாலும், “அந்த விட்டில் பூச்சிக்கும் நாற்பது வயதுக்கு மேல் இரண்டாம் தடவையாகத் திருமணம் செய்து கொண்டு வேண்டாத குடும்பச் சுமையை இழுத்து விட்டுக் கொண்டிருக்கும் இந்த அசட்டு அப்பாவுக்குமிடையே எந்த வகையான வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு ”  அந்தப் பூச்சி உயிரையே விட்டுத் தொலைத்து விட்டது. இந்த மனிதப் பூச்சியோ நானும் உயிர் வாழ்ந்து கொண்டு இன்னும் சில உயிர்களை பிறப்பித்துக் கொண்டு நானும் வாழ்கிறேன் என்று அரை உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கிறது…”  என்று எண்ணுமிடத்தில் வெறுப்பை உமிழ்கிறது.

அருவருப்பு:
படுக்கையில் விழுந்த எனக்குத் தூக்கம் வரமாட்டேன் என்றது. சித்திக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த அவளுடைய ஐந்து குழந்தைகளையும் ஆறாவதாக அவள் வயிற்றுள் வளர்ந்து கொண்டிருந்த உயிரையும் நினைத்துப் பார்த்தபோது எனக்கு அருவருப்பாய் இருந்தது. ஆமாம்..என் தம்பி , தங்கைகள் என்கிற நினைப்பைக் காட்டிலும் சித்தியின் குழந்தைகள் என்கிற நினைப்பே மிகுதியாக நெஞ்சில் எழுகிறது.அப்படி நினைப்பது தப்பாக இருக்கலாம். ஆனால் அப்படித்தான் என்னால் நினைக்க முடிகிறது. இந்த வரிகள் மிதமிஞ்சிய ஒரு அருவருப்பை தன் உறவுகள் மீதே பொழிகிறது.

நியாயம் :
“ஆழ்ந்து சிந்திக்கும் போது சித்தியையோ அவள் பெற்றிருக்கிற குழந்தைகளையோ வெறுப்பது பாவம் என்றும் அம்மா செத்துப் போய் ஒரே வருடத்துக்குள் சித்தியை அழைத்துக் கொண்டு வந்தவரும் இத்தனை உயிர்களுக்கு படைப்பாளியுமான அப்பாவைத் தான் நியாயமாகப் பார்க்கப் போனால் வெறுக்க வேண்டும் என்று தோன்றுகிறது”. இந்த நியாயமும் பேசும் கதை.

ஏக்கம்:
“அம்மா….அம்மா தான். இன்றைய தேதியில் அம்மா உயிருடன் இருந்தால் இந்த வீடு இப்படி இருக்குமா என்பதைப் பற்றிய கற்பனையில் ஈடுபடாமல் இருக்க முடியவில்லை. அம்மா இருந்த வரையில் ஜானகியும் நானும் அவளது அன்பு மழையில் நனைந்து கொண்டு மகிழ்ச்சியும் சிரிப்புமாக வாழ்ந்து கொண்டிருந்தோம். வறுமை எங்களைச் சிறிதும் பாதிக்கவில்லை”. இந்த வரிகள் அம்மாவின் மேல் இருக்கும் ஏக்கத்தை  பிரதிபலிக்கிறது.

பரிதாபம்:
குழந்தை வேண்டும் என்று ஒருவன் ஆசைப்பட்டு அது பிறக்காமல் இருப்பது வேண்டுமானால் கடவுளின் செயலாக இருக்கலாம். வருஷா வருஷம் பெற்றுகொள்வது கூட ‘அவன்’ செயலா? அது ‘அவன்’ செயலோ,இல்லாவிட்டால் அவன் மேல் பழிசுமத்தும் அப்பாவின் செயலோ. அதன் விளைவு ‘அவள்’ அல்லவோ அனுபவிக்க வேண்டியிருக்கிறது..? என்னதான் இருந்தாலும் வருஷா வருஷம் வயிற்றைத் தூகிக் கொண்டு சித்தி பெற்றுப் பிழைப்பதை நினைத்துப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது. ஒரு பெண்ணின் நிலை கண்டு இன்னொரு பெண்  பரிதாபப் படும் வரிகள்.

அவமானம்:
“தங்க விக்கிரகம் மாதிரி மூக்கும் முழியுமாக ஒரு பெண்டாட்டி இருக்கையில் குறுகுறுவென்று என்னை என்ன அப்படிப் பார்க்க வேண்டிக் கிடக்கிறது? என் சாண் உடம்பும் ஒரு சாணாய் குறுகிப் போய்  விடும் எனக்கு. உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரைக்கும் அவன் உற்றுப் பார்க்கும்போது பூமி பிளந்து அப்படியே என்னை விழுங்கி விடாதா என்று இருக்கும். சில பெண்கள் வேண்டுமானால் ஒருவேளை நம்மை ஒருவன் உற்றுப் பார்க்கிறாப்போல் அழகாய் இருக்கிறோம் என்பதில் கர்வப்பட்டுக் கொள்ளக்கூடும். ஆனால் எனக்கென்னவோ அந்த மாதிரி சமயங்களில் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும்போல் அவமானமாக இருக்கும்”. ஒரு இளம் பெண்ணின் இயல்பான எண்ணம் இது. ஏழ்மை ஏற்படுத்தும் உணர்வில் இதுவும் சேரும்.

கவலை:
“மொத்தத்தில் பெரும்பாலோருடைய பார்வையே நன்றாகயில்லை. எல்லாம் மொய்க்கிற பார்வைகள். துகிலுரிக்கிற பார்வைகள், கற்பழிக்கிற பார்வைகள், இப்படித்தான். தங்கை ஜானகிக்கு இம்மாதிரியான தொந்தரவுகள் ஏற்பட்டனவா என்பது தெரியவில்லை”
“ஜானகிக்கு இந்த மாதிரி தொந்தரவெல்லாம் வராமே இருக்கணுமே பகவானே” என்று அடிக்கடி வேண்டிக் கொள்வேன்”. இதில் ஒரு தாயின் கவலை தெரியும்.

அலுப்பும் சலிப்பும் :
“ஐயே…போதுமே! என் சந்தோஷமும் நானும்”
கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கவலைப் படுவதற்கென்றே கொஞ்ச நேரம் கூட ஒதுக்க முடியாத அளவுக்கு வேலைகள் உடம்பை வெட்டி முறிக்கிற நிலை கூட நாட்கள் கிடுகிடுவென்று ஓடுவதற்குக் காரணமில்லையா? – இதில் தெரியும்.

ஆச்சரியம்:
ஆச்சு. அடுத்த ஆண்டு பிறக்கும் போது என் இருபத்தாறாம் வயசும் பிறந்து விடும். “என்னது? எனக்கு இருபத்தஞ்சு வயசா முடியப் போறது? அடேயப்பா! இன்னும் அஞ்சு வருஷம் ஓடிடுத்துன்னா முப்பது வயசுன்னா ஆயிடும்?”

கழிவிரக்கம்:
“இந்த இருபத்தைந்து வருட வாழ்க்கையில் ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று எவனும் என்னிடம் கேட்டது கிடையாது. ‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்’ என்று எவனும் சொன்னதுமில்லை”. இந்த வரிகள் உள்ளத்தின் உணர்வை அப்படியே வெளிப் படுத்துகிறது.

நிஜம்:
பெண்கள் வீட்டுக்குள் வைத்துப் போற்றப்பட வேண்டியர்கள் என்று நம் பெரியவர்கள் வைத்திருப்பது பெண்களினுடயவும் இந்தச் சமூகத்தினுடையவும் ஒட்டுமொத்தமான நலனைக் கருதிதான் என்பதை என் அனுபவங்கள் அடிக்கடி எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

ஆத்திரம்:
“டூப் அடிக்கிறதைப் பார்த்தியோல்லியோ – சம்ஸ்க்ருத மந்திரம் சொல்ற வாயாலே சமஸ்கிருதம் செத்துப் போனதே இந்த மாதிரி ஆசாமிகளாலே தாண்டி ..! என்று எரிச்சலோடு என்னிடம் முணு முணுப்பாள் ஜானகி.
எங்கள் கல்யாணத்தைப் பற்றி அசதிமறதியாகக் கூட மூச்சும் விட்டறியாத அப்பா அப்படித்தான் தயங்காமல் “பார்த்துண்டு தான் இருக்கேன்…ஒண்ணும் சரியா அமைய மாட்டேங் கிறதே” என்று புளுகும் போது”.

பச்சாதாபம்:
விருப்பமற்ற ஒரு பெண்ணைத் தொடுவதைக் காட்டிலும் மோசமான குற்றம் ஏதும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒரு பெண்ணை – அவள் சற்றும் இணங்காத போதும் – தொட்டுக் கற்பழிப்பது கொலை செய்வதைக் காட்டிலும் கொடியது. அம்மாதிரியான கொடுமைக்கு ஆளாகாமல் என் வானாளைக் கழித்துவிட வேண்டும்”. ஒரு மணமாகாத இளம் பெண்ணின் நியாயமான எண்ணம்.

காதல்:
அது தகாத உறவு. கூடாக் கனவு, யாருடைய ஏற் கையையும் பெற முடியாத தொந்தம் என்பது நன்றாக எனக்குத் தெரிந்திருந்த நிலையிலும் கூட இந்தப்  பாழும் மனசு ஏன் தான் இப்படி அவனையே சுற்றி சுற்றி வர வேண்டுமோ புரியவே இல்லை” அழகான வெளிப்பாடு.

நாணம்:
“மூஞ்சி சொல்றதோல்லியோ அப்ப அதையே கேட்டுக்கோடி” என்று சொல்லிவிட்டு நான் அவள் முகத்தைப் பார்க்காமலே கிடுகிடு என்று குழவியை ஆட்டினேன்.
இருந்தாலும் சொல்லு சொல்லுன்னா என்னத்தைச் சொல்றது? ஏதாவது இருந்தாத்தானே சொல்றதுக்கு?
“உன் குரலே காட்டிக் குடுக்கிரதுடி அக்கா”…என்று ஜானகி மெதுவாகச் சிரித்தாள் .
“அப்படியே வெச்சுக்கோ போ..”
தங்கையிடம் சொல்லத் தவிக்க நாணம் மூடும் காட்சி.

திகைப்பு:
(தந்தைக்கு மகள் செய்த உபதேசம்)
வசிஷ்ட  மகரிஷி என்ன சொல்லியிருக்கார்ங்கறது தெரியாதா உங்களுக்கு? வயசுக்கு வந்த பெண்ணை மூணு வருஷத்துக்குள்ளே கல்யாணம் பண்ணி குடுக்கல்லேன்னா
தனக்குப் பிடிச்ச எவநோடையும் போறதுக்கு ஒரு பொண்ணுக்கு முழு உரிமை உண்டுன்னும் அந்த மாதிரி செய்யற ஒரு பொண்ணோ இல்லேன்னா அவளை அழைச்சிண்டு போற ஆணோ குற்றவாளிகள் இல்லைன்னு அவரும் மனுவும் சொல்லியிருக்கிறதை நான் ஞாபகப் படுத்த வேண்டாம்னு பார்க்கறேன். தன பொண்ணு வயசுக்கு வந்த ஏழு மாசத்துக்குள்ளே ஒரு தகப்பன் அவளுக்குக் கல்யாணம் பண்ணி  வைக்கலைன்னா ஏழு கொழந்தைகளைக் கொன்ன பாவம் அவனுக்கு வந்து சேரும்னு மனு தர்ம சாஸ்திரத்திலே கூடத்தான் சொல்லியிருக்கு.இதெல்லாம் சமஸ்கிருதத்தைக் கரைச்சுக் குடிச்சிருக்கிற உங்களுக்குத் தெரியாதா என்ன?  சும்மா சமஸ்கிருதப் புஸ்தகங்களை வரிசையா அலமாரியிலே அடுக்கி வெச்சுட்டாப்லே  ஆச்சா? நாக்கில் பல்லைப் போட்டு அவள் கூசாமல் கேட்ட கேள்விகள். வயசு வந்த ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்சக் கூச்சம் கூட இல்லாமல் ஜானகியா இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று எனக்குத் திகைப்பாய் இருந்தது.

இயலாமை..:
”  இந்த ஆவணிக்குள்ளே  அக்கா கல்யாணம் நடந்தாகணும்..ஆமா..! குதிர் குதிரைப் பொண்ணுகளை வளர்த்து வெச்சிண்டு அவா சம்பாத்தியத்துலே வயிறு வளர்த்துண்டிருக்கேள்ன்னும் அதனாலே தான் எங்க கல்யாணத்தைப் பத்தின பிரக்ஞையே உங்களுக்கு இல்லைன்னும் ஊர்லே நாலு பேர் பேசற பேச்சு காதுலே விழரச்சே உங்களுக்கு அவமானமாய் இல்லே? நானாயிருந்திருந்தால் நாக்கைப் பிடுங்கிண்டு பிராணனை விட்டுடுவேன்..”
ஜானகியின் ஒவ்வொரு சொல்லும் பச்சை மரத்தில் ஆணி அடித்தார் போல் பளிச் பளிச்சென்று வந்து விழுந்தது.

விரக்தி:
“பாவ புண்ணியம்” நாகரிக-அநாகரிகம் ” நீ சொல்ற ரசாபாசம்- இதுகளெல்லாம் பார்க்க வேண்டிய வீடுகள் வேறேடி . இந்த வீடு இல்லை”.

அறிவுரை:
இன்னிக்கு நம்ம அப்பா- அம்மாவுக்கு நாம என்ன மாதிரி மரியாதை காட்றோமோ அந்த மாதிரியான மரியாதையைத்தான் நாளைக்கு நம்ம குழந்தைகள் நமக்குக் காட்டும்..”

குறும்பு:
“கல்யாணமே ஆகக் காணோம். அதுக்குள்ளே குழந்தை-குட்டிக்குப் போயிட்டா இவ ..! வேடிக்கை தான்”.

எகத்தாளம்:
“ஓடிப் போயிருப்பேண்டி …ஓடிப் போயிருப்பேன் ” இருபத்தாறு வயசு வரைக்கும் தன் பொண்ணோட கல்யாணத்தைப் பத்தி யோசிக்காத தகப்பனுக்கு மரியாதை குடுக்கணுமாம் மரியாதை” – தங்கையின் எகத்தாளம்.

துடிப்பு:
“இந்த நடேசன் மொதலியார் ஜாதியிலே போய்ப் பொறந்து வெச்சிருக்கானே? பிராமண ஜாதியிலே பொறந்து தொலைச்சிருக்கப் படாதோ? என்று என் மனசு முட்டாள்தனமாக ஏங்கத் தொடங்கிற்று…என்ன பைத்தியக்காரத்தனம்?

நேசம்:
“பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலொழிய கலப்பு மணம் வெற்றியில் முடியாது என்பதையும் முக்கியமாக ஆணுக்கு அந்த மனப்பான்மை மிகுதியாக இருக்க வேண்டும் . பெற்றவர்களை விரோதித்துக் கொண்டு ஒருவனை நம்பி “அவனே கதி என்று ” ஓடி வருகிற ஒரு பெண்ணை அனுதாபத்தோடு பார்க்கும் பரந்த மனப்பான்மை ஆணுக்குள் இருக்க வேண்டும். ஏனென்றால் பெற்றவர்களுடைய அதிருப்தியும் விரோதமும் பெண்ணுக்கு பெரிய நஷ்டங்கள். புகுந்த இடத்திலும் அவள் மனப்பூர்வமாக வரவேற்கப்படுவதில்லை…என்கிற நிலையில் விட்டுக் கொடுக்கிற தன்மை பெண்ணைக் காட்டிலும் ஆணுக்குச் சற்று அதிகமாவே இருந்தால்தான் கலப்பு மனம் செய்து கொள்ளும் ஒரு பெண் நிம்மதியாக வாழ முடியும். இந்த நேசம் நடேசனின் கடிதத்தில் எதிரொலித்தது.

மனசாட்சி:
“நீ நிமிஷத்தில் ஓடிப் போயிடுவேடி. ஆனா அப்படி ஓடிப்போனவளுடைய தங்கையை யாரு கல்யாணம் பண்ணிப்பா நாளைக்கு? அதைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா? உனக்காகப் பரிஞ்சு அப்பாகிட்டக் கன்னாப் பின்னான்னு பேசின ஜானகியுடைய வருங்கால வாழ்க்கையை உன்னுடைய காரியம் எந்த அளவுக்குப் பாதிக்கும்கிரதைப் பத்தி துளிக்கூட யோசிச்சுப் பார்ககாமே…”ஓடிப்போனா என்ன” என்று நீ நினைப்பது சுயநலமில்லையா ?

கண்ணியம்:
“உங்கள் பயன்தராத அன்புக்கு மற்றுமொரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – பரிமளாவின் முழுக் கடிதமும் வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை.

ஆசை:
“திடீரென்று ஒரு நாள் என் மன உறுதி சிதைந்து போயிற்று.நடேசனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் கட்டுக்கு அடங்காமல் என்னுள் பொங்கிற்று. தொலைவில் நின்றாவது அவனது அன்பு முகத்தை ஒருதரமாகிலும் பார்த்து விடவேண்டும் போல் மனசு கிடந்து அடித்துக் கொண்டது. அந்த எனது ஆவலுக்குத் தடை போட முடியாமல் நான் வெகு நாட்களுக்குப் பிறகு அந்தப் பெட்டிக்கடைப் பக்கம் நடக்கலுற்றேன்” .

ஏமாற்றம்:
“அவுரு கடையை வித்துட்டுப் போயி அஞ்சாறு மாசத்துக்கு மேலே ஆகுதேம்மா”…..
“இந்த ஊரை விட்டுப் போயிட்டாருங்கறது மட்டுந்தான் தெரியும். எங்கிட்டு இருக்காருங்குற வெவரம் தெரியலியேம்மா”
இதைக் கேட்டதும் என் நெஞ்சுக்கூட்டினுள் ஒரு நரம்பு அருந்தாற்போல் இருந்தது.

தைரியம்:
“அன்னிக்குச் சொன்னேனோல்லியோ? அதைத் தான் காரியத்திலே காட்டப் போறேன்.அதாவது ஓடிப் போகப் போறேன்.”
“..”

பயம்:
“பையன்  யாரு என்னன்னு தெரிஞ்சா அப்பா கட்டையை எடுத்துண்டு வருவா. நீ  கூட என்ன நினைப்பியோ தெரியல்லே”.

தயக்கம்:
“ரெண்டு வருஷமா எங்களுக்குள்ளே ‘இது’. உனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்பறந்தான் பண்ணிக்கணும்னு இருந்தேன். ஆனா அவா வீட்டிலே அவசரப்படுத்தறா …அதான்..”.

பெருந்தன்மை:
“நீ கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தீர்மாநிசிருக்கிரதைப் பற்றி ரொம்ப சந்தோஷம் ஜானகி.
ஆனா ரெண்டு வருஷமா இந்த விஷயத்தை என்கிட்டேர்ந்து மூடி மறைசிருந்திருக்கியே நியாயமா? என்று கேட்டேன்.
அதனாலே எனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்குன்னு தெரியுமாடி உனக்கு ? என்று கேட்க முடியாமல் மனசுக்குள் பொருமினேன்.

மகிழ்ச்சி:
“அக்கா ! என்னை ஆசீர்வாதம் பண்ணுடீ” என்றவாறு அவள் திடீரென உணர்ச்சிவசப்பட்டு பாய்ந்து வந்து என்னைக் கட்டிக்கொண்ட போது, என்ன சொல்வது என்றே தோன்றாமல் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தேன்.
“ஜானகி என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டுடீ! அதை நீ கேட்டு வாங்கிக்கணு ம்னுட்டு இல்லை “- இப்படிச் சொல்லி விட்டு நான் அவள் தோளில் என் முகத்தை அழுத்திக் கொண்டேன்.

துக்கம்:
நான் அழுதது அதற்காக மட்டும் இல்லை என்றும் வேறு இன்னொன்றுக்காகவும்கூட என்றும் அவளுக்கு எப்படித் தெரியும்?

மலர்க் கொத்தை நீட்டும் போது :

“இந்த ஒரு அதிர்ச்சி கதைக்குள்….ஒரு பெண்ணின் அத்தனை மன உணர்வுகளும் அளவாக அழகாகச்  சேர்ந்து கொத்து மலராக நறுமணம் வீசி படிப்பவர்களை தன்னோடு கூடவே  இழுத்துக் கொண்டு செல்லும் உயிர்ப்பு இருக்கிறது.

கதை வந்து நாற்பது வருடங்களுக்கு மேலே ஆனாலும் என்ன…? இன்னும் பூமி சுற்றும் வரையில், ஏழ்மை இருக்கும் வரையில்…இது போன்ற பரிமளாக்களும் ஜானகியும் எங்கேயோ இதே உணர்வுகளோடு திண்டாடிக் கொண்டும்,  போராடிக் கொண்டும்  தான் இருக்கிறார்கள்.

எத்தனையோ விதத்தில் சமுதாய முன்னேற்றங்களும், மாற்றங்களும்  வந்திருந்த  போதிலும்  பூமிக்கடியில் வேர்கள் ஒன்றாக இருப்பது போல வாழ்வியலின் அடிப்படை என்றும் மாறாதது என்பதை உணர்த்தும் விதமாக ஆசையும் …ஆசாபாசங்களும் தீராது என்றும் ஆணித்தரமாக நம்மை நம்ப வைக்கிறது.

இத்தனை வருட இடைவெளிகளுக்குப் பிறகு  இந்தக் கதையை படித்தாலும் “குடும்பம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் ” ஒரே குழந்தையோடு நின்றுவிடும் முன்னேற்றம் மட்டும் கண்கூடு.

மேலும் பெண்களுக்கு மிதமிஞ்சிய சுதந்திரம் வீட்டிலும் வெளியிலும், படித்ததனால் நல மதிப்பு…தங்களின் வாழ்க்கையைத் தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளும் திறனும், தைரியமும் வாழ்வின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக தற்போது  நடை முறையில் வந்து விட்டது பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான் .

தலைமுறை இடைவெளியில் ஆண்களில் கூட நல்ல எண்ணத்தில் முன்னேற்றமும் பரந்த மனமும், வரதட்சிணை விழிப்புணர்வும் மாற்றமாக வந்துள்ளது. எல்லாம் உயர்மட்டத்திலும் , மேல்மட்ட நடுத்தர வர்கத்திலும் வந்திருந்தாலும்….இன்னும் நடுத்தர, கீழ் மட்ட வர்கத்துக் குடும்பங்கள் அதே சூழலில் தான் உழன்று வருகின்றனர்.

எந்த வகையான  மாற்றங்களிலும் கீழ், நடுத்தர, உயர்ரக மட்டங்கள் எப்போதும் மாறாமல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லோரும் பொருளாதாரத்தில் சமமாகும் காலம் என்றுமே வரப் போவதில்லை. மாற்றங்கள் மனதளவே  என்றாலும் சமுதாயத்தில் பொருளாதார மாற்றம் தான் வாழ்வியல் மாற்றமும் ஆகும். வாழ்க்கையில் கஷ்டப் படும் குடும்பமும், சுக போகமாய் வாழும் குடும்பமும் – இரு வேறு முனைகளாக என்றென்றும் நிரந்தரமாக இருக்கும். அது மாறாதது.

மற்றபடி கதையின் சாரம் அன்றும், இன்றும், என்றும் ஒரே உணர்வின் சூத்திரத்தை தான் சொல்கிறது. அதிர்ச்சிக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம்.

கதையின் நாயகி  ‘பரிமளா’ இந்தக்  கதையைத் தாண்டி மனசுக்குள் வந்து உலாவுகிறாள். இதயத்துக்குள் காலத்துக்கும் உறைந்து போகிறாள். இது தான் ‘அதிர்ச்சி’யின் வெற்றி.  காலம் கடந்தும் இந்தக் கதை மனிதனின் வக்கிர முகமூடியைக் கிழித்து நிஜத்தை சொல்லிக் கொண்டிருக்கும்.

தத்ரூபமாக நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லிய அழகு தனி.. அனைவரும் அவசியம் இந்த எழுத்துக்கள் பேசுவதைப் படித்தால் கேட்கலாம்.
==============================

===========================
Series Navigationஉண்மையே உன் நிறம் என்ன?குப்பை
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *